Wednesday, January 2, 2019

நாஞ்செலி - முலைவரி

பிரஜாபதி
2019-01-02

#ஆரிய வருகைக்கு முன்பு வரை, அப்போதைய இந்தியாவில் சாதிகள் என்பது இருந்ததில்லை. அவர்கள் வருகைக்கு பின்பு இந்தியாவில் வாழ்ந்த பூர்வ குடிகள் அனைவரும் தென்னிந்தியா பக்கம் நகரத்துவங்கினர். #வட இந்தியா முழுவதும் சாதிக் கொடுமைகள் அரங்கேறிய போது, தென்னிந்தியாவில் சாதிக் கொடுமைகள் என்று இருந்ததே இல்லை. வட இந்தியாவை முழுவதும் வேத கலாச்சாரத்திற்கு மாற்றிய பார்ப்பனர்கள், தென்னிந்தியாவிற்கு கி.பி 2 முதல் ஏழாம் நூற்றான்டுகளில் குடியேறத் துவங்கினர்.

அப்படி #திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குடியேறிவர்கள் தான் #நம்பூதிரிகள் என்ற பார்ப்பனர்கள். தங்களை பூமியில் வாழும் கடவுளாக பாவித்துக் கொண்டு, அரசன் முதல் அடித்தட்டு மக்கள் வரை தங்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள என்று பிரச்சாரம் செய்த நம்பூதிரிகள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தையே தங்கள் வசம் கொண்டு வந்தனர். நம்பூதிரிகள் என்றழைக்கப்படும் இந்த பார்ப்பனர்கள் வந்த பிறகு தான் சாதிக் கொடுமைகள் தலைதூக்கத் துவங்கியது.

நாடார், ஈழவர், முக்குவர், பரவர், புலையர் என சுமார் பதினெட்டு சாதிகள் தாழ்த்தப்பட்ட சாதிகளாக அறிவித்த பார்ப்பனர்கள், அவர்களின் மீது கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டனர். நம்பூதிர்களை கண்டால் நாடார்கள் 72 அடி தள்ளியே நிற்க வேண்டும். கோவில்களுக்கு செல்லக்கூடாது. பொதுக் கிணறு, குளம் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தீண்டாமைக் கொடுமைகளை திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா உதவியுடன் அரங்கேற்றினர் பார்ப்பனர்கள்.

நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு ஆடைகள் விசயத்திலும் மக்களை ஒடுக்கினார்கள். கீழ் சாதியினர் என்றழைக்கப்படுபவர்கள் யாரும் மேலாடை அணியக்கூடாது. முட்டுக்கு கீழே ஆடையும் அணியக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தனர். பார்ப்பனர்களுக்கு முன்பு இந்த பதினெட்டு சாதி பெண்களும் திறந்த மார்புடன் தான் உலவ வேண்டும். பெண்கள் திறந்த மார்புடன் உலாவுவதே எங்களுக்கு அளிக்கும் மரியாதை என்றனர் பார்ப்பனர்கள். அதனை மீறி மேலாடை அணிந்தால், அந்த ஆடை கிழிக்கப்பட்டு மரண தண்டனை அளிக்கப்படும்.

பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்கள் மீசை வைத்திருந்தால் அதற்கு வரி விதிக்கப்பட்டது. கைத்தடி வைத்திருந்தால் வரி, கைப்பிடி இருக்கும் குடை வைத்திருந்தால் அதற்கு வரி என கொடுமைகள் செய்தது பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானம். இதில் கொடுமை என்னவெனில் சோறு என்ற வார்த்தையை கூட சொல்லக்கூடாது, கஞ்சி என்று தான் சொல்ல வேண்டும் என்றளவிற்கு அடக்குமுறைகள் ஏவப்பட்டது.

பெண்கள் மார்பகங்களை காட்டுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மார்பகங்களின் அளவிற்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டும் என்றும் புதிய சட்டம் போடப்பட்டது. இதனை எதிர்த்து பல பெண்கள் போராடினார்கள். அதில் குறிப்பிடத்தக்க பெண் தான் வீரமங்கை நாஞ்செலி.

