Monday, April 20, 2020

மாற்று அரசியல் - மானசீகன்

மானசீகன் 
2020-04-20


எல்லா காலங்களிலும் மாற்று அரசியல் உருவாகும். அதுவே ஆரோக்யமானதும் கூட.  திமுக என்பது தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி , சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம்,என்று நாற்பதாண்டுகள் பயணித்து 1949 ல் தான் முழுமை பெற்றது .அதற்குப் பிறகும் கூட  சமூக நல  இயக்கமாகவே 8 ஆண்டுகள் வரை செயல்பட்டு 57 ல்தான் தேர்தல்  அரசியலுக்கு வந்தது.  அதற்குப் பிறகு மெல்ல மெல்ல 15 சீட், 60 சீட்  என வளர்ந்து ஆட்சியைப் பிடித்தது.  ஒரு சித்தாந்தம் முறையாக  ஆட்சிக் கட்டிலில்  அமர்வதற்கு அறுபது ஆண்டுகள் ஆனது  ( சுதந்திரத்திற்கு முன்பு உருவான நீதிக் கட்சி ஆட்சியை நான் சேர்க்கவில்லை ) இதற்கு இடையே பத்திரிக்கை, நூல்கள், மேடை நாடகங்கள், தெருப்பிரச்சாரங்கள் , வாசக சாலைகள், திரைப்படம் , மக்கள் போராட்டங்கள் , இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி என்று  பல்வேறு வகைகளில் மக்களை ஈர்த்தது.  அண்ணாவைப் போல் அறிவாற்றல் படைத்த நூற்றுக்கணக்கான  இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவானார்கள் . ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான  இளைஞர் கூட்டம் அரசியல் விழிப்புணர்வு பெற்றது.  இதற்குப் பெயர்தான் மாற்று அரசியல்.  அதனால்தான் காங்கிரஸிற்கு மாற்றான திமுக வின் மாற்று அரசியலோடு எவரும் போட்டிக்கு வரவில்லை. ஏற்கனவே  இதே மாதிரியான சித்தாந்த வரலாறு கொண்ட கம்யூனிஸ்டுகள் மட்டுமே களத்தில் இருந்தனர். எம்ஜிஆரும் கூட  ஆரம்ப கால காங்கிரஸ்காரர் . பிறகு 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து திராவிட  அரசியலின் முகமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் பிறகே கட்சி தொடங்கினார்.  சினிமா கவர்ச்சியை வைத்து எம்ஜிஆர் அரசியலுக்கு வரவில்லை . திமுக சித்தாந்தத்தை திரையில் பிரபலமாக்கி அதன் மூலமாகவே அரசியல் பிம்பத்தை உருவாக்கினார்.  தேர்தலுக்கு முதல் நாள் கட்சி தொடங்கி சிஎம் ஆகவில்லை.  அந்தக் கட்சியிலும் அண்ணாவின் பெயர் , கொடியில் முகம் ஆகியவற்றை  இடம் பெறச் செய்து தன்னை திராவிடத் தொடர்ச்சியாகவே காட்டிக் கொண்டார். கருணாநிதி எதிர்ப்பைத் தவிர  மற்ற விஷயங்களில் நானும் அதே ஆள்தான் என்கிற மாதிரி நடந்து கொண்டார்.   ஆட்சியிலும் கூட  அண்ணா, கலைஞரின் சமூக நீதிப் பார்வையையே பின்பற்றினார். ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம்  திராவிட  அரசியலின் விபத்து என்றாலும் கூட  2004 தேர்தல் தோல்விக்குப் பிறகு அவர் முழுமையாகத் தன்னை மாற்றிக் கொண்டு திராவிட  அரசியலின் தொடர்ச்சியாகவே செயல்பட்டார்.  அதனால்தான் எம்ஜிஆராலும் , ஜெயலலிதாவாலும் கலைஞருக்கு மாற்றாக  இருக்க முடிந்தது. 

