Saturday, March 3, 2018

மா-லெ தோழர்கள் - மாவோயிஸ்ட்களுக்கு ஒரு சிந்தனை பரிசோதனை

ஆழி செந்தில் நாதன்
Via facebook
2018-02-04

(நீள் பதிவு)

மா-லெ தோழர்கள் - மாவோயிஸ்ட்களுக்கு ஒரு சிந்தனை பரிசோதனை..

திரிபுராவில் சிபிஎம்மின் தோல்வியை முன்வைத்து, மார்க்சிய லெனினிய இயக்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த தோழர் எழுதியப் பதிவு ஒன்றை நேற்றிரவு பார்த்தேன். அந்தப் பதிவு சிபிஎம்மை விளாசித்தள்ளியது. சிபிஎம்மின் தவறுதான் பாஜக வந்ததற்கு காரணம் என்று கூறிய தோழர், தன்னுடைய தீர்வு என்று எதையும் முன்வைக்கவில்லை. பிரகாஷ் காரத்தின் தவறான முடிவுகள்தான் இன்று சிபிஎம்மை ஒழித்துக்கட்டுகிறது என்று மா லெ இயக்கப் பின்னணி கொண்ட தோழர்கள் சிலரும் கூறுகிறார்கள்.

நல்லது, நல்லது. இந்தியா பாசிச யுகத்தில் நுழைந்துகொண்டிருக்கிறது என்கிற அச்சத்தை இன்று இடதுசாரிகள் அனைவரும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றாலும் இந்த உள்குத்து அரசியலுக்கு மட்டும் குறைவில்லை. சிபிஎம் நிச்சயம் விமர்சனத்துக்கு உட்படவேண்டியக் கட்சிதான் என்பதில் எனக்கும் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், அன்புக்குரிய எம்எல் தோழரே, நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

இந்தச் சூழலுக்கு நாம் எந்த விதத்திலும் காரணம் இல்லையா? இந்தியா இவ்வளவு பாசிச நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இந்த வேளையில் எங்கே போய்விட்டார்கள் நமது மாவோயிஸ்ட் தோழர்கள்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஆதரவாளர்கள், இடதுசாரிகள், தேசிய இனப் பிரச்சினை பற்றி பேசுவோர் அனைவருக்கும் பொதுவாக இன்று  ஒரு சிந்தனை பரிசோதனையை (thought experiment) முன்மொழிய விரும்புகிறேன். கொஞ்ச நேரம் ஒதுக்கமுடியுங்களா? 

சிந்தனைப் பரிசோதனை பலவிதம். அதில் ஒன்று, “இப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்” நாமே கேள்வி கேட்டு நாமே பதில் சொல்லமுனைவது  ஒரு வகை. அந்த அடிப்படையில் இங்கே ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்:  “இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் ஒரு தேர்தல் கட்சியைத் தொடங்கியிருந்தால், இன்றைய நிலை என்னவாக இருந்திருக்கும்?” என்பதுதான் அந்தக் கேள்வி.

இங்கே முன்வைக்கப்படும் விவரங்கள் முழுமையானதாகவோ துல்லியமானதாகவோ இல்லாமலிருக்கலாம். ஆனால் முன்வைக்கப்படும் வாதங்களை மட்டும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தப் பரிசோதனையைச் செய்யுங்கள்.
முதலில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இரு படங்களையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
*
இருபதாண்டுகாலமாக. குறைந்தபட்சம் 9 மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை ஒழிப்பதற்காக ஒன்றிய அரசு ஆபரேஷன் கிரீன்ஹண்ட் என்கிற நடவடிக்கையைத் தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு வாக்கில் 180 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்களின் செல்வாக்கு இருந்தது என அரசு கூறியது. இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் (காஷ்மீர் கூட அல்ல,) மாவோயிஸ்ட்களின் செந்தளப்பிரதேசம்தான் என மன்மோகன் சிங் அரசு கூறியது. ஏனென்றால் மாவோயிஸ்ட்களின் கையில், ஜார்கண்ட், பிஹார், சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்காணா, மகாராஷ்ட்டிரம், (கிழக்கு) உத்தரப் பிரதேசம். மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 180 மாவட்டங்கள் இருந்தன. இவற்றை Red Corridor என்று அரசும் ஊடகங்களும் கூறின.

பிறகு, ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த பத்தாண்டுகளில் இந்த மாநிலங்களில் இருந்த மாவோயிஸ்ட் செல்வாக்கு அடர்த்தியிலும் பரப்பளவிலும் குறைந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு 100 மாவட்டங்களுக்கும் குறைவான இடங்களுக்கு சுருங்கி. தற்போது இரண்டு மூன்று டஜன் மாவட்டங்களில் மட்டுமே மாவோயிஸ்ட்களின் செல்வாக்கு மண்டலம் நிதர்சனத்தில் இருக்கிறது.

