Showing posts with label நீட். Show all posts
Showing posts with label நீட். Show all posts

Sunday, June 10, 2018

NEET vs Akasha coaching center

A. Sivaraman
2018-06-10

Ingersol Norway

தமிழ்நாட்டிற்கு நாம் ஏன் NEET வேண்டாம் என்கிறோம்?

இந்த வருட Results கொண்டே எளிதில் விளக்குகிறேன்.

Medical Council of India (MCI) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63835

இந்திய முழுவதும் கடை விரித்திருக்கும் Aakash Foundations என்ற தனியார் கோச்சிங் சென்டரில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61649

அதாவது 63835 மருத்துவ கல்லூரி இடங்களில் 96% இடங்களை இந்த ஒரு தனியார் நீட் கோச்சிங் சென்டரில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.

இந்த Aakash Foundations என்ற தனியார் கோச்சிங் சென்டரில் கட்டணம் என்ன என்று பாருங்கள்...

Aakash – One year Regular Course for NEET
INR 1,36,526

Aakash – Two Years Integrated Course for NEET
INR 3,33,350

Aakash – Crash Course for NEET
INR 32,804

நல்லா கண்ணை விரிய திறந்து பார்த்துக்கொள்ளுங்கள்.

+2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய Crash Course Fees மட்டுமே INR 32,804.

குறைந்தபட்சம் ரூ.32804/- இருந்தால் மட்டுமே உங்க குழந்தையும் என் குழந்தையும் நீட் தேர்வு பயிற்சிக்கு போய், படிச்சு, நீட் தேர்வு எழுதி பாஸாகி டாக்டர் ஆக முடியும்.

இதற்கும் இந்தியாவில் இருக்கும் CBSE, ICSE, State Board போன்ற எந்தவிதமான Syllabus-க்கும் எந்த தொடர்பும் இல்லை. நன்னா விளங்கிக்கோங்க

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-ஆம் இடமும் பெற்ற கீர்த்தனா படித்தது சென்னையின் பெரிய பள்ளிகளில் ஒன்றான PSBB. பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். CBSE Syllabus தான். ஆனாலும் கீர்த்தனா இந்த ஆண்டு +2 முடித்துவிட்டு  நேரடியாக நீட் தேர்வு எழுதி இந்த வெற்றியை அடையவில்லை. அவள் +2 முடித்த ஆண்டு 2016.

அதாவது சென்னையில் பெரிய பள்ளிகளில் ஒன்றான PSBBயில், CBSE Syllabus-ல் +2 முடித்த ஒருவர் 2 ஆண்டு தனியார் கோச்சிங் சென்டரில் லட்சக்கணக்கான பணம் செலவு செய்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறார். அவருடைய பேட்டி இணையத்தில் இருக்கு, பேட்டியின் போது அவரை சுற்றி கோச்சிங் சென்டர் ஆசிரியர்கள் குழுமியுள்ளனர். அவர்கள் கழுத்தில் தொங்கும் tag களே அதற்கு சான்று.

இதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.

நம்ம தமிழ்நாட்டில்,
1. Madras Medical College
2. Stanley Medical College
3. Madurai Medical College Madurai
4. Thanjavur Medical College
5. Government Kilpauk Medical College
6. Chengalpattu Medical College
7. Kanyakumari Government Medical College
8. Coimbatore Medical College
9. Tirunelveli Medical College
10. Salem Mohan Kumaramangalam Medical College
11. IRT Perundurai Medical College
12. Trichy K.A.P.Viswanatham Government Medical College
13. Thoothukudi Government Medical College
14. Theni Government Theni Medical College
15. Vellore Government Vellore Medical College
16. Thiruvarur Government Thiruvarur Medical College
17. Dharmapuri Government Dharmapuri Medical College
18. Villupuram Government Villupuram Medical College
19. Sivagangai Government Sivagangai Medical College
20. Tiruvannamalai Government Tiruvannamalai Medical College
21. Chenai Oamndurar Government Medical College
22. Pudukkottai Government Medical College
23. Annamalai University Rajah Muthaiah Medical College

என்று 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.

