Saturday, May 16, 2020

உன் பிள்ளைக்கு இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு

'ஒரு வேளை சாப்பாட்டுக்கே 
பிரச்சினையா இருக்கு.
இதுல எங்க சாமி
எம்புள்ளைய படிக்க அனுப்ப?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு.
அந்தப் பிள்ளைக்கு
சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு.

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'

"புள்ளைய படிக்க அனுப்பு. 
சீருடையை நான் தரேன்"

'என் புள்ள கால்ல செருப்பில்லாம 
வெயில்ல, மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு.
செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல
வெறும் சோறும், குழம்பும்தானாம்.
அத திண்ணுட்டு
எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'

"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோசமா?"

'புத்தகத்தை காசு கொடுத்து 
வெளியில வாங்க சொல்றாங்க சார். 
என்னால அதெல்லாம் முடியுமா?'

"புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும்
உன் பிள்ளைக்கு இலவசமா தரேன். 
படிக்க மட்டும் அனுப்பு"

'எம்புள்ள அஞ்சாப்பு வரை 
எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க.
அடுத்து ஆறாப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போனும். அது இங்கேர்ந்து 
4-5 மைல் தூரம் இருக்கும். தினமும் பஸ்ல போக காசுக்கு நான் எங்க போவேன்'

"உன் பிள்ளைக்கு இலவச பஸ் பாஸ் 
நான் தரேன். படிக்க அனுப்பு"

'பக்கத்து ஊர்ல என் புள்ள படிக்குது. 
அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் இல்லை. 
எப்படி அனுப்புறது?'

"கவலைப்படாதீங்க. உங்க பிள்ளைக்கு இலவசமா சைக்கிள் தரோம். படிக்க அனுப்புங்க"

'நாங்க மலைக்கிராமங்க. எங்க ஊர்லேர்ந்து தினமும் பிள்ளையை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறது சாத்தியமில்லைங்க'

"உங்களை மாதிரி மக்களுக்குத்தான் 
அரசாங்கம் சார்பில்
உண்டு - உறைவிடப் பள்ளிகளை 
நாங்கள் கட்டியிருக்கோம். 
பிள்ளையை படிக்க அனுப்புங்க. 
தங்குற இடம், சாப்பாடு, படிப்பு அனைத்துக்கும் நாங்க பொறுப்பு"

'வயசுக்கு வந்த பொம்பள புள்ளைய 
எப்படி அந்த மூணு நாளுக்கு 
பள்ளிக்கூடம் அனுப்புறது?
அதான் அந்த நாட்கள்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதில்லை'

"தைரியமா அனுப்புங்க.
கவலைப்படாதீங்க. அந்த நாட்களுக்குத் தேவைப்படும் நாப்கின்களை கொடுக்க
தானியங்கி நாப்கின் மிஷின்களை பள்ளிக்கூடத்தில் அமைச்சிருக்கோம். 
அதுக்காக எல்லாம் புள்ளைய
லீவ் போடச் சொல்லாதீங்க"

'பத்தாவது வரை அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்க வச்சிட்டேன். 
ஏதோ கம்பியூட்டர் படிப்பு வந்துருக்காம்ல, அதுல சேர்த்து விடலாம்னு பார்க்குறேன். எங்க போயி சேர்க்குறதுன்னு தெரியலையே?!'

"எங்கக்கிட்டயே அனுப்புங்க.
Computer Science படிப்பை நாங்களே சொல்லித்தரோம். படிக்கிற புள்ளைக்கு உதவியா இருக்க 
இலவசமாக லேப்டாப்பும் தரோம்"

'என் புள்ளைதாங்க என் வம்சத்துலயே பள்ளிக்கூடம் வரை போய்ப் படிச்சவன். அவனை காலேஜ் படிப்புக்கு அனுப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்? 

"குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு 
கல்லூரிப் படிப்பும் இலவசம். 
தயங்காம படிக்க அனுப்பி வைங்க.
நாங்க பார்த்துக்குறோம்"

'எம் புள்ள நல்லா படிச்சி
டாக்டர் படிப்புக்கோ,
என்ஜினியர் படிப்புக்கோ போகனும்னா
எங்க போயி படிக்கனும்?'

"நம்ம பிள்ளைகள்
எங்கேயும் போக வேணாம்.
அவுங்க டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆகனும்னா நம்ம மாநிலத்துலயே படிக்கலாம். அதுக்கு தேவையான மருத்துவ கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும்
நம்ம அரசு கட்டித்தரும்.
அதுக்கு 12வதுல நல்ல மார்க் எடுத்தாப்போதும்" 

'பொம்பளப்புள்ள 8வதுவரை படிச்சிருக்கு. அது போதும்னு பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திட்டோம்.
சட்டுப்புட்டுனு அடுத்த தை மாசத்துல 
கல்யாணத்தை முடிச்சிடுவோம்'

"பெண் பிள்ளைகளை
முழுமையா படிக்க விடுங்க.
12ம் வகுப்புவரை படித்தால் 
திருமணத்துக்கு 50,000 ரூபாய் பணமும் 
தாலிக்கு 8 கிராம் தங்கக்காசும் அரசாங்கம் சார்பா தரோம். படிக்க அனுப்புங்க"

'நீங்க நல்லாயிருக்கனும் சாமி.
என் வம்சத்துல என் புள்ள தான் முதல் பட்டதாரி. இனி குடும்பம் தழைச்சிடும்'

திடீரென ஒரு வில்லன் வரான்,
"இனி நீங்கல்லாம் எனக்குக் கட்டுப்படனும். நான் சொல்றபடிதான் நீங்கல்லாம் படிக்கனும். நீ என்ன தேர்வு எழுதனும் என நான் தான் சொல்லுவேன்.
அதே மாதிரி இந்தக் கல்லூரிகள் எல்லாம் உனக்கு சொந்தமா இருக்கலாம். ஆனா அதில் யார் யாரை படிக்க வைக்கனும்னு நான்தான் முடிவெடுப்பேன்.
ஒரே நாடு, ஒரே கொள்கை,
ஒரே உணவு என இனி இப்படித்தான். 
இதை ஏற்று நீங்க நடக்கலைனா நீங்கல்லாம் தேசத் துரோகி,
தேச விரோதின்றான்.
அடுத்து என்ன பாடம் சொல்லிக் கொடுக்கனும்னு 
நான்தான் சொல்லப் போறேன்றான்".

இதுதான் அரை நூற்றாண்டுகளாக 
தமிழக அரசுகளின் உழைப்பால் கிடைத்த கல்வி என்னும் சமூகநீதி, 
இந்த வில்லன்களான பாவிகளின் கையில் சிக்கிய வரலாறு. 
இலவசத்தால்தான் தமிழ்நாடு முன்னேறவில்லை என்று  அரைகுறை அரசியல் விமர்சகர்களும், பார்ப்பனிய ஆதிக்க சக்திகளும் கத்துறான்.

வில்லனுங்க ஒரு சைடுலே
இப்படி செய்துக்கிட்டு இருக்கும் போது
இன்னொரு சைடிலே,
"உனக்கு எதுக்குக் கல்வி? 
குலத்தொழிலை பாரு,
உன் தாய் மொழியை விட தெய்வ மொழி சமஸ்கிதம்தான் முக்கியம்ன்னு ஒரு குரூப் வெறியாக கத்துறான். நமது தெய்வீக புலவர் திருவள்ளுவரின் வெண்னிற உடையை காவி உடையாக மாற்றி நெத்தியிலும், உடம்பிலும் பட்டை அடிக்கிறான்.

பிராமணன் மூளை பலம் உள்ளவங்கன்னு சொல்றான். இவர்களின் தந்திரத்தை நீங்க புரியக்கூடாதுன்னு ராமருக்கு கோவில், துழுக்கனுக்கு வேட்டு, 
பாவாடை கிறிஸ்துவன் ரொட்டி பால் பவுடருக்கு விலை போனவங்கன்னு கலவரத்தை உருவாக்குறான்.
இந்த மதக்கலவரத்துக்கு உங்களை அடியாளாக்குறான். அப்புறம் நான் உயர்ந்தவன் தலையில் பொறந்தவன்னுட்டு,
அடுத்தவரை தாழ்த்தி மத்தவங்களை வெச்சு சாதிக்கலவரம் நடக்க அனைத்தையும் செய்யுறான்.

மதுவால் மயங்கி, ஜாதியால் அறிவிழந்து, மதத்தால் மிருகமாகி உங்கள் தலைமுறை வாழ்வை அழிக்காதீர்கள். வஞ்சகர்களை இனம் கண்டு அந்த சக்திகளின் விஷத்தினை முறியடிப்பீர்.

