Saturday, December 8, 2018

திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது? - தோழர் கலிபூங்குன்றன்

இது இயக்குநர் ரஞ்சித் ஒருவருக்கு மட்டுமான விளக்கம் அல்ல, இதுபோன்ற போலிப்பரப்புரைகளுக்கு பலியான அத்தனை நண்பர்களுக்குமானது.

இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பார்வைக்கு...

"திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?'

"தோழர் கலிபூங்குன்றன் அவர்களின் பதில் "

முற்போக்குக் கொள்கை உடைய திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி ஒன்று  தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (2018 நவம்பர்: 25 டிசம்பர்:1) வெளிவந்துள்ளது.

ஜாதி அமைப்பு முறையின் அடிவேர் வரை சென்று அலசி எடுத்திருக்கிறார். அதன் பார்ப்பன மூலத்தையும் அடையாளம் கண்டு தோலுரித்துத் தொங்க விடுகிறார்.
அன்றாட வாழ்க்கையில் ஜாதியின் தாக்கங்களைத் தங்குத் தடையின்றி விமர்சனக் கோடாரியால் பிளந்து தள்ளியுள்ளார்.
நாட்டில் நடைபெறும் ஜாதிய வாதம் -  தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறைகள் பற்றி எல்லாம் பொறுப்புணர்ச்சியுடனும், வேதனைக் குமுறலுடனும் விளாசித் தள்ளி யுள்ளார். பாராட்டுகள்.

அதே நேரத்தில் பெரியார் இயக்கம் பற்றி அவர் விமர்சித்துள்ள பகுதிகள் நமது விமர்சனத்துக்கு உட்பட்டவையாகும்.

பெரியார் இயக்கம் என்பது பார்ப்பனரல்லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக்கிடையேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்கள் கைகளில் இருந்து பார்ப்பனரல்லாதார் கைகளுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பார்ப்பனர்களுக்குத் துணை போகும் செயலில் இறங்கி விட்டார்கள் என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனரல்லாதார் என்று சொல்லும் போது அதில் ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களும் இடம்பெற மாட்டார்களா?

அண்ணல் அம்பேத்கர் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லையா - அவர்கள் மூலக்கருத்தை மூர்க்கமாக தாக்கவில்லையா? பார்ப்பனர்களை எதிர்த்த வரிசையில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும்தான் என்று பொருள் கொள்ள முடியுமா?
அதன் பலன் யாரிடம் போய் சேர்ந்தது என்பதை இயக்குநர் இரஞ்சித் போன்றவர்கள்  விளக்குவது நல்லது.

பெரியார் இயக்கத்தால் நடத்தப்பட்ட பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களால் பிரச்சாரத்தால்  தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் தோழர் இரஞ்சித்தின் கருத்தா?

வைக்கத்தில் தந்தைபெரியார் நடத்திய போராட்டமும் சேரன்மாதேவியில் நடத்திய போராட்டமும் தாழ்த்தப் பட்டவர்களை நீக்கித்தானா?

வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமைப் போராட்டத்தை மகத்தில் நடத்திட அண்ணல் அம்பேத்கருக்குத் தூண்டு கோலாக   இருந்தது என்று அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் குறிப்பிடவில்லையா?

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி கேட்டுப் போராடி வெற்றி பெற்றார் அண்ணல் அம்பேத்கர்.அதன் பலன் கிடைக்காமல் போனதற்குக் காந்தியார்தான் காரணம். அதனை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். அண்ணல் அம்பேத்கருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருந்த தந்தை பெரியார். ஒரு காந்தியாருடைய உயிரை விட ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உங்கள் கைகளில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்று தந்தி கொடுத்தது யாருடைய உரிமைக்காக?

பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள் (குடிஅரசு, 11.10.1931) என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய மேல்ஜாதி மக்களான சூத்திரர்களுக்கு சாட்டை அடி கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்து உணவுண்டு - சூத்திர பஞ்சம மக்கள் என்ற பார்ப்பன வருணா சிரமத்தால் பிளவுண்டு கிடந்த மக்களி டையே  இணைப்புப் பாலத்தை ஏற்படுத் தியது பெரியார் இயக்கம் தானே ?

ஒரு எடுத்துக்காட்டு
கேள்வி: தந்தை பெரியார் அவர்களோடு தாங்கள் இணைந்து பணியாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.
பதில்: நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன்.  பெரியார் அவர்கள் கலந்து கொண்ட திருமணங்களிலும் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன்.
சென்னை பெரம்பூரில் பெரியார் தலைமையில் ஒருசுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி... ஒரே சேறும் சகதியுமாகி விட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப் போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார்.
(நீதிக்கட்சி பவளவிழா மலரில் மீனாம்பாள் சிவராஜ்பேட்டி -1992 பக்கம் 125)

