Monday, January 7, 2019

UPSC

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்களுக்காக #ஐஏஎஸ், #ஐபிஎஸ்........... தொடர்பான பிரச்சினை..... நேரம் இருந்தால் படிக்கவும்.......

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான தேர்வு எந்த மொழியில் நடந்தது...?

1950 முதல் 1965 வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடந்தது

அப்போது தேர்வு எழுதியவர்கள் யார்?

உயர் சாதிக்காரர்கள் (பிராமணர்கள்) மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தனர்.... அதனால் அவர்கள் மட்டுமே தேர்வு எழுதி, வெற்றி பெற்று பதவிகளை அடைந்தனர்....

இட ஒதுக்கீடு அப்போது இருந்ததா?

பெரியாரின் முயற்சிகளால் முதல் சட்டத்திருத்தம் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே இருந்தது, ஆனால் அவர்கள் கல்வியறிவே இல்லாதவர்களாக, அதற்கும் மேலாக ஆங்கிலம் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் இருந்தார்கள்.....எனவே அந்த இட ஒதுக்கீடு பிராமணர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை...

1965 ல் என்ன நடந்தது?

ஐஏஎஸ் தேர்வு இனி மேல் இந்தியில் மட்டுமே நடக்கும் என்று அறிவித்தார்கள்...

அதன் விளைவு என்ன?

இந்தி மொழி பேசுபவர்களைத் தவிர யாரும் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியாது. இந்தி பேசும் மாநிலங்களில் பிராமணர்கள் தவிர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் யாரும் படிப்பதற்கான சூழல் இல்லை. பிற மாநிலங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் யாருக்கும் இந்தி தெரியாது. அதனால் பிராமணர்களுக்கு போட்டியே இல்லாமல் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது....

1965 ல் மத்திய அரசு அப்படி ஒரு முடிவு எடுத்த போது. மாநிலங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதனால் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு இல்லை.... ஆனால் மெட்ராஸ் என்ற பெயரில் தமிழ்நாடு என்று​ ஒரு மாநிலம் இருந்தது.  அண்ணா என்ற தலைவர் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து, போராட்டம் நடத்தி மாநிலத்தை ஸ்தம்பிக்கவைத்தார்...... மத்திய அரசு அடி பணிந்தது.... தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடக்கத் தொடங்கின....

ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு எழுதுபவர்கள் எந்த வகுப்பினர்?

பெரும்பாலும் பிராமணர்களே....

பிறகு என்ன நடந்தது?

அண்ணாவுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த கலைஞர் ஐஏஎஸ் தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்... அவருக்கு ஆதரவாக காமராஜர் காங்கிரஸ் கட்சி சார்பில் "மாநில மொழிகளிலும்  ஐஏஎஸ் தேர்வு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, இந்திரா காந்தி காலத்தில் நாடாளுமன்றத்திலும் அதே தீர்மானம் நிறைவேற்ற செய்தார்....

அதன் விளைவு என்னவாக இருந்தது?

1974 ம் ஆண்டு கோத்தாரி அவர்கள் தலைமையில் ஐஏஎஸ் தேர்வில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பான கமிட்டி உருவாக்கப்பட்டு. அந்த கமிட்டி 1978 ல்  "மாநில மொழிகளிலும் ஐஏஎஸ் தேர்வுகளை நடத்த வேண்டும்" என்ற பரிந்துரையை சமர்ப்பித்தது. அதன் விளைவாக 1979 ம் ஆண்டு முதல் ஐஏஎஸ் தேர்வுகளை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இருக்கும் எல்லா மொழிகளிலும் எழுதலாம் என்று அறிவிப்பு வந்தது.

நல்ல விசயம் நடந்திருக்கே!!! அப்படின்னா தமிழ் வழியில் படித்தவர்களும் ஐஏஎஸ் ஆகலாம் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கே!!!!! மகிழ்ச்சி.....

ரொம்ப சந்தோஷபட வேண்டாம், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது..... இப்போது வரை சரி செய்யப்படவில்லை.....

என்ன சிக்கல் அது?

ஐஏஎஸ் தேர்வில் விடைகளை தமிழில் எழுதலாம், ஆனால் கேள்விகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருக்கும்.

அப்படி என்றால் கேள்வி புரியாமல் எப்படி தமிழில் பதில் எழுதுவது?

நிச்சயம் முடியாது!!!! அது தான் தேர்வு நடத்துபவர்களுக்கு வேண்டும். இதற்கே ஆச்சர்யப்பட்டால் எப்படி..... ஐஏஎஸ் தேர்வில் மெயின் (main) தேர்வுகள் மட்டுமே தமிழில் விடை எழுத முடியும். ஆனால் அதற்கு முன்பு பிரிலிமினரி (preliminary) தேர்வு என்பது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால்தான் மெயின் தேர்வு.....

அப்படி என்றால் ஐஏஎஸ் தேர்வு தமிழில் எழுதலாம் என்று மக்கள் நம்புவது?

