Showing posts with label JNU நேரடி ரிப்போர்ட் (வினவு). Show all posts
Showing posts with label JNU நேரடி ரிப்போர்ட் (வினவு). Show all posts

Friday, April 1, 2016

(8) நாங்கள் இந்தியரா ? – நாகா மாணவர் ஷிங்லாய் நேர்காணல்

JNU நேரடி ரிப்போர்ட் 8:
http://www.vinavu.com/2016/04/01/jnu-ground-report-8/

ஜே.என்.யு வளாகத்தில் வினவு குழுவினர் பார்த்த மாணவர் விடுதி அறைகளிலேயே அந்த அறை வித்தியாசமாக இருந்தது. அங்கே புத்தகங்கள் கலைந்து கிடக்கவில்லை. படுக்கை வாரிச்சுருட்டி போடப்பட்டிருக்கவில்லை. மேசையின் மீது பேனாக்கள் சிதறிக் கிடக்கவில்லை. தரை சுத்தமாக பெருக்கித் துடைக்கப்பட்டிருந்தது. பயன்பாட்டுக்கு அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே அந்த அறையில் இருந்தன. அந்த அறை மிக நேர்த்தியாகவும் எளிமையாகவும் இருந்தது. அந்த அறையில் குடியிருந்தவர் பெயர் ஷிங்லாய். மணிப்பூர் மாநிலத்தின் நாகா இன மக்கள் பிரிவைச் சேர்ந்தவர் அவர்.


வட இந்தியர்கள் உங்களிடம் எப்படிப் பழகுகிறார்கள்?

எங்களை வினோதமாக பார்ப்பார்கள். சிலர் தங்களுக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள். ’சிங்க்கிஸ்’ என்று கேலியாக அழைப்பார்கள். எல்லாரும் அப்படித் தான் என்று சொல்லி விடமுடியாது. ஆனால், அநேகமானோர் அப்படித் தான். முதலில் எனக்கு ஆத்திரமாக வந்தது. ஒரு கட்டத்தில் சண்டைக்குப் போகலாமா என்று கூட யோசித்திருக்கிறேன். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல ஒன்றை புரிந்து கொண்டேன்.

இவர்களுக்கெல்லாம் இந்தியா என்பது ஒரு முனையில் பஞ்சாபில் துவங்கி பெங்காலில் முடிகிறது.. இன்னொரு முனையில் உ.பி-யில் துவங்கி மஹாராஷ்டிராவில் எங்கோ முடிந்து விடுகிறது. இது ஒரு கண்ணுக்குத் தெரியாத எல்லைக் கோடு. இதற்கு வெளியே இருப்பவர்களை அவர்கள் இந்தியர்களாகவே கருதிக் கொள்வதில்லை. ஒரு கட்டத்தில், எனது தேசியத்தன்மை குறித்து நானே நீண்ட விளக்கங்கள் கொடுத்து புரியவைக்க வேண்டிய அவசியத்தை “சிங்க்கீஸ்” ரத்து செய்து விட்டதை உணர்ந்து அமைதியடைந்தேன். இப்போதெல்லாம் அப்படிக் கூப்பிடுபவர்களை நோக்கி என்னால் புன்னகைக்க முடிகிறது. நீங்கள் கூட ஒரு ’மட்ராஸீ’ தானே?

இங்கே எழுப்பப்பட்ட கோஷங்கள் குறித்த உங்கள் கருத்து எதுவாக இருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது. அதே போல் தான் இந்தியா என்கிற இந்த ஏற்பாட்டைக் குறித்து உங்கள் கருத்தையும் அனுமானிக்க முடிகிறது. எனினும், நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?

இந்தியா என்பது ஒரு கேலிக்கூத்தான நகைச்சுவை (Farce). இந்தியா என்பது சாவர்கருடையது. சங்பரிவாரங்களுடையது. எங்களுடையது அல்ல. நாங்கள் மாடும் பன்றியும் தின்கிறவர்கள், இந்தியை வெறுக்கிறவர்கள். தேசியம் குறித்து அவர்கள் பீற்றிக் கொள்ளும் எந்தக் கற்பிதங்களின் கீழ் எங்களை அடைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இதைத் தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார்கள் அல்லவா? இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றல்லவா பாட புத்தங்கள் நமக்குக் கற்பித்துள்ளன?


சரி. மங்கோலிய முகமும் உடலும் கொண்ட எனது தோற்றத்தை விடுங்கள். உணவுப் பழக்கம் குறித்து சொன்னேன். அதற்கும் மேலே எங்கள் சமூகத்தில் சாதி கிடையாது. எங்கள் திருமணங்களில் வரதட்சிணை கிடையாது. கணவனும், பிள்ளைகளும் தின்றது போக எஞ்சியதைத் தின்பதே ஒரு குடும்பப் பெண்ணுக்கு அழகு என்கிற பைத்தியக்காரத்தனங்கள் எங்களிடம் இல்லை. பெண்களுக்கு எங்கள் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் மிகவும் தனித்துவமானது. ஒரு குடும்பத்தின் தீர்மானங்களை எடுப்பதில் மட்டுமல்ல, எங்களது சர்ச்சுகளிலும், சமூக இயக்கங்களிலும் பெண்களின் குரலுக்கு முக்கியமான இடமுள்ளது. எங்களது பொருளாதார வாழ்வு வேறுபட்டது.  எமது விவசாய முறை வேறு. இப்படிச் சொல்லத் துவங்கினால் நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்களென்றால், ஒரு கோட்டைக் கிழித்து அதற்கு உள்ளே இருப்பவர்கள் அத்தனை பேரும் இந்தியர்கள் என்கிறீர்கள். இறைவனின் கருணையால் உங்கள் கோடு துணைக் கண்டத்துக்குள்ளே மட்டும் கிழிக்கப்பட்டிருக்கிறது. ஸ்காண்டிநேவிய காகாசியர்களும் ஆப்ரிக்க கருப்பர்களும் நல்வாய்ப்பாக தப்பித்துக் கொண்டார்கள்.

நாகாக்களின் தனித்துவம் குறித்து உங்களிடம் அதிக பெருமிதம் தெரிகிறது. நாகாக்கள் வெளிநபர்கள் குறித்த அச்சம் அல்லது வெறுப்பு கொண்டவர்கள் (Xenophobic) என்று சொல்லப்படுவது உண்மையா?

பழைய காலங்களில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது நிச்சயமாக இல்லை

என்றால் நாகாக்களிடையே கலப்புத் திருமணங்கள் உள்ளதா – குறிப்பாக குக்கி இனத்தவருடன்?

நிறைய உள்ளது. நாகா குக்கி இனத்தவரிடையே மட்டுமல்ல, சிலர் சமவெளிப் பகுதியைச் சேர்ந்த மைத்தாய் இனத்தவரோடும் கூட திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நாங்கள் பழங்குடி இனத்தவர்கள். எட்ட நின்று பார்க்கும் போது கொஞ்சம் கரடு முரடாகத் தெரிவோம். பழகிப் பாருங்கள் உங்களுக்கே புரியும். நாகா மக்கள் யாரையும் எளிதாக நம்பி விடுவார்கள். ஒரு தமிழராக இருந்தாலும் எங்கள் நாகா பெண்ணை காதல் திருமணம் செய்வதை நாங்கள் தடுக்க மாட்டோம். எங்கள் பெண்ணை அவர் துன்புறுத்தாமல் மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் வரை அந்தக் குடும்ப விவகாரத்தில் தலையிடவும் மாட்டோம். ஆனால், நீங்கள் திருமணம் செய்யப் போவது சுதந்திரமான சிந்தனைகள் கொண்ட நாகா பெண் என்பதை மறந்து விடாதீர்கள். அவள் ஒரு அன்பான அடிமையாக இருக்க மாட்டாள். இந்தியர்களால் எங்கள் பெண்களை சமாளிக்க முடியாது என்பதே எனது புரிதல்…  சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்.

ஒரு குடும்பத்தின் அங்கமாகவும் சமூகத்தின் அங்கமாகவும் நாகா பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சம உரிமை குறித்து குறிப்பிட்ட ஷிங்லாய், பல்வேறு சமூக அமைப்புகள் பெண்களாலேயே முழுவதுமாக நடத்தப்படுகின்றது என்பதையும் குறிப்பிட்டார். குறிப்பாக நாகா தாய்மார்கள் சங்கத்திற்கு அவர்கள் சமூகத்தில் உள்ள செல்வாக்கைப் பற்றியும் குறிப்பிட்டார்.

வேறுபாடுகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். உங்களது விளையாட்டுக்களைப் பற்றிச் சொல்லுங்கள். கிரிக்கெட் பார்ப்பதுண்டா? இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் போது உங்களுக்கு அந்தப் பரபரப்பு இருக்குமா?

கிரிக்கெட்டா? அது மந்த புத்திக்காரர்களின் விளையாட்டு. அதனால் தானோ என்னவோ இந்தியர்களுக்கு அது மிகவும் பிடிக்கிறது. நாங்கள் கிரிக்கெட் பார்ப்பதும் இல்லை. விளையாடுவதும் இல்லை. அதே போல இந்தியாவின் மற்ற விளையாட்டு வெற்றிகளையும் தோல்விகளையும் உங்களைப் போல் உணர்வுப் பூர்வமாக அல்லாமல் ஒரு விளையாட்டு என்கிற அளவில் மட்டுமே பார்க்கிறோம். எங்கள் விளையாட்டுக்கள் மல்யுத்தமும் வில்வித்தையும் தான். இப்போது மேற்கத்திய கலாச்சார தாக்கத்தினால் கால்பந்தாட்டம் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது.  வாலிபால் மற்றும் பாஸ்கட்பால் கூட நிறைய பேரால் விளையாடப்படுகின்றது. பொதுவாக எங்கள் விளையாட்டுக்கள் உடல் வலிமையைச் சார்ந்ததாகவே இருக்கும்

ஆம்.. நாகா தற்காப்புக் கலை பற்றிய காணொளித் துண்டு ஒன்றைப் பார்த்திருக்கிறோம். கொடூரமான அசைவுகள் கொண்டதாக இருந்த நினைவு.

சரி தான். அலங்காரமான அசைவுகளும் நுணுக்கங்களும் குறைவாகவே இருக்கும்.. நேரடியாக உயிரைப் போக்கும் அசைவுகள் கொண்டதாகவும் இருக்கும். எங்களது பாரம்பரிய மல்யுத்தமும் அப்படித்தான்.. புள்ளிகள் எடுப்பதை விட எதிராளியின் எலும்பு இணைப்புகளை முறித்துப் போடுவதற்கு தான் வீரர்கள் முனைவார்கள். நண்பரே… நாங்கள் வேட்டைக்காரர்கள்… எங்களது சண்டைக் கலைகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பீர்கள்? ஆனால் அதெல்லாம் சில பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கதை. இப்போது நிறைய மாறியுள்ளது.. எங்களது தற்காப்புக் கலைகள் விளையாட்டின் அம்சங்களை நிறைய உள்வாங்கி இருக்கிறது.

உங்கள் பொழுது போக்கு பற்றிச் சொல்லுங்கள். பாலிவுட் சினிமாக்கள் பார்ப்பதுண்டா?

இந்தி சினிமாக்களை நாங்கள் விரும்புவதில்லை.. மொழி புரியாது என்பது ஒரு காரணம்.. அடுத்து பாலிவுட் சினிமாக்களில் காட்டப்படும் காதல், குடும்பம் போன்ற உணர்ச்சிகள் குமட்டலை ஏற்படுத்துவதாக இருப்பது இன்னொரு காரணம். மற்றபடி ஹாலிவுட் சினிமாக்களும் இப்போது சமீபத்திய சில ஆண்டுகளாக கொரிய சினிமாக்களும் தான் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

இந்தி தெரியாது என்றா சொல்கிறீர்கள்? உங்கள் மாநில கல்வித் திட்டத்தில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுவதாக அல்லவா கேள்விப்பட்டோம்?

ஆம் எட்டாம் வகுப்பு வரை இந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், அது இந்தி மொழியில் ஆனா ஆவன்னா அளவுக்கு மேல் தெரிந்து கொள்ளப் பயன்படாது. எங்கள் மொழியின் கட்டுமானமே இந்திய மொழிகளுக்கு நேர் எதிரானது. எனவே எத்தனை ஆண்டுகள் படித்தாலும் அந்த மொழியே எங்கள் நாக்குக்கு விரோதமானது தான்

சரி, நாகா சமூகத்தில் உள்ள சொத்துடைமை மற்றும் விவசாய முறை பற்றி சொல்லுங்கள். உங்கள் சமூகத்தில் தனிச்சொத்துடைமை இல்லை என்று சிலர் குறிப்பிடுவது உண்மையா?

முற்றிலும் அப்படிச் சொல்ல முடியாது… எங்களிடம் நான்கு வகையான சொத்துடைமை வடிவங்கள் உள்ளன. ஒவ்வொரு தனிநபருக்கும் தனியே சொத்து உண்டு. அது போக குடும்பத்திற்கான சொத்து, இனத்திற்கான (Clan) சொத்து மற்றும் கிராமத்திற்கான சொத்துக்களும் இருக்கின்றன.

குழப்பமாக இருக்கிறது. இதில் கிடைக்கும் வருமானம் எப்படி பகிர்ந்து கொள்ளப்படுகின்றது?

அதைப் புரிந்து கொள்ள நீங்கள் முதலில் எங்களது விவசாய முறையைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது விவசாயம் இடம்மாறும் சாகுபடி (Shifting Cultivation) என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாக, எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் பத்து மலைகள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மலையை சாகுபடிக்காக எங்கள் கிராம கவுன்சில் தேர்ந்தெடுக்கும். இது பிப்ரவரி மாதம் நடக்கும். தேர்தெடுக்கப்பட்ட மலையில் உள்ள மரங்கள் மற்றும் களைகளை தீயிட்டு எரிப்போம். முதல் மரத்தை வெட்டும் உரிமை கிராமத் தலைவருக்கே உண்டு. மரங்கள் எரிந்து சாம்பல் பரவிய பின், ஜூன் மாதம் விதைப்போம் ஆகஸ்டில் ஒரு முறை களையெடுப்போம். இடையில் ஜூலை மாதம் தொடங்கி பருவ மழை பொழியத் துவங்கும். செப்டெம்பர் இறுதியிலிருந்து நவம்பருக்குள் அறுவடை முடிந்திருக்கும்..

எங்களது விவசாயத்தில் பெரும்பாலும் நெல் சாகுபடிக்கு முதன்மையான இடம் உண்டு. அது தவிர வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளும் சாகுபடி செய்வோம். அறுவடை செய்த பின் விளை பொருட்களை ஊரில் பொதுவான இடத்தில் சேமித்து வைப்போம். சிலருக்கு நிலம் இருக்கும். சிலருக்கு நிலம் இருக்காது.. நிலம் வைத்துள்ளவர்கள் தங்களது சொந்த நிலத்தில் உழைத்தது போக கிராம நிலத்திலும், இனத்திற்கான நிலத்திலும் உழைக்க வேண்டும். நிலமற்றவர்கள் நிலவுடைமையாளர்களின் நிலங்களின் வேலை செய்வதோடு பொது நிலங்களிலும் வேலை செய்வார்கள். அறுவடை முடிந்த பின் விளைச்சல் எல்லோருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். நிலவுடைமையாளர்களுக்கு மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதல் பங்கு கிடைக்கும். எனினும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகப் பெரியளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.

இந்த முறையினால் தான் எங்கள் சமூகத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டையோ, ஏழைகளையோ, பிச்சையெடுப்பவர்களையோ பசியால் வாடுபவர்களையோ நீங்கள் காண முடியாது. எங்கள் உணவு முறை தனிச்சிறப்பானது.. பரந்து விரிந்த காடு எங்களுக்கு இருக்கிறது.. அதன் ஒவ்வொரு மரத்தின் இலைகளையும், பட்டைகளையும், வேரையும், எதற்காக எப்போது தின்ன வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும். பிரதான உணவான அரிசியோடு சேர்த்து நிறைய பச்சை இலைகளுக்கும், இறைச்சிக்கும் இடமுண்டு. மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் விருப்பமான அசைவ உணவுகள். வேட்டையில் காட்டுப் பன்றிகளும், எருமைகளும் நிறைய கிடைக்கும்.

நாகா சமூக அமைப்பு பற்றிச் சொல்லுங்கள்.

நாகா ஒரு இனக்குழுச் சமூகம். ஒவ்வொரு கிராமத்துக்கும் கிராமத் தலைவர் இருப்பார். அவருக்கு வழிகாட்டுவதற்காக ஒரு கிராம கவுன்சில் இருக்கும். இந்தக் கவுன்சிலின் அதிகாரம் தான் உச்சபட்சமானது. அதே போல் நாங்கள் இனத்தால் ஒன்று என்றாலும் எங்களிடையே பல்வேறு மொழிகள் உள்ளன. கிட்டத்தட்ட 40 மொழிகள் நாகா மக்களிடையே உள்ளன. எங்கள் பக்கத்து கிராமத்தவர்கள் பேசும் மொழி எனக்குப் புரியாது. என்றாலும் எங்கள் அனைவரையும் மொழியால் இணைப்பது ஆங்கிலம் தான். தொன்னூறு சதவீதம் பேர் ஆங்கிலம் எழுத பேச படிக்கத் தெரிந்தவர்கள் தான்.

விவசாய முறை பற்றிச் சொன்னீர்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த விவசாய முறையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவே இல்லையா? உலகமயமாக்கத்தின் தாக்கம் எதுவுமே இல்லையா?

நிறைய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நான் குறிப்பிட்ட விவசாய முறை இப்போதும் உள்ளடங்கிய பகுதிகளில் பின்பற்றப்படுகின்றது. ஆனால், தற்போது நகரங்களின் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய முறையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலரும் பழங்கள், பூக்கள் போன்ற பணப்பயிர்களை விளைவிக்கின்றனர். முன்பெல்லாம் நாங்கள் அரிசிக்காக யாரையும் எதிர்பார்க்க மாட்டோம். இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நாகா வாழ்க்கையில் பணம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. வசதி வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளனர். பல நாகா இளைஞர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்… இங்கே சீன உணவகங்களில் நீங்கள் பார்க்கிறவர்கள் எல்லாம் சீனர்கள் அல்ல, வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான். நாங்கள் மேற்கே வருவதைப் போல பீகாரிகள் கிழக்கே வருகிறார்கள். விவசாய கூலிகளாகவும், இன்னபிற வேலைகளிலும் பீகாரிகள் அதிகரித்து வருகிறார்கள்.

உலகமயமாக்கலுக்குப் பின் பணத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டீர்கள்.. அதன் பின்விளைவுகள் பற்றிச் சொல்லுங்கள்.

எங்கள் கிராமங்கள் தன்னிறைவு பெற்றவை. அங்கே திருட்டு என்பதை நாங்கள் முன்பெல்லாம் கேள்விப்பட்டதில்லை. எங்கள் வீடுகளுக்கு பூட்டுக்கள் கிடையாது. இப்போதும் கூட உள்ளொடுங்கிய கிராமங்களில் பூட்டாத வீடுகளைப் பார்ப்பீர்கள். அங்கே உள்ள கடைகளில் கடைக்காரர்கள் இருக்கமாட்டார்கள். நீங்களாகவே பணத்தை வைத்து விட்டுத் தேவையான பொருளை எடுத்துப் போகலாம். கேட்பதற்கு ஏதோ உட்டோபிய நகரத்தைப் பற்றிய வர்ணனை போல் தோன்றுகிறதல்லவா? ஆனால் இவையெல்லாம் உண்மைகள். இதோ உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாரே இந்த தோழர் இதையெல்லாம் நேரடியாகவே பார்த்திருக்கிறார். ஆனால்.. இப்போது நகரங்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் நிலைமை மாறி வருகிறது. திருட்டு அதிகரித்திருக்கிறது. பணம் தன்னோடு சேர்த்து பேராசையையும், களவையும் அழைத்து வந்துள்ளது.

சரி, அடுத்த கேள்வி. எங்கள் பகுதியில் இந்துத்துவர்கள் கிருத்துவ மதமாற்றத்தின் அபாயங்களைப் பற்றிச் சொல்வதற்கு வட கிழக்கு இந்தியாவையே உதாரணமாக காட்டுவார்கள்..

அப்படியா? எந்த மாதிரியான அபாயங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்?