இப்போது சிந்தனைப் பரிசோதனையைத் தொடங்குவோம்: மாவோயிஸ்ட்களின் செல்வாக்கு உயரத்தில் இருந்த பத்தாண்டுகளுக்கு முன்பு, 2008-2010 வாக்கில், அவர்கள் ஒரு நாடாளுமன்ற சனநாயகக் கட்சியை நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்கி, அதைத் தேர்தலில் பங்கேற்கும்படி செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கட்சிக்கு மாவோயிஸ்ட் தேர்தல் கட்சி என்று தற்காலிகமாக பெயர்வைப்போம். அப்போது என்ன நடந்திருக்கும்.
அந்த 180 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்களுக்கு மக்கள் ஆதரவு அல்லது செல்வாக்கு இருந்தது என்பது உண்மையென்றால், சராசரியாக 200 நாடாளுமன்றத் தொகுதிகளில் மாவோயிஸ்ட் தேர்தல் கட்சி வெற்றி பெறுவதற்கான அல்லது இரண்டாமிடத்தில் வருவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். அதாவது, காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்து இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாவதற்கான வாய்ப்பை மாவோயிஸ்ட்கள் பெற்றிருந்திருப்பார்கள். 2014 இல் பாஜக அலை வடக்கே அடித்திருக்காது.  இப்போது கேள்வி:  தங்களுடைய செல்வாக்கு உச்சக்கட்டத்தில் இருந்தபோது எந்த சிந்தனை அல்லது சித்தாந்தம் அல்லது வியூகம் ஒரு தேர்தல் கட்சியைத் தொடங்குவதிலிருந்து மாவோயிஸ்ட்களைத் தடுத்தது?  ஒருவேளை அன்று அவர்கள் ஒரு தேர்தல் கட்சியைத் தொடங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று இன்று உங்களுக்குத் தோன்றுகிறதா? 

சிந்தனைப் பரிசோதனையைத் தொடர்வோம். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பல ஆயுதக்குழுக்கள் விடுதலைப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தன. வட கிழக்கில் 2000களில்தான் அவை மெல்ல மெல்ல பலமிழக்கத்தொடங்கியிருந்தன. உல்ஃபா போன்ற அமைப்புகளும் வீழ்ச்சி அடையத்தொடங்கின. ஒருவேளை, வடகிழக்கில் உள்ள அமைப்புகளையும் காஷ்மீரில் உள்ள (குறிப்பாக ஹூரியத்தில் இருந்த மிதவாத போக்கினர், பாகிஸ்தானோடு சேரக்கூடாது ஆனால் தனிநாடு வேண்டும் என்பவர்கள், பிரிவு 370ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று மட்டும் கோருபவர்கள்) அமைப்புகளையும் சுயநிர்ணய உரிமைக்கான அல்லது கூட்டாட்சிக்கான ஒரு கோரிக்கையின் அடிப்படையில் மாவோயிஸ்ட்கள் தங்களோடு இணைத்திருந்தால், என்ன ஆயிருக்கும்  என்று யோசித்துப்பாருங்கள். மாவோயிஸ்ட் தேர்தல் கட்சியும் இந்தக் ஆயுதக்குழுக்கள் சார்பான தேர்தல் கட்சிகளும் கைகோர்த்திருந்தால், என்ன ஆகியிருக்கும் என்பது இரண்டாவது கேள்வி.

காஷ்மீரில் ஆயுதப்போராட்டம் மேலும் வளரவில்லை. அத்துடன் அது பாகிஸ்தானின் ஆதரவோடு மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றா மாறிவிட்டது. பல அமைப்புகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மக்கள் போராட்டங்களோ தொடர்ந்து நடைபெறுகின்றன. மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கிற தேர்தல்கட்சிகள் களத்தில் இல்லை. ஒருபக்கம் உமர் அப்துல்லாவின் கட்சி துரோகக் கட்சியாக அம்பலப்பட்டுநிற்கிறது. ஆனால் மறுபுறம்?  பாஜகவுடனேயே கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கிறது மெஹ்பூபா முப்தியின் கட்சி!  என்ன அவலம் பாருங்கள்?

