Showing posts with label ஈழமும் திமுகாவும். Show all posts
Showing posts with label ஈழமும் திமுகாவும். Show all posts

Sunday, May 27, 2018

கலைஞர் உண்ணாவிரதம் நாடகமா?

@வரலாறு அறிவோம்

கலைஞர் உண்ணாவிரதம் நாடகமா?

அப்போது என்ன நடந்தது. முழு விபரமும் கீழே.

இலங்கையில் போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே 14.10.2008ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது கலைஞர்
அந்த கூட்டத்தில் ‘போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது கலைஞர்
அந்த தீர்மானத்தை உடனடியாக பிரதமருக்கு அனுப்பியது கலைஞர். அதற்கு பிரதமர் அரசியல் தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவாக எடுத்திடும் என்று உறுதியளித்தார்.
தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்றவர் ஜெயலலிதா.
இலங்கைப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிட்டால், பின்னர் நம் உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடும் வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்றும் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
கலைஞரின்  வேண்டுகோளினை ஏற்று இந்திய பிரதமர் 18.10.08ல் இலங்கை அதிபருடன் பேசினார்.
ஈழப்போரை நிறுத்த திமுக 24.10.08ல் சென்னையில் பிரமாண்டமான மனிதச் சங்கிலி நடத்தியது
26.10.08ல் பிரணாப் சென்னை வந்து கலைஞரை சந்தித்தார்.
12.11.08ல் இலங்கை போர் நிறுத்த தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் முன் மொழிந்து நிறைவேற்றியதும்,
4.12.08ல் அனைத்துக் கட்சி தலைவர்களையும் பிரதமரிடம் அழைத்துச் சென்று பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி பேசச் சொன்னதும்,
அவ்வாறே பிரணாப் சென்று பேசியதும், 27.12.08ல் திமுக பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றியதும்
கலைஞர்தானே
26-4-2009 அன்று விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா.சபை ஆகியவற்றின் கோரிக் கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம். இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும். இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது. இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
26ஆம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்குப் பின் அன்றிரவு முழுவதும் கலைஞர் தூங்கவில்லை. போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பலமுறை தொடர்பு கொண்டார். பிரதமரும் கலைஞரோடு தொடர்பு கொண்டார். வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் கலைஞரை  தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்கள்.
அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தார் கலைஞர். எந்தச் செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் தன் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றார் கலைஞர்.
அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே இந்த வயதிலே செய்து கொண்டு, நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த கலைஞர் தன் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப் படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான் யாருக்கும் கூறாமல், கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், தானாக முடிவெடுத்துச் சென்றார்
அதே நாளில் பகல் 12 மணி அளவில் இலங்கை அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இலங்கை வடக்கில் நடைபெற்று வந்த போர் முடிந்து விட்டது. வடக்கு பகுதியில் இனி கனரக ஆயுதங்களை பயன் படுத்த வேண்டாம் என்று ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்து குண்டு வீசுவதும் நிறுத்தப்படுகிறது. வடக்கில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள். இனி அப்பாவி மக்களை பாதுகாக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இலங்கை அரசு வெளியிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையிலும்; பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நண்பர்களும் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தியதன் அடிப்படையிலும் மதியம் 1 மணி அளவில் கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
28.4.09 தினத்தந்தியின் தலைப்பு: ‘மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார்'
"கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி போரை நிறுத்தி விட்டதாக இலங்கை அறிவிப்பு’'
இதைத் தவிர 2ம் பக்கத்தில் ‘போர் நடவடிக்கை முடிவுக்கு வந்தது; இலங்கை ராணுவம் அறிவிப்பு’ என்ற தலைப்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இலங்கை-புலிகள் போர் பற்றி ஒரு இலங்கை ராணுவ தளத்தின் கட்டுரை கண்ணில் பட்டது. அதிலிருந்து ஒரு excerpt:
"6A day before the Dravida Munnettra Kazhagam (DMK) supremo and Tamil Nadu Chief Minister M Karunanidhi went on a fast on April 27, 2009 at the Anna Memorial in Chennai protesting against the SLAF offensive against the LTTE, Menon called me on my cell phone at 4.30 pm. The Indian team wanted to visit Colombo for urgent talks. I went straight to the President’s office and got his sanction and called Menon back within five minutes. Within six hours of Karunanidhi going on fast we could defuse the crisis in Tamil Nadu by issuing a statement announcing the end of combat operations and shelling inside the ‘No Fire Zone’, which led to the Tamil Nadu Chief Minister ending his fast. This was a classic example of quiet, corrective diplomacy between two officially designated government teams"
அப்படியென்றால் கலைஞர் மட்டும் ஏமாந்தார் என அர்த்தமா?
ஒட்டு மொத்த இந்தியாவையும் இலங்கை ஏமாற்றியது என்பதே உண்மை.
இதெல்லாம் நாடகமா?
கலைஞர் உண்ணாவிரதம்
முடிந்தவுடன் நடேசன் சொன்னது இதுதான்.
"LTTE are very strong and are in brink of victory and this fast by MK is an attempt to prevent their victory "
அப்போது இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களை   ஒப்படைத்தால் புலிகளை பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பதாக தெரிவித்தது. அதை புலிகள் ஏற்கவில்லை.
தாங்கள் போரில் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாகவும் கலைஞர் அதை தடுக்க பார்ப்பதாகவும் நடேசன் சொன்னாரே. அது சரியான பேட்டியா?
விரைவில் பிஜெபி ஆட்சியை பிடிக்கும். தனி ஈழ அறிவிப்பு வரும். அதுவரை காத்திருங்கள் என்று தமிழகத்தில் இருந்து வந்த தகவலைத்தானே புலிகள் நம்பினார்கள்.
2009ல் திமுக மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தால்
இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், திமுக மீது பழியைப் போடுகின்ற செயலே. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாறு அறிந்தவர்கள் ஏற்கமாட்டார்கள்.
போர் உச்சநிலையின் போது மத்திய அரசுக்கான ஆயுள் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க. வெளியேறுவதால் டெல்லியைப் பொறுத்தவரை இருதரப்புக்கும் எந்த நட்டமும் இல்லை.
ஆனா மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் அது காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏக்களின் தயவில்தான் நீடித்துக் கொண்டிருந்தது.
ஈழத்தமிழர் பிரச்சினைக்காக பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, தேர்தலைச் சந்தித்தால் பெரும்பான்மை பெறலாமே என்பீர்கள்.
அப்படியே திமுக ஆட்சியை ராஜினாமா செய்து இழந்திருந்தாலும் போர் நின்றிருக்க வாய்ப்பே இல்லையே.
பதிலாக ஈழத்தாய்  2009 லேயே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார்.
ஆனால் இதற்கு முன் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இரண்டு ஆட்சியை இழந்த கட்சி தி.மு.க. மட்டும்தான்.
ஆனால் மக்கள் திரும்ப திமுகவிற்கு வாக்களித்தனரா?
அதுமாத்திரமல்ல. திமுக ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களையும் நடத்தியுள்ளது
ஆட்சிக்கு வருவதைப் பற்றி கற்பனைகூட செய்துபார்க்காத 1956ம் ஆண்டிலேயே, சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்காக தீர்மானத்தை முன்மொழிந்தது திமுக.
16.4.02ல் தமிழக சட்டசபையில் ‘பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடுவார்களா?
17.1.09ல் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்’ என்று ஜெயலலிதா கூறியதை மறந்தது ஏன்?

