Thursday, April 7, 2016

தேர்தலோடு எதுவும் முடிந்து போவதில்லை

Su Po Agathiyalingam
via Facebook

யாராயிருப்பினும் எவ்வளவு பெரிய தலையாய் இருப்பினும் எங்கு இருப்பினும்;

1) சாதியை
2) குலத்தொழிலை
3) முதுமையை
4) ஊனத்தை

சுட்டி குத்திப் பேசுவது அநாகரிகம், அராஜகம் மற்றும் ஏற்க இயலாது.

அது போல் பெண்ணென்பதால் இழித்து பழித்துப் பேசுவதையும் ஏற்க இயலாது .

தேர்தல் களம் என்பதாலேயே அறிவை அடகுவைத்துவிட இயலாது, மனச்சாட்சியை விற்றுவிட இயலாது.

தேர்தலோடு எதுவும் முடிந்து போவதில்லை; தேர்தலுக்கு அப்பாலும் அரசியல் களப்பணி உண்டு.

‎மக்கள் நலக்கூட்டணியை புறக்கணிப்போம்‬ 2

கே. என். சிவராமன்
via Facebook
2016-Apr-07

இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன:

(1) ஒன்று, நிலவும் சிஸ்டமே வேண்டாம் என போராடுவது. இந்த சமூக அமைப்பு முதலாளிகளுக்கும் அதிகாரவர்க்கத்துக்குமே சாதகமாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தால் இவர்களை மீறி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. வாக்களிப்பது என்பது கண் துடைப்புதான். அதனால் ஒரு பயனும் இல்லை. - நக்சல்பாரி தோழர்கள் இதைத்தான் முன்னிறுத்துகிறார்கள். எனவேதான் தேர்தலை புறக்கணிக்கச் சொல்கிறார்கள்.

(2) இரண்டாவது ஆப்ஷன் தேர்தல் முறையிலான ஜனநாயகத்தை ஏற்பது. நிலவும் அரசியல் அமைப்புக்குள் இருந்தபடி களைகளை கலைவது. 
வாக்களிக்கும் உரிமையை இதற்கு பயன்படுத்துவது. 

இது போக மூன்றாவதாக எதுவுமே இல்லை.

ஆனால், இருக்கிறது என சிலர் நம்பச் சொல்கிறார்கள். அதாவது முதல் இரண்டு ஆப்ஷன்களையும் ஒன்று கலந்து காக்டெயிலாக பரிமாறலாம் என்பது இந்தத் தரப்பின் வாதம். இதைத்தான் ‘மாற்றம் - மாற்று அணி‘ என்று அழைக்கிறார்கள். அப்படி அழைப்பவர்கள் தமிழகத்தின் அறிவுஜீவிகளாகவும், முன்னாள் புரட்சியாளர்களாகவும் இருக்கிறார்கள்.

அதனால்தான் அடிப்படையான இரண்டு கேள்விகள் எழுகின்றன:

(1) இது எப்படி சாத்தியம்?
(2) இரண்டும் எப்படி ஒன்று கலக்கும்?

விஞ்ஞானப் பூர்வமாக விடை இல்லை. ஆனால், இருக்கிறது என அறிவுஜீவிகளும் முன்னாள் புரட்சியாளர்களும் அடித்துச் சொல்கிறார்கள். எப்படி என்று கேட்டால் - கற்பனாவாத விளக்கத்தை அளிக்கிறார்கள். தெரிந்தே இந்தப் பிழையை இவர்கள் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. கூடாது.

ஏனெனில் இவர்களது சமூக செயல்பாட்டில் குற்றம் காண முடியாது. 
உளப்பூர்வமாக சமூக நீதிக்காக உழைக்கிறார்கள். போராடுகிறார்கள்.
ஆனால் - தேர்தல் சமயத்தில் மட்டும் தங்களையும் அறியாமல் கற்பனாவாதத்துக்குள் புகுந்து விடுகிறார்கள். 

இவர்களுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. ஒரு நிலைத்தகவலில் அனைத்தையும் பட்டியலிட்டு விளக்க முடியாது என்பதால் - இப்போது மக்கள் நலக் கூட்டணியை - மாற்று அணியாக முன் வைத்து முகநூலில் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் அறிவுஜீவிகளையும் முன்னாள் புரட்சியாளர்களையும் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

1980 களின் இறுதியில் இருந்தே தேர்தல் சமயத்தில் இந்த மாற்று அணி பொம்மையை வர்ணம் தீட்டி யார் கையிலாவது கொடுப்பதை இவர்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் முதலில் இவர்கள் அந்த பொம்மையை டாக்டர் ராமதாசின் கையில் திணித்தார்கள். ‘பாட்டாளி மக்கள் கட்சி‘யை அவர் தொடங்கியபோது இவர்கள்தான் முதல் ஆளாக ஓடோடிச் சென்று ஆதரவு தெரிவித்தார்கள். 
சொல்லப்போனால் ‘பாட்டாளி மக்கள் கட்சி‘ என்ற பெயரை தேர்வு செய்தவர்கள் கூட இவர்கள்தான். 

அக்கட்சி சார்பாக அப்போது நடத்தப்பட்ட ‘தினக்குரல்‘ நாளிதழின் நடுப்பக்கங்களை புரட்சிகர வாசகங்களால் இவர்களே அலங்கரித்தார்கள். அனல் பறக்கும் கட்டுரைகளாக எழுதிக் குவித்தார்கள். 

அன்று செயல்பட்ட சில நக்சல்பாரி குழுக்களும் இதே காரியத்தை செய்தார்கள். தேர்தல் வழியாகவே சிஸ்டம் மாறும் என்ற நம்பிக்கையுடன்(!) டாக்டரை ஆதரித்தார்கள். 

ஒரேயொரு தேர்தல்தான். யானை சின்னம் பறிபோனதுமே தங்கள் நிலைப்பாட்டை அப்படியே தலைகீழாக மாற்றிக் கொண்டார்கள்.
டாக்டர் ராமதாசை ஆதரிப்பதை உடனடியாக நிறுத்தினார்கள்.
பிறகு திமுகவை விட்டு வைகோ வெளியேறியபோது - அவர் பின்னால் அணிவகுத்தார்கள். இதே மாற்றம் கோஷத்தை முன் வைத்தார்கள். ‘மாற்று அணி‘ பொம்மையை வைகோவிடம் கொடுத்தார்கள்.

ஏதோ ஒன்று இரண்டு தேர்தல்களில் அல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் இதைத்தான் செய்கிறார்கள். அதுவும் நம்பிக்கையுடன் என்பதுதான் ஆச்சர்யம். இத்தனைக்கும் ‘டூரிங்குக்கு மறுப்பு‘ என ஏங்கெல்ஸ் எழுதிய நூலில் இடம்பெற்றிருக்கும் ‘கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்‘ என்ற பகுதியை மனப்பாடம் செய்தவர்கள் இவர்கள்.
ஆனாலும் நடைமுறையில் கற்பனாவாதத்தைதான் விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

விஞ்ஞானப்பூர்வமாக நடக்க வாய்ப்பே இல்லாத ஒரு மாற்றத்தை -
என்றேனும் ஒரு நாள் (ஒரு தேர்தலில்) நடக்கும் என தேவதூதர்களை எதிர்பார்த்து பிராத்தனை செய்துக் கொண்டிருக்கும் மதவாதிகள் போல் நம்பிக்கையுடன் காத்திருக்கச் சொல்கிறார்கள். 

யாரிடம்? தங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவர்களிடம்.
அந்த வகையில் இத்தேர்தலி்ல் இவர்களது prophet - மக்கள் நலக் கூட்டணி.
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் சேர்ந்த அணி. இதிலிருந்தே நம் அறிவுஜீவிகளும், முன்னாள் புரட்சியாளர்களும் எந்த அளவுக்கு கற்பனாவாதத்தில் மிதக்கிறார்கள் என்பதை உணரலாம்.

ஏனெனில் தேர்தல் பாதையில், வாக்கு அரசியலில் - அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே / அணியே ஆட்சி அமைக்க முடியும். அந்த வகையில் இந்த மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழகம் முழுக்க என்ன செல்வாக்கு இருக்கிறது? 