Preliminary தேர்வு தமிழில் நடக்குமா, மெயின் தேர்வு கேள்விகள் தமிழில் இருக்குமா என்றா மக்கள் கேள்வி கேட்பார்கள்...... அது தேர்வு எழுதுபவர்களின் பிரச்சினை. உதாரணமாக காவிரிக்கு குறுக்கே அணை கட்ட போறாங்கன்னு சொன்னா முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் வருத்தப்படுவாங்களா? இல்ல தாமிரபரணி பாசன விவசாயிகள் வருத்தப்படுவாங்களா? நகரத்துல வசிப்பவர்களுக்கு இதெல்லாம் பெரிதாக படாது, ஆனால் ஏதோ உணர்வு மட்டும் இருக்கும்ல, அது மாதிரி ஐஏஎஸ் தேர்வு இறுதி முடிவு வந்து, அதுல தமிழில் எழுதி பாசானால், அவர் புரோட்டா மாவு பிசைந்து ஐஏஎஸ் ஆனார், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் படிப்பார், ஆடு மேய்த்து ஐஏஎஸ் ஆனார் என்று பத்திரிக்கையில் செய்தியை பார்த்துவிட்டு தமிழனாக பெருமைப்பட்டு உணர்வை வெளிப்படுத்துவோம்..... அவ்வளவுதான்....

அப்புறம், இது போல இந்த தேர்வில் வேறு என்ன பிரச்சனை இருக்கிறது??

70 வருசமா இட ஒதுக்கீடுனால இந்த நாடு முன்னேறாமல் போச்சு, இட ஒதுக்கீட்டால திறமையானவர்கள் அடிபட்டு போய்விடுகிறார்கள்....மெரிட் தான் முக்கியம் அப்படின்னு நம்ம நாட்டுல அடிக்கடி பேச்சு அடிபடும். அது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேச வைக்கும் உத்தி....

அப்படின்னா??????

ஐஏஎஸ் தேர்வில் இடஒதுக்கீடு ஒதுக்கீடு என்பது 1990 ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிசன் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் வழங்கிய பிறகுதான் 1994 முதல் தான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது..

அப்படின்னா பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆரம்பித்து 24 வருடங்கள் தான் ஆகுதா?

ஆமா, ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே 70 ஆண்டுகளா இட ஒதுக்கீடுனால நாடு சீரழிந்து போயிடுச்சுன்னு பேசுவாங்க..... அதான் வேடிக்கை.

ஆனால் இப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 சதவிகிதம், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் மேல் சாதியினர் பாதிக்கப்படமாட்டாங்களா?

இது மூன்றையும் கூட்டினால் 49.5 சதவிகிதம் வருகிறது. மீதமுள்ள 50.5 சதவிகிதத்தில் பிற சாதியினர் வராதவாறு, ஐஏஎஸ் தேர்வை நடத்தும் யுபிஎஸ்சி பார்த்துக் கொள்ளும்...

அப்படி என்றால்????????

மேல் சாதியினருக்கு அறிவிக்கப்படாத 50.5 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறது என்பது தான் உண்மை.

அது எப்படிங்க சொல்றீங்க?

மத்திய பணியாளர் நல அமைச்சக ஆண்டறிக்கை DoPT (2017-18) படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட மத்திய அரசு Group A பணிகளில் 13.02 சதவிகிதம்​ பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்​ 13.38 சதவிகிதம் பேரும், பழங்குடியினர் 5.92 சதவிகிதம் பேர் மட்டுமே உள்ளனர். இப்போ இது மூன்றையும் கூட்டினால் எவ்வளவு சதவிகிதம் வருகிறது....

மொத்தம் 32.32 சதவிகிதம் மட்டுமே வருகிறது....

அப்படின்னா உயர்சாதிக்கு நான் சொன்னது 50.05 சதவிகித இடஒதுக்கீடு என்பது தவறு, அரசு அறிக்கை படி 68 சதவிகிதம் இட ஒதுக்கீடு அனுபவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் நமக்கு இன்னொரு கணக்கு சொல்வார்கள் அதாவது பிற்படுத்தப்பட்டவர்கள் 21 சதவிகிதமும், தாழ்த்தப்பட்ட மக்கள் 17 சதவிகிதமும், பழங்குடியினர் 8 சதவிகிதம் இருக்கிறது என்று...... அது எப்படி என்றால் Group, B, C, D என்று எல்லா பணிகளையும் சேர்த்து சொல்வார்கள்...அப்படி பார்த்தாலும் 46 சதவிகிதம் பேர் மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள். உயர்சாதியினர் 54 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள்...

அப்படி பார்த்தாலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர் பதவிக்கு வரத்தானே செய்கிறார்கள்?

அதான் மேல இருக்கிறவங்க பிரச்சனை. அதை தடுப்பதற்காகத்தான்  நிர்வாக சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று சொல்வார்கள்....

