Sunday, January 20, 2019

இஸ்லாமிய பிரச்சார வரலாறு

Lafees Shaheed
2016-01-21

இஸ்லாமிய பிரச்சார வரலாற்றில் இஹ்வானிய தஃவாவுக்கு என்று ஒரு பிரத்யேக இடம் உள்ளது.

கிலாபா ராஷிதாவின் பின்னரான பரம்பரை ஆட்சிகளின் காலப் பிரிவுகளில் - குறிப்பாக உமையாக்களின் ஆட்சியில் - இஸ்லாமியப் பிரச்சாரம் பற்றிய பொறுப்பில் இருந்து முஸ்லிம் அரசுகள் தம்மை விடுவித்துக் கொண்டன. இதன் பொழுது முஸ்லிம் உம்மாவின் அறிஞர்களே இஸ்லாத்தின் உயிரோட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பையும், முஸ்லிம் சமூகத்தின் கட்டுக்கோப்பை பலப்படுத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர்.

இமாம் அப்துல் காதிர் ஜீலானியின் பிறகு சூபி தரீக்காக்கள் எனும் ஆன்மிக வழியமைப்புகள் உருவாகின. இஸ்லாத்தின் பரம்பலில், சூபி மரபுகளின் பங்களிப்புகள் குறித்து வரலாற்று பதிவுகள் மிகவும் வெளிப்படையானவை மற்றும் இலகுவில் பெற்றுக்  கொள்ளக் கூடியவை.

இந்த தொடரில் ஐரோப்பிய காலனிய யுகத்தில் வந்தவையே வட ஆப்பிரிக்க ஸனூஸி அமைப்பு, சூடானில் அல் மஹ்தி இயக்கம், இந்தியாவின் ஸெய்யித் அஹ்மத் ஷஹீதின் ஜிஹாத் அமைப்பு போன்றன.

மிக வெளிப்படையாகவே ஏகாதிபத்திய எதிர்ப்பினை கொண்டு, முஸ்லிம் உலகினை காலனியத்தின் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கும் திட்டத்தை கொண்டிருந்த ஆயுத போராட்ட அமைப்புகள் இவை.

அல்ஜீரியாவின் அமீர் அப்துல் காதிர் ஜஸாயிரியும், இந்தியாவின்  ஸெய்யித் அஹ்மத் ஷஹீதும், லிபியாவின் அஹ்மத் இப்னு அலி அஸ் - ஸனூஸியும் காலனிய எதிர்ப்பின் முக்கோண ஆளுமைகளாவே ஒரு காலத்தில் திகழ்ந்தனர்.

இந்த வரிசையில் நவீன வரலாற்றின் இஸ்லாமிய பிரசாரத்தின் கொடுமுடியாக தோன்றியவர், இமாம் ஹஸன் அல் பன்னா. காலனியத்துக்கு எதிரான முன்னைய போராட்டங்களின் போதாமையின் இடைவெளியில், ஆயுதப் போராட்டம் வலுவிழந்து சென்ற ஒரு காலப்பகுதியில் தோன்றியதே, இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம்.

இது இந்திய உபகண்டத்தில் மெளலானா அபுல் அஃலா மெளதூதியினால் உருவாக்கப்பட்ட ஜமாஅதே இஸ்லாமி, துருக்கிய இஸ்லாமிய இயக்கங்கள் போன்றவற்றிக்கும் பொருத்தம் என்றாலும் இஹ்வானிய சிந்தனையினதும், அதன் நிறுவனர் ஷெய்க் பன்னாவின் தாக்கத்தின் பரப்பெல்லை விஸ்தீரணம் பிரமாண்டமானது.

இஹ்வானிய அமைப்பும், அதன் சிந்தனையாளர்களும் இல்லாவிடின் முஸ்லிம்களின் தற்கால நிலை இன்னும் அதலபாதாளத்தில் இருக்கும் என்பது தான் உண்மை.

