Sunday, August 11, 2019

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

MJF.LN.DR.L.VELAYUTHAM. MBA.ML.Phd.

https://www.facebook.com/1440559153/posts/10220629077103779/

Saturday, August 3, 2019

பிக்பாங் புரிகிறதா? 03 - ராஜ் சிவா

Raj Siva
2019-08-03

என்ன... புரிகிறதா?   03
-ராஜ்சிவா(ங்க்)

பலருக்கு இந்தக் குழப்பம் இருக்கிறது. சாதாரணமானவர்களுக்கு மட்டுமில்லை, இயற்பியல் தெரிந்தவர்களுக்கும் இருக்கிறது.

மிகவும் ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கிகள் மூலமாக இறந்த காலத்தை நாம் பார்க்கிறோமல்லவா? “பிக்பாங் நடைபெற்று சில மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய காலக்ஸியைக் கண்டுபிடித்திருக்கிறோம்” என்றும், “பிக்பாங்கின் பின், 590 மில்லியன் ஆண்டுகளில் உருவான குவேசாரைக் கண்டுபிடித்திருக்கிறோம்” என்றும், செய்திகளை நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம். அதாவது, 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை, இப்போதுள்ள நவீனத்  தொலைநோக்கிகளால் பார்க்கிறோம். இந்த இடத்தில், பலருக்குச் சில கேள்விகள் எழுகின்றன. அதனால், மிகவும் குழம்பிப் போகிறார்கள்.

“இறந்தகாலத்தை தொலைநோக்கிகள் மூலம் நம்மால் பார்க்க முடியுமென்றால், பிக்பாங் என்னும் பெருவிரிவுக்குக் காரணமான ஒருமைப்புள்ளி (singularity) இருந்த இடம் எது என்பதையும் நம்மால் கணிக்க முடியுமல்லவா? அந்தப் புள்ளிக்கும், பூமிக்கும் உள்ள இடைவெளித் தூரம் எவ்வளவு?” என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. மிகமுக்கியமான, நுண்ணிய அர்த்தமுள்ள கேள்வி இது. இதைத் தமிழில் எப்படிப் புரிய வைப்பது என்பதுதான், இப்போது எனக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால். பார்க்கலாம்.

பிக்பாங் நடைபெற்றது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன். ஆகவே, 13.8 பில்லியன் ஆண்டுகள் தூரத்தில் பிக்பாங்கின் ஒருமைப்புள்ளி இருந்திருக்க வேண்டுமென்று சிலர் புரிந்து கொள்கிறார்கள். அது மிகவும் தப்பான புரிதல். ஒளியாண்டு என்னும் தூர அளவை மனதில் கொண்டு, இப்படித் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஒளியாண்டு என்பதில், ‘ஆண்டு’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல் இருந்தாலும், அது தூரத்திற்கான ஒரு அளவீடு. அதாவது, ஒரு ஆண்டில், ஒளி செல்லக்கூடிய தூரம் எவ்வளவோ, அவ்வளவு தூர இடைவெளியின் அலகு அது. ஆனால், பிக்பாங் நடைபெற்று 13.8 பில்லியன் ஆண்டுகள் என்று சொல்வது, அதன் காலத்தைக் குறிப்பது. இரண்டும் வேறு வேறு. இப்போது நீங்கள், “13,8 பில்லியன் ஆண்டுகள் தூரத்திலிருந்து ஒளி நம்மை வந்து சேர்வதற்கு, 13.8 பில்லியன் ஒளியாண்டுகள்தானே ஆகியிருக்கும். அப்படியெனில், அந்தப்புள்ளி 13.8 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில்தானே இருக்க வேண்டும்?” என்று என்னிடம் கேட்கலாம். இது மிகச்சரியானதொரு கேள்விதான். ஒளியாண்டு என்பதை நீங்கள் தெளிவாகவே புரிந்திருக்கிறீர்கள். ஆனால், பிக்பாங் பற்றித்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