இப்போது மாற்று  என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு  எந்தக் கொள்கையும் கிடையாது.  அவர்கள் நிர்வாகத்தையே ஆட்சி  என்று நம்புகிறார்கள்.  அதற்கெதற்கு அரசியல்வாதிகள் ? ஐஏஎஸ் அதிகாரிகளே ஆண்டு விட்டுப் போவார்களே . நானும் கலைஞர் மாதிரி ஜெயலலிதா மாதிரி பிரபலம்தான்.  அதனால நான் ஸ்ட்ரைட்டா சிஎம் ஆகனும் என்று விரும்புகிறார்கள் .ரஜினி, கமல், விஜய் ஆகியோருக்கு இந்த  ஆசை வெளிப்படையாகவும், வேறு சிலருக்கு மறைமுகமாகவும் இருக்கிறது.  இவர்கள்  எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு ஆரம்ப காலங்களில் இருந்த  அரசியல் பின்ணணியை மறந்து விடுகிறார்கள்.  கொள்கையில்லாமல் விஸ்வரூபம் எடுத்து ஒன்றுமில்லாமல்  ஆகி விட்ட  விஜயகாந்த்தை வசதியாக மறந்து விடுகிறார்கள்.  93 வயது முதியவரான கலைஞர்  மருத்துவமனையில் நினைவிழந்து படுத்திருக்கும் போது உண்ணாமல்,  உறங்காமல் இரவெல்லாம் விழித்திருந்து அந்தத் தொண்டர்களை' எழுந்து வா எழுந்து வா, ' என்று கத்த வைத்தது எது?  ஏன் அது விஜயகாந்திற்கு நிகழவில்லை? என்று யோசித்தாலே போதும்.  விடை கிடைத்து விடும். எனக்குத் தோன்றுவது இதுதான். இந்தப் போலி மாற்று பேசும் நடிகர்கள் எல்லாம் அவர்களுக்கு அவர்களே பிரச்சினையாக இருக்கப் போகிறார்கள் .

இந்தக் கேட்டகிரியில் சீமான் வரமாட்டார்  என்றாலும் அதுவும் நிஜமான மாற்று அரசியல்  அல்ல.  அவர் குறித்து விரிவாக வேறொரு பதிவில் பேசுகிறேன். 

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  மாற்று அரசியல் என்பது ஆள் மாற்றம் இல்லை . சித்தாந்த மாற்றம் . இது தப்புன்னு சொல்வது மட்டும் சித்தாந்தம் இல்லை.  அதைக் குழந்தை கூடச் சொல்லும் . அதற்கு மாற்றான நடைமுறைச் சாத்தியம் கொண்ட( இது ரொம்ப முக்கியம்)  வேறொரு கொள்கையை கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்திக் காட்டுவதுதான் மாற்று . இருப்பதை கண்மூடி நிராகரிப்பது மாற்று அல்ல.  ஒரு சித்தாந்தத்தின் நவீனப்படுத்தலாகவும் மாற்று  அமைய முடியும். காந்தியம் , சோசலிசம், லிபரல் சோசலிசம், கம்யூனிசம், திராவிடம், வலதுசாரி லிபரல் முதலாளித்துவம் ,  கார்ப்பரேட் நவ முதலாளித்துவம் , அம்பேத்கரியம், திராவிடம் ,  ( திராவிடத்தின் பொருளாதாரக் கொள்கைகள் சூழலுக்கேற்ப மாறுபவை ) ,தமிழ் தேசியம் ( முறையான பொருளாதரக் கொள்கைகளை அவர்கள் பேசுவதில்லை)வலதுசாரி இந்துத்துவ  பாசிசம் ( வஹாபியிசம் பொதுமக்களின் செல்வாக்கைப் பெறப்போவதில்லை என்பதால் அதைச் சேர்க்கவில்லை ) ஆகியவற்றில் நான்  என்னவாக  இருக்கிறேன்? அல்லது எந்த சித்தாந்தத்தின் நவீன நீட்சியாக  இருக்கப் போகிறேன் ? என்று சொல்லாமல் ஒருவன் அரசியலில் இறங்கினால்  அவன் அயோக்கியன்  என்றறிக. அந்த சித்தாந்தங்களின் சமூக, பொருளாதார , பண்பாட்டு ரீதியான  கொள்கைகளை அறியாமல் அவற்றை ஆதரிப்பது பிழையான பார்வை.  