பதில் சொல்லுங்க  தமிழ் தேசியவாதிகளே?

A parimalan

https://m.facebook.com/story.php?story_fbid=10216073749892749&id=1119647101

Sunday, May 20, 2018

போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள். இது யாரால் ஏற்பட்டது ?

Sutharsan saravanamuthu
2018-05-17

போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.

இது யாரால் ஏற்பட்டது ?
சகோதர படுகொலைகளும், இரு நாடுகளின்
இருபெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி,
பிரேமதாசா உட்பட, பத்மநாபா
அமிர்தலிங்கம் ,துரையப்பா ,லக்ஸ்மன் கதிர்காமர் , ஆகிய பெரும் தலைவர்களையும்
புலிகள் கொன்றது தான் முள்ளிவாய்க்காலின் அவலத்துக்கு முக்கிய காரணமாகும். மூர்க்கத்தனமாகவும் ,முட்டாள்தனமாகவும் செயல்பட்ட புலிகள் இந்த சகோதரப்படுகொலைகளையும், தலைவர்களையும் கொன்றவுடனே
செத்துவிட்டார்கள்.

சாகசத்தை நம்புபவர்களால்நீண்ட தூரம் பயணிக்க முடியாது. புலிகள் காட்டியதும் ஒருசாகசம்தான், அதனால்தான்
புலன் பெயர்ந்த விசுக்கோத்துகள் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள்,
எதிர்பார்த்தார்கள் ,நம்பினார்கள்,இறுதியில்
முட்டாள்தனமாக ஏமார்ந்தார்கள்.

