Saturday, February 9, 2019

முஸ்லீம்கள் எவ்வளவு காலம்தான் சிலுவை சுமப்பது

ஃபாரூக்மீரான்
2019-02-09

...
முஸ்லீம்களை எவ்வளவு காலம்தான் சிலுவை  சுமக்க சொல்வீர்கள்?
...

மறைந்த ஒசாமா பின் லேடனோ, தாவூத் இப்ராஹீமோ இந்திய முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளுமல்ல. நீங்கள் அன்றாட வாழ்வில் காணும் எந்த முஸ்லிமும் இவர்களைப் பிரதிபலிப்பவர்களுமல்ல. இன்றைய நிலையில் எந்த முஸ்லிம்களாலும் ஏதோவொரு சமூகஊறு நிகழ்ந்தாலும் நன்றாகப் பழகியவர்களே "இதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்றொரு கேள்வியின் மூலம் கோட்டிற்கு எதிர்புறமாய்க் கொண்டு நிறுத்துகிறார்கள்.

முதலில் நடுநிலை பேசுபவர்களோ அல்லது முற்போக்காளன் என தம்மை அடையாளப் படுத்திக் கொள்பவர்களுக்கோ தோன்றும்  இத்தகைய கேள்விகள் அவர்களின் குற்றவுணர்ச்சியிலிருந்தோ அல்லது இப்போது இஸ்லாமியர்களை விமர்சிதே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே தோன்றுகிறதேயன்றி அறம்சார்ந்தோ, அல்லது சமூகநீதி சார்ந்ததாகவோ இல்லை என்பதே பெரும்பாலும் உண்மை.

ஏனெனில் இந்துத்வத்தின் கோரச் செயல்களை விமர்சிக்கும் போது உடன்படும் சமூகம் அவர்கள் இந்துக்களின் சடங்குகளையோ அல்லது மூடநம்பிக்கைகளையோ விமர்சிக்கும் போது "இதே போன்று மற்ற மதத்தினரை உங்களால் விமர்சிக்க முடியுமா?"  என எதிர்கேள்வி கேட்கிறது. களத்தில் செயல்படுபவர் களானாலும் சரி, அல்லது முகநூலில் எழுதுபவர்களானாலும் சரி ஒவ்வொருவரின் தலையின் மீதும் இக்கேள்வி தொங்கியபடியே இருக்கிறது.

எனவே கிடைத்த வாய்ப்பில் அவர்கள் தங்களை நியாயப்படுத்தும் முயற்சியில் நீதி எதுவென வெளிவரும் முன்பே தீர்ப்பெழுதத்துவங்குகிறார்கள். ஃபாசிஸ்டுகளுடன் சமூகநீதி பேசுபவர்களும் கை கோர்க்கும் புள்ளி இதுதான். இதில் இந்து முஸ்லிமென எந்த பேதமுமில்லை.

---

சரி இதுதான் முதன்முறையா?

இதற்கு முன்  எத்தனையோ இந்துத்வ செயற்பாட்டார்கள் சொந்தக் காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டபோதும், பழி ஏதோவொரு முஸ்லிமின் மீது விழவில்லையா?

இதே திருப்பூரில் மோடியின் படத்திற்கு பாஜக நிர்வாகியே செருப்பு மாலையணிவித்து ஒரு மதக்கலவரத்திற்கு முயற்சிக்கவில்லையா?

தமிழகத்தில் அல்லது இந்தியாவில் அல்லது உலகின் ஏதோவொரு மூலையில் ஏதோவொரு முஸ்லிம் தவறிழைத்தாலும்கூட தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பாவ மன்னிப்புக் கோரவேண்டுமா?

ஒரு ரத யாத்திரையானாலும் சரி, ஒரு விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானாலும் சரி முஸ்லிம்கள் தங்களின் உயிரைப் பிடித்தபடியேதான் வாழ வேண்டுமா?

ஒரு முஸ்லிம் தன்னுடைய நம்பிக்கையை சிதைத்துத்தான் இங்கு நல்லிணக்கத்தை பேச வேண்டுமா?