பிக்பாங் என்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமா? கொஞ்சம் உன்னிப்போடு கவனியுங்கள். ஒரு சிறிய புள்ளி திடீரென பெரிதாய், மாபெரும் விரிவாய், பேரண்டமாய் விரிந்தது என்று சொல்கிறார்களல்லவா? அதற்கு எடுத்த நேரம் எவ்வளவு தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். 10^-32 வினாடியில் அது நடந்துவிட்டது. அதாவது, ஒரு வினாடியின் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியனில் ஒரு பங்கு நேரத்தில் பேரண்டமாய் விரிந்துவிட்டது. முதல் மூன்று நிமிடத்திற்குள் ஒட்டுமொத்த அண்டத்திற்குமான அணுக்கருப் பிணைப்புகளும் நடந்து முடிந்துவிட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மனிதனால் கற்பனையே செய்ய முடியாத அவசர விரிவு அது. மைக்ரோ வினாடி, நானோ வினாடி என்பவையெல்லாம் அங்கு பெரிய அளவீடுகள். சரி, பேரண்டம் எப்படி விரிந்தது என்பதைப் பார்ப்போமா?

மூன்று மில்லிமீட்டர் ஆரம் கொண்ட பல்லியின் முட்டை ஒன்றை உங்கள் மனதில் எடுத்துக் கொள்ளுங்கள். மிகச்சிறிய கோள வடிவிலான முட்டை. அதற்குள் எதுவும் இல்லை. வெறும் கோது மட்டுமே. அந்தப் பல்லி முட்டையின் உட்புற ஓட்டில் நூறுக்கும் அதிகமான புள்ளிகளை இடுங்கள். சும்மா கற்பனையாகத்தான். இட்டாச்சா? சரி, உங்களுக்கு இப்போது அவெஞ்சர்ஸில் வரும் ‘தானோஸ்’ போன்று ஒரு அற்புத சக்தி தரப்படுகிறது. நீங்கள் விரல்களைச் சொடுக்கினால், அந்தக் கணத்தில், இந்தச் சிறிய பல்லியின் முட்டைக் கோது, நூறு மீட்டர் ஆரமுடைய மிகப்பெரிய முட்டையாக மாறிவிடும். இதுவும் கற்பனைதான். ம்ம்ம்ம்... விரல்களைச் சொடக்குங்கள்!

முட்டை இப்போது பெரிதாகிவிட்டது. சிறிய பல்லி முட்டையின் உட்புறத்தில் நீங்கள் இட்ட அந்த நூறுக்கும் அதிகமான புள்ளிகள் இப்போது எங்கு இருக்கும்? பெரியதாகிவிட்ட முட்டைக் கோதில் உட்புறச் சுவரில் பரவலாக இருக்குமல்லவா? அந்தச் சிறிய பல்லி முட்டைதான் பிக்பாங் ஒருமைப்புள்ளி. இப்போதுள்ள பெரிய முட்டைதான் விரிந்துவிட்ட பேரண்டம். அதில் இடப்பட்ட புள்ளிகள்தான் நடசத்திரங்களும், பூமிபோன்ற கோள்களும்.

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். பெரிய முட்டைக் கோதினில் இருக்கும் புள்ளிகள் அனைத்தும், பேரண்டம் முழுவதும் பரவியிருக்கும் நட்சத்திரங்கள், கோள்களென எடுத்துக் கொண்டால், அவைக்கும் பிக்பாங் ஒருமைப்புள்ளி என்று சொல்லும் சிறிய முட்டைக்குமான தூரம் என்னவென்பதே இப்போதுள்ள கேள்வி. அதாவது இந்தக் கட்டுரையின் ஆரம்பக் கேள்வி.

சின்ன முட்டை 3 மில்லிமீட்டர். பெரிய முட்டை 100 மீட்டர் இரண்டுக்கும் உள்ள இடைவெளிதான், அந்தக் கேள்விக்கான பதில் என்று உங்கள் மனம் சொல்லும். அதாவது, கிட்டத்தட்ட 100 மீட்டர்கள் இடைவெளி இருப்பதாகத் தெரியும். அதுபோலவே, பூமிக்கும், ஒருமைப்புள்ளிக்கும் இடையிலுள்ள தூரத்தையும் கணிக்க வேண்டுமென்று மனம் சொல்லும். ஆனால், அது ரொம்பத் தப்பான கணிப்பு. இங்கு நீங்கள் தவறவிட்ட சில விசயங்கள் இருக்கின்றன. அவற்றைச் சொல்கிறேன். அப்போது, என்ன தப்பு என்பது புரியும். கவனியுங்கள்.