திராவிடர் கழகத்திற்கே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று தானே பெயர் சூட்டப்பட்டது.
தங்களை தாழ்த்தப்பட்டவர்களை விட உயர்வானவர்கள்  என்று மமதை கொண்டிருந்தவர்களின் மண்டையில் அடிக்கும் வண்ணம் பஞ்சமன் என்பதை விட சூத்திரன் என்பது தான் கேவலம், சூத்திரன் என்றால் வேசி மகன்,  பஞ்சமன் என்றால் அவர்கள்தான், அவர்கள் அப்பா அம்மாவிற்கு முறையாக பிறந்தவன் என்று முகத்தில் அடித்துச் சொன்னவர் தந்தை பெரியார்.
(குடிஅரசு - 16.6.1929)

மனித வாழ்க்கையின் நன்மைகளை உத்தேசித்தும், ஜீவகாருண்யத்தைப் முன்னிட்டும், தேச முன்னேற்றத்துக்காகவும் பொறுத்தும் நம் நாட்டில் பெரும் பகுதியினர் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை விலக்க பொது ஜனங்களிடையே இடைவிடாது பிரச்சாரம் செய்து அவர்களைக் கண்விழிக்கச் செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களே இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்கு மாநாட்டில் முன்மொழிந்தார் (குடியரசு 17.2.1929).

ஆண்டாண்டுக் காலமாக தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் தீண்டாமை கொடுமையை வெறும் சட்டத்தால் ஒழித்து விட முடியாது -  மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை செய்தாக வேண்டுமே. அதன் முன்னணி ஆயுதமாக இருப்பது பிரச்சாரமே அதனை ஒரு நூற்றாண்டு காலமாக செய்து வருவது பெரியார் இயக்கம் இல்லையா? இதுபோல் எந்த மாநிலத்திலாவது பத்தில் ஒன்று நடந்திருக்கிறது என்று சவால் விட்டு கேட்க முடியுமே!

சென்னைத் தீண்டாமை விலக்கு மாநாடு, (10.2.1929)
கள்ளக்குறிச்சி - தென்னார்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மாநாடு (16.6.1929)
சென்னை ஆதிதிராவிடர் மாநாடு (21.7.1929)
இராமநாதபுரம் ஆதிதிராவிடர் மாநாடு (25.8.1929)
திருநெல்வேலி தீண்டாமை விலக்கு மாநாடு (10.6.1931)
சேலம் ஆதிதிராவிடர் மாநாடு (16.5.1931) லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (7.6.1931)
திருச்சி ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)
கோவை ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)
தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1931) கோவை ஆதிதிராவிடர் மாநாடு (7.12.1931)
லால்குடி தீண்டப்படாதவர் மாநாடு (7.2.1932)
அருப்புக்கோட்டை தாலுகா தாழ்த்தப் பட்டோர் மூன்றாவது மாநாடு 28.8.1932
லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் கிறித்துவர் மாநாடு (7.5.1933)
சென்னை தாழ்த்தப்பட்ட கிறித்துவர் மாநாடு (7.8.1933)
தஞ்சை ஜில்லா மூன்றாவது ஆதிதிராவிடர் மாநாடு (9.7.1935)
சீர்காழி ஆதிதிராவிடர் மாநாடு (10.7.1935)
சேலம் ராசிபுரம் ஆதி திராவிடர் மாநாடு (29.9.1935)
திருச்செங்கோடு ஆதிதிராவிடர் மாநாடு (7.3.1936)
பெரியகுளம் தாலுகா தேவேந்திரகுல மாநாடு (3.81936)
சேலம் ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (2.9.1936)
சிதம்பரம் ஆதிதிராவிடர் மாநாடு (6.5.1937)
ஆம்பூர் ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1937)
திருச்செங்கோடு தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (8.7.1937) அருப்புக்கோட்டை தாழ்த்தப்பட்டோர்  மாநாடு 3.1.1938 இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

தீண்டாமை ஒழிப்பு, பொதுவுரிமை, கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு - இவற்றை உள்ளடக்கிய தீர்மானங்கள் தான் ஒவ்வொரு மாநாட்டிலும்- பிரச்சாரமோ அடைமழை! அடைமழை!! இவையெல்லாம் வீண் போகவில்லை. ஏய், டேய், போடா, வாடா என்ற சொல் பிரயோகங்கள் புதையுண்டுப் போகவில்லையா? சூத்திரச்சி வந்து விட்டாளா என்று இன்று கேட்க முடியுமா?

பெயருக்குப் பின்னால் ஜாதி வால் தொங்குவது அறவே ஒழிந்து போனது தமிழ்நாட்டில்தான் என்றால் இதற்கு வித்திட்டது பெரியார் இயக்கம் அல்லவா?

நீதிக்கட்சி ஆட்சியில் தானே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது தாழ்த்தப் பட்டவர்களுக்கு உட்பட.(1928)

" எந்தப் பொது சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரி மையை யாரும் தடுக்க முடியாது என் பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும், அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமை களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப் பட்டது (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924) 1936 வாக்கில் இந்த வகையில் 9614 பள்ளிகள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன.

நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட ஆணை இது! தாழ்த்தப்பட்டவர்கள் பேருந்துகளில் அனுமதி, பள்ளிகளில் அனுமதியெல்லாம் நீதிக்கட்சி ஆட்சியில் தான். தொழிலாளர் துறை என்பது முழுக்க முழுக்க தாழ்த்தப் பட்டவர்களின் முனற்னேற்றத்திற்கே!

இவையெல்லாம் பழைய கதை என்று சொல்லலாம் - தந்தை பெரியார் அவர்களின் இறுதி மூச்சு அடங்கும் வரை உரிமை மறுக்கப்பட்ட மக்கள் பக்கமே தன் சிந்தனைகளையும், செயல்களையும் அர்ப்பணித்தார். கோயில் கருவறைக்குள்  தாழ்த்தப் பட்டவர்கள் போகக்கூடாதா? அவர்கள் அர்ச்சனை செய்ய மறுப்பது ஏன் என்ற களத்தில் நின்று தானே இறுதி மூச்சையும் துறந்தார். இன்று அது செயல்பாட்டுக்கு வந்து விட்டதே.

முதலில் மனிதனுக்குச் சுயமரியா தையை ஊட்டுவது,  மூட நம்பிக்கைகளி லிருந்து விடுதலை செய்து பகுத்தறிவுப் பாதையில் திருப்புவது, எதைக் கொடுத் தாலும் கல்வியைக் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற வர்ணாசிரம கோட்பாடுக் கோட்டையை உடைத்து, கல்வி வேலைவாய்ப்புகளில் உரிய பங்கு பெறுவது என்பது தாழ்த்தப் பட்டவர்களுக்கும் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பு இல்லாமல் வேறு எங்கிருந்து குதித்தது?- இவை எல்லாம் அதிகார பங்கேற்பதற்கான உந்துதல் இல்லையா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் ஏன் நீதிபதியாக வர வாய்ப் பில்லை என்ற தந்தை பெரியாரின் கேள்விக்கு விடைத்தானே ஒரு ஜஸ்டிஸ் வரதராஜன்.
அவர்தானே உச்ச நீதிமன்றத்திற்குள்ளும் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியும்  கூட!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 10 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் வருவதற்கான கால்கோள் விழாவை நடத்தியது யார்? அது அதிகாரப் பகிர்வின் கீழ் வராதா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளவரசன், திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் - தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் பழைய கொண்டாம்பட்டி, அண்ணா நகர், புதிய கொண்டாம்பட்டி, வாழ் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளைக் ஜாதி வெறியர்கள் கொளுத்தி சாம்பலாக்கிய நிலையில் (7.11.2012) உடனடியாக பாதிக்கப் பட்ட பகுதிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையில் கழகப் பொறுப் பாளர்கள் நேரில் சென்று ஆறுதல்  கூறியதுடன் உடனடியாக அங்கு ஜாதி ஒழிப்பு மாநாட்டை அனைத்து கட்சியின ரையும் அழைத்து நடத்தியது திராவிடர் கழகம் தானே. (9.12.2012)

ஓசூர் அருகே சூடைக்காந்தப் பள்ளியைச் சேர்ந்த ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட  நந்திஷ் சுவாதியை பெற்றோர் களே தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர நிலையில் (13.12.2018) வரும் 30ஆம் தேதி ஜாதி -தீண்டாமை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் ஓசூரில் நடத்தப்பட உள்ளதே.

இவையெல்லாம் அலட்சியப்படுத்தப்பட வேண்டியவை என்று கண்டிப்பாக இயக்குநர் தோழர் ரஞ்சித் சொல்ல மாட்டார் என்று நமக்கு உறுதியாகவே தெரியும்.

எல்லாம் முடிந்து விட்டது - சமத்துவமும், சகோதரத்துவமும் கைகோர்த்து விட்டன என்று யாரும் மார்தட்டவில்லை. ஆயிரம் ஆயிரங்காலத்து வருணாசிரமம் நம் மக்களின் மூளையில் விலங்காக பூட்டப்பட்டு விட்டது.
மூளையில் மாட்டப்பட்ட விலங்கை அவ்வளவு எளிதாக விலக்க முடியாது.  அதே நேரத்தில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மை  தேவையில்லை.

நடந்திருக்கின்ற மாற்றங்களை  பரிகசிப்பதோ,  உதாசீனப்படுத்துவதோ,  ஆரோக்கிய மானதுமல்ல! மகத்தான உழைப்பும், தியாகமும்,  இந்த மாற்றத்தின் வேரில் குருதியாகக் கொட்டப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை நீக்க வேண்டும் என்று கூறி, ஜாதியைப் பாது காக்கும் சட்டப் பகுதியை எரித்து மூன்றாண்டு காலம் வரை சிறைத்தண்டனை ஏற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திராவிடர் கழக கருஞ்சட்டைக் குடும்பத்தினரைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் இரஞ்சித் அவர்களே!