"இல்லை, ராமலிங்கம் கொலை தொடர்பாக முஸ்லிம்கள்தானே கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்" - எனில் அனைத்து சம்பவங்களிலும், இதற்கு முன் வந்த இனி வரப்போகும் காவல்துறையின் அறிக்கையே இறுதியானது என நாம் ஏற்றுக் கொண்டு விடுவோமா?

கோத்ரா ரயில் எரிப்பு நடைபெற்ற இரண்டுமணி நேரத்திலேயே "இஸ்லாமியர்கள்தான் இதற்கு காரணம்" என்ற மோடியின் கூற்றையும் நாம் ஏற்றுக் கொள்வோமா, ?

பார்பன தீவிரவாதி கோட்சே காந்தியை கொன்றுவிட்டு அப்பழியை முஸ்லீம்களின் போட்ட வரலாற்று உண்மையை எப்படி பார்க்கின்றீர்கள்?

"இந்தியாவில் நிகழ்ந்த அத்தனை குண்டு வெடிப்புகளையும் இஸ்லாமியர்கள்தான் செய்தார்கள்" - என்ற புரட்டையும் நாம் ஏற்றுக் கொள்வோமா?

தீஸ்தா செதல்வாட், மற்றும் ஹேமந்த் கார்கரேகியோரின் அறிக்கைகளை என்ன செய்வது, குப்பையில் வீசி புறக்கணிப்போமா?

---

சுவாதி கொலையில் பிலால் மாலிக், ஆடிட்டர் ரமேஷ் கொலையில் பன்னா இஸ்மாயில், இப்போது ராமலிங்கம் கொலையில் ஐந்து முஸ்லிம்கள். ஒவ்வொரு பொய்யும் உடைபட உடைபட இந்துத்துவ செயற்பாட்டாளர்களுக்கு இணையாக புதிய புதிய அநீதிகளை கொண்டு எம்முகத்தில் அடிப்பது எந்த அடிப்படையிலான சமூகநீதி.

இங்கு எவனும் குற்றம் செய்துவிட்டு தப்பிக்க உங்களின் ஒத்துழைப்பைக் கோரவில்லையே. முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எனது சகோதரத்துவத்தை, எனது தேசபக்தியை, என நல்லிணக்கத்தை சமூகத்தின் முன் நான் நிரூபித்தே ஆக வேண்டுமென்ற உங்களின் உளவியலே இச்சிறுபான்மை மனநிலையின்  சமநிலையைக் கூறுபோடுகிறது.

இப்படியாக கூறுபோடப்படும் மனநிலையானது நாளடைவில் தன்னைத்தானே இரண்டாம் தரக் குடிமகனாக உணரச் செய்கிறது. இப்படியான தனிமனித உளவியலே ஒன்று சேர்ந்து தேச முஸ்லிம் மாந்தரின் பொது உளவியலாக கட்டமைக்கப்படுகிறது.

பாபர் மஸ்ஜிதோ, தாஜ்மஹாலோ என்ன எழவோ எப்படியேனும் போகட்டும் நாம் உயிர்பிழைத்தால் போதும், கர்ப்பிணி மனைவியின் கரு பிய்த்தெறியப் படாமலிருந்தால் போதும் என நிம்மதியடைய வைக்கிறது.

---

தவிர இங்கு முற்போக்காளரென உணரும் பலருக்கும்  இஸ்லாமிய சமூகம் பலவீனமானது, அவர்கள் வென்றெடுக்கப்பட வேண்டிய மக்கள் என்பதைக் கடந்து தங்களுக்கு இணையாக வைத்துப்பார்ப்பதில் இருக்கும் ஒவ்வாமையானது நாளடைவில் விரிவடைந்து கொண்டேதானிருக்கிறது.

ஏனைய பிற சமூகங்களைப் போலவே குறை நிறைகளோடிருக்கும் ஒரு சமூகத்தை இப்படியான மனநிலையில் அனுகுவதன் மூலம் சிறு தவறும் மத அடிப்படையில் காணப்படுகிறதேயன்றி பரஸ்பர புரிதலின் அடிப்படையில் அல்ல. அதுவே இயல்பாக ஒரு சமூகத்தை கோட்டிற்கு அந்தப்பக்கமாக நிறுத்திவைத்து விமர்சிக்கச் செய்கிறது.