தங்கள் ஆதிக்கத்தை அனைத்து துறைகளி லும் பல நூற்றாண்டுகளாக செய்து வருபவர்கள், தங்கள் வல்லாதிக்கத்தை வலுப்படுத்த தற்போது கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, இன்று மிகவும் ஆக்ரோஷமான வெறியோடு உங்களுக்கெதிராக செயல்படுகின்றனர். இதையெல்லாம் வலிமையாக ஊடக சக்திகள் மூலம் கீழேயுள்ள ஒரே ரகமான இவங்களெல்லாம் நல்லாவே வரலாற்றையே மாற்றி உங்களை பேச விடாமல் கத்துறாங்க! நீங்கள் இதையெல்லாம் நல்லா புரிஞ்சிக்கனும்.

Thiyagarajan Rangaswamy

Monday, April 20, 2020

மாற்று அரசியல் - மானசீகன்

மானசீகன் 
2020-04-20


எல்லா காலங்களிலும் மாற்று அரசியல் உருவாகும். அதுவே ஆரோக்யமானதும் கூட.  திமுக என்பது தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி , சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம்,என்று நாற்பதாண்டுகள் பயணித்து 1949 ல் தான் முழுமை பெற்றது .அதற்குப் பிறகும் கூட  சமூக நல  இயக்கமாகவே 8 ஆண்டுகள் வரை செயல்பட்டு 57 ல்தான் தேர்தல்  அரசியலுக்கு வந்தது.  அதற்குப் பிறகு மெல்ல மெல்ல 15 சீட், 60 சீட்  என வளர்ந்து ஆட்சியைப் பிடித்தது.  ஒரு சித்தாந்தம் முறையாக  ஆட்சிக் கட்டிலில்  அமர்வதற்கு அறுபது ஆண்டுகள் ஆனது  ( சுதந்திரத்திற்கு முன்பு உருவான நீதிக் கட்சி ஆட்சியை நான் சேர்க்கவில்லை ) இதற்கு இடையே பத்திரிக்கை, நூல்கள், மேடை நாடகங்கள், தெருப்பிரச்சாரங்கள் , வாசக சாலைகள், திரைப்படம் , மக்கள் போராட்டங்கள் , இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி என்று  பல்வேறு வகைகளில் மக்களை ஈர்த்தது.  அண்ணாவைப் போல் அறிவாற்றல் படைத்த நூற்றுக்கணக்கான  இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவானார்கள் . ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான  இளைஞர் கூட்டம் அரசியல் விழிப்புணர்வு பெற்றது.  இதற்குப் பெயர்தான் மாற்று அரசியல்.  அதனால்தான் காங்கிரஸிற்கு மாற்றான திமுக வின் மாற்று அரசியலோடு எவரும் போட்டிக்கு வரவில்லை. ஏற்கனவே  இதே மாதிரியான சித்தாந்த வரலாறு கொண்ட கம்யூனிஸ்டுகள் மட்டுமே களத்தில் இருந்தனர். எம்ஜிஆரும் கூட  ஆரம்ப கால காங்கிரஸ்காரர் . பிறகு 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து திராவிட  அரசியலின் முகமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் பிறகே கட்சி தொடங்கினார்.  சினிமா கவர்ச்சியை வைத்து எம்ஜிஆர் அரசியலுக்கு வரவில்லை . திமுக சித்தாந்தத்தை திரையில் பிரபலமாக்கி அதன் மூலமாகவே அரசியல் பிம்பத்தை உருவாக்கினார்.  தேர்தலுக்கு முதல் நாள் கட்சி தொடங்கி சிஎம் ஆகவில்லை.  அந்தக் கட்சியிலும் அண்ணாவின் பெயர் , கொடியில் முகம் ஆகியவற்றை  இடம் பெறச் செய்து தன்னை திராவிடத் தொடர்ச்சியாகவே காட்டிக் கொண்டார். கருணாநிதி எதிர்ப்பைத் தவிர  மற்ற விஷயங்களில் நானும் அதே ஆள்தான் என்கிற மாதிரி நடந்து கொண்டார்.   ஆட்சியிலும் கூட  அண்ணா, கலைஞரின் சமூக நீதிப் பார்வையையே பின்பற்றினார். ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம்  திராவிட  அரசியலின் விபத்து என்றாலும் கூட  2004 தேர்தல் தோல்விக்குப் பிறகு அவர் முழுமையாகத் தன்னை மாற்றிக் கொண்டு திராவிட  அரசியலின் தொடர்ச்சியாகவே செயல்பட்டார்.  அதனால்தான் எம்ஜிஆராலும் , ஜெயலலிதாவாலும் கலைஞருக்கு மாற்றாக  இருக்க முடிந்தது. 

இப்போது மாற்று  என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு  எந்தக் கொள்கையும் கிடையாது.  அவர்கள் நிர்வாகத்தையே ஆட்சி  என்று நம்புகிறார்கள்.  அதற்கெதற்கு அரசியல்வாதிகள் ? ஐஏஎஸ் அதிகாரிகளே ஆண்டு விட்டுப் போவார்களே . நானும் கலைஞர் மாதிரி ஜெயலலிதா மாதிரி பிரபலம்தான்.  அதனால நான் ஸ்ட்ரைட்டா சிஎம் ஆகனும் என்று விரும்புகிறார்கள் .ரஜினி, கமல், விஜய் ஆகியோருக்கு இந்த  ஆசை வெளிப்படையாகவும், வேறு சிலருக்கு மறைமுகமாகவும் இருக்கிறது.  இவர்கள்  எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு ஆரம்ப காலங்களில் இருந்த  அரசியல் பின்ணணியை மறந்து விடுகிறார்கள்.  கொள்கையில்லாமல் விஸ்வரூபம் எடுத்து ஒன்றுமில்லாமல்  ஆகி விட்ட  விஜயகாந்த்தை வசதியாக மறந்து விடுகிறார்கள்.  93 வயது முதியவரான கலைஞர்  மருத்துவமனையில் நினைவிழந்து படுத்திருக்கும் போது உண்ணாமல்,  உறங்காமல் இரவெல்லாம் விழித்திருந்து அந்தத் தொண்டர்களை' எழுந்து வா எழுந்து வா, ' என்று கத்த வைத்தது எது?  ஏன் அது விஜயகாந்திற்கு நிகழவில்லை? என்று யோசித்தாலே போதும்.  விடை கிடைத்து விடும். எனக்குத் தோன்றுவது இதுதான். இந்தப் போலி மாற்று பேசும் நடிகர்கள் எல்லாம் அவர்களுக்கு அவர்களே பிரச்சினையாக இருக்கப் போகிறார்கள் .

இந்தக் கேட்டகிரியில் சீமான் வரமாட்டார்  என்றாலும் அதுவும் நிஜமான மாற்று அரசியல்  அல்ல.  அவர் குறித்து விரிவாக வேறொரு பதிவில் பேசுகிறேன். 

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  மாற்று அரசியல் என்பது ஆள் மாற்றம் இல்லை . சித்தாந்த மாற்றம் . இது தப்புன்னு சொல்வது மட்டும் சித்தாந்தம் இல்லை.  அதைக் குழந்தை கூடச் சொல்லும் . அதற்கு மாற்றான நடைமுறைச் சாத்தியம் கொண்ட( இது ரொம்ப முக்கியம்)  வேறொரு கொள்கையை கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்திக் காட்டுவதுதான் மாற்று . இருப்பதை கண்மூடி நிராகரிப்பது மாற்று அல்ல.  ஒரு சித்தாந்தத்தின் நவீனப்படுத்தலாகவும் மாற்று  அமைய முடியும். காந்தியம் , சோசலிசம், லிபரல் சோசலிசம், கம்யூனிசம், திராவிடம், வலதுசாரி லிபரல் முதலாளித்துவம் ,  கார்ப்பரேட் நவ முதலாளித்துவம் , அம்பேத்கரியம், திராவிடம் ,  ( திராவிடத்தின் பொருளாதாரக் கொள்கைகள் சூழலுக்கேற்ப மாறுபவை ) ,தமிழ் தேசியம் ( முறையான பொருளாதரக் கொள்கைகளை அவர்கள் பேசுவதில்லை)வலதுசாரி இந்துத்துவ  பாசிசம் ( வஹாபியிசம் பொதுமக்களின் செல்வாக்கைப் பெறப்போவதில்லை என்பதால் அதைச் சேர்க்கவில்லை ) ஆகியவற்றில் நான்  என்னவாக  இருக்கிறேன்? அல்லது எந்த சித்தாந்தத்தின் நவீன நீட்சியாக  இருக்கப் போகிறேன் ? என்று சொல்லாமல் ஒருவன் அரசியலில் இறங்கினால்  அவன் அயோக்கியன்  என்றறிக. அந்த சித்தாந்தங்களின் சமூக, பொருளாதார , பண்பாட்டு ரீதியான  கொள்கைகளை அறியாமல் அவற்றை ஆதரிப்பது பிழையான பார்வை.  