ஒருவேளை காஷ்மீரிகளுக்கென ஒரு நியாயமான கட்சி உருவாகி அது மாவோயிஸ்ட்களுடனும் வடகிழக்கு கட்சிகளுடனும் இணைந்து ஒரு முன்னணியில் இருந்திருந்தால், வீரம்செறிந்த காஷ்மீரிகள் மெஹ்பூபாவையும் உமரையும் நம்புவார்களா?
இப்போது வடகிழக்குக்குச் செல்வோம். இன்றும் வடகிழக்கில் சில அமைப்புகள் தங்கள் விடுதலைக்கனவில் உறுதியாக இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை பலமிழந்துள்ளன. மீண்டும் தலைதூக்கமுடியாத அளவுக்கு அவை நலிந்துவிட்டன. முப்பது நாற்பது வருடம் போராடி முடிவுக்கு வராத நிலையில், மக்களும் சலித்துப்போய்விட்டார்கள். இளைய தலைமுறை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இதோ இங்கே அண்ணா நகர் நளாஸ் ஆப்பக்கடையில் சர்வர் வேலை செய்துகொண்டிருக்கிறது. அங்கே, பல அமைப்புகள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கின்றன. ஏதோ ஒரு செட்டில்மென்ட் வந்தால் போதும் என்கிற நிலைமையே இருக்கிறது. வேறு பல சந்தர்ப்பவாத அமைப்புகளோ அப்படியே பல்டி அடித்து பாஜகவுடனேயே கைகோர்க்கின்றன.
ஒருவேளை பத்தாண்டுகளுக்கு முன்பு – அதாவது ஆர்எஸ்எஸ் தன் இன்றைய வடகிழக்கு வியூகத்தை அமைக்கும் முன்பு – மாவோஸ்ட் தேர்தல் கட்சியும் வடகிழக்கின் ஆயுதக்குழுக்களின் தேர்தல் கட்சிகளும் கைகோர்த்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?  கேள்வி கேளுங்கள், பதிலை யோசியுங்கள்.

பஞ்சாபை எடுத்துக்கொள்ளுங்கள். வலுவான இடதுசாரி அரசியல் பிடிப்பு கொண்ட மக்கள் பஞ்சாபிகள். அங்கே சீக்கிய மதவாத அடிப்படையிலான காலிஸ்தான் போராட்டம் உருவாகி, வளர்ந்து, பிறகு அடக்கப்பட்டு, இப்போது அது பழங்கதை ஆகிவிட்டது. ஆனால் பஞ்சாபிகளுக்கான தேசிய அடையாள ஆர்வம் அடங்கவில்லை. சீக்கிய மத அடையாளத்தைக் கடந்து இந்துக்கள், ஏன் பாகிஸ்தானிலுள்ள முஸ்லீம் பஞ்சாபிகள்கூட, ஒற்றை பஞ்சாபி அடையாளத்தோடு இணைந்து நிற்கவேண்டிய அவசியத்தை இன்று உணர்கிறார்கள். ஒரு காலத்தில் பஞ்சாபிகளின் தேசிய அடையாளமாக கருதப்பட்ட அகாலி தளம் கட்சி இப்போது ஊழல் நிறைந்த கட்சியாக, குடும்பக்கட்சியாக, கார்ப்பரேட் எடுபிடியாக மாறிவிட்டது. பாஜக அந்தக் கட்சியோடு சேர்ந்து இப்போது அந்தக் கட்சியை விழுங்கி வளர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, முன்னாள் ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த போராளிகள் பிரிவினை சாத்தியமில்லை என்று முடிவின் அடிப்படையில், அகாலிகளுக்கு மாற்றாக தேர்தல் களமிறங்கத்தொடங்கினார்கள். ஆனால் சரியான மாற்றுக்கட்சியை உருவாக்குவதற்கு பதிலாக குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்தார்கள். குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியைத் தேர்ந்தெடுத்து தங்களுடைய ஆதரவை அதற்கு வழங்கினார்கள். பஞ்சாபில் நடந்த கடந்த இரு தேர்தல்களில் வெளிநாடு வாழ்  சீக்கியர்கள் ஆம் ஆத்மிக்கு பணமழையாக கொட்டி, அதைப் பயன்படுத்தி சீக்கிய அல்லது பஞ்சாபி அடையாளத்தைக் காப்பாற்ற முயன்றார்கள். பாஜக. காங்கிரஸ் போன்ற மற்றுமொரு அனைத்திந்தியக் கட்சிதான் ஆப் என்று தெரிந்தும் வேறு வாய்ப்பற்ற நிலையில் அந்த முடிவை அவர்கள் எடுத்தார்கள். ஆனால் பழைய காலிஸ்தான்வாதிகளின் இன்றைய அரசியல் மாற்றங்களைப் பற்றிய சந்தேகம் தொடர்ந்து நீடித்த நிலையில், ஆம் ஆத்மிக்கு அவர்கள் ஆதரவளிப்பதைப் பார்த்து பயந்த பஞ்சாபிலிருந்த இந்துக்கள் காங்கிரஸ், பாஜக பக்கம் நகர்ந்தார்கள். இவ்வாறாக இந்த குறுக்குவழி தோற்றுப்போனது. 
சிந்தனைப் பரிசோதனையைத் தொடர்வோம்: ஒருவேளை பஞ்சாபிகள், மதச்சார்பற்ற பஞ்சாபி தேசியவாத தேர்தல்கட்சி ஒன்றைத் தொடங்கியிருந்தால், அந்தக் கட்சியோடு நமது கற்பனைக்கட்சியான மாவோயிஸ்ட் தேர்தல் கட்சி கைகோர்த்திருந்தால், எப்படி இருந்திருக்கும்?  இந்தியாவை பல்வேறு தேசிய இனங்களின் சிறைச்சாலை என்று வர்ணிக்கும் மாவோயிஸ்ட்கள் நினைத்திருந்தால், இப்படி ஒரு பல்தேசியஇன கூட்டமைப்பை உருவாக்கமுடியாமல் போயிருக்குமா என்ன?
ஒருவேளை மாவோயிஸ்ட் தேர்தல் கட்சி 2000களில் தொடங்கப்பட்டிருக்குமானால், அவர்களுடைய செல்வாக்கிருந்த மாநிலங்களிலேயே மிக முக்கிய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா, ஜார்கண்ட், பிஹார் தொடர்ப் பிரதேசத்தில் அது போட்டியிட்டிருக்குமேயானால், இன்று இந்த மாநிலங்களில் பாஜகவோ அதன் ஆதரவுக்கட்சிகளோ ஆட்சியிலேயே இருந்திருக்காது.