இதுவே ஒரு நிலத்தகறாரோ, கொடுங்கல் வாங்கல் பிரச்சனையோ ஒருவேளை ஒரு முஸ்லிமினால் ஒரு இந்து பாதிக்கப்பட்டு விட்டால்  அங்கு தனிமனித தவறைவிடவும் மத அடிப்படையில் ஒருவன்மீது தீர்ப்புச் செய்யக் காரணமாகிறது. அப்படியானதொரு தனிமனித தவறும் மதக்கலவரமாகிவிடுமோ, இதற்கும் தாங்கள் விளக்கமளிக்க வேண்டுமா என்ற நிலையில் ஒரு சமூகம் பதற்றத்தோடிருப்படு கொடுமையிலும் கொடுமை.

இந்துத்வ கட்சி மற்றும் அமைப்பு சார்ந்தவர்கள்  இப்படியொரு இக்கட்டை முஸ்லிம்களுக்கு தோற்றுவிப்பதன் காரணத்தை ஆதியும் அந்தமுமாய் நாம் புரிந்துகொள்ளவியலும். *ஆனால் களத்தில் உடனிருப்பவர்களின் விரல்கள் நம்மை நோக்கி நீளும் அரசியல்தான் மிக அபாயமானது*

---

இந்தியச்சிறைகளில் தங்களது மக்கள்தொகை விகிதாச்சாரத்தை விடவும் அதிகளவில் இருப்பது இஸ்லாமியர்கள்தானே.

சந்தேகத்தின் அடிப்படையில் ஆயுள் முழுவதும் விசாரணைக் கைதிகளாக இருப்பவார்கள் தங்களின் தவறுகளுக்காக மட்டும்தான் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்களா?

வேறு காரணங்கள் இருக்கிறதா இல்லையா என உண்மையாகவே உங்களின் மனசாட்சிக்குத் தெரியாதா?

அல்லது எல்லாமறிந்தும் உஙகளின் சமூகச் சமநிலையை நீங்கள் நிரூபிக்க நாங்கள் சிலுவை சுமந்தேதான் தீர வேண்டுமா?

இது என்ன அடிப்படையிலான அறம்?

சிறுமி ஆசிஃபாவை வல்லுறவு புரிந்தவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக பாஜகவின் எம். பி முதலானோர் ஊர்வலமாகவே சென்றார்கள்.

இந்தியாவில் எந்த முஸ்லிம்களோ, அல்லது அமைப்போ அநீதிக்கு ஆதரவாக அப்படிச் செய்திருக்கின்றார்களா? எந்த தவறு நடந்தாலும் "நான் இதைக் கண்டிக்கிறேன்,  குற்றவாளிகளைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள், நடுரோட்டில் தூக்கிலிடுங்கள்" என பேயாய் அலரும் ஒரு சமூகத்தை பேரினவாத அடிப்படை வாதிகளுடன் ஒப்பிடுதல் என்னவகையான நீதி?

என் பெயர் ஒரு முஸ்லிமுடையதாக இருக்கிறதென்பதற்காக - ரஹ்மான் மகள் மேடையில் புர்காவுடன் தோன்றினாலும், ராமலிங்கம் கொலை குறித்தும் எனக்குச் சம்பந்தமே இல்லையென்ற போதிலும் நான் பாவமன்னிப்புக் கோரவேண்டுமென நீங்கள் எதிர்பார்ப்பபீர்களானால் பிரச்சினை  என்னிடமல்ல உங்களிடம்தான்.

"நூறு கருத்துக்கள் மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும்" என்றார் தோழர் மாவோ. நூறல்ல பல்லாயிரக்கணக்கான கருத்துகளால் நாம் மோதிக் கொண்டிருக்கும் போது பேரின அடிப்படைவாதமோ நூறு நச்சுப் பூக்களால் நம் சிந்தனையில் விஷக்காற்றை செலுத்திக் கொண்டிருக்கிறது.

Thursday, February 7, 2019

RSS, BJP, இந்து முண்ணனியில் இருக்கும் ரவுடிகளின் கொலைகளுக்கு முஸ்லிம்கள் காரணமா?

இதுவரை தமிழத்தில் கொலை செய்யப்பட்ட RSS, BJP, இந்து முண்ணனியில் இருக்கும் ரவுடிகளின் கொலைகளுக்கு முஸ்லிம்கள் காரணமா? அல்லது அவர்கள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி, வப்பாட்டி இன்னும் பலபல சமூகவிரோத செயல் காரணமா?