ஊழல் ஒழிப்பு என்பது கொள்கையல்ல.  நிர்வாக நடைமுறை.  அதற்கும் கட்சி அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.  ஊழல் உலகெங்கும் உண்டு.  அமெரிக்காவில் நிக்சன் செய்த 'வாட்டர் கேட்'  ஊழல் உலகெங்கும் பேசப்பட்டது. இந்தியாவில் போபர்ஸ், கார்கில் சவப்பெட்டி ஊழல், வியாபம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் மீதும், பிஜேபி மீதும் உண்டு. கமல் ஆதரிக்கும் தீதி மம்தாவே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்தான் . அண்ணாவைத் தோற்கடிக்க காஞ்சிபுரத்தில் ஓட்டுக்குப் பணம் தரப்பட்டது  . ராஜாஜி, பக்தவச்சலம் ஆட்சிகளின் முறைகேடுகளை காமராஜரே பேசியிருக்கிறார் .ஆகவே ஊழல் ஒழிப்பு மட்டுமே கொள்கை என்று பேசுபவர்கள் உங்கள் காதுகளுக்குப் பக்கத்தில் பூவோடு நிற்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் .

கொள்கை சார்ந்த  கட்சிகள் வங்கிகளைப் போல . முறைகேடுகள் நடக்கும்.  ஆனால்  கேள்வி கேட்க  முடியும். கொள்கையில்லாத போலித்தனமான மாற்று அரசியலை முன்வைக்கும் கட்சிகள்  சீட்டுக் கம்பெனியைப் போல . திடீரென்று  ஒருநாள் திவாலாகி ஓடி விடும்.  நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டியதுதான். தேமுதிகவின் தொண்டனைப் போலவே நீங்களும் நிற்க விரும்புகிறீர்களா ?

கடவுளெல்லாம் காப்பாற்ற மாட்டார். உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

கதம்! கதம் !

* மானசீகன்*

Sunday, April 19, 2020

கார்ப்பரேட் சதி எனும் மாயை. - RS Prabhu

RS PRABHU
2017-04-19

கார்ப்பரேட் சதி எனும் மாயை.

சமகால தமிழ்ச் சூழலில் கார்ப்பரேட் சதி என்ற பதம் கீழ்க்கண்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. 

அ) தனக்கு புரியவில்லையென்றால்,
ஆ) தனக்கு கிடைக்காது என்ற பொறாமையால்,
இ) சிலர் சொன்னால் அது சரியாக இருக்கும் என்ற அடிமை சிந்தனையால்,
ஈ) தனக்கிருக்கும் குற்றவுணர்ச்சியை மறைத்துக்கொண்டு சமூக அக்கறையாளனாக காட்டிக்கொள்ள,
உ) மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆயாசத்தினால்,
ஊ) நிதர்சனத்தை சந்திக்கும்போது ஏற்படும் வேதனையினால் 
எ) அரிதாக நிகழும் உண்மையான சதித் திட்ட காரணங்களால்... 

இவற்றைத்தவிர ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும். 

சாதாரணமாக நடைபெறும் வர்த்தகம்  எப்படி நடைபெறுகிறது, அதற்கு சட்டபூர்வமாக என்னென்ன தேவை, அதன் நல்லது கெட்டது என்னென்ன என்பது குறித்த எந்த அறிவும் கிடைக்கப்பெறாத ஏட்டுக்கல்வியின் வெளிப்பாடுதான் பெரும்பாலும் கார்ப்பரேட் சதி என்ற பதத்தை பயன்படுத்தக்  காரணமாக அமைகிறது. 

முதலில் ஒரு வணிகத்தில் ஈடுபடுவதற்கு - எந்த தொழிலாக இருந்ததாலும் -  சட்டபூர்வமாக எந்த மாதிரியான அமைப்பு தேவைப்படுகிறது என்று பார்ப்போம். 
1) Sole proprietor firm தனி உரிமையாளர் அமைப்பு 
2) Partnership firm கூட்டாளிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்பு 
3) Private Limited Company வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம். 

இவற்றைத்தவிர டிரஸ்ட்டு, ஒருநபர் கம்பெனி போன்றவற்றை இப்போது தவிர்த்துவிடலாம். 

ஒரு TIN எண் வணிகவரித்துறையில் வாங்கும்போதே Proprietor firm பதிவாகி விடுகிறது. பார்ட்னர்ஷிப் என்றால் ஒரு deed எழுதி பதிவுசெய்யவேண்டி வரும். Pvt Ltd Company என்றால் இயக்குனர்கள் இணைந்து Articles of Association, Memorandum of Association போன்றவற்றை தயார்செய்து, மேலும் பல ஆவணங்களுடன் கம்பெனி பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டு Incorporate செய்யப்படுகிறது. உரிமையாளர் அல்லது நிறுவனம் ஈடுபடும் தொழில் சார்ந்த உரிமங்கள் வாங்கவேண்டிய கடமைகள் தனி. 

இதில் உரிமையாளர், பார்ட்னர் வகை தொழில்களில் நிறுவன அமைப்புக்கென்று தனி உரிமை கிடையாது. அதனால் உரிமையாளர் அல்லது கூட்டாளிகளின் பான் எண் நேரடியாக பயன்படுத்தப்படுவதோடு, வாங்கப்படும் உடைமைகள், சொத்துக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் நேரடி உரிமையாளராகிறார். உரிமையாளர் இறந்தால் அந்த அமைப்பு முடிவுக்கு வந்துவிடுவதோடு, சொத்துக்கள்/உடைமைகள் அவரது வாரிசுகளிடம் சென்றுவிடும். 

பங்குகளால் வரையறுக்கப்பட்ட கம்பெனி என்பது சட்டத்தால் ஆரம்பிக்கப்பட்ட,  உயிரில்லாத ஆனால் ஒரு குடிமகனுக்குரிய அத்தனை உரிமைகளையும் உடைய அமைப்பு. கம்பெனி தனக்கென்று சொத்துக்களை வாங்க விற்க முடியும், ஒரு குடிமகனுக்கு சட்டத்துக்கு முன்னால் என்னென்ன உரிமைகள் உண்டோ, அத்தனையும் கம்பெனிக்கும் உண்டு. 

இயக்குனர்கள் கம்பெனியை நடத்துவதற்காக ஓர் ஊதியத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள் அல்லது கம்பெனி கொடுக்கிறது என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இயக்குனர் ஒருவர் அல்லது அனைவரும் இறந்தாலும் கம்பெனி இறக்காது. அதனால் கம்பெனி தன்னுடைய பணத்தைக் காரணமில்லாமல் யாருக்கும் கொடுக்காது. அப்படி கொடுத்தால் அதற்கு முறையான ஆவணங்கள் தேவை. இயக்குனராக இருந்து கம்பெனிக்கு கடன் கொடுத்தால் அதை கம்பெனி திரும்பத் தரும்; ஆனால் கம்பெனி பணத்தை இயக்குனரே தேவையில்லாமல் எடுத்தால் சட்டைக்காலரைப் பிடித்து திரும்ப வாங்கிக்கொள்ளும். ஆனால் உரிமையாளர் அமைப்பில் பணத்தை போடலாம்  எடுக்கலாம், இரத்த சொந்தங்களுள் அடிக்கடி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

உரிமையாளர் கடன் வாங்கி கட்டவில்லையென்றால் அவரது ஏனைய சொத்துக்களை இணைத்து கடனை வசூலிக்க வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் கம்பெனிக்கு கடன் கொடுத்தால் கம்பெனியின்  சொத்துக்களைத் தாண்டி இயக்குனர்களது தனிப்பட்ட சொத்துக்களை வங்கிகளால் எடுக்க இயலாது (பித்தலாட்டம் ஏதும் இல்லாமல் உண்மையாகவே தொழில் நொடித்திருந்தால்). 

எந்த மாதிரியான வர்த்தக அமைப்பாக பதிவு செய்யப்பட்டாலும் அதன் பின்னால் இருக்கும் உழைப்பு ஒன்றுதான். உரிமையாளர் என்றால் கடும் உழைப்பாளி என்றோ பிரேவேட் லிமிடெட் இயக்குனர் என்றால் ஏமாற்றுப்பேர்வழி என்றோ எதுவும் இல்லவே இல்லை. 

மக்கள் தங்களது தேவைக்குத்தான் பொருட்களை வாங்குகிறார்கள், நிறுவனம் வளர்வதற்காக அல்ல. அதற்கேற்ற பொருள் தயாரிக்காத நிறுவனம் காணாமல் போகும் என்பதற்கு நோக்கியா அண்மைக்கால உதாரணம். 