இந்த 23 மருத்துவக்கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் கூட MBBS படிக்க ஆண்டு கட்டணம் ரூ.32000 கிடையாது.

ஆனால் Aakash Crash Course for NEET மட்டுமே ரூ.32000/-. வித்தியாசத்தை உணர்த்துக்கொள்ளுங்கள்.

அனிதாவும் பிரதீபாவும் இந்த 23 அரசு கல்லூரிகளில் இருந்த மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு தான் போட்டியிட்டார்கள்.

அதற்கான தகுதியும் அவர்கள் இருவருக்கும் இருந்தது,
அனிதா 1175/1200,
பிரதீபா 1125/1200
ஆனால் நீட் என்ற ஒரு தடுப்பை வைத்து அவர்களை பரலோகம் அனுப்பியாச்சு.

நாங்களும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்த 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2500+ இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம். போரூரில் இருக்கும் Sri Ramachandra Medical University போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அல்ல. தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டமும் இதை தெளிவாக சொல்லியிருக்கிறது.

இதை தான் தரம் என்று நம் மீது திணித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பல தமிழக மாணவர்கள் கனவு பலியாக்கப்பட்டு வருகிறது.

இங்கு அவர்கள் நோக்கம் தரத்தை கொண்டு வருவதல்ல. பணக்காரர்களை தவிர வேறு யாரும் மருத்துவர் ஆக கூடாது என்பதுதான்.

ஏதோ தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வை எதிர்ப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை காவி பக்தர்கள் கூட்டம் கட்டமைக்கிறது. இவர்களின் பிதாமகர் உத்தமசீலர் மோடியே குஜராத் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்தவர் தான்.

முதல்வராக இருந்த காலத்தில் ஒன்றை எதிர்ப்பதும்
பிரதமரான பின் அதை ஆதரிப்பதும் உத்தமசீலருக்கு ஒன்றும் புதிதல்ல.

ஆதார் அட்டை
ஜிஎஸ்டி
நீட்
இது மூன்றுமே குஜராத் முதல்வராக அய்யா எதிர்த்து தான்.

எங்கள் வீட்டில் யாரும் 1200க்கு +2 தேர்வில் 1000 மார்க்கை தாண்டியதில்லை. அதனால் 1175 மார்க் வாங்கிய அனிதாவும், 1125 மார்க் வாங்கிய ப்ரதீபாவும் எங்களுக்கு பெரிதாக தெரிகிறார்கள். அந்த குழந்தைகளின் மரணங்கள் எங்களுக்கு உயிர் வலியை தருகிறது. அதற்காக இந்த தேர்வு முறையை எதிர்க்கிறோம்.

பரம்பரை பரம்பரையாக கல்வியை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக கொண்டிருப்போர்களுக்கு இது சாதாரணமாக தெரிவதில் வியப்பேதுமில்லை. ஏனென்றால் 1200க்கு 1000 மார்க் என்பது அவர்களுக்கு சர்வ சாதாரணம்.

Capitalism+Casteism=NEET

நீட் ஒரு நவீன தீண்டாமை!

- A sivaraman

https://www.facebook.com/532853256/posts/10156261205173257/

Wednesday, May 9, 2018

இனி முனியாண்டிகள் டாக்டராக முடியாது.

Devi somasundharam
Via Facebook
2018-05-09

சீனு ராமசாமி இயக்கி விஜய் சேதுபதி நடித்த "தர்மதுரை "படத்தில் ஒரு சீன் வரும்.

கிராமத்துலருந்து ஒரு பெரியவர் மருத்துவக் கல்லூரிக்கு வந்து ‘முனியாண்டி’ன்ற வாத்தியார தேடுவாரு.