ஊழல் ஒழிப்பு என்பது கொள்கையல்ல.  நிர்வாக நடைமுறை.  அதற்கும் கட்சி அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.  ஊழல் உலகெங்கும் உண்டு.  அமெரிக்காவில் நிக்சன் செய்த 'வாட்டர் கேட்'  ஊழல் உலகெங்கும் பேசப்பட்டது. இந்தியாவில் போபர்ஸ், கார்கில் சவப்பெட்டி ஊழல், வியாபம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் மீதும், பிஜேபி மீதும் உண்டு. கமல் ஆதரிக்கும் தீதி மம்தாவே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்தான் . அண்ணாவைத் தோற்கடிக்க காஞ்சிபுரத்தில் ஓட்டுக்குப் பணம் தரப்பட்டது  . ராஜாஜி, பக்தவச்சலம் ஆட்சிகளின் முறைகேடுகளை காமராஜரே பேசியிருக்கிறார் .ஆகவே ஊழல் ஒழிப்பு மட்டுமே கொள்கை என்று பேசுபவர்கள் உங்கள் காதுகளுக்குப் பக்கத்தில் பூவோடு நிற்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் .

கொள்கை சார்ந்த  கட்சிகள் வங்கிகளைப் போல . முறைகேடுகள் நடக்கும்.  ஆனால்  கேள்வி கேட்க  முடியும். கொள்கையில்லாத போலித்தனமான மாற்று அரசியலை முன்வைக்கும் கட்சிகள்  சீட்டுக் கம்பெனியைப் போல . திடீரென்று  ஒருநாள் திவாலாகி ஓடி விடும்.  நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டியதுதான். தேமுதிகவின் தொண்டனைப் போலவே நீங்களும் நிற்க விரும்புகிறீர்களா ?

கடவுளெல்லாம் காப்பாற்ற மாட்டார். உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

கதம்! கதம் !

* மானசீகன்*

Sunday, April 19, 2020

கார்ப்பரேட் சதி எனும் மாயை. - RS Prabhu

RS PRABHU
2017-04-19

கார்ப்பரேட் சதி எனும் மாயை.

சமகால தமிழ்ச் சூழலில் கார்ப்பரேட் சதி என்ற பதம் கீழ்க்கண்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. 

அ) தனக்கு புரியவில்லையென்றால்,
ஆ) தனக்கு கிடைக்காது என்ற பொறாமையால்,
இ) சிலர் சொன்னால் அது சரியாக இருக்கும் என்ற அடிமை சிந்தனையால்,
ஈ) தனக்கிருக்கும் குற்றவுணர்ச்சியை மறைத்துக்கொண்டு சமூக அக்கறையாளனாக காட்டிக்கொள்ள,
உ) மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆயாசத்தினால்,
ஊ) நிதர்சனத்தை சந்திக்கும்போது ஏற்படும் வேதனையினால் 
எ) அரிதாக நிகழும் உண்மையான சதித் திட்ட காரணங்களால்... 

இவற்றைத்தவிர ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும். 

சாதாரணமாக நடைபெறும் வர்த்தகம்  எப்படி நடைபெறுகிறது, அதற்கு சட்டபூர்வமாக என்னென்ன தேவை, அதன் நல்லது கெட்டது என்னென்ன என்பது குறித்த எந்த அறிவும் கிடைக்கப்பெறாத ஏட்டுக்கல்வியின் வெளிப்பாடுதான் பெரும்பாலும் கார்ப்பரேட் சதி என்ற பதத்தை பயன்படுத்தக்  காரணமாக அமைகிறது. 

முதலில் ஒரு வணிகத்தில் ஈடுபடுவதற்கு - எந்த தொழிலாக இருந்ததாலும் -  சட்டபூர்வமாக எந்த மாதிரியான அமைப்பு தேவைப்படுகிறது என்று பார்ப்போம். 
1) Sole proprietor firm தனி உரிமையாளர் அமைப்பு 
2) Partnership firm கூட்டாளிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்பு 
3) Private Limited Company வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம். 

இவற்றைத்தவிர டிரஸ்ட்டு, ஒருநபர் கம்பெனி போன்றவற்றை இப்போது தவிர்த்துவிடலாம். 

ஒரு TIN எண் வணிகவரித்துறையில் வாங்கும்போதே Proprietor firm பதிவாகி விடுகிறது. பார்ட்னர்ஷிப் என்றால் ஒரு deed எழுதி பதிவுசெய்யவேண்டி வரும். Pvt Ltd Company என்றால் இயக்குனர்கள் இணைந்து Articles of Association, Memorandum of Association போன்றவற்றை தயார்செய்து, மேலும் பல ஆவணங்களுடன் கம்பெனி பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டு Incorporate செய்யப்படுகிறது. உரிமையாளர் அல்லது நிறுவனம் ஈடுபடும் தொழில் சார்ந்த உரிமங்கள் வாங்கவேண்டிய கடமைகள் தனி. 