நமது ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலேயே கூட உயர்வு தாழ்வு, மேல் - கீழ்நிலை இருக்கத்தானே செய்கிறது. இட ஒதுக்கீடே எங்களுக்கு வேண்டாம் என்றும், நாங்கள் ஜாதியில்  உசத்தி - தேவேந்திரர் என்று சொல்லு பவர்களும் நம்மிடத்தில் இருக்கத் தானே செய்கிறார்கள்.
இவர்களையும் நாம் எதிர்க்க வேண்டிய கெட்ட வாய்ப்பையும் நினைக்க வேண்டிய தருணம் இது.

அதனால் அண்ணல் அம்பேத்கர் தோற்றுப் போய்விட்டார் என்று விரக்திக்காதை எழுதி விடலாமா?

ஜாதி அமைப்பின் பலமே அண்ணல் அம்பேத்கர் கூறிய ஏணிப் படிக்கட்டு முறைதான். மனித சமத்துவம் ஊட்டும் கல்விமுறை கொணர்வது,  பகுத்தறிவு, விஞ்ஞான சிந்த னைகளை வளர்ப்பது என்கிற முறையிலே மாற்றங்கள் கொண்டு வர தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். இருவரும் வலதுகரம், இடதுகரம் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும். தந்தை பெரியார் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டத்தைத் தொடங்கி அவர் நினைத்த அளவில் இல்லையென்றாலும் எதிரிகள் மிரளும் அளவிற்கு மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது தான் வரலாறு.

234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டே இரண்டு பார்ப்பனர்கள் தான் உறுப்பினர்கள். இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்டு - சற்றே எண்ணிப் பார்க்கவேண்டும்! நண்பர்கள் யார், பகைவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொள்வதில் கூட இன்னும் தயக்கமும் குழப்பமும் இருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது!

பெரியார் இயக்கம் பார்ப்பன அல்லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக் கிடையேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்களில் இருந்து பார்ப் பனர் அல்லாதாவர்களுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பாரப்பனர்களுக்குத் துணைப் போகும் செயலில் இறங்கி விட்டார்கள். ஜாதியை எதிர்த்துப் போராட முன் வரவில்லை. அதிகாரத்தின் சுவையில் மூழ்கி விட்டார்கள். பார்ப்பனீயத்தை அழிக்க வேண்டுமென்றால் பார்ப்பனிய சிந்தனையை ஒழிக்க வேண்டும். பார்ப்பனர்களின் கைகளில் இருந்து அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தாங்கள் பார்ப்பனியக் கொள்கை களைக் கடைப்பிடிக்கத் துவங்கி விட்டனர். பார்ப்பனர்  - பார்ப்பனர் அல்லாதோர் போராட்டம் தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் நடுநிலை ஜாதியினருக் கிடையேயான போராட்டமாகி விட்டது. என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக இயக்குநர் இரஞ்சித் குற்றப் பத்திரிகை படிப்பது சரிதானா?

திமுக சார்பில் ஆட்சிக்கு வந்த கலைஞர் அப்படி என்ன உயர்ந்த ஜாதிப் பட்டியலில் இடம் பெற்றவர்தானா? கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட காமராசர் அப்படியென்ன பெரிய ஜாதி?

கலைஞரையும் சரி, காமராஜரையும் சரி பார்ப்பனர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனரா - இன்று வரை கூட? கலைஞர் வீட்டில் தாழ்த்தப்பட்ட சமூக மருமகள்கள் வரவில்லையா? - அது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தாதா? அரசியல் தேர்தல் பதவி பக்கம் செல்லாத திராவிடர் கழகம் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி தன் ஆயுளையே ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுகிறதே!  திராவிடர் கழகத்தினரிடமிருந்து ஸ்டாலின் விலகி இருக்க வேண்டும் என்று பார்ப்பன ஏடுகள் இலவசமாக அறிவுரை சொல்லுவது எந்த அடிப்படையில்?

வெறும் விமர்சனம் செய்யும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு  எதை வேண்டு மானாலும் பேசலாம். நாங்கள் களத்தில் நிற்பவர்கள். அத்தகையவர்களை நோக்கி களங்கமான கற்களை வீசுவது - யாருக்கோ தான் பயன்படும்.
கல்வி, வேலைவாய்ப்பில் வளர்ச்சி என்பதே ஒரு வகையான அதிகார மேல்நிலைதான். முதல் அமைச்சர் நாற்காலியில் வந்தால் தான் ஏற்கமுடியும் என்பதல்ல.

ஒரு பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வந்த நிலையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழக்கில் சமூக நீதியான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். வழக்கின் கட்டைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை என்பதற்காக வருத்தப்படலாம் அவ்வளவுதான் - அதற்குமேல் விமர்சிக்கலாமா?

விமர்சன கர்த்தாக்கள் கீழே இறங்கி வரட்டும், கைகோக்கட்டும் - வரவேற்கிறோம். பெரியார் இயக்கத்தின் பெரும் பணியை கொச்சைப்படுத்துவது, பெரியார் சிலையை உடைப்பவர்களுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும்தான் தீனிப் போட உதவும்.