பசங்களாம் அந்த பேர்ல எந்த வாத்தியாரும் இல்லனு அடிச்சு சொல்லுவாங்க. ஆனா அவர் இந்த காலேஜ்தானு உறுதியா சொல்லுவாரு. பசங்களாம் குழம்பிட்டு இருக்கும்போது அங்க அவங்களோட வாத்தியார் ‘காமராஜ்’ நடந்து போய்ட்டு இருப்பாரு. அவர பாத்து அந்த பெரியவர் ‘ஏ முனியாண்டி’னு கூப்ட்டு பேச ஆரம்பிப்பாரு. பசங்களாம் ஆச்சர்யமா பாப்பாங்க.

‘ஏ தம்பிகளா..இவருதான் எங்க முனியாண்டி. எங்க கிராமத்துலய மொதமொதல படிச்சு டாக்டர் ஆனவர்’னு அந்த பெரியவர் பெருமையா பேசிட்டே போவாரு. அப்பறம் அந்த பசங்க அத பத்தி வாத்தியார்ட்ட கேக்கும்போது, ‘என் உண்மையான பேரு முனியாண்டி தான். சாப்ட கூட காசு இல்லாத குடும்பம். அப்ப முதலமைச்சரா இருந்த காமராஜர் பள்ளிக்கூடத்துல இலவச சத்துணவு திட்டத்த கொண்டு வந்தாரு. சரி பள்ளிக்கூடத்துக்கு போனா ஒருவேள சாப்பாடாச்சும் கெடைக்குமேன்னு எங்கம்மா என்ன பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டாங்க. அப்படி போய் படிக்க ஆரம்பிச்சுதான் டாக்டர் ஆய்ட்டேன். அந்த நன்றிய மறக்கக் கூடாதுனு தான் அவர் பேர என் பேரா வச்சுகிட்டேன்’னு சொல்வாரு.

அந்த முனியாண்டியினால் ஈர்க்கப்பட்டுதான் தர்மதுரையும் மற்ற மாணவர்களும் வெளிநாட்டு வாய்ப்புகளை மறுத்து கிராமங்களில் 20 ரூபாய்க்கு முப்பது ரூபாய்க்கும் மருத்துவ சேவை செய்வதாய் நிறையும் படம்.

அப்படி சத்துணவுக்காக பள்ளியில் சேர்ந்து படிச்சு டாக்டரான அந்த முனியாண்டி நிச்சயம் ஸ்டேட் போர்டில் தான் படித்திருப்பார். நிச்சயம் ப்ளஸ் டூ முடித்தவுடன் கோச்சிங் க்ளாஸ் சென்றிருக்க மாட்டார். சோறு போட்ட காரணத்திற்காகவே பள்ளியில் சேர்ந்த முனியாண்டியால் கோவணத்தை உருவும் கோச்சிங் க்ளாஸில் சேர்ந்திருக்கவும் முடியாது.

அப்படி ஸ்டேட் போர்டில் படித்து டாக்டராகி, பல பேரை டாக்டராகவும் ஆக்கும் முனியாண்டிகளின் கனவுகளைத்தான் கொன்று புதைத்திருக்கிறது ‘நீட்’. இனி முனியாண்டிகள் டாக்டருக்கு படிக்கவும் முடியாது. படிக்க நினைக்கவும் முடியாது. முனியாண்டிகள் படிக்க முடியாது எனும்போதே வேறெந்த ஆண்டைகள் படிக்கலாம் என்பது புரிந்திருக்கும். சுருக்கமாக, கமுக்கமாக இதுதான் ‘நீட்’.

இன்று காலையிலிருந்து பகிரப்பட்டு வரும் Statistics விவரங்களைப் பாருங்கள். கிராமப்புற அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் 20க்கும் கீழே தான் தேர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.. ஸ்டேட் போர்டில் படித்த 8.22 லட்சம் மாணவர்களுக்கு 2,224 மருத்துவ இடங்கள். சி.பி.எஸ்.சி யில் படித்த 12 ஆயிரத்து 575 மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்கள்.

