Showing posts with label குடும்பநலன். Show all posts
Showing posts with label குடும்பநலன். Show all posts

Tuesday, April 17, 2018

பால்பண்ணை

Vijay bhaskarvijay
via Facebook
2015-Jul-11

பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’பால்பண்ணை’ என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள்.

அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள்.

அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.

அதற்கும் முன் சிறுவயதில் ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்.

ஒரு விநாடி இப்படின்னா என்ன? என்று தோன்றி பின் மறந்த காட்சி அது.

பொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் எல்லாம் தன் விழிகளை பதிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.

ஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷ்யங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது.ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது.

சமீபத்தில் அமரந்தா எழுதிய ’பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது.

கதைச் சுருக்கம் வருமாறு.

மத்திய தர வர்க்கத்துப் பெண்ணுக்கு,வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்கு ‘பால்கட்டுதல்’ என்றப் பிரச்சனை இருக்கிறது.

மார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம்.

மிக அதிகமாக கட்டிக்கொள்ள டாக்டரிடம் போகிறாள்.நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார். வலியால் துடிக்கிறாள் இவள்.

இவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயைவைத்து பாலை உறிஞ்சி துப்புகிறார்.

பின் பெண்ணின் முலைகளை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக் கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார்.

அந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பாலைக் கொடுக்கும் முன் அதை சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது.

காலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்கு பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக் கொண்டு கெட்டுப் போய் விடுகின்றது.

இவளுக்கு குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும் போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது.

மறுநாளில் இருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பை பிதுக்கி அவ்வப்போது பாலை எடுக்கிறாள்.

இப்படியாக பால்கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார்.

ஒருநாள் மாலை வீடு செல்லும் போது கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சிக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி.அவனிடம் காப்பிக் குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள்.

ஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தைக் குடிக்க ஆசுவாசப்படுகிறாள்.

ஆனால் கணவனோ உள்ளே போ உள்ளேப் போ போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.

“வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ’ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி கடுத்து வருகிறான்.

அவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.

இப்படியாகக் கதை முடிகிறது.

இதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா என்று எனக்குத் தெரிந்தது. மனவியிடம் கேட்டேன்.

“ஆமா அது எவ்வளவு பெரிய கொடுமை” என்று நிறையச் சொன்னார். நான் அவளிடம் கேட்டேன் “இது எனக்குத் தெரியாதே” என்றேன்.

“இதெல்லாம் சொல்லிட்டா இருப்பாங்க” என்ற பதில் கிடைத்தது.

அம்மாவுக்கு போன் போட்டுக் கேட்டேன்.

அம்மா இந்தக் கதையை ஆமோதித்து, பால் கட்டுதல் என்பது சில பெண்களுக்கு கொடுமையான விசயம் என்று விளக்கினார்.

நான் அம்மாவிடம் கேட்டேன் “ஏம்மா இத்தன வருஷம் உங்க கிட்ட ஃப்ரெண்டா பேசியிருக்கேன். இந்த விஷயத்த எனக்கு சொல்லவே இல்லை” என்றேன்.

யாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும்.

அப்படி ஆணுக்குப் பெண்ணின் வலிதெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும்.

என்னைக் கேட்டால் பிளஸ் டூ தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்தாவில் “பால் கட்டு” சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன்.

ஒருவேளை இக்கதையைப் படித்தால்

“பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி” என்றெல்லாம் மார்பகங்களை பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள்.

அந்த கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம்.

பண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வரவேண்டும்.

விவாதிக்கப்பட வேண்டும்.

---

Hansa Hansa
via Facebook
2015-Jul-11

குழந்தை முதல் முறை 50மிலி குடித்தால் அடுத்த முறை 50.10மிலி பால் தயாராகும். அந்த முறை குழந்தை (வளர்வதால் தேவை இருக்கும்) 50.10மிலி குடித்தால் பிரச்சினை இல்லை. மாறாக 50மிலி மட்டும் குடித்தால் 0.10மிலி தேங்கும். இப்படி தேங்குவதை உறிஞ்சி (ஆர்டிபிசியலாக) எடுத்தால்.

அம்மாவின் உடம்பு அத்தனையையும் குழந்தை குடித்ததாக நினைத்து அடுத்த முறை 50.20மிலி (தேவை இருக்கு போல என நினைத்து) சுரக்கும்.

இந்த நிலை தொடர்ந்தால் அலுவலகத்தில் கூட பால் தானாக வெளியேறி உடையை நனைக்கும்.