இதில் உரிமையாளர், பார்ட்னர் வகை தொழில்களில் நிறுவன அமைப்புக்கென்று தனி உரிமை கிடையாது. அதனால் உரிமையாளர் அல்லது கூட்டாளிகளின் பான் எண் நேரடியாக பயன்படுத்தப்படுவதோடு, வாங்கப்படும் உடைமைகள், சொத்துக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் நேரடி உரிமையாளராகிறார். உரிமையாளர் இறந்தால் அந்த அமைப்பு முடிவுக்கு வந்துவிடுவதோடு, சொத்துக்கள்/உடைமைகள் அவரது வாரிசுகளிடம் சென்றுவிடும். 

பங்குகளால் வரையறுக்கப்பட்ட கம்பெனி என்பது சட்டத்தால் ஆரம்பிக்கப்பட்ட,  உயிரில்லாத ஆனால் ஒரு குடிமகனுக்குரிய அத்தனை உரிமைகளையும் உடைய அமைப்பு. கம்பெனி தனக்கென்று சொத்துக்களை வாங்க விற்க முடியும், ஒரு குடிமகனுக்கு சட்டத்துக்கு முன்னால் என்னென்ன உரிமைகள் உண்டோ, அத்தனையும் கம்பெனிக்கும் உண்டு. 

இயக்குனர்கள் கம்பெனியை நடத்துவதற்காக ஓர் ஊதியத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள் அல்லது கம்பெனி கொடுக்கிறது என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இயக்குனர் ஒருவர் அல்லது அனைவரும் இறந்தாலும் கம்பெனி இறக்காது. அதனால் கம்பெனி தன்னுடைய பணத்தைக் காரணமில்லாமல் யாருக்கும் கொடுக்காது. அப்படி கொடுத்தால் அதற்கு முறையான ஆவணங்கள் தேவை. இயக்குனராக இருந்து கம்பெனிக்கு கடன் கொடுத்தால் அதை கம்பெனி திரும்பத் தரும்; ஆனால் கம்பெனி பணத்தை இயக்குனரே தேவையில்லாமல் எடுத்தால் சட்டைக்காலரைப் பிடித்து திரும்ப வாங்கிக்கொள்ளும். ஆனால் உரிமையாளர் அமைப்பில் பணத்தை போடலாம்  எடுக்கலாம், இரத்த சொந்தங்களுள் அடிக்கடி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

உரிமையாளர் கடன் வாங்கி கட்டவில்லையென்றால் அவரது ஏனைய சொத்துக்களை இணைத்து கடனை வசூலிக்க வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் கம்பெனிக்கு கடன் கொடுத்தால் கம்பெனியின்  சொத்துக்களைத் தாண்டி இயக்குனர்களது தனிப்பட்ட சொத்துக்களை வங்கிகளால் எடுக்க இயலாது (பித்தலாட்டம் ஏதும் இல்லாமல் உண்மையாகவே தொழில் நொடித்திருந்தால்). 

எந்த மாதிரியான வர்த்தக அமைப்பாக பதிவு செய்யப்பட்டாலும் அதன் பின்னால் இருக்கும் உழைப்பு ஒன்றுதான். உரிமையாளர் என்றால் கடும் உழைப்பாளி என்றோ பிரேவேட் லிமிடெட் இயக்குனர் என்றால் ஏமாற்றுப்பேர்வழி என்றோ எதுவும் இல்லவே இல்லை. 

மக்கள் தங்களது தேவைக்குத்தான் பொருட்களை வாங்குகிறார்கள், நிறுவனம் வளர்வதற்காக அல்ல. அதற்கேற்ற பொருள் தயாரிக்காத நிறுவனம் காணாமல் போகும் என்பதற்கு நோக்கியா அண்மைக்கால உதாரணம். 