எந்தெந்த பிரிவுகள் போன வருடத்தை விட இந்த வருடம் அதிக இடங்கள் வந்திருக்கிறார்கள், குறைந்த இடங்கள் வந்திருக்கிறார்கள் என்று கவனியுங்கள். வருடக்கணக்கில் போராடிப் பெற்ற பிரதிநிதித்துவங்கள் எப்படி ஒரு நொடியில் உடைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

யாரெல்லாம் மருத்துவர் ஆகவேண்டும், முக்கியமாக யாரெல்லாம் மருத்துவர் ஆகக்கூடாது என்று வேறு யாரோ முடிவு செய்கிறார்கள் எனில் இதற்கும் குலக்கல்வி திட்டத்திற்கும் அப்படியென்ன பெரிய வேறுபாடு.

இன்று வெளியான நீட் மதிப்பெண் பட்டியலில் முதலிடம் வந்த மாணவர் சொல்கிறார். ‘நான் போன வருஷமே ப்ளஸ் டூ முடிச்சுட்டேன். ஒரு வருஷமா நீட் தேர்வுக்கு ப்ரிப்பேர் பண்ணேன். அப்படி எல்லாரும் பண்ணா ஈசியா தேர்வாகலாம்’.

எங்கள் முனியாண்டிகளால் அப்படி ஒரு வருஷம் வீட்டில் உட்கார்ந்து லட்சக்கணக்கில் பணம் கட்டி தயாராக முடியாது கணவான்களே... அப்படி செய்ய வேண்டுமானால் அந்த முனியாண்டிகளின் தகப்பன்கள் புஷ்டியான வேலைகளில் உழல வேண்டும். வீட்டில் தனியறையை மகன்களின் படிப்பிற்கு ஒதுக்கியிருக்க வேண்டும். கணிணி முதல் டேப்லெட் வரை எல்லாவற்றிலும் படிப்பு ஏறியிருக்க வேண்டும்.

ஆனால் முனியாண்டியின் அப்பன்கள் இன்னும் மூட்டை தூக்கிக் கொண்டும், சாக்கடை அள்ளிக்கொண்டும், இட்லிக்கடை வைத்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள். அந்த ஒரு வருடத்தில் இந்த முனியாண்டிகள் அப்பன் கடையில் எச்சில் தட்டுகளை கழுவவே வாய்ப்புகள் அதிகம்.

நிஜமாக வயிறெரிகிறது. கோபத்தில் கண்ணீர் வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு வந்த கோபம், கூட்டம் இதற்கு ஏன் வரவில்லை என்று குழப்பம் வருகிறது. தலைமுறை தலைமுறையாக நம் அடிவயிற்றில் அடிக்கும் இந்த பிரச்சினையை எதிர்த்து வீதிக்கு வீதி போராட்டக் களமாகியிருக்க வேண்டுமே? தேர்ந்தெடுத்து அரசாள அனுப்பியிருக்கும் அடிமைகளின் பதவிவெறியால், பதவிக்காக உள்ளங்காலில் கூட விழும் சுயநலத்தால், பல்லாண்டு காலம் போராடிப் பெற்ற உரிமைகள் சுமூகமாக கசக்கப்படுகிறது.

தகுதியற்ற படிப்பு என்று இகழப்படும் தமிழ்நாடுதான் உலகளவில் மிகச்சிறந்த மருத்துவ மாநிலமாக பேர் எடுத்திருக்கிறது. இந்திய அளவில் மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகத்தை நிலைநிறுத்தியது அந்த ‘தகுதியற்றவர்கள்’ படித்து வாங்கிய டாக்டர் பட்டங்கள்தான். பலர் கண்களை உறுத்திய இந்த சாதனை இப்போது கண்முன்னே தரைமட்டமாக இடிக்கப்படுகிறது.