கொஞ்சம் சமீபத்திய வரலாற்றை புரட்டி பார்ப்போமா?

1) நாகப்பட்டிணம்_புகழேந்தி கொலை - 05.07.2012
கொலையாளி: முனீஸ்வரன்
காரணம்: நில அபகரிப்பு,கட்டப்பஞ்சாயத்து

2) பரமக்குடி_முருகன் கொலை - 19.03.2013
கொலையாளிகள்: ராஜபாண்டி & மனோகரன்
காரணம்: நில தகராறு

3) சங்கரன்கோவில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் கொலை - 05.07.2014
கொலையாளி: அவரின் முதல் மனைவி அய்யம்மாள்
காரணம்: இரட்டை திருமணம்

4) கோயம்பேடு_விட்டல்
கொலை 27.4.2012
கொலையாளிகள்: சுந்தரபாண்டியன், முருகன், கங்காதரன்
காரணம்: கந்து வட்டி கேட்டு தொல்லை, அபாச பேச்சு.

5) ராமேஸ்வரம்_குட்டநம்பு
கொலை 07.07.2013
கொலையாளிகள்: ராமச்சந்திரன் உட்பட ஆறு பேர்
காரணம்: குடிபோதையில் தகராறு செய்ததால் மக்களிடம் கல்லால் அடிபட்டு மரணம்.

6) தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பு 24.01.2007
குண்டு வைத்தவர்: ஆர் எஸ் எஸ் ரவிபாண்டியன்
காரணம்: தன் அண்ணன் குமார் பாண்டியன் மரணத்தால் எந்த கலவரமும் ஏற்படவில்லை எனும் அதிருப்தியில். ஹிந்து முஸ்லிம் கலவரம் ஏற்படுத்த.

7) வேலூர் பாஜக மருத்துவரணி செயளாலர் டாக்டர்_அரவிந்த்_ரெட்டி
கொலை - 23.10.2012
கொளையாளிகள் (உதயா, சந்திரன், ராஜா, தரணி)
காரண்ம்: கள்ளத் தொடர்பு

8) ஆடிட்டர்_ரமேஷ்
கொலை - 19.07.2013
கொளையாளி: இன்னும் பிடிபடவில்லை
காரணம்: கள்ளத் தொடர்பு
பாஜகவைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் அல்லது கொல்லப் பட்டார்,
முருகமணி என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டார்
(கட்டிய மனைவி நன்றாக திடமாக இருக்கும்பொழுது,
இரு பெண்களும் ரமேஷ் மீது உள்ள மரியாதையால்தான் தற்கொலை/இறந்தார்கள் என்று நம்புவோமாக).

9, சசிகுமார் கொலை 22;8;2016 இந்து முன்னணியின் கோவை மாவட்ட நிர்வாகி
கொலையாளி ; இந்து முன்னனி நிர்வாகி ஆனந்த் படுகொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்  காரணம்; கள்ளக்காதலால் கொல்லப்பட்டார்

7 & 8 கொலையாளிகள் யார் என்று தெரிந்திருந்தும் இந்துத்வவாதிகளை திருப்தி படுத்துவதற்காக  சில முஸ்லிம்களையும் கைது செய்து இன்று வரை போதிய ஆதாரமின்றி விசாரணைக் கைதிகளாகவே தொடர்கின்றனர்.

அது ஏன் எல்லா டிரௌசரும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு படுகொலை செய்யப் படுகின்றனர்?

எல்லோருமே அப்படியா?

அப்படியல்ல. சமூகவிரோதிகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரு இயக்கமும் தன்னை யாரும் நெருங்காமல் இருக்க ஹிந்து  எனும் போர்வையும் தேவைப் படுகிறது.
அதனால்தான் சமூக விரோதிகள் பெரும்பாலானோர் சங் பரிவார இயக்கங்களில் இணைகின்றனர். அதுவே அவர்களுக்கு சிறந்த புகலிடமாகவும் இருக்கிறது.