நாகா பிரிவினைவாத அமைப்புகளுக்கு துப்பாக்கி சப்ளையே சர்ச்சுகளின் மூலம் தான் நடக்கிறதாமே? கிருத்துவ மதத்திற்கு மாறி விட்டால் தேசத்தையே மதிக்காத போக்கு மக்களிடையே செல்வாக்குப் பெற்று விடும் என்பதற்கு நாகா பிரிவினைவாத அமைப்புகளே உதாரணம் என்கிறார்கள்

ஏசுவே.. ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதி தங்களுக்குச் சொந்தமில்லாத தேசிய கற்பிதங்களை ஏன் மதிக்க வேண்டும்? இதில் மதம் எங்கே வந்தது? நாகா விடுதலை இயக்கங்கள் துப்பாக்கிகளுக்காக சர்ச்சுகளை ஏன் சார்ந்திருக்க வேண்டும்? சர்ச்சுகளை அவர்கள் ஆயுதங்களுக்காக சார்ந்திருந்தார்களென்றால் எப்போதோ வீழ்த்தப்பட்டிருப்பார்கள். நாங்கள் பெரும்பான்மையாக சி.என்.ஐ (தென்னிந்தியாவில் சி.எஸ்.ஐ) சர்ச்சுகளைச் சேர்ந்தவர்கள்.. கணிசமாக கத்தோலிக்கர்களும் உள்ளனர். விடுதலை இயக்கங்களின் பால் சர்ச்சுகளுக்கு அனுதாபம் உள்ளதே தவிர நேரடியாக கீழே இறங்கி ஆயுதங்களை கைமாற்றி விடுமளவிற்கு அவர்கள் முட்டாள்கள் அல்ல. ஏனெனில், இந்தியா முழுவதும் அவர்களுக்கு சொத்துக்களும், இன்னபிற நலன்களும் உள்ளன. எங்களை ஆதரிக்கப் போய் அவற்றையெல்லாம் இழப்பதற்கு சர்ச் என்பது முட்டாள்களின் கூடாரமா என்ன?

மற்றபடி நாகா வாழ்வில் கிருஸ்தவத்தின் பங்கு என்ன?

கிருஸ்தவம் அறிமுகமாவதற்கு முன் நாங்கள் இயற்கை வழிபாட்டாளர்களாக இருந்துள்ளோம். கிருஸ்தவம் நாகா சமூகத்திற்கு அறிமுகமான போது எங்களது கலாச்சார அடிப்படைகளை பெரிதும் மாற்றாமல் பல அம்சங்களை உட்செறித்துக் கொண்டது. உதாரணமாக எங்கள் பாரம்பரிய வழக்கங்கள், விழாக்கள்.. மற்றபடி மற்ற பகுதிகளில் சர்ச்சின் செல்வாக்கு எப்படியோ அப்படித்தான். பிறப்பு முதல் இறப்பு வரை சகலமும் சர்ச்சோடு பிணைந்தே இருக்கும்.

கடந்த இருபதாண்டுகளாக எல்லா மதங்களிலும் அதிதீவிர தூய்மைவாத போக்கு தலையெடுத்து வருகின்றது.. இசுலாத்தில் வஹாபியப் போக்கு, இந்துத்துவத்தின் எழுச்சி.. கிருஸ்தவத்தில் பெந்தெகொஸ்தேவினர் உள்ளார்கள்.. வட கிழக்கில் நாகாக்கள் இடையே பெந்தெகொஸ்தேவினரின் செல்வாக்கு எப்படி இருக்கிறது?

பெந்தெகொஸ்தே என்று மட்டும் சொல்ல முடியாது.. பொதுவாகவே இவாஞ்சலிஸ்ட் வகைப்பட்ட கிருஸ்தவ சபைகள் மெல்ல மெல்ல செல்வாக்குப் பெற்று வருகின்றன. கத்தோலிக்கர்களிடையே கூட ப்ரெஸ்பெடீரியன் என்ற ஒரு பிரிவு செல்வாக்கு பெற்று வருகின்றது. இவர்களை கத்தோலிக்க பெந்தெகொஸ்தே என்று சொல்லலாம். இவர்கள் யாருக்கும் பதிலளிக்கவோ கணக்குக் காட்டவோ தேவையில்லை. இவர்களைப் பொறுத்தவரை தங்களை கடவுளுக்கு நிகரான ஞானிகளாகவும் எதிரே அமர்ந்திருப்போரெல்லாம் சாத்தானுக்கு நிகரான பாவிகளாகவும் கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்தில் ஆபத்தான சக்திகளாக வளர்வதற்குரிய எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது – அதே நேரம் நான் பைபிள் சொல்லும் படைப்புக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கடவுள் மனிதனுக்கு மூளையைக் கொடுத்திருப்பதே எது சரி எது தவறு என்று பகுத்தறிவதற்காகத் தான். உழைக்காமல் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு மட்டும் இருந்தால் சாப்பாட்டு மேசை நிறைந்து விடுமா என்ன?

சரி, இந்திய அரசோடு நாகா போராளி இயக்கங்கள் செய்து கொண்டுள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து சொல்லுங்கள்

அதை அமைதி ஒப்பந்தம் என்று அழைக்க முடியாது.. இப்போதைக்கு அது அமைதி ஒப்பந்தத்திற்கான ஒரு வரைவுச் சட்டகம் தான். இந்தச் சட்டகத்துக்குள் இந்திய அரசு சொருகப் போவது ஒரு நாகாவின் புகைப்படத்தையா அல்லது மோடியின் புகைப்படத்தையா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. மேலும், நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது பிரதமர் அல்ல. பிரதமரின் முன்னிலையில் ஒரு அதிகாரி தான் கையெழுத்திட்டிருக்கிறார். ஒருவேளை மோடியே கையெழுத்திட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

நீங்கள் மோடியின் மேல் நம்பிக்கையோடு இருப்பதாகத் தெரிகிறதே..

நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

ஜே.என்.யு வளாகத்தில் மோடிக்கு இப்படி ஒரு ஆதரவா? அதுவும் ஒரு நாகா இளைஞர் மோடியை ஆதரிப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது…

பலமாகச் சிரிக்கிறார்.. மோடி ஆதரவு என்பதை அப்படியே இந்துத்துவ ஆதரவு என்று புரிந்து கொள்ளப் போகிறீர்கள். இந்துத்துவ பாசிசம் என்கிற கருத்தியலில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.. ஆனால், இதில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒரு விசயம் இருக்கிறது. இதே காங்கிரஸ் அரசாங்கம் என்று வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் மெனக்கெட்டு நாகாக்கள் என்பவர்கள் யார் தெரியுமா? என்பதில் ஆரம்பித்து நாங்கள் தனித்துவமானவர்கள் என்பதை புரியவைக்க மொத்த கதையையும் விளக்க வேண்டும். அவர்கள் எல்லா கதைகளையும் கேட்டு விட்டு, கடைசியில்.. ‘இத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் நாமெல்லாரும் இந்தியர்கள் தானே’ என்பார்கள்.. மீண்டும் வேறு விதமாக புரியவைக்க மெனக்கெட வேண்டும்..  இந்துத்துவ சக்திகளிடம் அந்த சங்கடங்கள் இல்லை.. ‘ஏய், இதோ பார் நாங்கள் மாடு தின்போம், எங்களிடம் சாதி இல்லை’ என்று மட்டும் சொன்னால் போதும். ‘அட, இது பாரதிய கலாச்சாரம் இல்லையே’ என்று கதையின் விடுபட்ட பகுதிகளை அவனே நிரப்பிக் கொள்வான். இந்திய தேசியம் என்பதற்கு அவர்கள் சொல்லும் எந்த வரையறைக்குள்ளும் நாங்கள் இல்லாதிருக்கும் ஒரே தகுதி போதும் நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு. ’நாங்கள் இந்தியர்களில்லை. கெடு வாய்ப்பாக எங்கள் நிலத்தின் மீது நீங்களே கோடு கிழித்து இந்தியாவாக்கி விட்டீர்கள். என்ன செய்யலாம் சொல்லுங்கள்’ என்று நேரடியாக விசயத்திற்குப் போய் விடலாம். சொல்லப் போனால் இந்துத்துவம் அதிகாரத்தில் இருப்பது பொதுவான நோக்கில் தீமையானது என்றாலும், பிரிவினை உரிமை கோரும் மக்களின் பணிகளை அவர்கள் சுலபமாக்குகிறார்கள்.

சரி நாகா – குக்கி மோதல்கள் குறித்து சொல்லுங்கள்?

நாகா குக்கி மோதல்கள் மட்டுமல்ல.. வடகிழக்கில் உள்ள இனக்குழுக்களுக்கு இடையே சண்டைகள் உள்ளேயே நடக்கும் மோதல்கள் மொத்தமும் இந்திய உளவுத்துறையின் ஏற்பாடு தான். சமீபத்தில் இந்திய இராணுவ உயரதிகாரி ஒருவர் வெளிப்படையாகவே பேட்டியளித்துள்ளார். அதில், ‘நாங்கள் நாகாக்களின் நிலங்களில் திட்டமிட்ட ரீதியில் குக்கி இனத்தவரைக் குடியமர்த்துவதில் வெற்றி பெற்றுள்ளோம். இனி நாகாக்கள் விடுக்கும் சவாலை குக்கி இனத்தவரே எதிர்கொண்டு விடுவார்கள்’ என்றுள்ளார். ஆனால், நாகா குக்கி மோதல்கள் இப்போது பழங்கதைகள் ஆகிவிட்டன. நாங்கள் அந்த கசப்பான நினைவுகளை மறக்கத் துவங்கி விட்டோம். சமீபத்தில் கூட ஒரு குக்கி இளைஞன் இராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாகா கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்கள்.

முழுக்க முழுக்க இந்திய அரசின் சதி மட்டும் தான் காரணமா? நீங்கள் எந்த வகையிலும் பொறுப்பில்லையா?

அந்த மோதல்களுக்கு ஏற்பாடு செய்து களம் அமைத்துக் கொடுத்தது இந்திய உளவுத்துறை என்றாலும் நாங்கள் இருவருமே அந்தச் சூழலுக்குப் பலியாகிப் போனோம். இப்போது நிதானமாக வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது மிகவும் வெட்கமாக உணர்கிறேன். குறுகிய இனப் பெருமைக்காக எதிரிக்கு எதிராக பிளவுபட்டு நின்று மோதிக் கொண்டு செத்து மடிந்திருக்கிறோம் என்பது அவமானகரமானது.. ஆனாலும், வரலாறு வரலாறு தானே? இனிமேல் நடந்தவற்றைத் திருத்தி எழுதவா முடியும். கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டியது தான்.

மைத்தாய் இனத்தவரோடு உங்கள் உறவு எப்படி உள்ளது. குறிப்பாக ஐரோம் சர்மிளாவின் போராட்டம் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள். நாகா இனத்தவர்கள் ஐரோம் சர்மிளாவிற்கு பெரியளவில் ஆதரவளித்து களமிறங்கியதாக தெரியவில்லையே?

நாகா குக்கி இனத்தவர்கள் பழங்குடியினர்.. நாங்கள் மலைவாசிகள். எங்களுக்குள் சமூக அமைப்பில் இருந்து பல அம்சங்கள் ஏறத்தாழ ஒத்துப் போகும். ஆனால், மைத்தாய் சமவெளி மக்கள். இவர்கள் பெங்காலி வகைப்பட்ட இந்து மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள். மைத்தாய்களிடையே சாதி உள்ளது. சரியாக சொல்லப் போனால், இத்தனை ஆண்டுகளாகியும் மைத்தாய் மக்கள் எங்களை தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள். எங்களுக்குள் கலப்புத் திருமணங்கள் மிக அரிதாகவே நடக்கின்றன. குக்கிகளைப் போல் அன்றி மைத்தாய் மக்களிடம் நாங்கள் நெருங்குவதற்கான சமூக வாய்ப்புகளே குறைவு தான். ஐரோம் சர்மிளா ஒரு மைத்தாய் என்றாலும் அவரது போராட்டத்தை நாங்கள் அனுசரணையாகவே பார்க்கிறோம். இருந்தாலும், அவருக்கு இந்தியா முழுவதும் கிடைத்திருக்கும் கவனத்தை எங்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காக பயன்படுத்தவில்லை என்கிற் வருத்தம் எங்களுக்கு உண்டு.

மைத்தாய் இனத்தவரோடு இணைந்து போராட்டங்கள் நடக்கின்றனவா?

இல்லை. நாங்கள் இன்னும் எமது பழைய கசப்புணர்வுகளை மறக்கவில்லை.

சற்று முன்பு தான் சொன்னீர்கள், எதிரிக்கு எதிரே இணைந்து போராடாமல் உள்ளடிச் சண்டைகளின் பாதிப்பு குறித்து. இவ்வளவு ஒற்றுமையின்மைகளை வைத்துக் கொண்டு உங்கள் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்றா கருதுகிறீர்கள்?

முடியாது என்பதே தர்க்கரீதியாக நடைமுறை ரீதியாக கிடைக்கும் விடை. மட்டுமின்றி எங்களது வரலாற்று அனுபவங்களும் அதே விடையைத் தான் தருமின்றன. எனினும், எதார்த்தமான களநிலவரம் நாங்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு எங்களுக்குள் அடித்துக் கொள்வதாகத் தான் உள்ளது. இது எங்களுக்கு மட்டுமல்ல, வலுவான எதிரியை எதிர்த்து போராடும் ஒடுக்கப்படும் பிரிவினர் ஒவ்வொருவரும் இவ்வாறு பிரிந்தே கிடக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட அப்படித்தான் இருக்கிறது. நமது நாட்டைப் பொறுத்தவரை இடதுசாரிகள் எழுச்சி பெற்று போராடும் பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைப்பது தான் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒரு தீர்வாக நம் கண் முன்னே இருக்கிறது.. அதுவரை என்ன செய்வது?

(7) மோடி: ஊடக சந்தையில் விற்காத லேகியம்

JNU நேரடி ரிப்போர்ட் 7:
http://www.vinavu.com/2016/03/31/jnu-ground-report-part-7/

”ஊடகங்கள் எம்மை வேட்டையாடுகின்றன (Witch Hunt), அவர்கள் நோக்கங்களுக்குத் தேவையானபடி எங்கள் தோழர்களை தவறாக சித்தரிக்கிறார்கள் (Profiling), நாங்கள் ஊடகங்களால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகின்றோம் (Media Trial)” என்பதை ஜே.என்.யு-வில் நாங்கள் சந்தித்த மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர்.



எனினும், ஜே.என்.யு விவகாரத்தில் ஊடகங்களின் போக்கு முதல் நான்கைந்து நாட்களுக்குப் பின் (பிப்ரவரி மாதத்தின் மத்தியிலிருந்து) மெல்ல ஒரு மாற்றம் ஏற்படத் துவங்கியிருந்தது. குறிப்பாக “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று மாணவர்கள் கோஷமிட்டதாக ஜீ நியூஸ், டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ் மற்றும் அனேக இந்தி செய்தித் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட காணொளித் துண்டு போர்ஜரி செய்யப்பட்ட ஒன்று என்பதை ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி அம்பலப்படுதிய பின் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்களின் அணுகுமுறை ஓரளவுக்கு மாறியது.

பாரதிய ஜனதாவுக்கு ஜீ டீ.வி சொம்பு தூக்கித் திரிந்ததைச் சகிக்க முடியாமல் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர் விஷ்வ தீபக், தனது வேலையை ராஜினாமா செய்தார். ராஜ்தீப் சர்தேசாய், சகரிகா கோஷ், சேகர் குப்தா போன்றவர்கள் சமூக வலைத்தளங்களில் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவான நிலையெடுத்தனர்.

ஜே.என்.யு மாணவர்கள் தங்களுக்குச் சாதகமாக ஊடகங்களின் ஒரு பிரிவு திரும்பியிருப்பதை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். இந்த முறை மோடி மிகத் தவறான இடத்தில் தவறான நேரத்தில் தவறான முறையில் கைவைத்து விட்டார் என்று நினைக்கிறார்கள். தங்களது போராட்டப் பாரம்பரியத்தைப் பற்றிய முன்யோசனையின்றி அசட்டுத் துணிச்சலோடு செயல்பட்டு விட்டார் என்று கருதுகின்றனர்.

இந்துத்துவ கும்பலோ இதற்கு நேர் எதிரான கோணம் ஒன்றை முன்வைக்கின்றது. ஜே.என்.யுவின் தயாரிப்புகளே அறிவுத்துறையிலும், பத்திரிகை துறையிலும் முக்கியமான பல இடங்களை கைப்பற்றி வைத்திருப்பதாகவும், அவர்களைக் கொண்டு தங்களுக்குச் சாதகமான செய்திகளை வரவழைத்துக் கொள்கிறார்களென்றும் சொல்கிறார்கள். தேசியம் உள்ளிட்ட விசயங்களில் தாம் முன்வைக்கும் கருத்தை ஏற்காத சிறுபான்மையான பத்திரிகையாளர்களை ஊடக விபச்சாரிகள் (Prestitutes) என்று வசைபாடுகின்றது இந்துத்துவ கும்பல்.

எப்படியிருப்பினும் ஜே.என்.யு விவகாரத்தை முன்வைத்து ஊடகங்களிடையே மிகத் தெளிவான பிளவு ஒன்று ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. இந்தப் பிளவு ஜே.என்.யு விவகாரத்தைத் தொடர்ந்து வெளிப்படையாகத் தெரியத் துவங்கியுள்ளது என்றாலும், இது தனித்துவமான நிகழ்வல்ல. இந்தப் பிளவிற்கு கடந்த சில ஆண்டுகளில் அரசியல் அரங்கில் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே இந்தப் போக்கை நாம் கருத வேண்டும்.

 …

ஜே.என்.யு விவகாரத்திற்கு பின்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சமீப காலமாக முதலாளித்துவ ஊடகங்களின் ஒரு பிரிவு மோடி மற்றும் பாரதிய ஜனதா கும்பலை ஓரளவு விமர்சன கண்ணோட்டத்தோடு அணுகுகின்றன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மீட்பராக கருதி காலில் விழுந்த ஒருவரை ஏன் இன்று விமர்சிக்க வேண்டும் என்கிற கேள்வி நம்முன் வருகிறது.

ஒருவேளை முதலாளித்துவ ஊடகங்களில் ஒரு பகுதியினர் ’திருந்தி’ விட்டனரா?

நாம் ஒரு ஏழு மாதங்களுக்குப் பின் செல்வோம். அப்போது தேசிய ஊடகங்களின் மிக முக்கிய பேசு பொருளாக இருந்தது ஷீனா போரா கொலை வழக்கு. தனது சொந்த மகளையே கொன்று விட்டார் என இந்திராணி முகர்ஜி என்பவரின் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்திராணி முகர்ஜி ஒரு மேட்டுக்குடி சீமாட்டி மட்டுமின்றி தில்லி மற்றும் மும்பையின் ’பார்ட்டி கலாச்சார’ உலகில் புழங்கும் பெரும் புள்ளியுமாவார். அவரது கணவர் ஒரு ஸ்டார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர்.

சென்ற ஆகஸ்டு மாத முதல் வாரம் துவங்கி தொடர்ந்து தேசிய அளவிலான செய்தித் தொலைக்காட்சிகளின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நேர அடுக்கு (Prime time slot) இந்திராணி முகர்ஜிக்காக ஒதுக்கப்பட்டது. அவருடைய கதையில் விறுவிறுப்புகளையும், கவர்ச்சியையும் தேடிய ஊடகங்கள் ஆலாய்ப்பறந்து கொண்டிருந்தன.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் மட்டும் சுமார் ஒன்பது முறை வணிக முக்கியத்துவம் வாய்ந்த நேர அடுக்குகள் இந்திராணி முகர்ஜிக்காக ஒதுக்கப்பட்டன. அது தவிரஅந்தக் கொலை வழக்கே முக்கியத்தும் பெற்ற பேசு பொருளாக இருந்தது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பேசி விட்டுத் தூர எறிந்த இந்திராணியின் கதைகளைக் கைப்பற்ற மற்ற தொலைக்காட்சி சேனல்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

அதே காலகட்டத்தில் தான் (ஆகஸ்ட் 17ம் தேதி) கோப்ரா போஸ்ட் என்கிற புலனாய்வு இணையதளம் தனது இரகசியப் புலணாய்வு (Sting Operation) ஒன்றை வெளியிட்டது. வட இந்தியாவில் பதனி டோலா, லக்‌ஷ்மண்பூர் பதே போன்ற இடங்களில் தலித்துகளைக் கொன்று ரத்த வெறியாடிய ரண்வீர் சேனா என்கிற நிலபிரபுத்துவ மாஃபியா கும்பலைச் சேர்ந்த, படுகொலைகளை நேரடியாக முன்னின்று நடத்தியவர்கள் கோப்ராபோஸ்டின் இரகசிய கேமராவுக்கு அளித்திருந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் வெளியாகியது.