இவர்கள்தான் தற்போது போர்க்குற்றங்களைப் பற்றி  பேசுகிறார்கள் ,
போர்க் குற்றங்களுக்காக இலங்கை அரசும் இலங்கை ராணுவமும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள் நல்லது. அதேசமயம், மறுபக்கம் புலிகளும் போர்க் குற்றங்களை இழைத்தவர்கள்தான் அவர்களும் தண்டிக்க படவேண்டும். ஒருபுறம், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்த புலித் தலைவர்களைக் கொன்றது குற்றம் இல்லையா என்று இலங்கை ராணுவத்தை நோக்கிக் கேட்பவர்கள் மறுபுறம், பச்சிளம் குழந்தைகளின் கழுத்தில் எல்லாம் சயனைடு குப்பிகளைக் கட்டி ,பெண்களுக்கு வெடிகுண்டுகளை கட்டி அனுப்பிய நீங்கள் உங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றதும் குற்றம்தானே என்று புலி ஆதரவாளர்களை நோக்கிக் கேட்கும் நெஞ்சுரமும் வேண்டும்.

புலிகள் வன்னியில் காலடி வைக்கும் வரை அமைதி பூங்காவாக இருந்தது வன்னி, இராணுவத்தின் வாசனை அறியாத பூமி வன்னி!
ஆனால் வன்னியில் யுத்தம் நடத்தப் பணத்தைக் கொட்டிக் கொடுத்த விசுக்கோத்துகள்
இன்று இனப்படுகொலை என்று அழுகிறார்கள்!
மக்களை வெளியேற அனுமதித்திருந்தால் அவர்கள் முள்ளிவாய்க்காலில் அகப்பட்டிருக்கமாட்டார்கள், முள்ளிவாய்க்காலின் எல்லையில் சென்று ஆயுதங்களைப் போட்டு காலில் வீழ்ந்தீர்களே
அதை ஏன் முதலில் செய்ய முடியாமல் போனது?
இனப்படுகொலை என ஒப்பாரி வைக்கும் புலன்
பெயர்ன்த விசுக்கோத்துகளே
நீங்கள் கொடுத்த நிதியில் நடந்த யுத்தத்தில்தானே மக்கள் கொல்லப்பட்டார்கள்?ஆகவே இனப்படுகொலையில் உங்களுக்கும் பங்கு உன்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் மாத்திரம் ஊரை விட்டு ஓடி வந்து கல்யாணம் கட்டி,பிள்ளைகளை  பெற்று ,நல்ல பாடசாலையில் படிக்கவிட்டு ,
பிறந்தநாள் கொண்டாடி சந்தோசமாக இருக்கவேணும், ஊரில் உள்ளவர்களின் கஷ்டப்பட்டவர்களின் பிள்ளைகள் அடிபட்டு சாக வேணும், முதலில் உங்கட பிள்ளைகளை கொண்டு போய் வன்னியில் ஒரு 5 நிமிடம் செருப்பில்லாமல் வெய்யிலில்
நிற்க சொல்லுங்கள் . அப்போதுதான் உங்களுக்கு 
போராடி இறந்தவர்களின் அருமை தெரியும் .

இப்படியானவர்களுக்கு அழிவுதான் பிடிக்கும். ஆக்கத்துக்குப் பிடிக்காது.  ஆக்கத்துக்கு நிதி கேட்டால் கொடுக்க மாட்டார்கள்
கரும்புலிப் படகு தயாரிக்க  காசு கேட்டால் அள்ளிக் கொடுப்பார்கள்
தாய்நாட்டின்   விமான நிலையத்தையும்   விமானங்களையும்   தாக்கி அழித்தால் விருந்து கொண்டாடி மகிழ்வார்கள் ,இலங்கைக்க்குத் திரும்பிப் போனால் உயிராபத்து  என்று வழக்காடி   விசாக் கிடைத்த  பின்னர்    சிறிலங்கா விமானத்தில்  பயணம் செய்து கட்டுநாயக்காவில் இறங்கி யாழ்ப்பாணம் போய் நல்லூர்த் திருவிழா கொண்டாடுவார்கள்,
இலங்கைக்குப் போட்டு வந்து நாடு அந்த மாதிரி இருக்கெண்டும் சொல்லுவார்கள்.

காணாமல் போனவர்கள் பற்றி பேசவேண்டுமானால் முதலில் புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாமில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் அல்ல ,
முள்ளிவாய்க்கால் முடிவுற்ற இடமே .

சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை அடைத்து வைத்து
அவர்கள் மீது கொடிய சித்திரவதைகளை மேற்கொண்டு
ஏறத்தாழ இரண்டாயிரம் தமிர்களைக் கொலை செய்த புலிகளின் பாரிய சிறைக் கூடம். 28 வருடங்களுக்குப் பின்னர் அந்த இடம். புலிகளால் ஈரக்கமின்றி கொன்று எரிக்கப்பட்ட எமது மக்களுக்கு அங்கு  ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும்.