இவர்களை ஹிந்துக்கள் எனும் வரம்பில் வைத்து பார்க்கக் கூடாது. இவர்களை ஹிந்து மக்கள்தான் முதலில் புறக்கணிக்க வேண்டும்.

இறந்தவனைப் பற்றி கவலைப் படும் கூட்டமல்ல அவை. இறந்தவனை வைத்து மதக் கலவரம் ஏற்படாதா என்று ஏங்கி ஒவ்வொரு முறையும் ஏமாறும் கூட்டம் அது

-Shared

Wednesday, February 6, 2019

கேன்சருக்கு பயாப்சி - தேவையா இல்லையா?

ஷஜஹான்
2019-02-06

பயாப்சி - தேவையா இல்லையா?

எவ்வளவு தெளிவாக எழுதினாலும் “கேன்சர் ஒரு வியாபாரம்” என்று புதிது புதிதாக யாரேனும் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நம்பிக்கையைக் கற்பித்துக்கொண்டு, அதுவே உண்மை என்பதற்கான ஆதாரங்களைத் தேடி, ஆறுதல் அடைகிறவர்கள். அறியாமையால் செய்கிறார்களா அல்லது ஏற்கெனவே ஏற்பட்ட பாதிப்பின் ஆற்றாமையால் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இத்தகைய கருத்துகள் திரும்பத்திரும்ப உயிர்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

மேற்கண்ட பத்தி என்னுடைய நூலின் ஓர் அத்தியாயத்தில் துவக்கத்திலேயே இடம்பெறுகிறது. காரணம், உண்மை ஒரு சுற்றுச் சுற்றி வருவதற்குள் பொய் நான்கு சுற்றுகள் வந்து விடுகிறது என்பது இந்த வாட்ஸ்அப்/பேஸ்புக் சமூக வலைதளக் காலத்தில் மிகவும் உண்மையாகி விட்டதுதான். எந்தவொரு விஷயத்தையும் ஆழமாகப் படிக்காமல், உண்மைத் தன்மையை ஆராய்ந்து பார்க்காமல், படிக்கும்போது ஏற்படும் உணர்வுகளுக்கு மட்டுமே ஆட்பட்டு உடனே அதைப் பகிர்ந்து விடுகிற போக்கு அபாயகரமாக அதிகரித்து விட்டது. அப்படியொரு பகிர்வுதான் இந்தப் பதிவை எழுத வைத்தது.

புற்றுநோய்க்கு பயாப்சி செய்வது தேன்கூட்டில் கல்லெறிவது போன்றது. இதனால் புற்றுநோய் பரவி விடும். புற்றுநோய் அறிகுறி இருந்தால் அலோபதி சிகிச்சை செய்யாதீர்கள். மனதை நேர்மறை எண்ணத்தோடு ஆட்சி செய்ய விடுங்கள். மூலிகைகளை நம்புங்கள். காய்கறிகளை உண்ணுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.... என்கிற ரீதியில் ஒரு பதிவை நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.

படித்ததும் உடனே எழுந்தது ஆத்திரம். அப்புறம் வந்தது சலிப்பு. அறிவியல்ரீதியான ஆதாரங்கள் எத்தனை இருந்தாலும் மண்ணின் மருத்துவம் என்று நீட்டிமுழக்கும் ஆதாரமற்ற பதிவுகள் பெரும் சலிப்பையும் உளைச்சலையும் ஏற்படுத்துகின்றன.

அன்னதானம் செய்யுங்கள், மனதை ஆரோக்கியமாக வைத்திருங்கள், கீரை வகைகளை சாப்பிடுங்கள் எல்லாம் சரிதான். இது புற்றுநோயாளிகளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே பொருந்தும். சமச்சீர் உணவு, காய்கறிகள் கீரை வகைகள் சேர்த்தல், உடற்பயிற்சி எல்லாமே பள்ளிப் பருவத்திலிருந்தே பாடங்களில் சொல்லப்படுகிற விஷயம்தானே? இதையெல்லாம் செய்தால் சிகிச்சையே இல்லாமல் புற்றுநோயிலிருந்து மீண்டு விடலாம் என்பது எவ்வளவு அபத்தம்! அதிலும் பயாப்சியால் புற்றுநோய் அதிகரிக்கும் என்பது அபத்தத்திலும் அபத்தம்.

