Monday, August 21, 2017

தரம் என்றால் என்ன?  ஒரு மாணவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினால் அவர் தரமானவர் என்று சொல்லலாமா?

Sivasankaran Saravanan
Via Facebook
2017-08-21

"எட்டாம் வகுப்பு வரை All Pass என்பதால் தான் கல்வியின் தரம் பின்தங்கிவிட்டது,  அதனால் தான் மோடி அரசு 5ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு முறையை கொண்டு வந்துள்ளது இனி  கடமைக்கு  பள்ளிக்கூடம் போய் நோகாம பாஸ் ஆக முடியாது..!"

நன்கு படித்த சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள துறை ரீதியாக நண்பர்களாக இருக்கக்கூடிய ஒரு வாட்சப் குழுவில் வந்த மெசேஜ் இது.  இதை பலரும் வரவேற்று கட்டை விரல் உயர்த்துகிற மற்றும் கை தட்டுகிற பொம்மைகளை பதிலாக தருகிறார்கள் .

இன்று நடுத்தர மற்றும் உயர் மட்ட வகுப்பினரை இரண்டு மூன்று வார்த்தைகள்  பிடித்து ஆட்டுகின்றன:
தரம், 
இலவசம்,
Heavy competition போன்றவை அவைகளில் சில. 

மேலோட்டமாக பார்த்தால் சிறார்களின் கல்வித்தரம் குறித்து வளர்ந்த பெரியவர்கள் அக்கறை காட்டுவதில் என்ன தவறு என்பது போலத்தானே தெரிகிறது?! 

சரி,  தரம் என்றால் என்ன?  ஒரு மாணவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினால் அவர் தரமானவர் என்று சொல்லலாமா? ஆம் சொல்லலாம்.  ஆனால் இவர்கள் அப்படி கூட சொல்வதில்லையே.. ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களும் நூற்றுக்கு நூறு வாங்கினால் உடனே அது தரமற்ற தேர்வு என்கிறார்கள்.  சரி அப்படியென்றால் இவர்களின் வரையறைப்படி தரம் என்பதுதான் என்ன? 

ஒரு ஊரில் நூறு குழந்தைகள் இருந்தால் அதில் 90 குழந்தைகள் படிக்க போகவேண்டும்.  அந்த 90 ல் பத்து பேர் மட்டும் தனி வகுப்பில் சேர்ந்து தனி பாடம் படிக்கவேண்டும்.  சரி இல்லை 90 பேரும் ஒரே பாடத்தை படித்தால் கூட அதில் இருபது  பேர் பெயிலாக வேண்டும்,  நாற்பது பேர் Just pass ஆகவேண்டும்,  பத்து பேர் நல்ல மதிப்பெண் பெறவேண்டும்.  5 பேர் மட்டும் top rank வாங்கவேண்டும். அந்த 5 பேரில் தன் வீட்டு குழந்தையும் இருக்கவேண்டும்.   இப்படி நடந்தால் அது தரமான கல்வி. 

தரம் என்பது இதுவல்ல.  ஒரு ஊரில் உள்ள 5 குழந்தைகளை மட்டும் சீராட்டி வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்புவதல்ல ஒரு அரசாங்கத்தின் கடமை.  மக்களுக்கான அரசாங்கம் என்பது ஊரிலுள்ள அனைத்து பிள்ளைகளையும் படிக்கவைத்து அவர்களை மேம்படச்செய்ய வைப்பதை கடமையாக கொள்ளவேண்டியது. 

தரம் என கொக்கரிக்க ஆரம்பித்துள்ள இதே இந்தியத்திருநாடு தான் ஐந்தாம் வகுப்பு கூட படித்திராத / தாண்டியிராத சிறுவர்களை அதிகமாக கொண்ட தேசங்களில் ஒன்று . இந்தியாவில் 6.5 சதவீத குழந்தைகள் தங்களது ஆரம்பக்கல்வியை கூட அதாவது ஐந்தாம் வகுப்பு கூட முடிக்கவில்லை என்ற துயரத்தை கொடுமையை இவர்கள் உணர்வார்களா? 

இந்திய மாநிலங்களில் கேரளா  தமிழ்நாடு  தான் தங்களது சிறுவர்களை முழுமையாக ஆரம்பக்கல்வியை முடிக்க வழிவகை செய்துள்ளன (தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்க ள் 0.9% மற்றும் கேரளாவில் 0.08%)  குஜராத்திலே 3% பிள்ளைகள் ஆரம்பக்கல்வியைக் கூட தாண்டவில்லை.  ஆந்திராவிலே 6%,  மத்திய பிரதேசம் 8% ராஜஸ்தான் 11% உத்தரபிரதேசம் 12% அதிகபட்சமாக மேகாலயா அருணாச்சலபிரதேசத்தில் 15% சிறுவர்கள் ஐந்தாம் வகுப்பைக் கூட படிக்காமல் கல்வியறிவற்றவர்களாக உள்ளனர்.