சர்வாதிகாரி பொல்பொட்டின் சித்திரவதை முகாம்களையே முறியடித்த புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம். அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் 5000 பேர்புலிகளினால் கொன்று புதைக்கப்பட்டனர்.

துணுக்காய் பாசிஸ புலிகளின் வதை முகாம் பொறுப்பாளன் மல்லி.அங்கே புலிகளின் கைதிகளாக இருந்த 4,200 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு அடையாளம் தெரியாது புதைக்கப்பட்டார்கள். இவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான இளைஞர்கள். இவனெல்லாம் மாவீரன் ?

ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமாகத் தொடங்கப்பட்டஅமைப்பு இறுதியில் சொந்த மக்களையே பலி கொண்டமோசமான பயங்கரவாத இயக்கமாகத் தன் கதையை முள்ளிவாய்க்காலில் முடித்துக்கொண்ட வரலாறுதான் புலிகளுடையது.

இன்று புலிகள் அமைப்பு யார்?
உலகின் 40-க்கும்மேற்பட்ட நாடுகளால் தடை விதிக்கப்பட்ட, உலகின் மோசமானபயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக முத்திரை குத்தப்பட்ட, முற்றிலும் வலுவிழந்த, கிட்டதட்ட அழிந்தேவிட்டே ஓர் இயக்கம். சரியாக சொன்னால், பல் பிடுங்கப்பட்ட, அடித்து துவைக்கப்பட்ட, கிட்டத்தட்டசெத்தேவிட்ட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு பாம்பு.இவர்களை ஆதரிப்பவர்கள் ஒன்றில் பயந்தாங்கொள்ளிகள் அல்லது அவர்களிடம் இருந்து எதாவது ஒரு வழியில் ஆதாயம் பெறுபவர்கள்.

இன்று புலிகளின் பெயரால் இயங்குபவர்கள்அவர்களுடைய பினாமிகள்; அவர்கள் ஏன் இன்னமும் புலிகளின்பெயரை உச்சரிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அதில்ஆதாயம் இருக்கிறது.
இன்னுமொரு பிரபாகரனும், இன்னுமொரு முள்ளிவாய்க்காலும் ,இன்னுமொரு சீமானும்
எமக்கு வேண்டாம்.

ஒருதடவை அமிர்தலிங்கம்
பிரபாகரனை பற்றி இப்படி சொன்னார், "தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல..."
எவ்வளவு அனுபவமான வார்த்தைகள்.

அவ்வளவுதான் ஒரு சுபநாளில், பேச்சுக்கு என சென்ற புலிகள் அவர் வீட்டில், அவர் மனைவி கையாலே தேநீர் குடித்து, அமிர்தலிங்கத்தை கொன்று அவர் தாலி அறுத்தனர், பயிற்சி அப்படி

அமிர்தலிங்கத்தின் வார்த்தைகள் சீமானுக்கும் பொருந்தும் " அவரின் தமிழின உணர்வு வரவேற்கதக்கது, ஆனால் எதனை பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற அறிவோ திட்டமோ ஒன்றும் சீமானிடம் 
இல்லை,புலிகள் எவ்வாறு தமிழ் அப்பாவி மக்களை கொண்டு வந்து முள்ளி வாய்க்காலில் விட்டார்களோ , அதை தான்
சீமானும் செய்ய துடிக்கின்றார்.

ஒரு  விடயம் மட்டும் இன்னும் சரியாக புரியவில்லை அதாவது ஏழு கோடி தமிழ் மக்கள் உள்ள தனது சொந்த  நாட்டில் சீமான்
ஈழம் கேட்காமல் வெறும் ஒரு சில இலச்சங்கள்
தமிழர்கள் மாத்திரமே உள்ள அயல் நாடான இலங்கையில் ஈழம் கேட்பதன் மர்மம் என்ன?
இவர் தடை செய்த பயங்கரவாத இயக்கமான புலியின் கொடியையும் ,  பிரபாகரனின் படத்தையும் வைத்துதான் அரசியல் செகின்றார்,
அதனால்தான் இவரால் தமில் நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை,சீமான்  நல்லதொரு பேச்சாளன் அவருடைய பேச்சுக்கள் அபாரம் ஆனால் இலங்கை தமிழர்கள் பற்றி பேசும் போது மிகவும் அபாயகரமாகவுள்ளது.
இது கண்டிப்பாக இன்னுமொரு முள்ளிவாய்க்காலை உருவாக்கும் ஆரம்பமே!