30 வயதான நாஞ்செலி கேரளாவின் சேர்தலா என்ற பகுதியில் வசித்து வந்தார். பார்ப்பனர்களின் இந்த கொடுமையை எதிர்த்து மார்பு வரி செலுத்த முடியாது என்று போராடி வந்தவர், வரியையும் செலுத்தாமல் இருந்தார். பல மாதங்களாக வரி செலுத்தாத நிலையில், வரியை வசூல் செய்யும் பிராவதியார் என்ற அதிகாரிகள் நாஞ்செலி மீது கோபமடைந்தனர்.

நாஞ்செலி வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் வரியை தருமாறு கேட்டனர். இருங்கள் வருகிறேன் என்று உள்ளே சென்ற நாஞ்செலி, வாழை இலையையும் கையில் ஒரு அரிவாளையும் எடுத்து வந்தார். என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்த அதிகாரிகள் மத்தியில், யாரும் எதிர்பாராத விதமாக, தான் வைத்திருந்த அரிவாளால், தனது இரண்டு மார்பகங்களையும் அறுத்து வாழையில் இலையில் வைத்து, மார்பகம் இருந்தால் தானே வரி கேட்பீர்கள் என்று கேட்க, அரண்டு போயினர் சமஸ்தான அதிகாரிகள்.

மார்பகத்தை வெட்டியதால் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு நாஞ்செலி இறந்து போனார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் செய்த தொடர் போராட்டத்தால், வேறு வழியில்லாமல் #மார்பகவரியை ரத்து செய்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்.

#நாஞ்செலியின் மார்பகம் அறுந்த உடலை பார்த்த அவளது கணவர் சிருகந்தன், அவரது இறுதி சடங்கில், உடலுக்கு தீ வைத்து விட்டு, அதன் மீது பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். நாஞ்செலி வாழ்ந்த இடம் #முலைச்சிபரம்பு என்று அழைக்கப்பட்டது.
பிரஜாபதி

பார்ப்பனர்களுக்கு எதிராக போராடிய எல்லா வரலாறுகளையும் தற்போது மறைத்து வரும் பா.ஜ.க அரசு, நாஞ்செலி வரலாறை வெறும் கதை என்றும் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறி, கடந்த 2016 ஆம் ஆண்டு பாடப்புத்தகத்தில் இருந்த #நாஞ்செலி வரலாறை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/100025180920557/posts/336139070568788/

50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது

"சுப உதயகுமார், கார்டூனிஸ்ட் பாலா, கஸ்தூரி" - என புதிதாய் புறப்படும் புரட்டுவாதிகளுக்காக மீள் பதிவே இது

*ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள், அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது*

அது *"50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது"* என்பது.

நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!

கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!

*உயர்க்_கல்வி*

பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

*கல்வி_நிலையங்களின்_தரம்*

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,

*முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,*

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் - 3.

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்

தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ;

பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4

*பொருளாதார_மொத்த_உற்பத்தி*(GDP)

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

*தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்*

ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

தமிழ் நாடு - 18.80 lakh crore (2nd Place); பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 10.94 lakh crore (5th Place ; மபி - 7.35 lakh crore (10 th Place) ; உபி - 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் - 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் - 2.77 lakh crore (17 th Place)

*சாப்ட்வேர்_ஏற்றுமதி* (ஆயிரம் கோடியில்)

தமிழ் நாடு - 75,000 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1917 ; மபி - 343 ; உபி - 13,740 ; ராஜஸ்தான் - 712; சத்தீஸ்கர் - 18

*சிசு_மரண_விகிதம்* 1000 பிறப்புக்கு

தமிழ் நாடு - 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி: 40

*ஒரு_லட்சம்_பிரசவத்தில்_தாய்_இறக்கும்_விகிதம்*

தமிழ் நாடு - 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167

*தடுப்பூசி_அளிக்கப்படும்_குழந்தைகள்_சதவீதம்*

தமிழ் நாடு - 86.7%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2%; மபி - 48.9%; உபி - 29.9%; ராஜஸ்தான் - 31.9%; சத்தீஸ்கர் - 54%; இந்திய சராசரி : 51.2%

*கல்வி_விகிதாசாரம்*

தமிழ் நாடு - 80.33%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79%; மபி - 70%; உபி - 69%; ராஜஸ்தான் - 67%; சத்தீஸ்கர் - 71%; இந்திய சராசரி : 74%

ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு - 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919

*தனி_நபர்_வருமானம்* (Per Capita Income) - ரூபாயில்

தமிழ் நாடு - 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442; இந்திய சராசரி : 93,293

தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

*வீடுகளுக்கு_மின்சாரம்* (households having electricity)

தமிழ் நாடு - 98.3%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 96%; மபி - 89.9%; உபி - 70.9%; ராஜஸ்தான் - 91%; சத்தீஸ்கர் - 95.6%

*மனித_வள_குறியீடு* (Human Development Index)

தமிழ் நாடு - 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087

*ஏழ்மை_சதவீதம்* Poverty (% of people below poverty line)

தமிழ் நாடு - 11.28%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63%; மபி - 31.65%; உபி - 29.43%; ராஜஸ்தான் - 14.71%; சத்தீஸ்கர் - 39.93%; இந்திய சராசரி : 21.92%

*ஊட்டசத்து_குறைபாடு_குழந்தைகள்* (Malnutrition)

தமிழ் நாடு - 18%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5%; மபி - 40%; உபி - 45%; ராஜஸ்தான் - 32%; சத்தீஸ்கர் - 35%; இந்திய சராசரி : 28%

*மருத்துவர்களின்_எண்ணிக்கை*(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு - 149; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36

இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம்,,,,

உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற *அமெர்த்தியா சென்* அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,

*தமிழ்நாட்டை_வடமாநிலங்களோடு_ஒப்பிடுவதே_தவறு #முன்னேறிய_நாடுகளோடு_தான்_ஒப்பிட_வேண்டும்*

இனி எவனாவது தமிழ்நாடு திராவிடக் கட்சிகளால் நாசமாய் போச்சு என்றால், வட மாநிலத்திற்கு போகும் அடுத்த ரயிலில் ஏற்றி அனுப்புங்கள்,,,,

மீள்

Tuesday, January 1, 2019

வனிதா மதில், நம்பூதிகளின் கொடுங்கோன்மையும்

Siva Kumar Siva
2019-01-01

இன்று கேரளத்தில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் அடங்கிய சமூக சீர்திருத்த அமைப்புகள் நடத்தும் "வனிதா மதில்" என்னும் மாபெரும் நிகழ்வு நடைபெற உள்ளது...!

நீதியற்ற முறையில், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் போன்ற வெவ்வேறு காரணங்களால் ஒடுக்கபட்டு நீதிமறுக்கப்பட்ட ஒரு பிரிவினரை, அந்த அநீதியிலிருந்து விடுவிக்க நடக்கும் முயற்சிகள் அனைத்தும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்...!

ஜாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்ற முறையிலும், பெண்கள் என்ற முறையிலும் இந்த கொடுமைகளை மிக அதிகமாக அனுபவித்து வரும் நிலை இந்தியாவில் இந்த நவீன காலத்திலும் நடைமுறையில் உள்ளது என்பது சமூக வளர்ச்சிக்கு முரணான விஷயங்கள் ஆகும்...

ஒரு காலத்தில் கேரளாவில், இத்தகைய கொடுமைகள் இந்தியாவின் மற்ற பகுதிகளை விடவும் அதிகமாக இருந்து வந்தன...

ஸ்ரீ நாராயண குரு, அய்யன் காளி, சட்டம்பி சாமிகள், அய்யா வைகுண்டர் போன்றோர் இத்தகைய அநீதிகளுக்கு எதிரான சமூக சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடிகளாக செயல்பட்டனர்...

பின்னாளில் காங்கிரசிலுள்ள முற்போக்கு எண்ணங் கொண்டவர்கள் இத்தகைய போராட்டங்களை தொடர்ந்தனர்...

அதற்கு அடுத்த காலகட்டத்தில் காங்கிரசில் இருந்து செயல்பட்ட சோஷலிஸ்டுகள் இந்த செயல்பாடுகளை இன்னும் வேகத்தோடு முன்னெடுத்தார்கள்...

பின்னாளில் காங்கிரசில் உள்ள சோஷலிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளாக மாறி செயல்பட ஆரம்பித்த பின்னர், அத்தகைய போராட்டங்கள் வர்க்க ரீதியான போராட்டமாக பண்பு வடிவான மாற்றமடைந்ததன் மூலம் நிலவுடமையின் நிழலில் சுகபோகமாக வாழ்ந்து வந்த ஜாதிய, சடங்கு, சம்பிரதாய, பெண்ணடிமைக் கொடுமைகள் என அனைத்து விதமான கொடுமைகளும் சொல்லத்தகுந்த அளவில் உடைதெறியப்பட்டன....

இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று வந்த சுவாமி விவேகானந்தர், கேரளத்தில் அக்காலத்தில் நிலவிய இத்தகைய கொடுமைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கொடுங்கல்லூர் என்ற இடத்தில் குடிக்க தண்ணீர் கேட்ட அவரிடம் "நீ என்ன ஜாதி?" என்று கேட்ட கேள்வியின் கொடூரத்தால் ஆடிப்போன விவேகானந்தர். "இந்த ஊர் பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்று கேரளத்தை வர்ணித்தார். பல ஊர்களிலும் சுற்றிவந்த தான், இத்தகைய கொடுமைகளை வேறு எங்கும் காணவில்லை என்று மனம் வெதும்பினார். இத்தகைய கொடுமைகளை மாற்றி இந்த சமூகத்தை மீட்பது மிகவும் கடினம் என்று கருதினார்.

கேரளத்தின் நம்பூதிரி சமூகம் என்ற "பிராமணீய ஆதிக்கம் நிறைந்த ஜாதி", மேல்ஜாதி என்று கருதப்படும் நாயர் சமூகம் உட்பட மற்ற அனைத்து ஜாதியினரையும், அதுபோலவே தங்கள் நம்பூதிரி சமூகம் உள்ளிட்ட எல்லா சமூக பெண்களையும், தங்களது அடிமைகளாகவே நடத்தினர்.

நாயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எப்போது வேண்டுமென்றாலும் பாலியல் ரீதியாக பயன்படுத்தும் உரிமை உள்ளதாக சொல்லி, நாயர் சமூக பெண்களை பாலியல் ரீதியாக சூறையாடி வந்தனர்...

நள்ளிரவில் தென்னை ஓலை இலக்குகளை சேர்த்து கட்டிய "ஓலைச் சூட்டு" பந்தத்தை பிடித்துக்கொண்டு தனது எடுபிடி கணக்குப் பிள்ளை வழிகாட்டியவாறு முன்னே செல்ல, அவரைத் தொடர்ந்து வரும் நம்பூதிரி, முன்கூட்டியே மனதில் நினைத்திருக்கும் ஏதாவதொரு நாயர் சமூத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் முன் நின்றால்...

அந்த கணக்குப் பிள்ளை அந் வீட்டின் கதவைத் தட்டுவார். உடனே அந்த வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்த்துவிட்டு. வந்திருப்பவர் அந்த ஊரின் நிவுடமையாளரான நம்பூதிரி என்று அறியும் போது உள்ளே சென்று தனது பாயையும் தலயணையையும் எடுத்துக் கொண்டு வெளியில் உள்ள திண்ணையில் வந்து அமர்ந்து கொள்ளவேண்டும்.

அதிகப்படியான சலுகையாக கணக்குப்பிள்ளை கொண்டுவரும் வெற்றிலைப் பெட்டியில் உள்ள வெற்றிலையை அவருடன் அமர்ந்து மென்றவாறே உரையாடிக் கொண்டு நம்பூதிரியின் மிதியடியையும் குடையையும் காவல் காக்கும் நாயைப் போன்று கூனிகுருகி அமர்ந்து கொள்ளலாம்...

சமூக அந்தஸ்து பெற்ற நாயர் சமூகத்திற்கே இதுதான் தலைவிதி என்றால் மற்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களை எப்படி நடத்தி இருப்பார்கள்...?

இவாறான பாலியல் அத்துமீறல்களை நம்பூதிரி சமூக ஆண்கள், நாயர் சமூகப் பெண்களிடம் நடத்துவதன் மூலம் உருவாகும் வாரிசுகளுக்கு, அந்த நம்பூதிரியை அப்பா என்று அழைக்கும் உரிமை மறுக்கப் பட்டிருந்தது...

நம்பூதிரிகள் மூலம் நாயர் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அப்பா என்று அழைக்கும் உரிமையை கேட்டு நாயர் சமூகமும் போராடும் நிலைமையில் கேரளம் ஒருகாலத்தில் இருந்தது என்பதிலிருந்தே பிராமணீயத்தின் நச்சு வேர்கள் எப்படி ஆழப் பரவியிருந்தது என்பது விளங்கும்...