இனி முனியாண்டிகள் டாக்டராகப் போவதில்லை. அதனால் இது முனுசாமிகள் பிரச்சினை என்று மட்டும் சாவதானமாக இருந்துவிடாதீர்கள்.
நாளை உங்கள் குண்டியில் ஊசி போட்டு பஞ்சு வைத்து தடவி விடும் மருத்துவன் ‘50 ரூபா கொடுங்க’ என்று கேட்க மாட்டான். வெளிய ‘பில் பே பண்ணிடுங்க’ என்பான். வெளியில் அமைக்கப்பட்டுள்ள ஏ.சி அறையில் உள்ள ஆணோ/பெண்ணோ ‘முதலில் ரிஜிஸ்டர் பண்ணனும். அப்பறம் டாக்டர் பீஸ். அப்பறம் ஊசி போட்டது. மொத்தம் நாலாயிரம்’ என்பாள்/ன். இதற்கெல்லாம் கோபப்பட்டு உங்கள் மகனிடம் ‘தம்பி நாளைக்கு நீ டாக்டர் ஆகி ஊருக்கெல்லாம் சேவை செய்யனும்டா’னு சொல்லத் தோன்றினாலும் சொல்ல முடியாது. அப்படி சொன்னாலும் அவன் டாக்டர் ஆக முடியாது என்பது உங்களுக்கு அப்போது உறைக்கும்...

#சுட்டது .

பதிவின் உரிமையாளர் பெயர் தெரியவில்லை .

https://m.facebook.com/story.php?story_fbid=174282220069471&id=100024630832918

Tuesday, May 8, 2018

நீட் குறித்த சட்டப்பூர்வமான தெளிவான பார்வை

Devi somasundaram
Via Facebook
2018-05-08

நீட்டை எதிர்த்தவரே பிரதமராக வந்தாலும், தங்கள் திட்டம் அல்லது யாருடைய திட்டமோ நிறைவேற, ஒரு குழு மேலே இருந்து கருமமே கண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது!

நீட் குறித்த சட்டப்பூர்வமான தெளிவான பார்வை

Kalyanakumar Somasundaram
Tamil translation by Arunachalam Sivakumar

"நீட் தேர்வை பற்றி தெரியாமல் முழுமையாக இருப்பதை விட, அரைகுறையாக தெரிந்திருப்பதே ஆபத்தானது".

நீட் தேர்வு என்பது பாஜக சுயமாக கண்டுபிடித்து உள்ளே நுழைத்தது அல்ல. இது காங்கிரஸ் காலத்திலேயே திரு.குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதார துறை மந்திரியாக இருந்த பொழுது, இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதே!

நீட் நுழைவு தேர்வு என்பது பாராளுமன்ற மூலம் நிறைவேற்றப்பட்ட சட்டம் அல்ல என்பதால், அறிமுக நிலையிலேயே பல மாநிலங்கள் நீட் நுழைவுத் தேர்வை ஏற்காமல் உச்சநீதிமன்றம் சென்றன. அப்படி உச்சநீதிமன்றம் சென்ற மாநிலங்களில் அப்பொழுது மோடி முதல்வராக இருந்த குஜராத்தும் அடக்கம்.

2013ல் இந்த வழக்குகளை விசாரித்த ஜஸ்டிஸ் அல்தாமஸ் கபீர் தலைமையிலான மூன்று நபர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த நீட் தேர்வுக்கு தடை விதித்தது. அம்மூன்று கொண்ட அமர்வில் இருந்த மற்ற இரு நீதிபதிகள் ஜஸ்டிஸ் விக்ரம்ஜித் சென் & ஜஸ்டிஸ் அனில் தவே.

மூவரில் ஜஸ்டிஸ் அல்தாமஸ் & ஜஸ்டிஸ் விக்ரம்ஜித் நீட் தேர்வை ஏற்க மறுக்க, ஜஸ்டிஸ் அனில் தவே மட்டுமே நீட்டை ஆதரித்தார். 2:1 கணக்கின் அடிப்படையில் அப்பொழுது நீட் அபாயம் நீங்கியது.