புலன் பெயர்ந்தோர்களே இனிமேலாவது உங்களின் சுயநலமான எண்ணங்களை விட்டுட்டு,
உங்களால் பரிதாப நிலையில் நடுத்தெருவில் நிற்கும் முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்தாவது நீங்கள் செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்யுங்கள் ,உதவி செய்ய முடியாவிட்டால் ஒதுங்கி இருங்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=10216350313615868&id=1395621351

கலைஞரும் மே 18 ம்

Don Ashok
Via Facebook
2018-05-20

"பேய்களுடன் சண்டையிடும்போது கவனமாக இருங்கள்.  நீங்களும் பேயாக மாறக்கூடும்," என்கிற நீட்சேவின் வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நிற்க.

மே மாதம் என்பது லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மாதம்.  யூதர்களைப் போல தமிழர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எந்த பேதமுமின்றி கொன்றழிக்கப்பட்ட மாதம்.  2010 காலகட்டங்களில் மே மாதம் என்பது எத்தகைய தாக்கத்தையும், துக்கத்தையும் நெஞ்சில் கொடுத்துப் போனது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.  2009ல், 2010ல் எத்தனையோ ஈழ ஆதரவு கட்டுரைகளையும், நியாயம் கோரிய கட்டுரைகளையும், போரின் பாதிப்புகளை உணர்த்தும் சிறுகதைகளையும் நெஞ்சு நிறைய கோபத்துடனும், துக்கத்துடனும் எழுதியதை நினைத்துப் பார்க்கிறேன்.  இந்திய ராணுவத்தின் அட்டூழியத்தை ஆவணப்படுத்திய, இந்தியாவில் தடை செய்யப்பட்ட, இந்தியாவில் தேடி தேடி அழிக்கப்பட்ட, 'சாத்தான் படைகள்' எனும் நூலைப் பற்றி ஒரு வெகுஜன பத்திரிக்கையில் முதன்முதலில் ஆவணப்படுத்தியதையும் எண்ணிப் பார்க்கிறேன். 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறோம்?  மனமெங்கும் ஆக்கிரமித்திருந்த அந்த துக்கமும், கோபமும் எப்படி மனதின் இரண்டாம் அடுக்குக்குப் போனது?  போரில் இழந்த உயிர்களுக்காக கண்ணீர் சிந்தப்பட வேண்டிய மாதம் எப்படி ஓவ்வொரு ஆண்டும் போர் விசாரணை மாதமாக, போர் பகுப்பாய்வு மாதமாக மாறியது?

ஆரம்பத்தில் இருந்தே கொலைகாரன் ராஜபக்சேவை விட்டுவிட்டு கலைஞர் பக்கம் மடையைத் திறப்பியது யார்?  கடந்த சில ஆண்டுகளாக ராஜபக்சேவை கிட்டத்தட்ட எல்லோருமே மறந்துவிட்டார்கள்.  ஆனால் யாரெல்லாம் அநியாயமாக கலைஞரை, திமுகவை, திராவிட இயக்கத்தை ஈழப்போரில் காரணகர்த்தாக்கள் ஆக்கினார்களோ அவர்கள் எல்லாம் இன்னும் மறக்காமல் மே18 என்றால் கலைஞரை தூற்றவேண்டும், ஈழ இனப்படுகொலை என்றாலே கலைஞர் பெயர்தான் பந்தாடப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.  ஒருத்தர் சுவரிலும் ராஜபக்சேவைக் காணோம்!!! எல்லோர் சுவரிலும் கலைஞர் இருக்கிறார்!!  அடப்பாவிகளா!! 

தமிழகத்திலேயே மிக அதிகமான ஈழ ஆதரவாளர்கள், புலி ஆதரவாளர்கள் இருந்ததும், இருப்பதும் திமுகவில்தான்.  ஆனால் அதில் பாதிப்பேரை முழுதாக அழக்கூட விடாமல் தங்கள் மேல் விழுந்த கொலைப்பழி துடைக்க நியாயம் பேச வைத்தது யார்?   சுடுகாட்டில் அழுது கொண்டிருந்தவர்களை கோர்ட்டுக்கு கொண்டுவந்தது யார்?