ஏன் இந்த சிறுவர்கள் ஆரம்பக்கல்வியைக் கூட தாண்டவில்லை?  அப்படியென்றால் பத்தாம் வகுப்பு கூட படித்திராத இந்திய சிறுவர்கள் எத்தனை பேர்?  என்ன காரணம்?

பள்ளிக்கூடம் கூட அனுப்பமுடியாத அளவுக்கு வறுமை,  பள்ளிகள் இல்லாமை,  தேர்வில் தோல்வியடைந்தால் நிறுத்திவிட்டு குழந்தைத்தொழிலாளியாக வேலைக்கு அனுப்புதல், தேர்வில் தோல்வியடைவதால் தன்னை விட வயதில் குறைந்த பிள்ளைகளுடன் படிப்பதால் ஏற்படுகிற தாழ்வு மனப்பான்மை,  போக இளவயது திருமணம் இவைகளால் இந்த சிறார்கள் கல்வியறிவற்றவர்களாக உருவாகின்றனர். 

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி தான் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களை பள்ளிப்படிப்பை முடிக்கவைக்கின்றன.  பத்தாவது பாஸ் அல்லது பெயில் என்ற தகுதியுடன் அதன்பிறகு அவன் ஏதோ ஒரு வேலையை தேடிக்கொள்கிறான் . அதன்பிறகு அவர்கள் கல்லூரி மற்றும் உயர்கல்வி படிக்கவேண்டும் தான் ஆனால் குறைந்தபட்சம் பள்ளிப்படிப்பையாவது நம் சிறார்கள் தாண்ட வேண்டாமா?!

கலாச்சாரத்தில் சிறந்த நாடு என்று சொல்லப்படுகிற இந்தியா தான் உலகிலேயே வயது குறைந்த திருமணங்களை நடத்துவதில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு . நல்லவேளை இளவயது திருமணங்களை கட்டுப்படுத்துவதில்  வழக்கம்போல தமிழ்நாடு கேரளா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.  மக்கட்தொகையில் 7வது பெரிய மாநிலமான தமிழ்நாடு இளவயது திருமணங்கள் நடைபெறும் மாநிலங்களில் 17வது இடத்தில் இருக்கிறது.  தமிழ்நாட்டில் சராசரியாக 19.12 வயதில் திருமணங்கள் நடக்கின்றன . கேரளாவில் சராசரி திருமண வயது 21.5 ஆக உள்ளது . அதுவே ஒட்டுமொத்த இந்தியாவில் சராசரி திருமண வயது 16 தான்.  ராஜஸ்தான்,  உபி மபி போன்ற மாநிலங்களில் மிக இள வயதிலேயே திருமணம் நடத்திவைக்கப்படுகின்றன .

தேர்வுகளில் தோற்றுப்போனால் பெண் குழந்தைகள் திருமணத்திற்கும் ஆண் குழந்தைகள் வேலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.  இதுதான் நம்முடைய இந்தியா.  அதனால் தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கல்வி உரிமை பெறும் சட்டத்தை தந்துள்ளது . அதன்படி ஒவ்வொரு இந்திய சிறாரும் குறைந்தது 14 வயது வரை கல்வி கற்றே ஆகவேண்டும்.  மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ள ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையினால் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர் குலைப்பதாக அமையும். 

தரம் வளர்ச்சி என்பன ஊரிலுள்ள ஒன்றிரண்டு பேர் மட்டும் நல்ல வசதியான ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிக்கொண்டு விருந்துண்டு மகிழ,  வாய்ப்பு இல்லாத சிறுவர்கள் இருக்க இடமின்றி பசியும் பட்டினியுமாக இருப்பதல்ல.  எல்லாருக்கும் உணவு கிடைக்கவேண்டும்,  எல்லாரும் கல்வி கற்க வேண்டும் இதுதான் தரம் இதுதான் வளர்ச்சி. 

தங்கள் வீட்டுப்பிள்ளை ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தால் புத்திசாலிப்பிள்ளை என்று மகிழ்கிறவர்கள் ஊரிலுள்ள நிறைய பிள்ளைகள் அதிக மதிப்பெண்களை குவிக்கும்போது மட்டும்,  "ஐய்யய்யோ என்ன இப்படி ஆளாளுக்கு மதிப்பெண்களை அள்ளி வீசுகிறார்கள் கல்வி யில் தரமே இல்லை,  யாரைக்கேட்டாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் என்கிறார்கள் இது என்ன தரம்? " என்று புலம்புவது ஏன்?