உண்மை என்னவென்றால், எங்கெல்லாம் மாவோயிஸ்ட்கள் தீவிரமான செயல்பட்டார்களோ அங்கெல்லாம் பிறகு பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது! சத்தீஸ்கர், ஜார்கண்ட் பெரிய உதாரணங்கள். மாவோயிஸ்ட்களின் “இரண்டுங்கெட்டான்” தேர்தல் நிலைப்பாடு, அவர்களுக்கே எமனாக மாறியது. ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக மாவோயிஸ்ட்களின் அடித்தளத்தைத் துடைத்தெறிந்தது.  வாஜ்பாயி-அத்வானி காலத்துக்கு பிந்தைய நவீன பாஜகவின் முதல் வெற்றி “மாவோயிஸ்ட் மாநிலங்களில்தான்” நிகழ்ந்தது என்பதை மறவாதீர்கள்.

பரிசோதனையைத் தொடர்வோம்: மத்திய, கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு மாநிலங்களில் ஒருவேளை மாவோயிஸ்ட் தேர்தல் கட்சி முக்கியமான கட்சியாக மாறியிருக்குமானால்,  பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்காது. ஒரு வேளை வேறு மாநிலங்களில் இதே அளவுக்கு வெற்றியைப் பெற்று பாஜக பெரிய கட்சியாக இருந்திருந்தாலும், அதற்கு எதிரணியாக சிபிஐ, சிபிஎம்மும் இந்தியாவின் பிரதான மாநிலக் கட்சிகளும்கூட மாவோயிஸ்ட் தேர்தல் கட்சியோடு கைகோர்த்து நிற்கக்கூடிய வாய்ப்பு வந்திருக்கும். (காங்கிரஸ் தேவைப்பட்டிருக்காது) இந்தியாவின் தேர்தல் கள யதார்த்தமும் முற்றிலும் வேறானதாக இருந்திருக்கும்.

மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களுக்கும் சிபிஎம்முக்கும் முரண்பாடுகள் வெடித்திருக்கலாம். ஆனால் பாசிச அபாயம் இருக்கும் நிலையில் எந்த இடதுசாரியும் உள்முரண்பாடுகளை பொருட்படுத்தமாட்டார். பிஹாரில் பழைய இடதுசாரிகளோடும் எம்எல் இயக்கத்தின் வேறு பிரிவினோரும் மாவோயிஸ்ட்கள் இணைந்து நின்றிருக்கமுடியும்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, மற்றொரு வெளியில், ஜனதா பரிவாரக் கட்சிகளுக்கும் திமுக, அகாலிதளம், தேசிய மாநாட்டுக்கட்சி, திரிணமூல் போன்ற கட்சிகளுக்கும்கூட அந்த மாவோயிஸ்ட் தேர்தல் கட்சி “வியூகார்த்த ரீதியிலான” இளைப்பாறுதலைத் தரக்கூடிய கட்சியாக மாறியிருக்கமுடியும்.
பத்தாண்டுகளுக்கு முன்புவரை 200 நாடாளுமன்றத் தொகுதிகளில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையிலிருந்த மாவோயிஸ்ட்கள், இந்தியாவின் நாடாளுமன்ற சனநாயக முறையைப் பற்றி, இன்றைய உலகச்சூழல் மற்றும் ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் எல்லைகள் பற்றி சரியான முடிவுகளுக்கு வந்திருந்தால், இன்று இந்தியாவின் முகமே வேறோன்றாக இருந்திருக்கும். குஜராத் தவிர வேறு எங்குமே பாஜக நீடித்திருந்திருக்காது. மெல்ல மெல்ல இடதுத் திருப்பத்தை நோக்கி இந்தியா சென்றிருக்கும். ஆனால் இந்தியா இன்று விரைவாக வலதுத் திருப்பத்தில் நுழைந்தேவிட்டது.
செயத்தக்க செய்யாமையானும் கெடும்!

இங்கே நான் யாரையும் குறைகூறவில்லை. மாவோயிஸ்ட்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை என்று,  நிறைய மேற்கோள்களுடனும் காரணங்களுடனும் வந்து, என்னை அடிக்காதீர்கள்.  இது ஒரு சிந்தனை பரிசோதனை. அவ்வளவுதான்.

இந்தச் சிந்தனைப் பரிசோதனையோடு சேர்த்து இறுதியில் மற்றுமொரு கேள்வியையும் பரிசீலியுங்கள். மாவோயிஸ்ட்களுக்கு நாடாளுமன்ற சனநாயகம் குறித்து நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நாடாளுமன்ற சனநாயகம் உண்மையான சனநாயகம் அல்ல. சரிதான்.

ஆனால் ஆர்எஸ்எஸ்ஸுக்கு மட்டும் நாடாளுமன்ற சனநாயகம் குறித்து நம்பிக்கை இருக்கிறதா?

https://m.facebook.com/story.php?story_fbid=10157137382524046&id=612219045

சாதிச்சான்றிதழ் வேண்டாமா?

Vijay Bhaskarvijay
Via facebook
2018-03-03

/நான் ஒரு தலித்.

பெண்.

திருமணம் ஆகவில்லை.

வருங்காலத்தில் என் பிள்ளைகளை ஜாதியற்றவர் என்று அறிவித்து ஜெனரல் கேட்டகிரியில் பள்ளியில் சேர்க்கலாம் என்றிருக்கிறேன்.
அப்படி ஒரு வாய்ப்பு பள்ளிகளில் கொடுப்பார்களா என்று தெரியவில்லை. /

இப்படி ஒருவர் Sarahah வில் மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.

தயவு செய்து இது மாதிரியான சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளை செய்து விடாதீர்கள்.
பிற்படுத்தபட்டோர் மற்றும் தலித் சமூகத்தினர் யாரும் இங்கே முன்னேறவில்லை.

பெரிய பெரிய பதவிகளில் இங்கே யாரும் இல்லை.
அதில் அனைத்திலும் சம உரிமை கிடைக்கும் வரை ”ஜாதி சான்றிதழ்” இங்கே தேவை.
பலர் இங்கே சாதி சான்றிதழை இல்லாதவன் முன்னேற என்று நினைத்து வருகிறார்கள். அப்படி அல்ல. அது சம உரிமைக்கானது.
ஒரு கரும்பு இருக்கிறது அதை ஒரு சாதி மட்டும் கடித்து தின்று கொண்டிருக்கிறது. இல்லை இது அனைவருக்குமானது என்று பகிர்ந்து கொடுப்பதுதான் இடப்பங்கீடு.

தமிழ்நாட்டின் Chief Secretary என்றொரு பதவி இருக்கிறது. அது ஒரு கரும்பு. அதை ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் பல ஆண்டுகளாய் சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கரும்பை அனைத்து சாதியினரும் சுவைக்க வேண்டும்தானே. அங்கேதான் ஜாதி சான்றிதழ் தேவை. அது தலித்களின் உரிமை.