தோழர் இரஞ்சித் போன்றவர்கள் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடட்டும். ஏற்கெனவே தலித் அல்லாதார் கூட்டணியை உண்டாக்க முயற்சித்தவர்கள் கரங்களை வலுப்படுத்தி விடக்கூடாது.

தோழர் இரஞ்சித்துக்கு வாழ்த்துகள்.!

மதகுருத்துவத்திலிருந்து வெளியேறுவோம்

M. Milhan Mohamed
2018-12-08

எமது செழுமை மிக்க வரலாற்றில் நூற்றுக்கு மேற்பட்ட மத்ஹப்கள் (சட்ட முறைமை, சட்ட வியாக்கியானம், பொருட்கோடல்) தோன்றின, அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவு, சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி, வளர்ச்சியை நோக்கி நகர்தினவேயன்றி, காழ்ப்புணர்வுகளுக்கோ, கருத்துரிமையை மறுப்பதற்கோ அவர்களை தூண்டவில்லை. பின்னய கால இஸ்லாமிய உலகின் துரதிர்ஷ்டம் நான்கு மத்ஹப்புக்குள் (உண்மையில் இந்ந நான்கு மத்ஹப்களும் ஒரே நேர்கோட்டில் வைத்து மதிக்கத்தக்க பேரறிஞர்களுடையவை) தம்மை சுருக்கிக்கொண்டது. அதற்கப்பால் கீழைத்தேயம் துரதிர்ஷ்டத்தின் விளிம்புக்குள் சென்று ஒரு மத்ஹப்புக்குள் தம்மை குறுக்கிக்கொண்டது. இதனுடைய மோசமான விளைவு இதற்கு வெளியில் சிந்திப்பவர்களை, வழிகேடனாக பார்க்குமளவு, பண்மைத்துவ இருப்பை அச்சுறுத்துமளவு பார்வைகளை, சிந்தனையை மங்கிப்போக செய்தது.

இந்த அங்கவீனம் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை மிக மோசமாக தாக்கியது. இந்த காலங்களில் உருவான மதக்காவலர்களின்(?), அறிவு வெளி ஒற்றை மையமாக, ஒரு மத்ஹபைச் சுற்றியே இருந்தது. செக்குமாட்டைப் போல் ஒன்றையே சுற்றிவந்தவர்களால் இன்னொன்றின் இருப்பை அங்கீகரிக்க முடியவில்லை, அதற்கு செவிசாய்க்க கூட முடியவில்லை. இந்த மத்ஹபுக்கு வெளியே மக்களை சிந்திக்கத் தூண்டுவது, தமது இருப்பைக் கேள்விக்குறியாக்கிவிடும் எனும் அச்சம், மார்க்கத்தை (வாழ்க்கை நெறியை) மதமாக (செயலூக்கம் இல்லாத வெற்றுப் போதனைகளாக) மாற்றி அதனை செவிமடுத்தால் போதும், கேள்விகள் கேட்கக் கூடாது, இதற்கு வெளியே சிந்திக்கக் கூடாது என்ற கருத்துப் பதிவை மக்கள் மயப் படுத்தியது (உ-ம்: குர்ஆனை நேரடியாக அனுகுவது வழிகேட்டுக்கு இட்டுச்செல்லும்). மார்கத்தின் ஏகபோக உரிமையாளர்களாக, அனந்தரக் காரர்களாக இவர்களேயானார்கள், இவர்களுக்கு வெளியே நின்று யாரவது கருத்துச் சொன்னால் அவர் வழிகேடராக ஆகும் (ஆக்கப்படும்) அளவு நிலமை மோசமாக இருக்கிறது.

வரலாற்றில் கிறிஸ்த்துவம், மத குருத்துவத்தை நோக்கி நகர்த்தப்பட்டது. பொது மக்கள் கடவுளை தொடர்பு கொள்வதும் பாவமன்னிப்பை யாசிப்பதும், தேவாலயங்கள், திருச்சபைகள் ஊடாக மாத்திரமே முடியும் என்ற வறட்டுச் சிந்தனை போதிக்கப்பட்டது. இதற்கு வெளியில் கடவுளிடம் இடைத்தரகர் (பாதிரி, யூதம்-ரப்பி) இன்றி நேரடியாக பாவமன்னிப்பு யாசிப்பதும், தொடர்பு கொள்வதும் தெய்வக்குற்றமாக, கடவுள் நிந்தனையாக, மதத்துரோகமாக சித்தரிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள், உண்மையில் தீயிலிட்டு பொசுக்கப்பட்டார்கள்.

இதிலிருந்து அவர்கள் வெளியேறும் போது, துரதிர்ஷ்டவசமாக மதத்தையும் வாழ்க்கையையும் வேறாக பிரித்து மதத்திலிருந்தே தூரமாகி விட்டார்கள்.

நாமும் இப்போது தான் மதகுருத்துவத்திலிருந்து வெளியேற திமிரிக்கொண்டிருக்கிறோம்.