அதில் தங்களது செயல்களுக்கு உள்ளூர் பாரதிய ஜனதா தலைவர்களில் இருந்து தேசிய தலைவர்கள் வரை உதவி செய்தனர் என்கிற விவரங்களும் இடம் பெற்றிருந்தன. ரண்வீர் சேனா ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு. பாரதிய ஜனதாவோ தற்போது மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சி.

எதார்த்தமாக பார்த்தால் இந்த சூழலில் என்ன நடந்திருக்க வேண்டும்? பாரதிய ஜனதாவை இந்த ஊடகங்கள் உண்டு இல்லை என்று கிழித்தெறிந்திருக்க வேண்டும். ஆனால், தலித் படுகொலைகளுக்கு மிக அப்பட்டமாக பாரதிய ஜனதா தலைவர்கள் உதவி செய்துள்ளார்கள் என்பது ஆதாரத்தோடு அம்பலமான அந்த வாய்ப்பை எந்த ஊடகங்கமும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்றைக்கு கன்னையா குமாருக்கும், ஜே.என்.யுவிற்கும் அனுசரணையான செய்திகளை வெளியிடுவதாக சொல்லப்படும் ஊடகங்களும் கூட அன்று பாரதிய ஜனதாவை அம்பலப்படுத்துவதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பைப் புறக்கணித்து விட்டு இந்திராணி முகர்ஜியின் மலிவான கதைதகளை தேடி வெளியிட்டு வந்தன.

கடந்த சில ஆண்டுகளாக தேசிய ஊடகங்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன?

2 ஜி அலைக்கற்றை ஊழல் – நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் – காங்கிரசே ஊழல் – அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு – ஜன்லோக்பால் வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும் – ராம்தேவின் கருப்புப் பண எதிர்ப்பு – இந்தியாவின் பிரச்சினைகளுக்கெல்லாம் ஊழலும் கருப்புப் பணமுமே காரணம் – இதை ஒழிக்கப் போவது யார்? அன்னா ஹசாரேவுக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் இடையே முட்டல் மோதல் – மோடி என்கிற் மீட்பரின் வருகை – மோடியும் பாரதிய ஜனதாவும் அளித்த வாக்குறுதிகள் – தேர்தலில் மோடியின் வெற்றியை முன் அனுமானித்தல் மற்றும் அவருக்கு சொம்பு தூக்குதல் – மோடியின் வெற்றி –முசாபர் பூர் கலவரம் – தாத்ரி கொலை – மாட்டுக்கறி சாப்பிடுவது தேச விரோதமா, அநாச்சாரமா? – தில்லியில் பாரதிய ஜனதா வெற்றியை முன் அனுமானித்தல் – கேஜ்ரிவால் பதவியேற்றதும் அவரைக் கிண்டல் செய்தல் – பீகாரில் பாரதிய ஜனதா வெற்றியை முன் அனுமானித்தல் – லாலு, நிதிஷ் வென்றதும் லாலுவின் பழைய ஊழல்கள் நினைவுக்கு வருவது – ரோஹித் வேமுலா – ஜே.என்.யு – சியாச்சின் பனிச்சரிவு – தேச பக்தியின் மகாத்மியங்கள்!

பல்வேறு திருப்பங்களோடு சென்று கொண்டிருக்கும் மேற்படி திரைக்கதையில் இடையிடையே “-” இந்த குறி வரும் இடங்களில் பாடலோ அல்லது கிளுகிளுப்புக் காட்சிகளோ இடம் பெற்றால் தான் பார்வையாளர்களுக்கு அலுப்பில்லாமல் இருக்கும். எனவே அவற்றை பாலிவுட் கிசுகிசு, ஹிர்திக் ரோஷனின் மனமுறிவு, கரிஷ்மா கபூரைக் கொடுமைப்படுத்தும் கெட்ட கணவன், விராட் கோலிக்கும் தோனிக்கும் இடையே நடக்கும் லடாய்கள், இந்திராணி முகர்ஜி, சல்மான் கானின் சமீபத்திய காதல் போன்றவற்றை இட்டு நிரப்பி விடுகிறார்கள்.

இப்படியாகச் சென்று கொண்டிருந்த முதலாளித்துவ செய்தித் தொலைக்காட்சிகளின் பயணத்தை இந்துத்துவ பாசிசம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குலைத்துள்ளது. தேசியம் குறித்த விவாதங்களிலும் சரி மற்றும் மாட்டுக்கறி போன்ற கலாச்சார விசயங்களிலும் சரி – தாம் முன் வைக்கும் கோணத்திற்கு கொஞ்சம் மாற்றிப் பேசும் பிரிவினரின் மேல் கொலை வெறியோடு விழுந்து பிடுங்கும் இந்துத்துவ கும்பல், அவர்கள் தங்களுடைய எதிரணியை நோக்கி நெட்டித் தள்ளுகின்றனர்.

தாராளவாத ஜனநாயக விழுமியங்களுக்குப் பழகிய முதலாளித்துவ ஊடகங்களின் ஒரு பிரிவினருக்கு மோடியின் பொருளாதாரக் கொள்கைகளோடு எந்த முரண்பாடுகளும் இல்லை. உலகமய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதற்குத் தேவையான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்பதிலோ, ஏகாதிபத்திய மூலதனச் சேவையிலோ மோடி ஈடுபடுவதில் இவர்களுக்கு ஒத்த கருத்து தான் உள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி மூலதன உலகிற்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் வாக்குறுதிகளாகவே தேங்கி நிற்கின்றன. ஜி.எஸ்.டி மசோதா போன்ற பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அவரே விரும்பும் வேகத்தில் அமலாக்குவதற்கு ராஜ்யசபா தடையாக நிற்கின்றது. ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கை எனும் முட்டையை இந்துத்துவ ஓட்டுக்குள் ஒளித்து கொண்டு வருவது என்கிற இந்துத்துவ கும்பலின் உத்தி பாராளுமன்ற முட்டுச் சந்துக்குள் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. இறுதியாக எஞ்சியதெல்லாம் இந்துத்துவ ஓட்டுக்குள் இருக்கும் கூ முட்டை தான்.

இந்தப் பின்னடைவுகளை மறைத்துக் கொள்ள தோற்றுப் போன பாசிஸ்டின் வெறியோடு கலாச்சார அரங்கில் தமது பாசிச செயல்பாடுகளை இந்துத்துவ கும்பல் முடுக்கி விட்டுள்ளது. எந்த வகையில் முதலாளிய உலகிற்குக் கொடுதிருந்த பொருளாதார வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்திருப்பதால், கலாச்சார அரங்கை கைப்பற்றுவதன் மூலம் சமூகத்தை பிளவுபடுத்தி இந்து ஓட்டு வங்கியை உத்திரவாதப்படுத்திக் கொள்ளும் முனைப்பின் விளைவு தான் ரோஹித் வேமுலா, ஜே.என்.யு, மாட்டுக்கறி உள்ளிட்ட விசயங்களில் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வெறியாட்டம்.

முதலாளிய ஊடகங்களின் தாராளவாத ஜனநாயகப் பிரிவினருக்கோ ஆர்.எஸ்.எஸ் கும்பலின் போங்காட்டம் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. பரீட்சையில் மதிப்பெண் வாங்கும் பொறுக்கி மாணவனென்றால் கூட சகித்துக் கொள்ளத் தயாராக இருக்கும் இவர்கள் தேர்வில் முட்டை மதிப்பெண் வாங்கிய பொறுக்கி மாணவனாக மோடியைக் காண்கிறார்கள். அதனடிப்படையில் இருந்தே தங்களது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இந்தப் பிரிவினரின் (என்.டி.டீ.வி, சி.என்.என், ஹெட்லைன்ஸ் உள்ளிட்ட தாராளவாத ஜனநாயகப் பிரிவினர்) மெல்லிய முனகல்களை போர்க்குரலாக மாற்றிய பெருமை திருவாளர் மோடியையும் அவரது சமூக வலைத்தள அடிமைகளையே சாரும்.

இந்தியா எதிர்கொண்டு நிற்கும் சகல நோய்களுக்கும் தீர்வாக பரிந்துரைக்கப்பட்ட குஜராத்தின் 56 இன்ச் அகல மார்பு கொண்ட தாது புஷ்டி லேகியம், லாட்ஜ் மருத்துவர் கொடுக்கும் மருந்தைப் போல் சரியான நேரத்தில் கைகொடுக்கவில்லை என்பதை இரண்டாண்டுகளுக்கு முன் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருந்த நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினர் உணர்ந்துள்ளனர். வளர்ச்சி வேண்டுமென்றால் கொஞ்சம் ’அப்படி இப்படி’ இருந்தால் கூட பரவாயில்லை என்று பரந்த மனதோடு ப்ரவீன் தொகாடியா, சாமியாரிணி ப்ராச்சி, யோகி ஆதித்யநாத் போன்றவர்களைக் கூட ஓராண்டுகளுக்கும் மேலாக சகித்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்.

வங்கிக் கணக்கில் பத்து லட்சம் லட்சியம், சம்பளதாரர்களுக்கு வரிமான வரி விலக்கு நிச்சயம் என்கிற இவர்களின் இன்பக் கனவுகளின் மேல் கோதாவரி படுகையில் அம்பானி தோண்டியெடுத்த கழிவுகளைக் கொட்டியுள்ளார் மோடி. இவர்களுக்கு இப்போது புதிய லேகியம் தேவைப்படுகின்றது. ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் வாடிக்கையாளர்களில் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவினரான இவர்கள் இப்போது வெளிப்படையாகவே நேரங்கெட்ட நேரமாகப் பார்த்து ‘குஜராத் லேகியம்’ காலை வாரிவிட்டதென முனகத் துவங்கி விட்டனர்.

தங்களது வாடிக்கையாளர்களான நடுத்தர வர்க்கத்தினரின் ஒரு பிரிவினரிடையே தோன்றி வளரத் துவங்கியிருக்கும் அதிருப்தி மற்றும் மோடியின் தோல்விகளால் மெல்ல அதிகரித்து வரும் மூலதன உலகத்தின் அதிருப்தி இவ்விரண்டோடு சேர்த்து தாராளாவாத ஜனநாயகம் வழங்கும் விமர்சன சுதந்திரத்தின் மேல் இந்துத்துவ பாசிஸ்டுகள் தொடுத்திருக்கும் கொலைவெறித் தாக்குதலும் சேர்கிறது. இந்தப் பின்னணியில் இருந்து தான் முதலாளிய ஊடகங்களின் ஒரு பிரிவு ஜே.என்.யு விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக எடுத்துள்ள நிலைப்பாட்டை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

எனினும், இந்த விமர்சனங்களோடு கூடவே புதிதாக ஒரு மீட்பரை களமிறக்குவதற்கான கதவுகளை ஊடகங்கள் மூடி விடவில்லை.

ட்விட்டரில் மோடியை மிகத் தீவிரமாக விமர்சிக்கும் ராஜ்தீப் சர்தேசாய், அதே கையோடு ஆம் ஆத்மி கட்சியின் கீச்சுகளைப் பகிரவும் செய்கிறார் என்பது தற்செயலானது அல்ல. வாடிக்கையாளர்களை ஏமாற்றிய பழைய லேகியத்திற்கு பதிலாக எதிர்காலத்தில் புதிய லேகியத்தை சந்தைப்படுத்துவதற்கும் அதன் மூலம் தங்களது டி.ஆர்.பிக்களை தக்கவைத்துக் கொள்வதற்குமான கதவையும் திறந்தே வைத்துள்ளனர், எதிர்காலத்தில் புதிய லேகியத்திற்கு கிராக்கி ஏற்படும் போது அப்படியொன்றை ஊருக்கு முன் கடைபரப்பி டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கைப்பற்றி வைத்திருக்கும் முதலிடத்தில் அமர்வது இதன் பின்னே உள்ள சந்தை நலன்.

ஊடகங்களின் சந்தை நலன் ஒருபுறம் இருக்க, பொருளாதார அரங்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுகாலனியாக்க செயல்பாடுகள் சமூகத்தில் வர்க்கப் பிளவை மேலும் மேலும் கூர்மையடையச் செய்கின்றது. கலாச்சார அரங்கில் புகுத்தப்படும் பாசிச செயல்திட்டங்கள் அந்தப் பிளவை மேலும் ஆழமாகவும் அகலமாகவும் ஆக்குகின்றது. கொஞ்சம் முற்போக்கான தாராளவாத ஜனநாயகத்தின் பின்னே மறுகாலனியாக்க பொருளாதார தத்துவங்களை ஒளித்துக் கொள்ளும் வாய்ப்பை மோடி பறித்துள்ளார். மோடியை விமர்சிப்பதும், பாரதிய ஜனதாவின் கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளை எதிர்ப்பதும் தேசவிரோதமாக’ நிலைநாட்டப்பட்டுள்ளது. ’மறுகாலனிய வளர்ச்சியும்’ ‘பாசிச இந்துமயமாக்கமும்’ கைகோர்த்துள்ள நிலையில் இரண்டில் ஒன்றை ஏற்றுக் கொண்டு மற்றொன்றை மட்டும் எதிர்க்க முடியும் என்று நம்புகிறவர்கள் ஒன்று அம்பலமாகிறார்கள் அல்லது இந்துத்துவ கும்பலாம் ஒட்டுமொத்தமான எதிர்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தற்போதைக்கு முற்போக்குப் பாத்திரம் ஏற்றுக் கொண்டுள்ள முதலாளிய ஊடகங்களில் உள்ள ஒரு பிரிவினர் பொருளாதார விசயங்களின் மோடியின் கருத்தை ஏற்றுக் கொள்கிறவர்களாகவே உள்ளனர். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு அதிகரிக்கும் வேகம், பாசிசத்தின் முன்னெடுப்புகளைப் பொருத்து எதிர்காலத்தில் அவர்கள் எந்தப் பக்கம் நிற்பார்கள் என்பது முடிவாகும்.

அவர்களது முடிவை மோடி எதிர்மறையில் துரிதப்படுத்தும் போது புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் நேர்மறையிலேயே நிர்பந்திக்க வேண்டும்.

(6) இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி? காஷ்மீர் மாணவி நேர்காணல்

JNU நேரடி ரிப்போர்ட் 6:
http://www.vinavu.com/2016/03/18/jnu-ground-report-6-2/

“தோழர், எனது பெயர், புகைப்படம் மற்றும் வேறு அடையாள விவரங்களை நீங்கள் வெளியிடக் கூடாது என்கிற உத்திரவாதம் கொடுத்தால் தான் என்னால் பேச முடியும்”.

“ஏன்”



”உங்களுக்கே தெரிந்திருக்கும்.. இப்போது கண்ணையா குமாரை பயங்கரமான அரக்கனாக காட்டி விடலாம் என்கிற அவர்களது உத்தி பூமராங் ஆகி விட்டது. அடுத்து உமரை அப்படி சித்தரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். இப்போது புதிதாக வளாகத்தில் உள்ள காஷ்மீரிகளை குறிவைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்… எனவே “ஒரு காஷ்மீரி மாணவி” என்று மட்டும் குறிப்பிடுங்கள் போதும்”


“நிச்சயம் அவ்வாறே குறிப்பிடுகிறோம் தோழர்.. சரி, இந்தியா நூறு துண்டுகளாக உடையட்டும் என்கிற முழக்கத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?”

“இப்போது மட்டும் என்ன அது ஒரே துண்டாகவா இருக்கிறது?”

“நீங்கள் யோசித்து தான் பேசுகிறீர்களா?”

“இன்றைய நிலையில் காஷ்மீரிகளோ, வட கிழக்கு இந்தியர்களோ.. எங்களுக்கெல்லாம் யோசிப்பதற்கு நேரமில்லை. எங்களுக்காக நீங்கள் தான் யோசிக்க வேண்டும்”

“இப்படிக் குதர்க்கமாக பேசினால் எப்படி? ஏற்கனவே நீங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்கள் என்றல்லவா இங்கே பிரச்சாரம் செய்யப்படுகிறது?”

“நாங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்களா? நாங்கள் இந்தியாவை எந்தளவுக்கு வெறுக்கிறோமோ அதே அளவுக்கு பாகிஸ்தானையும் வெறுக்கிறோம். எங்களை சுதந்திரமாக விட்டால் போதும் பிழைத்துக் கொள்வோம்”

”இந்திய அரசு உங்களுக்காக நிறைய செலவு செய்கிறது நிறைய சலுகைகள் கொடுத்துள்ளது என்றெல்லாம் வெளியே பிரச்சாரம் செய்யப் படுகிறதே? அவ்வளவையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக பேசுவது நன்றி கெட்டத்தனம் என்றல்லவா ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்கிறார்கள்?”

”முதலில் எங்களுக்காக செலவு செய்கிறது என்று சொல்வதே பித்தலாட்டமான வாதம்… எங்களை வைத்து செல்வு செய்கிறது என்று சொல்ல வேண்டும். அப்படி செலவு செய்யப்படும் பணம் எங்கே போகிறது தெரியுமா? ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு. இராணுவம்தான் அத்தனை காசையும் தின்கிறது. இவர்களின் வேலை என்ன தெரியுமா? நல்ல வளமான இடத்தை ஆக்கிரமித்து முகாம் போட்டுக் கொள்கிறார்கள்.. அரசு ஒதுக்கும் காசில் நன்றாக குடித்து விட்டு பெண்கள் தனியே எதிர்ப்படும் போது அவர்கள் பார்க்கும் விதமாக தங்கள் ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்….. உங்கள் குடும்பத்துப் பெண் பிள்ளைகளை அந்த இடத்தில் வைத்து யோசித்துப் பார்த்தால் தான் உங்களுக்கு எங்கள் வலி புரியும்”

“இந்த மாதிரியான அத்துமீறல்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கிறதல்லவா?”

“அத்துமீறல்கள் என்று ஒரே வார்த்தையில் எங்கள் வாழ்க்கையை நீங்கள் சுருக்க முடியாது. ஒன்றரை லட்சம் மக்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.. சுமார் பத்தாயிரம் பெண்கள் அரை விதவைகளாக இருக்கிறார்கள்… அரை விதவை என்ற பதத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

”சொல்லுங்கள்”

”இந்தப் பெண்களின் கணவன்மார்களெல்லாம் இராணுவத்தால் ‘விசாரணை’ என்ற பேரிலோ அல்லது வேறு முகாந்திரங்களைச் சொல்லியோ அழைத்துச் செல்லப்பட்டவர்கள்… எத்தனையோ ஆண்டுகளாகியும் அவர்களெல்லாம் திரும்பவில்லை.. கட்டியவன் இருக்கிறானா செத்துப் போய் விட்டானா என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இறந்து விட்டான் என்று உத்திரவாதமாக தெரிந்தால் கூட மறுமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கலாம்.. அல்லது மனதை சமாதானப்படுத்திக் கொண்டு எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கலாம்.. தங்கள் கணவன்மார்களுக்கு என்ன நேர்ந்ததென்றே இவர்களுக்குத் தெரியாது… ஆண்டுக்கணக்கில் இப்படி அரை விதவைகளாகவே கழித்து வருகிறார்கள்…”

”இதெல்லாம் இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் வந்ததில்லையே…”

“எப்படி வரும்? ஜே.என்.யு விவகாரத்தில் பார்க்கிறீர்கள் அல்லவா? வேட்டையாடும் வெறியோடு எங்கள் மீது பாய்ந்து குதறும் வாய்ப்புக்காகத்தானே காத்திருக்கின்றன இந்த ஊடகங்கள்.. அரை விதவைகள் பற்றிச் சொன்னேன் அல்லவா..? அதே போல் எண்பதினாயிரம் அனாதைகளை உங்கள் இராணுவம் எங்களுக்குப் பரிசளித்துள்ளது தெரியுமா. இப்போது சொல்லுங்கள் இதெல்லாம் எங்களுக்கு உங்கள் அரசாங்கம் கொடுத்த சலுகைகளா?”

“ஆனால் இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் இந்தியாவின் மற்ற பகுதி மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடாது?”

“தோழர்.. புரிந்து கொள்ளுங்கள்.. அங்கே ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரனையோ போலீசையோ உளவாளியையோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.. நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது.. நாங்கள் எங்களைச் சுற்றி இருக்கும் யாரையும் நம்ப முடியாது. யாரையும், எதையும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் பிழைத்துக் கிடக்கவே முடியும்.. ஆள் தெரியாமல் யாரிடமாவது எதையாவது பேசப் போனால் ‘எல்லையைக் கடக்க முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் புகைப்படம் இதோ’ என்று மறுநாள் ரத்தம் தோய்ந்த எங்கள் சடலங்கள் தலைப்புச் செய்தியில் வந்து விடும்.. எப்போதும் யாரோ உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கும் அந்த உளவியல் சித்திரவதையை மற்றவர்கள் உணர்வது கடினம்.”