* வெற்றி பெற வாய்ப்புள்ள ஒரு சில தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளில் மநகூவுக்கு ஓட்டு போட்டால் - அந்த வாக்கு வீணாகாதா?

* சரி. மக்கள் ஆதரவை பெற இதுவரை மநகூவினர் என்ன செய்திருக்கிறார்கள்? 

* கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்?

* எந்தெந்த இடங்களில் மக்களை அணி திரட்டி போராடியிருக்கிறார்கள்? 

*உடனே கட்சி உறுப்பினர்கள் அல்லது கட்சி அணியினர் மட்டுமே பங்கேற்ற போராட்டத்தை பட்டியல் இட வேண்டாம். கேட்பது மக்கள் பங்கேற்புடன், மக்களையே தலைமை தாங்க வைத்து நடந்த போராட்டங்கள் எவை எவை என்றுதான்.

இவை எல்லாம் தவிர மநகூவில் இடம்பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அனைத்துமே திமுக அல்லது அதிமுகவின் தோளில் அமர்ந்துதான் இதுவரை மாறி மாறி சவாரி செய்திருக்கின்றன. அப்படியிருக்கும்போது திடீரென்று தூக்கத்தில் இருந்து கண் விழித்து மாற்றம் மாற்றம் என குரல் கொடுத்தால்..?
மாற்றம் என்பது மக்களை திரட்டி, மக்களது பங்கேற்புடன் நடைபெறுவது. 
‘ரூம் மேட்ஸ்‘ ஆக நான்கு பேர் மட்டுமே கைகோர்த்து கனவு காண்பதல்ல. 
முக்கியமான விஷயம் - இறக்குமதி செய்ய மாற்றம் ஒன்றும் பண்டமும் அல்ல.

குறைந்தது சில ஆண்டுகளாவது தொகுதி தொகுதியாக - வீதி வீதியாக - இறங்கி மக்களிடம் பிரசாரம் செய்து, அவர்களையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு முன்னேறி இருக்க வேண்டும்.  இப்படி எந்த செயலையும் மநகூவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் செய்யவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு வரை திமுக / அதிமுக நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தன.
இதுதான் நால்வரின் டிராக் ரிக்கார்ட்.

அப்படியிருக்க எந்த அடிப்படையில் இந்த அறிவுஜீவிகளும் முன்னாள் புரட்சியாளர்களும் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்க சொல்கிறார்கள்?
சத்தியமாக புரியவில்லை. மற்ற காலங்களிலும் தெளிவாக இருப்பவர்கள், அர்ப்பணிப்புடன் சமூக நீதிக்காக போராடுபவர்கள் - சரியாக தேர்தலுக்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு முன் - கற்பனாவாதத்துக்குள் புகுந்து விடுகிறார்கள்.

சட்டென்று கண்ணில் படும் ஏதேனும் ஓரு கட்சியை ‘தேர்ந்தெடுத்து‘ -
அவர்கள் கையில் புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்ட ‘மாற்று அணி‘ பொம்மையை கொடுத்து - நிற்க வைக்கிறார்கள். அதுநாள் வரை தாங்கள் படித்த உலக போராட்ட வரலாறுகளை / வழிமுறைகளை எல்லாம் -
பொம்மையை கையில் ஏந்தி திருதிருவென விழித்தபடி நிற்கும் கட்சி அல்லது அணியினர் மீது திணித்து - பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். கோட்பாடுகளை புகுத்தி பக்கம் பக்கமாக எழுதத் தொடங்கி விடுகிறார்கள். 

தேர்தல் காலங்களில் மட்டும் கற்பனாவாதத்தில் மிதக்கும் இவர்களை பார்க்கவே பாவமாக இருக்கிறது. உங்கள் வாக்கை நீங்கள் பெரிதாக மதித்தால் - அதன் மூலம் உங்களுக்கான / நீங்கள் விரும்பும் ஆட்சி ஏற்பட வேண்டும் என்று நினைத்தால் - பெயரில் மட்டுமே மக்களை கொண்டிருக்கும் மக்கள் நலக் கூட்டணியை இந்தத் தேர்தலில் ஆதரிக்காதீர்கள். அதனால் ஒரு மாற்றமும் ஏற்படாது.

மட்டுமல்ல, உங்கள் வாக்கும் கடலில் கரைந்த பெருங்காயமாக மாறும். 
குறைந்தபட்ச சாத்தியம் எதுவோ அதுவே நிதர்சனம். 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் - மாற்றம் - மாற்று அணி பொம்மையை யார் கையில் அறிவுஜீவிகளும், முன்னாள் புரட்சியாளர்களும் கொடுக்கப்போகிறார்கள் என்று பார்க்க ஆசையாக இருக்கிறது.

Wednesday, April 6, 2016

ஞானி சங்கரன், பானு கோம்ஸ், பத்ரி சேஷாத்ரி, சுமந்த் சி ராமன் போன்ற நடுநிலையாளர்கள்

Arivazhagan Kaivalyam
via Facebook
2016-Apr-06 

நண்பர் ஒருத்தர் அப்பாவியாகக் கேட்கிறார், சார், ஞானி சங்கரன், பானு கோம்ஸ், பத்ரி சேஷாத்ரி, சுமந்த் சி ராமன் போன்ற நடுநிலையாளர்கள் எல்லாம் இந்த முறை மக்கள் நலக் கூட்டணியை மாய்ந்து மாய்ந்து ஆதரிக்கிறார்களே, அவர்கள் திராவிடக் கட்சிகளின் மீது முற்றிலுமாக நம்பிக்கை இழந்தது தானே இதற்குக் காரணம்???

அம்மா என்னதான் புலி வேஷம் போட்டாலும் அவரு ஒரு ஆர்த்தடாக்ஸ் ஐயங்கார் என்பதும், இந்துத்துவ மனுதர்மக் கொள்கைகளுக்கும், சனாதன சித்தாங்களுக்கும் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டார் என்பதும் இவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும், முந்தைய கால வரலாற்றை எடுத்துப் பார்த்தீர்களேயானால் பார்ப்பனீயத் தலைமை என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவே அவர்கள் பாசிச ஊழல் பெருச்சாளி ஜெயாவை ஆதரித்து வந்தார்கள்.

கருணாநிதியின் சாதி அடையாளத்தை சந்திக்கு இழுக்கும் வைகோவின் சாதிவெறி.

Aazhi Senthil Nathan
via Facebook
2016-Apr-06

கருணாநிதியின் சாதி அடையாளத்தை சந்திக்கு இழுக்கும் வைகோவின் சாதிவெறி... இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார் வைகோ. கேப்டன் டீவியில் நேரலை பார்த்துக்கொண்டிருந்தேன். வழக்கம் போலத்தான் பொங்குகிறார் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

இடையே சந்திரகுமாரின் வெளியேற்றத்தைப் பற்றி விளாசித்தள்ளிக் கொண்டிருந்தார். ஆச்சரியமில்லைதான்.

அப்போது சந்திரக் குமாரின் செயல்பாட்டை மிகமோசமாக வர்ணித்தார். அந்த "துரோகத்தை"  அ்மபலப்படுத்தும்போது அவர் "வேறு ஒரு தொழிலைச் செய்யப்போகலாம்" என்றார். உலகத்தின் ஆதித்தொழிலைச் செய்யலாம் என்றார். இதுவும்கூட திராவிட வாய்ச்சவடால் ஸ்டைல்தான்.

அதன் பிறகு கருணாநிதியும் உலகத்தின் ஆதித் தொழிலைச் செய்யப்போகலாம் ஒரே போடாக போட்டா்ர்..

உலகின் ஆதித் தொழிலைச் செய்பவர்களை எதற்கு இழுக்கவேண்டும் எனறே தெரியவில்லை. அவர்கள் பணம் வாங்கிக்கொண்டு படு்க்கமாட்டேன் என்றார்களா?  நடுராத்திரியில் அணி மாறினார்களா? 