ஒரு முறை பஸ்ஸில் ஒரு பெண் போலீஸ் தண்ணீர் குடிப்பது போல நீரை சட்டையில் ஊற்றிக்கொண்டார், கண்ணீர் முகத்துடன்.

சீட் கொடுக்காமல் ஒரு பெண் இருந்தால் அதை புரிந்து கொள்ள வேண்டும்

Vijay Bhaskarvijay
Via Facebook

சில பெண்கள் பஸ்ஸில் பக்கத்தில் சீட் இருந்தாலும் கொடுக்க மாட்டார்கள்.

மத்திமமாக அமர்ந்து கொள்வார்கள்.

அன்று பஸ்ஸில் நின்று கொண்டிருக்கும் பொது, அமர்திருக்கும் பெண்ணின் கையில் இருந்த மூன்று வயதுக்குள்ளான சிறுவன் என்னைப் பார்த்து சிரித்தான்.

பொதுவாக என் முகம் இறுக்கமாய் இருப்பதால் எந்த சிறு குழந்தையும் என்னைப் பார்த்து சிரிக்காது. ஆனால் என் கண்களும் குழந்தையின்  கண்களும் லாக் ஆகிவிடும்.

இவனோ என்னைப் பார்த்து சிரித்தான்.

அவனை இம்பிரஸ் செய்ய வேண்டும் என்று என் கையில் இருக்கும் நோட் பேப்பரை கிழித்து ஒரு கப்பல் செய்தேன்.

அதை திடீரென அக்குழந்தையிடம் நீட்டினேன். அவன் உற்சாகத்தில் ஓசை கொடுத்த படியே வாங்கிக்கொண்டான்.

ஆனால் அந்த இளம் அம்மா அதை ரசிக்கவில்லை.

என்னை ஒரு மாதிரி சந்தேகமாகவே பார்த்தார்.

சிரிக்கவில்லை. இறுக்கமாய்  இருந்தார்.

நல்ல வேலையாக நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததால் இறங்கி சமாளித்தேன்.

இப்படி சமூகம்  நல்ல விதமாக இருந்தாலும், சிடு சிடு என்று இருக்கும் பெண்களை எப்போதும் பார்க்கலாம்.

அதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது.

அன்று என் மனைவி ஒரு கதை சொன்னார்.

பள்ளியில் ஒரு எட்டு வயது பெண் குழந்தையின் பாட்டி இதை சொன்னாராம்.

அந்த 'லோயர் மிடில் கிளாஸ் வயதானப் பெண்' பேத்தியை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் போயிருக்கிறார்.

அங்கே வயதில் மூத்த நரை மனிதர் அன்போடு தன் பக்கத்தில் அமருமாறு அச்சிறுமியை அழைத்திருக்கிறார்.

சிறுமி போகாமல் நிற்க

பாட்டி "பராவயில்லை உக்காரும்மா" என்று சொல்லி உட்கார வைத்து இருக்கிறார்.

கொஞ்ச நேரத்தில் பேத்தி அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். பாட்டியிடம் எதுவும் சொல்ல வில்லை.

அன்று முழுவதும் வீட்டில் யாருடனும் பேசவில்லை.

மறுநாள் காலையில் பள்ளி செல்ல மாட்டேன் என்று சொல்லி இருக்கிறாள்.

விசாரிக்கும் பொது "பாட்டி சொன்னதாலதான் அங்க உக்கார்ந்தேன் ஆனா அவரு என்ன" என்று சொல்லி அழுதிருக்கிறாள்.

அந்த 'பேருந்து வயதானவர்' அச்சிறுமியின் முலைகளை தடவி இருக்கிறார். இந்த அதிர்ச்சியால் அவள் எழுந்து ஓடி வந்திருக்கிறாள்.

அன்று இரவு முழுவதும் தூங்க முடியாமல் அழுது மறுநாள் காலை இத்தனைக்கும் காரணம் பாட்டிதான் என்று திட்டி  இருக்கிறாள்.

"இப்ப வரைக்கும் என் பேத்தி என்கிட்டே சரி பேச மாட்டேங்குறா " என்று சொல்லி கண் கலங்கி இருக்கிறார் அந்த வயதானப் பெண்.