இதில் கார்ப்பரேட் சதி என்றெல்லாம் எதுவுமில்லை. தனிநபர் உரிமையாளர் செய்வதை கம்பெனிகளும் செய்தால்தானே வியாபாரத்தில் தாக்குப்பிடிக்க முடியும்? நம் வீட்டுக்கு அருகிலுள்ள பலசரக்கு கடைகளில் பார்த்திருக்கக் கூடும். ஐந்தாறு வாடிக்கையாளர் இருந்தால் ஒவ்வொருவராக  விற்பனையை முடித்து அனுப்பாமல், என்ன வேண்டும் என்று கேட்டு  அனைவருக்கும் ஒவ்வொரு பொருளை எடுத்துவந்து முன்னால் வைத்துவிட்டு, பின்னர் ஒவ்வொருவராக கவனிப்பார்கள். வாடிக்கையாளர்கள்  தனக்குரிய importance அந்த இடத்தில் கிடைத்துவிட்டதாக உணர்ந்து, சிறிதுநேரம் காத்திருப்பதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். 

அந்தநேரத்தில் கடையிலுள்ள சரக்குகளை நோட்டம் விட்டு தனது லிஸ்ட்டில் இல்லாத ஒன்றிரண்டு பொருட்களை வாங்குவதுண்டு. இது ஒரு சாதாரண வியாபார சூட்சுமம். ஒவ்வொரு தொழிலிலும் அதற்கேற்ப உண்டு. இதே வேலையை ரிலையன்ஸ் போன்ற சூப்பர்மார்க்கெட்கள் செய்தால், பில் போடுமிடத்தில் சில பொருட்களை பார்வைக்கு வைத்திருந்தால் அது கார்ப்பரேட் சதி! என்று சமூக ஊடகங்களில் உளறி வைக்கப்படுகிறது. 

அப்புறம், விவசாயத்துக்கு துளியும் தொடர்பில்லாத தொழில்களில் இருப்போரும் தங்களது சமூக அக்கறையைக் காட்டிக்கொள்ள அடிக்கடி இழுக்கும் ஒன்று  மான்சாண்டோ கம்பெனியின் சதி. 

விவசாயிகள் பேஸ்புக்கில் சொல்லப்படுவது மாதிரி அப்பாவி பழம் அல்லர். தங்களுக்கு என்ன தேவை என்பதை நன்றாகவே அறிவார்கள். எப்போது அப்பிராணி வேஷம் போடவேண்டும் என்பதையும் நன்கு அறிவார்கள். கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்ட வாய்களில் ஏதாவது ஒன்று, அவர்களை நம்பி ஆண்டு முழுவதும் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களுக்கு ஏதாவது அரசாங்கம் செய்யவேண்டும் என்று சொல்லி கேட்டதுண்டா? 

விவசாயிகளிடம் வெற்றிகரமாக விற்க இரண்டு விசயங்கள் தேவை. ஒன்று செலவையும், உடலுழைப்பையும் தாறுமாறாக குறைக்கும் மேஜிக் மாதிரியான தொழில்நுட்பம். இரண்டு, ஆட்களின் தேவையை கணிசமாக குறைக்கும்படியான தொழில்நுட்பம். இதில் மான்சான்டோ Bt பருத்தியை சந்தைப்படுத்தி பல இலட்சம் டன் பூச்சிக்கொல்லிகள் மண்ணில் கொட்டப்படுவதைத்  தடுத்ததோடு விவசாயிகளின் செலவை பலமடங்கு குறைத்தது. இரண்டாவது, ரவுண்டப் (கிளைஃபோசேட்) களைக்கொல்லி; கூலி ஆட்களின் தேவையைத் தாறுமாறாக குறைத்ததோடு கோரை, அருகம்புல் போன்ற தொல்லை தரும் களைகளுக்கு தீர்வு தந்தது. அறுவடை இயந்திரங்களும் இதே வகைதான். 

இதனால் சில சமூக பிரச்சினைகளும் ஏற்பட்டன.  காலங்காலமாக பண்ணையார்களிடம் கூலி வேலை செய்துவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வேலையிழந்து நகரங்களுக்கு வேறு தொழில் நோக்கி சென்றனர். அங்கு கட்டட வேலை போன்றவற்றில் அதிக வருமானம் கண்டு, உபரி பணம் மூலமாக வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி பிள்ளைகளைப் படிக்கவைக்கவும் ஆரம்பித்தனர். இவ்வாறாக கொஞ்சம் கொஞ்சமாக விவசாயக் கூலிவேலைகள் கடைநிலைச் சாதியினரால் புறக்கணி்க்கப்படன. 

பண்ணையார்கள் ஆட்களை வைத்து வேலை செய்வதைவிட இயந்திரங்கள், பூச்சிக்கொல்லிகள்,  களைக்கொல்லிகள் மூலம் அதிக இலாபமீட்ட முடியும் என்றதும் அதை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டனர். மற்றபடி விவசாயிகளை மூளைச்சலவை செய்து கம்பெனிகள் இடுபொருட்களை அவர்களது தலையில் கட்டிவிட்டனர் என்பது ஒரு வகையான மேட்டிமைத்தன விஷம பிரச்சாரம். 

ஒருகட்டத்தில் ஊர், உலகம் மாறுகிறது என்பதை உணர்ந்தவர்கள்  அமைதியாக தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றதை ஒதுக்கிவிட்டனர். ஆனால் அந்த பழைய ஜாதி மேட்டிமைத்தனத்தை விட இயலாதவர்கள், அன்று கூப்பிட்டதும் ஓடோடி வந்து காடு கழனியில் வேலை செய்துவிட்டு கொடுத்ததை வாங்கிக்கொண்டு இருந்தவர்கள் இன்று மதிப்பதில்லை என்ற அங்கலாய்ப்பில் அதற்கான காரணத்தைத்  தேடி அதை பழையபடி  நிறுவ முயல்கிறார்கள். 

தமிழ்நாடு முழுவதற்குமாக மான்சான்டோவில் ஒரு பதினைந்து பேர் மாதம் 30000 - 90000 ரூபாய் சம்பளத்தில்  வேலை செய்வார்கள். இவர்களும் பிள்ளைகுட்டிகளைப் பார்த்தநேரம் போக, வாட்சப், பேஸ்புக் பார்த்தது போக எவ்வளவு பெரிய சதியை செய்துவிடமுடியும்?! இவர்களைத் தாண்டி அமெரிக்க அலுவலகத்தில் உட்கார்ந்து ஒரு பட்டனைத் தட்டி தமிழக விவசாயிகளை அடிமைப்படுத்துவது எல்லாம் பேரரசு படத்தில் மட்டுமே சாத்தியம். ஆனானப்பட்ட அமெரிக்க அரசாங்கம் ஒரு ஐபோனை உடைத்து தகவல்களை எடுக்க முடியாமல்  ஆப்பிளிடம் கெஞ்சியது.   இந்த  இலட்சணத்தில் எல்லாவற்றிலும் CIA சதி என்றால் எப்படி நம்புவது! 

மற்றபடி கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என்றால் முகத்தில் கறுப்புத்துணி கட்டி, கோட் சூட் போட்டு, தொப்பியணிந்து இரவுநேரத்தில் மட்டுமே நடமாடி சதிகளை செயல்படுத்துவார்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. ஜான் பெர்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட மாதிரி, No Escape படத்தில் வருவது மாதிரி கார்ப்பரேட் சதிகாரர்கள் சாதாரண உடையில் வந்து நமக்கு பக்கத்தில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டே நம் ஒவ்வொரு அசைவுகளையும் நோட்டம் விட்டு பின்னர் திட்டமிடுவார்கள் என்பதெல்லாம் ஒருவகையான மனப்பிறழ்வின் அறிகுறி மட்டுமே. 

எல்லா கார்ப்பரேட் கம்பெனிகளும் பலரது கடும் உழைப்பில்தான் இயங்குகிறது. ஏதாவது ஓரிரண்டு நிறுவனங்கள் கள்ளத்தனமாக  பயனடைந்தன என்பதற்காக மொத்தமாக சேற்றை வாரி இறைப்பது, சேர் கண்டுபிடித்தது தமிழனை அடிமைப்படுத்தவே, வெஸ்டர்ன் டாய்லட் கண்டுபிடித்தது தமிழனை நோயாளியாக்கவே, ஜட்டி கண்டுபிடித்தது ஆண்மைக்குறைவை உண்டாக்கி மருந்து விற்கவே  என்றெல்லாம் பேசுபவர்கள் மனநல மருத்துவரைப் பார்ப்பதே நல்லது. அவர்கள் தேவையில்லாத மருந்துகளை விற்க முயல்வார்கள் என்றால் வேப்பிலை அடித்து அரைஞாண்கயிற்றில் தாயத்து கட்டிக்கொள்வது நன்மை பயக்கும்.

Monday, April 6, 2020

கொரோனாவுக்கு பின் கொடூரமான காலம் காத்திருக்கிறது

உமாமகேஷ்வரன் பன்னீர்செல்வன்
2020-04-06

ஏப்ரல் 14க்கும் பிறகு வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பாது.