இடப்பங்கீட்டை குற்ற உணர்வோடு அனுபவிக்கச் சொல்வது இந்த பார்ப்பனிய சமூகத்தின் தந்திரம். அதில் விழுந்து விடாதீர்கள். எக்காலத்திலும் ஜாதி சான்றிதழ் எடுக்காமல் மட்டும் இருந்து விடவே செய்யாதீர்கள். சாதி ஒழிப்பை பண்பாட்டில் காட்டுங்கள். பார்ப்பனிய பழக்க வழக்கத்தை ஒழியுங்கள். ஜாதி பார்க்காலம் திருமணம் செய்யுங்கள். ஜாதி பார்க்காமல் உதவி செய்யுங்கள்.
பண்பாட்டு அளவில் சாதியை ஒழிக்காமல் புற அளவிலான சாதி சான்றிதழ் போன்றவற்றில் விட்டுக் கொடுக்காதீர்கள்.

பார்ப்பனர்களின் தந்திரமே அதுதான். சாதி சான்றிதழ் பற்றிய ஒரு குற்ற உணர்வை படித்து முன்னேறிய தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரிடம் வளர்ப்பது. அதன் மூலம் இடப்பங்கீடு சிஸ்டத்தை ஒழிப்பது.
அப்படியானால் பார்ப்பானும் தலித்தும் ஒன்றாகிவிடுவார்களா ?

இல்லை பார்ப்பனர்களுக்கு இந்து மதம் இருக்கிறது.

பார்ப்பன மதத்தின் பழக்க வழக்கங்களை ஒவ்வொரு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களிடம் புகுத்துவது மூலம் பண்பாட்டு அளவில் அவர்கள் மேலேயே இருக்க வேண்டும்.

அதிகாரத்திலும் மேலே இருக்க வேண்டும். இதுதான் அதிகார வர்க்கத்தின் திட்டம்.

எக்காலத்திலும் சாதி சான்றிதழ் எடுக்காமல் மட்டும் இருக்காதீர்கள்.

குறிப்பாக தலித் சமூகத்தினர் கட்டாயம் எடுத்து விடுங்கள்.

தலித்தியம் சமூகநீதி போன்றவற்றை இந்திய அளவில் புரிந்து கொள்ள என் யோசனை இதுதான்.

1.முதலில் திராவிட சிந்தனையை புரிந்து கொள்ளுங்கள். பெரியார் திடலுக்கு ஒரு விசிட் அடியுங்கள். அங்கே ஒரு நூலகம் இருக்கிறது. அதனுள் நுழைந்து ஒரு மணி நேரம் வாரம் ஒருமுறை எதாவது ஒரு புத்தகத்தைப் படியுங்கள். பெரியாரைப் படியுங்கள்.
இதன் மூலம் பார்ப்பனியத்தின் தீமையை அதிகாரத்தை புரிந்து கொள்வீர்கள். மூன்று மாதம்
படிக்க ஒரளவுக்கு பார்ப்பனியத்தின் தீமையை புரிந்திருப்பீர்கள்.

2.அதன் பிறகு அம்பேத்கர் புத்தகங்களைப் படியுங்கள். அம்பேத்கரும் பார்ப்பனியத்தை சாடியிருப்பார். இன்னும் நுணுக்கமாக எடுத்துக் காட்டி இருப்பார். எதற்காக தாழ்த்தபட்டவர்களுக்கு இடப்பங்கீடு என்று மிக மிக விவரமாக சொல்லி இருப்பார். அதை முழுக்க படியுங்கள். கோட்டுர்புரம் லைப்ரரி சென்றால் தமிழ்மொழி பிரிவில் அம்பேத்கர் புத்தகங்கள் அனைத்தும் படிக்கலாம். அவர் எழுதிய நீலப் புத்தகம் மட்டுமே படியுங்கள்.

3. இந்த இரண்டையும் படித்த பிறகு ஒரு அறிவையும் தெளிவையும் அடைந்த பிறகு ”குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” போன்றவற்றின் எளிய வடிவ கம்யூனிச புத்தகங்களைப் படியுங்கள். சமூகத்தையும் அதோடு கலந்திருக்கும் பொருளாதாரத்தையும் மானுடவியல்பூர்வமாக அலசும் கம்யூனிசப் புத்தகங்களை படியுங்கள். இந்த வர்க்க ஏற்றத்தாழ்வு பார்வை அவசியம் தேவை. உலக முதலாளித்துவ சதி தத்துவத்தை புரிந்து கொள்வது அவசியம்.