நீட் தேர்வை நிராகரிப்பதற்கான காரணங்களாக ஜஸ்டிஸ் அல்தாமஸ் & ஜஸ்டிஸ் விக்ரம்ஜித் தெரிவித்தவை:

1) இந்திய மருத்துவ கவுன்சில் என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு மருத்துவ பாடத்திட்டங்கள் வடிவமைக்கவும், மருத்துவ படிப்பிற்கான கல்லூரிகளை ஆய்வு செய்து அனுமதிப்பதற்கும் உரிமை பெற்ற அமைப்பு மட்டுமே. மருத்துவ கல்லூரியில் நுழையும் மாணவர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும் உரிமை அதற்கு கிடையாது.

2) இந்திய மருத்துவ கவுன்சிலோ அல்லது வேறு எந்த மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமோ, எந்தவொரு மாநிலத்தில் நடக்கும் கல்லூரி நுழைவையும் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றதல்ல. ஏனெனில் ஒவ்வொரு மாநில அரசின் மருத்துவ கல்லூரிகளும் அந்தந்த மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுபவை. அதற்கான உரிமையை இந்திய அரசியல் சாசன சட்டம் எல்லா மாநிலங்களுக்கும் தந்திருக்கிறது. அப்படி தலையிட நினைப்பது ஒரு மாநிலத்தின் கல்வி உரிமையிலும் தலையிடுவதாகும். அது இந்திய கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும்.

3) வழக்கின் போது இந்திய மருத்துவ கவுன்சிலை நோக்கி நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளும் அதற்கான பதில்களும்,

(அ) இந்த நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் தனித்த பாடத்திட்டங்களை கொண்டிருக்கும் போது, ஒரே பொதுத்தேர்வு முறை எப்படி பொருந்தும்? இந்தியா முழுமைக்குமான பள்ளி பாடத்திட்டமே மருத்துவ படிப்பிற்கானதற்காக மட்டுமே என்று இந்திய மருத்துவ கவுன்சில் மாற்றி அமைக்கப்போகிறதா?

இ.ம.க தந்த பதில்: இல்லை

(ஆ) இந்தியா முழுமைக்குமான ஒரு நுழைவுத்தேர்வை நடத்தும் நிர்வாக கட்டமைப்பு இந்திய மருத்துவ கவுன்சில் வைத்திருக்கிறதா?

இ.ம.க தந்த பதில்: எங்களிடம் இல்லை. ஆனால் நாங்கள் சிபிஸ்சி நிர்வாகத்தை வைத்து நடத்திக்கொள்வோம்.