உடலில் ஒரு கட்டி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அது கட்டியாக உருவாகி அப்படியே இருக்குமானால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது உடலின் ஏதேனுமொரு செயல்பாட்டை பாதிக்கும் என்றால் மட்டுமே கவலைப்பட வேண்டும். உதாரணமாக, முழங்கையின் உள்பகுதியில் ஒரு கட்டி வளர்கிறது. அது கையின் செயல்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வரையில் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் கையை மடக்குவதில் தடை செய்யுமானால் கட்டியை நீக்கத்தான் வேண்டும். அத்துடன், அந்தக் கட்டி முழங்கையில் வளர்ந்த இடத்தோடு நின்று விடுமா அல்லது வேறு இடங்களுக்கும் பரவுமா என்று பார்க்க வேண்டும். எங்கே வளர்ந்ததோ அதே இடத்துடன் நின்று விட்டால் அது கேன்சர் இல்லை, அது வெறும் கட்டிதான். வளர்ந்த இடத்திலிருந்து உடலின் இதர பகுதிகளுக்கும் பரவினால்தான் அது கேன்சர் – புற்றுநோய்.

ஒரு கட்டி சாதாரணக் கட்டியா அல்லது கேன்சர் கட்டியா என்று எப்படி அறிய முடியும்? அதுவும், அந்தக் கட்டி முழங்கையைப் போல வெளியே தெரிகிற பகுதியில் இல்லாமல் உடலுக்குள் வேறெங்கேனும் வளர்ந்திருந்தால் அது பரவக்கூடிய கட்டியா என்று எப்படி அறிய முடியும்? இதற்கு உதவி செய்வதுதான் பயாப்சி.

பயாப்சியில் பல வகைகள் உண்டு. எதுவாக இருந்தாலும், கட்டியின் திசுக்களை பரிசோதனைக்காக எடுப்பதுதான் அதன் நோக்கமாகும். திசுக்களை எடுப்பது என்றால் தேன்கூட்டைக் கலைப்பதுபோல ஏதோ குத்திக்கிளறி எடுப்பதாகக் கற்பனை செய்து கொண்டார்கள் போலிருக்கிறது! பயாப்சிக்காக ஊசி மூலம் எடுக்கும்போது, சாதாரணமாக மருத்துவர்கள் பயன்படுத்தும் ஊசிகளைவிட மெல்லிய ஊசியை கட்டியில் செலுத்தி, அதிலிருந்து திசுக்களை எடுத்து பரிசோதிப்பார்கள். இதற்கும் புற்றுநோய் பரவலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பயாப்சியில் பல வகைகள் உண்டு. உதாரணமாக, என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். (கீழே உள்ள கதைகளில் இரண்டினை இதுவரை நான் பேஸ்புக்கில் சொல்லவில்லை. மேலும் இரண்டு கதைகளும்கூட உண்டு, அவற்றையும் சொல்லவில்லை. இப்போதும்கூட எனக்கு ஆறுதல் கூற வேண்டும் என்பதற்காக அல்ல, உண்மை எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன்.)

1. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவுக்கு உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டது. கோவையில் ஒரு மருத்துவமனை பயாப்சி பரிசோதனை செய்யச் சொன்னது. உணவுக்குழாயில் ஒரு டியூபை செலுத்தி, அதிலிருந்து திசுவை எடுத்துப் பரிசோதித்தபோது, அது புற்றுநோய்க் கழலை என்று தெரிந்தது. ஏற்கெனவே அவருக்கு நோய் பரவியிருந்தது. சிகிச்சை செய்தோம் என்றாலும், தன் முடிவை ஊகித்த அவர், ஒரு கட்டத்தில் தனக்கு சிகிச்சை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். வீட்டுக்கு அழைத்துச் சென்ற சில வாரங்களில் உயிரிழந்தார்.