”ஆனால், இது ஒடுக்கப்படும் எல்லா மக்களும் எதிர் கொள்வது தானே? தண்டகாரண்யாவிலும் வட கிழக்கிலும் கூட மக்கள் இதே துயரங்களைத் தானே எதிர் கொள்கிறார்கள்?”

“நான் தெளிவாக ஒன்றைச் சொல்லி விடுகிறேன். நாங்கள் புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்திய துணைக்கண்டமெங்கும் ஒடுக்கப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். அவர்களோடெல்லாம் ஒரு ஐக்கியத்தைக் கட்டமைப்பதன் மூலம் தான் இந்திய ஆளும் வர்க்கத்தை வெல்ல முடியும் என்பதும் எதார்த்தமானது தான்… ஆனால், அப்படியான ஒரு ஐக்கியம் வரும் வரைக்கும் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? செத்து மடிய வேண்டுமா? என்றோ ஒரு நாள் வரும் புரட்சிக்காக இன்றைக்கு நாங்கள் பிணங்களை எண்ணி விளையாடிக் கொண்டிருக்க வேண்டுமா? எங்கள் மாநிலத்தில் மூன்றில் ஒருவர் உளவியல் ரீதியாக மன அழுத்த நோயால் (Dipression) பீடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? தோழர்… நாங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முதலில் உடனடியாக நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிய வைக்க வேண்டும்.. எங்கள் குரல்கள் நின்று விட்டால் குரல்வளைகள் அறுத்து எரியப்பட்டு விடும். ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்துபட்ட ஒற்றுமைக்காக நாங்கள் என்றுமே நிற்கிறோம்.. ஆனால் அதுவரை சும்மா இருக்க முடியாது..”

”சரி. இதை ஊடகங்கள் தான் கண்டு கொள்ள மறுக்கின்றன. ஆனால், நீங்கள் அதை ஊடகங்களிடம் எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளீர்களா?

”குனான் போஷ்புரா சம்பவங்களைப் பற்றி வாசித்திருப்பீர்களே… 90 பெண்கள் உங்கள் இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர். அதில் எட்டு வயது சிறுமியும் 84 வயது கிழவியும் அடக்கம். நாங்கள் என்ன செய்யட்டும்? உங்கள் இராணுவம் வரும் போது எங்கள் பெண்கள் தயாராக படுத்துக் கொள்ள வேண்டுமா? அதைத் தான் தேசபக்தி என்பீர்களா? ஒன்று தெரியுமா… இந்த சம்பவங்கள் அம்பலமான போது சில இந்திய பத்திரிகையாளர்கள், காஷ்மீரி பெண்களை அவர்களது கணவன்மார்களால் திருப்திபடுத்த முடியவில்லை என்பதால் தான் இந்திய இராணுவ வீரர்களை உறவுக்கு அழைத்துள்ளனர் என்று எழுதினர்..  இப்பேர்பட்ட ஊடகங்களிடமா எங்கள் வலிகளைச் சொல்ல முடியும் என்கிறீர்கள்?”

”தோழர்.. எங்களால் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது… ஆனால், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் காஷ்மீரி பண்டிட்டுகளை முன்னிறுத்திக் காட்டுகிறார்கள். நீங்கள் தான் பண்டிட்டுகளை விரட்டியடித்தீர்களாமே? பண்டிட்டுகளின் துயரம் மட்டும் துயரம் இல்லையா?”

”பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறியது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது தான்…. ஆனால், நீங்கள் கதையின் ஒரு பக்கத்தை மட்டுமே வாசித்திருக்கிறீர்கள். மறுபக்கத்தையும் பாருங்கள்.. நான் எனது அம்மாவிடம் இது பற்றி கேட்டிருக்கிறேன். பண்டிட்டுகள் வாழ்ந்த பகுதிகளில் திடீரென முஜாஹிதின்கள் பெயரில் சில நோட்டீசுகள் தோன்றியிருக்கின்றன. அதில் பண்டிட்டுகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. உடனடியா இந்திய இராணுவம் அவர்களை பாதுகாப்பாக இராணுவ ட்ரக்குகளில் ஏற்றி வெளியேற்றியது என்று என் அம்மா என்னிடம் சொல்லி இருக்கிறார்… நான் ஒன்று கேட்கிறேன்.. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு ஏதாவது பாதுகாப்புப் பிரச்சினை என்றால் அரசு என்ன செய்ய வேண்டும்? அவர்களைப் பாதுகாக்க வேண்டுமா வெளியேற்ற வேண்டுமா?”

“நீங்கள் இதை சதித்திட்டம் என்கிற கோணத்தில் மட்டுமே பார்க்கிறீர்களா?”

”இல்லை அப்படியும் ஒரு கோணம் இருக்கிறது என்பதை முன்வைக்கிறேன். மற்றபடி போராளிகள் பண்டிட்டுகளோடு முறையான ஒரு உரையாடலை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதும்… சுதந்திர காஷ்மீரில் அவர்களும் ஒரு அங்கம் என்பதையும் புரிய வைத்திருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தும் கூட.. அந்த வகையில் இதில் போராளிகளின் தவறும் உள்ளது. நான் கதையின் மறுபக்கம் என்று சொன்னதில் வேறு சில அம்சங்களும் உள்ளன,,,”

“அதைப் பற்றி விளக்குங்களேன்”

”ஷேக் அப்துல்லா நிலச்சீர்திருத்தத்தை அமல் செய்வதற்கு முன் பெரும்பாலான நிலங்கள் காஷ்மீரில் சிறுபான்மையினராக இருந்த பண்டிட்டுகளிடம் தான் இருந்தது. நாங்களெல்லாம் அவர்களிடம் கூலிகளாக இருந்தோம். நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட்ட பின்பு அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் துவங்கியிருந்தனர். அதற்கும் முன் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் எனது தாத்தாவின் காலத்தில் பண்டிட்டுகள் தான் பெரும்பான்மையான அரசு வேலைகளில் இருந்தார்கள்.. நாங்களோ படிப்பறிவற்றவர்கள்.. எங்களை அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே நடத்தினர். எங்கள் சமூகங்களுக்குள் கலப்புத் திருமணம் போன்ற எந்த சம்பந்தங்களும் ஏற்பட்டதில்லை… நாங்கள் கிட்டத்தட்ட இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டோம். சொல்லப் போனால் பண்டிட்டுகள் வெளியேறியது தான் நான் இப்போது ஜே.என்.யுவில் சேர்ந்து படிக்கவும், உங்கள் முன் அமர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருக்கவும் காரணம்”

”சம உரிமை என்கிற அளவில் சொல்கிறீர்கள்… மற்றபடி நடைமுறையில் பண்டிட்டுகளோடு உங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தன?”

”தோழர் அதெல்லாம் மிகப் பழைய விவகாரங்கள்… சிலவற்றை எனது தாத்தா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் அரசு பதவிகளில் இருப்பதால் எங்களை கிள்ளுக்கீரைகளாகவே மதிப்பார்கள்.. உதாரணமாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாங்கள் எங்கள் நிலத்தைப் பதிவு செய்யச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்… ஒரு பண்டிட் என்ன செய்வார் என்றால்.. பத்திரத்தின் வாக்கியங்களை வேண்டுமென்றே தவறாக பொருள் வரும் படி எழுதி விடுவார்… பிறப்பு இறப்பு சான்றிதழ் தரும் அதிகாரி என்றால் குலாம் முகமது என்கிற பெயரை வேண்டுமென்றே கும்மு என்று எழுதி விடுவார்.. இதையெல்லாம் சரிசெய்ய நாங்கள் ஆண்டுக் கணக்கில் அரசாங்க அலுவலங்களின் படிகளில் ஏறி இறங்க வேண்டும்… இந்த மாதிரி நிறைய சொல்லலாம்.. ஒன்று சொல்லுங்கள், பண்டிட்டுகள் உள்நாட்டு அகதிகளாக இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் நீலிக்கண்ணீர் வடிக்கிறதே… எங்காவது ஒரு பண்டிட் பிச்சையெடுப்பதையோ சோற்றுக்கே சிரமப்படுவதையோ காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்..”

“இருபதாம் நூற்றாண்டுத் துவக்கத்தின் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் கதையைப் போன்றதுதானோ இது?”

”உண்மை தான்.. சமீபத்தில் நான் ஒரு கட்டுரை வாசித்தேன். தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை.. அவர்களை திராவிட இயக்கம் தான் திட்டமிட்டு வெளியே விரட்டியடித்ததைப் போல் எழுதியிருந்தார்..”

”எல்லா பார்ப்பனர்களும் ஒன்றே போல் சிந்திப்பது ஒரு ஆச்சர்யம் தான்.. சரி, இந்து பண்டிட்டுகளை விடுங்கள்.. ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் சுதந்திர கோரிக்கை குறித்து என்ன கருதுகிறார்கள்?”

”ஜம்மு மற்றும் லடாக் பகுதி மக்கள் விடுதலையை ஆதரிக்கவில்லை. விடுதலைக்கான கோரிக்கை காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் தான் உயிர்ப்போடு இருக்கிறது. இதில் என்னுடைய கருத்து என்னவென்றால், மற்ற மக்கள் பிரிவுகளிடையே முறையான ஒரு உரையாடலை முன்னெடுக்க போராளிகள் தவறி விட்டார்கள் என்றே கருதுகிறேன். காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள இசுலாமிய மத அடையாளம் மற்றவர்களை நெருங்கவிடாமல் செய்கிறது”

”மத அடையாளம் பற்றிக் குறிப்பிட்டீர்கள்… வகாபிசம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.. எங்கள் பக்கத்தில் முசுலீம்களிடையே வகாபிய போக்கு தற்போது செல்வாக்கோடு வளர்ந்து வருகிறது…”

”சரியான கேடுகெட்டவர்கள் இந்த வகாபிகள்.. இப்போது காஷ்மீரில் தர்காக்களை இடிக்க வேண்டும் அது இது என்று உளறிக் கொண்டு திரிகிறார்கள். வகாபிய இழிமகன்கள் இந்திய அரசின் உளவாளிகளாக இருப்பார்கள் என்று எனக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் உள்ளது”

“கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களே?”

”மேலும் கடுமையான வார்த்தைகள் கிடைக்கவில்லை தோழர். வரலாற்று ரீதியில் எங்களுக்கு இசுலாம் அறிமுகமானதே சூஃபி ஞானிகளின் வழியே தான். அது மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது என்பதை நான் சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்… இப்போது வகாபியம் என்ன செய்கிறதென்றால் எங்கள் சுதந்திர போராட்டத்திற்கு இனம் கடந்து மத சாயம் பூசுகிறது. இசுலாமிய வெறியையும் பாகிஸ்தானையும் தாலிபானையும் முடிச்சுப் போடுவதும் அதன் தொடர்ச்சியாக எங்கள் சுதந்திரப் போராட்டத்தை பயங்கரவாதமாக கட்டமைத்துக் காட்டுவதும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எளிதானது தானே? அந்த வகையில் இவர்கள் மறைமுகமாக இந்திய ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்கிறார்கள்”

”எப்படி அவ்வளவு உத்திரவாதமாகச் சொல்கிறீர்கள்?”

“சமீபத்தில் ஒரு தர்ஹா இடிக்கப்பட்டது… எல்லாருக்கும் அதை இடித்த வஹாபிய கும்பல் யாரென்பது நன்றாகவே தெரியும்.. இந்தியாவுக்கும் தெரியும் – அங்கே தான் இந்தியாவுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாதே.. ஆனால், ஒருவர் மீது கூட போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை. தர்ஹா இடிக்கப்பட்ட பின் மக்களிடையே இரண்டு பிரிவினரும் அடித்துக் கொண்டனர். இந்த சண்டை சச்சரவுகளின் போக்கில் எங்களது சுயநிர்ணய உரிமை குறித்த கேள்வியே மறந்து போனது. இந்திய ஆளும் வர்க்கம் எதிர்பார்ப்பதும் இதைத் தானே?”

”போராளி இயக்கத்திற்குள் சாதிய வேறுபாடுகள் உள்ளதெனச் சொல்லப்படுவது பற்றி?

”பக்கர்வாலா மற்றும் குஜ்ஜார் சாதி இசுலாமியர்கள் அனேகமாக போராளிகளாகவும், சையது, கான் போன்ற உயர்சாதிகளாக கருதப்படும் இசுலாமிய பிரிவினர் மட்டுமே இவ்வியக்கங்களின் தலைமையில் இருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. இந்தக் கூற்று முழுமையாக உண்மையும் அல்ல முழுப்பொய்யும் அல்ல. சையது, கான் பிரிவினரும் கூட போராளிகளாக மடிந்துள்ளனர். இசுலாம் காஷ்மீருக்கு அறிமுகமான போது அங்கே இருந்த அத்தனை சாதிப் பிரிவுகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டது. ஏற்றத்தாழ்வுகள் எந்த மாற்றமும் இன்றி நூற்றாண்டுகளாக அப்படியே நிலவி வந்தன. போராளி இயக்கங்களை விடுங்கள், காஷ்மீரி இசுலாமிய சமுதாயத்தில் பல்லாண்டுகளாக இந்த சாதிப் பாகுபாடு நிலவி வந்தது. இப்போதும் கூட சையது மற்றும் குஜ்ஜார் பிரிவினரிடையே திருமண பந்தங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றல்ல. அவ்வாறு அரிதாக நடக்கும் திருமண உறவுகள் கூட வர்க்கச் சமன்பாட்டை கணக்கிலெடுத்துக் கொண்டே நடக்கின்றன.  விமர்சனங்கள் வைப்பதென்றால், சமூகத்தில் நிலவிய சாதிப் பாகுபாடுகளை போக்குவதற்கு போராளி இயக்கங்கள் முழு மனதோடு முயற்சிக்கவில்லை என்று வைக்கலாம்”

”இந்திய இராணுவத்தால் நீங்கள் எதிர் கொள்ளும் துன்பங்களைப் பற்றிச் சொன்னீர்கள்… ஈழம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

”ஓ… நிறைய.. எங்களுக்கெல்லாம் பிரபாகரன் ஒரு மிகப் பெரிய நாயகன் தெரியுமா? அவரை எங்கள் சகோதரராகத் தான் நாங்கள் கருதுகிறோம். பிரபாகரன் மரணம் அடைந்த அன்று நாங்கள் பள்ளத்தாக்கில் பந்த் அனுசரித்தோம்… அதே போல் பிரபாகரனின் மகன் புகைப்படங்கள் வெளியான போதும் நாங்கள் எங்கள் குழந்தைகளில் ஒருவன் இறந்து போனதைப் போல் உணர்ந்தோம்.. அன்றைக்கு மக்கள் கூடும் பொதுவிடங்களில் எல்லாம் மரண வீட்டைப் போல் அமைதி நிலவியதை நானே பார்த்தேன்…”

“பெரியார், திராவிட இயக்கங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

“காஷ்மீரில் இருந்த வரை கேள்விப்பட்டதில்லை.  இங்கே ஜே.என்.யு வந்த பிறகு நிறைய கேள்விப்படுகிறேன்… பெரியாரை வாசிக்க வேண்டும் என்று உத்தேசித்திருக்கிறேன்”

“தமிழ்நாட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்”

”ஓ… நீங்கள் மற்ற இந்தியர்களைப் போல் அல்லவென்று தெரியும். வடக்கே இருக்கும் தேசியக் கற்பிதங்கள் உங்களிடம் செல்லாது என்று தெரியும். ஆர்.எஸ்.எஸ் போற்றிக் கொண்டிருக்கும் தேசியம் என்கிற சித்திரத்தை நீங்கள் மதிப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் எல்லைக் கோடு எங்கள் பக்கத்தில் தானே இருக்கிறது? மேலும் நாங்கள் முசுலீம்களாகவும் பிறந்து தொலைத்து விட்டோமே?”

”சரி, பாரதிய ஜனதா பி.டி.பி கூட்டணி பற்றி சொல்லுங்களேன். பி.டி.பி ஒரு பிரிவினைவாதக் கட்சி என்றல்லவா அறியப்படுகிறது.. அப்படி இருக்கும் போது பாரதிய ஜனதா எப்படி அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டது?”

”தவறான தகவல்… பி.டி.பி போலி விடுதலை பேசும் – அதையும் மென்மையான குரலில் பேசும் – ஒரு துரோகத்தனமான கட்சி. போராளி இயக்கங்களில் இருந்து சரணடையும் கைக்கூலிகள் மற்றும் இராணுவமே உருவாக்கி வைத்திருக்கும் உளவாளிகளின் கட்சி தான் பி.டி.பி. நீங்கள் தோழர் தானே.. உங்களுக்குப் புரியும் விதமாக சொல்கிறேன் – இவர்கள் முதலாளிகளே உருவாக்கி விடும் தொழிற்சங்கங்களைப் போன்ற கருங்காலிகள்”

“ஆனால், அவர்கள் தானே தேர்தலில் வென்றார்கள்?”

”உண்மை தான்.. மோடியின் நாடாளுமன்ற பிரச்சாரத்திற்கு ஜம்மு ஏமாந்து போனது…. அதே நேரம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் உமர் அப்துல்லா கெட்ட பெயர் வாங்கியிருந்தார்.. இதெல்லாம் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கு சாதகமாகப் போய் விட்டது.. ஆனால் இந்தக் கூட்டணி பி.டி.பியின் அரசியல் தற்கொலை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“ஒரு சிறிய உதாரணம் மட்டும் சொல்கிறேன்.. சாதாரணமாக இராணுவத்தால் கொல்லப்படும் போராளி ஒருவரின் சவ ஊர்வலத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.. ஆனால், சமீபத்தில் இறந்து போன முப்தி முகமதுவின் சாவுக்கு சில ஆயிரம் மக்கள் கூட வரவில்லை.. ஒரு அனாதைத் தெருநாயைப் போல முப்தியை குழியில் இட்டு மூடினார்கள்..”

”சரி தோழர்.. எமது கேள்விகள் முடிந்தன. எங்களுக்கு நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?…”

”தமிழ்நாட்டு மக்களை எங்கள் பக்கம் நிற்கச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறேன்.. “எங்கள்” என்பதில் காஷ்மீரிகள் மட்டுமல்ல ஜே.என்.யுவையும் சேர்ந்தே குறிப்பிடுகிறேன்.. மிக்க நன்றி!”

(5) JNU மாணவர் விஷ்மய் நேர்காணல்

JNU நேரடி ரிப்போர்ட் 5:
http://www.vinavu.com/2016/03/17/jnu-ground-report-5/

”பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளையும், கல்வி முறையையும், கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களையும் இந்துத்துவம் குறி வைப்பது இது முதல் முறை அல்ல. ஒரு நீண்ட தாக்குதல் வரிசை நம்முன் இருக்கிறது.. அந்த அடிப்படையில் ஜே.என்.யு மீதான தாக்குதல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

”சரி தான்.. இந்த சண்டையில் நாங்கள் மட்டும் எதிரணியில் நிற்கவில்லை.. எங்கள் வரிசையில் சென்னை ஐ.ஐ.டி, பூனா திரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்று நிறைய பேர் நிற்கிறார்கள். ஆனால், இவைகளெல்லாம் வெறும் தாக்குதல் என்கிற நிலையில் தான் உள்ளது. அவர்கள் இறுதி வெற்றியை இன்னமும் அடைந்து விடவில்லை.. மாணவர் சமுதாயம் அத்தனை சுலபத்தில் அவர்களை வெற்றியடைய விடாது”



AISA அமைப்பின் நீண்ட கால உறுப்பினரான விஷ்மய் மிக நிதானமாகப் பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விமர்சன கண்ணோட்டத்தோடும், அது முன்வைக்கும் தேசியத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தோடும் அணுகுகிறார். தங்களது போராட்டங்கள் குறித்தும், தற்போதைய நெருக்கடியையும் மிகவும் நம்பிக்கையோடு அலசுகிறார். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தது ஜே.என்.யு வளாகத்தில் அமைந்திருக்கும் நிர்வாக அலுவலக கட்டிடத்திற்கு நேர் எதிரே இருந்த பூங்காவில்.

பூங்காவிற்கும் அலுவலக கட்டிடத்திற்கும் இடையில் இருந்த பகுதியில் ஜே.என்.யு-வின் சமூக அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பெண்களுக்கான கல்வி மையத்தின் பேராசிரியர் அருணிமா “தேசியம்” குறித்த கற்பிதங்கள் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். சுற்றிலும் சில ஆயிரம் மாணவ மாணவிகள் அமைதியாக அந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஹோண்டா தொழிற்சங்கத்திலிருந்து வந்திருந்த ஒருசில தோழர்களும் அந்தக் கூட்டத்தினிடையே காணப்பட்டனர்.