"நான் சிறுமியாக இருக்கும் போது பஸ்ஸில் அமர்ந்திருக்கும் போது நின்று கொண்டிருந்த ஒருவன், அப்பயணம் முடியும் வரை அவன் ஆண் குறியை எடுத்து எனக்கு மட்டும் தெரியும் படி போட்டு வைத்திருந்தான். அதைப் பார்த்து நான் அடைந்த அருவருப்புக்கு அளவே இல்லை. இதில் என்ன பிரச்னை என்றால்  வெகுநாள் வரை நான் எதோ தப்பு செய்து விட்டதாக பயந்து கொண்டிருந்தேன்"

என்ற விவரிப்பை ஒரு பெண் சொல்ல கேட்டுருக்கிறேன்.

பத்து வயதுக்கு உட்பட்ட ஆணுக்கு இப்பிரச்சனைகள் எல்லாம் இல்லை.

அதனால்தான் எப்போதும் சீட் கொடுக்காமல் ஒரு பெண் இருந்தால் அதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதிகம் சிரிக்காமல் அளவுக்கு அதிகமாய் ஒரு பெண் கறாராய்  இருக்கும் பட்சத்தில் அதையும் புரித்து கொள்ள வேண்டும்.

தங்கள் மனைவியின் முதல் மென்சஸஸை எதிர் கொண்டிருப்பார்கள்

vijay bhaskarvijay
Via Facebook

கல்யாணம் ஆன முதல் வாரமே மனைவியுடன் ஹைதிராபாத் வந்து விட்டேன். பெரிவர்கள் சொந்தங்கள் தொந்தரவு இல்லாத புதிய திருமண ஜோடி. ஜாலியாய் போனது வாழ்க்கை. ஆபீஸ் கிளம்பும் போது ஒரே ஒரு துளி மழைவிழுந்தாலும் லீவுதான். சினிமாதான், ஹோட்டல்தான், அன்புதான், கொஞ்சல்தான். கிட்டத்தட்ட இருபது நாட்கள் போனது இப்படியே.

ஆபிஸ் விட்டு வரும் போது மனைவி ட்ல்லாய் இருந்தாள்.

ஏன் டல்லாயிருக்க?

ஓண்ணுமில்லையே?

இல்ல டல்லாத்தான் இருக்க. நான் எதாவது மனச கஸ்டபடுத்திரது மாதிரி பேசிட்டேனா?

இல்லையே? அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல. நா நார்மலா இருக்கேன்பா என்று சமாளித்தாள்.

குழப்பத்துடன் இரவு பத்து மணிக்கு படுக்கும் போது சரிவர அன்னியோன்யம் இல்லாமலே படுத்தாள். நானும் தொந்தரவு செய்ய வில்லை. இரவு சரியாக பதினோரு மணிக்கு என்னை எழுப்பினாள்.

என்னங்க எனக்கு “ஸ்டமக் பெயின்” ரொம்ப இருக்கு என்று கலங்கினாள்.

என்னாச்சு எதாவது அஜீரணமா என்றேன்.

’உங்க தலை’ என்று சட்டென்று எரிந்து விழுந்தாள்.

பாத்ரூமுக்கு சென்று திரும்பி மறுபடு சுருண்டு படுத்து கொண்டாள். அப்போதுதான் புரிந்தது.

மென்சஸ் ஆ என்றேன்.

ஆம் என்று தலையசைத்தாள்.

’ரொம்ப வலிக்குதுப்பா ’என்றாள்.

பதட்டமானேன். காய்ச்சல், தலைவலி, வெட்டுகாயம் பத்தி எனக்கு தெரியும்.
குரோசின் சாப்பிடனும், நார்ஃபிளாக்ஸ் டி. இசட் சாப்பிடனும் என்பது மாதிரி தெரிந்து வைத்திருப்பேன்.  மென்சஸ் வலிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. மாதவிலக்கு, வெள்ளை படுதல், வாடகைத்தாய் போன்ற சமாச்சாரங்களை நன்றாக சொல்லும் அணுராதா ரமணன் கூட அதற்கு எந்த மாத்திரை குடுக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை.

வழக்கமா என்ன செய்வ இதுமாதிரி வந்தா? கேட்டேன்.

பதிலில்லை.

சொல்லுப்பா நார்மலா என்ன செய்வ மென்சஸ் வந்தா?

பதிலில்லை.

’சொல்லேம்பா. என்ன செய்வ ஏன் இப்படி மொக்க போடுற. நைட் பதினோரு மணிக்கு ஏன் இந்த டிராமா’ என்றேன்.

“ஆமா டிராமாவா. மனசாட்சியோட பேசுங்க. பொண்டாட்டின்னா ஜாலியா இருக்கத்தானா. அவ வலி புரிய வேண்டாமா?