துரோகிகளாகவோ அரசியல்வாதிகளைப் போல மோசமானவர்களாகவோ அவர்கள் இருக்கிறார்களா? பாவம் அவர்கள்.  சரி, அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம ஊர் "ஆம்பிளைகளைப்"  பற்றி நமக்குத் தெரியும்தானே!
அடுத்து சொல்கிறார் வைகோ. கருணாநிதிக்கு வேறு ஒரு தொழிலும் தெரியுமாம்? நாகஸ்வரம் வாசிக்கிற தொழில்!

எதற்காக வைகோ இந்த இடத்தில் கருணாநிதியின் சாதியை இழுக்கிறார்? அது வெறும் தொழில் சம்பந்தப்பட்ட வார்த்தை அல்ல. ஏனென்றால் கருணாநிதி ஒரு நாகஸ்வர வித்வானாக அறியப்பட்டவர் அல்ல. அவரோடு அதை சம்பந்தப்படுத்துவதாக இருந்தால் அது அவரது சாதியைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தானே ஒழிய. வேறு ஒன்றும் அல்ல.

வைகோவின் வார்த்தைகளை இந்த சாதிய சமூகத்தில் ஒரு பச்சைக் குழந்தைகூட புரிந்துகொள்ளும். அவர் கருணாநிதியின் ஜாதியை, - நாகஸ்வரம் வாசிப்பதைத் தொழிலாக கொண்டிருக்கும் ஒரு ஜாதியை - சுட்டிக்காட்டி, அதை உலகின் ஆதி தொழிலைச் செய்பவர்களோடு சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்.

எப்படிப்பட்ட ஆதிக்க சாதி மனநிலையும் ஆணாதிக்க மனநிலையும் இருந்தால் வைகோவால் இப்படி பேசமுடியும் என்று யோசித்துப்பாருங்கள்.
வைகோவின் உண்மை முகம் எப்படிப்பட்டது என்பதை அவரே அடிக்கடி வெளிப்படுத்திவருகிறார். அதில் ஒரு அம்சம்தான் இது. அன்று "கருவின் குற்றம்" என நாஞ்சில் மனோகரன் கருணாநிதியின் பிறப்பை கேள்விக்குள்ளாகியது  தொடங்கி, இன்று ஆதி தொழில், நாகஸ்வரம் வாசிக்கும் தொழில் தெரிந்தவர் என கருணாநிதியை வைகோ விமர்சிப்பது வரை, மதிமுக தலைவர்கள் பலருக்கும் வேறு கட்சிகளில் இருக்கும் தமிழ்நாட்டு ஆண்டை சாதித் தலைவர்களுக்கும் கருணாநிதியின் சாதியைச் சுட்டிக்காட்டி விளையாடுவது ஒரு நீண்டகால சாதிவெறி விளையாட்டு.

வைகோ அப்படிப் பேசியதைக் கேட்டுக்கொண்டு மேடையில் அமர்நதிருந்த திருமா, ஜிஆர். முத்தரசன், ரவிகுமார் போன்றோரின் மனத்தில் அப்போது எத்தகைய எண்ணவோட்டம் இருந்திருக்கும் என்று நமக்குத் தெரியாது. 
(டிஸ்கி: இது கருணாநிதி ஆதரவு பதிவு அல்ல. கருணாநிதியைத் தூக்கியெறிய ஆயிரம் காரணம் உண்டு. இப்போதும் ஜெ-கருணா இருவர் கூட்டணிக்கு எதிராகவே நிற்கிறேன். அது வேறு. ஆனால் வைகோவிடம் உறைந்திருக்கும் ஆண்டை சாதி மனோபாவததைப் பற்றி குறிப்பிடவேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் பேர்போன சாதியொழிப்பாளர்கள் அந்த ஆளை நம்பி தங்களுக்கு தாங்களே குழிபறித்துக்கொண்டிருக்கிறார்களே! )

Monday, April 4, 2016

எச்சரிக்கை binary oppositions

Marx Anthonisamy
via Facebook
2016-Apr-04

எச்சரிக்கை binary oppositions..
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நேற்று நான் மிகவும் மதிக்கும்  மூத்த இடதுசாரித் தலைவரும், தொழிற்சங்கவாதியுமான ஒரு தோழர் சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் எப்படி அம்பேத்கர் அவர்களும் இடதுசாரிகளும்தொழிளாளர்கள் பிரச்சினனைகள் பலவற்றில் ஒன்றிணைந்த கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்பது குறித்த பல முக்கிய கருத்துக்களையெல்லாம்  பேசிக்கொண்டிருந்தவர் இறுதியில் இப்படிக் குறிப்பிட்டார்:

"காந்தி மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டி விடுதலைப் போராட்டக் களத்தில் இறக்கினார், மதச்சார்பின்மை என்கிற அம்சத்தை வலியுறுத்தி உயிரைக் கொடுத்தார் என்பதில் எல்லாம் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் அவர் விவசாயிகள், தொழிலாளிகள் ஆகியோரைச்  சார்ந்து இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவர்களிடத்தில் போராட்டம் போய்விடக் கூடாது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.ஆனால் பகத்சிங்தான் தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோரை முன்னிறுத்திப் போராட வேண்டும் என்பதில் சரியாக இருந்தார்"

என்றார். இது வழக்கமாக கம்யூனிஸ்டுகள் சொல்வதுதான். "காந்தி X பகத்சிங்" என்கிற binary opposition ஐ முன்னிறுத்துவது கம்யூனிஸ்டுகளின் வழக்கம், அந்தவகையில் அவர்கள் சே, பகத்சிங் முதலான icon களை உயர்த்திப்பி பிடிப்பதும் அவர்கள் வழக்கமாகச் செய்வதுதான்.  இப்படி பகத்சிங்கையும், சே யையும் முன்நிறுத்துவதில் நமக்கு எந்த மறுப்பும் இல்லை. 

எனினும் தோழரின் மேற்கண்ட வாசகங்களை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள்.

(1) மிகப்பெரிய அளவில் மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்பில் இறக்கியவர் காந்தி அடிகள் என்பதை ஏற்றுக் கொள்கிறார். இது இப்போது ஆய்வாளர்கள் பலரும் கூறியுள்ள ஒரு கருத்துத்தான். சென்ற நூற்றாண்டில் உலக அளவில் இப்படிச் சாதாரண மக்களை, குறிப்பாகப் பெண்களைக் களத்தில் இறக்கியவர் அவர் (எ.கா: உப்புச் சத்தியாகிரகம் முதலியன) என்பது இன்று பல ஆய்வாளர்களாலும் குறிப்பிடப்படக் கூடிய ஒரு அம்சம்.இந்தியா ஒரு விவசாய நாடு என்பது ஊரறிந்த விடயம். ஆப்படியானால் விவாசாயிகள் முதலான அடித்தள மக்களைக் களத்தில் இறக்காமல் வேறு யாரைக் களத்தில் இறக்கியிருப்பார்?

(2)  தென்னாப்ரிகாவில் 22 ஆண்டு போராட்ட அனுபவங்களுடன் இந்தியா வருகிறார் அவர். தென் ஆப்ரிகாவில் அவருடன் கம்யூன்களிலும், களத்திலும் இருந்தவர்கள் யார்?

(3)  இங்கு வந்தவுடன் உடனடியாக அவர் அரசியலிலும் இறங்கவில்லை. இரண்டாண்டுகள் நாடெங்கும் நடக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் போராட்டங்களில் கலந்துகொண்டபி்ன்தான் நேரடியாக அரசியலில் இறங்குகிறார்.