4. காந்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். மதச்சார்பின்மை பார்வை, சிறுபான்மையினர் மதத்தினர் நலம் போன்றவற்றில் காந்தியின் பார்வையை துல்லியமாக புரிந்து கொள்ளுங்கள். அதே சமயம் சாதி ஏற்றத்தாழ்வு விசயத்தில் காந்தியை நிராகரித்து அம்பேத்கர் பெரியாரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

5. பெரியார் சொல்லிட்டேன், அம்பேத்கர் சொல்லிட்டேன், கம்யூனிஸப் புத்தகங்கள் சொல்லிட்டேன், காந்தி சொல்லிட்டேன் அடுத்து சுற்றுச் சூழலுக்காக போராடுபவர்கள், விவசாயத்திற்காக நடக்கும் போராட்டம் போன்றவற்றின் அவர்கள் சொல்லும் விஷயங்களையும் படியுங்கள்.

6. தொடர்ந்து அறிவியலை கற்றுக் கொண்டே இருங்கள். புள்ளி விபரங்களை அவ்வபோது படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த ஆறு பாயிண்டுகளையும் ஒருவருடம் எடுத்து முடித்து விட்டால் ஒரளவுக்கு உங்களுக்கு சமூகநீதி பார்வை வந்திருக்கும். நீங்கள் யார் பக்கமும் சாய மாட்டீர்கள். இது கமலின் மையம் அல்ல. புரிந்து கொள்வதினால் வரும் மய்யம்.

இந்த நிலையை அடையும் போது நீங்கள் கெத்தாக உணர்வீர்கள். அது அறிவு கொடுத்த கெத்தாக இருக்கும்.

இதற்கடுத்து இரண்டு முக்கிய கட்டங்கள் இருக்கின்றன.

ஒன்று பெளத்தத்தை புரிந்து கொள்வது. அம்பேத்கர் சொன்ன பெளத்தத்தை புரிந்து கொள்வது. பண்பாட்டு ரீதியில் அது எவ்வளவு முக்கியம் என்று புரிந்து கொள்வது.

இரண்டு மக்கள் போராட்டத்தை புரிந்து கொள்வது. ஒவ்வொரு சிறு அநீதிக்கும் போராட்டத்தில் இறங்கும் கம்யூனிஸ்ட்கள் போன்றோரின் அந்த தைரியத்தையும் வீரியத்தையும் கவனிப்பது. அதை ஆராய்வது.

இவ்வளவையும் நீங்கள் அறியும் பட்சத்தில்தான் சமூகநீதி பார்வையோடு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஆகையால் முழுமையாக் சமூக நீதியை புரிந்து கொள்ளாமல் சாதி சான்றிதழ் வேண்டாம் என்றெல்லாம் தயவு செய்து முடிவு எடுக்காதீர்கள்.

இது 1+1 = 2 என்ற கணக்கு அல்ல. இது Triple Integeration செய்யும் சிக்கலான கணக்கு.

-

https://m.facebook.com/story.php?story_fbid=10213410333725878&id=1625704159

Tuesday, February 27, 2018

ஆம்னி பஸ் கொள்ளைகள்

Rabeek Raja
Via facebook
2018-02-28

* மூன்று சம்பவங்கள்
         * ஆறு அதிர்ச்சிகள்
                * இரண்டு கேள்விகள்
                           * ஒரு கோரிக்கை

# சம்பவம் 1 :

ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்கால நாட்களில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போக்குவரத்து அமைச்சராக யார் இருந்தாலும் தவறாமல் ஒரு பேட்டி தருவார்கள். "தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று.

# சம்பவம் 2 :

ஆம்னி பேருந்துகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க, எல்லா பேருந்துகளிலும் அரசுக்கட்டணத்தை எழுதி ஒட்ட வேண்டும். கூடுதல் கட்டணப் புகார்களைப் பெற புதிய தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று
உத்தரவிட்டிருக்கிறது.

# சம்பவம் 3 :

தீர்ப்பைக்கேட்டு பதறி எழுந்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஏற்கனவே அரசு சார்பில் புகார் எண்கள் அறிவிக்கபட்டிருக்கின்றன.
பயணிகள் 044- 24749001, 044- 26744445 என்ற எண்களில் புகார் செய்யலாம் என தெரிவித்திருக்கிறார்.

√ அதிர்ச்சி 1 :

நேற்று தீர்ப்பு வந்ததும், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள் சிலர் அந்த புகார் எண்ணுக்கு அழைத்திருக்கிறார்கள். போனை எடுத்த அலுவலக உதவியாளர், "இது புகார் தெரிவிக்கும் எண்ணே இல்லை. அரசுத் துறையின் இணை செயலாளர் எண். இந்த எண்ணில் கட்டணக் கொள்ளை தொடர்பான எந்தப் புகார்களும் பெறப்படுவதில்லை" என சொல்லியிருக்கிறார்.