2. என் மூத்த அக்காவின் மகனுக்கு திடீரென்று கடும் தலைவலி வந்தது. ஆரம்பகட்ட மாத்திரைகளால் பயன் கிடைக்கவில்லை என்பதால் ஸ்கேன் செய்து பார்த்தபோது, மூளையில் ஒரு கட்டி இருப்பது தெரிந்தது. கிட்டத்தட்ட 6 கனசெமீ அளவு. அறுவை சிகிச்சை செய்து கட்டி நீக்கப்பட்டது. ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு, நல்ல முன்னேற்றமும் இருந்தது. ஆனால் ஒரு பக்கம் இந்த முன்னேற்றம் நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் புற்றுநோய் செல்கள் உடலின் இதர பகுதிகளுக்கும் பரவி விட்டிருந்தன. எனவே உயிரிழந்தார். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் – அவருக்கு முன்னரும் அவ்வப்போது தலைவலி இருந்து கொண்டுதான் இருந்தது. திருப்பூரில் ஒரு மருத்துவரிடம் பார்த்தபோதும் அவர் புற்றுநோய் சந்தேகத்தை தெரிவிக்கவில்லை. தலைவலி வரும்போது அனாசின் போன்றதொரு மாத்திரையைப்போட்டு தற்காலிக நிவாரணம் பெறுவது வழக்கமாகிப் போனதால், தலைவலியைப் பொருட்படுத்தவில்லை. ஒருவேளை முன்னரே சந்தேகத்தின் பேரில் ஸ்கேன் செய்து பார்த்து, பயாப்சியும் செய்து பார்த்திருந்தால், அது பரவக்கூடிய கட்டியா என்று கண்டறிந்திருக்க முடியும். ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை செய்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

3. 2017 செப்டம்பர் மாதம் நான் தமிழகம் வந்திருந்தபோது திடீரென்று எனக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் கொலோனோஸ்கோபி செய்யப்பட்டது. அதாவது, ஆசனவாயின் வழியாக ஒரு குழாயை செலுத்தி, அதில் இணைத்திருக்கும் கேமராவின் மூலமாக குடலுக்குள் என்ன பிரச்சினை என்று கண்டறிவது. எனக்கான சோதனையில் பெருங்குடலில் புண்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சரி, புண்ணுக்கான மருந்து கொடுத்து அத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்தானே? அதுதான் இல்லை. பெருங்குடலில் புண்கள் மட்டுமல்ல; புண்கள், வீக்கம் அல்லது பாலிப்ஸ் எனப்படும் மொட்டுகளும் இருக்கலாம். இந்த மொட்டுகள் புற்றுக் கட்டிகளாக மாறும சாத்தியம் உண்டா என்று பரிசோதிக்க வேண்டும். எனவே, கொலோனோஸ்கோபி செய்யும்போதே, குடலில் இருக்கும் மொட்டினையும் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள். (இந்தப் பரிசோதனையில் எனக்குப் புற்றுநோய் இல்லை என்று தெரிய வந்தது.) ஊரிலிருந்து தில்லிக்குத் திரும்பி வந்து விட்டேன். வந்த பிறகும் வயிற்றுப்போக்கு நிற்கவில்லை என்பதால் மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. ஸ்டான்லியில் பரிசோதனை மட்டுமே செய்தோம். இங்கே அட்மிட் ஆக வேண்டியிருந்தது. இங்கேயும் பரிசோதனை செய்யப்பட்டது, இங்கேயும் குடலுக்குள்ளிருந்து எடுத்த மொட்டினை பயாப்சி செய்து பார்த்தார்கள், புற்றுநோய் இல்லை என்று உறுதி செய்தார்கள். குடலில் புண்கள் உள்ளதா என்பதை மட்டுமே பார்த்துவிட்டு பயாப்சி செய்யாமல் நிறுத்திக் கொண்டிருந்தால், ஒருவேளை புற்றுநோய் செல்கள் இருந்திருந்தால் அது தெரிய வந்திருக்காது. இதுதான் பயாப்சியின் பயன்.