இதே வெற்றுக்கூச்சல் ஆட்கள் தான் நீட் தேர்வு விஷயத்திலும் விஷமத்தனத்துடனும் வன்மத்துடனும் கருத்துகளை பரப்புகிறார்கள் .  நீட் தான் தகுதியை நிர்ணயிக்கிற அளவு என்ற உரிமையை யார் இவர்களுக்கு தந்தது?  இந்த நாட்டாமைத்தனம் எப்படி வருகிறது?  பதிவின் நீளம் கருதி நீட் விவகாரத்தை வேறொரு தனிப்பதிவாக எழுதுகிறேன். 

குறிப்பு : மேற்கண்ட புள்ளிவிபரங்கள் இந்திய அரசின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

Saturday, August 19, 2017

Savarkar’s Mercy Petition:

Savarkar’s Mercy Petition:

1. Savarkar was lodged in the Cellular Jail on July 4, 1911. Within six months, he submitted a petition for mercy.

2. In October 1913, the Home Member of the Viceroy’s Executive Council, Sir Reginald Craddock, visited the Jail and met Savarkar among others. His note of November 23, 1913, recorded Savarkar’s pleas for mercy. Savarkar had submitted his second mercy petition on November 14, 1913: “I am ready to serve the Government in any capacity they like… . Where else can the prodigal son return but to the parental doors of the Government?”, the `revolutionary’ and `nationalist’ wrote (emphasis added, throughout). Craddock accurately recorded “Savarkar’s petition is one for mercy”. That formulation was repeated in the petitions that followed.

http://hillele.org/2013/02/26/savarkars-mercy-petition-a-g-noorani/

Monday, August 14, 2017

கஃபீல் கான் பத்தி சங்கிகளின் அவதூறுகள்

ஷாஜகான் R
Via Facebook
2017-08-14

கஃபீல் கான் பத்தி செய்தி வந்ததும் சங்கிகளும் பிஜேபி ஐ.டி. செல்லும் அப்படியே ஷாக் ஆயிட்டாங்க. சுயநினைவு வந்ததும் உடனே அவங்களோட வழக்கமான ஸ்டைலில் புறப்பட்டாங்க. சும்மா சொல்லக்கூடாது... எத்தினி வருசமா கிளப்பி விடறதே தொழிலா வச்சிருக்கிறவங்க... சும்மா கலக்கிட்டாங்க.

உடனே நம்ம இன்பாக்சுக்கு வதவதன்னு ஆளுக வந்துட்டாங்க. என்ன சார்... இப்படிச் சொல்றாங்களேன்னு. ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லி முடியலே. அதனாலே இங்கே போடறேன். நான் கோரக்பூர் போகலே, அங்கே உண்மை என்னன்னு தெரியாது. ஆனா, சாதாரண அறிவோட சிந்திச்சாலே சங்கிகளோட வதந்திகள் எவ்வளவு ஓட்டை இருக்குன்னு மட்டும் காட்டறேன்.

*1. கபீல் கான் சிலிண்டர்களை தன்னுடைய ஆஸ்பத்திரிக்கி எடுத்துட்டுப் போனதால்தான் குழந்தைகள் செத்துப்போச்சு*

ஆக்சிஜன் குறைபாட்டால சாகலே, மூளை அலர்ஜியாலதான் செத்தாங்கன்னு முதல்வர் யோகி மூணு நாளா சொல்லிட்டு இருந்தாரு. ஆகஸ்ட் மாசம் கொத்துக் கொத்தா சாகறது வழக்கம்தான்னு சொல்லிட்டிருந்தாரு சுகாதார அமைச்சர். அப்புறம் சிலிண்டர் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன?

*2. சிலிண்டரைக் கொண்டு வந்தவரில்லே, சிலிண்டரை ஆஸ்பத்திரியிலிருந்து தன்னோட ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போனவருதான் கஃபீல் கான்*

ஏதோ சின்ன ஆஸ்பத்திரியில பேஷன்ட் பக்கத்துல சிலிண்டர் வச்சிருப்பாங்களே... அதை கற்பனை செஞ்சுகிட்டானுக போலிருக்கு. இந்த மாதிரி பெரிய ஆஸ்பத்திரிகளில் எமர்ஜென்சிக்கு மட்டும்தான் அந்தந்த டிபார்ட்மென்ட்ல ஒண்ணு ரெண்டு சிலிண்டர் கைவசம் இருக்கும். மத்த்தெல்லாம் சென்டரலைஸ்டுதான். மொத்தமா வந்து இறங்குகிற சிலிண்டர்களை ஒரு இடத்தில் வச்சு, அங்கிருந்து ஆஸ்பத்திரி முழுக்கவும் பைப்லைன் மூலமா கேஸ் போகும். அது தனி டிபார்ட்மென்ட். (மாதிரிக்கு படம் பாருங்க. ஆனா, இந்த ஆஸ்பத்திரியில் லிக்விட் ஆக்சிஜன்தான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். அது இப்படி சிலிண்டர்களாக இருக்காது.)