நிர்வாக சீர்திருத்தம் என்பது நல்ல விசயம் தானே, அதை வச்சு எப்படி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை உயர் பதவிக்கு வராமல் செய்ய முடியும்?

அதாவது பணியாளர் அமைச்சக ஆண்டறிக்கையை படித்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் சராசரியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியில் சேரும் போது அவர்களுடைய வயது 28. அப்படியென்றால் பணியில் சேரும் பெரும்பாலானவர்கள் 29, 30, 31, 32.... வயதுக்கு மேற்பட்டவர்கள்....... நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த கமிட்டிகள்

1. Y.K. Alagh Committee  (2001) - 26 வயது
2. P.C. Hota committee (2004) - 27 வயது
3. Administrative Reforms Commission (2008) - 28 வயது
4. B.S. Baswan committee (2016) - 29 வயது

இந்த நான்கு கமிட்டிகளும் ஐஏஎஸ் தேர்வு எழுத பரிந்துரை செய்த உச்ச வயது வரம்பை பார்த்தால் புரிகிறதா? இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் வருவதை தடுக்க முடியும்...

அப்படி என்றால் நடைமுறைக்கு இந்த பரிந்துரைகள் வந்துவிடுமா?

அங்கே தான் அவர்களுக்கு சிக்கல், அரசியல் ரீதியாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு இருந்தால் தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழ்நிலை இருப்பதால் இதை செயல்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.. இது தவிர இந்த பஸ்வான் கமிட்டி இன்னொரு பரிந்துரையும் வழங்கியுள்ளது..... அதாவது தமிழ் மொழி போன்ற மாநில மொழிகளில் தேர்வு நடத்தும் முறையை நீக்க வேண்டும் என்பது....

அடக்கொடுமையே, அப்படி என்றால் இந்தி தவிர பிற மொழி பேசும் மாணவர்கள் எதிர்காலம்?

நீங்கள் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்று​ யோசித்தால் சரியாக​ இருக்கும்....

அப்படி என்றால் பாஜக செய்வது மட்டுமே தவறு என்று சொல்கிறீர்களா?

நிச்சயம் இல்லை, மத்தியில் ஆண்ட  எல்லா அரசுகளும் இதனை செய்ய முயற்சிப்பார்கள்....... காரணம் ஒவ்வொரு துறையிலும் Secretary பொறுப்பில் அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் உயர் சாதியினர் மட்டுமே இருப்பதால் இந்த பிரச்சனை..... ஐஏஎஸ் அதிகாரிகள்​ அரசியல் தலமைகளுக்கு ஆலோசனை வழங்குவது போல் தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆலோசனை வழங்குவது ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் ஆலோசனையில் உருவான "நிதி அயோக்"  Strategy for New India என்ற தலைப்பில் தற்போது ஐஏஎஸ்​ தேர்வுக்கான வயது வரம்பை 27 ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது.

ஓ அப்படி என்றால் OBC, SC, ST மாணவர்கள் பதவிக்கு வருவதை தடுக்க இவ்வளவு வேலை நடக்கிறதா?

ஆமாம், இந்த ஆண்டு முதல் Secretary பொறுப்பில் பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதிலாக Lateral entry முறையில் தனியார் துறையில் 15 ஆண்டு அனுபவம் வாய்ந்த உயர் பதவியில் இருப்பவர்களை நியமிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

தனியார் துறையில் திறமையானவர்கள் இருப்பதால் அவர்களை உயர் பொறுப்புக்கு​தேர்வு செய்வது நல்லது தானே?

அங்கே தான் பிரச்சனையே, யுபிஎஸ்சி நடத்தும் தேர்வு மூலம் ஐஏஎஸ் பணிகளை நிரப்பினால் இட ஒதுக்கீடு முறையில் பணி வழங்க வேண்டும். ஆனால் Lateral entry மூலம் பணி வழங்கினால் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்து விட முடியும்.  இதன் மூலம் உயர் பதவிகளுக்கு BC, SC, ST வகுப்பினர் வராமல் செய்ய முடியும்.

அப்படி என்றால் நாம் என்னதான் செய்வது?

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு மக்களும், அவர்களுக்கான அரசியல் தலைவர்களும் ஐஏஎஸ் தேர்வு என்பதை ஏதோ ஒரு தேர்வு அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும், அவர்களின் வாக்கு வங்கி என்னவென்று யோசிக்காமல் நாட்டின் உயர் பொறுப்புகளுக்கு அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களும் சரியான விகிதத்தில் வந்தால் தான் சமூக நீதியை நிலை நாட்ட முடியும். உயர் சாதியைச் சேர்ந்த யாரோ எடுக்கும் முடிவுகளால் தான் இங்கே பெரும்பான்மையான மக்கள் பாதிப்படைகிறார்கள். நேர்மை, மெரிட், நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றி வருகிறார்கள். இந்த சதிகளை முறியடிக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.... அதற்கு மிக முக்கியம் இந்த பிரச்சனை பற்றிய புரிதல்...... அதற்கு தான் இந்த பதிவு....