நடுக்கத்தோடு சத்தமாய் கத்தினாள்.

எனக்கு பெண்கள் உலகமே தெரியாது. தெரிந்த பெண் அம்மா மட்டும்தான். அம்மாவின் மாதாந்திர பிரச்சனைகள் என் கவனதிற்கு வந்ததே இல்லை.
ஒரு முறை சித்தி துண்டு பேப்பரில் ஒன்றை எழுதி இதை வாங்கி வா என்றார். படித்து பார்த்ததில் “கேர் ஃபிரீ” என்று எழுதியிருந்தது. அது பற்றி வாசித்திருந்ததால் புரிந்தது. பெண்ணின் கருப்பையில் இருக்கும் சினைமுட்டைகள் தங்களுக்கு வேலை இல்லை என்பதால் கழிவாகி வெளியே வரும் மாத நிகழ்வுதான் மென்சஸ்.

அந்த சமயத்தில் பலருக்கு அடிவயிற்றில் வலியும், மனதளவில் அயர்ச்சியும் எரிச்சலும் கோபமும் இருக்கும். இதுவரை தெரியும். ஆனால் இரவு பதினோரு மணிக்கு மனைவி கோழிகுஞ்சு மாதிரி சுருண்டு அழ அதற்கு என்ன பண்ண வேண்டும் என்று தெரியவில்லை. அதை பற்றி தெரிந்த அவளாவது எதாவது சொல்லலாம் இல்லையா. அவளும் சொல்ல மாட்டேன் என்கிறாள். தண்ணி எடுத்து கொடுத்தேன். வாங்கி குடித்தாள். குளுக்கோஸ் ஒரு ஸ்பூனில் எடுத்து சாப்பிட வைத்தேன். அவளை என் மேல் கொஞ்சம் சாய்த்து கொண்டேன்.

“சொல்லுப்பா வழக்கமா என்ன பண்ணுவ. அது தெரிஞ்சாதான என்னால எதாவது செய்ய முடியும்”

பேசினாள்.

”ஒண்ணுமே செய்ய மாட்டேன். வலியை தாங்கிப்பேன். அம்மா கிட்ட படுத்துப்பேன். ஒரே ஒரு தடவை வலி பொறுக்க முடியாமல் ஊசி போட்டிருக்கேன்.”

மறுபடி சுருண்டு கொண்டு அம்மா அம்மா என்று அழுதாள்.

நெகிழ்ந்து விட்டேன். அம்மாவை தேடுகிறாள். வெறு வழியே இல்லை.

அண்ணனுக்கு போன்  போட்டேன். அண்ணன் டாக்டராக இருக்கிறார். ரிங் போகிறது எடுக்கவில்லை. பதினொன்னரை மணிக்கு தூங்கியிருக்கலாம்.

இன்னொரு தங்கையும் டாக்டர்தான். அவளுக்கு போன் போட்டேன் தயக்கத்துடன். அதிர்க்ஷ்டம்.

எடுத்தாள். விசயத்தை சொன்ன போது  சிரித்தாள். ”இதுக்கு எதுக்கு இப்படி பதட்டமா பேசுறீங்க உங்க குரல் எல்லாம் நடுங்குதுண்ணா”

“சரி அத விடுப்பா. சொல்லு என்ன பண்ணனும்”

“பெயின் கில்லர் குடுங்க போதும், ஃபுருபென்னும், ராண்டெக்கும் குடுங்க” சரியாயிடும்.

“பெயின் கில்லர் கொடுத்தா சைடு எபக்ட் வராதா”

“அது வலியினால நைட்டு தூங்காம இருக்கும் சைட் எஃபெக்ட விட கம்மிதான்” என்று போனை வைத்தாள்.

சரி விடை கிடைத்தது பிரச்சனைக்கு. மாத்திரை டப்பாவை துழாவினால் ஒரு ஃபுருபென்னும் இல்லை. மணி பண்ணிரெண்டு ஆகப்போகிறது. யாருமே தெரியாத மொழி தெரியாத அந்நியமான ஹைதிராபாத். வண்டியும் கிடையாது. நடந்தே போக வேண்டும். கால் மணி நேரம் நடந்தால் இருபத்திநாலு மணி நேரம் திறந்திருக்கும் அப்பல்லோ மெடிக்கல்ஸை அடையலாம். லுங்கியில் இருந்து பேண்டுக்கு மாறி, டீ போட்டு கொடுத்து விட்டு, கொஞ்சம் பொறுத்துக்கோ என்று சொல்லி கிளம்பினேன்.