*3. ஆக்சிஜன் சப்ளை பண்ண கம்பெனிக்கு பணத்தை நிறுத்தி வச்சவன் இவன்தான்*

முந்தைய பத்தியில் படிச்சீங்க இல்லையா, அத்தோட இதையும் சேத்துக்குங்க. குழந்தை வார்டு, பிரசவ வார்டு, கேன்சர் வார்டு இப்படி பல்வேறு விதமான சிகிச்சை தர்ற டிபார்ட்மென்ட்களுக்கு சிகிச்சை விஷயமான அதிகாரம் மட்டுமே இருக்கும். டெண்டர் விடறதோ, சிலிண்டர் வாங்கறதோ, பேமென்ட் பண்றதோ எல்லாம் இவங்க பார்வைக்கு வரவே வராது, தேவையும் இல்லை. அதெல்லாம் அட்மினிஸ்டிரேஷன் – அகவுன்ட்ஸ் விவகாரம். அதனால, இந்த கபீல் கானும் சரி, அல்லது வேறு எந்த டிபார்ட்மென்ட்டுடைய ஹெட்டும் சரி, சிலிண்டர் பேமென்ட் நிறுத்தவெல்லாம் முடியாது.

*4. ஆஸ்பத்திரியின் ரூல்ஸ் பிரகாரம் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் வைக்க கூடாது. அப்போ 69 லட்சம் வரை கிரெடிட் ஏறி நிக்கிறதுக்கு யார் பொறுப்பு?*

அதான் நாங்களும் கேக்கறோம். அந்தக் கம்பெனி, பிப்ரவரியிலிருந்து ஆகஸ்ட் முதல் வாரம் வரைக்கும் ஏழுவாட்டி கடுமையா கடிதங்கள் எழுதியிருக்கு. ஒவ்வொரு கடிதத்தின் நகலும் லக்னோவில் இருக்கிற சுதாதார அமைச்சகத்துக்கும் போயிருக்கு. அப்போ பேமென்ட் நிறுத்தினது யார்? 

அதுபோக, 15 வருசமா சப்ளை செஞ்சுட்டிருந்த ஒரு கம்பெனியை விட்டுட்டு யோகி அண்ட் கோ ஆட்சிக்கு வந்த்தும் புதுசா ஒரு கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க. அந்த பழைய கம்பெனிக்கும் 20 லட்சம் ரூபாய் பாக்கி இப்பவும் இருக்கு. அந்த பழைய கம்பெனிதான் அவசரத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் 200 சிலிண்டர்களை அனுப்பியிருக்கு. ஆக, பழைய கம்பெனியை விட்டுட்டு புது கம்பெனிக்கு ஆர்டர் மாத்தினது ஏன்? யாரு கமிஷன் அடிச்சா? கம்பெனி திரும்பத் திரும்ப கடிதங்கள் அனுப்பியும் அமைச்சகம் ஏன் நடவடிக்கை எடுக்கலே?

*5. கபீல் கான் ஆஸ்பத்திரி நடத்திட்டிருந்தார். கவர்மென்ட வேலையில் இருந்துகிட்டு தனியா பிராக்டிஸ் செய்யறது சட்டவிரோதம்*

அவர் ஆஸ்பத்திரி நடத்திட்டிருந்தாரா, கிளினிக் நடத்திட்டிருந்தாரா தெரியாது. ஆனா, அரசு மருத்துவமனையில் வேலை செய்யறவங்க தனியா பிராக்டிஸ் செய்யறது சட்டவிரோதம் கிடையாது. அதுக்கு சில ஃபார்மாலிட்டீஸ் இருக்கு. அதைச் செஞ்சா போதும்.
அப்புறம், ஒருத்தர் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் வேலை செய்யறார்னா அதுக்கு முக்கியமா ஒரே காரணம்தான் இருக்க முடியும். மக்கள் மீதான அக்கறை. கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் கிடைக்கக்கூடிய சம்பளம் 1 லட்சம் இருக்கலாம். எந்தவொரு சாதாரண டாக்டரும் சாதாரண ஒற்றை ரூம் கிளினிக் வச்சே மாசம் 2-3 லட்சம் ஈசியா சம்பாதிக்கலாம். வேலைக்குப் போகத் தேவையே இல்லை. அதையும் மீறி அவங்க வேலைக்குப் போறாங்கன்னா அவங்க மனசுல கொஞ்சம் ஈரம் இருக்குன்னு அர்த்தம்.