https://www.facebook.com/100021738280165/posts/379450236122916/

Sunday, January 6, 2019

பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்ததா? - லபீஸ்

Lafees Shaheed
2019-01-05

நபித் தோழர்கள் பொதுவாக மார்க்க விடயங்களில் சாதாரணமாவற்றை விட சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து காரியமாற்றுவார்கள். சிறந்தவற்றை விட மிகச் சிறந்த விடயங்களை நோக்கி நகர்வார்கள். நபித் தோழர்கள் மார்க்கம் குறித்த உயர் அவதானம் கொண்டவர்கள் எனும் வகையில் இது இயல்பான ஒரு விடயமே.

நபிகளாரை பொறுத்தவரையில் நபித் தோழர்கள் அளித்த மானுட கெளரவம் என்பது நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரத்தை அதனதன் இடத்தில் வைத்து நூறு சதவீதம் பின்பற்றுவதே.

'பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது' என்று இருப்பின் ஸஹாபா சமூகத்தின் பெண் அங்கத்தவர்கள் மஸ்ஜித்திற்கு அதிகம் சென்று தொழுகை நடாத்தியது ஏன்?

நபிகளார் 'சிறந்தது' என்று ஒன்றை கூறி இருக்க நபித் தோழர்கள் (இந்த இடத்தில் தோழியர்கள்) அதனை விட அந்தஸ்து குறைந்த ஒரு விடயத்தை தேர்ந்து கொண்டார்கள் என்று நினைப்பது எவ்வளவு தூரம் சரியானது?

உமர் இப்னுல் கத்தாப் (ரழி) தனது மனைவியர்களில் ஒருத்தர் மஸ்ஜித்திற்கு செல்வதை தனிப்பட்ட முறையில் விரும்பவில்லை. ஆனால் அந்த மனைவி 'அல்லாஹ் வின் அடியார்களான பெண்கள் மஸ்ஜித்திற்கு செல்வதை தடுக்காதீர்கள்' எனும் நபிமொழியை மேற்கோள் காட்டி உமரின் கருத்துக்கு இணங்கவில்லை. கலீபா உமர் கொலை செய்யப்படும் பொழுது கூட மஸ்ஜிதில் அந்த மனைவி இருந்தார் என்பது தான் வரலாறு.

'பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது 'என்று இருந்து இருப்பின் உமர் (ரழி) அதனை மேற்கோள் காட்டி தனது மனைவியரை வீட்டிலேயே இறுத்தியிருக்க முடியும். ஆனால் அப்படி நடைபெறவில்லை.

நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) 'அல்லாஹ்வின் அடியார்களான பெண்கள் மஸ்ஜித்திற்கு செல்வதை தடுக்காதீர்கள் ' எனும் நபிமொழியை அறிவித்த பொழுது இப்னு உமரின் மகன் பிலால் பித்னா வரும் என்று கூறி அதனை மறுத்தார். இறைதூதரின் ஹதீஸை தனது மகன் மறுப்பதாக அதனை கண்டித்த இப்னு உமர் (ரழி) மரண பரியந்தம் வரை தனது மகனுடன் பேசவில்லை.

' பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது' என்று ஹதீஸ் இருந்திருப்பின் இப்னு உமரின் மகன் அதை மேற்கோள் காட்டி தனது தந்தையுடன் வாதாடி இருக்க முடியும். ஆனால் அப்படி நடைபெறவில்லை.

உண்மையில் 'பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது' எனும் நபிமொழி நபித் தோழர்களின் சமூகத்தில் பரவலாக புழக்கத்தில் இருக்கவில்லை. மேற்போந்த உமர் (ரழி) - அவரது மனைவி மற்றும் அப்துல்லாஹ் இப்னு உமர் - அவரது மகன் பிலால் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சுட்டுவது அதனைத்தான்.

' பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது' எனும் அறிவிப்பில் வரும் 'சிறந்தது' எனும் பதம் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஒருவரின் தவறினால் ஹதீஸில் தவறுதலாக கலந்து விட்ட ஒரு வாசகமாக இருக்கலாம். ஹதீஸ்களில் இப்படியான விபத்துகள் ஏற்படுவது நிறுவப்பட்ட ஒன்று. வரலாறு அதற்கு சாட்சி.

' பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது' என்பதை பெண்களின் வீடு சார்ந்த பொறுப்புகளை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு நபிகளார் அளித்த ஒரு உளவியல் விடுதலை, சலுகை என்று எடுக்க வேண்டும் எனும் உஸ்தாத் யூசுஃப் அல் கர்ளாவியின் கருத்தை தேர்ந்து கொண்டாலும் சரி,

பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது எனும் ஹதீஸில் வரும் 'சிறந்தது' எனும் வாசகம் தவறுதலாக ஹதீஸில் கலந்து விட்ட ஒன்று என்று எடுத்தாலும் சரி,

எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி வாக்கியவாத நோக்கில் பெண்கள் மஸ்ஜித்திற்கு செல்வதை விட வீட்டில் தொழுது கொள்வது தான் சிறந்தது என்று பொருள் கோடல் செய்ய முடியாது. ஏனெனில் நபித் தோழியர்கள் நபிகளாரின் காலத்தில் மஸ்ஜித்திற்கு தான் வந்து தொழுதார்கள். இதுதான் பரவலான சமூக நடைமுறை.

சிறந்தது என்று(வீடுகளில் தொழுது கொள்வது) நபிகளார் கூறியதை விட்டு விட்டு சாதாரணமான ஒன்றை (மஸ்ஜித்திற்கு சென்று தொழுவது)நபித் தோழர்கள் தேர்ந்து கொண்டார்கள் என்று நினைப்பது அடிப்படையில் அந்த ஸஹாபாக்கள் சமூகத்திற்கே இழுக்கு...!

#இங்கிருந்து அறிவோம்
#பாதையை_செப்பனிடல்

https://www.facebook.com/100005063134008/posts/1158084491036978/

Saturday, January 5, 2019

விவசாயி என்னும் புனித பிம்பம்

Prabhu RS
2016-01-05

*கேள்வி:*

இணையத்தில் விவசாயிகளை ஏதோ அரிய உயிரினம் போலவும், அப்பிராணிகளாகவும், சூதுவாது தெரியாத பச்சை மண்ணு எனவும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், இடைத்தரகர்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் அவர்களை ஏமாற்றி சுரண்டுவதாகவும், தவறான பாதையைக் காட்டுவதாகவும் பலரும் எழுதி வருகின்றனர். அது எந்தளவுக்கு உண்மை என கொஞ்சம் விளக்கமுடியுமா?

*பதில்:*

நம் பொதுமக்களுக்கும், ஊடகத்துக்கும் எப்போதுமே ஒரு புனித பிம்பம் தேவை. அஃது ஊழல் ஒழிப்பு சமூக அக்கறையாளர்களாக இருக்கலாம், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளாக இருக்கலாம் அல்லது இயற்கை விவசாயிகளாகவும் இருக்கலாம்.

கொஞ்ச நாளைக்கு அவர்கள் மட்டுமே புனிதர்கள் மற்றவர்கள் உதவாக்கரைகள் என அவர்களாகவே முடிவுசெய்துகொண்டு கண்டமேனிக்கு பேச, எழுத ஆரம்பிப்பார்கள். இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் உட்கார்ந்து விவாதமும் செய்கிறார்கள்.

விவசாயிகளும் மற்ற தொழிலில் இருப்பவர்களைப்போல உணர்ச்சிகளால் கட்டுப்படுத்தப்பட்ட மனிதர்கள்தாம். அவர்களும் கோபம், குரோதம், ஆசை, பேராசை, போட்டி, பொறாமை, துரோகம், காமம், ஆணவம், அகங்காரம் என பலவற்றாலும் ஆட்பட்டு எதிர்வினைகளைப் புரிகிறார்கள்.

கிராமத்துக்குள் சென்றாலே மோர் கொடுத்து, கொஞ்சம் வயக்காட்டையும் உங்கள் பெயரில் எழுதிவைத்து அவர்கள் வீட்டுப்பெண்ணை திருமணமும் செய்து தருவார்கள் என்பதெல்லாம் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே வரும்.

ஒருவேளை நீங்கள் விவசாயத்துறை, வங்கி, பாசனம், மின்சாரம் அல்லது கால்நடைத்துறை அதிகாரியாக giving end-இல் இருக்கும்பட்சத்தில் இருந்தால் கிடைக்கும் வரவேற்பை மிகைப்படுத்தி புரிந்துகொண்டு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சிலாகித்துக்கொள்ளலாம்.

விவசாயிகளுக்கு கடன்தர வங்கிகள் முன்வருவதில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்பவர்கள், கடனை வசூலிக்கச் செல்லும் அதிகாரிகளின் குமுறலை எப்போதாவது கேட்டுப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே.

எதற்கெடுத்தாலும் இடைத்தரகர்கள் சுரண்டுகிறார்கள் எனக் கதறும் இணைய சமூகம் அந்த தரகர்களில் 90% விவசாயிகள்தான் என்பதையும் கவிஞர்களோ, எழுத்தாளர்களோ திடீரென மஞ்சள் புரோக்கராகவோ, பால்காரராகவோ மாறமுடியாது என்பதை உணருவதில்லை.

மாசு உண்டாக்கும் ஆலை முதல் மீத்தேன் எடுப்பதுவரை அனைத்து தேவைகளுக்கும் நிலம் ஊரகப்பகுதிகளில் வாங்கிக்கொடுப்பது Ernest & Young, PWC போன்ற நிறுவனங்கள்தான் என்று நினைத்துக்கொண்டு இருப்பார்களாட்டம்.