இஸ்லாமிய வரலாறு என்பது தொடர்ந்தும் சலசலத்து ஓடும் நதி. இஸ்லாமிய வரலாற்றில் இயங்கியலை உயிர்ப்புடன் வைத்திருப்பதே, இஸ்லாமிய பிரச்சார முனைவுகளும், எத்தனங்களும்தான். வரலாற்றில் நிகழ்ந்த எந்த பிரச்சார முயற்சியும் முற்றாக காலாவதியாகிப் போன ஒரு விடயம் அல்ல.

சூபி தரீக்காக்களின் பங்களிப்புக்களோ, முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபோ, காலனியத்திற்கு எதிரான ஜிஹாத் அமைப்புகளோ எதுவாக இருந்தாலும் அவை அனைத்தையும் தொகுத்துக் கொண்டே எம்மால் சமகால தஹ்வா முனைவுகளை எடை போட முடியும். ஹஸன் அல் பன்னாவினை வாசிப்பது ஒரு யுகத்தின் வரலாற்றையே அறிந்து கொள்வதற்கு சமமானது, அது அவசியமானதும் கூட.

https://m.facebook.com/story.php?story_fbid=1168968486615245&id=100005063134008

தமிழ்நாட்டில் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை?

A Sivakumar
2019-01-14

தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை?

*காரணம் 1:*

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே உள்ள பிளவுகள்.

*காரணம் 2:*

இடஒதுக்கீடு தவறு, தகுதியும் திறமையும் முக்கியம் என்ற தொடர்ச்சியான தவறான பரப்புரைகள்

*காரணம் 3:*

50% இடஒதுக்கீடு வைத்திருக்கும் BC, MBC கூட்டம் 18% இடஒதுக்கீடு வைத்திருப்பவனை பார்த்து இவனால் தான் தன் வாய்ப்பு பறிபோகிறது என்று நம்பிக்கொண்டிருப்பது

*காரணம் 4:*

தன்னுடைய உண்மையான சுயவரலாறு மறந்து இல்லாத ஆண்ட பெருமை அளப்பரைகளை பேசியதால் பறிபோன இடஒதுக்கீடு உரிமை பற்றி பேச வேண்டிய இளம் தலைமுறை தன் சாதியை பற்றி பெருமை பீத்திக்கொண்டிருப்பதோடு, உயர்சாதியா இருந்தா என்ன? அவங்களும் பாவம் ஏழைகள் தானே ப்ரூ... என்று லூசுத்தனமா பேசிக்கொண்டு அலைவது

*காரணம் 5:*

இந்த 10% இடஒதுக்கீடு தன்னுடைய 69% இடஒதுக்கீட்டை மறைமுகமாக விழுங்கும் என்ற அறிவில்லாமல் இருப்பது.

*காரணம் 6:*

இத்தனை ஆண்டு இடஒதுக்கீட்டின் மூலம் படித்து பொறியாளராகவும், மருத்துவராகவும், பல்வேறு சிறப்பு பட்டங்களும் பெற்ற முதல் தலைமுறை பட்டதாரிகள், வெள்ளைக் காலர் வேலையிலிருப்போர் பெரும்பாலனோர்...தான் ஒருவன் ஒரு குறிப்பிட்ட BC, MBC, SC சாதியில் பிறந்து முன்னேறிவிட்தால் தன்னுடைய மொத்த  சமுதாயமே தன்னைப்போல சிறப்பாக முன்னேறிவிட்டதாக எண்ணுவது, நம்புவது.

*காரணம் 7:*

வர்ணாசிரம படிநிலையில் ஒருவன் எத்தனை கீழான இடத்திலிருந்தாலும் அதையே அவர்களில் பலர் பெருமையாக நினைத்து வீரவன்னியன்டா!, கவுண்டனா கொக்கா?, கோனார்டா! நாடார்டா! முதலியார்டா! தேவன்டா! என்று அறிவில்லாமல் சீறிக்கொண்டிருப்பது. இதில் தாழ்த்தப்பட்டவர்களான ஆதிதிராவிடர்களும் விதிவிலக்கல்ல. 