அதுபோலவே நம்பூதிரி சமூகப் பெண்களின் நிலையும் இருந்தது. நம்பூதிரி குடும்பத்தில் உள்ள மூத்த ஆண் மட்டுமே முறைப்படி ஒரு நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்...

அந்த பெண், தனது கணவரின் உடன்பிறந்த அனைவருக்கும் பாலியல் ரீதியான தேவைகளை தீர்த்துவைக்க கடமைப்பட்டவர் என்ற அநீதியான நடைமுறை இருந்தது.

தனது கணவரின் மற்ற சகோதரர்கள் யாரும் ஒரு நம்பூதிரிப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. வேண்டுமென்றால் நாயர் பெண்ணை புடவை கொடுத்து சமந்தம் செய்து கொள்ளலாம். ஆனால் அது திருமணம் என்று அழைக்கப்படாது, மாறாக "சம்பந்தம்" என்றே அழைக்கப்படும்...

அப்படியே ஒரு நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது. அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட வாரிசுகள் வேண்டுமெனில் மூத்தவரின் மனைவியின் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம்...

அதுபோலவே நம்பூதிரி பெண் குழந்தைகளை முதியவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது. அவ்வாறு நடக்கும் திருமணம் முடிந்து சிலகாலத்தில் அந்த கிழவன் இறந்து போனால் அந்த குழந்தை விதவையாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மூலையில் அடைபட்டுக் கிடக்கவேண்டும்.

ஆக நம்பூதிரிப் பெண்களுக்கு கிடைக்கும் ஒரே சலுகை என்னவென்றால், தீண்டாமை என்னும் கொடுமையால் வீட்டிற்கு வெளியில் நிற்காமல் வீட்டிகுள்ளே பிரவேசிக்கலாம்...

அதுவும் மாதவிலக்கு காலங்களில் நம்பூதிரி பெண்களும் தீண்டத்தகாதவர்கள் தான்...

அதுபோலவே இன்னொரு கொடுமை, நம்பூதிரி சமூகத்தில் இளம் கன்னிப் பெண்கள் இறந்துபோனால், அவர்கள் கன்னி கழியாமல் தகனம் செய்யப்படக் கூடாது என்ற ஒரு கேவலமான மூடநம்பிக்கை.

அதற்காக பரிகாரம் என்ற பெயரில் அநாகரிகமான சடங்கு ஒன்று இருந்தது. அந்த இளம் பெண்ணின் பிணத்துடன் சண்டாள ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆண் உறவு கொள்ள வேண்டும். "சவ போகம்" என்று அழைக்கப்படும் இந்த காட்டுமிராண்டித்தனமான சடங்கை நிகழ்த்த, தனியாக ஒரு ஜாதிப் பிரிவினரை சண்டாளர் என்ற பெயரில் வைத்திருந்தார்கள்.

உயிருடன் இருக்கும் போது அந்த சண்டாளர் சமூகத்தில் உள்ள ஒரு ஆணுக்கு, சம்பந்தப்பட்ட நம்பூதிரிப் பெண்ணே விரும்பினால் கூட திருமணம் செய்ய முன்வராதவர்கள், அந்த பெண் இறந்த பிறகு சடங்கு என்ற பெயரில் பிணத்துடன் போகம் செய்ய கட்டாயப்படுத்தும் கொடூரம் உலகில் வேறு எங்கும் நிகழ்ந்திருக்க முடியாது...

அதுபோன்று முலை வரி என்ற பெயரில் "தாழ்த்தப்பட்ட  பெண்கள் மாராப்பு சேலையைப் பயன்படுத்த வரி, மார்பின் அளவைப் பொறுத்து வரி" - என்று  கேவலமான அரசியலமைப்புச் சட்டம் வைத்திருந்த ஊரான கேரளாவில், முலை வரியை செலுத்த முடியாமல் மாரப்பு இல்லாமல் இருந்த பெண்கள் நிறைந்த நிலையிலிருந்து கேரளம்...

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த நங்கோலி என்ற பெண் முலைவரி கேட்டு வந்தவர்களிடம் தனது மார்பை அறுத்து சேப்பம் இலையில் வைத்து கொடுத்துவிட்டு தன்னை மாய்த்த கொடூரம்...

மலையாள மொழியின் முதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச சேர்ந்த பெண் கலைஞரான ரோசி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் நடித்த திரைப்படத்தை தானே பார்க்கமுடியாமல் போன கொடூரம் நிகழ்ந்த கேரளம்...