வேறு ஏதாவது ஓர் உதாரணம் வேண்டுமே என நீங்கள் கேட்கக்கூடும். குறுகியகால நெல் இரகங்களில் தமிழகத்தில் பல முன்னனி இரகங்கள் இருக்க  பாப்பட்லா, BPT எனவும் ஆந்திரா பொன்னி என்றும் அழைக்கப்படும் நெல் இரகத்தை, அரிசிக்கு டிமான்ட் இருக்கிறது என்பதற்காக அவர்களாகவே இங்கு அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

அடுத்த மாநிலத்துக்கு அரிசியைக் கொண்டுசெல்ல இருக்கும் கட்டுப்பாடுகளில் கால்வாசிகூட விதைநெல்லைக் கொண்டுசெல்ல இல்லை. தமிழகத்தில் விவசாயத்துறையால் பரிந்துரைக்கப்படாத அந்த இரகம் குலைநோய்க்கு (Paddy Blast) மிக எளிதாக வசப்படும் (நைட்ரஜன் கொஞ்சம் அதிகமானால் washout-தான்). அதைக் கட்டுப்படுத்த தெளிக்கப்படும் Tricyclozole இந்த ஆண்டு 30-40% வரை கூடுதலாக விற்கக்கூடும் என சந்தை நிலவரம் தெரிவிக்கிறது.

ஒருவேளை அது epidemic ஆகும்பட்சத்தில் மர்மநோய் எனவும், அதைக் கட்டுப்படுத்த டன் கணக்கில் பூஞ்சானக்கொல்லியை விற்கும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் எனவும், நோய் தாக்கக்கூடிய இரகங்களை விற்க துணைபோகும் விஞ்ஞானிகள் எனவும், உள்ளூர் விதைகளைத் திட்டமிட்டு அழித்ததால் வந்த விளைவு எனவும் ஒரு கட்டுரை எழுதினால் வைரலாகி தெறி ஹிட் கொடுக்குமல்லவா? (பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஜெனரிக் மூலக்கூறை விட்டுப்போய் ஒரு தசமகாலம் ஆகிவிட்டது).

அலுவலகத்தில் இருந்தவாறு ACAC Critics (Air Conditioned room Arm Chair critics) எழுதித்தள்ளும் கட்டுரைகளாலும், அவர்களை சமூக அக்கறையாளர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் காட்டும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளாலும் உங்கள் சமூக விழிப்புணர்வு கட்டமைக்கப்படுகிறது என்றால் அதில் பல ஆபத்துகள் இருக்கின்றன.

எதிர்காலத்தில் நீங்கள் ஏதேனும் திட்டங்களை செயல்படுத்த ஊரகப்பகுதிகளில் பணியாற்றும்போது வரக்கூடிய setback-கிற்கான தார்மீகப் பொறுப்பும் உங்களையே சாரும். ஏனென்றால் புனித பிம்பங்கள் என்பது வெறும் மயையே.

https://www.facebook.com/595298772/posts/10156333664228773/

Thursday, January 3, 2019

கௌசல்யா சக்தி - திருமண விவகாரம்

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்
2019-01-03

"கௌசல்யா மறுமணத்தின் போது  அவரது கணவரைப் பற்றி வந்த செய்திகள் வதந்திகளாக இருக்கலாம் என்று தோன்றியது. அவர் மீது வயிற்றெரிச்சலில் இருப்பவர்கள் கிளப்பி விட்டதாக இருக்கும் என்று கடந்து சென்றோம்.

அதன் பிறகு அதைப் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. தியாகு, கொளத்தூர் மணி வெளியிட்டதாக அறிக்கை ஒன்று வெளியான போது அதன் மீதும் சந்தேகம் எழுந்தது. இது உண்மைதானா அல்லது வழக்கம்போல் வதந்தியா என்று. அவர்கள் மறுப்பேதும் சொல்லாததால் உண்மைதான் என்று உணர முடிந்தது ( இது போன்ற முக்கியமான அறிக்கைகளை இனி வீடியோ பதிவுகளாக போடுவதே சிறந்ததாக இருக்கும் ஏனென்றால் அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல வரிகளை மாற்றிக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது.)