---

நீங்கள் கவனித்து நோக்கினால், இப்படி இல்லாத பெருமைகளை பேசுவோர் எல்லோரும்:

♦ வீதிக்கு வீதி பிள்ளையார் சிலை வைப்பது, 

♦ தீபாவளிக்கு ஏன் திமுக வாழ்த்துவதில்லை என்று அலறுவது,

♦ ராகவேந்திரா, சாய்பாபா பெருமைகளை பேசுவது,

♦ ஐய்யப்பனுக்கு பெண்களே ஆகாதென்பது,

♦ அமெரிக்காகாரனே சமஸ்கிருதத்தை படிச்சு மிரண்டுட்டான் என்பது,

♦ சிதம்பரம் நடராஜர் சிலை நாசாவிலிருக்கு... நம்ம நடராஜர் ஆடுவது தான் Cosmic Dance என்று கதைவிடுவது,

♦ தான் கோழி, ஆடு சாப்பிடுவது தவறில்லை, அடுத்தவன் மாடு சாப்பிடுவது தவறு என்பது,

♦ தன் உண்மையான சமூக வரலாறு & உணவுப்பழக்கம் தெரியாமல் புரட்டாசி, அமாவாசை, செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி அசைவம் சாப்பிடாமலிருப்பதில் பெருமைக்கொள்வது

♦ ஒரு பக்கம் சிவனுக்கு பிள்ளைக்கறி சமைத்தான் தமிழன் என்று பெருமை பேசுவது, மறுபக்கம் அசைவம் சாப்பிட்டால் கோயிலுக்கு வரமாட்டேன் என்று ஜர்பு காட்டுவது

♦ திராவிடத்தால் வீழ்ந்தோம், நல்லக்கண்ணு நல்லவர், கக்கன் எளிமையானவர், Sagayam4CM, AbdulKalam4PM என்று உளறுவது

♦ உண்மை தமிழன் என்பதில் பெருமைக்கொள்வது,

♦ ஓவர்டோஸ் இந்தியனாக சவுண்ட் விடுவது,

என்ற மேற்சொன்ன பட்டியலில் அடங்கிவிடுபவர்கள் தான்.

---

இவர்களை நொந்து எந்த பயனுமில்லை. இவர்களை அப்படியே விட்டு வேடிக்கை பார்ப்பதே நல்லது. அடுத்து ஒரு மூன்று, நான்கு தலைமுறைகள் வீணாகப்போன தான் என்ன?

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வீணாய் போனவர்கள் ஏதோ இந்த 50 ஆண்டுகளில் தலை நிமர்ந்தார்கள்.

நிமிர்ந்து என்ன பெரிசா கிழிச்சிட்டாங்க?
தன்னிலை மறந்தது தான் மிச்சம்!

சாகட்டும் விடுங்க...

https://m.facebook.com/story.php?story_fbid=10156992176922962&id=581492961

Friday, January 18, 2019

அன்னை ஆயிஷா

Lafees Shaheed
2017-01-19

இறைதூதர் முஹ‌ம்ம‌த் (ஸல்) மறுவிலா முழுமதி. விசுவாசிகளின் அன்னையரான ஆயிஷா (ரழி) அவர்களும் மறுவிலா முழுமதி தான்.

நபிகளாரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பயின்றாலும் தன்னுடைய அதிகப்படியான கேள்விகளின் மூலமும் அதிகம் கற்றுக் கொண்டவர், அன்னை ஆயிஷா.

"இதற்கு என்ன அர்த்தம் இறைத்தூதரே? ' என்ற கேள்வியை நாம் ஆயிஷாவின் ஊடாக அடிக்கடி நபி மரபுகளை பதிந்திருக்கும் தொகுப்புகளில் காண்கிறோம்.

