Saturday, October 19, 2024

இந்தியாவுக்கு தேசிய மொழி உண்டா?

எழுதியவர்:
ஷாஜகான் 

*வினா-0:* 
இந்தியாவுக்கு தேசிய மொழி உண்டா?

*விடை:* 
இல்லை. இந்தியாவுக்கென தேசிய கீதம் உண்டு, தேசிய விலங்கு உண்டு. தேசியப் பறவை உண்டு. ஆனால் தேசிய மொழி கிடையாது. ஏனென்றால், அரசமைப்புச் சட்ட விவாதம் துவங்கியபோதிலிருந்தே தேசிய மொழி என்ற விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. எனவே இதில் சமரசம்தான் செய்யப்பட்டது. எந்தவொரு மொழியும் இறுதி செய்யப்படவில்லை.

---

*வினா-1:* 
ஆட்சிமொழியா அலுவல் மொழியா?

*விடை:* 
ஆட்சி மொழி என்று சொல்வதானால் ruling language என்று இருந்திருக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் அப்படி இல்லை. official purposes, official langauge என்றுதான் குறிப்பிடப் படுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சிமொழி என்று யாரோ எப்போதோ மொழியாக்கம் செய்ய, அதுவே பரவலாகி நிலைபெற்று விட்டது. 

office - அலுவலகம்
officer - அலுவலர்
official - அலுவல்ரீதியான
official language - அலுவல் மொழி

ஆகவே, இந்தி ஆட்சி மொழி அல்ல. அலுவல் மொழிதான். 

ஒருகாலத்தில் parliament என்பதை பாராளுமன்றம் என்று மொழியாக்கம் செய்து அதுவே அண்மைக்காலம் வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. இப்போது நாடாளுமன்றம் என்று திருத்தினாலும் சிலர் பாராளுமன்றம் என்றுதான் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அதேபோலத்தான் அலுவல் மொழி என்பதையும் ஆட்சி மொழி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

---

*வினா-2:* 
சரி, இந்தி மட்டுமே அலுவல் மொழியா? 

*விடை:* 
இல்லை. அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்தியும் ஆங்கிலமும் அலுவல் மொழிகள். 

---

*வினா-3*: 
இதைப்பற்றி அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

*விடை:* 
மொழியைப் பற்றிய பிரிவு 343  
(1) The official language of the Union shall be Hindi in Devanagari script 

இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி தேவநாகரி வரிவடிவில் எழுதப்படும் இந்தியாக இருக்கும்.

---

*வினா-4:* 
அப்படியென்றால், இந்திதான் ஒரே அலுவல் மொழியா?

*விடை:* 
இல்லை. அரசமைப்புச் சட்டத்தின் இப்பிரிவின் அடுத்த பத்தி இப்படி வருகிறது.

Notwithstanding anything in clause ( 1 ), for a period of fifteen years from the commencement of this Constitution, the English language shall continue to be used for all the official purposes of the Union 

மேலே குறிப்பிட்ட விதி (1)இல் கூறப்பட்டது தவிர, இந்த அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து பதினைந்து ஆண்டு காலம் ஒன்றியத்தின் அலுவல் நோக்கங்களுகாக ஆங்கிலமும் முன்பிருந்தது போலவே அலுவல் மொழியாக நீடிக்கும்.

---

*வினா-5:* 
அப்படியென்றால், 1950இல் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1965உடன் பதினைந்து ஆண்டுகள் முடிந்து போயின. அப்படியானால், இப்போது ஆங்கிலம் அலுவல் மொழி இல்லையா?

*விடை:* 
ஆங்கிலமும் அலுவல் மொழிதான். எப்படியென்றால், மேலே குறிப்பிட்ட முந்தைய இரண்டு பிரிவுகளுக்கு அடுத்து மூன்றாவதாக இதுவும் வருகிறது.

Notwithstanding anything in this article, Parliament may by law provide for the use, after the said period of fifteen years, of
(a) the English language

இந்த சட்டப்பிரிவில் என்ன சொல்லப்பட்டிருந்தாலும், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றுவதன் மூலம் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். 

---

*வினா-6:* 
அப்படினால், 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆங்கிலத்தை அலுவல் மொழியாகத் தொடர நாடாளுமன்றம் அப்படி சட்டத்தை நிறைவேற்றியதா?

*விடை:* 
ஆம். ஆட்சிமொழிச் சட்டம் 1963ஐ நாடாளுமன்றம் இயற்றியது. அது 1965 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம், ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையே, ஒன்றிய அமைச்சகங்களுக்கு இடையே எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சொல்கிறது. அது மிகவும் விரிவானது. சுருக்கமாகச் சொன்னால், 15 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஒன்றிய அலுவலகங்களுக்கும், நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கும், இந்தியுடன் ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படும்.

ஒன்றியத்துக்கும் இந்திமொழி பேசாத மாநிலங்களுக்கும் இடையேயான தொடர்பு மொழியாக ஆங்கிலமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டால், அவற்றுடன் ஆங்கில மொழிபெயர்ப்பு சேர்த்து அனுப்பப்பட வேண்டும் என்றும் ஆட்சிமொழிச் சட்டம் 1963-ல் கூறப்பட்டுள்ளது.

ஆக, இந்தி ஆங்கிலம் இரண்டுமே இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிகள்.

No comments:

Post a Comment