இதன் பிறகு தமக்குள்ளேய புதைந்து கொண்ட, வெளியே வந்தால் வழிகேடு என்ற முத்திரை குத்தப்படுவோம் எனப்பயந்த அத்தனை சிந்தனைகளுக்கும் மீள் பிரசவம் நடக்கப்போகிறது.

வார்த்தையில் மார்க்கமாகவும் வாழ்க்கையில் மதமாகவும் அல்லல் பட்ட இஸ்லாம், வாழ்க்கை நெறியாக மாறி செழித்தோங்க, எடுத்து  வைக்கப்படும் முதல் எட்டு இதுவாகும்.
குருத்துவப்பொறி தகறும் போது கிறிஸ்த்தவர்கள் மதத்தை விட்டு தூரமாகிவிட்டார்கள், மாற்றமாக நாம் காலத்தோடு இணைந்து பயணிக்கிற, வாழ்க்கையில் ஊடுபாவக் கூடிய இரண்டறக்கலக்கக் கூடிய பிரிகோடற்ற இஸ்லாத்தை பெறப்போகிறோம் இன்ஷா அல்லாஹ்.
...

இன்றய நிலமை உண்மையில் (உஸ்தாத் மன்சூர்) இஸ்லாத்துக்கே ஓரச்சுறுத்தல் என்றால், அதற்கெதிராக குரல் கொடுப்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமை. தவ்ஹீத் ஜமாத், தப்லீக் ஜமாத், ஜமாதே இஸ்லாமி, ஸலாமா, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் ஏனய அத்தனை அமைப்புக்களும் ஒன்றாக குரல் கொடுக்க வேணடும். ஷியா, காதியானி பிரச்சினைகளின் போது ஒவ்வொரு அமைப்பும் அதனை எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டது போல், சமூகத்தை விளிப்புணர்வு ஊட்டியது போல் இப்போதும் செய்திருக்க வேண்டும்.

மறுதலையாக எல்லா அமைப்புக்களும் கருத்துரிமையைப் பற்றி, சகிப்புத்தண்மையைப் பற்றி, கருத்து வேறுபாடுகளின் போது பேண வேண்டிய ஒழுக்கம் பற்றி பேசிக்கொண்டிருக்க, அக்குறனை ஜம்மியதுல் உலமா (அகில இலங்யை ஜம்மியா இதனோடு ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது) மட்டும், ஒரு வழிகேட்டை எதிர்ப்பது போல் எதிர்க்கிறது.

பள்ளிவாயலில் நிகழ்சிகள் நடத்த அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, பொதுமக்களுக்கு அவரை ஒரு வழிகேடராக சித்தரிக்க முயல்கிறது, இதற்கு குத்பாவை கூட சூசகமான முறையில் பக்கச்சார்பான ஓர் ஊடகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
பள்ளியில் பொதுமக்களை ஒன்று கூட்டி தமது கருத்தை சொல்லும் உரிமை ஜம்மியதுல் உலமாவுக்கு இருக்கின்ற அதே நேரம் மற்றவர்களுக்கும் இருக்கிறது. இந்த உரிமை விடயத்தில் பள்ளி நிருவாகம் பக்கச்சார்பின்றி நடந்து கொள்வது இறையச்சத்துக்கு மிக நெருக்கமானதாகும்.

இங்கு பேசுவது உஸ்தாத் மன்சூர் என்ற தனிநபருக்கன்றி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள கருத்துரிமை நசுக்கப்படக் கூடாது என்ற ஆதங்கத்தில் தான். உஸ்தாத் மன்சூரின் எல்லா கருத்துக்களையும், ஒரு சராசரியனாக என்னால் ஜீரனிக்க முவில்லை, அப்படியான விடயங்களில் மற்ற அறிஞர்களை பின்பற்றுகிறேன், எனக்கு உடன்பாடு இல்லாவிடினும், கருத்துச் சொல்ல, ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கும் உரிமையை மதிக்கிறேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=642723756180440&id=100013284637976

Friday, December 7, 2018

செ.கார்கி - ராஜ ராஜ சோழன்

செ.கார்கி
2018-12-07

தமிழ்த் தேசியவாதிகளால் மாமன்னன் என்று கொண்டாடப்படும் ராஜராஜ சோழனைப் பற்றியும் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்து விடுவோம். இல்லை என்றால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள்.

தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் என்ற மன்னனை கண்டுபிடித்தவர் ஹூல்ஸ் என்ற ஆங்கிலேயர் ஆவார். இவர்தான் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் முதன்முதலாக பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படித்து இந்த எழுத்துக்கள் தமிழ்தான் என்றும், அவனுடைய காலம் கி.பி 985-1113 என்றும் சொன்னவர். அதற்கு முன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது காடுவெட்டி சோழன் என்னும் மன்னன்தான் என்று பெரும்பான்மை தமிழ்மக்கள் நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆக சீண்டுவார் யாருமின்றி அனாதையாக கல்வெட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜராஜனை அதில் இருந்து எழுப்பிவிட்ட பாவத்தைச் செய்தவர் ஓர் ஆங்கிலேயரே ஆவர்.