*6. அவர் பாஜக விரோதி. யோகிக்கும் பாஜகவுக்கும் எதிரா ட்வீட் போட்டிருக்காரு. அவர் காங்கிரஸ்காரர் / சமாஜ்வாதி.*

அவர் போட்டதா காட்டப்படுகிற ட்வீட்கள் எல்லாம் நிஜமாவே அவர் போட்டதா இல்லே சங்கிகளுடைய போட்டோஷாப் வேலைகளா தெரியாது. ஏன்னா, அரசு ஊழியரா இருக்கிற ஒருவர் இந்த மாதிரி அரசியல் சார்பு கருத்துகளை எழுத மாட்டார். அந்தளவுக்கு அவருக்குத் தெரியாமல் இருக்காது. சரி, அப்படியே அவரே எழுதினார்னு வச்சுக்குவோம். உலகத்துல இருக்கிற எல்லாரும் பாஜகவை ஆதரிச்சுத்தான் ட்வீட் போடணும்னு ஏதாச்சும் சட்டம் இருக்குதா? சமாஜ்வாதியை அல்லது இதர கட்சிகளுக்கு ஆதரவா எழுதக்கூடாதுன்னு சட்டம் போட்டாச்சா?

சங்கிகள் விஷயத்தில் ஒரே ஒரு விஷயம்தான் விட்டுப்போச்சு. இந்தியக் குழந்தைகளைக் கொல்வதற்காக பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட தீவிரவாதிதான் கஃபீல் கான் – இதையும் சேத்துட்டா புரட்டல்களுக்கு முழுமையான சீன் கிடைச்சுடும்.

*7. கஃபீல் கான் மேலே பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு இருக்கு... ஒரு வருசம் ஜெயிலில் இருந்தார்.... முன்னா பாய் மாதிரி பரீட்சை எழுதினார்.* 

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான FIR/Judgements நம்பரை தர முடியுமா? 

இவ்வளவு குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவரை தலைமை பொறுப்பில் வைக்கும் அளவுக்கு யோகிநாத்  முட்டாளா? 

*ஆட்சி மாற்றம் -> பழைய டெண்டர் ரத்து செய்யாமலே ->புதுசா டெண்டர் ஏதும் இல்லாமலே -> புதிய கம்பெனிக்கு ஆக்சிஜன் சப்ளை ஆர்டர் -> புதிய கம்பெனிக்கு நிலுவைத் தொகை -> புதிய கம்பெனியின் ரிமைண்டர் கடிதங்கள் -> அதன்மேல் செயல்படாமை*

இதன் பின்னால் இருப்பது ஊழல், அரசியல் தொடர்புகள். அதைப்பத்திப் பேசறதைவிட்டுட்டு கஃபீல் கான் பின்னாடி அலையாதீங்க.

Sunday, August 13, 2017

ஆர்.எஸ்.எஸ் vs சுதந்திர போராட்டம்

Satheesh kumar
Via Facebook
2017-08-13

ஆர்.எஸ்.எஸ் vs சுதந்திர போராட்டம்

1942 ஆம் ஆண்டு காங்கிரஸ் , ‘வெள்ளையனே வெளியேறு ‘ இயக்கத்தை அறிவித்தபோது , கல்கத்தா மாகாண அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி .

ஆர்.எஸ்.எஸ் .சின் அரசியல் பிரிவாக ஜன சங்கம் கட்சி பெயர் மாற்றம் பெற்ற போது , அதன் மூத்த தலைவராக இருந்தவரும் இவர்தான் . இந்த முகர்ஜி காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்தவுடன் மாகாண அமைச்சர் என்ற முறையில் பிரிட்டிஷ் அதிபராக இருந்த சர்.ஜான் ஹீர்பட்டுக்கு,அவர் கேட்காமலேயே கடிதம் எழுதினார் .

” காங்கிரசின் பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கம் , பல பகுதிகளுக்கும் பரவும் பேராபத்து இருக்கிறது . யுத்தம் நடக்கும் காலத்தில் , இப்படி மக்கள் உணர்வுகளை தூண்டிவிடுவது உள்நாட்டு பாதுகாப்பை சீர் குலைத்துவிடும். எனவே காங்கிரசார் போராட்டத்தை அடக்கியாக வேண்டும்” என்று கடிதம் எழுதியவர்தான் இந்த முகர்ஜி .