"சரி புகார் செய்ய வேறு தொலைபேசி எண்களைக் கொடுங்கள் எனக் கேட்க, ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கென தனி புகார் எண்களே இல்லை. ஆட்டோ ஓட்டுநர்கள், மீட்டர் பற்றிய புகார்களுக்கு மட்டுமே புகார் எண் இருக்கிறது என்றிருக்கிறார்.

√ அதிர்ச்சி 2 :

" கூடுதல் கட்டணம் பெறும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை " என அரசு சொல்லியிருப்பதால் எவ்வளவு கட்டணம் என ஆராய்ச்சியில் இறங்கினால் அதிர்ச்சி தான்  காத்திருக்கிறது.

SETC அரசு இணையதளத்தில்
சென்னை - திருச்சி இடையே (382கிமீ) சாதாரண பேருந்து கட்டணம் ₹186 .

Red Bus, Make my trips போன்ற இணைய தளங்களில் (பண்டிகைக் காலங்கள், வெள்ளி, சனி,ஞாயிறு இவற்றை எல்லாம் தண்ணி தெளித்து விட்டுவிடுங்கள்) வார நாட்களிலேயே ஏசி இல்லாத சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ₹450. ஆக எப்படி வெளிப்படையாக இப்படி சட்டத்தை மீறுகிறார்கள் என்று கேட்டால் அடுத்த அதிர்ச்சிக்கு தள்ளுகிறார்கள்.

√ அதிர்ச்சி 3 :

தமிழ்நாட்டில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு அரசு பயணக் கட்டணமே நிர்ணயிக்க முடியாது. ஏன்?

√ அதிர்ச்சி 4 :

தமிழ்நாட்டில் பயணிகள் போக்குவரத்துக்காக ஆம்னி பஸ்களுக்கு அனுமதியே வழங்கப்படவில்லை.
ஐயோ ! அப்புறம்..!!

√ அதிர்ச்சி 5:

பிறகு எப்படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன ?
ஐம்பது பேர் ஒரு திருமணத்திற்காக வெளியூர் செல்கிறோம் என தனியார் ஆம்னி பேருந்தோடு ஒப்பந்தம் செய்து பேருந்தையே வாடகைக்கு எடுத்து செல்வோம் இல்லையா, அதுமாதிரி குழுவாக ஆம்னி பேருந்துகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுத்தான் தினம்தினம் இயக்கப்படுகின்றன.
(ஆம்னி பஸ்சுல பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவன் சட்டப்படி உங்க சொந்தக்காரனாக இருக்க வேண்டும்).

√ அதிர்ச்சி் 6 :

தமிழ்நாட்டில் Semi Sleeper, Sleeper வகை பேருந்துகளுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவேயில்லை. வெளிமாநில ரெஜிஸ்ட்ரேசனில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

#கேள்வி 1 :

சட்டபூர்வமாக தனி நபர் பயணத்திற்கே அனுமதி இல்லாத நிலையில் ஆம்னிபஸ் உரிமையாளர்கள், கூடுதல் கட்டணம் வாங்கக் கூடாதென எப்படி மாநில அமைச்சர் பேட்டி கொடுக்க முடியும்.?

#கேள்வி 2 :

அரசு அனுமதியில்லாத பயணத்திற்கு, அரசுத் தரப்பால் கட்டணமே நிர்ணயிக்க முடியாத பயணத்திற்கு எப்படி கட்டணக் கொள்ளை என்று ஒரு புகார் இருக்க முடியும்? அதற்கு எப்படி ஒரு அரசு புகார் எண் அறிவிக்கப்பட முடியும்? அதை எப்படி ஒரு அரசு வழக்கறிஞர் தைரியமாக நீதிமன்றத்தில் சொல்ல முடியும் ?

கோரிக்கை :
---------------------

கூடுதல் பயணக் கட்டணம், கட்டணக் கொள்ளை தொடர்பான புகார் எண், ஆண்டுதோறும் அமைச்சரின் தெம்பூட்டும் பேச்சு , நீதிமன்றத்திற்கு தவறான தகவல் என போங்கு ஆட்டம் ஆடாமல், காலத்திற்கேற்ப மோட்டார்
வாகன சட்டத்தைத் திருத்தி தொலையுங்கள்.

என்ன செய்யலாம் ?
பொறுப்பானவர்கள் யோசிப்பது நலம்.

இதெல்லாம் அரசு பேருந்து அதிகாரியின் முக நூல் பக்கத்தை மேய்ந்த போது கெடச்ச புல்லு கட்டு.

Jagannathan Balakrishnan

https://m.facebook.com/story.php?story_fbid=1807760415956347&id=100001672181780