ஏனெனில் இனி இயல்பு நிலை என்று நாம் வைத்திருந்த parameters மொத்தமாக மாறும். Post-corona economic crisis அழுத்தி நம்மை தரையோடு சாய்க்க காத்திருக்கிறது.

இதுவரை உங்களை support செய்து வருவதாக, salary சரியாக கொடுத்து வருவதாக நினைக்கும் நிறுவனங்கள் இனி layoff கந்தாயங்களைத் தொடங்குவார்கள். Downsizing விளையாட்டில் காவு வாங்கப்படவிருக்கும் உயிர்களின் எண்ணிக்கையை ஊகிக்கவே முடியவில்லை.

இதில் பெருத்த அடி வாங்கப்போவது IT, Fossil Fuel , Tourism and its allied services viz Hotels. Renewable energy நொண்டுகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
End of the day, இந்த மொத்த களேபரத்தின் முதல் பலி 30-45 வயதுடைய அந்த மிடில் கிளாஸ் காமன் மேன்.  கையில் காசு, வாயில் தோசை, சேமிப்பு என்பது கானல் நீர், Job security என்பது Pipedream - "என்னேரமும் சோலி முடிக்கப்படாமல " - என திவாலாக காத்திருக்கும் நிறுவனங்கள். இப்படி middle class paupers உருவாகுவார்கள்.

இதர நாடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் கொரோனா தான் மிகப்பெரிய பேரிடர். 2008-09 காலக்கட்டத்தை கடந்த பின்னர் அவர்களது பொருளாதாரம் சீரானது. இங்கே நாம் சூ அடி வாங்கும் இடம் இதுதான். கொரோனாவுக்கு முன்பே நமது பொருளாதாரத்தை சூறையாடிய Man made crisis என்றால் அது demonization மட்டுமே.
Industryயின் small players, startups, cottage Industries, self reliant micro businessசை கொத்தாக கபளீகரம் செய்து முடித்தது. குத்துயிரும் கொலை உயிருமாக இயங்கிய தொழில்களை GST சோலி முடித்துவிட்டது. இப்பொழுது இருப்பதாக காட்டப்படும் economy ஒரு quasi steady state என்றால் அது மிகையே இல்லை. 

Trillion dollar economy என்றால் என்ன, அது சாத்தியமா என்று மெத்தப்படித்த social economist களிடம் கேட்டுப் பாருங்கள். வாயால் சிரிக்க மாட்டார்கள். இப்படி இந்தியா என்ற entity யை மொத்தமாக காலி செய்ய வைரசை விட ஒன்று காத்திருகிறது. அது தான் சீர்கெட்ட பொருளாதாரம். 

1920களில் ஹெர்பட் ஹூவரின் அமெரிக்க நொண்டியதைவிட இந்தியாவின் நொண்டல் ராஜ நொண்டலாக இருக்கும். இதை முதலில் கண்டுகொண்டவர்கள் சங்கிகள் தான். சொன்னால் நம்ம கடினம். ஆனால் அவர்களது modus operandi அப்படித்தான் இருக்கிறது. இதுகாறும் அதிக கடன் வாங்கி நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் எதேச்சையாக வெளியேறவில்லை. பக்கா execution.

இங்கே இருப்பதை வாரி சுருட்டிக்கொண்டு திடமான பொருளாதாரம் கொண்ட ஊரில் அடைக்கலமாதல். எளிமையாக சொல்வதென்றால் British இங்குள்ள் resources எல்லாவற்றையும் அங்கே எடுத்து தங்களை வளமாக்கிக்கொண்டார்களோ அந்த மாதிரி. வெளிநாடுகளில் இவர்கள் இன்வெஸ்ட் செய்வது, கடனை மட்டும் வாராக்கடனாக்கி என்போன்ற உங்களைப் போன்ற குப்பன் சுப்பன் தலையில் வாராக்கடனாக்கி, அய்யா மாஸ்க் பிச்ச போடுங்கைய்யா என்று நம்மை பிச்சையெடுக்க விட்டிருக்கிறார்கள்.

அடுத்த பஞ்சாயத்து 20-30 வயதுடையோர் professional job ல் சேர இயலாத சூழல். DSLR/ Ola driver/ Swiggy delivery boy generation ஒன்று உருவாகியிருப்பது கண்கூடு. 10 வருடம் முன்பு நான் UPSC aspirant என்று சொன்ன கூட்டத்தில் கணிசமான அளவில் இன்று நான் ஒரு Swiggy delivery செய்யும் இஞ்சினியர் என்று சொல்லத்தக்க ஒரு கூட்டமாக ஆகியிருக்கிறது. இவர்களால் கொரோனாவுக்கு பின்னர் ஏற்படப்போகும் அந்த lacunae வை நிரப்ப முடியாது. தாங்க மாட்டார்கள்.

அந்த 30-45 வயதினர் வீட்டுக்கு அனுப்பப்படும்போது அவர்களை சீரும் சிறப்புமாக replace செய்ய இருக்கும் skilled workforce இங்கே இல்லை. மேலும் வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படும் ஆட்களுக்கு இங்கே வந்தாலும் ஒன்றும் கிட்டப்போவதில்லை.

இந்த சூழலைத் தான் நமக்கு கடந்த 6 வருட ஆட்சி கொணர்ந்திருக்கிறது. அச்சே தின் என்பது எப்படி இருக்கும் என்பது முன்னோட்டம் இது. 

Rats feeling the sinking ship என்பதுபோல் , இவர்கள் மூழ்கடித்த இந்திய பொருளாதாரத்தை நரி பேர்லே எழுது, ஓட்டேரி நரி பேர்லே எழுது என்பதுபோல் கொரோனா மேல் எழுதிவிட்டு பதமாக நகர்வார்கள். நகர்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.

கொரோனாவுக்குப் பின் பீடு நடை போடப்போகும் தொழில் என்று எதையுமே சொல்ல முடியாது. ஆகவே சங்கிகள் இன்னும் அதிகமாக தேசபக்தி பாடல்கள் பாடுவார்கள். விளக்கேற்றுவார்கள், பாத்திரம் தட்டுவார்கள், ராமர் அனுமார், ஜடாயு, ஜாம்பவான் கோயில் கட்டுவார்கள். ஆனால் மறந்தும் பொருளாதார மீட்சி குறித்து பேச மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது தெரியாது.

அச்சே தின் பொச்சே தின் என்று கதைவிடலாம். ஆனால் அதை கொண்டு வருவது என்பது குதிரைக் கொம்பு என்று அவர்களுக்குத் தெரியும்.

எரியும் வீட்டில் ஒரு டம்பளர் கொண்டு உங்களை தீயணைக்க சொல்லிவிட்டு, அவர்கள் அடுத்த வீட்டுக்கு தங்கள் பெட்டிப் படுக்கையை தயார் செய்வார்கள்.

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டதில் ஹிட்லர் ரஷியாவை ஆக்கிரமிப்பு செய்தபோது, பின்வாங்கி வெளியேறிய ரஷியப்படை ஒரு காரியம் செய்தது. அவர்கள் வெளியேறும் நகரங்களின் வயல்வெளிகள், வணிக நிலையங்கள், வருவாய் தரும் எல்லாவற்றையும் கொளுத்திவிட்டு கிளம்புவார்கள். ஹிட்லரின் படைகளுக்கு காய்ந்து கருவாடாகிப் போன ஒரு சுடுகாட்டு ஊர் மட்டுமே கிடைக்கும். அதிலிருந்து எதுவும் கிடைக்காமல் வாடி வதங்கி அவர்கள் மடிவார்கள்.

அப்படி இந்தியாவை சூறையாடிவிட்டு நமக்கு சுடுகாட்டை விட்டுவிட்டு கிளம்புவார்கள் சங்கிகள். நமக்கு ஒரு பெரிய சைஸ் திருவோடும், தம்தூண்டு அகல் விளக்கும் மட்டுமே கிடைக்கும். அதை வைத்து கம் எகானமி கம், கம் எகாணமி கம், பாசிடிவ் எகாணமியே வா வா வா, ஜெய் எகாணமி என்று ஒரு 110 வருடம் கத்தினால் போதும். நமக்கு எகாணமி கிடைத்துவிடும்
 நாம் வல்லரசாகிவிடுவோம்.

கொடூரமான காலம் காத்திருக்கிறது. மிக மிக அண்மையில்.

https://m.facebook.com/story.php?story_fbid=10219501275075950&id=1636056806

Saturday, March 14, 2020

வானம் வசப்படும் -

Prabhu RS
2019-03-11

'வானம் வசப்படும்' நாவலை புதுச்சேரி குவர்னர் டுய்ப்லெக்ஸ் வசம் துபாஷியாக (மொழிபெயர்ப்பாளர்) இருந்த ஆனந்தரங்கப்பிள்ளை என்பவரது நாட்குறிப்பின் அடியொட்டி பிரபஞ்சன் எழுதியிருப்பதைப் படிக்கப்படிக்க புதுச்சேரியின் வரலாறும், இந்தியா என்பது சாதிகளின் தொகுப்பு என்பதும் கிறித்தவமும், இசுலாமும் உள்ளே நுழைந்தபிறகு இந்து என்ற மதம் என்ற ஒன்று போலியாகக் கட்டமைக்கப்பட்டது என்பதையும், அந்த காலத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சிபொங்க வாழ்ந்ததாகச் சொல்லப்படுவதும் எப்பேர்ப்பட்ட பொய் என்பதும் தானாகவே விளங்கிக்கொள்ளலாம். 