இதில் கார்ப்பரேட் சதி என்றெல்லாம் எதுவுமில்லை. தனிநபர் உரிமையாளர் செய்வதை கம்பெனிகளும் செய்தால்தானே வியாபாரத்தில் தாக்குப்பிடிக்க முடியும்? நம் வீட்டுக்கு அருகிலுள்ள பலசரக்கு கடைகளில் பார்த்திருக்கக் கூடும். ஐந்தாறு வாடிக்கையாளர் இருந்தால் ஒவ்வொருவராக  விற்பனையை முடித்து அனுப்பாமல், என்ன வேண்டும் என்று கேட்டு  அனைவருக்கும் ஒவ்வொரு பொருளை எடுத்துவந்து முன்னால் வைத்துவிட்டு, பின்னர் ஒவ்வொருவராக கவனிப்பார்கள். வாடிக்கையாளர்கள்  தனக்குரிய importance அந்த இடத்தில் கிடைத்துவிட்டதாக உணர்ந்து, சிறிதுநேரம் காத்திருப்பதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். 

அந்தநேரத்தில் கடையிலுள்ள சரக்குகளை நோட்டம் விட்டு தனது லிஸ்ட்டில் இல்லாத ஒன்றிரண்டு பொருட்களை வாங்குவதுண்டு. இது ஒரு சாதாரண வியாபார சூட்சுமம். ஒவ்வொரு தொழிலிலும் அதற்கேற்ப உண்டு. இதே வேலையை ரிலையன்ஸ் போன்ற சூப்பர்மார்க்கெட்கள் செய்தால், பில் போடுமிடத்தில் சில பொருட்களை பார்வைக்கு வைத்திருந்தால் அது கார்ப்பரேட் சதி! என்று சமூக ஊடகங்களில் உளறி வைக்கப்படுகிறது. 

அப்புறம், விவசாயத்துக்கு துளியும் தொடர்பில்லாத தொழில்களில் இருப்போரும் தங்களது சமூக அக்கறையைக் காட்டிக்கொள்ள அடிக்கடி இழுக்கும் ஒன்று  மான்சாண்டோ கம்பெனியின் சதி. 

விவசாயிகள் பேஸ்புக்கில் சொல்லப்படுவது மாதிரி அப்பாவி பழம் அல்லர். தங்களுக்கு என்ன தேவை என்பதை நன்றாகவே அறிவார்கள். எப்போது அப்பிராணி வேஷம் போடவேண்டும் என்பதையும் நன்கு அறிவார்கள். கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்ட வாய்களில் ஏதாவது ஒன்று, அவர்களை நம்பி ஆண்டு முழுவதும் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களுக்கு ஏதாவது அரசாங்கம் செய்யவேண்டும் என்று சொல்லி கேட்டதுண்டா? 

விவசாயிகளிடம் வெற்றிகரமாக விற்க இரண்டு விசயங்கள் தேவை. ஒன்று செலவையும், உடலுழைப்பையும் தாறுமாறாக குறைக்கும் மேஜிக் மாதிரியான தொழில்நுட்பம். இரண்டு, ஆட்களின் தேவையை கணிசமாக குறைக்கும்படியான தொழில்நுட்பம். இதில் மான்சான்டோ Bt பருத்தியை சந்தைப்படுத்தி பல இலட்சம் டன் பூச்சிக்கொல்லிகள் மண்ணில் கொட்டப்படுவதைத்  தடுத்ததோடு விவசாயிகளின் செலவை பலமடங்கு குறைத்தது. இரண்டாவது, ரவுண்டப் (கிளைஃபோசேட்) களைக்கொல்லி; கூலி ஆட்களின் தேவையைத் தாறுமாறாக குறைத்ததோடு கோரை, அருகம்புல் போன்ற தொல்லை தரும் களைகளுக்கு தீர்வு தந்தது. அறுவடை இயந்திரங்களும் இதே வகைதான். 

இதனால் சில சமூக பிரச்சினைகளும் ஏற்பட்டன.  காலங்காலமாக பண்ணையார்களிடம் கூலி வேலை செய்துவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வேலையிழந்து நகரங்களுக்கு வேறு தொழில் நோக்கி சென்றனர். அங்கு கட்டட வேலை போன்றவற்றில் அதிக வருமானம் கண்டு, உபரி பணம் மூலமாக வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி பிள்ளைகளைப் படிக்கவைக்கவும் ஆரம்பித்தனர். இவ்வாறாக கொஞ்சம் கொஞ்சமாக விவசாயக் கூலிவேலைகள் கடைநிலைச் சாதியினரால் புறக்கணி்க்கப்படன. 