புலிகளைப் பற்றி இன்றளவும் திமுக தலைமையோ, திமுக ஆதரவு தலைவர்களோ விமர்சித்ததே இல்லை.  ஏனெனில் புலிகள் கடைசிவரையில் ஈழத்தோல்விக்கு திமுகவையோ, திராவிட இயக்கத்தையோ காரணம் கூறவில்லை.  இயக்கங்களின் தலைமைகள் அவரவர் சக்தி எல்லைகள் புரிந்தே இருந்தார்கள்.  அவ்வளவு ஏன்?  இலங்கையில் ராஜபக்சே ஆதரவாளர்களும், புலிகளுக்கு எதிரான கொழும்பூ தமிழர்களும் எரித்தது கலைஞர் கொடும்பாவியைத் தானே!  புலிகள் தலைமையகம் செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவுக் கடிதம் அனுப்பி வாழ்த்து தெரிவிக்கவில்லையா!!   எதிரிக்கு அவன் எதிரி யார் என்பது புரிந்திருக்க, நண்பனுக்கும் அவன் நண்பன் யார் எனப் புரிந்திருக்க,  ஆனால் ஈழப்போராட்டத்தை திராவிட இயக்கம்தான் அழித்தது என்பதைப் போல இங்கே கதை பரப்பியது யார்?  நிறுவத்துடிப்பவர் யார்?

விபு தலைவருக்கு வரும் வாரண்டுகள் எந்த முகவரிக்கு தெரியுமா வரும்?  பெரியார் திடலுக்கு!  அந்தப் பெரியாரை, அந்த திராவிட இயக்கத்தை ஈழப்போருக்குப் பின் தமிழின விரோதியாக, தமிழ்தேசியத்தின் எதிரியாக சித்தரித்தது யார்?  எல்லா மே மாதங்களிலும் எங்களை எதிர்வினை மட்டுமே ஆற்றவேண்டிய சூழலுக்கு அடுக்கடுக்கான பொய்களின் மூலம் தள்ளியது யார்?

எல்லாவற்றையும் விடுங்கள்.  சக குழுக்களை அழித்ததில் இருந்து, ராஜீவ் கொலையில் இருந்து,  இறுதிப்போர் வரை புலிகள் மீது எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு.  ஆனால் புலிகளை ஆமைக்கறி, ஏ.கே74, விஜய் படம் பார்ப்பாரு, போர் பயிற்சி கொடுத்தாரு, "நீதான்டா எல்லாமே,"னு சொன்னாரு என்றெல்லாம் பேசி கேலிப்பொருள் ஆக்கியது யார்?  அதைச் சொன்னவர்களும், அதையெல்லாம் நம்பி அள்ளி அள்ளித் தந்தவர்களும் தானே!  

மாவீரர் தின ஊர்வலத்திற்கு ஜெயலலிதா தடை விதித்தால், கல்யாண மண்டபத்தில் பம்மிக்கொள்ளும் ஒரு பயந்தாங்கொள்ளியை, விபு தலைவரின் மறு அவதாரம் எனப் புகழ்ந்து ஒட்டுமொத்த விபுக்களையும் இன்று கேவலப்படுத்துவது யார்?   நாங்கள் வைத்ததெல்லாம் இறுதிப்போரின் மீதான விமர்சனங்கள்.  அதுவும் அதை நாங்களாகத் துவக்கவில்லை.  அந்தச் சூழலுக்குத் தள்ளப்பட்டோம்.   

சுபவீ அய்யா இன்று விபுக்களை விமர்சிக்கும் உடன்பிறப்புகளுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதியிருக்கிறார்.  அதில் உடன்பிறப்புகளின் புலி எதிர்ப்பு, விமர்சனம் இப்போது தேவை இல்லாதது என்றும், அது திமுகவுக்கே கூட தீங்கு விளைவிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.  அதை மதிக்கிறேன் என்றாலும், மாறுபடுகிறேன். 

இன்று  மைய அரசியலில் விபுக்களின் தம்பிகளாக தங்களை முன்னிறுத்துகின்றவர்கள் எப்படியான அரசியலை முன்னிறுத்துகின்றார்கள் என நாம் பார்க்க வேண்டும்.  திராவிட அரசியலை failure modelஆக பொய்ப்பிரச்சாரம் செய்து, அதற்கு மாற்றாக விபு அரசியலை நிறுவ முயற்சிக்கிறார்கள்.  ஆயுத அரசியலே தேவைப்படாத தமிழ்நாட்டில் பிரபாவை பெரியாருக்கும், அண்ணாவுக்கும் மாற்றாக நிறுவ முயற்சிக்கிறார்கள். உயிரோடிருந்தபோது பிரபா என்பவர் திராவிட இயக்கத்தின் தோழமைத் தலைவர் என்பதையே மறைக்கிறார்கள்.   நாம் அதை நினைவூட்டுவதுடன், அந்த இயக்கம் செய்த தவறுகளையும், அது அந்த மக்களுக்கு ஏற்படுத்திய இழப்புகளையும் எந்த இடக்கரடக்கல்களும் இன்றி வெளிப்படையாகப் பேசுவதே நம் இளைஞர்கள் வழிதவறாமல் இருக்கவும், ஆயுதவழிமுறை என்பது அவர்களுக்கு புகட்டப்படுவதைப் போல 'ஹீரோயிசம் அல்ல அழிவு இசம்,' என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவும் உதவும்.  திமுகவுக்கு இதனால் லாபமா, நட்டமா என்கிற கணக்குகளை எல்லாம் தாண்டி, தமிழக அரசியலின் எதிர்காலத்திற்கு இது அத்தியாவசியம் என்பது என் நிலைப்பாடு.