(4)  காந்தி மட்டுமல்ல, பகத்சிங், சே யாரும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. பழைய தலைவர்கள் யாரையும் அப்படியே இன்று பின்பற்ற இயலாது. பகத்சிங்கும் தோழர்களும் எந்த வெள்ளை போலீஸ் அதிகாரியைச் சுட்டுக் கொல்லப் போனார்களோ,அவரை அவர்கள் கொல்லவில்லை. வேறொருவரை அடையாளம் தெரியாமல் கொன்றார்கள். பிறகு அறையில் வந்து சுவரொட்டியில் பெயரைத் திருத்தி ஒட்டினார்கள். சேயும் அவரது இறுதிக்கால adventures பலவும் தவறானவை. இருந்தாலும் அவர்களின் ஒப்பற்ற தியாகங்கள் . கருத்துக்கள் போற்றத்தக்கவை. இவை எல்லாவற்றையும் சீர்தூகிப் பார்த்து இன்றைய சூழலுக்கு ஏற்கத்தக்கவற்றை மட்டுந்தான் ஏற்க இயலும். இது காந்தியையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

(5)  தவிரவும் பகத்சிங் ஒரு எரி நட்சத்திரம் போல இந்திய அரசியல் வானில், சென்ற நூற்றாண்டின் முற் பகுதியில் தோன்றி ஒளி வீசி எரிந்து வீழ்ந்தவர். காந்தியோ ஒரு நீண்டகாலம் நம்மோடு வாழ்ந்தவர். குறைந்தபட்சம் 33 ஆண்டு காலம் இந்தியத் துணைக் கண்ட அரசியலில் முக்கிய பங்காற்றியவர். அவரது வளர்ச்சி என்பது முற்றுப் பெறவே இல்லை. வளர்ந்து கொண்டே இருந்தவர் அவர். தினந்தோறும் அவர் கற்றுக்கொண்டும், மாறிக் கொண்டும், பரிணமித்துக் கொண்டும் இருந்தவர். யாருடனுமான ஒப்பீடுகளில் நீங்கள் எந்த காந்தியைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

கடந்த பல பத்தாண்டுகளில் நாம் உருவாக்கியுள்ள இந்த binary oppositions களை மறுபரிசீலனை செய்வது அவசியம்.

நமக்கு வேண்டியது புதிய அரசியல் மட்டுமல்ல. புதிய மொழியும் கூட.
நினைவிருக்கட்டும், இது சோவியத்துக்குப் பிந்திய காலம்.

Sunday, April 3, 2016

நாம் தமிழர் கடசியின் செயல்பாட்டு வரைவு

Alegesa Pandian
via Facebook
2016-Apr-04

நாம் தமிழர் கட்சியில் இருக்கும் நண்பர்கள், சீமான் மீதான என் விமர்சணங்களை வெளிப்படையாக முன்வைக்க சொன்னார்கள்.
கேட்டதால் சொல்கிறேன். பலரும் ஏற்கனவே சுட்டிக்காட்டிய விசயங்கள் தான்.

செயலபாட்டு வரைவில் பல இடங்கள் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடுகள். அதெயெல்லாம் புதிய கட்சி என்பதால் பொருட்படுத்தவில்லை.  முக்கியமாக நான் உணரும் முரன்கள்.

1) அப்பட்டமான இனவெறி. சில சமயங்களில் நேரடியாகவும், பலமுறை தம்பிகளுக்கு நாய் விசில் வழியாக. இணையம் முழுக்க தரவுகள் இருக்கின்றன. இல்லையென்று மறுப்பதில் அர்த்தம் இல்லை.

2) திடீரென்று கல்வி, மருத்துவம் பற்றி பேசும் சீமான், தேர்தலுக்கு முன்பாக எத்தனை முறை இதற்க்காவெல்லாம் போராடியிருக்கிறார்? ஈழத்துக்காகவும், எழுவர் தூக்குதண்டனைக்கு எதிராகவும் குரல் கொடுத்த சீமான், கல்விக்காகவும், சுகாதாரத்திற்காகவும் குரல் கொடுத்த வெகுஜன போராட்டங்கள் ஏதும் உண்டா?

3) சர்வாதிகாரம், அன்பான தன்னலமற்ற இன்னும் வேறு எதாவ்து அடைமொழிகள் வைத்துக் கொண்டாலும் சரி. மக்களுக்கு பதிலாக நானே எல்லாம் சிந்திப்ப்பேன், நானே அணைத்தும் என்பதெல்லாம் சீமானுக்கு சரியாக இருக்கலாம். எனக்கு உடன்பாடில்லை. இந்திய அரசியல் சட்டத்தில் இவரது சர்வாதிகாரத்திற்கெல்லாம் சட்டபடி இடமில்லை. செயலலிதா, விசயகாந்து, கருனாநிதி எல்லாரும் சர்வாதிகாரிகள்  தான் எனும்போது, சீமானுக்கு அந்த உரிமை இல்லையா என்றால். எனது பதில் இதுதான். சீமானும் செயலலிதாவின் சர்வதிகாரப்பாதையை விரும்பினால், செயலலிதாவைப் போலவே மதிப்பீடு செய்யப்படுவார்.

4) சீமானுக்கு மேற்கத்திய வசதிகள், வாழ்க்கை தரம் வேண்டும், சட்டம் ஒழுங்கு வேண்டும். ஆனால் சிவில் உரிமைகள் சார்ந்த மேற்கின் விழுமியங்க்கள் தேவையில்லை. செயல்பாட்டு வரைவில் தனி மனித சிவில் உரிமைகள் பற்றி பெரிதாக எதுவுமில்லை.

5) ஈழ ஆதரவு, அவர்களது சுய நிர்ணய உரிமை என பலவற்றில் தமிழ்மக்கள் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும், தொடர்ந்து ஈழ அரசியலின் பினைக்கைதி போல் தமிழ் அரசியலை அனுகுகிறார்.

6) எல்லாமே, சீமான் என்றால் அடுத்தவருக்கு அங்கே என்ன வேலை? காட்டுக்கூச்சலுக்கு மட்டும் ஆள் எடுக்கிறார்கள் என்றே நினைக்க முடிகிறது.
இங்கே வாதம் செய்ய வரவில்லை. இதெல்லாம் என் அபிப்ராயங்கள்.

Friday, April 1, 2016

(8) நாங்கள் இந்தியரா ? – நாகா மாணவர் ஷிங்லாய் நேர்காணல்

JNU நேரடி ரிப்போர்ட் 8:
http://www.vinavu.com/2016/04/01/jnu-ground-report-8/

ஜே.என்.யு வளாகத்தில் வினவு குழுவினர் பார்த்த மாணவர் விடுதி அறைகளிலேயே அந்த அறை வித்தியாசமாக இருந்தது. அங்கே புத்தகங்கள் கலைந்து கிடக்கவில்லை. படுக்கை வாரிச்சுருட்டி போடப்பட்டிருக்கவில்லை. மேசையின் மீது பேனாக்கள் சிதறிக் கிடக்கவில்லை. தரை சுத்தமாக பெருக்கித் துடைக்கப்பட்டிருந்தது. பயன்பாட்டுக்கு அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே அந்த அறையில் இருந்தன. அந்த அறை மிக நேர்த்தியாகவும் எளிமையாகவும் இருந்தது. அந்த அறையில் குடியிருந்தவர் பெயர் ஷிங்லாய். மணிப்பூர் மாநிலத்தின் நாகா இன மக்கள் பிரிவைச் சேர்ந்தவர் அவர்.


வட இந்தியர்கள் உங்களிடம் எப்படிப் பழகுகிறார்கள்?

எங்களை வினோதமாக பார்ப்பார்கள். சிலர் தங்களுக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள். ’சிங்க்கிஸ்’ என்று கேலியாக அழைப்பார்கள். எல்லாரும் அப்படித் தான் என்று சொல்லி விடமுடியாது. ஆனால், அநேகமானோர் அப்படித் தான். முதலில் எனக்கு ஆத்திரமாக வந்தது. ஒரு கட்டத்தில் சண்டைக்குப் போகலாமா என்று கூட யோசித்திருக்கிறேன். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல ஒன்றை புரிந்து கொண்டேன்.