விவேகானந்தரே "மாற்றுவது மிகவும் கடினம்" - என்று கருதிய கேரளத்தில் இன்று பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இத்தகைய கொடுமைகள் யாவும் பெருமளவில் தகர்த்தெறியப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னோடி மாநிலமாக, ஒப்பீட்டளவில் ஜாதிவேற்றுமைகள் ஒழிக்கப்பட்ட மாநிலமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்த மாநிலமாக தலைநிமிர்ந்து நிற்கிறது...

ஆனாலும் பிற்போக்கு சக்திகள் காலச்சக்கரத்தை பின்னோக்கி நகர்த்த முயல்கின்றன. சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அமுல்படுதவிடாமல் இரட்டை நிலைபாடுகளுடன் நின்று சமூகத்தை குழப்பத்தில் ஆழ்த்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயலும் சங்க பரிவார் சக்திகள், தொடர்ந்து பிற்போக்குத்தனமான செயல்களை செய்ய முயல்கின்றன.

அவற்றை முறியடித்து, கேரளம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் சமூக சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற சிந்தனையை செயல்படுத்த முன்னத்தி ஏராக கேரளம் எடுக்கும் ஒரு அரிய முயற்சியே இந்த "வனிதா மதில்"

கேரளத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் உட்பட ஏராளமான முற்போக்கு எண்ணம் படைத்த அமைப்புகள் இந்த நிகழ்வை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீராகத் திட்டமிட்டு சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களைத் திரட்ட முயல்கின்றனர்...

கேரளத்தின் வட எல்லையான காசர்கோட்டில் துவங்கி தென் எல்லையான திருவனந்தபுரம் வரை நீண்டு கிடக்கும் சுமார் 640 கி.மீ தூரத்தை இடைவெளியின்றி, பெண்களை மட்டும், கைகளைக்கோர்த்து சங்கிலியாக அல்லாமல், தோளோடு தோள் சேர்ந்து நெருக்கமாக நின்று அணிவகுக்கச் செய்து சமத்துவம் என்ற சிந்தனையை சமூகத்தில் இன்னும் இன்னும் ஆழமாக விதைக்கச் செய்யும் இந்த முயற்சி உலக ஊடகங்களையும் கூட திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது...

BBC தொலைக்காட்சி மாலை அரைமணி நேரம் நேரலையாக ஒலிபரப்ப திட்டமிட்டுள்ளது...
பெண்கள் மட்டும் அணிதிரளும், உலகிலேயே மிகப்பெரும் இந்த நிகழ்வை பற்றி கேள்விப்பட்டவுடன் அதை ஒரு கின்னஸ் சாதனையாக பதிவு செய்யும் செயலில் கின்னஸ் சாதனை அங்கீகரிக்கும் குழுவினர் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர்...

கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டுவருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன...இந்த வனிதா மதிலின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆராய்ந்து இடைவெளி ஏதுமுள்ளதா என்று அறிய ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ஒளிப்பதிவாளர் என்ற முறையில் சுமார் 640 ஒளிபதிவாளர்களை, கின்னஸ் சாதனையை பதிவு செய்யும் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சுமார் 50 லட்சம் பெண்கள் நிகழ்வில் பங்கேற்பதுடன் 5 லட்சத்திற்கும் அதிகமான ஆண்கள் இந்த செயல்பாடுகளுக்கு துணை நிற்பார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது....

சமூக சீர்திருத்தப் போராட்டம் உள்ளிட்ட எத்தகைய போராட்டமென்றாலும் சமூகத்தின் சரிபாதியான பெண்களின் பங்கேற்பு மிகவும் அவசியம்., அதிலும் அவர்களே அதுபோன்ற போராட்டங்களுக்கு துவக்கப் புள்ளியாவது இன்னும் சிறப்பு...!

தமிழகம் உட்பட இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இத்தகைய முயற்சிகள் நடக்க இது ஒரு துவக்கப்புள்ளியாக அமையட்டும்...!

வெல்லட்டும் இந்த முயற்சி...!

"வனிதா மதில்" வரலாறு படைக்கட்டும்...!

#LalSalam

#சமூக_சீர்திருத்த_இயக்கங்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=2293241710700150&id=100000430318737