பண்ணையார்கள் ஆட்களை வைத்து வேலை செய்வதைவிட இயந்திரங்கள், பூச்சிக்கொல்லிகள்,  களைக்கொல்லிகள் மூலம் அதிக இலாபமீட்ட முடியும் என்றதும் அதை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டனர். மற்றபடி விவசாயிகளை மூளைச்சலவை செய்து கம்பெனிகள் இடுபொருட்களை அவர்களது தலையில் கட்டிவிட்டனர் என்பது ஒரு வகையான மேட்டிமைத்தன விஷம பிரச்சாரம். 

ஒருகட்டத்தில் ஊர், உலகம் மாறுகிறது என்பதை உணர்ந்தவர்கள்  அமைதியாக தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றதை ஒதுக்கிவிட்டனர். ஆனால் அந்த பழைய ஜாதி மேட்டிமைத்தனத்தை விட இயலாதவர்கள், அன்று கூப்பிட்டதும் ஓடோடி வந்து காடு கழனியில் வேலை செய்துவிட்டு கொடுத்ததை வாங்கிக்கொண்டு இருந்தவர்கள் இன்று மதிப்பதில்லை என்ற அங்கலாய்ப்பில் அதற்கான காரணத்தைத்  தேடி அதை பழையபடி  நிறுவ முயல்கிறார்கள். 

தமிழ்நாடு முழுவதற்குமாக மான்சான்டோவில் ஒரு பதினைந்து பேர் மாதம் 30000 - 90000 ரூபாய் சம்பளத்தில்  வேலை செய்வார்கள். இவர்களும் பிள்ளைகுட்டிகளைப் பார்த்தநேரம் போக, வாட்சப், பேஸ்புக் பார்த்தது போக எவ்வளவு பெரிய சதியை செய்துவிடமுடியும்?! இவர்களைத் தாண்டி அமெரிக்க அலுவலகத்தில் உட்கார்ந்து ஒரு பட்டனைத் தட்டி தமிழக விவசாயிகளை அடிமைப்படுத்துவது எல்லாம் பேரரசு படத்தில் மட்டுமே சாத்தியம். ஆனானப்பட்ட அமெரிக்க அரசாங்கம் ஒரு ஐபோனை உடைத்து தகவல்களை எடுக்க முடியாமல்  ஆப்பிளிடம் கெஞ்சியது.   இந்த  இலட்சணத்தில் எல்லாவற்றிலும் CIA சதி என்றால் எப்படி நம்புவது! 

மற்றபடி கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என்றால் முகத்தில் கறுப்புத்துணி கட்டி, கோட் சூட் போட்டு, தொப்பியணிந்து இரவுநேரத்தில் மட்டுமே நடமாடி சதிகளை செயல்படுத்துவார்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. ஜான் பெர்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட மாதிரி, No Escape படத்தில் வருவது மாதிரி கார்ப்பரேட் சதிகாரர்கள் சாதாரண உடையில் வந்து நமக்கு பக்கத்தில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டே நம் ஒவ்வொரு அசைவுகளையும் நோட்டம் விட்டு பின்னர் திட்டமிடுவார்கள் என்பதெல்லாம் ஒருவகையான மனப்பிறழ்வின் அறிகுறி மட்டுமே. 

எல்லா கார்ப்பரேட் கம்பெனிகளும் பலரது கடும் உழைப்பில்தான் இயங்குகிறது. ஏதாவது ஓரிரண்டு நிறுவனங்கள் கள்ளத்தனமாக  பயனடைந்தன என்பதற்காக மொத்தமாக சேற்றை வாரி இறைப்பது, சேர் கண்டுபிடித்தது தமிழனை அடிமைப்படுத்தவே, வெஸ்டர்ன் டாய்லட் கண்டுபிடித்தது தமிழனை நோயாளியாக்கவே, ஜட்டி கண்டுபிடித்தது ஆண்மைக்குறைவை உண்டாக்கி மருந்து விற்கவே  என்றெல்லாம் பேசுபவர்கள் மனநல மருத்துவரைப் பார்ப்பதே நல்லது. அவர்கள் தேவையில்லாத மருந்துகளை விற்க முயல்வார்கள் என்றால் வேப்பிலை அடித்து அரைஞாண்கயிற்றில் தாயத்து கட்டிக்கொள்வது நன்மை பயக்கும்.