”தோழர், ஒவ்வொரு தாக்குதலின் போதும் அவர்கள் அடுத்த தாக்குதலை நீங்கள் எந்த விதிகளின் அடிப்படையில் எதிர் கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயித்து விடுகிறார்கள். இந்த முறையும் கூட ஜே.என்.யு மாணவர்கள் தங்கள் ”தேசி பக்தியை” உத்திரவாதம் செய்ய வைத்துள்ளார்கள். தேசியம், அரசியல் சாசனம் போன்றவற்றின் புனிதத்தை ஜே.என்.யு ஏற்றுக் கொண்டு விட்டதாக சொல்லலாமா?

”நான் அப்படிக் கருதவில்லை தோழர். எந்த விவாதங்களிலும் இது வரை ‘விலக்கப்பட்டதாக’ புனிதமானதாக கருதப்பட்ட தேசியத்தை நாங்கள் விவாத மேடைக்கு இழுத்து வந்துள்ளோம் என்றே கருதுகிறேன்”

“அப்படியென்றால், நீங்கள் அரசியல் சாசனத்தின் புனிதம், நாட்டின் எல்லைக் கோட்டின் மீது சொல்லப்படும் புனிதம் போன்றவைகளை உள்ளடக்கி அவர்கள் முன்வைக்கும் தேசியம் பற்றிய கற்பிதங்களை எதிர்ப்பீர்கள் என்று எடுத்துக் கொள்ளவா?”

”தோழர், இந்த விவாதங்களில் எமது அமைப்புக்கென்று உள்ள நிலைப்பாடுகளின் வரம்பில் நின்று நான் உரையாடுவேன் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி விவாதம் என்று வந்த பின் எல்லா முரண்பட்ட கருத்துக்களும் மேடைக்கு வந்தாக வேண்டும் அல்லவா? ஆர்.எஸ்.எஸ் சொல்லும் தேசியம் பற்றிய கற்பிதங்களும், நாங்கள் சொல்லும் தேசியமும் மட்டுமில்லை, சுயநிர்ணய உரிமையை முன்வைப்பவர்களின் வாதங்களும் கூட விவாத மேடைக்கு வந்தாக வேண்டும் தானே? அனைத்து கருத்துக்களும் மோதிக் கொள்ளும் விவாதத்தின் போக்கில் சரியானது தன்னை நிலை நிறுத்திக் கொள்ளட்டும்”

“சரிசமமாக வைத்து விவாதிக்கும் அருகதை ஆர்.எஸ்.எஸ்-க்கு உண்டா என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. அந்த விவாதத்திற்குள் நான் செல்லவில்லை. தற்போது சூடாக நகர்ந்து கொண்டிருக்கும் பிரச்சினையின் தாக்கத்தில் யு.ஜி.சி ஆக்கிரமிப்பையும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளையும் மறந்து விட்டீர்கள் தானே?”

“இல்லை.. மாணவர்களின் நினைவுத் திறனை அவர்கள் குறைத்து மதிப்பிட்டார்கள் எனில் அதைத் தவறு என்பதைப் புரிய வைப்போம். அவர்கள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் சூழ்ந்து நின்று தாக்குகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை, அதில் ஏதாவது ஒரு முனையில் அவர்களை முறியடித்து விட்டால் மொத்தமாகச் சரிந்து விடுவார்கள் என்பது. அவர்களின் திட்டங்கள் ஒவ்வொன்றும் உள்ளூர பிணைக்கப்பட்டவை. புதிய கல்விக் கொள்கை கல்வி உதவித் தொகையில் கைவைக்கும் திட்டமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.. நாங்கள் யு.ஜி.சி முற்றுகை போராட்டத்தைத் துவங்கினோம்.. மாணவர்களின் கவனத்தைக் ரோஹித்தைக் கொன்றதன் மூலம் கலைக்கப் பார்த்தார்கள், ரோஹித்திடமிருந்து பார்வையை விலக்க ஜே.என்.யு-வில் கால் வைத்துள்ளார்கள். நீங்கள் ஒரு முனையில் அவர்களை வென்று முன்னேறினீர்கள் என்றால் அனைத்துக்கும் மையமாக உள்ள நாக்பூரை அடைவீர்கள்”

”ஜே.என்.யுவின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதல் ஓய்ந்த பின் வளாகத்தின் சூழலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்”

“ஜே.என்.யு வளாகம் என்பது இந்த நாட்டிற்குள் தானே இருக்கிறது? எனவே மொத்த நாடும் என்ன நிலைக்குச் செல்கிறதோ அதைத் தான் இந்த வளாகமும் பிரதிபலிக்கும் என்று கருதுகிறேன். எனது யூகம் என்னவென்றால், நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது – அந்த வாய்ப்பு நமக்கு மட்டுமின்றி அவர்களுக்கும்(ஆர்.எஸ்.எஸ்) சேர்த்தே கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நாட்டின் அரசியல் சூழலை முன்னேற்றப் பாதையில் செலுத்தும் சாத்தியம் எமக்கும், அதில் நாம் தோற்றுப் போனால் பிற்போக்கான பாதையில் செலுத்தும் சாத்தியம் அவர்களுக்கும் உள்ளது. ஆக, இந்தப் பிரச்சினையில் வெற்றி தோல்வி என்பதைக் கடந்து, விவாத மேடைக்கு வந்துள்ள தேசியத்தை முழுமையான பரிசோதனைக்கும் அலசலுக்கும் உட்படுத்த வேண்டும். மிக அரிதான சந்தர்பங்களில் தான் இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்”

“உங்கள் போராட்டம் இந்த வளாகத்திற்குள் மட்டுமே முடங்கிக் கிடப்பதாக இருக்கிறதே… தில்லி நடுத்தர வர்க்க மனநிலையில் உறைந்து போயிருக்கும் இந்துத்துவ அரசியலையும் அது ஏற்படுத்தியிருக்கும் ஒரு பொதுபுத்தியையும் உங்களால் இந்த வளாகத்திற்குள் இருந்து கொண்டு மாற்றியமைத்து விட முடியும் என்று கருதுகிறீர்களா?”

“குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் தோழர். வளாகத்திற்கு வெளியே நாங்கள் செல்லவில்லை என்பது முழு உண்மையில்லை. அதே போல் வளாகத்திற்கு வெளியே உள்ளவர்கள் எங்கள் அரசியலை சுத்தமாக புரிந்து கொள்ளவில்லை என்பதிலும் முழு உண்மையில்லை. நீங்களே கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்… ஹோண்டா ஆலைத் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிக்க வந்துள்ளார்கள். மாருதி தொழிலாளர்களும் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்துத்துவம் மக்கள் மத்தியில் விதைத்துள்ள நச்சுக் கருத்துக்களை முழு வீச்சில் எதிர்த்து முறியடிக்கும் அளவுக்கு நாங்கள் மக்களோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பது ஓரளவுக்கு உண்மைதான். மேலும் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஏற்கனவே தேசத்தின் புனித பிம்பம் என்கிற நிலைநிறுத்தப்பட்ட ஒரு உளவியல் உதவி செய்கிறது.. நாமோ மக்களின் மனங்களில் ஆழமான படிமங்களாய் உறைந்து விட்ட விசயங்களைக் கையாள்கிறோம். சொல்லப் போனால், நாம் எதிர் திசையில் பயணிக்கிறோம். உண்மை இருப்பது நாம் செல்லும் திசையில் தான் என்பதை மக்களை ஏற்றுக் கொள்ள வைப்பது மிகவும் கடினமான பணி. இப்போது தானே இவையெல்லாம் விவாதத்திற்கு வந்துள்ளது… போகப் போக நிலைமை மாறும். மோடியின் பொருளாதார தோல்விகள் எழுப்பும் நெருப்பின் மீது தேசியம் என்கிற பட்டுத்துணியைப் போட்டு மூடி விட நினைக்கிறார்கள்.. அது இறுதியில் எமக்கே சாதகமாக முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது…”

“ஆனால், இடதுசாரி சக்திகள் பிளவுண்டு கிடக்கிறதே? ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ரீதியில் ஒன்று திரட்டப்பட்ட சக்தியாக இருக்கும் அதே நேரம் அவர்களுடைய தாக்குதல்களை எதிர்கொள்பவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள் அல்லவா?”

“இந்தப் பிளவுகள் ஏற்பட்டதற்கு எப்படி பிரத்யேகமான வரலாற்றுக் காரணங்கள் இருந்ததோ அதே போல் மீண்டும் நாமெல்லாம் ஒரு நாள் இணைவதற்குத் தேவையான வரலாற்றுத் தேவைகளை இந்துத்துத்துவ பாசிசமே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது”

“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

”தமிழ்நாட்டிலிருந்து ஒரு தோழர் வந்து ஜே.என்.யு வளாகத்தில் அமர்ந்து என்னோடு உரையாடுவார் என்றோ, என்னால் அவரோடு சுமார் ஒரு மணிநேரம் முரண்படாமல் பேச முடியும் என்றோ சில வருடங்களுக்கு முன் நான் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டேன். உண்மையில் அவர்கள் நம்மை ஒடுக்குவதாக நினைத்துக் கொண்டு தங்களின் கல்லறையைத் தாங்களே தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்”

நாங்கள் பேசிக் கொண்டே மெல்ல பூங்காவில் இருந்து வெளியே வந்தோம்… மாலை மணி ஏழாகியிருந்தது. வானம் வழங்கிய வெளிச்சத்தில் செம்மை ஏறியிருந்தது. மெல்லக் குளிர் பரவத் துவங்கியிருந்தது. அருணிமாவின் உரையை கை தட்டல்களோடு மாணவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். தமிழகத்திலும் கேரளத்திலும் தேசியம் என்கிற கற்பிதம் மக்களிடம் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதைக் குறித்து பேராசிரியர் அருணிமா பேசிக்கொண்டிருந்தார். பெரியாரின் தாக்கம் தமிழகத்தில் தேசியம் குறித்த புரிதலில் ஏற்படுத்தியிருக்கும் செல்வாக்கை விவரித்துக் கொண்டிருந்தார். அவரது உரையில் பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் வடக்கு மற்றும் வடகிழக்கு மாணவர்கள் ஆச்சர்யத்தோடு வரவேற்றுக் கரவொலி எழுப்பிக் கொண்டிருந்தனர். விஷ்மய் ஒரு புன்னகையோடு பேசினார்..

“பார்த்தீர்களா தோழர்? முன்பெல்லாம் நாங்கள் இங்கே கூட்டம் போட்டால் சில பத்து மாணவர்கள் தான் வருவார்கள். இப்போது ஆயிரக்கணக்கான மாணவர்களை நம்மை நோக்கித் தள்ளி விட்டுள்ளார்கள். பெரியாரை நாங்கள் கேள்விப்பட்டதோடு சரி. இப்போது அவரைக் குறித்து அறிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறோம். இந்துத்துவத்திற்கு எதிரான விவாதங்களில் சாத்தியமான எல்லா ஆயுதங்களையும் எடுக்க நம்மை அவர்கள் நிர்பந்தித்துள்ளார்கள்… இந்தப் போராட்டம் நிச்சயமாக முன்னேறிச் செல்லும் என்று நான் நம்புகிறேன்”

இந்த எதார்த்தம் தான் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய சிக்ஷக் மண்டல், அகில பாரதிய வித்யார்த்தி பரிசத், வித்யா பாரதி, இதிகாஸ் சங்கலன் சமிதி போன்ற பரிவார அமைப்புகளைக் கொண்டு கல்வித் துறையை ஆக்டோபசின் கரங்களைப் போல் வளைத்துள்ளது இந்துத்துவ கும்பல். கல்வித் திட்டத்தை மேலிருந்து இந்துத்துவமயமாக்குவது, அதற்கு எழும் எதிர்ப்புகளை ஏ.பி.வி.பி கும்பலைக் கொண்டு கீழிருந்து மடையடைப்பது என்கிற ஆர்.எஸ்.எஸ் திட்டத்திற்கு அவர்களே எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் எதிர்ப்புகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

இந்துத்துவ கும்பல் கல்வித்துறையின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள கொடூரத் தாக்குதல்கள் பல்வேறு முனைகளில் இருந்து தொடுக்கப்பட்டுள்ளன. ஒரு புறம், புதிய கல்விக் கொள்கை-2015 என்கிற பெயரில் மோடி அரசு அறிமுகப்படுத்தவுள்ள கல்வித் துறை சீர்திருந்தங்கள் கல்வித் துறைக்குள் கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டுக் கொள்ளையர்களும் நுழைய வழிவகை செய்கின்றது. நாம் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயிலிருந்தும் கல்வி வரி என்கிற பெயரில் வசூலிக்கப்படும் தொகையிலிருந்து தான் அரசு சார்பாக நடத்தப்படும் உயர் கல்வி நிலையங்களும், மற்ற அரசு கல்வி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

தற்போது காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களின் படி, கார்ப்பரேட் நிறுவனங்களின் கல்வி வியாபாரக் கூடங்களுக்கும் நமது வரிப்பணம் திசை திருப்பி விடப்படும். மேலும், இடைநிலை பள்ளிக் கல்வியிலிருந்தே மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவது என்கிற பெயரில் நவீன குலக்கல்வி முறையையும் இத்திட்டம் உள்ளடக்கி இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்திற்காக கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு அத்துக்கூலிகளாக மாணவர்களை பிடித்துக் கொடுக்கும் ஆள்பிடி ஏஜெண்டாக தனது அரசு இருக்க வேண்டும் என்பதற்காகவே குழந்தைத் தொழிலாளர் சட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் கல்வி வழங்க வேண்டிய கடமையில் இருந்து முற்றாக தனது பொறுப்புகளைக் கைகழுவ உள்ள மோடி அரசு, இன்னொரு பக்கம் அப்படி வழங்கப்படும் கல்வி முழுவதும் காவிமயமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் அவிழ்த்து விடப்படும் அறிவியலுக்குப் புறம்பான உளறல்களின் தொகுப்புகளாக பாட புத்தகங்களை மாற்றி வருகிறது. புராண காலத்தில் விமானம், விநாயகனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி, மகாபாரதத்தில் அணுகுண்டு போன்ற புளுகு மூட்டைகளையே இனி வரலாறாக மாணவர்கள் படிக்க உள்ளனர்.

மாணவர்களின் சுயசிந்தனையை ஒழித்துக் கட்டி, அவர்களை இந்து வெறியேறிய மிருகங்களாகவும் கார்ப்பரேட்டுகளின் உழைப்புச் சுரண்டலை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் அடிமைகளாகவும் மாற்றியமைப்பதே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டம். பசு ஏன் புனிதம் என்றோ, சம்பூகனைக் கொன்ற ராமனை ஏன் தேசிய நாயகனாக ஏற்க வேண்டுமென்றோ கேள்வி எழுப்புவது தேசியத்தையே மறுப்பதற்கு ஒப்பானதாக சித்தரிக்கப்படுகிறது. ஜே.என்.யு விவகாரத்தை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தில்லி போலீசார் சமர்பித்த அறிக்கையில் மாணவர்களின் தேச விரோத செயல்களாக மாட்டுக்கறி தின்பதையும், மகிஷாசுரனை வணங்கியதையும் குறிப்பிட்டிருப்பது வெறும் முட்டாள்தனங்கள் அல்ல. இவையெல்லாம் இனி தேச துரோகங்கள்!

மோடி முழு மெஜாரிடியுடன் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் கும்பல் களத்திலிறங்கி விட்டது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக காத்திருந்த திருடனின் கையில் வாக்காளர்கள் மே 2014ல் சாவியைக் கொடுத்தனர். ”வளர்ச்சி” என்கிற முகமூடியை உடனடியாக தூக்கியெறிந்து விட்டு இந்துத்துவ செயல்திட்டங்களை முழுமூச்சோடு அமல்படுத்த துவங்கினர். இதற்கிடையே 50 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கிடைத்த அடி, தில்லியிலும் பீகாரிலும் கிடைத்த மரண அடி உள்ளிட்ட தோல்விகள் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வேகத்தை மட்டுப்படுத்தும் என்று முதலாளிய அறிஞர்கள் கனவு கண்டனர்.

சர்வதேச ஏகாதிபத்திய மூலதனத்திற்கு தொண்டூழியம் செய்வதை சலசலப்புகளின்றியும் கவனச் சிதறல்களின்றியும் மோடி செய்ய வேண்டும் என்பது முதலாளிய அறிஞர்களின் எதிர்பார்ப்பு. ஆர்.எஸ்.எஸ் கும்பலோ மூலதன அடிமைச் சேவகத்திற்கு புதிய விளக்கங்களை எழுதிக் கொண்டிருக்கிறது. ஒரே கல்லில் கார்ப்பரேட் சேவையையும் காவிமயமாக்கலையும் நிறைவேற்றி விடத் துடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கும்பலைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றி தோல்விகளை அவர்கள் இரண்டாம் பட்சமாகவே கருதுகின்றனர். இப்போதைய அதிகாரத்தைக் கொண்டு ஒவ்வொரு துறையாக – அதிலும் குறிப்பாக கல்வித் துறையை – மாற்றியமைத்து விட்டால் அதன் பாதிப்புகள் பல்லாண்டுகளாகத் தொடரும் என்றும் அதன் பலன்களை அறுவடை செய்வது சுலபம் என்று கணக்குப் போடுகிறது,

எனினும், காவி பயங்கரவாதிகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டியின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு வந்த நெருக்கடியை பு.மா.இ.மு மாநிலம் தழுவிய அளவில் எடுத்துச் சென்று சிறப்பான பதில் மரியாதை வழங்கியதில் பின்வாங்கியது காவி கும்பல். பூனா திரைப்படக் கல்லூரியும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் பணிய மறுத்து இன்றளவும் போராட்ட உறுதியோடு நிற்கின்றன. ஜே.என்.யுவின் சிலிர்ப்பு அடங்கும் முன் அலகாபாத் பல்கலைக்கழகத்திலிருந்து கலகக்குரல் எழுகின்றது.

பேராசிரியர் அருணிமாவின் உரை முடிந்து ஹோண்டா தொழிலாளர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். ”செவ்வணக்கம் செவ்வணக்கம்… நக்சல்பாரிக்கு செவ்வணக்கம்!” “ஒன்றே பாதை ஒன்றே பாதை நக்சல்பாரி ஒன்றே பாதை!”. சில மாணவர்களிடம் புழங்கிக் கொண்டிருந்த புரட்சிகர முழக்கங்களை ஆயிரக்கணக்கான மாணவர்களின் குரல்வளையில் திணித்து பெரும் சாதனையைப் புரிந்துள்ளது 56 இன்ச் மார்பு கொண்ட மத்திய அரசு. பாசிசத்தை எதிர்க்கும் இந்தப் போரில் தாம் மட்டும் தனியே நிற்கவில்லை என்பதை மாணவர்கள் தெளிவாக உணர்ந்து விட்டனர். மற்ற ஒடுக்கப்படும் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை நோக்கி மாணவர்கள் திரும்பியுள்ளனர்.

ஜே.என்.யு மாணவர்களுக்கு மக்களோடு ஐக்கியப்படுவதிலும், பாசிச எதிர்ப்பிலும் ஒளிமிக்க பாரம்பரியம் ஒன்றுள்ளது என்றாலும், இம்முறை அதை மீண்டும் நிரூபிக்க களமிறங்கியுள்ளனர். இந்த முறை ஜே.என்.யு தணித்து விடப்படவில்லை. அறிவித்துறையினர் மட்டுமின்றி நாடெங்கிலும் மாணவர் சமுதாயம் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். வடக்கே தில்லியில் வாலாட்டினால் தென்கோடித் தமிழகத்தின் தேனி மாணவர்கள் கொந்தளிப்பார்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ் கும்பல் எதிர்பார்த்திருக்காது. இந்த முறை புலியின் வாலில் நெருப்பைப் பற்ற வைத்துள்ளனர், அழியப்போவது ராவண ராஜ்ஜியமல்ல – ராம ராஜ்ஜியம் என்பதை உணர்த்தும் ஆவேசத்தில் அணிதிரள்கிறது மாணவர் சமுதாயம்.