தன்னுடைய இளம் வயது தரும் உத்வேகம் மற்றும் அதனூடான அவசரம் போன்ற காரணங்களினால் நபிகளாரின் மெல்லிய கண்டனங்களையும் ஆயிஷா (ரழி) எதிர் கொள்ள நேரிட்டது.

ஆனால் அந்த கண்டனங்கள் கூட அன்னை ஆயிஷாவின் மகத்துவத்தின் அடையாளம் தான். ஏனெனில் அவர் இறைத்தூதரின் மனைவியாக இருந்தாலும் ரத்தமும் சதையுமான பெண். தன் கணவர் மீது ஆழ்ந்த பிரியம் கொண்ட, காதலில் திளைத்த பெண். நபிகளாரின் ஏனைய மனைவியரின் மீது அவருக்கு கொஞ்சம் பொறாமை இருந்தது. ஆனாலும் அதனை தாண்டிய அன்பும், கண்ணியமும் இருந்தது. நபிகளாரின் ஏனைய மனைவியரின் சிறப்புகள் குறித்த ஹதீஸ்களை அன்னை ஆயிஷா அறிவித்து இருக்கிறார். ஆனாலும் நபிகளாரின் மனதில் அன்னை கதீஜாவுக்கு இருந்த உயர் கண்ணியமும், உன்மத்தம் நிறைந்த காதலும் தனக்கு கடைசி வரையில் சித்திக்காது என்ற ஏக்கமும் ஆயிஷா (ரழி) அவர்களுக்கு இருந்தது. இந்த மானுட பண்பு தான் அன்னை ஆயிஷாவின் விசேஷம். இஸ்லாமிய வரலாறு கூறும் செய்தி ஒன்றே ஒன்றுதான். அது அன்னை ஆயிஷாவை நிகர்த்த அறிவாளுமை உலக வரலாற்றில் இல்லை என்பது..

அன்னை ஆயிஷாவுக்கு கிடைத்தது போன்ற கணவர் ஏனைய சில பெண்களுக்கும் கிடைத்துத் தான் இருக்கிறார். ஆனால் அன்னை ஆயிஷா போன்ற ஒரு மனையாள் நபிகளாரைத் தவிர ஏனைய எந்தக் கணவருக்கும் கிடைக்கவில்லை.

https://www.facebook.com/100005063134008/posts/1167436873435073/

Tuesday, January 15, 2019

பார்பன பிச்சைகள்

விநாயக முருகன்
2019-01-15

முன்குறிப்பு:

சிலருக்கு இந்த பதிவை படித்த பின்னர்  வயிறு, நெஞ்சு என்று சகலமும் எரியும். அதனால் இப்பதிவை தவிர்க்கவும்.       

இன்று காலை எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு இரண்டு பிராமணர்கள் வந்தார்கள். இருவருக்கும் ஐம்பது வயதிருக்கும். வெள்ளை வேட்டி நெற்றி நிறைய திருநீறு , தலையில் குடுமியுடன்  இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பும் நின்று ஏதோ மந்திரங்கள் சொன்னார்கள். அதற்கு அந்த வீட்டில் இருந்தவர்கள் காசு கொடுத்தார்கள்.

எனக்கு வியப்பாக இருந்தது. எங்கள் வீட்டு முன்பும் நின்று மந்திரங்கள் சொன்னார்கள். நான் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றேன். வீட்டுக்குள்ளிருந்து அம்மா வந்து அவர்களிடம் காசு கொடுத்தார்கள்.