Monday, April 6, 2020

கொரோனாவுக்கு பின் கொடூரமான காலம் காத்திருக்கிறது

உமாமகேஷ்வரன் பன்னீர்செல்வன்
2020-04-06

ஏப்ரல் 14க்கும் பிறகு வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பாது.

ஏனெனில் இனி இயல்பு நிலை என்று நாம் வைத்திருந்த parameters மொத்தமாக மாறும். Post-corona economic crisis அழுத்தி நம்மை தரையோடு சாய்க்க காத்திருக்கிறது.

இதுவரை உங்களை support செய்து வருவதாக, salary சரியாக கொடுத்து வருவதாக நினைக்கும் நிறுவனங்கள் இனி layoff கந்தாயங்களைத் தொடங்குவார்கள். Downsizing விளையாட்டில் காவு வாங்கப்படவிருக்கும் உயிர்களின் எண்ணிக்கையை ஊகிக்கவே முடியவில்லை.

இதில் பெருத்த அடி வாங்கப்போவது IT, Fossil Fuel , Tourism and its allied services viz Hotels. Renewable energy நொண்டுகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
End of the day, இந்த மொத்த களேபரத்தின் முதல் பலி 30-45 வயதுடைய அந்த மிடில் கிளாஸ் காமன் மேன்.  கையில் காசு, வாயில் தோசை, சேமிப்பு என்பது கானல் நீர், Job security என்பது Pipedream - "என்னேரமும் சோலி முடிக்கப்படாமல " - என திவாலாக காத்திருக்கும் நிறுவனங்கள். இப்படி middle class paupers உருவாகுவார்கள்.

இதர நாடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் கொரோனா தான் மிகப்பெரிய பேரிடர். 2008-09 காலக்கட்டத்தை கடந்த பின்னர் அவர்களது பொருளாதாரம் சீரானது. இங்கே நாம் சூ அடி வாங்கும் இடம் இதுதான். கொரோனாவுக்கு முன்பே நமது பொருளாதாரத்தை சூறையாடிய Man made crisis என்றால் அது demonization மட்டுமே.
Industryயின் small players, startups, cottage Industries, self reliant micro businessசை கொத்தாக கபளீகரம் செய்து முடித்தது. குத்துயிரும் கொலை உயிருமாக இயங்கிய தொழில்களை GST சோலி முடித்துவிட்டது. இப்பொழுது இருப்பதாக காட்டப்படும் economy ஒரு quasi steady state என்றால் அது மிகையே இல்லை. 

Trillion dollar economy என்றால் என்ன, அது சாத்தியமா என்று மெத்தப்படித்த social economist களிடம் கேட்டுப் பாருங்கள். வாயால் சிரிக்க மாட்டார்கள். இப்படி இந்தியா என்ற entity யை மொத்தமாக காலி செய்ய வைரசை விட ஒன்று காத்திருகிறது. அது தான் சீர்கெட்ட பொருளாதாரம். 

1920களில் ஹெர்பட் ஹூவரின் அமெரிக்க நொண்டியதைவிட இந்தியாவின் நொண்டல் ராஜ நொண்டலாக இருக்கும். இதை முதலில் கண்டுகொண்டவர்கள் சங்கிகள் தான். சொன்னால் நம்ம கடினம். ஆனால் அவர்களது modus operandi அப்படித்தான் இருக்கிறது. இதுகாறும் அதிக கடன் வாங்கி நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் எதேச்சையாக வெளியேறவில்லை. பக்கா execution.

இங்கே இருப்பதை வாரி சுருட்டிக்கொண்டு திடமான பொருளாதாரம் கொண்ட ஊரில் அடைக்கலமாதல். எளிமையாக சொல்வதென்றால் British இங்குள்ள் resources எல்லாவற்றையும் அங்கே எடுத்து தங்களை வளமாக்கிக்கொண்டார்களோ அந்த மாதிரி. வெளிநாடுகளில் இவர்கள் இன்வெஸ்ட் செய்வது, கடனை மட்டும் வாராக்கடனாக்கி என்போன்ற உங்களைப் போன்ற குப்பன் சுப்பன் தலையில் வாராக்கடனாக்கி, அய்யா மாஸ்க் பிச்ச போடுங்கைய்யா என்று நம்மை பிச்சையெடுக்க விட்டிருக்கிறார்கள்.