பல்கலைக்கழக வளாகங்களுக்குள் இந்துத்துவ திணிப்புகளுக்கு வருகின்ற எதிர்ப்புகளை வளாகங்களுக்கு வெளியே ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் கூலிப்பட்டாளங்கள் துணையுடன் எதிர்கொள்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள். ஜனநாயகப்பூர்வமான அறிவுத்துறையினரை மொத்தமாக ”தேசவிரோதிகளாக” கட்டமைப்பது, தங்களது ‘உணர்வுகள்’ பாதிக்கப்பட்டதைப் போல் காட்டிக் கொண்டு ஊடகங்கள் வழியாக வெறியூட்டுவது, இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்பட்ட “பதட்டமான” சூழலைப் பயன்படுத்திக் கொண்டு நேரடியாகவும் தாக்குதல் தொடுப்பது என்ற வழிமுறையைப் பின்பற்றுகிறது சங்க பரிவாரம்.

கல்புர்கி, பன்சாராவைக் கொன்றவர்கள் மட்டுமின்றி தற்போது தில்லியில் கண்ணையாவின் நாக்குக்கும் தலைக்கும் விலை வைத்து போஸ்டர் அடித்துள்ளவர்கள் வரை சொல்லி வைத்தாற்போல் ”சில்லறைக் கும்பல்களாக” (Fringe Elements) இருப்பதும் அதை ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தற்செயலானதல்ல. தேசிய ஊடகங்களின் மாமாத்தனங்கள் மக்கள் அறியாதவையல்ல என்றாலும் இம்முறை ஆர்.எஸ்.எஸ் கும்பலே எதிர்பாராத ஒரு பிளவு ஊடகங்களிடையே ஏற்பட்டுள்ளாது. அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(4) JNU வளாகத்தில் மாணவர் அமைப்புகளும் கருத்துச் சுதந்திரமும்

JNU நேரடி ரிப்போர்ட் 4:
http://www.vinavu.com/2016/03/15/jnu-ground-report-4/

”படிக்கிற காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் அரசியலில் ஈடுபடுவது சரியல்ல என்பது ஜே.என்.யு மாணவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று.. இதற்கென்ன சொல்கிறீர்கள்?”

“விவசாயி விவசாயத்தை மட்டும் கவனிக்க வேண்டும். தொழிலாளி வேலை செய்வதை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். மீனவர் மீன் பிடிப்பதை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பம் இருப்பவர்கள் குடும்பத்தையும், இல்லாதவர்கள் எப்படி ஒரு குடும்பத்தை ஏற்படுத்துவது என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்ல வருகிறீர்களா?”



”உங்கள் பதில் இடக்கு மடக்காக இருக்கிறதே?”

“சரி, இப்படிக் கேட்கிறேன் – மாணவர்களின் கோரிக்கைகளை மாணவர்கள் தானே முன்வைக்க வேண்டும்? மாணவர்கள் சமுதாயத்தின் ஒரு அங்கம் என்கிற வகையில் அவர் சமுதாயத்தை பாதிக்கும் விசயங்களில் தங்களது கருத்தை ஏன் சொல்லக் கூடாது?”

“நீங்கள் சொல்வதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால், இந்துத்துவ சாய்வுள்ளவர்கள் மிக இயல்பாக உங்கள் வாதங்களை ஒற்றை வரியில் எதிர் கொண்டு விடுவார்கள்..”

”இருக்கலாம்.. பதிலுக்கு நாங்களும் கேட்போம், உங்களது ஏ.பி.வி.பி என்ன கிழவர்கள் அமைப்பா?”

”ஏ.பி.வி.பி பற்றி சொன்னீர்கள்.. பொதுவாக அவர்கள் குருபூர்ணிமா நடத்துவது, ஆசிரியர்களை குருவாக உருவகித்து அவர்களின் கால்களுக்கு பாத பூஜை செய்வது என்று தான் தங்களது அமைப்புச் செயல்பாடுகளை வைத்துக் கொள்கிறார்கள். பொதுவாக நிர்வாகத்தைக் கேள்வி கேட்க மாட்டார்கள் – அப்படியே கேட்டாலும் அது இந்துத்துவ அரசியலின் நலன்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும். ஜே.என்.யுவில் எப்படி?”

“இங்கே வளாகத்திற்குள் அந்தமாதிரி கோமாளித்தனங்களை அவர்கள் வைத்துக் கொள்வதில்லை. வளாகத்திற்குள் ஏ.பி.வி.பியினர் புகை பிடிப்பதைக் கூட நீங்கள் பார்க்கலாம். சாதி வெறியை பச்சையாக வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். எங்களோடான விவாதங்களில் அம்பலப்பட்டு விடுவார்கள். விவாத மேடையில் வலதுசாரித் தத்துவமும் இடதுசாரித் தத்துவமும் நேரிட்டு சந்தித்துக் கொண்டால் அவர்களின் போலித்தனங்களை உரித்து அம்மணமாக நிறுத்துவது எளிதானது. வலதுசாரிகளுக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?”

”மற்ற அமைப்புகள்…?”

”வெளியே சமூகத்தில் எத்தனை விதமான அமைப்புகள் உண்டோ அத்தனை விதமான அமைப்புகளுக்கும் இங்கே பிரதிநிதித்துவம் உண்டு. என்ன, விகிதாச்சாரங்களில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்”

“ஆம் ஆத்மி?”

”ஆம் ஆத்மி என்பது அரசியல் அமைப்பாக இல்லை.. அது ஒரு சமரச போக்கு. இங்கே அரசியலற்ற நபர்களிடம் அந்தப் போக்கிற்கு ஓரளவு செல்வாக்கு உண்டு. குறிப்பாக சி.பி.எம்மின் மாணவர் சங்கத்திலிருந்து விலகி டி.எஸ்.எஃப் என்று தனி அமைப்பாக செயல்படுபவர்கள் ஆம் ஆத்மி அரசியலைத் தான் பேசுகிறார்கள்”

ஜே.என்.யு வளாகத்தில் பல்வேறு அரசியல் அமைப்புகளின் மாணவர் பிரிவுகள் செயல்பட்டாலும் அப்பல்கலைக்கழகத்தின் அரசியல் சூழலில் இடதுசாரி மற்றும் தலித் ஆதரவுக் குரல்களே செல்வாக்கோடு ஒலிக்கின்றன. சி.பி.எம்(எம்.எல்) லிபரேசன் கட்சியின் அனைத்திந்திய மாணவர் அமைப்பு (AISA) பிரதானமான அமைப்பாக இருக்கிறது. சி.பி,.எம் கட்சியின் இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), சி.பி.ஐ கட்சியின் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) போன்றவற்றுக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. இவை தவிர மாவோயிச கொள்கைகளைப் பேசும் (மாவோயிஸ்ட் கட்சி சார்பற்ற) ஜனநாயக மாணவர் சங்கம் (DSU) மற்றும் காங்கிரசின் இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) போன்றவற்றுக்கும் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.

இந்த அமைப்புகளைத் தவிர, மேற்குவங்க மாணவர்களால் நடத்தப்படும் Collective, பின்நவீன சித்தாந்தம் கொண்ட KNS, அம்பேத்கரிய BAPSA, உள்ளிட்ட அமைப்புகளுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஆதரவுத் தளம் உள்ளது. இவற்றோடு புதிய பொருள்முதல்வாதிகள் (TNM) என்கிற அமைப்பு எண்ணிக்கையில் குறைவானவர்களைக் கொண்டிருந்தாலும், கருத்துத் தளத்தில் குறிப்பிடும்படியான அமைப்பாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான ஏ.பி.வி.பி அமைப்பிற்கு குறிப்பிட்ட சில கல்லூரிகளில் ஆதரவுத் தளம் உள்ளது. சுமார் முன்னூறு மாணவர்கள் வரை அவ்வமைப்பின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

இவை தவிர இஸ்லாமிய மாணவர் சங்கம் (SIO) மற்றும் பாபுலர் பிரண்ட் அமைப்பின் மாணவர் பிரிவான CFI போன்ற வகாபிய அடிப்படைவாத மாணவர் அமைப்புகளுக்கும் ஓரிரு பிரதிநிகள் உள்ளனர். இஸ்லாமிய மாணவர்கள் பெரும்பான்மையாக இடதுசாரி மாணவர் அமைப்புகளிலேயே உள்ளனர். வகாபிய கருத்துக்களுக்கு வளாகத்தில் அனேகமாக இடமில்லை என்றே சொல்லலாம்.

மாணவர் அமைப்புகள் பங்கு கொள்ளும் மாணவர் சங்கத் தேர்தல் சுமார் ஒரு மாத கால திருவிழாவைப் போன்றே நடத்தப்படுகின்றது. தேர்தலுக்கு முன் அதைக் கண்காணித்து முறைப்படுத்த மாணவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தேர்தல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டு அது நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படுகின்றது. வளாகத்தினுள் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனி கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கவுன்சிலர்களோடு சேர்த்து தலைவர், துணைத்தலைவர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்களும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

தேர்தல் முறையைப் பொறுத்தளவில், லிங்டோ குழு பரிந்துரைத்த மாணவர் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு பல்வேறு மாணவர் அமைப்புகளிடம் எதிர்ப்பு நிலவுகின்றது. தேர்தலில் பங்கேற்க வயது வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும், மொத்த தேர்தல் நடைமுறையை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் உள்நோக்கங்களையும் லிங்டோ குழு பரிந்துரைகள் கொண்டிருப்பதால், புதிய பொருள்முதல்வாதிகள் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் மாணவர் சங்கத் தேர்தலில் பழைய முறையைக் கொண்டு வரக் கோரி தேர்தலைப் புறக்கணித்து வருகின்றன.

தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிகள் அடங்கிய பொதுக்குழு (General Body Meeting) ஒவ்வொரு கல்லூரிவாரியாக அவ்வப் போது கூடி மாணவர்களின் தேவைகள், கோரிக்கைகள் ஆகியவற்றைப் பரிசீலிக்கிறது. வருடாந்திரம் நடக்கும் தேர்தலில் கல்லூரிகளுக்கான பிரதிநிதிகளோடு சேர்த்து பல்கலைக்கழக அளவிலான கவுன்சிலர்கள், தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாணவரும் இந்தப் பதவிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வக்களிக்க வேண்டும். ஒரு கல்லூரியின் மொத்த மாணவர் எண்ணிக்கையை பொருத்து ஒன்றுக்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு மாணவரும் தேர்தலின் போது ஏறக்குறைய பத்து வெவ்வேறு பதவிகளுக்கான வாக்குகளைத் தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறாக ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்படும் மாணவர் சங்கம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்குமான ஒரு ஊடகமாக செயல்படுகின்றது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின் ஜோசியத்தையும் யோகாவையும் ஒரு பாடமாக உள்ளே நுழைக்க முயற்சித்ததை மாணவர் சங்கமே முன்னின்று முறியடித்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாணவர் சங்கம் ஒரு தீர்மானகரமான குரலாக விளங்குவதன் காரணமாகவே இந்துத்துவ செயல்திட்டங்களை எதிர்ப்பின்றி உள்ளே புகுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டங்கள் தோல்வியடைகின்றன.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிவருடிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் ஜே.என்.யுவிற்கு எதிராக முன்னெடுத்து வரும் நச்சுப் பிரச்சாரங்களுக்கு கலாச்சார தளத்தில் நோக்கங்கள் உள்ளதென்றால், மத்திய பாரதிய ஜனதா அரசுக்கோ பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்குவது, உதவித் தொகையை நிறுத்துவது உள்ளிட்ட மறுகாலனியாக்க திட்டங்களை இடதுசாரி மாணவர் அமைப்புகள் போர்க்குணத்தோடு எதிர்த்து நிற்பது கண்ணில் ஊசியைப் பாய்ச்சுவதாக உள்ளது.

”தோழர், இத்தனை அமைப்புகளும் மாறுபட்ட கண்ணோட்டங்களும் உள்ள இடத்தில் ஒரு பிரச்சினைக்கான விவாதம் என்றால் தலையைக் கிறுகிறுக்க வைக்கும் அனுபவமாக அல்லவா இருக்கும்?”

”விவாதங்கள் நீண்ட நேரம் நடக்கும்… இங்கே நிலவும் விவாதச் சூழல் பலரும் நினைப்பது போல் முற்றிலுமாக இடதுசாரி சாய்வோடு நடக்கும் ஒன்றல்ல. ஒருவகையான லிபரல் ஜனநாயகத்தின் அடிப்படையிலான விவாதங்களே இங்கே நடக்கின்றன. அதில் எல்லா கருத்துக்களுக்கும் இடமுண்டு. எல்லா வர்க்க சார்புள்ள கருத்துக்களும் மோதும் ஒரு விவாத வெளியில் இறுதியாக இடதுசாரிக் கருத்துக்கள் வெல்கின்றன என்பதே உண்மை..”

“உதாரணம் ஏதாவது சொல்லுங்களேன்…”

“ஏதாவது ஒரு விசயம் பற்றி முடிவெடுக்க அனைத்து மாணவர் சங்க அமைப்புகளும் கூடுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்… அப்போது காங்கிரசு கட்சியின் மாணவர் அமைப்பு தனது கட்சியின் நிலைப்பாடுகளுக்கு பொருத்தமான கருத்துக்களை முன்வைத்து வாதாடும்… அதே போல் ஏ.பி.வி.பி அமைப்பினர் தனது இந்துத்துவ கருத்தியலுக்கு பொருத்தமான வாதங்களை முன்வைப்பார்கள்.. யாரும் இவர்களுக்குத் தடை போட மாட்டார்கள்.. அவர்களின் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதை தீவிர இடதுசாரி கருத்தியல் கொண்ட சங்கங்கள் கூட ஆதரிப்பார்கள். அனைத்துமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். விவாதத்தின் போக்கில் இந்துத்துவர்களால் தங்களது வாதங்களை தற்காத்துக் கொள்ள முடியாமல் தோற்றுப் போவார்கள். என்றாலும் கூட இடதுசாரி கருத்து கொண்டவர்கள் அவர்களை இழிவு படுத்தவோ, கேவலமாக பேசவோ செய்ய மாட்டார்கள். அவர்களுடையதும் ஒரு கருத்து தான் என்கிற அளவில் தான் எடுத்துக் கொள்வார்கள். ஜனநாயகப் பூர்வமான விவாதமே சரி தவறு எதுவென்பதை நிலைநாட்டும்”

இந்த ஜனநாயகம் தான் இந்துத்துவ கும்பலின் தலையாய பிரச்சினையாக உள்ளது. மாட்டுக்கறி வேண்டுமா வேண்டாமா? ராமன் தேசிய நாயகனா இல்லையா? மகிஷாசுரனை வணங்கும் உரிமை சரியா தவறா? காஷ்மீர் இந்தியாவோடு இருப்பதை நாம் தீர்மானிப்பதா காஷ்மீரிகளே தீர்மானிப்பதா? போன்ற எதிரெதிரான நிலைப்பாடுகளில், கருத்து மோதல்களில், இந்துத்துவம் விவாதத்தைக் கண்டு அஞ்சுவது ஏன் என்பதை விளக்கத் தேவையில்லை. இது போன்ற விவாதங்களில் முன்வைக்கப்படும் இந்துத்துவத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களைத்தான் அவர்கள் தேச விரோதம் என்பதாக சித்தரிக்கின்றனர்.

வளாகத்தில் நிலவும் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் லிபரல் ஜனநாயகத்தின் சூழலை இந்துத்துவ கும்பலால் எதிர் கொள்ளவே முடியவில்லை. ராமனோ கோமாதாவோ… அவர்கள் புனிதம் என்று கருதுவதை ஏன் புனிதம் என்று நிலைநாட்டுவதற்கு அவர்கள் கருத்து மோதலை எதிர்கொண்டாக வேண்டும்.

குழந்தைத் திருமணம், விதவைகளைத் தீயில் தூக்கி எறியும் சதி முறை, தேவதாசி முறை, போன்றவை முன்பொரு காலத்தில் சமூகத்தின் பொதுபுத்தியில் “சரி” என்பதாக நிலைநாட்டப்பட்டிருந்தன. புதிய சமூகத்தின் கருத்துக்கள்தாம் பழையனவற்றைத் தவறென நிறுவி புதிய நியதிகளை நிலைநாட்டியுள்ளன.

ஒரு வேளை விதவைகளை உயிரோடு கொளுத்தும் உடன்கட்டை ஏறும் முறையை எதிர்த்து முறியடித்த ராம் மோகன் ராயின் காலத்தில், நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால், ராம் மோகன் ராயை தேச துரோகியென அறிவித்திருப்பார்கள்.

விவாதம் எதைப் பற்றியதாக இருந்தாலும் அந்த விவாதப் பொருள் குறித்து ஆதரவாகவோ எதிராகவோ அல்லது முற்றிலும் வேறு நிலையிலிருந்தோ கருத்தை வைத்து வாதாடலாம் என்பதுதான் ஜே.என்.யு வில் நிலவும் விவாதக் கலாச்சாரம். தேசம் என்பது விவாதப் பொருள் என்றால், அதன் மேலான ’பக்தி’ மட்டுமல்ல – அந்த வழிபாட்டு மூடத்தனத்திற்கு எதிரான கருத்துக்களும் கூட முன்வைக்கப் படும். இதில் எது சரி என்பதை விவாதமே முடிவு செய்யும். ஆனால், விவாதங்களில் மாற்றுத் தரப்பால் சொல்லப்படும் கருத்துக்களை கத்தரித்து எடுத்து வந்து விஜயகாந்த் ரசிகரிடம் போட்டுக் காட்டுகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

ஐ.எஸ்.ஐ.எஸ், தாலிபான் போன்றவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலோ ஹிட்லரின் ஜெர்மனியிலோ எதிர்கருத்துக்களை எப்படி கையாண்டனரோ அப்படியே கையாள வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் விருப்பம். அல்லாவை மறுத்து வாதாடக் கூடாது, குரானை வார்த்தை பிசகாமல் தாங்கள் சொல்லும் விதமாக மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தாலிபான்கள் சொல்வதற்கும் – மாட்டுக்கறி, ராமன், சமஸ்கிருதம் உள்ளிட்டு தாங்கள் முன்வைக்கும் தேசிய அடையாளங்களை மற்றவர்கள் கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் – மறுப்பவர்கள் தேசத் துரோகியாக்கப்படுவார்கள் என்கிற இந்துத்துவ கும்பலின் அணுகுமுறைக்கும் எள் முனையளவுக்கும் வேறுபாடு இல்லை.

எனினும், ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சினை அந்த வளாகத்தில் நிலவும் கருத்து சுதந்திரம் மட்டுமில்லை. அதையும் தாண்டி பல்வேறு பரிமானங்களைக் கொண்ட வேறு நோக்கங்களும் உள்ளன. அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் சதித் திட்டங்களோடு இப்போது அவர்கள் களமிறங்கியுள்ளனர்.

(3) ‘தேசத் துரோகிகளுக்கு’ அரசு உதவித் தொகை ஏன்?

JNU நேரடி ரிப்போர்ட் 3:
http://www.vinavu.com/2016/03/10/jnu-ground-report-3/

”பொதுவாக இருபத்தைந்து வயதுக்குள் படித்து முடித்து விட்டு வேலையில் செட்டில் ஆனால் தான் முப்பதுக்குள் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக முடியும் என்பது போன்ற எல்லைக் கோடுகளுக்குள் நின்று தான் எங்கள் இளைஞர்கள் ‘அறிவுத் தேடலில்’ ஈடுபட முடிகிறது. நீங்களோ முப்பத்தைந்து வயதில் கூட மாணவர்களாகவே இருக்கிறீர்கள்… எப்போது தான் ’செட்டில்’ ஆவதாக உத்தேசம்?

”ஏன் இப்போதே செட்டில் ஆகித் தானே இருக்கிறோம்? மேலும் அறிவுத் தேடலுக்கும் கற்றுக் கொள்வதற்கும் வயது வரம்பு ஏதும் இல்லை அல்லவா?”



“அப்படியென்றால், உங்கள் செலவுகளுக்கு என்ன செய்கிறீர்கள்?”

”எங்களுக்கு அரசு உதவித் தொகை கிடைக்கிறது. அதை வைத்து சமாளித்துக் கொள்கிறோம்”

ஜே.என்.யு மட்டுமின்றி அரசு உயர்கல்வி நிலையங்களில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் அரசின் உதவித் தொகையை மிகவும் சார்ந்துள்ளார்கள். மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் யு.ஜி.சி (University Grants Commision) தகுதித் தேர்வு ஒன்றை நடத்துகின்றது. வருடாந்திரம் நடக்கும் தேசிய தகுதித் தேர்வில் (National Eligibility Test) தேர்வு பெரும் மாணவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கிறது. முதுகலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் முனைவர் படிப்பு படிக்க மாதம் 25,000 ரூபாயும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு 28,000 ரூபாயும் உதவித் தொகையாக கிடைக்கிறது.