பிரான்சுக்காரர்கள் வியாபாரத்துக்காக  வந்திருந்தாலும் இங்குள்ள மக்களை கிறித்துவத்துக்கு மாற்றுவதும், நிலங்களின் மீதான அதிகாரத்தைப் பெற்று பிரான்ஸ் அரசருக்கு சமர்ப்பிப்பதும் அடுத்தடுத்த கடமையாக பாவித்திருக்கின்றனர். 

ஊழல் என்பது பிரான்சு குவர்னரில் ஆரம்பித்து கடைநிலை சொல்தாது (சிப்பாய்) வரைக்கும் இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது. இலஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வதும் சாதாரணமாகவே இருந்திருக்கிறது. இரண்டு கப்பல்களில் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு சரக்கு பிடித்து அனுப்பும் குவர்னர், ஒரு கப்பலில் தனக்காக வியாபாரமும் நடத்துகிறார். 

பிராமணர், முதலி, ரெட்டி, செட்டி, நாயக்கர் சாதியினரே பிரான்சு, இங்கிலாந்து ஆட்சி அதிகாரத்தில் முதல்மட்ட பதவிகளை அனுபவித்திருக்கின்றனர். அவர்களது உறவினர்களுக்குப் பதவிகளை வாங்கித்தர கடும் முயற்சி எடுத்துக்கொள்வதோடு மேல்மட்டத்துக்கு அன்பளிப்பு என்றபெயரில் இலஞ்சம் கொடுத்து பதவிகளை வாங்கியே இரண்டு மூன்று தலைமுறைகள் வாழ்ந்திருக்கின்றனர். நில உரிமை, குத்தகை உரிமை, மண்டி, தரகு, வர்த்தகம் என அத்தனை தொழில்களுமே பிறப்பால் கிடைத்திருக்கின்றதே தவிர திறமை என்று சொல்லிக்கொள்வதற்கெல்லாம் எந்த இடமும் அந்தக்காலத்தில் இருந்திருக்கவில்லை. 

குவர்னர் மாளிகையில் கிடைக்கும் பணிகளைப் பெற மேற்கண்ட சாதியினருக்குள் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக பலர் கிறித்துவத்துக்கு மாறியுள்ளனர். அவ்வாறு செய்தால் பதவிகளுக்கு சர்ச் மூலம் சிபாரிசு பிடித்து வேலைக்குச் சேரலாம் என்பதால் சர்ச் என்பது கிறித்துவத்துக்கு மாறியவர்களுக்கு மிக முக்கிய இடமாக இருந்திருக்கிறது. 

ஆதிஷேஷய்யர் தனது பூணூலை அறுத்துவிட்டு துய்ப்லெக்ஸ் துரையின் மனைவி மேடேம்  ழான் அம்மையாரின் ஆசீர்வாத்தில் பாதிரியாரிடம் ஞானஸ்னானம் பெற்று ஜீவப்பிரகாசம் ஐயராக மாறுகிறார். பசு மாமிசம் தின்னும் பரங்கிப்பயல்களின் மதத்துக்கு மாறுவதா என்று அவரைப் புறக்கணிக்கும் குடும்பம் நாளடைவில் தானாகவே வந்து ஒட்டிக்கொள்வதும், மற்ற உறவுமுறைகளுக்கு பதவி வாங்கித்தரச்சொல்லி சிபாரிசு கேட்பதும் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அடித்தட்டு மக்களுக்கு இந்த ஆண்டைகளுக்கு உழைப்பதைத் தவிர வேறெதுவுமில்லை. சைக்கிள் கூட இல்லாத காலம் (1750-கள்). மாட்டுவண்டி, குதிரை, பல்லக்கு மட்டுமே போக்குவரத்து சாதனம் - மேல்சாதிகளுக்கு மட்டும். கீழ்சாதிகளுக்கு நடந்து செல்வது மட்டுமே ஒரே வழி. விவசாயம், நெசவு சார்ந்த தொழில்களைத் தவிர வேறெதுவும் கிடையாது, எங்கு சென்றாலும் சோறு கட்டிக்கொண்டு நடந்தே சென்று சத்திரங்களில் தங்கி இளைப்பாறிச் செல்ல வேண்டும். வழியெங்கும் திருட்டு பயம். இப்படி ஒரு காலகட்டத்தில் நடந்த சம்பவங்களே இந்த நாவல். 

 செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிரெஞ்சுக்காரர்கள் தாக்கும்போது அங்கிருந்து புதர்கள், வயல்கள், சதுப்பு நிலங்களுக்குள் புகுந்து திருவல்லிக்கேணிவரை ஒரு பெண் மழைக்காலத்தில் மகளின் திருமண ஏற்பாட்டுக்கு சென்று வருவதையும், சண்டை உக்கிரமடைந்தவுடன் பல குடும்பங்கள் ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு செங்கழுநீர்ப்பட்டுக்கு அடைக்கலம் தேடிச் செல்வதையெல்லாம் படிக்கும்போது அந்தக்காலத்தில் எங்கே பாலாறும் தேனாறும் ஓடியது என்று தெரியவில்லை. 

சாணார், பறையர், பள்ளர் என கீழ்தட்டு மக்களாக விதிக்கப்பட்டவர்கள் தீண்டாமைக் கொடுமையிலிருந்து ஓரளவு மீட்சியும், வயிற்றுப்பாட்டுக்கு ஆண்டைகளிடம் படும் பாட்டைக்காட்டிலும் கொஞ்சம் நியாயமான உழைப்பின் மூலம் ஈட்டிக்கொள்ளலாம் என்பதற்காக கிறித்தவத்துக்கு மாறியிருக்கின்றனர். ஆனால் முதலி, ரெட்டி, செட்டி, நாயக்கர், பார்ப்பனர் என அனைவரும் கிறித்துவத்துக்குச் சென்று சர்ச்சுக்கு நடுவேயும் சாதி பிரிக்கச் சுவர் வைத்துவிட்டிருக்கின்றனர். 

சர்ச்சில் இருக்கும் தீண்டாமைச் சுவரை உடைத்து அனைவரையும் ஏசுவின் குழந்தைகளாகப் பாவிக்க நினைக்கும் பாதிரிகளும் இருந்திருக்கின்றனர். கும்பனி படைகளைப் பயன்படுத்தித் தமிழர் கோவில்களை இடித்துவிடத் துடித்த பாதிரிகளும் இருந்திருக்கின்றனர். 

1750-களில் கிறித்தவர், துலுக்கர், தமிழர் என்றே மக்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்து என்ற மதமே இருந்திருக்கவில்லை என்பது ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு மூலம் தெரிகிறது. 

மேடேம் ழான் அம்மையாரின் பலத்த ஆதரவுடன் டுய்ப்லெக்ஸ் துரை புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலை வெள்ளைக்கார, காபிரிச் சிப்பாய்களை அனுப்பி உடைத்துப் போடுகிறார். அதைத் தடுக்க தமிழர்கள் பலர் (இந்துக்கள் அல்லர்) குவர்னருக்கு அடுத்தபடியாக இருக்கும் துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளையிடம் முறையிட்டபோதும் அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர் வைணவர் என்பதாலும் தமது பதவிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அடக்கி வாசிக்கிறார்.

தமிழர்களுக்கு சாதிதான் பிரதானம் என்று நாம் நினைக்கும்படி இருந்தாலும், சாதி அமைப்பில் உயர்மட்டத்தில் இருக்கும் பிராமணர்களின் முடிவுக்குக் கட்டுப்பட்டே வந்துள்ளனர். எந்த காரணத்துக்காகவும் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து பிராமணர்கள் சிறு ஓசை கூட எழுப்பாமல் இருப்பதைப் பார்க்கும்போது கப்பல்களில் வந்து இறங்கிய ஒவ்வொரு நாட்டுக்காரனும் இங்கு கோட்டை கட்டிக்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் ஏற்படுவதில்லை. 