அடுத்த பஞ்சாயத்து 20-30 வயதுடையோர் professional job ல் சேர இயலாத சூழல். DSLR/ Ola driver/ Swiggy delivery boy generation ஒன்று உருவாகியிருப்பது கண்கூடு. 10 வருடம் முன்பு நான் UPSC aspirant என்று சொன்ன கூட்டத்தில் கணிசமான அளவில் இன்று நான் ஒரு Swiggy delivery செய்யும் இஞ்சினியர் என்று சொல்லத்தக்க ஒரு கூட்டமாக ஆகியிருக்கிறது. இவர்களால் கொரோனாவுக்கு பின்னர் ஏற்படப்போகும் அந்த lacunae வை நிரப்ப முடியாது. தாங்க மாட்டார்கள்.

அந்த 30-45 வயதினர் வீட்டுக்கு அனுப்பப்படும்போது அவர்களை சீரும் சிறப்புமாக replace செய்ய இருக்கும் skilled workforce இங்கே இல்லை. மேலும் வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படும் ஆட்களுக்கு இங்கே வந்தாலும் ஒன்றும் கிட்டப்போவதில்லை.

இந்த சூழலைத் தான் நமக்கு கடந்த 6 வருட ஆட்சி கொணர்ந்திருக்கிறது. அச்சே தின் என்பது எப்படி இருக்கும் என்பது முன்னோட்டம் இது. 

Rats feeling the sinking ship என்பதுபோல் , இவர்கள் மூழ்கடித்த இந்திய பொருளாதாரத்தை நரி பேர்லே எழுது, ஓட்டேரி நரி பேர்லே எழுது என்பதுபோல் கொரோனா மேல் எழுதிவிட்டு பதமாக நகர்வார்கள். நகர்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.

கொரோனாவுக்குப் பின் பீடு நடை போடப்போகும் தொழில் என்று எதையுமே சொல்ல முடியாது. ஆகவே சங்கிகள் இன்னும் அதிகமாக தேசபக்தி பாடல்கள் பாடுவார்கள். விளக்கேற்றுவார்கள், பாத்திரம் தட்டுவார்கள், ராமர் அனுமார், ஜடாயு, ஜாம்பவான் கோயில் கட்டுவார்கள். ஆனால் மறந்தும் பொருளாதார மீட்சி குறித்து பேச மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது தெரியாது.

அச்சே தின் பொச்சே தின் என்று கதைவிடலாம். ஆனால் அதை கொண்டு வருவது என்பது குதிரைக் கொம்பு என்று அவர்களுக்குத் தெரியும்.

எரியும் வீட்டில் ஒரு டம்பளர் கொண்டு உங்களை தீயணைக்க சொல்லிவிட்டு, அவர்கள் அடுத்த வீட்டுக்கு தங்கள் பெட்டிப் படுக்கையை தயார் செய்வார்கள்.

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டதில் ஹிட்லர் ரஷியாவை ஆக்கிரமிப்பு செய்தபோது, பின்வாங்கி வெளியேறிய ரஷியப்படை ஒரு காரியம் செய்தது. அவர்கள் வெளியேறும் நகரங்களின் வயல்வெளிகள், வணிக நிலையங்கள், வருவாய் தரும் எல்லாவற்றையும் கொளுத்திவிட்டு கிளம்புவார்கள். ஹிட்லரின் படைகளுக்கு காய்ந்து கருவாடாகிப் போன ஒரு சுடுகாட்டு ஊர் மட்டுமே கிடைக்கும். அதிலிருந்து எதுவும் கிடைக்காமல் வாடி வதங்கி அவர்கள் மடிவார்கள்.

அப்படி இந்தியாவை சூறையாடிவிட்டு நமக்கு சுடுகாட்டை விட்டுவிட்டு கிளம்புவார்கள் சங்கிகள். நமக்கு ஒரு பெரிய சைஸ் திருவோடும், தம்தூண்டு அகல் விளக்கும் மட்டுமே கிடைக்கும். அதை வைத்து கம் எகானமி கம், கம் எகாணமி கம், பாசிடிவ் எகாணமியே வா வா வா, ஜெய் எகாணமி என்று ஒரு 110 வருடம் கத்தினால் போதும். நமக்கு எகாணமி கிடைத்துவிடும்
 நாம் வல்லரசாகிவிடுவோம்.

கொடூரமான காலம் காத்திருக்கிறது. மிக மிக அண்மையில்.

https://m.facebook.com/story.php?story_fbid=10219501275075950&id=1636056806