Saturday, August 26, 2023

தாக்குதலை நிகழ்த்தியவர்களை நோக்கி ஏன் எந்த ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படுவதே இல்லை, ஏன்?

Gold king
https://www.facebook.com/thangaarasan.annamalai

கள ஆய்வுகள், அதன் அறிக்கைகள் என்ற செய்தியை கேட்கும் போதெல்லாம் எனக்கு எழும் ஒரு எளிய கேள்வி - 

"பட்டியல் இனத்தரப்பு பாதிக்கப்பட்டிருப்பதால், பட்டியல் இனத்தவர்களை சேர்ந்த சமூகத்துவத்திற்காக நிற்கும் சமூக ஆர்வலர்கள் களப்பணி செய்து பட்டியல் இனத்தவர்களின் மீது ஏன், எதற்கு, எப்படி, யாரால் எங்கு தாக்குதல் நடத்தப்பட்டது அதன் பின்புலம் - என ஒவ்வொன்றாக ஆராய்ந்து அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கான பரிந்துரைகளை பொதுவெளியில் முன்வைக்கின்றனர்." இது பட்டியல் இனத்தவர்களை பொறுத்தளவில்லான அவர்களின் எல்லை அதுவே. 

எனது கேள்வி என்னனா? பட்டியல் இனத்தவர்களின் மீதான சாதிய தாக்குதலை நிகழ்த்தியவர்களை நோக்கி ஏன் எந்த ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படுவதே இல்லை. 

பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்கள் அதனை செய்யமுடியாது. ஆனால், பாதிப்பை ஏற்படுத்திய தரப்பாக இருக்ககூடிய சாதியினரில் "சமூக நீதியை விரும்பும், சமத்துவத்தை விரும்பும் மனித தன்மையுடன் இருக்கும் சோகால்டு முற்போக்காளர்கள்" எல்லாம் பட்டியல் இனத்தவர்களின் மீது தாக்குதலை நிகழ்த்தியவர்களை கண்டு, 

வேங்கைவயல் எனில், பட்டியல் இனத்தவர்களின் குடி நீர் தொட்டியில் மலம் கலக்ககூடிய மன நிலை ஏன் வந்தது என்றும். நாங்குனேரி என்றால், மாணவனை தாக்கியவர்களையும் அவர்களின் உறவினர்களை கண்டு "என்ன பிள்ளை வளர்த்து வைத்திருக்கிறீர்கள், ஏன் அவனை சாதிய மன நிலையில் வளர்த்திருக்கிறார்கள்" என்ற கேள்விகளையெல்லாம் கேட்டு, சாதிய ரீதியாக எவ்வளவு மோசமான மன நிலையை கொண்டிருக்கிறார்கள் என்பதனையும்,  தாக்குதல் நடத்தியவர்களின் சாதிய உறவினர்களின் கருத்து என்ன? சொந்த சாதியினரின் கருத்து என்ன? என்ற கேள்விகளை முன்வைத்து ஏன் எந்த ஆய்வையும் செய்வதில்லை. 

வேங்கைவயலை எடுத்துக்கொண்டால், சாதியபலம் காரணமாகவும், வாக்குவங்கி அரசியலாகவும் பொதுவாக பிம்பபடுத்தப்படுவதால் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு தயக்கம் இருப்பதாக சப்பைகட்டு கட்டப்படுகிறது. 

உண்மையில் வேங்கைவயல் கிராமத்தில் மலத்தை கலந்த சாதியினரை, "உங்கள் சாதியில் சக மனிதன் குடிக்கும் நீரில் மலத்தை கலப்பதை எப்படி பார்க்கிறீர்கள்" என்ற கருத்தை கேட்டு அவர்களின் எண்ணவோட்டம் "சாதிக்கு ஆதரவாக இருக்கிறதா? அல்லது எதிராக இருக்கிறதா?" - என்பதை ஆய்வரிக்கையாக கொண்டு வந்தால்தானே வேங்கைவயல் பிரச்சனையில் சாதி எந்தவித தார்மீக ஆதரவையும் கொடுத்திருக்கிறதா அல்லது கொடுக்கவில்லையா என்பதனை அறிந்து அதனால், வாக்கு வங்கி, சாதி பலம் என மடைமாற்றி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் யோக்கியதையை காணமுடியும். 

இதேபோலத்தான், மாணவரை கொலைவெறிக்கொண்டு தாக்கியது சரியா என தாக்கியவர்களின் சொந்த சாதியினரிடத்தில் கேட்டு ஏதாவது பதில் பெறப்பட்டிருக்கிறதா? அவ்வாறு கள ஆய்வை செய்தால்தானே உரிய பிரச்சனைக்கு சாதிதான் காரணமெனில் "அந்த சாதிய தாக்குதலுக்கு தனிப்பட்ட நபரின் சாதி வெறி மட்டுமே காரணமா அல்லது மறைமுகமாகவோ மவுனமாகவோ உரியவர்களின் சாதி ஆதரவு இருக்கிறதா" - என்பதை கண்டுப்பிடிக்கமுடியும். 

ஆனால், இதனை ஏன் எந்த பட்டியல் இனத்தவர்கள் அல்லாத முற்போக்காளர்கள் யாரும் செய்வதில்லை? 

உரிய ஆய்வுகளை செய்து ஆவணப்படுத்தினால்தானே சாதியவாதிகளின் யோக்கியத்தையை ஆவணத்தோடு கேள்விக்கு உட்படுத்தமுடியும்? 

பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்களை கண்டு பாதிக்கப்பட்டதை அறிக்கையாக தயாரிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட, முக்கியம், பாதிப்பை ஏற்படுத்திய தரப்பை கள ஆய்வு செய்து ஏன் எவ்வித கேள்விக்கு உட்படுத்துவதில்லை. 

ஏன் இதனை சாதிக்கு எதிராக இருக்கும் பட்டியல் இனத்தவர்கள் அல்லாத சாதியை சார்ந்த முற்போக்காளர்கள் செய்யகூடாது?