ஈசுவரன் கோவிலை இடித்த கையோடு மசூதி ஒன்றையும் இடிக்க குவர்னர் துய்ப்லெக்ஸ் உத்தாரம் (ஆணை) இடுகிறார். இரண்டு செங்கல் விழுந்தவுடன் துலுக்கர் படையின் தலைவன் அப்துல்ரகுமான் தான் குவர்னரைப் பார்த்துவிட்டு வரும்வரை ஒருவரும் மசூதியைத் தொடக்கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்று துய்ப்லெக்ஸ் துரையைப் பேட்டி கண்டு இடிப்பதற்கு காரணம் கேட்க அது குவர்னர் உத்தாரம் என்று சொல்கிறார். 'கடைசித் துலுக்கன் உயிரோடு இருக்கும்வரை அந்த மசூதியை இடிக்க முடியாது, நாங்கள் உயிரை விட்டாவது போராடுவோம்' என்று சொன்னதன் மன உறுதியைக் கண்டு குவர்னர் தனது உத்தரவைத் திரும்பப் பெறுகிறார். 

ஐதராபாத் நிஜாம், ஆற்காட்டு நவாப் பதவிகளை யார் வைத்துக்கொள்வது என்று நடக்கும் சண்டைகள், உள்குத்துகள் காலங்காலமாக நடந்துகொண்டே இருந்திருக்கின்றன. மராத்தியர் ஒருபுறம், ஆலந்துக்காரர்கள் ஒருபுறம் என இந்தியா பிய்த்துத் துண்டாடப்பட்டிருக்கிறது. 

பிராமணர்கள் ஆற்காட்டு நவாப், ஐதராபாத் நிஜாம், பிரெஞ்சு, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அத்துனை பேரிடமும் முதல்மட்ட ஊழியர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். பணிபுரியும் அரசாங்கத்துக்கே ரெண்டகம் விளைவிக்கும் விதமாக எதிரி அரசாங்கத்துக்கு உளவு சொல்பவர்களாகவும், ஆட்சியாளருக்குத் தக்கபடி நிறம் மாறுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர். சுகபோகத்துக்காக யாரையும் காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்களாகவே இருந்திருப்பது வானம் வசப்படும் மூலமாகவும் வெளிப்படுகிறது. 

கிழக்கான் என்ற பள்ளர் சாதி நபர் அந்த ஊர் ஆண்டையிடம் பண்ணை வேலை செய்து வருகிறார். அப்போது ஊரில் மாட்டுத் தோலை உரித்து எடுத்துச்செல்லும் கும்பல் பண்ணையார்  தொழுவத்தில் மாட்டை உரித்து தோலைத் திருடிச்சென்றுவிட்டது. பண்ணையார் கிழக்கானைக் கட்டிவைத்து சாட்டையால் அடித்து வாயில் சாணியைக் கரைத்து ஊற்றி, மூத்திரத்தையும் ஊற்றுவதைப் பார்த்த அவரது எட்டு வயது மகன் ஓடிச்சென்று அடிப்பவனைப் பிடிக்க, அவன் உதைத்துவிடுகிறான். அந்தக் குழந்தை ஒரு கல்லை எடுத்து எரிய அது அடிப்பவன் நெற்றியில் பட்டு காயமாக, அடுத்த சில நிமிடங்களில் கிழக்கானின் குழந்தை கொல்லப்படுகிறது. 

கல்லை எடுத்து குழந்தை அடித்தது  தன்னை அவமானப்படுத்தியதாகக் கருதிய பண்ணையார் கிழக்கானின் மனைவி மாரியாயியை உயிருடன் தீ வைத்து அனைவரின் முன்னிலையில் கொளுத்திவிடுகிறார். மகனையும், மனைவியையும் அடக்கம் செய்த கையோடு பிரெஞ்சுத் துரை ஒருவனிடம் தன்னைத்தானே அடிமையாக விற்றுக்கொண்டு கப்பலேறிவிடும் கிழக்கானின் கனமே 495 பக்க நாவலின் மொத்த கனமுமாகத் தோன்றுகிறது. 

வங்கிகள், கடன் வசதி என எதுவுமே இல்லாததால் காசுகளை மண்ணில் புதைத்து வைப்பது மட்டுமே மக்களுக்குத் தெரிந்த ஒரே சேமிப்புப் பழக்கமாக இருந்திருக்கிறது. 

கோவில்கள்தோறும் தாசிகள் பரம்பரை பரம்பரையாக இருந்துள்ளனர். ஊரில் உள்ள பணக்காரர்கள் சதிர் ஆட்டத்தை வீடுகளிலேயே நடத்துவதுடன் தாசிகளுக்கு செலவிடுவதை ஒரு சமூக அடையாளமாகவும் கருதியிருக்கின்றனர். ஒவ்வொரு முக்கிய அரசாங்க  விழாககளின்போதும் தேவடியாள் ஆட்டம் என நடன  நிகழ்ச்சிகள் தாசிகள் மூலமாகவே நடந்து வந்திருக்கிறதும் நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

இன்று நாம் மக்களாட்சி என்ற பெயரில் எவ்வளவு சுதந்திரத்தை அனுபவிக்கிறோம், ஆட்சியாளர்கள் அதிகாரம் எந்த அளவுக்கு  ஒழுங்குபடுத்தப்பட்டு மக்களுக்காகவே அவர்கள் என்ற அமைப்புமுறை இருக்கிறது, உழைப்புக்கான ஊதியம்,  ஓய்வு, மருத்துவ வசதிகள் என மக்கள் மனிதர்களாக மதிக்கப்படுகின்றனர் என்பதை அறிய வானம் வசப்படும் நாவலை அவசியம் வாசிக்கவேண்டும்.  இரயில் வந்தபிறகுதான் இராஜாவும், குடிமகனும் - முதல் வகுப்பு, மூன்றாம் வகுப்பும் பொருளாதார இடைவெளி மட்டுமே - ஒரே வேகத்தில் பயணிக்க முடிந்தது. 

அறிவியல் மட்டுமே மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும். அந்தக்காலத்தில் என்று ஆரம்பித்து பழைய காலத்துக்கு வாழ்வியலுக்கு நம்மை அழைப்பவர்கள் எல்லோருமே அறிவியலுக்கு எதிரானவர்களாக இருப்பதும், அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாமே கேள்விகளே இல்லாத பண்ணையார், கூலிக்காரன் என்ற அமைப்புக்கு மூளைச்சலவை செய்யும் பிரச்சாரமாகவும், உயர்வு என்பது பிறப்பால் வருவது என்ற கோட்பாட்டைத் திணிப்பதுமேயாகும். 

வாசிக்கவும், பரிசளிக்கவும் ஏற்ற நூல்களுள் 'வானம் வசப்படும்' மிகவும் முக்கியமானது.

https://m.facebook.com/story.php?story_fbid=10156478438893773&id=595298772

Saturday, February 29, 2020

ஓர் அமைப்பை அழிப்பது எப்படி...?

# ஓர் அமைப்பை அழிப்பது எப்படி...?
**************-****************

ஒரு தோழருக்கு இதை அனுப்பினேன்...

படித்துவிட்டு ஆமாங்க இப்படிதாங்க நடந்துக்கிறாங்க என்றார்..

அட மக்கு நீயே அப்படித்தான் நடந்துகிட்டு இருக்க)

01. கூட்டங்களுக்கு அழைப்பு 
வந்தாலும் போககூடாது.போனாலும்
கால தாமதமாகப் போக வேண்டும்.
கூட்டத்தில் கலந்து கொண்டால்
அதிகாரிகளை(பொறுப்பாளர்களை)ப் பற்றியும் இதர உறுப்பினர்களைப் பற்றியும் குறைக்கூற வேண்டும்.

02. எந்தக் கருத்துக்கு ஆதரவாக வாக்களிக்க நேரிடுகிறதோ வெளியில் அதன் எதிர் கருத்திற்க்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.
 
03. எல்லோரது கருத்துக்களையும்
ஏற்றுக்கொள்வதாக கூட்டத்தில்
சொல்ல வேண்டும். ஆனால்
யாருடைய கருத்துக்களையும்
ஏற்றுக்கொள்ளவில்லை என்று வெளியில் சொல்லவேண்டும்.

04. ஏதாவது ஒரு குழுவில் உறுப்பினராக
போட்டால் பொறுப்பேற்கக் கூடாது.
ஏனென்றால் செயலாற்றுவதை விட 
விமர்சனம் செய்வது எளிதானது.
எந்த குழுவிலும் உறுப்பினராகப்
போடவில்லை என்றால் புறக்கணிக்கப்பட்டதாக புலம்ப வேண்டும்.

05. கூட்டத் தலைவர் எதாவது
முக்கியமான பிரச்சனையைப் பற்றி
கருத்தைக் கேட்டால் கருத்து எதுவும்
இல்லை என்று சொல்லவேண்டும்.
ஆனால் கூட்டத்தில் இருந்து வெளியே
வந்ததும் எதை எப்படி செய்யவேண்டும்
என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும்.

06. ஒரு காரியமும் செய்யக்கூடாது
விரும்பி சில பேர் செயலாற்றும்போது
குழு மனப்பான்மையை உருவாக்கிவிட்டால் அந்த அமைப்பே உருப்படாது என்று பேச வேண்டும்.

07. விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டால்
வீண் பண விரயம் என்று சொல்ல வேண்டும். ஏற்பாடு செய்யவில்லை என்றால் அமைப்பே செத்து விட்டதாகக் குறை கூறவேண்டும்.

08. கலைநிகழ்சிகள் நடந்தால்
நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகும்
வரை காத்திருக்க வேண்டும். பிறகு
ஏமாற்றப்பட்டதாகச் சொல்லவேண்டும்.

09. முதன்மை விருந்தினரின்
இருக்கையில் உட்காரச் சொன்னால்
நாசூக்காக மறுக்க வேண்டும்
அப்படி கேட்கப்படவில்லை என்றால் 
புறக்கனிக்கப்பட்டதாகச் சொல்ல வேண்டும்.

10. அமைப்புக்கு செலுத்த வேண்டிய
தொகையை செலுத்தாமல் முடிந்த 
அளவு கால தாமதம் செய்ய வேண்டும்.
முடிந்தால் பணமே கட்டக்கூடாது.

11. எப்போழுதும் விழிப்பாக
இருந்து சிறிய காரணம் கிடைத்தாலும்
பதவி விலகுவதாக அச்சுறுத்தவேண்டும்.
முடிந்தால் நண்பர்களும் இதே போல அச்சுறுத்த தூண்டப்பட வேண்டும்.

12. அமைப்பில் இருந்து வரும்
கடிதங்களுக்கு பதில் எழுதுவதை 
முடிந்த அளவு தாமதம் செய்ய வேண்டும்.
பதிலே எழுதாமல் இருப்பது உத்தமம்.

13. கடைசியாக ஆனால் மிக  முக்கியமான ஒன்று உண்டு. எந்தக் காரணத்தை முன்னிட்டும் பதவியில் இருந்து விலகக் கூடாது. ஏனென்றால் அங்கம் வகிக்கும் அமைப்பை அழிக்கும் வாய்ப்புத் தவறிவிடும்..

- நன்றி திருப்பூர் வாய்ஸ் இதழில் வந்து பின் (2007 ல் பதியம் இதழில் அச்சேற்றியது)

Monday, February 10, 2020

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா?

பெரியார்_காலத்தில்_அவரது செயல்பாட்டுக்கு_எதிர்வினையாற்றி தோற்றுப்_போன_ஆர்எஸ்எஸ்_சங்கிகள். 
தந்தை_பெரியார்_இயக்கத்தைப் பார்த்து_இப்போது_சவால் விடுகிறார்கள்.

#பிள்ளையாரை_முன்பு_உடைச்ச_மாதிரி #இப்ப_உடைக்க_முடியுமா? 
#ராமனை_செருப்பால்_அடிச்ச_மாதிரி #இப்போ_அடிக்க_முடியுமா? 
என்று கேட்கிறார்கள். 
அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள்:

1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து சூத்திரப்பயலே தள்ளிப் போடா என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா?
2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?
3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்வீர்களே! இப்போது அது மாதிரி செய்ய முடியுமா?
4) முன்பு சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?
5) முன்பு தவம் இருந்த சம்பூகனின் சிரம் கொய்தீர்களே! இப்போது அதுபோலச் செய்ய முடியுமா?
6) முன்பு ஏகலைவன் கட்டைவிரல் வாங்கியதுபோல இப்போது கட்டைவிரலை வாங்க முடியுமா?
7) முன்பு தமிழன் கட்டிவைத்த சத்திரத்துச் சாப்பாடு பார்ப்பானுக்கு மட்டும்தான் என்று தின்று கொழுத்தீர்களே! இப்போது அப்படித் தின்று தீர்க்க முடியுமா?
8) முன்பு எங்களைக் காலில் செருப்பணியாதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?
9) முன்பு எங்கள் தோளில் துண்டு போடாதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?
10) முன்பு எங்களைத் தெருவில் நடக்காதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?
11) முன்பு எங்களை முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியாதே என்றீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
12) முன்பு எங்களைக் குடைபிடிக்காதே என்று சொன்னீர்களே! இன்று அப்படிச் சொல்ல முடியுமா?
13) முன்பு ஆர்எஸ்எஸ் தோன்றிய மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கால் பட்டால் தீட்டு என்று அவர்கள் நடந்த தடத்தை அழிக்க விலக்குமாற்றைக் கட்டி நடக்க வைத்தீர்களே! இப்போது அவ்வாறு செய்ய முடியுமா?
14) முன்பு தீண்டத்தகாதவதர் எச்சில் துப்ப கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வைத்தீர்களே! அதுபோல இப்போது செய்ய முடியுமா?
15) திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒவ்வாரு ஜாதிக்காரனும் நம்பூதிரிக்கு இவ்வளவு அடி தூரத்தில்தான் நின்று பேச முடியும் என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?
16) முன்பு எங்கள் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?
17) முன்று எங்கள் தாய்மார்கள் ஜாக்கெட் அணிந்தால் முலைவரி போட்டீர்களே! இன்று அதுபோல் வரி போட முடியுமா?
18) எங்கள் முன்னோர் தலைமுடி வளர்த்தால் முண்டாசு கட்டினால் அதற்கெல்லாம் வரி போடடீர்களே! அதுபோல இப்போது வரி போட முடியுமா?
19) முன்பு எங்கள் பிள்ளைகளுக்கு மங்கலகரமான உயர்வான பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?
20) முன்பு சீரங்கம் போன்ற கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று போர்டு வைத்தீர்களே இப்போது அப்படி வைக்க முடியுமா?
21) முன்பெல்லாம் படிப்பு எங்களுக்கு மட்டும்தான் வரும். உனக்கெல்லாம் வராது என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
22) எங்களுக்கு மட்டும்தான் தகுதி திறமை இருக்கு. உங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
23) முன்பு குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து வண்ணான் பிள்ளை துணி வெளுக்கனும். நாவிதன் பிள்ளை முடிவெட்டனும். என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
24) இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான். இவன் வண்ணான் துணி வெளுக்கிறான். இவர் அய்யர் மிகவும் நல்லவர். பாடம் படிக்கிறார் என்று பாடம் வைத்தீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
25) ராஜாஜி சொன்னதுபோல உங்கள் பிள்ளைகளை உயர் படிப்பு படிக்க வைக்காதீங்க. குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா?
26) அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு முன்பு சொன்னீங்களே! அதுபோல இப்போது சொல்ல முடியுமா?
27) முன்பு கணவனை இழந்த பெண்ணை சதி என்ற பெயரால் உயிரோடு கொளுத்தினீர்களே! அதுபோல இப்போது கொளுத்த முடியுமா?
28) முன்பு எட்டு வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று குழந்தைத் திருமணத்தைச் செய்து வைத்தீர்களே! இன்று அதுபோலச் செய்ய முடியுமா?
29) அன்று விதவைப் பெண்களை வெள்ளைப் புடவை உடுத்தி மூலையில் உட்கார வைத்தீர்களே அதுபோல இன்று செய்ய முடியுமா?
30) முன்பு கன்னிகாதானம் என்ற பெயரால் பெண்ணையே தானமாகப் பெற்றீர்களே! அதுபோல் இன்று செய்ய முடியுமா?
31) தேவதாசி முறையை ஆதரித்த நீங்கள் அதனை மீண்டும் கொண்டுவருவோம் என்று உங்களால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?
32) பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?
33) முன்பு மன்னர்களை ஏமாற்றி ஊர்களையே தானமாகப் பெற்றீர்களே! இன்று அதுபோல் ஏமாற்ற முடியுமா?
34) இவை எதுவும்கூட வேண்டாம் உங்கள் திட்டமான மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?
 #திருமணமான பெண் பார்ப்பானுடன் இரவு தங்கி தோஷம் கழித்த பின்புதான் கணவன் தொடமுடியும் என்று இப்போது சொல்லிப்பாரேன்,,, பிள்ளையாரை கடவுளை உடைக்கமாட்டான் உன்னையே உடைப்பான்,,!

இப்படி அடுக்கடுக்கான வினாக்களை எங்களாலும் தொடுக்க முடியும். இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத் தந்தை பெரியார் போராடியபோது அதற்கு எதிராக பிள்ளையாரையும் ராமனையும் நீங்கள் கொண்டு வந்ததால்தான் பிள்ளையாரை உடைத்தார். ராமன் படத்தை எறித்தார். பெரியாரின் உழைப்பால் பலன் பெற்ற மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

இன்று அதனையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் பக்தியைக் காட்டி மக்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள். அதற்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏமாறப் போவது நீங்கள்தான் என்பது திண்ணம்! பெரியார் பெரும்படை அதனை முறியடிக்கும் எச்சரிக்கை!

பெல் ஆறுமுகம்!