லட்சக்கணக்கான மாணவர்கள் வருடம் தோறும் தேசியத் தகுதித் தேர்வை எழுதினாலும், சில ஆயிரம் மாணவர்களே அதில் தேர்ச்சியடைகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் முனைவர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களாக உள்ளனர். ஜே.என்.யுவில் மொத்தமுள்ள சுமார் 8000 மாணவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். தேர்ச்சியடையாத மாணவர்களே பெரும்பான்மையினர்.

இவ்வாறு தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களைப் பொருத்தவரை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக பயில்வோருக்கு மாதம் 5000 ரூபாயும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு 8000 ரூபாயும் உதவித் தொகையாக கிடைகின்றது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பது, உயர் கல்வியை முற்றிலுமாகத் தனியார் மயமாக்குவது என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் மோடி அரசு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோரையும் பெறாதவர்களையும் பிளவு படுத்தும் விதத்தில், தேர்ச்சியடையாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை நிறுத்தவுள்ளதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது.

மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து மாணவர்கள் மத்தியில் பெரும் போராட்டம் வெடிக்கவே தற்காலிகமாக மத்திய அரசு பின்வாங்கியது. அப்போது தில்லியில் உள்ள யு.ஜி.சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் முன்னின்றது ஜே.என்.யு மாணவர்கள் தாம். தற்போது அரசின் உதவித் தொகையை “தேசவிரோதிகளுக்கு” வழங்கக் கூடாது என்று இந்துத்துவ கைக்கூலிகள் இணையத்தில் முன்னெடுத்து வரும் பிரச்சாரங்களின் பின்னணி இதுதான்.

”தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு ஏன் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்? தகுதி இல்லாதவர்களுக்கு ஏன் மக்களின் வரிப்பணத்தைக் கொட்டியழ வேண்டும் என்பது வெளியே சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று. அதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம்.

”முதலில் ஒரு மாணவர் இளங்கலை, முதுகலை படிப்புகளில் தேறி முனைவர் பட்டத்திற்கும் ஆராய்ச்சிப் படிப்புக்கும் வருகிறார் என்றால் அவர் திறமையற்றவராகவா இருப்பார்? ஒருவரை முனைவராகவும், ஆராய்ச்சி மாணவராகவும் சேர எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவற்றைக் கடந்து தானே வருகிறார்? அடுத்து, இந்த தேசிய தகுதித் தேர்வு என்பது துறை சார்ந்த ஒன்றல்ல. அதற்கென்று தனியே தயாரிக்க வேண்டும். தேர்வு பெற்ற சிலர் ஆண்டுக்கணக்கில் இதற்காக செலவிட்டுப் படித்துள்ளனர்”

”சரி, இந்தக் காரணங்களுக்காக தகுதியற்றவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்கிறீர்களா?”

“மீண்டும் நீங்கள் புரிந்து கொள்வதில் தவறிழைக்கிறீர்கள். இது துறைவாரியான தேர்வல்ல என்று சொன்னேன். கணிதத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் ஒரு மாணவனுக்கு இந்தியாவின் மூன்றாவது நிதியமைச்சர் யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? துறைசார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர் ஒருவருக்கு அந்தத் துறையில் திறமை உள்ளதா இல்லையா என்பது தான் பிரதானமே ஒழிய இதுவல்ல”

”நீங்கள் சொல்வது புரிகிறது. எனினும், வெளியே முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு உங்கள் பதில் பொருத்தமானதாக இருக்கும் என்று நீங்களே நினைக்கிறீர்களா?”

”பொதுபுத்தியை ஆளும் வர்க்கம் தங்களுக்கு சாதகமாக கட்டமைக்க எளிமையான குற்றச்சாட்டுகளே போதுமானது தான். ”தகுதியற்றவர்கள்” என்று ஒரே வார்த்தையில் அவர்கள் முடித்துக் கொள்வார்கள். இப்போது நீங்கள் கேட்ட முதல் கேள்விக்கு வாருங்கள்.. இங்கே படிப்பவர்களில் சுமார் 20 சதவீதமானோர் வசதியுள்ள குடும்ப பின்னணி கொண்டவர்கள். மீதமுள்ளோர் நடுத்தர வர்க்கத்தினர் – இதில் கணிசமானோர் வறுமையான பொருளாதார பின்னணி கொண்டவர்கள். 21 வயதுக்குள் இளங்கலையும், 25 வயதுக்குள் முதுகலையும் முடிக்கும் இவர்கள், அடுத்த சில ஆண்டுகள் முயற்சி செய்து தான் முனைவர் பட்ட படிப்புக்கு வருகிறார்கள். அதில் இரண்டு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு ஆராய்ச்சி மாணவராகும் போது வயது முப்பதை நெருங்கி விடுகிறது. பின்னர் ஆராய்ச்சிப் படிப்பை முடிக்கும் போது அவரவர்க்குக் கிடைக்கும் வழிகாட்டிகளைப் பொறுத்து முப்பத்தைந்தைக் கூட நெருங்கி விடுகிறார்கள்..”

“இவர்களை பொருளாதார ரீதியில் தாங்கும் நிலையில் இவர்கள் குடும்பங்கள் இருப்பதில்லை. அரசு கொடுக்கும் எட்டாயிரம் ரூபாய் தான் ஒரே வழி. அதை நிறுத்துவது என்பதன் பொருள் ஏழைகளைத் தொடர்ந்து அறிவுக்கண் அற்றவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்கிற அரசின் உள்நோக்கத்தைத் தான் காட்டுகிறது. காசு கட்டி சிறப்பு டியூசன்கள் போயோ அல்லது வீட்டாரின் பொருளாதார நெருக்கடி இன்றி ஒரே மூச்சாக சொந்த முறையில் படித்தோ தேசிய தகுதித் தேர்வை வெல்வது பொரும்பான்மையான மாணவர்களுக்கு எதார்த்தமாகவே சாத்தியமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்”

அன்றாட உணவுக்கும் சொந்தப் பராமரிப்பு செலவுக்கும் என்ன செய்யப் போகிறோமோ என்கிற நெருக்கடி மாணவர்களுக்கு இல்லை என்பதும், வளாகத்தில் நிலவும் விவாதச் சூழலுக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ. 2500 வரை ஆகிறது. மாணவர் விடுதிகளில் உள்ள உணவகங்கள் தவிர்த்து வளாகத்துக்குள்ளேயே தாபாக்கள் உள்ளன. இங்கும் உணவுப் பொருட்களின் விலை குறைவு தான். தேனீரின் விலையும் ஐந்து ரூபாய்தான், ஆலூ பரோட்டாவின் விலையும் ஐந்து தான். உணவுக்கான செலவைத் தவிர செல்பேசி மற்றும் இணையத்திற்கு தோராயமாக ஐநூறு ரூபாய்கள் வரை செலவாகிறது. மீதமுள்ள தொகையில் பெரும்பாலும் புத்தககங்கள் வாங்குகிறார்கள்.

ஒவ்வொரு மாணவரின் அறையிலும் ஒரு குட்டி நூலகம் போல் துறைவாரியான நூல்கள் குவிந்து கிடக்கின்றன. இந்தச் செலவுகளைத் தாண்டி அரசு வழங்கும் எட்டாயிரம் ரூபாயில் வீட்டுக்கு காசு அனுப்புவதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. எங்கோ பீகாரின் கிராமம் ஒன்றில் கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பேராசிரியர்களாவதற்கு கடனாளிகள் ஆகத் தேவையில்லை என்கிற அளவுக்கு அரசின் உதவித் தொகை உதவுகின்றது.

ஜே.என்.யு வளாகத்தை ஒரு குட்டி இந்தியா என்று சொல்லலாம். 25 சதவீதமானோர் பீகாரிகள். அதற்கடுத்தபடியாக பெங்காலிகள் சுமார் 15 – 20 சதவீதமானோரும் உத்திர பிரதேசத்திலிருந்து சுமார் 15 சதவீதம் பேரும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சுமார் பத்து சதவீதம் பேரும் உள்ளனர். ஒரிசா மற்றும் கேரளாவில் இருந்து பத்துக்கும் குறைவான சதவீத மாணவர்கள் உள்ளனர். காஷ்மீரிகள் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு கணிசமாக உள்ளார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சொற்ப அளவில் உள்ளனர்.

”இங்கே பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் பழைய சமூக அமைப்புகளும் சாதியும் வலுவாக உள்ள மாநிலங்களில் இருந்து வருகிறவர்களாக இருக்கிறார்கள். வளாகத்திற்குள் மாணவர்களுக்குள் சாதிப் பாகுபாடு உள்ளதா?”

”வளாகத்திற்குள் சாதி உள்ளது. ஆனால், மாணவர்களுக்கிடையே சாதிப் பாகுபாடுகள் நிச்சயமாக இல்லை”

“கொஞ்சம் புரியும் விதமாக விளக்குங்களேன்”

”மாணவர்களைப் பொருத்தளவில் தங்களுக்கிடையே சாதி வேறுபாடு பார்ப்பதில்லை. ஏன் மத, இன வேறுபாடு கூட பார்ப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் இங்கே ஓரிரு பாகிஸ்தானிகளும், சில பங்களாதேஷிகளும் சில இலங்கையர்களும் கூட உண்டு. இவர்களையும் நாங்கள் ஒதுக்குவதில்லை.. தேச வேறுபாடுகள் கூட பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் மாணவர்கள் – அவ்வளவு தான். அவர்களின் பார்வைக் கோணங்களும் இங்கே முக்கியமானது”

”ஆனால், வளாகத்திற்குள் சாதி இருக்கிறது என்றீர்கள்”

“ஜே.என்.யு என்பதால் கொஞ்சம் சுலபமாக கண்டுபிடிக்க முடியாதபடி நுணுக்கமாக இருக்கும். இங்கே சுமாராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளனர். இந்த மொத்த எண்ணிக்கையில் தலித்துகள் என்று எடுத்துக் கொண்டால் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருக்கிறார்கள். அதே போல், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் வெகு சொற்பமாகவே உள்ளனர்.

“சில பேராசிரியர்கள் தன்னிடம் படிக்கும் தலித் மற்றும் ஓ.பி.சி வகுப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவருக்கு ஊக்கமாக உதவமாட்டார்கள். சமர்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளில் சில்லறையான விசயங்களை சுட்டிக்காட்டி மதிப்பெண்களைக் குறைப்பது.. இயல்பாக பழகாமல் இருப்பது… ஆராய்ச்சிப் படிப்பைப் பொருத்தவரை உங்கள் வழிகாட்டி எந்தளவுக்கு உங்களோடு இயல்பாக பழகி வழிகாட்டுகிறாரோ அந்தளவுக்குத் தான் அது வெற்றியடையும். உங்கள் வழிகாட்டி உங்களிடம் ஏனோதானோவென்று கொஞ்சம் இயந்திரத்தனமாக முகத்தைக் காட்டி நடந்து கொள்வாரென்றால் நீங்கள் உளவியல் ரீதியிலேயே நம்பிக்கை இழந்து விடுவீர்கள்…”

எனினும், சமீப காலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகளின் வரவு அதிகரித்துள்ளது. இம்மாணவர்களுக்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தற்போது நேர்முகத் தேர்வுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 25 மதிப்பெண்களைக் குறைத்து எழுத்துத் தேர்வுக்கு அதிக மதிப்பெண்கள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன மாணவர் அமைப்புகள்.

இப்படி வெவ்வேறு சாதி, மத, இன, மொழிப் பின்னணிகளில் இருந்து வளாகத்திற்கு வந்து சேரும் மாணவர்களை அங்கே நிலவும் அரசியல் சூழல் மொத்தமாக மாற்றியமைக்கிறது. பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் வளாகத்திற்குள் நுழைந்ததும் எதிர்கொள்ளும் ஜனநாயக மதிப்பீடுகள் முதலில் அதிர்ச்சியடைய வைக்கின்றன.

எப்படி ஆசிரியர்களுக்கு அடிமையாக அல்லாமல், சமமாக பேசுகிறார்கள்? எப்படி பெண்களை கண்ணியமாக நடத்துகிறார்கள்? எப்படி சாதி வேறுபாடு பாராட்டாமல் கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பழகுகிறார்கள்? பாலியல் கண்ணோட்டம் இன்றி ஆணும் பெண்ணும் பழகுவது சாத்தியமா? இரவு நேரமானாலும் பெண்கள் இவ்வளவு துணிச்சலாக நடமாட முடியுமா? மாணவர்களுக்கென்று உரிமைகள் இருக்குமா? அந்த உரிமைகளுக்காக போராடுவது சாத்தியமா? – என்பவை போன்ற கேள்விகள் முதல் ஆறு மாதங்களுக்குள்ளாகவே மறைந்து அவர்களும் இந்தக் கலாச்சாரத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு வகையில் ஒரு தனித்தீவைப் போல அமைந்திருக்கும் ஜே.என்.யு வளாகத்தின் தனிச் சிறப்புகளில் இதுவும் ஒன்று. வளாகத்தினுள் செயல்படும் ஏ.பி.வி.பி உறுப்பினர்கள் கூட வெளியிலிருக்கும் தங்கள் அமைப்பிலிருந்து நிறைய வேறுபடுகிறார்கள் என்பதை பின்னர் வரும் பகுதிகளில் நாம் காணப் போகிறோம்.

பார்ப்பனிய விழுமியங்களில் ஊறிப் போன வட இந்தியாவின் இதயப்பகுதியில் ஜே.என்.யு ஒருவிதமான ஐரோப்பிய பாணியிலான சுதந்திரத்தை இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றது. ஜே.என்.யு பல்கலைக்கழகத்தை கனவு கண்ட நேருவோ பின்னர் அதை செயல்படுத்திய இந்திரா காந்தியோ கூட இதைக் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். முதலாளிய ஜனநாயகத்தின் மீதான தனது காதலையும் சோசலிசத்தின் மேலான ஃபாண்டசி கனவுகளையும் ஏதோவொரு சமன்பாட்டில் இணைத்து ’உலகத்தரமான’ ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறார் நேரு.

பின்னர் கூட்டு சேரா நாடாகவும், ரசிய சார்பு நாடாகவும் இரண்டு முகங்களைக் காட்டி வந்த இந்திராவின் காலத்தில் இது செயல்வடிவம் பெறுகிறது. ஜே.என்.யுவின் இலச்சினையே இரண்டு (சிந்தனை) உலகங்களின் சந்திப்பிலிருந்து ஒரு சுடர் எழுதுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசத்தைப் புரிந்து கொண்ட மாணவர்களை உருவாக்குவதும் அவர்களை தேச நிர்மாணத்தில் ஈடுபடுத்துவதுமே தங்கள் நோக்கங்கள் என்று அப்போது சொல்லிக் கொண்டார்கள். எனினும் எதார்த்தத்தில் அன்றைக்குப் நாடெங்கிலும் பரவலாக எழுந்து வந்த சோசலிச சிந்தனைகளை நிறுவனமயப்படுத்தும் முயற்சியாகவே அது இருந்தது.

பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட துவக்க காலத்தில், அதாவது எழுபதுகளில், வியட்நாம் போரின் பாதிப்புகள் மேற்கில் மட்டுமின்றி உலகெங்கும் மிகப் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருந்தன. ரசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பனிப்போர் முற்றியிருந்தது. இதன் பின்னணியில் உலகெங்கும் எழுந்த போராட்டங்கள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிலைப்படுத்தின. அந்தக் குரல்களில் மாணவர் சமுதாயத்தின் குரல் தனித்துவத்தோடு ஓங்கி ஒலித்தது.

அமைப்பு முறைக்குள்ளேயே ஒரு வடிகால் என்கிற எல்லையை உடைத்துக் கொண்டு இடதுசாரி அரசியலின் பக்கம் மாணவர்களின் அரசியல் நகர்ந்தது. அதன் பின்னணியில் தான் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போதும் அதிகாரத்தின் காலடியில் பணிய மறுத்து ஜே.என்.யு மாணவர்கள் வீறு கொண்டு எழுந்து நின்றனர். மாணவர்களின் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடுவது என்கிற அளவில் தம்மை சமூகத்திலிருந்து துண்டித்துக் கொள்ளாமல் அரசியல், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு கலாச்சாரத்தை ஜே.என்.யு வரித்துக் கொண்டது.

அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத் தான் தற்போதைய ஜே.என்.யு போராட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது இந்துத்துவ பாசிசம் முழுமையாக தன்னை ஆயுத பாணியாக்கிக் கொண்டு எதிர்ப்புக் குரல்களை முழக்கும் குரல்வளைகளின் மீது வெறி கொண்டு ஏறி மிதிக்கும் நிலையிலும் ஜே.என்.யு வளாகம் அஞ்சாமல் அடிபணியாமல் நிமிர்ந்து நிற்பதற்கு அதன் அரசியல் பாரம்பரியமே காரணம்.

எதிர்க் குரல்களைக் கூட மதித்து இடம் கொடுத்து விவாத மேடைக்கு அழைத்து வந்து கருத்து ரீதியில் வீழ்த்த வேண்டும் என்று கருதும் ஜே.என்.யுவின் அரசியல் பண்பு தனித்துவமானது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கண்ணையா குமார் தனது ஏ.பி.வி.பி நண்பர்களை நோக்கி நீங்கள் சுப்பிரமணிய சுவாமியைக் கூட அழைத்து வாருங்கள் விவாதிக்கலாம் என்கிறார். ஜே.என்.யுவில் நிலவும் இந்த விவாத சுதந்திரம் இந்துத்துவவாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த அரசியல் சூழல் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(2) ‘தேசத் துரோகி’களோடு ஒரு சந்திப்பு !

JNU நேரடி ரிப்போர்ட் 2:
http://www.vinavu.com/2016/03/08/jnu-ground-report-2/

தில்லியின் காற்றில் குளிர் அலைந்து பரவிக் கொண்டிருந்த ஒரு பிப்ரவரி மாத நள்ளிரவில் வினவு செய்தியாளர்கள் உலகிலேயே மிக அதிகளவில் ‘தேசதுரோகிகளை’ உற்பத்தி செய்து வரும் ஜே.என்.யு வளாகத்தின் நுழைவாயிலுக்கு எதிரே காத்துக் கொண்டிருந்தார்கள். நாடே கண்டு அஞ்சும் தீயசக்திகளாக வட நாட்டு ஆங்கில ஊடகங்கள் சித்தரிக்கும் ’தேசவிரோதிகளை’ காண்பதும், அவர்களின் விளைநிலமாக சித்தரிக்கப்படும் ஜே.என்.யு குறித்த ஒரு நேரடி சித்திரத்தை தீட்டுவதே எமது பயண நோக்கம்.



பின்பனிக் காலத்தின் குளிர் ஈரப்பதமின்றி வறட்சியாய் நாசியில் நுழைந்து வெளியேறச் சிரமப்பட்டது. தமிழ்நாட்டின் வெப்பத்திற்குப் பழகிய நாசியின் உட்சுவர்கள் அந்த வறண்ட குளிரில் லேசாகப் புண்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் ஒரு நண்பர் எம்மை முக்கிய நுழைவாலுக்கு வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார். அவரது நள்ளிரவு உறக்கத்தை கெடுக்கிறோமோ என்கிற உறுத்தலோடு காத்திருந்தோம்.

ஜே.என்.யுவின் முக்கிய நுழைவாயிலின் முன் தடுப்பரண்கள் போடப்பட்டு சில போலிஸ்காரர்கள் அமர்ந்த வண்ணம் உறக்கத்திற்காக தங்களைச் சுற்றி வளைத்துத் தாக்கிக் கொண்டிருக்கும் கொசுப் படைகளோடு ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தில்லியின் குளிருக்குப் பொருந்தாத உடைகளோடு நின்ற நம்மை நோக்கி போலீசாரின் புருவங்கள் உயர்வதற்குள் நண்பர் வந்துவிட்டார்.

“சாப்பிட்டீங்களா?”

“மணி பண்ணிரண்டைத் தாண்டியாச்சே.. உங்களுக்குத் தொந்தரவு ஏதுமில்லையே. நீங்க தூங்க வேண்டிய நேரம் தானே?”

“தூக்கமா? சரியா சொன்னீங்க போங்க. இப்பத் தான் சாயந்திரம் ஆகியிருக்கு.. தேனீர் குடிப்பீர்கள் அல்லவா?”

“இந்த நேரத்துக்குக் கடைகள் திறந்திருக்குமா என்ன?”