பொதுவாக கூர்க்கா, போஸ்ட்மேன்கள், குப்பை சேகரிப்பவர்கள் எங்கள் பகுதிக்கு  பொங்கல் இனாம் வாங்க வருவார்கள். வருடம் முழுக்க அவர்கள் செய்யும் சேவைக்கு நாங்கள் தரும் ஊக்கத்தொகை அது. ஆனால் எந்த வேலையும் செய்யாமல் யாருன்னே தெரியாத இரண்டு பேர் இப்படி வந்து காசு வாங்கிக்கொண்டு போவது  வியப்பாக இருந்தது. 

சற்று தாமதமாகத்தான் தெரிந்தது. இது ஒருவித பிச்சை என்று. சென்னை மாநகரில் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பிச்சைக்காரர்களை சந்திக்கிறேன். ஆனால் இது எனக்கு புதிதாகவும், விநோதமாகவும் இருந்தது. பிச்சைக்காரர்கள் என்றால் நாம் அவர்களிடம் சற்று இரக்கமாகவோ, பரிதாபமாகவோத்தான் காசு போடுவோம் ஒருசிலர் அருவருப்பாக பார்த்து துரத்துவதுமுண்டு.

ஆனால் முதல்முறையாக ஒரு சமூகம் பிச்சைக்காரர்களை மரியாதையாகவும், கவுரமாகவும் நடத்துவதை இன்று காலையில்தான் எங்கள் தெருவில் பார்த்தேன். அந்த இரண்டு பேருக்கும் உடலில் எந்த குறையும் இல்லை. திடமாகவே இருந்தார்கள். உடல் குறையுள்ளவர்கள் கூட சுயமரியாதையுடன் ஏதாவது ஒரு வேலை செய்யும் இந்த காலத்தில் வெறும் இரண்டு மந்திரங்கள் மட்டுமே சொல்லி தெருமுழுக்க பிச்சை எடுத்துக்கொண்டு போவது என்ன நியாயம்?

எனது அம்மாவிடம் சொன்னபோது "வாயில் அடிச்சுக்க, அது பிச்சை இல்லை. தருமம். யாசகம் கேட்டு வரும் பிராமணர்களை துரத்துவது பஞ்சமாபாவம்" - என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று புரிந்தது. பிச்சை எடுத்தாலும் கூட அதுக்கு ஒரு பிறப்பு வேண்டும். இதுவே வேறு ஜாதி ஆள் ஒருத்தர் இப்படி கவுரவப்பிச்சை கேட்டு வந்திருந்தால் கண்டிப்பாக எங்கள் தெரு ஆட்கள் அடித்து விரட்டியிருப்பார்கள்.

வீட்டுக்கு வெளியே வரிசையாக துணிகள் காயவைத்திருந்தோம். காற்றில் பறந்த அந்த துணிகள் மேல் உரசிவிடாமல் கவனமாக சென்றார்கள்.  பொதுவாக பிராமணர்கள் ஜலம்,காசில் மட்டும் தீட்டு பார்க்க மாட்டார்கள் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது.     

பிராமணர்கள் மேல் எனக்கு உள்ள வெறுப்புதான் இந்த பதிவு என்று நினைக்க வேண்டாம்.

சென்னையில் உள்ள பிரபலமான அபிராமிமாலை  இம்மாத இறுதியில் மூடப்போகிறார்கள். அதன் உரிமையாளர் செட்டியார். அவர் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அபிராமிமாலை இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்போவதாகவும்  அங்கு சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமே வீடு விற்கப்போவதாகவும் அறிவிப்பு செய்கிறார்.

செட்டியார்கள் அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள். எப்படி இந்த முடிவு என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தப்பகுதியில் (புரசைவாக்கம்) ஜெயின் சமூக மக்கள் அதிகம் என்று நினைக்கிறேன். அவர்கள் பொதுவாக கூடிவாழ்வார்கள். அநேகமாக அவர்கள் வாங்குவார்கள் என்று நினைத்துதான் இதை யோசித்திருக்கலாம்.