இந்த ராஜராஜன் சாதாரண அரசன் அல்ல, பத்தாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்த நரேந்திர மோடி ஆவான். அவனது உடல், பொருள், ஆவி என அனைத்தயும் பார்ப்பனியத்தை வளர்ப்பதற்காகவே செலவிட்டவன். இந்த ராசராசன் இரண்டாம் பராந்தகனின் இரண்டாவது மகன் ஆவான். அவனது அண்ணன் ஆதித்த கரிகாலன் என்ற பட்டத்து இளவரசன். அவன் உடையார்குடி பார்ப்பனர்களால் கொல்லப்படுகின்றான். கொலையாளிகள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ராஜராஜ சோழன் அவர்களைத் தண்டிக்காமால் விட்டுவிட்டான் என்ற செய்தி உடையாளூர் கல்வெட்டின் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. அண்ணனின் உயிரை விட பார்ப்பனின் உயிர் ராஜராஜனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. பார்ப்பனனைக் கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் வந்துவிடும் என்ற பார்ப்பன சிந்தனையே அவனை அவ்வாறு செய்ய வைத்தது.

இன்று தெலுங்கர்களாலும், மலையாளிகளாலும், கன்னடர்களாலும் தமிழ்நாட்டில் வளங்கள் சுரண்டப்படுவதாக கூப்பாடு போடும் தமிழ்த் தேசியவாதிகள் ராஜராஜனின் அரசியல் பிழைப்புவாதத்தை தெரிந்து கொள்ள வேண்டும். “நாடுபிடிக்கும் ஆசையில் இருந்த ராஜராஜ சோழன் தன் மகள் குந்தவையை வேங்கி நாட்டு மன்னன் விமலாத்தித்தனுக்கு மணம் முடித்து வைத்தான். அது போல ராசேந்தர சோழன் தன்னுடைய மகள் அம்மங்கா தேவியை கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் ராஜராஜனுக்கு மணம் முடித்து வைத்தார். பின்னாளில் அரியணை ஏறிய முதலாம் குலோத்துங்கன் அம்மங்காதேவியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தமிழனுக்குப் பிறக்காதவன்.

ராஜராஜன் பார்ப்பனியத்தின் ஊதுகுழலாக இருந்தது மட்டும் அல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் கேவலமாக நடத்தினான். அவனது ஆட்சிக்காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் தனிக்குடியிருப்புகளில் அதாவது ஊருக்கு வெளியே குடிவைக்கப்பட்டனர். பெரியகோவில் கல்வெட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளைக் குறிக்கும் விதமாக பறச்சேரி, தீண்டாச்சேரி என்கிற பெயர்கள் குறிப்பிடுவதில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தஞ்சைப் பெரிய கோவிலில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவரடியார்களாக பணியமர்த்தப்பட்டனர் என்ற செய்தியை தஞ்சை பெரியகோவில் வட வெளிச்சுற்றுச் சுவரில் உள்ள தளிச்சேரிக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்தப் பெண்களுக்கு மணம் புரியும் உரிமை கிடையாது. இந்தப் பெண்கள் அர்ச்சகர்களின் ஆசைக்குட்பட்ட வைப்பாட்டிகளாகவும் விளங்கினர். இப்படி தமிழ்மன்னர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தத் தேவதாசிமுறை மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முன்முயற்சியால் தான் ஒழிக்கப்பட்டது என்பதையும் அதற்குத் தமிழ்த் தேசியவாதிகளின் முன்னோர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பதும் வரலாறு.

ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் தான் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம், தேவதானம், சீவிதம் போன்ற பெயர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டன. அப்படி கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு எந்த வரியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை விவசாயிகள் மீது கொடுமையான வரிகள் விதித்து, அவர்களைத் துன்புறுத்திய ராஜராஜன் பார்ப்பனனின் நிலங்களுக்கு வரிவிதிக்காதது மற்றும் அவர்களுக்குச் சலுகைகள் வழங்கியதில் இருந்தே அவனின் பார்ப்பன அடிமைத்தனம் பல் இளிக்கின்றது.

கங்கையைக் கொண்டான், கடாரம் கொண்டான் என்றெல்லாம் புகழ்கின்றார்கள். ஆனால் சாமானிய மக்களுக்கு என்ன செய்தான் என்பதுபற்றி யாரும் வாய் திறப்பதில்லை. சாதிவெறி பிடித்தவனாகவும், பார்ப்பன அடிமையாகவும், போர்வெறி பிடித்தவனாகவும் உள்ள ஒருவன் சாமானிய மக்களுக்கு எதைச் செய்திருக்கப் போகின்றான்? மக்கள் மீது எக்கச்சக்கமாக வரி விதித்து ஊர் ஊருக்கு கோவில்கட்டியதைத் தவிர அவனது சாதனைகள் என்று எதைச் சொல்வது?