சிறிய பல்லியின் முட்டையில் நீங்களிட்ட ஒரேயொரு புள்ளியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பல்லி முட்டையின் கோதில் ஏதோவொரு இடத்தில் இருக்கிறது அல்லவா? இப்போது முட்டை பெரிதாகிறது. அந்தப் புள்ளி, தான் இருந்த இடத்தைவிட்டு நகர்ந்ததா? இல்லை. அது, தான் இருந்த இடத்தைவிட்டு நகரவேயில்லை. அது ஒரே இடத்தில்தான் இருந்தது. ஆனால், அது இருந்த இடத்தின் வெளி திடீரெனப் பெரிதாகியது. பெரிதாகியும் அது தானிருந்த இடத்திலேயேதான் இருக்கிறது. சிறிதுகூட தன்னுடைய இடத்தைவிட்டு அது நகரவேயில்லை. அங்கு விரிந்ததெல்லாம், அந்தப் புள்ளியிருந்த வெளி மட்டும்தான் (space). பல்லி முட்டையில் இடப்பட்ட நூறு புள்ளிகளுக்கும் இதுவே நடந்தது. அதில் இருந்த எந்தப் புள்ளியும் தன்னுடைய இடத்தைவிட்டு நகரவேயில்லை. அவை இருந்த மொத்த ஸ்பேஸும் திடீரென விரிந்தது. அவ்வளவுதான். விரிந்ததன் பின்னரும், அவை அனைத்தும், தாங்கள் முதலில் இருந்த அதே இடத்திலேயே இப்போதும் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு புள்ளி இருக்கும் இடமும் பிக்பாங்கின் ஆரம்பக் கணம் நடந்த அதே இடம்தான். எந்த இடத்தில் பிக்பாங் நடந்ததோ, அந்த இடமே இந்தப் பேரண்டமாக உருவாகியிருக்கிறது. பேரண்டம் முழுவதும் உள்ள அனைத்துப் புள்ளிகளும் பிக்பாங் இடத்தில் இருந்தன. இப்போதும் அதே இடத்தில்தான் இருக்கின்றன. பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் பிக்பாங் நடந்தது. அந்த ஒவ்வொரு இடமும், வெளியின் விரிவால், வெவ்வேறு இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. நான் சொல்வது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். அப்படியும் புரியவில்லையென்றால், இன்னுமொரு உதாரணமும் சொல்கிறேன்.

ஒரு வட்டவடிவமான கிரிக்கெட் மைதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மைதானத்தின் தரை சிறப்பானதொரு கடினமான இரப்பரினால் செய்யப்பட்டது. மைதானம் மொத்தமும் அந்த இரப்பர் தரையிலானது. அந்தத் தரையை உங்களால் திடீரென 5 மீட்டர் ஆரமுள்ள வட்டத் தரையாகச் சுருக்கவும் முடியும். மைதானமளவுக்குப் பெரிதாக விரியச் செய்யவும் முடியும். ஒரு சுவிட்சை அழுத்தினால், அது சிறியதாகச் சுருங்கும். மறுமுறை அழுத்தினால் மைதானமளவு பெரிதாகிவிடும். இப்போது, அந்த இரப்பர் தரை 5 மீட்டர் அளவில் சிறிதாகச் சுருங்கியிருக்கிறது. அதில், நூறு சிறுவர்களை நெருக்கமாக நிற்க வையுங்கள். இப்போது, நீங்கள் சுவிட்சை அழுத்துங்கள். இரப்பர் தரை, மைதானமளவுக்குப் பெரிதாகிவிடுகிறது. அதனால், அந்தச் சிறுவர்கள் அனைவரும் மைதானமெங்கும் பரவி நிற்பார்கள்.

இப்போது அந்த ஒவ்வொரு சிறுவனிடமும் சென்று  ‘நீயாக இங்குவரை நகர்ந்தாயா?” என்று கேட்டால், “இல்லை, நான் இருந்த இடத்தில்தான் இருக்கிறேன். எங்கும் நகரவில்லை” என்பார்கள். ஒவ்வொருவரும் இதையே சொல்வார்கள். அப்படியெனில், அந்த விரிவு நடந்தது சிறுவர்களிடத்திலில்லை. அவர்கள் நின்றிருந்த வெளியில்தான். அந்த விரிவு எந்தப் புள்ளியில் நடந்தது? சிறுவர்கள் இப்போது எங்கெங்கு நின்று கொண்டிருக்கிறார்களோ அந்த ஒவ்வொரு புள்ளியிலும் நடந்தது.