இவர்களுக்கெல்லாம் இந்தியா என்பது ஒரு முனையில் பஞ்சாபில் துவங்கி பெங்காலில் முடிகிறது.. இன்னொரு முனையில் உ.பி-யில் துவங்கி மஹாராஷ்டிராவில் எங்கோ முடிந்து விடுகிறது. இது ஒரு கண்ணுக்குத் தெரியாத எல்லைக் கோடு. இதற்கு வெளியே இருப்பவர்களை அவர்கள் இந்தியர்களாகவே கருதிக் கொள்வதில்லை. ஒரு கட்டத்தில், எனது தேசியத்தன்மை குறித்து நானே நீண்ட விளக்கங்கள் கொடுத்து புரியவைக்க வேண்டிய அவசியத்தை “சிங்க்கீஸ்” ரத்து செய்து விட்டதை உணர்ந்து அமைதியடைந்தேன். இப்போதெல்லாம் அப்படிக் கூப்பிடுபவர்களை நோக்கி என்னால் புன்னகைக்க முடிகிறது. நீங்கள் கூட ஒரு ’மட்ராஸீ’ தானே?

இங்கே எழுப்பப்பட்ட கோஷங்கள் குறித்த உங்கள் கருத்து எதுவாக இருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது. அதே போல் தான் இந்தியா என்கிற இந்த ஏற்பாட்டைக் குறித்து உங்கள் கருத்தையும் அனுமானிக்க முடிகிறது. எனினும், நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?

இந்தியா என்பது ஒரு கேலிக்கூத்தான நகைச்சுவை (Farce). இந்தியா என்பது சாவர்கருடையது. சங்பரிவாரங்களுடையது. எங்களுடையது அல்ல. நாங்கள் மாடும் பன்றியும் தின்கிறவர்கள், இந்தியை வெறுக்கிறவர்கள். தேசியம் குறித்து அவர்கள் பீற்றிக் கொள்ளும் எந்தக் கற்பிதங்களின் கீழ் எங்களை அடைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இதைத் தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார்கள் அல்லவா? இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றல்லவா பாட புத்தங்கள் நமக்குக் கற்பித்துள்ளன?


சரி. மங்கோலிய முகமும் உடலும் கொண்ட எனது தோற்றத்தை விடுங்கள். உணவுப் பழக்கம் குறித்து சொன்னேன். அதற்கும் மேலே எங்கள் சமூகத்தில் சாதி கிடையாது. எங்கள் திருமணங்களில் வரதட்சிணை கிடையாது. கணவனும், பிள்ளைகளும் தின்றது போக எஞ்சியதைத் தின்பதே ஒரு குடும்பப் பெண்ணுக்கு அழகு என்கிற பைத்தியக்காரத்தனங்கள் எங்களிடம் இல்லை. பெண்களுக்கு எங்கள் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் மிகவும் தனித்துவமானது. ஒரு குடும்பத்தின் தீர்மானங்களை எடுப்பதில் மட்டுமல்ல, எங்களது சர்ச்சுகளிலும், சமூக இயக்கங்களிலும் பெண்களின் குரலுக்கு முக்கியமான இடமுள்ளது. எங்களது பொருளாதார வாழ்வு வேறுபட்டது.  எமது விவசாய முறை வேறு. இப்படிச் சொல்லத் துவங்கினால் நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்களென்றால், ஒரு கோட்டைக் கிழித்து அதற்கு உள்ளே இருப்பவர்கள் அத்தனை பேரும் இந்தியர்கள் என்கிறீர்கள். இறைவனின் கருணையால் உங்கள் கோடு துணைக் கண்டத்துக்குள்ளே மட்டும் கிழிக்கப்பட்டிருக்கிறது. ஸ்காண்டிநேவிய காகாசியர்களும் ஆப்ரிக்க கருப்பர்களும் நல்வாய்ப்பாக தப்பித்துக் கொண்டார்கள்.

நாகாக்களின் தனித்துவம் குறித்து உங்களிடம் அதிக பெருமிதம் தெரிகிறது. நாகாக்கள் வெளிநபர்கள் குறித்த அச்சம் அல்லது வெறுப்பு கொண்டவர்கள் (Xenophobic) என்று சொல்லப்படுவது உண்மையா?

பழைய காலங்களில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது நிச்சயமாக இல்லை

என்றால் நாகாக்களிடையே கலப்புத் திருமணங்கள் உள்ளதா – குறிப்பாக குக்கி இனத்தவருடன்?

நிறைய உள்ளது. நாகா குக்கி இனத்தவரிடையே மட்டுமல்ல, சிலர் சமவெளிப் பகுதியைச் சேர்ந்த மைத்தாய் இனத்தவரோடும் கூட திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நாங்கள் பழங்குடி இனத்தவர்கள். எட்ட நின்று பார்க்கும் போது கொஞ்சம் கரடு முரடாகத் தெரிவோம். பழகிப் பாருங்கள் உங்களுக்கே புரியும். நாகா மக்கள் யாரையும் எளிதாக நம்பி விடுவார்கள். ஒரு தமிழராக இருந்தாலும் எங்கள் நாகா பெண்ணை காதல் திருமணம் செய்வதை நாங்கள் தடுக்க மாட்டோம். எங்கள் பெண்ணை அவர் துன்புறுத்தாமல் மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் வரை அந்தக் குடும்ப விவகாரத்தில் தலையிடவும் மாட்டோம். ஆனால், நீங்கள் திருமணம் செய்யப் போவது சுதந்திரமான சிந்தனைகள் கொண்ட நாகா பெண் என்பதை மறந்து விடாதீர்கள். அவள் ஒரு அன்பான அடிமையாக இருக்க மாட்டாள். இந்தியர்களால் எங்கள் பெண்களை சமாளிக்க முடியாது என்பதே எனது புரிதல்…  சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்.

ஒரு குடும்பத்தின் அங்கமாகவும் சமூகத்தின் அங்கமாகவும் நாகா பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சம உரிமை குறித்து குறிப்பிட்ட ஷிங்லாய், பல்வேறு சமூக அமைப்புகள் பெண்களாலேயே முழுவதுமாக நடத்தப்படுகின்றது என்பதையும் குறிப்பிட்டார். குறிப்பாக நாகா தாய்மார்கள் சங்கத்திற்கு அவர்கள் சமூகத்தில் உள்ள செல்வாக்கைப் பற்றியும் குறிப்பிட்டார்.

வேறுபாடுகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். உங்களது விளையாட்டுக்களைப் பற்றிச் சொல்லுங்கள். கிரிக்கெட் பார்ப்பதுண்டா? இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் போது உங்களுக்கு அந்தப் பரபரப்பு இருக்குமா?

கிரிக்கெட்டா? அது மந்த புத்திக்காரர்களின் விளையாட்டு. அதனால் தானோ என்னவோ இந்தியர்களுக்கு அது மிகவும் பிடிக்கிறது. நாங்கள் கிரிக்கெட் பார்ப்பதும் இல்லை. விளையாடுவதும் இல்லை. அதே போல இந்தியாவின் மற்ற விளையாட்டு வெற்றிகளையும் தோல்விகளையும் உங்களைப் போல் உணர்வுப் பூர்வமாக அல்லாமல் ஒரு விளையாட்டு என்கிற அளவில் மட்டுமே பார்க்கிறோம். எங்கள் விளையாட்டுக்கள் மல்யுத்தமும் வில்வித்தையும் தான். இப்போது மேற்கத்திய கலாச்சார தாக்கத்தினால் கால்பந்தாட்டம் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது.  வாலிபால் மற்றும் பாஸ்கட்பால் கூட நிறைய பேரால் விளையாடப்படுகின்றது. பொதுவாக எங்கள் விளையாட்டுக்கள் உடல் வலிமையைச் சார்ந்ததாகவே இருக்கும்

ஆம்.. நாகா தற்காப்புக் கலை பற்றிய காணொளித் துண்டு ஒன்றைப் பார்த்திருக்கிறோம். கொடூரமான அசைவுகள் கொண்டதாக இருந்த நினைவு.