ஆதாரம் : இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் (17.8.1992 )

#RSSvsfreedomfight

------

ஆர்.எஸ்.எஸ் vs சுதந்திர போராட்டம்

அந்தமானில் சவர்க்காரின் சிறை வாழ்க்கை நிறைய சுவாரசியமானது. அவருடன் சிறையிலிருந்த 92 வயதான தினேஷ் குப்தா என்பவர் ஆக. 9, 2003 அன்று டில்லியில் அளித்த ஒரு பேட்டியில்,

"வி.டி. சவர்க்காரும் நானும் ஒன்றாக சிறையில் இருந்தவர்கள். அவர் ஒன்றும் சிறையிலேயே உயிரைவிட்டு விடவில்லை. சிறையிலேயே உயிரைப் பறிகொடுத்த 8 விடுதலை தியாகிகளுக்கு அவர்களின் நினைவைப் போற்ற போர்ட்ப்ளேயரில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் சவர்க்காரின் சிலையையும் வைத்திருப்பது அந்த மற்ற விடுதலை வீரர்களையும் அவமானப்படுத்துவதாகும். மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உதவுவதாகக் கூறி மன்னிப்புக் கடிதம் எழுதியனுப்பிய சவர்க்காரை விடுதலைப் போராட்டத் தியாகியாக சித்திரிப்பது மாபெரும் தவறாகும்; தாங்கமுடியாத துன்பமாகும்" என்று குறிப்பிட்டார்.

#RSSvsfreedomfight

--------

ஆர்.எஸ்.எஸ் vs சுதந்திர போராட்டம்

1911-ஆம் ஆண்டு சவார்க்கர் எழுதிய கருணை மனுவில் "1906-07 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நிலவிய நம்பகத் தன்மையற்ற சூழலினால் நாங்கள் பாதை தவறிவிட நேரிட்டது. நாட்டின் நன்மையிலும், மனித நேயத்திலும் அக்கறை கொண்ட யாரும் தவறான பாதையில் செல்ல விரும்ப மாட்டார்கள். எனவே பெருந்தன்மை வாய்ந்த அரசு என்னை மன்னித்து விடுதலை செய்தால் நான் விசுவாசமாக இருப்பதோடு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தவறான பாதை செல்வோரையும் என் வழிக்கு மாற்றுவேன்... எனவே பாதை தவறிய இந்தப்  பிள்ளை பெற்றோரிடம் மன்னிப்புக் கோருவதில் தவறில்லை" என்று குறிப்பிடுகிறார். அதாவது பிரிட்டிஷார் இவருக்குப் பெற்றோராம்.

#RSSvsfreedomfight

-----

Saturday, August 12, 2017

அந்தணர் பாவை நீ ... நான் அரசரில் வந்தேன்" எனக் கூறி இராமன் தவிர்க்கிறான்

Maya Devar
Via Facebook
2017-08-11

ராவணன் தங்கை சூர்ப்பனகை
ராமனை கண்டு பேசுகிறாள் ..
அப்போது அவளிடம்

"நீ யார் ?" என்று ராமன் கேட்க ...

"நான் பிரம்மன் மகன் புலத்தியன் மகனாகிய விச்சிரவசுவின் மகன் ராவணனின் தங்கை" என்கிறாள் சூர்ப்பநகை.

அவள் ராமனிடம் "என்னை மணந்து கொள்வாயா?" என கேட்க...

"அந்தணர் பாவை நீ ...
நான் அரசரில் வந்தேன்" எனக் கூறி இராமன் தவிர்க்கிறான்

( கம்ப ராமாயணம் 2780)

முழுப்பாடல்

நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; வினை மற்று எண்ணி

வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்;

'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்;

அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' என்றான்.

காமராஜரின் கல்வித் திட்டத்தில் பெரியாரின் பங்கு

*காமராசருக்கும், அப்போது கல்வி அதிகாரியாக இருந்த நெ. த. சுந்தரவடிவேலு அவர்களுக்கும் நடந்த உரையாடல்*

பெருந்தலைவர் காமராஜரும், கல்வி அதிகாரி நெ. த. சுந்தரவடிவேலும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வரநேரிட்டது, சுந்தரவடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காமராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார்.

*காமராஜர்: *

நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக்கணும், அதுதான் முக்கியம், நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான்,, கிராமவாசி எங்க போவான்? அவனால் மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறது கட்டுப்படியாகாது

சாதாரண பள்ளிக்கூட படிப்புக்கே அவன் ஆடு, மாடு, கோழியெல்லாம் விக்க வேண்டியிருக்கு! மேல்மட்ட படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க! ஏழை வீட்டுப் பிள்ளைங்க அந்தந்த ஊர்லயே பெரியபடிப்பு படிக்கட்டும்.

*சுந்தரவடிவேலு: *

இப்போது, கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களில் நூற்றுக்கு அறுபது பேர், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள்.

*காமராஜர்: *

அதைத்தானே நாம விரும்பினோம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படிச்சி மேல வந்துட்டான்னா அப்புறம் அவன் மூலம் அந்த கிராமமே மேல வந்திடுமில்லையா?