எனவே, நம் பூமி இப்போது இருக்கும் புள்ளி (இடம்), பேரண்ட வெடிப்பு நடந்த அதே இடம்தான். முதல் கணத்தில் அது எங்கிருந்ததோ, அதே இடத்தில்தான் இப்போதும் இருக்கிறது. அதனால், பிக்பாங் வெடிப்பிற்கும், பூமிக்குமான இடைத்தூரம், வெறும் பூச்சியம்தான். இது பூமிக்கு மட்டுமல்ல, அண்டத்தின் ஒவ்வொரு நட்சத்திரமும், கோளும் இருக்குமிடமும், பேரண்ட விரிவு நடந்த இடம்தான். இங்கு நகர்ந்தவை நட்சத்திரங்களும், கோள்களும் அல்ல. வெளிதான் வெளியே விரிந்தது.

என்ன... புரிகிறதா?

-ராஜ்சிவா(ங்க்)

https://m.facebook.com/story.php?story_fbid=2379069268826753&id=100001711084852

பிக்பாங் புரிகிறதா? 02 - ராஜ் சிவா

Raj Siva
2019-07-31

என்ன... புரிகிறதா?   02
-ராஜ்சிவா(ங்க்)

நாம் இப்போது, பி.பி 13.8பி இல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதாவது, பிக்பாங்கின் பின் 13.8 பில்லியன் வருடங்களை இதுவரை கடந்திருக்கிறோம். இந்தக் காலக் கணக்கு, பேரண்டத்தின் அனைத்து இடங்களுக்கும் பொதுவானது. வருடம் என்னும் அலகு பூமி சார்ந்ததாக இருந்தாலும், அந்தக் கால இடைவெளியின் அளவீட்டைப் பேரண்டம் முழுவதுமுள்ள இடங்களில் பொருத்திப் பார்க்கையில், பேரண்டம் உருவானது 13.8 பில்லியன் பூமி வருடங்கள். பால்வெளி உடுத்திரள் ஆனாலென்ன, ஐம்பது மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பாலிருக்கும் M87 உடுத்திரள் ஆனாலென்ன, இரண்டு இடத்திலுமே இந்தக் கணத்தில், பேரண்டம் உருவாகி 13.8 பில்லியன் வருடங்கள்தான். சரி, நான் இப்போது ஒன்று சொல்லப் போகிறேன். அதுபற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அதற்கான பதிலும், விளக்கமும் என்னிடமில்லை. உங்களைக் குழப்பிவிடுவதற்காகவும், பேரண்டத்தின் புரிந்துகொள்ள முடியாத பேராச்சரியங்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் மட்டுமே இதை எழுதுகிறேன்.

சரி, இப்போது விசயத்துக்குள் போகலாமா? பிக்பாங் பெருவிரிவு நடந்த சில மில்லியன் வருடங்களின் பின்னர் முதல் நட்சத்திரங்களும், நட்சத்திரக் கூட்டங்களும் உருவாக ஆரம்பித்தன. ஈர்ப்புவிசையின் அழுத்தம் மற்றும் பிசகல் காரணமாக அனைத்துவிதமான விண்வெளிப் பொருட்களும் தோன்ற ஆரம்பித்தன. அதில் நட்சத்திரங்கள், கோள்கள், நெபுலாக்கள், கருங்குழிகள், குவேசார்கள் என எல்லாமே அடக்கம். பெருவிருவின் பின் 690 மில்லியன் வருடத்தில் தோன்றிய குவேசாரைக் கண்டுபிடித்திருக்கிறோம். இந்தச் சமயத்தில் தோன்றிய ஒரு கருங்குழியை கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இண்டார்ஸ்டெல்லார் படத்தில், கூப்பர் வந்திறங்கிய நீர்க் கோளமான ‘Gargantua‘ இல் காலம் மெதுவாகிறது என்று குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். Gargantua கோளின் ஒரு மணி நேரம், பூமியின் ஏழு வருடங்களுக்குச் சமமானது என்று சொல்லப்பட்டிருக்கும். அதுபோன்று, பெருவிரிவின் ஆரம்ப காலங்களில் தோன்றிய
கருங்குழியொன்றின் நிகழ்வெல்லைக்கு அருகே அல்லது நிகழ்வெல்லையிலேயே, ஒரு கோள் இருந்து, அதில் உயிரினம் வாழ்ந்தால், அவர்களுக்கான நேரம் பூச்சியத்துக்கு அருகிலேயே இருக்கும் அல்லவா? கருங்குழியின் மிகை ஈர்ப்புவிசையில், காலம் மெதுவாகி மெதுவாகிப் பூச்சியத்தை அண்மிக்குமென்று பல தடவைகள் சொல்லியிருக்கிறேன்.