சரி தான். அலங்காரமான அசைவுகளும் நுணுக்கங்களும் குறைவாகவே இருக்கும்.. நேரடியாக உயிரைப் போக்கும் அசைவுகள் கொண்டதாகவும் இருக்கும். எங்களது பாரம்பரிய மல்யுத்தமும் அப்படித்தான்.. புள்ளிகள் எடுப்பதை விட எதிராளியின் எலும்பு இணைப்புகளை முறித்துப் போடுவதற்கு தான் வீரர்கள் முனைவார்கள். நண்பரே… நாங்கள் வேட்டைக்காரர்கள்… எங்களது சண்டைக் கலைகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பீர்கள்? ஆனால் அதெல்லாம் சில பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கதை. இப்போது நிறைய மாறியுள்ளது.. எங்களது தற்காப்புக் கலைகள் விளையாட்டின் அம்சங்களை நிறைய உள்வாங்கி இருக்கிறது.

உங்கள் பொழுது போக்கு பற்றிச் சொல்லுங்கள். பாலிவுட் சினிமாக்கள் பார்ப்பதுண்டா?

இந்தி சினிமாக்களை நாங்கள் விரும்புவதில்லை.. மொழி புரியாது என்பது ஒரு காரணம்.. அடுத்து பாலிவுட் சினிமாக்களில் காட்டப்படும் காதல், குடும்பம் போன்ற உணர்ச்சிகள் குமட்டலை ஏற்படுத்துவதாக இருப்பது இன்னொரு காரணம். மற்றபடி ஹாலிவுட் சினிமாக்களும் இப்போது சமீபத்திய சில ஆண்டுகளாக கொரிய சினிமாக்களும் தான் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

இந்தி தெரியாது என்றா சொல்கிறீர்கள்? உங்கள் மாநில கல்வித் திட்டத்தில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுவதாக அல்லவா கேள்விப்பட்டோம்?

ஆம் எட்டாம் வகுப்பு வரை இந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், அது இந்தி மொழியில் ஆனா ஆவன்னா அளவுக்கு மேல் தெரிந்து கொள்ளப் பயன்படாது. எங்கள் மொழியின் கட்டுமானமே இந்திய மொழிகளுக்கு நேர் எதிரானது. எனவே எத்தனை ஆண்டுகள் படித்தாலும் அந்த மொழியே எங்கள் நாக்குக்கு விரோதமானது தான்

சரி, நாகா சமூகத்தில் உள்ள சொத்துடைமை மற்றும் விவசாய முறை பற்றி சொல்லுங்கள். உங்கள் சமூகத்தில் தனிச்சொத்துடைமை இல்லை என்று சிலர் குறிப்பிடுவது உண்மையா?

முற்றிலும் அப்படிச் சொல்ல முடியாது… எங்களிடம் நான்கு வகையான சொத்துடைமை வடிவங்கள் உள்ளன. ஒவ்வொரு தனிநபருக்கும் தனியே சொத்து உண்டு. அது போக குடும்பத்திற்கான சொத்து, இனத்திற்கான (Clan) சொத்து மற்றும் கிராமத்திற்கான சொத்துக்களும் இருக்கின்றன.

குழப்பமாக இருக்கிறது. இதில் கிடைக்கும் வருமானம் எப்படி பகிர்ந்து கொள்ளப்படுகின்றது?

அதைப் புரிந்து கொள்ள நீங்கள் முதலில் எங்களது விவசாய முறையைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது விவசாயம் இடம்மாறும் சாகுபடி (Shifting Cultivation) என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாக, எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் பத்து மலைகள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மலையை சாகுபடிக்காக எங்கள் கிராம கவுன்சில் தேர்ந்தெடுக்கும். இது பிப்ரவரி மாதம் நடக்கும். தேர்தெடுக்கப்பட்ட மலையில் உள்ள மரங்கள் மற்றும் களைகளை தீயிட்டு எரிப்போம். முதல் மரத்தை வெட்டும் உரிமை கிராமத் தலைவருக்கே உண்டு. மரங்கள் எரிந்து சாம்பல் பரவிய பின், ஜூன் மாதம் விதைப்போம் ஆகஸ்டில் ஒரு முறை களையெடுப்போம். இடையில் ஜூலை மாதம் தொடங்கி பருவ மழை பொழியத் துவங்கும். செப்டெம்பர் இறுதியிலிருந்து நவம்பருக்குள் அறுவடை முடிந்திருக்கும்..

எங்களது விவசாயத்தில் பெரும்பாலும் நெல் சாகுபடிக்கு முதன்மையான இடம் உண்டு. அது தவிர வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளும் சாகுபடி செய்வோம். அறுவடை செய்த பின் விளை பொருட்களை ஊரில் பொதுவான இடத்தில் சேமித்து வைப்போம். சிலருக்கு நிலம் இருக்கும். சிலருக்கு நிலம் இருக்காது.. நிலம் வைத்துள்ளவர்கள் தங்களது சொந்த நிலத்தில் உழைத்தது போக கிராம நிலத்திலும், இனத்திற்கான நிலத்திலும் உழைக்க வேண்டும். நிலமற்றவர்கள் நிலவுடைமையாளர்களின் நிலங்களின் வேலை செய்வதோடு பொது நிலங்களிலும் வேலை செய்வார்கள். அறுவடை முடிந்த பின் விளைச்சல் எல்லோருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். நிலவுடைமையாளர்களுக்கு மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதல் பங்கு கிடைக்கும். எனினும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகப் பெரியளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.

இந்த முறையினால் தான் எங்கள் சமூகத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டையோ, ஏழைகளையோ, பிச்சையெடுப்பவர்களையோ பசியால் வாடுபவர்களையோ நீங்கள் காண முடியாது. எங்கள் உணவு முறை தனிச்சிறப்பானது.. பரந்து விரிந்த காடு எங்களுக்கு இருக்கிறது.. அதன் ஒவ்வொரு மரத்தின் இலைகளையும், பட்டைகளையும், வேரையும், எதற்காக எப்போது தின்ன வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும். பிரதான உணவான அரிசியோடு சேர்த்து நிறைய பச்சை இலைகளுக்கும், இறைச்சிக்கும் இடமுண்டு. மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் விருப்பமான அசைவ உணவுகள். வேட்டையில் காட்டுப் பன்றிகளும், எருமைகளும் நிறைய கிடைக்கும்.

நாகா சமூக அமைப்பு பற்றிச் சொல்லுங்கள்.

நாகா ஒரு இனக்குழுச் சமூகம். ஒவ்வொரு கிராமத்துக்கும் கிராமத் தலைவர் இருப்பார். அவருக்கு வழிகாட்டுவதற்காக ஒரு கிராம கவுன்சில் இருக்கும். இந்தக் கவுன்சிலின் அதிகாரம் தான் உச்சபட்சமானது. அதே போல் நாங்கள் இனத்தால் ஒன்று என்றாலும் எங்களிடையே பல்வேறு மொழிகள் உள்ளன. கிட்டத்தட்ட 40 மொழிகள் நாகா மக்களிடையே உள்ளன. எங்கள் பக்கத்து கிராமத்தவர்கள் பேசும் மொழி எனக்குப் புரியாது. என்றாலும் எங்கள் அனைவரையும் மொழியால் இணைப்பது ஆங்கிலம் தான். தொன்னூறு சதவீதம் பேர் ஆங்கிலம் எழுத பேச படிக்கத் தெரிந்தவர்கள் தான்.

விவசாய முறை பற்றிச் சொன்னீர்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த விவசாய முறையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவே இல்லையா? உலகமயமாக்கத்தின் தாக்கம் எதுவுமே இல்லையா?

நிறைய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நான் குறிப்பிட்ட விவசாய முறை இப்போதும் உள்ளடங்கிய பகுதிகளில் பின்பற்றப்படுகின்றது. ஆனால், தற்போது நகரங்களின் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய முறையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலரும் பழங்கள், பூக்கள் போன்ற பணப்பயிர்களை விளைவிக்கின்றனர். முன்பெல்லாம் நாங்கள் அரிசிக்காக யாரையும் எதிர்பார்க்க மாட்டோம். இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நாகா வாழ்க்கையில் பணம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. வசதி வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளனர். பல நாகா இளைஞர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்… இங்கே சீன உணவகங்களில் நீங்கள் பார்க்கிறவர்கள் எல்லாம் சீனர்கள் அல்ல, வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான். நாங்கள் மேற்கே வருவதைப் போல பீகாரிகள் கிழக்கே வருகிறார்கள். விவசாய கூலிகளாகவும், இன்னபிற வேலைகளிலும் பீகாரிகள் அதிகரித்து வருகிறார்கள்.