*சுந்தரவடிவேலு: *

நான் பெரியார் ஐயாகிட்டே இந்த விவரத்தைச் சொன்னேன். அவரு மிகுந்த மகிழ்ச்சியோடு,
"இவ்வளவுக்கும் காரணம் காமராசர் தான், அவருக்குத்தான் தமிழன் கடன்பட்டிருக்கிறான், அவர் மட்டும் இல்லேன்னா 1952-ல் இலேயே நம்ம தலைமுறையையே ஆச்சாரியார் குழிதோண்டிப் புதைத்திருப்பார்” என்று பெரியார் ஐயா சொன்னார்.

*காமராஜர்: *

அது எப்படின்னேன்? எல்லாம் பெரியார் ஐயாவாலே தானே நடக்குது, அவர் சொல்றார் நாம செய்யிறோம்! காரணகர்த்தா அவருதானே.

இது. 1952-ல் ஆரம்பிச்ச பிரச்சனையா என்ன? ஐயாயிரம் வருஷமா இருக்கறதாச்சே. தெய்வத்தின் பேராலேயும் மதத்தின் பேராலே யும் நம்மள ஒடுக்கி வச்சிட்டானே… இப்படி இருக்கிறது என் தலையெழுத்துன்னு சொல்லிட்டானே! இதப்பத்தி யார் கவலைப்பட்டார்? பெரியார் ஒருத்தர்தானே எல்லாத்தையும் தலையில் எடுத்துப் போட்டுக்கிட்டு பண்ணிகிட்டிருக்கார்.

அவரு மட்டும் இல்லேன்னா நம்ம புள்ளைங்க கதி என்னவாகியிருக்கும்? அத்தனைப்பேரும் கோவணத்தோட வயல்லே ஏரோட்டிக் கிட்டிருப்பான்! இன்னிக்கு டெபிடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரட்டரியாவும்ல ஒக்காந்திருக்கான்! நம்மகிட்ட அதிகாரம் இருக்கிறதாலே பெரியார் நெனச்ச காரியத்த ஏதோ கொஞ்சம் பண்ணிக் கொடுக்கிறோம்.

அவரு, எந்த அதிகாரத்தையும் கையில வச்சிக்காம ஊர், ஊரா திரிஞ்சி சத்தம் போட்டுக்கிட்டு வராரு! அவராலேதான் நமக் கெல்லாம் பெருமை!

Friday, August 11, 2017

எடுப்பு கக்கூஸ்

வினாயக முருகன்
Via Facebook
2017-08-11

நான் பிறந்தது கும்பகோணம் மாதளம்பேட்டையில். பிரிட்டிஷ் காலத்தில் தாதுபஞ்சம் வந்தபோது தெற்கே இருந்து பஞ்சம் பிழைக்க வந்த மக்கள் கும்பகோணத்துக்கு வரும்போது மாதளம்பேட்டையில் குடியேறினார்கள். அவர்கள் பெரும்பாலும் சாக்கு (கோணிப்பை) தைக்கும் தொழில் செய்து பிழைப்பை ஓட்டுபவர்கள். மாதளம்பேட்டை அருகே ரயிலடியும் அதையொட்டி கூட்ஸ் ஷெட்டும் இருந்தது. கூட்ஸ் ரயிலில் ஏற்றும் நெல்மூட்டைகளுக்கான சாக்கை இந்த சமூகம்தான் தயாரிக்கும். எப்போதும் சாலையில் உட்கார்ந்து சாக்கு தைக்கும் ஊசிகளை கூர்தீட்டியபடி இருப்பார்கள். அப்படி கூர்தீட்டும்போது அதிலிருந்து நெருப்புப்பொறி கிளம்பும். மாதளம்பேட்டை தாண்டி இவர்களோடு இன்னொரு சமூகமும் அங்கு குடியேறினார்கள்.