அப்படியெனில், அந்தக் கோளில் வாழும் உயிரினத்திற்கு, காலம் நகராததால், பேரண்டம் உருவாகி 13.8 பில்லியன் வருடங்கள் ஆகியிருக்காது. வெறும் 700 மில்லியன் வருடங்களாக மட்டுமே இருக்கும். அதாவது, பேரண்டம் எங்கும் அது தோன்றி 13.8 பில்லியன் வருடங்கள் ஆகியிருக்கும்போது, அங்கு மட்டும் 700 மில்லியன் வருடங்கள் மட்டுமே ஆகியிருக்கும்.

என்ன புரிகிறதா?

https://m.facebook.com/story.php?story_fbid=2373660946034252&id=100001711084852

பிக்பாங் புரிகிறதா? 01 - ராஜ் சிவா

Raj Siva
2019-07-30

என்ன... புரிகிறதா?   01
-ராஜ்சிவா(ங்க்)

எப்போதும்போல, என் விருப்பத்திற்குரிய ‘பிக்பாஸ்’ பற்றி ஏதாவது எழுதலாமே என்று யோசித்தேன். சாரி...! சாரி...! ரொம்ப ரொம்ப சாரி. பிக்பாஸ் இல்லை, பிக்பாங். இந்த மைந்தன் சிவா (Mynthan Shiva), அர்விந்த் யுவராஜ் (Arrawinth Yuwaraj), கிர்த்திகா தரன் (Kirthika Tharan) போன்ற நட்புகளின் இடைவிடாத பிக்பாஸ் பதிவுகளைப் படித்துப் படித்து, எனக்கும் பிக்பாங், பிக்பாஸ் ஆகிவிட்டது. சொன்னதை அழிச்சிடுங்க. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

எப்போதும் போல, என் விருப்பத்திற்குரிய ‘பிக்பாங்’ பற்றி ஏதாவது எழுதலாமே என்று யோசித்தேன். ரொம்பவே நீட்சியாக இல்லாமல், குறுந்துணிக்கையாக.

நேரடியாக விசயத்துக்கு வருகிறேன். பிக்பாங் கணத்தின்போது, இப்போதுள்ள ஒட்டுமொத்தப் பிரமாண்டப் பேரண்டத்துக்குக் காரணமான, அந்த ஒற்றைப் புள்ளி பெருவிரிவாய் விரியக் காத்திருந்தது. அந்தக் கணப்பொழுதில், நேரமென்ற (காலம்) ஒன்றோ, இடமென்ற (வெளி) ஒன்றோ இருக்கவில்லை. சொல்லப்போனால், அந்தச் சொற்களுக்கே அங்கு அர்த்தம் இல்லை. அவற்றிற்கு மட்டுமில்லை. எவற்றிற்கும் அர்த்தமில்லை. ‘இல்லாமையின் கணத்தில் இருத்தலுக்கு அர்த்தங்கள் கிடையாது’. உதாரணமாக, நீங்கள் பார்த்தே இருக்காத ஒரு நிறத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா என்று பாருங்கள். சரி போகட்டும். இப்போ அது இல்லை பிரச்சனை.

பிக்பாங் கணத்தில் அந்த ஒருமைப் புள்ளி மிகச்சிறியதாக இருந்தது என்று பலர் சொல்வார்கள். இப்போதும் சொல்கிறார்கள். அதிகம் ஏன், நானே பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். சிலர் ஒருபடி மேலே போய், அது சிறிய பந்தைப் போலென்றும், ஊசி முனை போன்றது என்றும் சொல்வார்கள். எல்லாமே தப்பு. மகாத்தப்பு.