”வாங்க உள்ளே போவோம்”

அடைகாக்கும் கோழிகளைப் போல் பொழுது சாய்வதற்குள் வீடு சேர வேண்டும் – முக்கியமாக நண்பர்களோடு கூடி அரட்டை அடிக்க கூடாது, அப்படியே அரட்டையடித்தாலும் அதில் அரசியல் போன்ற ’கெட்ட’ சமாச்சாரங்கள் இருந்து விடக்கூடாது என்கிற தமிழ்நாட்டுச் சிறு நகர கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்டவர்கள் தில்லி ஜே.என்.யு வளாகத்திற்குள் இருக்கும் தாபாக்களை இரவு நேரங்களில் தரிசிக்கக்கடவர். தேனீருக்காக வளாகத்தினுள் இருக்கும் கங்கா தாபாவுக்கு அழைத்துச் சென்றார் நண்பர்.

அந்த நேரத்திலும் சூடான தேனீரோடு அரசியல் விவாதங்களின் வெப்ப நிலையும் மேலோங்கி இருந்தது. இளைய முகங்களின் மத்தியில் சில வயதானவர்களையும் காண முடிந்தது. கேள்விகளைத் தாங்கிய நமது பார்வைக்கு நண்பர் பதிலிருத்தார்,

”அவர்கள் ஆசிரியர்கள் தோழர்”

”ஆசிரியர்களா?”

“ஆமாம். இங்கே வகுப்பறையில் கற்பதை விட அதற்கு வெளியே நடக்கும் விவாதங்களில் தான் நாங்கள் அதிகம் கற்பது வழக்கம்”

”மாணவர்களில் கூட சிலர் முப்பதுகளில் இருக்கிறார்களே?”

“ஆமாம். அவர்கள் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள். நீங்கள் இங்கே முப்பத்தைந்து வயதுள்ள மாணவர்களையும் கூட பார்க்க முடியும். நாற்பதை நெருங்கிய சிலர் கூட மாணவர்களாக இருக்கிறார்களே”

இந்த பதில் நம்மில் பலரையும்  ஆச்சரியப்படுத்தி இருக்கலாம். ”தமிழ்ச்சூழலில்” வார்த்தெடுக்கப்பட்ட நாம் ஜே.என்.யுவின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள அதன் அறிவுச் சூழலைப் தெரிந்து கொள்வது பயனளிக்கும். அந்த அறிவுச் சூழல் கட்டமைக்கப்பட்ட வரலாற்றுப் பின்புலத்தையும் அறிந்தால்தான் ஜே.என்.யூவில் நிலவும் ஜனநாயகத்தின் உயர்ந்த தன்மையையும் அதனுள் கருத்துக்களுக்கு – அது எந்தக் “கருத்தாக” இருந்தாலும் – வழங்கப்பட்டிருக்கும் சுதந்திர வெளியைப் புரிந்து கொள்ள முடியும். அந்த வழியில் நாம் “தேசதுரோகத்தையும்” புரிந்து கொள்வோம்.

நம்மைப் பொருத்தவரை கல்வி என்பது என்ன? நமது இளைஞர்கள் எதற்காக படிக்கிறார்கள்?

17 வயது வரை பள்ளிப் படிப்பு. பொறியியல் கல்லூரியில் நுழைவதற்கான அடிப்படைகளை உண்டாக்கிக் கொள்வதற்கு தேவை என்பதற்காகத் தான் அந்தப் பள்ளிக் கல்வியும் கூட. பின், 23 வயதுக்குள் பொறியியல் படிப்பை முடிப்பது. முடித்த உடன் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஐந்திலக்க சம்பளத்தில் வேலை. வேலையில் சேர்ந்ததும் வங்கிக் கடனில் நான்கு சக்கர வாகனம். கார் வாங்கிய சில ஆண்டுகளில் திருமணம். திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் மீண்டும் வங்கிக் கடனில் ஒரு சொந்த வீடு. படிப்போரில் பத்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே இந்தக் கனவை தொட்டுப் பார்க்கும் பாக்கியம் உள்ளவர்கள் என்றாலும் மீதிப் பேருக்கு இந்த ஆசை இல்லாமல் இல்லை. எனினும் அந்த ஐந்திலக்க கனவு நிறைவேறுவதாகவே வைப்போம்.

முப்பது அல்லது முப்பத்து மூன்று வயது வரை தொழில்நுட்ப பொறியாளராக காலம் தள்ளுவது. பின் அதுவரை அனுபவத்தில் சேர்த்த தொழில்நுட்ப அறிவைத் தலையைச் சுற்றித் தூர எரிந்து விட்டு உதவி மேலாளராவது. நாற்பது வயதுக்குள் மேலாளர் பதவியை அடைய அலுவலக அரசியலில் சுற்றிச் சுழல்வது. ஐம்பதுக்குள் மூத்த மேலாளராகவோ பொது மேலாளராகவோ அமர்வதற்கான நாற்காலிச் சண்டைகள். ஐம்பத்தெட்டில் ஓய்வு – எழுபதில் சாவு.

இந்த சுழற்சியின் விளைவு என்ன?

முப்பத்தைந்தில் கற்கும் ஆர்வம் சுத்தமாக வடிந்து போன அரைக்கிழமாகவும்.. நாற்பத்தைந்தில் மூளைச்சரக்கு அத்தனையும் காலியாகி இளம் பொறியாளர்களுக்கு பயனற்ற அறிவுரைகளை அள்ளி வழங்கும் முழுக்கிழமாகவும் ஆகிறார்கள். ஓய்வு பெறுவதற்குள் யாரும் காது கொடுக்க விரும்பாத தத்துவங்களைப் பேசும் தொண்டுக்கிழங்களாக பரிணமிக்கிறார்கள். இப்படித்தான் வாழ்ந்து மறைந்ததற்கு சுவடுகள் ஏதுமின்றியே சென்று சேர்கிறோம்.

முன்னொரு காலத்தில் பி.காம் படித்த குமாஸ்தாக்களால் நிரம்பியிருந்த நமது தமிழ் சூழல், இன்று பொறியியல் படித்த தொழில்நுட்ப குமாஸ்தாக்களால் நிரம்பியிருக்கிறது. கார் வாங்குவதில் துவங்கும் நமது கடங்கார வாழ்க்கை வீடு வாங்கிய பின் உத்திரவாதமாகிப் பின் மாதத் தவணையைத் தவற விடக்கூடாது என்கிற நிரந்தர அச்சத்தில் தள்ளுகிறது. அந்த அச்சத்திலிருந்தே நிறுவனத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்கிற அச்சமும் – இதிலிருந்து அரசியல் சமூக நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்வதிலிருந்து ஒதுங்கிச் செல்லும் அச்சங்களும் முளைத்தெழுகின்றன.

எனவே 35 வயதில் படிப்பு என்பது நமக்கு ஒரு அதிர்ச்சி

நமக்கு அறிமுகமாகியிருக்கும் அறிவுலகத்தை அப்படியே தலைகீழாக கவிழ்த்தால் கிடைப்பது தான் ஜே.என்.யு. மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்க ஐந்தாண்டு கேள்வித் தாள்களை நகலெடுத்துக் கொடுக்கும் பேராசிரியர்கள் அங்கே இல்லை. கற்றுக் கொடுப்பதல்ல – கற்றுக் கொள்ள உதவி செய்வதையே அங்கே ஆசிரியர்கள் செய்கிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களுமாக இணைந்து ஏற்படுத்தியிருக்கும் விவாதச் சூழலுக்குள் நுழையும் மாணவர்கள் இயல்பாக சமூக ஆளுமைகளாக உருவாகிறார்கள்.

கற்றல் என்பது மூடிய சுவர்களுக்குள் மட்டுமின்றி வளாகமெங்கும் மிக இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலைகள், மொழியியல் பற்றி மட்டுமின்றி சமூக மற்றும் மனித உறவுகளின் சிக்கலான பக்கங்கள் மிக இயல்பாக வகுப்பறைக்கு வெளியே புரட்டப்படுகின்றன. அறிவூட்டல் என்பது ஆசிரியரிடமிருந்து மாணவர்களை நோக்கிய ஒற்றைப் பாதையில் அல்லாது – ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்த பரஸ்பர கூட்டு இதைச் சாத்தியமாக்குகின்றது.

நாங்கள் அன்றைய இரவில் கடந்து சென்ற மேசைகளைச் சுற்றி அமர்ந்து கொண்டு விவாதத்தின் போக்கில் பயணித்துக் கொண்டிருந்த எவரிடமிருந்தும் பயனற்ற வார்த்தைகள் ஏதும் வெளிப்படவில்லை என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை. இருபத்தி நான்கு மணி நேரமும் அரசியல் என்பது அலுக்காதா? அரசியல் மயமாகவே இருப்பது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அவர்களின் ஓய்வு நேரங்கள் எப்படிக் கழிகிறது?

இந்தக் கேள்விகளுக்கான விடையை தொடர்ந்து அங்கே தங்கியிருந்த நாட்களில் நேரடியாகக் கண்டுணர முடிந்தது. நள்ளிரவு தொடங்கிய எங்களது உரையாடல் சில மணி நேரங்கள் தொடர்ந்தது. தற்போதைய நிகழ்வுகளின் பின்னணியை விரிவாக விளக்கினார். உறங்கச் செல்லும் போது அதிகாலை ஆகியிருந்தது. விழித்த போது மணி பத்தைக் கடந்திருந்தது.

நாங்கள் தங்கியது ஆண்களுக்கான விடுதியில். வெளியிலிருந்து நண்பர்களைக் காண வருபவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு ஒரு சிறிய தொகையைக் கட்டினால் விடுதி நண்பர்களோடு தங்கிக் கொள்ளும் வசதியிருந்தது. மறுநாள் காலை முதல் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண்கள் விடுதியில் உள்ள பொதுக் குளியலறைக்குச் சென்றால் அங்கே வாஷ்பேசினில் முகம் கழுவிக் கொண்டிருந்தார் ஒரு பெண்.

“அதிர்ச்சியில் மயங்கி விட்டீர்களா என்ன?” பின்னர் நண்பரிடம் எமது அதிர்ச்சியைப் பகிர்ந்து கொண்ட போது சிரித்துக் கொண்டே கேட்டார்.

“இல்லை.. அது எப்படி ஆண்கள் விடுதிக்குள் பெண்கள் வர முடியும்?”

“இங்கே தங்கியிருக்கும் உடன் படிக்கும் மாணவர் யாரையாவது பார்க்க வருவார்கள். பெண்கள் விடுதிக்கு இங்கேயிருந்து பத்து நிமிடங்கள் நடக்க வேண்டும். ஆத்திர அவசரமென்றால் அதற்காக ஓடவா முடியும்? கழிவறையை அவசரத்திற்கு பயன்படுத்த வந்திருப்பார். ஏன், உங்கள் மேல் உங்களுக்கே ஏதாவது சந்தேகமா என்ன?”

”அப்படியில்லை.. வெளியே ஜே.என்.யு குறித்து சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் இங்கே படிக்கும் ஆண்கள் பெண்களிடையே உள்ள உறவுகள் பற்றி அதிகம் சொல்லப்படுவதால் எழுந்த கேள்வி தான்”

“நீங்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் பொய் பிரச்சாரங்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அவன் சேற்றிலேயே வாழ்வதால் அவனுக்கு உலகமே சேறாகத் தெரிகிறது என்று நினைக்கிறேன். அப்படியெல்லாம் இங்கே பெண்களை கீழ்த்தரமான பாலியல் கண்ணோட்டத்தோடு யாரும் பார்ப்பதும் இல்லை, பழகுவதும் இல்லை”

”ஆர்.எஸ்.எஸ்காரனை விடுங்கள். அவன் சட்டசபைக்குள்ளேயே நீலப்படம் பார்த்த பாரம்பரியத்துக்கு சொந்தக்காரன் தானே.. ஆனால், பொதுவான சிலர் கூட இங்கே ஆண்களும் பெண்களும் கலந்து பழகுவதைப் பார்த்தால் தவறாகத் தானே கருதுவார்கள்?”

”நானே கூட ராஜஸ்தானில் இருந்து வந்தவன் தான். எனக்கே கூட முதலில் இங்கே உள்ள சுதந்திரத்தைக் கண்டு அச்சம் கலந்த குறுகுறுப்பாகத் தான் இருந்தது. ஆனால், அதெல்லாம் சில மாதங்கள் தான். பிறகு எனது பழைய குறுகுறுப்புக்குக் காரணம் நான் வளர்ந்த பார்ப்பனிய ஆதிக்க கருத்துக்களின் சூழல் தான் என்பதை புரிந்து கொண்டேன். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்வது போல பெண்களை பிள்ளை பெற்றுப் போட்டு புருசனுக்கு கால் அமுக்கி விடும் இயந்திரங்களாக இங்குள்ளவர்கள் பார்ப்பதும் இல்லை, அவ்வாறான கண்ணோட்டத்தோடு பழகுவதும் இல்லை”

”நீங்களே கவனித்துப் பாருங்கள், பெரும்பாலான விவாதங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் சூழல் இருப்பதை நீங்கள் சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள். ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பொது விடயங்கள் குறித்து அறிவார்ந்த தளத்தில் உரையாடிக் கொள்ளும் ஒரு ஜனநாயக வெளி இருக்கிறது. அதன் காரணமாக பெண்களை “சைட்” அடிக்கும் ஈவ்டீசிங் போன்ற சில்லறை விசயங்கள் இல்லாமலே போய் விட்டது. அது தான் மாணவிகளுக்கும் ஆண்கள் புழங்கும் கழிப்பறைகளைக் கூட பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமின்றி அங்கே எல்லா கழிவறைகளுக்கும் கதவுகளும் உண்டு.. ஒருவருக்கு மேல் நேரத்தில் ஒரே கழிவறையை பயன்படுத்தப் போவதுமில்லை… யாரால் தான் நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியும் சொல்லுங்கள்?”

தொடர்ந்து வந்த நாட்களில் இதை நேரடியாகவே அவதானிக்க முடிந்தது. வளாகத்தின் அரசியல் சூழல் ஏற்படுத்தியிருக்கும் ஒரு ஜனநாயக உணர்வும் அது வழங்கியிருக்கும் நம்பிக்கையும் பாலியல் கண்ணோட்டத்தை வெகுவாக பின்னுக்குத் தள்ளியிருந்தது.

வளாகத்தினுள் கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கும் வண்ணம் பல விடுதிகள் இருக்கின்றன. அவற்றில் ஆண்கள் விடுதி, பெண்கள் விடுதி, இருபாலார் விடுதி, மணமான மாணவர் விடுதி என்று அனைத்து வகைகளிலும் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் திரைகளின்றி சேர்ந்து பழகும் வெளிகளில் பாலியல் வன்முறைகளும், பாலியல் கண்ணோட்டங்களும் உதிர்ந்து போய் பெண்ணை சக மனுஷியாக பார்க்கும் இயல்பான கண்ணோட்டத்தை குறிப்பாக ஆண்கள் பெற முடியும் என்பதை ஜே.என்.யூ நிரூபிக்கின்றது.

வளாகத்தினுள் மாணவர் விடுதிகளைச் சுற்றி சிறு சிறு தேனீர்க் கடைகள் உள்ளன. அவற்றுக்கு அருகிலேயே உட்காரும் அளவுக்கான கற்களை சுற்றிப் போட்டு நடுவே கல்லால் ஆன மேசை போன்ற ஒரு வடிவம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவை மாணவர்களின் சந்திப்பு மையங்கள். இது போன்ற இடங்களெல்லாம் மாணவர்களால் நிரப்பப்பட்டு எல்லோரும் எதையோ குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

”கண்ணையா கைது பிரச்சினைக்குப் பின்னர் தான் இப்படி அரசியல் பேசுவது அதிகரித்துள்ளதா?”

”இல்லை பொதுவாகவே இங்கே இப்படித் தான் இருக்கும். ஆனால், நீங்கள் பிரமிப்பதற்கு ஏதும் இல்லை. மேலும் இங்கே அத்தனை பேருமே இடதுசாரி அரசியல் மட்டும் பேசுவதில்லை. இடதுசாரி கருத்துக்கள் செல்வாக்கோடு இருக்கின்றது என்பது உண்மை தான். எனினும், இங்கே விவாதங்களில் பெண்ணியம், பின்னவீனத்துவம், அம்பேத்கரியம், மொழிவழி தேசியம், இன தேசியம்… ஏன் சிலர் இந்துத்துவ அரசியலைக் கூட விவாதித்துக் கொள்வார்கள். இப்படி பல்வேறு அரசியல் கருத்துக்களிடையே மோதலும் கூட நடக்கும்”

”இந்துத்துவ அரசியலுக்கும் இடதுசாரி அரசியலுக்கும் இடையே நடக்கும் மோதல்களில் யார் வெல்வது வழக்கம்” சட்டென எழுந்த குறுகுறுப்பில் கேட்டோம். கொஞ்சம் நேரம் சிரித்தவர், பின் சொன்னார் –

“இப்போது அவர்கள் வெறியேறிப் போய் அரசின் உதவியோடு எங்கள் மேல் பாய்வதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இங்கே இருக்கப் போகிறீர்கள் தானே… திரும்பிப் போவதற்குள் அதைப் புரிந்து கொள்வீர்கள்”

“உங்களது ஓய்வு நேரங்கள் எப்படிக் கழிகின்றன?”

”ஆராய்ச்சிப் படிப்பிற்காக படிப்பதற்கே நிறைய நேரம் தேவைப்படும். வீட்டிலிருந்து அதற்குத் தானே அனுப்பியிருக்கிறார்கள்? ஒழிந்த நேரங்களில் அரசியல் விவாதங்கள், குறும்படங்கள் பார்த்து விவாதிப்பது, அல்லது ஏதாவது நூலைப் படித்து விவாதிப்பது இப்படிச் செல்லும்…”

”சினிமா, ஷாப்பிங் மால்…?”

“சிலர் அப்படியும் நேரத்தைப் போக்குவார்கள். குறிப்பாக அறிவியல் துறை மாணவர்கள் தனித் தனியே தங்கள் ஓடுகளுக்குள் சுருங்கிக் கிடப்பார்கள்… ஆனால், இப்போது எல்லோரையும் அரசு தேசதுரோகிகளாக்கி விட்டுள்ளதால் அவர்கள் வெளியே வந்துள்ளனர். இது உண்மையில் நல்ல விசயம். இதற்காக அரசுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்”

உண்மை தான் வளாகத்தில் தங்கியிருந்த நாட்களில் உள்ளே நடந்த கூட்டங்களுக்கு மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர். ஜே.என்.யுவில் படித்து தற்போது வெவ்வேறு துறைகளில் அறிஞர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் திகழ்பவர்கள் “தேசதுரோகிகளுக்கு” ஆதரவாகப் பேச வந்தனர். இக்கூட்டங்களில் பொதுவாக ஒதுங்கி வாழும் அறிவியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

வளாகத்தில் நிலவும் விவாதச் சூழல் அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது. மார்க்சியம் செல்வாக்கான ஒரு இடத்தில் இருந்தாலும், எவரும் எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதில்லை. மார்க்சியத்தை ஒரு இளமைத் துடிப்புள்ள தத்துவமாக உணராதோர் எவரும் இங்கே விவாதிப்பது கடினம்.

எதையும் கேள்விகளுக்கு உட்படுத்தும் இந்த ஜனநாயக கலாச்சாரத்தின் வீச்சை இந்துத்துவ அரசியலால் ஏன் எதிர்கொள்ள முடியவில்லை என்பதை விளக்க வேண்டியதில்லை. பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி, வேத கால விமானம், மகாபாரதத்தில் அணுகுண்டு போன்ற சரடுகளெல்லாம் எள்ளி நகையாடி சுக்கல் சுக்கலாக கிழித்தெறியப்பட்டு விடும். அவ்வாறு நிகழ்ந்த சம்பவங்கள் ஏராளம் உள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர்.

வலதுசாரி பிற்போக்குக் கண்ணோட்டங்கள் அறிவியக்கச் செயல்பாடுகளோடு எந்த வகையிலும் பொருந்தி வராததோடு போட்டியிட்டுத் தோல்வியடைந்தும் விடுகிறது. ஜே.என்.யு மாணவர்கள் இன்று ”தேசதுரோகிகளாக” முத்திரை குத்தப்படுவதன் இந்துத்துவ பின்னணியை நாம் பின்னர் விரிவாக காணவுள்ளோம்.

அதற்கு முன், இந்தப் பல்கலைக்கழகத்தின் தோற்றம், மாணவர்கள் தேர்வு மற்றும் அவர்களின் வர்க்க / சாதிய பின்னணி குறித்தும் இவ்வாறு வேறு வேறு சமூக சூழல்களில் இருந்து வருபவர்கள் வளாகத்தில் நிலவும் ஜனநாயகப்பூர்வமான சூழலுக்கு எப்படி தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் பார்த்து விடுவோம்