மருத்துவமனை காசு பிடுங்குகிறதே என்றால், அது வேறு விஷயம். காசு பிடுங்காமல் பார்த்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. மேலே சொன்ன பிரச்சினைக்காக நான் சென்னை ஸ்டான்லியில் பார்த்தேன். ஒரு பைசா செலவு இல்லை. அதையே இங்கே ஒரு தனியார் மருத்துவமனையில் பார்த்தேன். ஒரு லட்சம் ரூபாய் செலவானது. ஸ்டான்லியில் நான் வெளி நோயாளியாகச் சென்று பரிசோதனை செய்து கொண்டு மாத்திரைகளா வாங்கிக்கொண்டு வந்து விட்டேன். இங்கே தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கியிருந்து கொடுக்கிற காசுக்கு தனி கவனிப்பு கிடைத்தது. தவறு என்னுடையதுதானே? ஸ்டான்லியிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்திருந்தால் செலவே இருந்திருக்காது. விஷயம் என்னவென்றால், ஸ்டான்லியில் என்ன மருந்து கொடுத்தார்களோ அதே மருந்தைத்தான் இங்கேயும் கொடுத்தார்கள். :) 

பயாப்சியில் பல வகைகள் உண்டு.
• வாய் அல்லது ஆசனவாய் அல்லது சிறுநீரக்க் குழாய் போன்ற வழிகளில் குழாயை உள்ளே செலுத்தி, ஏதேனும் கோளாறு இருக்கிறதா என்று பார்த்து, திசுக்களையும் எடுத்துப் பரிசோதனை செய்வது எண்டாஸ்கோபிக் பயாப்சி.
• இரத்தப் புற்றுநோய், எலும்பு மஜ்ஜைப் புற்றுநோய் ஆகியவற்றைப் பரிசோதிக்க எலும்புக்குள் ஊசியைச் செலுத்தி மஜ்ஜையின் அணுக்களை எடுத்துப் பரிசோதிப்பது எலும்பு மஜ்ஜை பயாப்சி
• மார்பகம் போன்ற உறுப்புகளில் கட்டி இருப்பதாகத் தெரிந்தால் ஊசியை உள்ளே செலுத்தி திசுக்களை எடுத்துப் பரிசோதிப்பது நீடில் பயாப்சி.
• தோல் மற்றும் தோலடிப் பகுதிகளைப் பரிசோதிப்பது ஸ்கின் பயாப்சி.
• ஊசி அல்லது எண்டாஸ்கோபிக் குழாய்களை செலுத்த முடியாத இடங்களில் அறுவை சிகிச்சை செய்து திசுக்களை எடுத்துச் செய்வது சர்ஜிகல் பயாப்சி.

மேலும், பயாப்சி என்பது புற்றுநோய்க்கு மட்டுமல்ல. அல்சர் முதல் ஹெபடிடிஸ் வரை பல நோய்களுக்கும் பயாப்சி தேவைப்படலாம். திசுக்களை எடுப்பது மட்டுமல்ல, இப்போது லிக்விட் பயாப்சி என்ற முறையும் வந்திருக்கிறது. ஆனால் திசு பயாப்சி அளவுக்கு இது பயன் தருவதில்லை.

ஆக, பயாப்சி எதுவாக இருந்தாலும் அதன் நோக்கம் ஒன்றுதான் – உடலில் தோன்றிய கட்டி பரவக்கூடியதா இல்லையா என்று மைக்ராஸ்கோப் மூலம் பரிசோதனை செய்வதற்காக கட்டியின் திசுவை எடுப்பது. பயாப்சியின் மூலம்தான் புற்றுநோய் எந்த அளவில் இருக்கிறது என்று கண்டறிய முடியும், அது எங்கிருந்து துவங்கியிருக்கும் என்பதையும் கண்டறிய முடியும்.

புற்றுநோய் இருக்குமா என்று சந்தேகம் வந்த பிறகும் பயாப்சி தேவையில்லை என்பவர்கள் இரண்டே வகைதான் இருக்க முடியும்.

முதல் வகை — எக்ஸ்-ரே அல்லது சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ போன்ற சோதனைகளில் கட்டி இருப்பது உறுதியாகிவிட்டது, எதற்காக பயாப்சி எல்லாம் செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டும், நேரடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியதுதானே என்பவர்கள். (எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன்களில் கட்டி இருக்கிறது என்றுதான் தெரியுமே தவிர, அது பரவக்கூடிய கட்டியா என்று தெரியாது. பரவக்கூடிய கேன்சர் கட்டியாக இருந்தால் மட்டுமே அறுவை / ரேடியேஷன் / கீமோ ஆகிய சிகிச்சைகள் தேவைப்படும்.)

இரண்டாம் வகை — கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என்று நம்புகிறவர்கள்.

https://www.facebook.com/100000383483109/posts/2124996844189744/