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் காவல் நிலையத்தையோ நீதிமன்றத்தையோ அணுக முயற்சிக்கவில்லை. அப்படி அணுகி இருந்தாலும் நீதிமன்றம் இதுபோன்ற எத்தனையோ விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது. அதைவிட விசித்திரமான தீர்ப்புகளையும் தந்திருக்கிறது. அப்படியே வழக்கு தொடர்ந்து இருந்தாலும் குற்றம்சாட்டப்பட்ட சக்தி என்பவர் தான், நிரபராதி என்றும் .. தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் மீடியா முன் வந்து ஆவேசமாக பேட்டி கொடுத்துவிட்டு சென்றிருப்பார். அதற்கென்றே பிறந்திருக்கின்ற அறிவார்ந்த வழக்கறிஞர்களை கொண்டு ஆண்டுக்கணக்கில் வழக்கை இழுத்தடித்திருப்பார்கள். ஒருவேளை இந்த வழக்கு நேர்மையாக நடத்தப்பட்டு தீர்ப்பே வந்திருந்தாலும் அது எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பது யூகிக்க முடியவில்லை. ஒரு வேலை குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனையே கிடைத்திருந்தாலும் கூட வழக்கம்போல் அவர் மீடியா முன்பாக "நீதி செத்துவிட்டது நேர்மை தூங்கி விட்டது" என்று ஏதேனும் ஒரு வசனத்தை பேசி விட்டு தன்னை தியாகியாக காட்டிக் கொண்டு போய் இருக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு பெரும்பாலானோர் அவருக்காகவும் கௌசல்யாவுக்காவும் தான் வருத்தப்பட்டிருப்போம். பாதிக்கப்பட்டதாக சொல்லும் பெண் திட்டமிட்டு நாடகமாடுவதாக தான் நம்பியிருப்போம் . ஏனென்றால் குங்குமம் ஆசிரியர் சிவராமன் அவரைப் பற்றி எழுதிய போது அப்படித்தான் நினைத்தோம்.

இன்று கட்டப்பஞ்சாயத்து செய்ததாக விமர்சிக்கப்பட்டு கொண்டிருக்கும் கொளத்தூர் மணி அவர்களை தவிர வேறு எந்த வெங்காய தலைவனாவது அந்த திருமணத்தை முன்னின்று நடத்தி இருந்தாலும், இந்தப் பிரச்சனைகளை மூடி மறைக்கத்தான் பார்த்திருப்பார்கள். ஏனென்றால் இங்கே சில தலைவர்களின் மீது கூட அது போன்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் இன்று பொதுவெளியில் அம்பலப்பட்டு நிற்பதை விட கடுமையான தண்டனையை எந்த நீதிமன்றமும் கொடுத்திருக்க முடியாது.

தாம் முன்னின்று நடத்திய காரணத்திற்காகவே அதை தானே முன்வந்து செய்திருக்கிறார். இத்தனைக்கும் இது இவர்கள் ஏற்பாடு செய்த திருமணமோ மணமக்களோ அல்ல. அவர்களாகவே முடிவு செய்து கொண்டு இவர்களை முன்னின்று நடத்தி வைக்க சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவுதான்.

சட்டத்தை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்ள முடியுமா?. முடியாதுதான். ஆனால் இது தாங்கள் நடத்தி வைத்த திருமணம் என்கிற முறையில் அதைப் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுக்காத நிலையிலும் கூட அதைப் பற்றி விசாரிப்பதும், அதை நேர்மையாக வெளிப்படுத்துவதும், இனிமேல் இதுபோன்று நடந்து விடாமல் தடுக்க வேண்டியதும்.. தனது கடமை என்று எண்ணியிருக்கிறார்கள்.

கட்டப்பஞ்சாயத்து என்பது தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சாதகமாக பேசுவது. இங்கே தாங்கள் தூக்கி கொண்டாடியவர்களை நேர்மையாக அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். முற்போக்கு சிந்தனைவாதிகளை குற்றம் சொல்வதற்காகவே ஒரு பெரும் கூட்டம் காத்துக் கிடப்பதையும் தெரிந்து அவர்களால் வரவிருக்கும் விமர்சனங்களைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் நேர்மையாக /தனது ஆற்றலை வியப்புடன் மதிப்போரை அதனைக் கொண்டே மடக்கும் போக்கு சக்தியிடம் இருந்திருக்கிறது/
என்று போட்டுடைக்கிறார்கள்.

சட்டத்திற்குப் புறம்பாக கூட நடந்து கொள். ஆனால் நியாயத்திற்குப் புறம்பான ஒருபோதும் நடந்து கொள்ளாதே என்பவர் கொளத்தூர் மணி.

இதற்கு முன் அவரை விமர்சிப்பதற்கு உங்களிடம் ஒரு வெங்காயமும் இருந்ததில்லை. இனி மேலும் கிடைக்காமலும் போகலாம். இதை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்.

எப்படி, பெரியாரை விமர்சிப்பதற்கு அவர் மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டதைத் தவிர வேறு எதுவும் கடைசிவரை உங்களுக்கு கிடைக்கவே இல்லையோ அதைப்போல.. கொளத்தூர் மணி அவர்களை விமர்சிக்கவும் இனி வேறு எதுவும் கிடைக்காமல் போகலாம்.

விமர்சித்து கொண்டிருந்தவர்களை இன்னும் அதிகமாக விமர்சிக்கவும், நேசித்த கொண்டிருந்தவர்களை இன்னும் ஆழமாக நேசிக்கவும் வைத்திருக்கிறார்.