(இ) இந்த நாட்டில் ICSE போன்று பல்வேறு பாடத்திட்டங்களை நிர்வகிக்கும் மத்திய அரசு நிறுவனங்கள் இருக்கும் போது, இ.ம.க ஏன் சிபிஸ்சி நிர்வாகத்தை வைத்து நுழைவுத்தேர்வு நடத்திக்கொள்வோம் என்று சொல்கிறது?
இ.ம.க தந்த பதில்: பதிலில்லை

~~~~~~~~

இப்படியாக 2013ல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு பக்கம் நீட்டுக்கு எதிர்ப்பாக இருக்க, காங்கிரஸ் அரசு காலத்தில் இயங்கிய 92வது பாராளுமன்ற நிலைக்குழுவும் இந்திய முழுமைக்குமான ஒரே பொதுத்தேர்வு என்பதில் கலந்துக்கொள்வதா வேண்டாமா என்பதை அந்தந்த மாநிலங்கள் சுயமாக முடிவு செய்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்தது. இந்த இரு காரணங்களாலும் ஏற்கனவே தேர்தல் கால நெருக்கடியில் இருந்த காங்கிரஸ் அரசு ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை கைவிட்டுவிட்டது.

2014ல் பாஜக பதவிக்கு வருகிறது. மீண்டும் நீட் நுழைவு தேர்வு விவகாரத்தை எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றத்தை அணுகி ஒரு மாரு சீராய்வு மனு போடுகிறது.

இதில் ஒரு நகைமுரண் என்ன தெரியுமா?

2013ல் நீட்டை நிராகரித்த மூன்று பேர் அமர்வில் ஆதரித்தவரான ஒரே ஒருவரான ஜஸ்டிஸ் அனில் தவே தலைமையிலான புதிய அமர்வுக்கு வழக்கு வருகிறது.

பாரப்பட்சமற்ற நீதி பரிபாலனத்தை உறுதிப்படுத்த, உச்சநீதிமன்ற மரபுகளின் படி முதல் அமர்வில் பணியாற்றிய நீதிபதிகள் அவர்கள் முன்னர் தீர்ப்பு வழங்கிய வழக்கின் மறுசீராய்வு மனு விசாரணைக்கு நீதிபதிகளாக நியமிக்கப்படமாட்டார்கள். ஆனால் இவ்வழக்கில் அந்த வினோதம் நடந்து, நீட்டை ஆதரித்த அனில் தவே அவர்களின் அமர்விற்கே மறுசீராய்வு மனுவும் விசாரணைக்கு வருகிறது.

இவ்வழக்கை மறுசீராய்வுக்கு உட்படுத்தும் முன்னர் 2014ல் ஆட்சியை பிடித்த பாஜக, மருத்துவக்கல்விக்கான ஒட்டுமொத்த நிர்வாக உரிமையை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அளித்து பாராளுமன்றத்தில் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றுகிறது.

கல்வி மாநிலரசு & மத்தியரசக்கு உட்பட்ட பொதுப்பட்டியலில் உள்ளதால், மாநிலங்கள் அவைக்கு போக வேண்டிய அவசியம் இல்லாமல், மக்களவையில் தனக்கு உள்ள அதீத பெரும்பான்மையை பயன்படுத்தி இச்சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டது.

திராவிட கட்சிகள் மட்டும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் மருத்துவம் படித்த மருத்துவர்களும் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

அதற்கான காரணம்,

1) இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒவ்வொரு மாவட்ட தலைநகருக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற கட்டமைப்பு இருக்கிறது.

2) மருத்துவம் தொடர்பான உயர்ப்பட்ட மேற்படிப்புகள் படிக்க இந்தியாவிலேயே அதிகமான இடங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது, மொத்தம் 250 இடங்கள்.
மத்திய பிரதேசத்திலோ உத்திர பிரதேசத்திலோ 2 இடங்கள் மட்டுமே உள்ளன.

இந்திய போன்ற பல மாநிலங்கள் கொண்ட பெரிய நாட்டில், ஒட்டுமொத்த மாநிலங்களிலும் கொண்டுள்ள உயர்ப்பட்ட மேற்படிப்புகளுக்கான இடங்களின் கூட்டுத்தொகையை விட, ஒற்றை மாநிலமான தமிழ்நாடு வைத்திருக்கும் 250 என்ற எண்ணிக்கை பெரிது என்றால், அந்த உயர்ப்பட்ட மேற்படிப்பிற்கான உரிமையை பெறுவது எவ்வளவு கடினம் என்று புரிகிறது அல்லவா?

ஒரு உயர்ப்பட்ட மேற்படிப்பு மருத்துவரை உருவாக்க, அதே உயர்ப்பட்ட மேற்படிப்பை படித்து முடித்த மூன்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் தேவை என்பது தான் இதில் உள்ள கடினமான தடைக்கல். மேலும் உயர்ப்பட்ட மேற்படிப்பு என்பது மருத்துவத்துறையில் (PhD) ஆராய்ச்சி படிப்பிற்கே இணையானது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரை மருத்துவ உயர்கல்வியில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50% நிர்வாகரீதியிலான இடஒதுக்கீடு அமலில் இருந்தது.