ஈழத்தை வைத்து வசூல் செய்தோமா, கார் வாங்கினோமா, ஃபாரின் டூர் போனோமா என்றில்லாமல், தமிழ்தேசிய முகம் அணிந்துகொண்டு திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பொய்ப்பிரச்சாரமும், பெரியாரிய வேடம் அணிந்துகொண்டு ஓட்டரசியலால் வீழ்ந்தோம் என்று அயோக்கியப் பிரச்சாரமும் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் சிந்தனைத் திருடர்களை அம்பலப்படுத்துவதும், காணாமல் போகச்செய்வதும் தொடர்ந்து தொடர வேண்டும்.  2009க்கு முன்னர் ஒரு ஆள் நன்றாக பேசுகிறார் என்பதற்காக பெரியாரிய தலைவர்கள் எல்லோரும் அவரை மேடை ஏற்றினீர்கள்.  அவரும் பெரியாரை பேசினார்.  பின்னர் திமுகவை திட்டினால் வியாபாரம் கொழிக்கும் என அறிந்து அந்தப்பக்கம் போனார்.  நீங்களும் திமுக எனும் கட்சியைத்தானே திட்டுகிறார் என அமைதியாக இருந்தீர்கள். பின்னர் பெரியாரை திட்டினார்.  திராவிட இயக்கத்தை திட்டினார்.  இப்போது துடிக்கிறீர்கள்.  எங்களுடன் சேர்ந்துகொண்டு இப்போது திட்டுகிறீர்கள்.  இதையே 2009ல் உடனே செய்திருந்தால் இந்த அளவு கூட அந்த ஆளினால் டேமேஜ் ஏற்பட்டிருக்காது.  இப்போது அதேபோல இன்னொரு ஆள் பெரியார் பேரை சொல்லிக்கொண்டு திமுகவை திட்டுகிறார்.  அது பரவாயில்லை.  ஆனால் அண்ணாவை பொய்யாக அவதூறு செய்கிறார். திட்டுகிறார்.  அண்ணாவை பெரியாருக்கு எதிராக நிறுத்துகிறார்.  வழக்கம்போல் நாங்கள் துடிக்கிறோம்.  நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.  வழக்கம்போல் லேட்டாக வருவீர்கள்.  சரி விடுங்கள்.  எண்ணற்ற திராவிட இளைஞர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். 

இந்த மே மாதத்தின் துவக்கத்திலேயே வழக்கம்போல கலைஞர் மீதான, திமுக மீதான வரம்புமீறிய அவதூறுகள் துவங்கிவிட்டது.  கலைஞருக்கு அவர் பேத்தி பாட்டு பாடும் காணொளியில் போய் விவரிக்க இயலா வண்ணம் அசிங்கமாகவும், அவதூறாகவும் திட்டி வைத்திருந்தார்கள் தமிழ்நாஜிக்களும், புலம்பெயர்த்தமிழர்களும்.  ஈழப்போரின் பாவம் ஏற்படுத்திய சாபத்தினால்தான் கலைஞர் இப்படி தவிக்கிறாராம்.  பின் யாருடைய சாபத்தால் விபு தலைவர் இறந்தார்?  யாருடைய சாபத்தால் அத்தனை லட்சம் ஈழத்தமிழர்கள் இறந்தார்கள்?  அறிவென்பது கொஞ்சமாவது வேண்டாமா?  இன்னும் சில இடங்களில் கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்வியை, பிஜேபி வெற்றியைக் கொண்டாடி பல புலம்பெயர்த்தமிழர்கள் ஆடுகிறார்கள்.  இந்த குரூரர்களின் கண்களுக்கு எங்கள் அனிதாவின் உயிரோ, கிருஷ்ணசாமிகளின் உயிரோ தெரிவதே இல்லை.  ஏனெனில் தமிழகத்தமிழர் எப்போதும் இழிபிறவிகள், தாழ்வானவர்கள் தானே!!   நான் புலம்பெயர் தமிழர்களை ஒட்டுமொத்தமாக திட்டுகிறேன் எனப் பல பெரியாரிய, அம்பேத்கரிய புலம்பெயர்த்தமிழர்கள் புலம்பினார்கள்.  வருவோர் போவோரிடம் ஒப்பாரி வைத்திருக்கிறார்கள்.  நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். உங்கள் ஆட்களை கொஞ்சமேணும் நீங்கள் ஆரம்பத்தில் இருந்து துணிச்சலாக கண்டித்திருந்தால் நாங்கள் மே மாதத்திலும் விசாரணை 'mode'யில் திரிய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது!!  ஆனால் நீங்களும் என்ன செய்வீர்கள் பாவம்!!   உங்களுக்குள்ளேயே ஆயிரம் குழுக்கள்.  ஆயிரம் கருத்து வேறுபாடுகள்.  ஆயிரம் சண்டைகள்!!  ஆயிரம் அரசியல்!! இங்கு எப்படி பலருக்கு ஈழம் வியாபாரமோ, உங்களுக்குள்ளும் எண்ணற்றோர் அப்படி இருக்கிறார்கள் என்பது தெரியாமல்
இல்லை!!