அந்தக் கணத்தில், எப்படிக் காலம் மற்றும் இடத்திற்கு அர்த்தம் இல்லையோ, அதுபோலப் பருமன் என்பதற்கும் அர்த்தம் கிடையாது. சிறியது,பெரியது என்ற சொற்களுக்கு அங்கே இடமேயில்லை. அந்தப் புள்ளி எதைவிடவும் சிறியதும் இல்லை. எதையும்விடப் பெரியதும் இல்லை. எதையும் எதனுடனும் ஒப்பிடவே முடியாத, மனிதனால் கற்பனை செய்ய முடியாத அற்புதப் புள்ளி அது. பருமனற்ற, உருவமற்ற ஏதோவொன்று. அது இப்பிடி இருக்குமென்று சிந்தித்தால் குழம்பிப் போய்விடுவீர்கள். இனி யாரும் அதைச் சிறியதொரு புள்ளி என்று சொன்னால், அப்படியே விட்டுவிடுங்கள். ஆனாலும், அதை ஒருமைப்புள்ளியென்றே அழைத்தும் கொள்கிறோம். பரிமாணமே இல்லாத ஒருநிலை என்பதால்.

இதைத் தாண்டியும் அந்தப் புள்ளியின் பருமனை விளக்க வேண்டுமென்று யாரும் கேட்டால், “கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 14:53 மணியின் அளவு பெரிதாக இருந்தது என்று சொல்லிவிடுங்கள்.

என்ன புரிகிறதா? 😜😜😜

https://m.facebook.com/story.php?story_fbid=2371876352879378&id=100001711084852

Thursday, August 1, 2019

எதற்கெடுத்தாலும் அம்பேத்காரை பெரியாருக்கு எதிராக நிறுத்துவது

இந்த நவீன தலித்திய வாதிகள் நடந்துகொள்ளும் முறைகள் மிகவும் தரம் தாழ்ந்ததாக உள்ளது.

எதற்கெடுத்தாலும் அம்பேத்காரை பெரியாருக்கு எதிராக நிறுத்துவது இவர்களின் அன்றாட வாடிக்கை.

அதிலும் ஆரியத்திற்கு நேரெதிராக திராவிடம் சிலிர்த்தெழுந்து போரிடும் போது குறுக்கே புகுந்து திராவிடத்தை எதிர்ப்பது, அதாவது ஆரியத்தைப் பாதுகாப்பது தான் இவர்களின் தலையாய வேலையாக உள்ளது.

பெரியார் மக்களிடமே தான் இருந்தார் என்பதையும், மிக மிகக் கடுமையான எதிர்க்கேள்விகளை மிகக்கடுமையான விமர்சனங்களை நேருக்கு நேராக எதிர்கொண்டார் என்பதையும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் இந்த நவீன இனத்தூய்மைவாதிகள்.

அதே நேரம் அம்பேத்காருக்கு intellectual dilemma இருந்தது என்பதையும் அதன் காரணமாக சிலபல விஷயங்களில் அவர் நிலைப்பாடு காரணமாக இன்னும் பாதிப்புகள் நீங்க வில்லை என்பதையும் பெரியாரிஸ்டுகள் புரிந்து கொண்ட அளவுக்குக் கூட இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

பெரியார் தன்னுடன் பயணிக்கவும் தனக்குப் பிறகு பயணிக்கவும் பெரும் கொள்கைத் தளபதிகள்/வீரர்கள் படையையே உருவாக்கி விட்டுத்தான் மறைந்தார். அவரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் பெரியாரிஸ்டுகளின் ஆயுதங்களாகவும், பெரியாரின் வாழ்வியல் போராட்ட குணத்தையும் தந்துள்ளது.

பெரியார் எல்லாவற்றிலும் மிக உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தது அவரின் எழுத்துக்களில்  மிகத் தெளிவாகப் புரியும்.

ஆனால் எதைத்தான் படிப்பார்களோ இந்த எலைட் தலித் இனத்தூய்மைவாதிகள்? இவர்களின் உளறல்கள் அப்படியே ஆர்எஸ்எஸ் கொள்கையை வெளிப்படுத்தி அசிங்கமாகப் பல்லிளிக்கிறது.