பத்தில் எட்டு வீடுகளை ஜெயின்கள் வாங்கினால் கூட மிச்சம் இரண்டு வீட்டில் சைவ உணவு உண்பவர்களை வைத்துவிட்டால் பிரச்சினை எதுவுமில்லை என்று அவர் யோசித்திருக்கலாம். ஜெயின் சமூகம் என்றதும் இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட தோன்றுகிறது. ஜெயின்களில் ஏழைகள் குறைவு. அப்படி இருந்தாலும் மற்ற ஜெயின்கள் அவர்களுக்கு உதவி செய்து மேலே தூக்கிவிடுவார்கள். கிட்டத்தட்ட செட்டியார்களும் இப்படித்தான்.

இப்படி இந்தியாவில் ஆயிரம் சமூகங்கள் உள்ளன. எல்லா சமூக ஏழைகளும், பிச்சைக்காரர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை. உலகத்தில் இரண்டே வர்க்கம்தான். பணம், பணம் இல்லாதவன் என்று உறுதியாக நம்புபவன் நான். ஆனால் அதிலும் பிரிவுகள் உள்ளன. எல்லா ஜாதி ஏழைகளுக்கும் சிறப்புகவுரம் கிடைப்பதில்லை.          

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்ற கோரிக்கை இப்போது மெல்ல மெல்ல ஒலிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நண்பர் ஊரறிந்த சிந்தனையாளர். எழுத்தாளர் அனந்தகிருஷ்ணன் (முன்பு நடந்த ஒரு பஞ்சாயத்தில்   என்னை பிளாக் செய்துள்ளார் மடையர். இல்லாவிட்டால் அங்கேயே பதிலடி தந்திருப்பேன்) எழுதிய பதிவொன்றின் ஸ்க்ரீன்ஷாட்டை கொண்டுவந்தார்.

அயோக்கியத்தனத்தின்  உச்சக்கட்டம் அந்த பதிவு. பதிவின் சாராம்சம். இடஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கொண்டுவரவேண்டும். முதல் பத்தாண்டுகளுக்கு பிராமணர்களுக்கு விதிவிலக்கு தரவேண்டும். பிறகு மெல்ல சமத்துவம் (!?) வந்தபிறகு அந்த இடஒதுக்கீடை  பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் தரவேண்டும்.

தனக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண் போகணும் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? ஆனால் இவர்களுக்கு கண்போகாது. பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டால் தன்னோட இலைக்கும் வந்துவிடும் இல்லையா?   

இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறி ஐடி நிறுவனங்களில் வேலைபார்க்கும் இளைஞர்களிடம் கூட இந்த தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அது சமூகத்தில்  பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது. அது சலுகை இல்லை. பல நூறாண்டுகால அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமை.

அப்படி என்றால் ஏழைகள் அப்படியே ஏழைகளாக இருக்கவேண்டுமா? அப்படி இல்லை. ஆனால்  கண்டிப்பாக எல்லா ஜாதி ஏழைகளும் ஒன்றில்லை. எல்லா ஏழைகளையும் நாம் பிச்சைக்காரர்கள்போல நடத்துவதில்லை என்ற கசப்பான உண்மையையும்  புரிந்துக்கொள்ள வேண்டும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1999061406796142&id=100000769078139

Sunday, January 13, 2019

இடஒதுக்கீடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பயன் பெறுவது சரியா?

Ravishankar Ayyakkannu
2019-01-13

*கேள்வி:*

இடஒதுக்கீடு மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல தலைமுறைகளாக பயன் பெறுவது சரியா?

அவர்கள் விட்டுக் கொடுத்தால் மற்றவர்களும் பயன் பெறலாமே?

*பதில்:*

ஒரு திருமணத்துக்குச் செல்கிறீர்கள். உங்கள் குடும்பத்துக்கு அமர இருக்கை தரப்படுகிறது.

கூட்டம் நிறைய வருகிறது.