உலகமயமாக்கலுக்குப் பின் பணத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டீர்கள்.. அதன் பின்விளைவுகள் பற்றிச் சொல்லுங்கள்.

எங்கள் கிராமங்கள் தன்னிறைவு பெற்றவை. அங்கே திருட்டு என்பதை நாங்கள் முன்பெல்லாம் கேள்விப்பட்டதில்லை. எங்கள் வீடுகளுக்கு பூட்டுக்கள் கிடையாது. இப்போதும் கூட உள்ளொடுங்கிய கிராமங்களில் பூட்டாத வீடுகளைப் பார்ப்பீர்கள். அங்கே உள்ள கடைகளில் கடைக்காரர்கள் இருக்கமாட்டார்கள். நீங்களாகவே பணத்தை வைத்து விட்டுத் தேவையான பொருளை எடுத்துப் போகலாம். கேட்பதற்கு ஏதோ உட்டோபிய நகரத்தைப் பற்றிய வர்ணனை போல் தோன்றுகிறதல்லவா? ஆனால் இவையெல்லாம் உண்மைகள். இதோ உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாரே இந்த தோழர் இதையெல்லாம் நேரடியாகவே பார்த்திருக்கிறார். ஆனால்.. இப்போது நகரங்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் நிலைமை மாறி வருகிறது. திருட்டு அதிகரித்திருக்கிறது. பணம் தன்னோடு சேர்த்து பேராசையையும், களவையும் அழைத்து வந்துள்ளது.

சரி, அடுத்த கேள்வி. எங்கள் பகுதியில் இந்துத்துவர்கள் கிருத்துவ மதமாற்றத்தின் அபாயங்களைப் பற்றிச் சொல்வதற்கு வட கிழக்கு இந்தியாவையே உதாரணமாக காட்டுவார்கள்..

அப்படியா? எந்த மாதிரியான அபாயங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்?

நாகா பிரிவினைவாத அமைப்புகளுக்கு துப்பாக்கி சப்ளையே சர்ச்சுகளின் மூலம் தான் நடக்கிறதாமே? கிருத்துவ மதத்திற்கு மாறி விட்டால் தேசத்தையே மதிக்காத போக்கு மக்களிடையே செல்வாக்குப் பெற்று விடும் என்பதற்கு நாகா பிரிவினைவாத அமைப்புகளே உதாரணம் என்கிறார்கள்

ஏசுவே.. ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதி தங்களுக்குச் சொந்தமில்லாத தேசிய கற்பிதங்களை ஏன் மதிக்க வேண்டும்? இதில் மதம் எங்கே வந்தது? நாகா விடுதலை இயக்கங்கள் துப்பாக்கிகளுக்காக சர்ச்சுகளை ஏன் சார்ந்திருக்க வேண்டும்? சர்ச்சுகளை அவர்கள் ஆயுதங்களுக்காக சார்ந்திருந்தார்களென்றால் எப்போதோ வீழ்த்தப்பட்டிருப்பார்கள். நாங்கள் பெரும்பான்மையாக சி.என்.ஐ (தென்னிந்தியாவில் சி.எஸ்.ஐ) சர்ச்சுகளைச் சேர்ந்தவர்கள்.. கணிசமாக கத்தோலிக்கர்களும் உள்ளனர். விடுதலை இயக்கங்களின் பால் சர்ச்சுகளுக்கு அனுதாபம் உள்ளதே தவிர நேரடியாக கீழே இறங்கி ஆயுதங்களை கைமாற்றி விடுமளவிற்கு அவர்கள் முட்டாள்கள் அல்ல. ஏனெனில், இந்தியா முழுவதும் அவர்களுக்கு சொத்துக்களும், இன்னபிற நலன்களும் உள்ளன. எங்களை ஆதரிக்கப் போய் அவற்றையெல்லாம் இழப்பதற்கு சர்ச் என்பது முட்டாள்களின் கூடாரமா என்ன?

மற்றபடி நாகா வாழ்வில் கிருஸ்தவத்தின் பங்கு என்ன?

கிருஸ்தவம் அறிமுகமாவதற்கு முன் நாங்கள் இயற்கை வழிபாட்டாளர்களாக இருந்துள்ளோம். கிருஸ்தவம் நாகா சமூகத்திற்கு அறிமுகமான போது எங்களது கலாச்சார அடிப்படைகளை பெரிதும் மாற்றாமல் பல அம்சங்களை உட்செறித்துக் கொண்டது. உதாரணமாக எங்கள் பாரம்பரிய வழக்கங்கள், விழாக்கள்.. மற்றபடி மற்ற பகுதிகளில் சர்ச்சின் செல்வாக்கு எப்படியோ அப்படித்தான். பிறப்பு முதல் இறப்பு வரை சகலமும் சர்ச்சோடு பிணைந்தே இருக்கும்.

கடந்த இருபதாண்டுகளாக எல்லா மதங்களிலும் அதிதீவிர தூய்மைவாத போக்கு தலையெடுத்து வருகின்றது.. இசுலாத்தில் வஹாபியப் போக்கு, இந்துத்துவத்தின் எழுச்சி.. கிருஸ்தவத்தில் பெந்தெகொஸ்தேவினர் உள்ளார்கள்.. வட கிழக்கில் நாகாக்கள் இடையே பெந்தெகொஸ்தேவினரின் செல்வாக்கு எப்படி இருக்கிறது?

பெந்தெகொஸ்தே என்று மட்டும் சொல்ல முடியாது.. பொதுவாகவே இவாஞ்சலிஸ்ட் வகைப்பட்ட கிருஸ்தவ சபைகள் மெல்ல மெல்ல செல்வாக்குப் பெற்று வருகின்றன. கத்தோலிக்கர்களிடையே கூட ப்ரெஸ்பெடீரியன் என்ற ஒரு பிரிவு செல்வாக்கு பெற்று வருகின்றது. இவர்களை கத்தோலிக்க பெந்தெகொஸ்தே என்று சொல்லலாம். இவர்கள் யாருக்கும் பதிலளிக்கவோ கணக்குக் காட்டவோ தேவையில்லை. இவர்களைப் பொறுத்தவரை தங்களை கடவுளுக்கு நிகரான ஞானிகளாகவும் எதிரே அமர்ந்திருப்போரெல்லாம் சாத்தானுக்கு நிகரான பாவிகளாகவும் கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்தில் ஆபத்தான சக்திகளாக வளர்வதற்குரிய எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது – அதே நேரம் நான் பைபிள் சொல்லும் படைப்புக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கடவுள் மனிதனுக்கு மூளையைக் கொடுத்திருப்பதே எது சரி எது தவறு என்று பகுத்தறிவதற்காகத் தான். உழைக்காமல் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு மட்டும் இருந்தால் சாப்பாட்டு மேசை நிறைந்து விடுமா என்ன?

சரி, இந்திய அரசோடு நாகா போராளி இயக்கங்கள் செய்து கொண்டுள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து சொல்லுங்கள்

அதை அமைதி ஒப்பந்தம் என்று அழைக்க முடியாது.. இப்போதைக்கு அது அமைதி ஒப்பந்தத்திற்கான ஒரு வரைவுச் சட்டகம் தான். இந்தச் சட்டகத்துக்குள் இந்திய அரசு சொருகப் போவது ஒரு நாகாவின் புகைப்படத்தையா அல்லது மோடியின் புகைப்படத்தையா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. மேலும், நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது பிரதமர் அல்ல. பிரதமரின் முன்னிலையில் ஒரு அதிகாரி தான் கையெழுத்திட்டிருக்கிறார். ஒருவேளை மோடியே கையெழுத்திட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

நீங்கள் மோடியின் மேல் நம்பிக்கையோடு இருப்பதாகத் தெரிகிறதே..

நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

ஜே.என்.யு வளாகத்தில் மோடிக்கு இப்படி ஒரு ஆதரவா? அதுவும் ஒரு நாகா இளைஞர் மோடியை ஆதரிப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது…

பலமாகச் சிரிக்கிறார்.. மோடி ஆதரவு என்பதை அப்படியே இந்துத்துவ ஆதரவு என்று புரிந்து கொள்ளப் போகிறீர்கள். இந்துத்துவ பாசிசம் என்கிற கருத்தியலில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.. ஆனால், இதில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒரு விசயம் இருக்கிறது. இதே காங்கிரஸ் அரசாங்கம் என்று வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் மெனக்கெட்டு நாகாக்கள் என்பவர்கள் யார் தெரியுமா? என்பதில் ஆரம்பித்து நாங்கள் தனித்துவமானவர்கள் என்பதை புரியவைக்க மொத்த கதையையும் விளக்க வேண்டும். அவர்கள் எல்லா கதைகளையும் கேட்டு விட்டு, கடைசியில்.. ‘இத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் நாமெல்லாரும் இந்தியர்கள் தானே’ என்பார்கள்.. மீண்டும் வேறு விதமாக புரியவைக்க மெனக்கெட வேண்டும்..  இந்துத்துவ சக்திகளிடம் அந்த சங்கடங்கள் இல்லை.. ‘ஏய், இதோ பார் நாங்கள் மாடு தின்போம், எங்களிடம் சாதி இல்லை’ என்று மட்டும் சொன்னால் போதும். ‘அட, இது பாரதிய கலாச்சாரம் இல்லையே’ என்று கதையின் விடுபட்ட பகுதிகளை அவனே நிரப்பிக் கொள்வான். இந்திய தேசியம் என்பதற்கு அவர்கள் சொல்லும் எந்த வரையறைக்குள்ளும் நாங்கள் இல்லாதிருக்கும் ஒரே தகுதி போதும் நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு. ’நாங்கள் இந்தியர்களில்லை. கெடு வாய்ப்பாக எங்கள் நிலத்தின் மீது நீங்களே கோடு கிழித்து இந்தியாவாக்கி விட்டீர்கள். என்ன செய்யலாம் சொல்லுங்கள்’ என்று நேரடியாக விசயத்திற்குப் போய் விடலாம். சொல்லப் போனால் இந்துத்துவம் அதிகாரத்தில் இருப்பது பொதுவான நோக்கில் தீமையானது என்றாலும், பிரிவினை உரிமை கோரும் மக்களின் பணிகளை அவர்கள் சுலபமாக்குகிறார்கள்.

சரி நாகா – குக்கி மோதல்கள் குறித்து சொல்லுங்கள்?

நாகா குக்கி மோதல்கள் மட்டுமல்ல.. வடகிழக்கில் உள்ள இனக்குழுக்களுக்கு இடையே சண்டைகள் உள்ளேயே நடக்கும் மோதல்கள் மொத்தமும் இந்திய உளவுத்துறையின் ஏற்பாடு தான். சமீபத்தில் இந்திய இராணுவ உயரதிகாரி ஒருவர் வெளிப்படையாகவே பேட்டியளித்துள்ளார். அதில், ‘நாங்கள் நாகாக்களின் நிலங்களில் திட்டமிட்ட ரீதியில் குக்கி இனத்தவரைக் குடியமர்த்துவதில் வெற்றி பெற்றுள்ளோம். இனி நாகாக்கள் விடுக்கும் சவாலை குக்கி இனத்தவரே எதிர்கொண்டு விடுவார்கள்’ என்றுள்ளார். ஆனால், நாகா குக்கி மோதல்கள் இப்போது பழங்கதைகள் ஆகிவிட்டன. நாங்கள் அந்த கசப்பான நினைவுகளை மறக்கத் துவங்கி விட்டோம். சமீபத்தில் கூட ஒரு குக்கி இளைஞன் இராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாகா கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்கள்.

முழுக்க முழுக்க இந்திய அரசின் சதி மட்டும் தான் காரணமா? நீங்கள் எந்த வகையிலும் பொறுப்பில்லையா?

அந்த மோதல்களுக்கு ஏற்பாடு செய்து களம் அமைத்துக் கொடுத்தது இந்திய உளவுத்துறை என்றாலும் நாங்கள் இருவருமே அந்தச் சூழலுக்குப் பலியாகிப் போனோம். இப்போது நிதானமாக வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது மிகவும் வெட்கமாக உணர்கிறேன். குறுகிய இனப் பெருமைக்காக எதிரிக்கு எதிராக பிளவுபட்டு நின்று மோதிக் கொண்டு செத்து மடிந்திருக்கிறோம் என்பது அவமானகரமானது.. ஆனாலும், வரலாறு வரலாறு தானே? இனிமேல் நடந்தவற்றைத் திருத்தி எழுதவா முடியும். கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டியது தான்.

மைத்தாய் இனத்தவரோடு உங்கள் உறவு எப்படி உள்ளது. குறிப்பாக ஐரோம் சர்மிளாவின் போராட்டம் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள். நாகா இனத்தவர்கள் ஐரோம் சர்மிளாவிற்கு பெரியளவில் ஆதரவளித்து களமிறங்கியதாக தெரியவில்லையே?

நாகா குக்கி இனத்தவர்கள் பழங்குடியினர்.. நாங்கள் மலைவாசிகள். எங்களுக்குள் சமூக அமைப்பில் இருந்து பல அம்சங்கள் ஏறத்தாழ ஒத்துப் போகும். ஆனால், மைத்தாய் சமவெளி மக்கள். இவர்கள் பெங்காலி வகைப்பட்ட இந்து மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள். மைத்தாய்களிடையே சாதி உள்ளது. சரியாக சொல்லப் போனால், இத்தனை ஆண்டுகளாகியும் மைத்தாய் மக்கள் எங்களை தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள். எங்களுக்குள் கலப்புத் திருமணங்கள் மிக அரிதாகவே நடக்கின்றன. குக்கிகளைப் போல் அன்றி மைத்தாய் மக்களிடம் நாங்கள் நெருங்குவதற்கான சமூக வாய்ப்புகளே குறைவு தான். ஐரோம் சர்மிளா ஒரு மைத்தாய் என்றாலும் அவரது போராட்டத்தை நாங்கள் அனுசரணையாகவே பார்க்கிறோம். இருந்தாலும், அவருக்கு இந்தியா முழுவதும் கிடைத்திருக்கும் கவனத்தை எங்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காக பயன்படுத்தவில்லை என்கிற் வருத்தம் எங்களுக்கு உண்டு.

மைத்தாய் இனத்தவரோடு இணைந்து போராட்டங்கள் நடக்கின்றனவா?

இல்லை. நாங்கள் இன்னும் எமது பழைய கசப்புணர்வுகளை மறக்கவில்லை.

சற்று முன்பு தான் சொன்னீர்கள், எதிரிக்கு எதிரே இணைந்து போராடாமல் உள்ளடிச் சண்டைகளின் பாதிப்பு குறித்து. இவ்வளவு ஒற்றுமையின்மைகளை வைத்துக் கொண்டு உங்கள் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்றா கருதுகிறீர்கள்?

முடியாது என்பதே தர்க்கரீதியாக நடைமுறை ரீதியாக கிடைக்கும் விடை. மட்டுமின்றி எங்களது வரலாற்று அனுபவங்களும் அதே விடையைத் தான் தருமின்றன. எனினும், எதார்த்தமான களநிலவரம் நாங்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு எங்களுக்குள் அடித்துக் கொள்வதாகத் தான் உள்ளது. இது எங்களுக்கு மட்டுமல்ல, வலுவான எதிரியை எதிர்த்து போராடும் ஒடுக்கப்படும் பிரிவினர் ஒவ்வொருவரும் இவ்வாறு பிரிந்தே கிடக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட அப்படித்தான் இருக்கிறது. நமது நாட்டைப் பொறுத்தவரை இடதுசாரிகள் எழுச்சி பெற்று போராடும் பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைப்பது தான் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒரு தீர்வாக நம் கண் முன்னே இருக்கிறது.. அதுவரை என்ன செய்வது?