ஆனால் நான் அதையெல்லாம் இப்போது விவாதிக்க விரும்பவில்லை.  நான் இறுதியாகச் சொல்வது இதைத்தான். ஈழத்திற்காக கலைஞரைத் திட்டிய அவசரக்குடுக்கை ஆர்வக்கோளாறுகளில் ஒருவனாக, "உங்கள் இறுதி ஊர்வலத்தில் சிந்துவதற்கு எங்கள் கண்களில் கண்ணீரை மீதம் வையுங்கள்," என கலைஞருக்கு கடிதம் எழுதியவன்தான் நானும்.  அப்போது என் கோபத்தினால் அறிவு பின்தங்கி, உணர்வு மட்டும்தான் மேலோங்கி இருந்தது.   ஆனால் இன்று பிண அரசியல் செய்யும் அயோக்கியர்களின் பொய்களுக்கு எதிர்வினை ஆற்றி ஆற்றி எதோ ஒரு இடத்தில் அந்த உணர்வு பின்னுக்குப்போய், அறிவு முன்னுக்கு நிற்கிறது.  அதுவும் மே மாதத்திலும் அதையே செய்துகொண்டிருப்பது எனக்கு ஒருவகையில் வேதனையைத் தருகிறது.  ஒரு மனிதனாக அவமானத்தைத் தருகிறது.   

இந்த மாதத்தின் துவக்கத்தில், வழமையான கோபத்தில் எதிர்வினையாற்றுவதற்காக நானும் சில மீம்களைப் போட்டேன்.  சில நிமிடங்களிலேயே உறுத்த, அவற்றுள் சிலவற்றை நீக்கியும் விட்டேன்.  இனியும் தொடர்ந்து பேய்களுடன் சண்டையிட்டு  பேயாக மாற நான் விரும்பவில்லை.  சாவு வீட்டில் நாகரீகமில்லாமல் தர்க்க நியாயங்களை பேசுகிறவனாக காலம் நம்மை நிறுத்தியதை எண்ணி வெட்கிப்போகிறேன். 

எனவே நான் சுபவீ அய்யாவின் கடிதத்தில் உள்ள வேண்டுகோளை மே மாதம் மட்டும் ஏற்கிறேன்.  ஈழம் சார்ந்த எந்த அரசியல் எதிர்வினையையும் நான் இனப்படுகொலை மாதமான, 'மே மாதத்தில்,' செய்யவே போவதில்லை என உறுதியாக முடிவெடுத்திருக்கிறேன்!   மே மாதத்தில் மட்டும்!  அதுதான் இறந்துபோன மக்களுக்குச் செய்யும் நேர்மையான அஞ்சலியாக இருக்கும். 

இனி நெற்றிக்காசு திருடர்களை விரட்டும் கடமை உணர்ச்சியில், நம் வீட்டில் விழுந்த இழவை மறக்கபோவதில்லை.

மே மாதம் இனப்படுகொலை மாதம்.   "இனப்படுகொலையாளன் ராஜபக்சே எங்கே?"  என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுப்பார்க்க வேண்டும்.   நாம் எங்கு தவறவிட்டோம் எனப் புரியும். தமிழர்களுக்கான நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ, செத்துப்போனவர்களையும், கொன்றவனையும் மட்டுமே மே மாதத்தில் நினைத்திருப்போம்.   அரசியல்களை மறந்து.  கடந்து.

-அசோக்.R (டான் அசோக்)
மே 20, 2018.

குறிப்பு:  நான் விபு என்றும் பிரபா என்றும் எழுதுவது மரியாதைக் குறைவுக்காக இல்லை.  முழு பெயரைப் போட்டால் keyword வைத்து முகநூல் பதிவை தூக்கி விடுகிறது.  அதை தவிர்க்கவே.

https://m.facebook.com/story.php?story_fbid=1704475679660390&id=815716175203016