"நீங்கள் தான் ஏற்கனவே உட்கார்ந்து விட்டீர்களே! கொஞ்சம் எழுந்து நின்றால் அடுத்தவர்கள் உட்காரலாமே"

என்று எந்த மாங்கா மடையனாவது கேட்பானா?

இல்லை, அதைக் கேட்டுவிட்டு நீங்கள் தான் சொரணை கேட்டுப் போய் எழுந்து நிற்பீர்களா?

கூட்டம் நிறைய வந்தால் நிறைய நாற்காலி போட வேண்டும்.

அதே போல் இட ஒதுக்கீட்டின் பயன் இன்னும் நிறைய குடும்பங்களுக்குப் போய் சேர வில்லை என்றால்,

இன்னும் நிறைய கல்லூரிகளைக் கட்ட வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

அப்படியே குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் பெருமளவில் பயன்கள் போய் சேரவில்லை என்றால்,

MBC, இசுலாமியர், அருந்ததியர் உள் ஒதுக்கீடு உருவாக்கியது போல் உருவாக்க வேண்டும். இத்தகைய முடிவுகளை ஆய்வு செய்து தரவின் மூலம் எடுக்க வேண்டும்.

இது தான் சரியான தீர்வு.

இந்த அறிவுரை, தியாக அறிவுரை எல்லாம் சூத்தினருக்கும் பஞ்சமனுக்கும் மட்டும் தானா?

எந்த உச்சநீதிமன்ற நீதிபதியாவது டவாலி மகன் நீதிபதி ஆகட்டும் என்று தன் பதவியை விட்டு விலகினாரா?

இத்தனைக்கும் 200-300 குடும்பங்கள் மட்டுமே நூறு ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

1835 வரை இந்த நாட்டில் சூத்திரர்களுக்கு நாற்காலியில் அமரவே உரிமை கிடையாது.

அப்படி உட்கார்ந்தால் அவன் சூத்தில் தழும்பு வருகிற வரை அடி - என்று விஷ்ணு ஸ்ம்ரிதியில் எழுதி வைத்திருக்கிறான்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தான் நாமும்  நாற்காலியில் உட்காரலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது.

இட ஒதுக்கீடு என்பது உங்களுக்கு இடப்பட்ட நாற்காலி.

அது உங்கள் பிறப்புரிமை.

விட்டுத் தராதீர்கள்.

#reservation

https://www.facebook.com/576438568/posts/10158241830193569/

Saturday, January 12, 2019

மன்னிப்பு

மன்னிப்பு

---

(தண்டிக்கும்) சத்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியமானவர்.
-முஹம்மத் நபி(ஸல்)

---

இறைநம்பிக்கை கொண்டவர்களே, கொலை வழக்குகளில் பழிவாங்கல் உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்தவன் சுதந்திர மனிதன் என்றால் அந்தச் சுதந்திரமான மனிதனிடமும், கொலை செய்தவன் அடிமை என்றால் அந்த அடிமையிடமும், கொலை செய்தவள் ஒரு பெண் என்றால் அந்தப் பெண்ணிடமுமே பழிவாங்கப்பட வேண்டும்.

கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்டவரின் உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால், பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும்.

இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் எவராவது வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை உண்டு.

(அல்குர்ஆன் : 2:178)

---

கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் இவ்வசனத்தில் (2:178) கொலை செய்தவனை, கொல்லப்பட்டவனின் வாரிசுகள் மன்னிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கொலை செய்தவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டமாகும். ஆயினும் கொல்லப்பட்டவனின் வாரிசுகள், கொலையாளியை மன்னித்து விட்டால் கொலையாளி மரண தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்.

ஆனால் அதற்கான இழப்பீட்டை கொல்லப்பட்டவனின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும். கொல்லப்பட்ட வனுக்குப் பல வாரிசுகள் இருந்து, ஒரே ஒருவர் மன்னித்தால் கூட கொலை யாளிக்கு மரண தண்டனை கிடையாது. இதனால் தான் "ஏதேனும் மன்னிக் கப்பட்டால்" என்று இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.

கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதைச் சட்டமாகக் கொண்டுள்ள பல நாடுகளில் கொலையாளியை மன்னிக்கும் அதிகாரத்தை நாட்டின் அதிபருக்கு வழங்கியிருப்பதைக் காண்கிறோம்.

ஒருவன் கொல்லப்பட்டால் அதனால் அவனது வாரிசுகள் தான் பாதிக்கப்படுகின்றனர். அதனால் ஏற்படும் கஷ்டங்களும், வேதனையும், வலியும் அவர்களுக்குத் தான் தெரியும். எனவே இந்த மன்னிக்கும் அதிகாரம் பாதிக்கப்பட்டவனிடம் தான் இருக்க வேண்டும்.

ஒருவன் கொல்லப்பட்டதால் எந்தப் பாதிப்பும் அடையாத, நாட்டின் அதிபர்களிடம் இந்த அதிகாரத்தை அளிப்பது மாபெரும் அநீதியாகும். தனது தந்தையைக் கொன்றவனுக்கு மரண தண்டனைதான் அளிக்க வேண்டும் என்று அவனது மகன் நினைக்கும் போது, அதற்கு எதிராக, நாட்டின் அதிபர் கருணை காட்டுவது மிகப் பெரும் அக்கிரமமாகும். இந்த அறிவுப்பூர்வமான, நியாயமான சட்டம் தான் இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது.

---

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலி யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது

கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்...

அதற்கு குற்றம் சாட்டியவர், "இல்லை இவர் நம்மை ஏமாற்றி விட்டு தப்பிக்க பார்க்கிறார்" என்கிறார்...

"யாராவது ஒருவர் இவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், நான் இவர் போய் வர சம்மதிக்கிறேன்" என்றார்...

உடனே, அபு தர் (ரலி) அவர்கள், “அவருக்கு தான் பொறுப்பு” ஏற்பதாக சொல்கிறார்.

அப்போது உமர், "அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்க வேண்டும். நன்கு யோசித்து சொல்லுங்கள்" என அபு தரிடம் சொல்கிறார்...

அபுதரும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார்...

தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது நாள் அஸர் (மாலை) தொழுகைக்கு முன் வந்து விடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடப்படுகிறார்...

இரண்டு நாட்கள் ஓடியது.

மூன்றாவது நாள் வந்தது. அஸர் (மாலை) தொழுகை நடைபெற்றது.

எல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில் குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர்...

நேரம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் சலசலப்பு...

தூரத்தில் ஒரு குதிரை மிகவும் வேகமாக வருகிறது...

தண்டனைக்குரிய நபர் வந்துவிட்டார்.....

உமர் அவரிடம் "நீர் ஏன் திரும்ப வந்தீர்...?? என கேட்கிறார்.

அதற்கு அவர் " முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார், என்று நாளை வரலாறு என்னை பழிக்கும். மேலும், இங்கே தப்பிவிடலாம். நாளை அல்லாஹ்விடம் இதை விட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சினேன்" என்றார்...

அடுத்து அபு தரிடம் "நீங்கள் என்ன தைரியத்தில் அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்...??" என்று கேட்டார் உமர்..

உடனே அபூதர் "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ, என அஞ்சினேன். அதனால் தான் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன்" என்றார்...

பின்னர் உமர் சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும்...

குற்றம் சாட்டியவர், "நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்" என்றார். ஏனென்று கேட்டதற்கு "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என் மீது வருவதை நான் விரும்பவில்லை" என்றார்...

"இத்தகைய நல்ல மனிதர்களுக்கு என்னை ஜனாதிபதியாக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்" என கண்ணீர் மல்க கூறினார் உமர் ரலி - நம்பிக்கையாளர்களின் தலைவர்...