*நேர்மையும் எளிமையும் தலைவர்க்கு அழகு*"

https://m.facebook.com/story.php?story_fbid=1086411531564441&id=100005868133160

Wednesday, January 2, 2019

சிலிகா_ஜெல்

புது ஷூ, ஹேண்ட் பேக், சூட்கேஸ் மாதிரியானவைகளை வாங்கும் போது அது உள்ள சின்ன சின்ன பாக்கெட்ஸ்ல "#சிலிகா_ஜெல்"லை போட்டு வச்சிருப்பாங்க... நாம் அதை தூக்கி எறிஞ்சிடுவோம்... அதோட  தெரியாமலேயே... நம்மோட தினசரி வாழ்க்கையில அது எந்த அளவுக்கு உபயோகப்படுதுன்னு பார்க்கலாமா...

1. நம் சமையல் அறை எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் ஏரியா.. இதனாலேயே மசாலா பொருட்கள், சக்கரை போன்றவைகள் அடுப்படி ஈரப்பதத்தாலேயே எளிதில் கெட்டியாகி விடும். இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டை மசாலா பொருட்கள் வைக்கும் இடங்களில் ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தாலே போதும். ஆதிக்கப்படி ஈரப்பதத்தை இந்த சிலிகா ஜெல் உறிஞ்சி எடுத்துக்கொண்டு நமது மசாலா ஐட்டங்களை பிரெஸ்ஸாகவே வைத்திருக்கும்.

2. எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்த நம் மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றை கழட்டி விட்டு ஒரு பவுலில் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு அதனுள் ஈரமான மொபைலை போட்டு வைத்தாலே போதும். தண்ணீரில் விழுந்த மொபைல் புதுசு போல ஆகிவிடும்.  ஆனால் மீண்டும் சார்ஜ் செய்யும் முன் இந்த ஜெல் பாக்கெட்டுகளை எடுத்துவிட்டு ஒரு இரவு முழுதுமே காற்றுவெளியிலே வைத்திருந்து விட்டு பிறகு மட்டுமே சார்ஜரில் இணைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

3. நமது முக்கியமான ஆவணங்களான பத்திரம், பிறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், பான் கார்ட், ஆதார் கார்ட் போன்றவை நாசமாகிவிடாமல் இருக்க, இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை இவை வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ, பைலிலோ போட்டு வைத்தால் போதும். நமது

4. துவைத்து ஈரமான துண்டு அல்லது ட்ரெஸ் ஐட்டங்களை அவசரமாக காயவைக்க வேண்டுமென்றால் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு ஊற வைத்தாலே போதும். துணிகள் காய்ந்துவிடும்.

5. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரேசர்கள் பிளேடுகள் போன்றவை ஈரம் படுவதால் சீக்கிரமே மழுங்கி போய்விடும். இதனை தவிர்க்க இவற்றை போட்டு வைக்கும் பெட்டிக்குள் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வையுங்கள்.

6. நமது விளையாட்டு பொருட்கள் போட்டு வைக்கும் பை அல்லது உடற்பயிற்சி கருவிகளை வைக்கும் பை இவற்றில் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வைத்தால், தேவையற்ற துர்நாற்றம், பாக்டீரியா, காளான் படருதல் போன்றவற்றை தவிர்க்கலாம்.

7. நமது வளர்ப்பு பிராணிகளின் உணவு பாக்கெட்டுகள் அல்லது டப்பாக்களில் வெளியில் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை ஒட்டி வைத்தால் சீக்கிரம் கெட்டு போவது தவிர்க்கப்படும்.

8. நகை பெட்டிக்குள் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகள் சிலவற்றை போட்டு வைத்தால் நகைகள் மங்கலாக ஆகிவிடாமல் பளபளப்புடனேயே இருக்கும்.

9. வருடாவருடம் உபயோகப்படுத்தும் டெக்ரேசன் பொருட்களை போட்டுவைக்கும் பெட்டிக்குள் சில சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வைத்தால் இந்த ஐட்டங்கள் மங்கி போகாமல் அதே பொலிவுடன் இருக்கும்.

10. நமது வீட்டின் ஜன்னல்கள், வாசற்படி போன்ற இடங்களில் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை குழந்தைகள் கைக்கு எட்டாத இடத்தில் கட்டி வைப்பது தேவையற்ற ஈரப்பதத்தினை தவிர்க்க உதவும்.

11. நமது செருப்பு, ஷூ, ஷாக்ஸ் போன்றவற்றை வைக்கும் இடங்களில் மறக்காமல் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை ஒட்டி வையுங்கள். தேவையற்ற துர்நாற்றம் போன்றவற்றை தவிர்க்க உதவும்.

Note: இந்த பாக்கெட்டுகளை ஒரு போதும் ஓபன் செய்து உபயோகித்துவிடாதீர்கள். கவனம்..