அவர்கள் மனிதர்களின் மலத்தை அள்ளும் வேலைகளை செய்பவர்கள். பெரும்பாலும் அந்த சமூகத்தில் இருக்கும் பெண்களே அந்த வேலையை செய்வார்கள். தோட்டிச்சிகள் என்று அழைப்பார்கள். அப்போதெல்லாம் அதாவது தொண்ணூறுகளின் தொடக்கம் வரை தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் எடுப்பு கக்கூஸ்கள்தான் இருந்தன. பாம்பே கக்கூஸ்கள் சொற்பமாகவே இருந்தன. இந்த பெண்களின் வேலை அதிகாலையில் எழுந்து ஒவ்வொரு வீடாக சென்று அங்கிருக்கும் கக்கூஸ்களில் சேர்ந்துள்ள மலத்தை அள்ளி கூடையில் சேகரித்து எடுத்து வந்து தெருமுனையில் இருக்கும் மலவண்டியில் போடுவது. இந்த பெண்கள் தெலுங்கும் தமிழும் கலந்து பேசுபவர்களாக இருப்பார்கள். பிராமணர்கள் பஞ்சக்கச்சம் கட்டுவதுபோல சேலையை தூக்கி கட்டியபடி வருவார்கள். இவர்கள் கையில் ஒரு முறமும் அதில் நிறைய சாம்பலும் இருக்கும். பீயை அள்ளும்போது அது ஈரமாக இருப்பதால் கூடையில் ஒட்டிக்கொள்ளும். பீ மீது சாம்பலை கொட்டி அதை வார்கோலால் வழித்து கூடையில் போட்டு தெருமுனையில் இருக்கும் வண்டிகளுக்கு எடுத்துச்செல்வார்கள். சிலர் அந்த சாம்பலிலேயே பல் விலக்கிக்கொண்டு வீட்டின் பின்புறம் வந்து வாய் கொப்புளிப்பார்கள்.. அவர்கள் கையோடு கொட்டாங்குச்சி (சிரட்டை) அல்லது ஏதாவது அலுமினிய பாத்திரம் கொண்டுவருவார்கள். மலம் இருக்கும் வீட்டின் உரிமையாளர் நீராகாரத்தை அந்த சிரட்டையில் ஊற்ற அவர்கள் குடித்துவிட்டு வேலையை ஆரம்பிப்பார்கள்.
சிலர் பீயை அள்ளிவிட்டு கையை கழுவி அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து நீராகாரத்தை சாப்பிடுவார்கள். அவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் கால்ரூபாய் (அதுவும் சண்டைப்போட்டால் மட்டுமே கிடைக்கும்) தருவார்கள். தீபாவளி, பொங்கலுக்கு பலகாரம் தருவார்கள். தெருவில் இருக்கும் யாராவது பெரியமனிதர்கள் மலிவான விலையில் சேலை எடுத்து தருவார்கள்.

மலம் அள்ள வருபவர்களுக்காகவே ஒவ்வொரு வீட்டின் பக்கத்திலும் சந்துக்கள் இருக்கும். சந்து வைத்து வீடு கட்டியவர்களுக்கு ஏன் பாம்பே கக்கூஸ் கட்ட தோன்றவில்லை என்று குழப்பமாக இருக்கும். அதுபோன்ற மனிதர்கள் தவறியும் முன்வாசலில் நின்று பேசக்கூடாது. சந்து வழியாக கொல்லைப்புறத்துக்கு வந்து மலத்தை அள்ளிச்செல்ல வேண்டும். இரண்டு நாட்கள் பீயை அள்ளாமல் போனால் கக்கூஸில் புழுக்கள் சேர்ந்து நெளியும். ஆனால் அவர்கள் கொஞ்சம் கூட அவர்கள் அசூயை படாமல் மலத்தை முறத்தில் வழித்து தெருமுனையில் நிற்கும் வண்டி வரை நடந்துச் செல்வார்கள். அப்படி செல்லும்போது அவர்களை தெருநாய்களும், பன்றிகளும் துரத்தியபடி வரும். அதை எல்லாம் சமாளித்துதான் மலத்தை கொண்டு சென்று வண்டியில் கொட்ட வேண்டும். பொதுவாக வண்டியை தள்ளும் ஆட்கள் ஆண்களாக இருப்பார்கள். சிலநேரங்களில் பெண்களே அந்த வண்டியை தள்ளிக்கொண்டு போவார்கள். அவர்கள் அந்த மலத்தை எங்கு கொண்டுச்சென்று கொட்டுவார்கள் என்பது புதிராக இருக்கும்.

ஒருமுறை அந்த வண்டியை நான் பின்தொடர்ந்து செலவதை பார்த்து யாரோ என் அப்பாவிடம் சொல்ல அவர் பெல்ட்டால் என்னை விளாசி தள்ளினார். இப்போது அதை எல்லாம் நினைத்துப்பார்த்தால் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளோம் என்று நினைக்க தோன்றுகிறது. அருந்ததி சமூகத்தினருக்கு திமுக ஆட்சியில்தான் எண்ணற்ற சலுகைகளை வழங்கினார்கள். மற்ற ஊர்களை பற்றி தெரியவில்லை. தஞ்சை மாவட்டம் முழுக்க ஒருகாலத்தில் மனித மலத்தை மனிதர்களே அள்ளியதை பார்த்த தலைமுறை நாங்கள். தஞ்சையில் இருந்த இந்த எடுப்பு கக்கூஸ் பற்றி சாரு ஒருசில கதைகளில் பதிவு செய்துள்ளார். நீண்டநாட்கள் கழித்து இப்போது ஒரு சிறுகதை படித்தேன். பிரபுகாளிதாஸ் எழுதிய கதை. பேசும் புதிய சக்தியில் வெளி வந்துள்ளது. இந்த எடுப்பு கக்கூஸ்களில் பணியாற்றிய மனிதர்களை பற்றி மிகநுட்பமாக பதிவு செய்துள்ளார். வாழ்த்துகள்.