ஆனால் இவர்கள் எல்லாமே குறுகிய கால களைகள். அழிவு நிச்சயம்!

குறிப்பு:

இதெல்லாம் தெரியுமா தலித்திஸ்டுகளே?

*பெரியார் மீது செருப்பு/ மலம் வீசப்பட்டது

*பெரியாரின் மனைவியை அனுப்ப முடியுமா என்று கேட்டது

*பெரியாரை "யாருக்குப் பிறந்தாய்?" என்று கேட்டது

அறிவியல் ரீதியான ஆதாரத்தின் அடிப்படையிலான மருத்துவம் - ஷாலினி

டாக்டர். ஷாலினி
2019-08-01

ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளை ஒன்று கூட்டி AYUSH என்று பெயர் சூட்டுகிறார்கள். இவை எல்லாமே தனி தனி மருத்துவ கேட்பாடும், புரிதலும் சிகிச்சை முறைகளும் கொண்ட வெவ்வேறு துறைகள். உதாரணம்:

* ஆயூர்வேதாவில் வாதம், பித்தம், கபம் என்றே நோய் காரணிகளை சொல்வர்.

* ஹோமியோபதியில் இந்த விளக்கம் இல்லை.

* யுனானி முற்றிலுமாக வேறு புரிதல்களை கொண்டது.

ஆக, அடிப்படையில் வெவ்வேறான இவற்றை ஒரே கூடையில் குவித்து கொண்டு வந்து ஆயுஷ் என்று ஒரு பொது பெயரை வைப்பதில் என்ன லாஜிக் இருக்க முடியும்?

ஒன்றை தவிற...

இவை எல்லாவற்றிகும் ஒரே வில்லன் தான், அது தான் நவீன, அறிவியல் ரீதியான ஆதாரத்தின் அடிப்படையிலான மருத்துவம். Modern scientific Evidence Based Medicine. 

இப்படி நீட்டி முழக்கி முழுசாய் சொன்னால் யாருக்கும் புரிவதில்லை, ஆனால் அதையே அலோபதி, இங்கிலிஷ் வைதியம் என்றால் உடனே பொதுமக்கள் புரிந்துக்கொள்வார்கள்.

உண்மையில் இது இங்கிலிஷ் வைதியம் இல்லை. உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் பயன்படும் மருத்துவ குறிப்புக்களை அராய்ந்து, நிரூபனமானவற்றை மட்டும் எடுத்து தொகுத்த மருத்துவகோர்வை தான் இந்த மருத்துவம்.

இதற்கு சொந்த நாடு, சொந்த மொழி, சொந்த கருத்தென்று எதுவுமே இல்லை. இது உலகம் முழுக்க உள்ள எல்லோருக்குமே பொதுவான ஒரு முறை. எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து, தேருமா, தேறாத என்று பாரபட்சமின்றி உருவாக்கப்பட்ட ஒரு தொகுப்பு, அதை பயிற்றுவிக்கும் ஒரு கல்வி முறை.

ஆக, உண்மையிலே மருத்துவமுறைகளை பிரித்து பார்க்க வேண்டும் என்றால்

(1) நிரூவிக்கப்பட்டது,
(2) நிரூவிக்விக்க படாமல் வெறும் நம்பிக்கையில் பின்பற்றுவது

என்று மட்டுமே இவற்றை பிரிக்க முடியும்.

இதில் எதை நீங்கள் நம்புவீர்கள் என்பது உங்கள் அறிவு திறனுக்கான ஒரு சோதனை தான்.... கண்மூடித்தனமாக, ஆதாரமில்லாததை கூட நீங்கள் நம்புவீர்கள் என்றால் go ahead!

இல்லை, நோய் நாடி, அதன் முதல் நாடி, அப்புறம் அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்படுவீர் என்றாலும் ஓகே தான்....

இயற்கைக்கு இது பற்றி கவலை இல்லை. அதற்கு ஒரே ஒரு விதி தான்: பிழைக்க தெரிந்ததை பிழைக்க விடும். மற்றதை ஏறக்கட்டி இடத்தை காலி செய்யும்...

Evidence Based versus Evidenceless : the choice is now all yours people. There is no Government now to safeguard your health. Our man has let Nature run wild!

இதில் பிழைச்சிக்கிறவன்/ள் பிஸ்தா!!