மஞ்சள் சோடியம் விளக்கில், ஆளில்லாத தெருவில் நடக்க நடக்க நான் நண்பனுடன் செய்யும் விளையாட்டு நினைவுக்கு வந்தது. *கூட படிக்கும் பெண்களின் மாதாந்திர தூர நாளை கண்டுபிடிப்பததுதான் எங்கள் விளையாட்டு* - சோர்ந்திருப்பார்கள், எரிந்து விழுவார்கள், அந்த நாள் விபூதி சந்தனம் கோவிலை தவிர்ப்பார்கள். பழைய டிரஸ்ஸை போட்டு வருவார்கள். “மச்சி இந்த தீபாவ பாரேன். இருபதில் இருந்து இருபத்தி ஐந்து தேதிக்குள் அந்த பழைய ஆரஞ்சு கலர் சுடிய போட்டுட்டு வருவா பாரு” என்பேன். அதுமாதிரி அவள் வர, நண்பன் “மச்சி சைக்காலஜில நீ மேதடா “ என்பான் ஜிவ்வென்று இருக்கும்.

இதுமாதிரி பல விசயங்களை வைத்து இவளுக்கு ஐந்தாம் தேதி, இவளுக்கு பதினேழு, இவளுக்கு சரியா சொல்ல முடியாது. என்பது மாதிரி ஆராய்ச்சி முடிவகள் வைத்திருப்போம். என் மனைவியின் தேதியை கூட அவளின் நண்பர்கள் குறித்திருப்பார்களோ. கடை வந்தது. மாத்திரை வாங்கி. போன் போட்டு வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி, வேகமாக நடையை கட்டினேன்.

ஹைதர் நகரில் இருந்து வசந்த் நகர் ஆர்ச் அருகில் வரும்  போது மூன்று திருநங்கைகள் என்னை பிடித்து கொண்டனர். ஹைதிராபாத்தில் அவர்கள் தொல்லை அதிகம். ஒரு மூட் வந்தால் காசு கொடுப்பேன். இல்லையென்றாக் இல்லை. இரவு பண்ணிரண்டு மணிக்கு பயமாய் மாத்திரை வாங்கி போகும் போது இப்படி சூழ்ந்து கொண்டால் வெறிதானே வரும். தள்ளு! தள்ளு! தமிழிலேயே கத்துகிறேன். அவர்கள் தெலுகிலும் ஹிந்தியுலமாய் பேசுகிறார்கள். பத்து ரூபாய் கொடுத்தேன். அம்பது ரூபாய் வேண்டுமாம்.

வெறி வந்தது. கையை பந்தாக்கி இரண்டு வீசு விசினேன். இரண்டுபேர் மேல் பட்டது. அக்ரோசத்தை எதிர்ப்பார்க்கவில்லை. தங்கள் சூழ்ந்துள்ள வட்டத்தை விலக்கினர். வெளியே குதித்து ஒடினேன். பின்னால் என்னை திட்டும் சொற்கள் தெளிவாய் கேட்டது.

விட்டுக்கு வந்தால அழுத்து கொண்டிருதாள் மனைவி. மாத்திரை கொடுத்து ஒரு மணி நேரம் ஆன பிறகு வலி விட்டது.  குழந்தையாய் தூங்கினாள்

கல்யாணமாகி முதன் முதலில் மனைவிடம் கடுமையான திட்டு வாங்கியது,

என் கல்லூரி கால விளையாட்டு,

மஞ்சள் கலர் சோடியம் வேப்பர் வெளிச்சம்,

என்னை சூழ்ந்த திருமங்கைகள்,

அவர்கள் மேல் பட்டு வலித்த என் வலது கை,

சிகப்பு கலர் ஃபுருபென் மாத்திரை,

மனைவியின் அழுகை,

கரிய இரவின் குளிர்

எல்லாமும் பிம்பங்களாய் சுற்றி சுற்றி வந்து  என் தூக்கத்தை கெடுத்திருந்தன.

என்னை போன்று எத்தனை வாய்சவுடால் இளைஞர்கள் தங்கள் மனைவியின் முதல் மென்சஸஸை எதிர் கொண்டிருப்பார்கள். மக்கு மாதிரி, பேக்கு மாதிரி.

”இதெல்லாடா ஆண்களுக்கு காலேஜ்ல ஒரு பாடமா வெச்சிருக்கனும்” என்று தோண்றியது.