அப்படியான இடஒதுக்கீடு பெற்று மருத்துவ மேல் படிப்பு படிக்கும் MBBS மருத்துவர்கள், அந்த இடஒதுக்கீட்டை பெறுவதற்காக தமிழ்நாடு அரசுடன் ஒரு ஒப்பந்தத்தை போடுவார்கள். அந்த ஒப்பந்தத்தின் படி நிர்வாக இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ உயர்படிப்பு படித்த மருத்துவர்கள் தங்கள் பணி ஓய்வுக்காலம் வரை தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதாகவும், அப்படி பணியாற்ற முடியாமல் இடையில் வெளியேறினால் அவர்கள் தமிழக அரசிற்கு ரூ.35 லட்சம் இழப்பீடு அளிக்க ஒப்புக்கொள்வார்கள்.

இப்படியான தன் திட்டத்தின் மூலம் மருத்துவர்களை உயர் படிப்பு படிக்க வைத்து தான் தமிழ்நாடு அரசு தன் சுகாதாரத்துறையை சிறப்பாக கட்டமைத்து, ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் ஆரமப சுகாதார நிலையமும் ஒரு உயர்ப்பட்ட மேற்படிப்பு படித்து முடித்த மருத்துவரை கொண்டிருக்குமாறு வடிவமைத்திருக்கிறது. அப்படி வடிவமைத்த காரணத்தால் தான் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாடு எப்படிப்பட்ட ஒரு உயர்ந்த, உன்னத மருத்துவ கட்டைமைப்பை கொண்டிருக்கிறது என்று புரிகிறது அல்லவா?

இந்நிலையில் 2014ல் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் மருத்துவ படிப்பை நிர்வகிக்கும் உரிமையை பெற்ற இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு புதிய ஒழுங்குமுறையை கொண்டுவந்து, தமிழ்நாட்டில் அதுகாறும் நிலவி வந்த நிர்வாகரீதியிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்து, மருத்துவக்கல்விக்கான உயர்ப்பட்ட மேற்படிப்பு படிக்க எந்த மாநிலத்தை சேர்ந்தவரானாலும் தமிழ்நாட்டுக்கு வந்து படித்துவிட்டு தங்கள் சொந்த மாநிலத்துக்கு சென்றுவிடலாம் என்றும், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணி ஓய்வுக்காலம் வரை பணியாற்ற தேவையில்லை என்றும் மாற்றிவிட்டது.

அதாவது தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாடு அரசு உருவாக்கி வைத்துள்ள மருத்துவ கல்லூரி கட்டமைப்பில் வெளிமாநில மாணவர்கள் வந்து சொகுசாக படித்துவிட்டு தங்கள் சொந்த மாநிலத்திற்கு ஓடிவிடலாம்.

இம்மாநிலத்தின் ஒவ்வொரு மருத்துவரும், கல்வியாளரும் நீட்டை எதிர்ப்பதற்கான காரணம் இது தான், "நாளை தீடிரென இந்திய மருத்துவ கவுன்சில் இளங்கலை மருத்துவப் படிப்பான MBBS படிப்பிற்கு கூட அந்தந்த மாநில மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநில மாணவர்கள் தான் படிக்க வேண்டும் துன்று இருப்பதை மாற்றி எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் நீட் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசு உருவாக்கி வைத்துள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்கலாம் என்று மாற்றிவிட்டால் அது தமிழகத்திற்கு பெரும் கேடு விளைவிப்பதாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது."

தமிழகத்தில் நீட்டுக்கு பலத்த எதிர்ப்பு இருப்பதற்கான காரணமே, தமிழ்நாடு அரசியல்வாதிகள் பலர் தனியார் மருத்துவக் கல்லூரி வைத்திருப்பவர்களாக இருப்பதே என்றும் இன்னும் கூட பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டுள்ளனர். அது உண்மையல்ல.

உண்மை என்ன தெரியுமா?

தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய, மோடியின் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ள நீட் விலக்கு சட்ட மசோதா தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல்வாதியின் தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் பொருந்தாது.

நீட் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதில் உறுதியாக இருங்கள்! தமிழ்நாட்டை விட்டு நீட்டை ஒழிக்காமல் விடுவதில்லை என்று தீர்க்கமாக முடிவெடுங்கள்!

- தளவாய் சுந்தரம் பக்கத்தில் இருந்து...

#BANNEET #NEET

https://m.facebook.com/story.php?story_fbid=173753006789059&id=100024630832918