நம்முடைய கேள்வி எல்லாம் ஒரு மன்னனை எதற்காக ஆதரிக்க வேண்டும், எதற்காக எதிர்க்க வேண்டும் என்பதுதான். பல நாடுகளை வெற்றி கொண்டான், கோவில் கட்டினான், குளங்களை வெட்டினான், ஏரிகளை உருவாக்கினான் என்பதற்காக ஒரு மன்னனை தமக்கான வழிகாட்டியாக ஒருவனால் ஏற்க இயலுமா? வரலாற்றை இயக்கவியல் பொருள்முதல்வாத வழியில் ஆய்வு செய்யும் யாரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆட்சி செய்த மன்னர்கள் மீது வெற்றுப் பிரமிப்பை உருவாக்கிக் கொள்வதால் யாருக்கு லாபம்? சமூக மாற்றம் வேண்டுவோர் எப்படி வரலாற்றைப் பார்க்க வேண்டும்? பத்துப்பைசா பிரயோசனம் இல்லாத பழம்பெருமைகள் பேசி ஒருவன் சமூக மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகின்றான் என்றால் நிச்சயம் அவன் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியாகவே இருப்பான். ஜாரை எதிர்த்துதான் ரஷ்ய புரட்சி நடந்தது. சீன நிலப்பிரபுத்துவ அதிகார வர்க்கத்தை எதிர்த்துதான் சீனப்புரட்சி நடந்தது. இங்கே யாரும் தங்களை ஆண்ட மன்னன் என்பதற்காக அவர்களை எதிர்க்காமல் விட்டுவிடவில்லை. தங்களை ஆண்ட, ஆளும் மன்னன் ஒரு கொடுங்கோல்வாதி, பிற்போக்குவாதி, ஏகாதிபத்திய அடிமை என்று தெரிந்தபோது நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று அவர்களை வீழ்த்தினார்கள். அதற்குப் பெயர்தான் புரட்சி. சாதிவெறி பிடித்தவனையும், பார்ப்பனியத்தின் அடிமையாகக் கிடந்தவனையும் மாபெரும் இலட்சியவாதியாக ஒருவன் சித்தரிக்கின்றான் என்றால், அவனும் அதைப் போல சாதிவெறி பிடித்தவானகவும் பார்ப்பனியத்தின் அடிமையாகவும்தான் நிச்சயம் இருக்க முடியும்.

ராஜராஜ சோழன் தமிழ் இனத்தின் அவமானச் சின்னம் என்பதுதான் வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடம். அவன் மட்டும் அல்ல சேர, சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் அனைவரும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள். நாம் வீரபாண்டிய கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும், கோபால நாயக்கரையும் ஆதரிப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் கும்பினி அரசை எதிர்த்து போரிட்டார்கள் என்பதற்குத் தான். அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த பல தமிழ் மன்னர்கள் கும்பினி ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு தந்து, அவர்களது அடிமைகளாய் மாறிவிட்ட சூழ்நிலையில் கட்டபொம்மன், ஊமைத்துரை, கோபால நாயக்கர் போன்றோரின் எதிர்ப்புக்குரல் அன்றைய கும்பினி ஆட்சியை குலை நடுங்கவைத்தது. அவர்களின் தன்னலமற்ற தியாகமும் நெஞ்சுரம்தான் அவர்களை பின்பற்றச் சொல்லி நம்மைத் தூண்டுகின்றது.

ராஜராஜ சோழன் போன்றவர்களைக் கடுமையாக நாம் எதிர்ப்பதற்குக் காரணம் அவன் சாதிவெறியானாகவும், பிற்போக்குவாதியாகவும், பார்ப்பன அடிமையாகவும், பெண்களை தேவதாசிகள் ஆக்கி அழகுபார்த்தவன் என்பதற்காவும் தான். நாம் தமிழ்த் தேசியவாதிகளை கடுமையாக எதிர்ப்பதற்குக் காரணமும் அவர்கள் ராஜராஜ சோழனை தமிழ் இனத்தின் மீட்சிக்காக பாடுபட்டவன் போன்று சித்தரிப்பதுதான். அவர்களும் ராஜராஜ சோழன் போன்றே தாழ்த்தப்பட்ட மக்களிடம் நடந்து கொள்கின்றார்கள். அவர்கள் ராஜராஜ சோழன் போன்றே பார்ப்பனியத்தின் அடிமையாக இருக்கின்றார்கள். அவர்கள் ராஜராஜ சோழன் காந்தளூர்ச் சாலையில் பல மலையாளிகளின் தலையை அறுத்து துள்ளத் துடிக்க கொலை செய்தது போல, இவர்களும் இங்குள்ள தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்களின் தலைகளை அறுப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டு இருக்கின்றார்கள். இப்போது தெரிகின்றதா தமிழ்த் தேசியவாதிகள் ஏன் ராஜராஜ சோழனை ஆதரிக்கின்றார்கள் என்று. ராஜராஜ சோழனை ஆதரிப்பது என்பதன் பொருள் சாதிவெறியனாகவும், பார்ப்பன அடிமையாகவும், இனவெறியனாகவும் நாம் மாற நினைக்கின்றோம் என்பதுதான்.