Friday, April 28, 2017

50 சதவீத ஒதுக்கீடு தொடர,

அரசியல் அரக்கர் அண்ணன் சிவசங்கர் ex MLA அவர்கள் எழுதியது.

-----------------------------------------

பள்ளி காலங்களில் சைக்கிளில் இருந்து விழுந்தால் நேரே செல்லும் இடம் ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தான். அப்போதெல்லாம் ஓரிரு டாக்டர்கள் தான் இருப்பார்கள். 

1996ல் மாவட்டக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, யாருக்காவது சிபாரிசு செய்ய மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையங்களோடு தொடர்பு ஏற்பட்டது. அப்போது நிறைய மருத்துவர்களோடு செயல்பட்டது.

2006ல் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக ஆன போது, ஆரம்ப சுகாதார  நிலையங்களின் செயல்பாட்டை நேரடியாக அறியும் வாய்ப்பு கிடைத்தது.

கிராமங்களில் மிக முக்கியமாக தேவைப்படும் மருத்துவ சேவை, பிரசவம். அது அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் எளிதாகக் கிடைத்தது. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் அதிக செலவாகும் நிலையில், இங்கு இலவசம்.

அதைவிட முக்கியம், அங்கு பணியாற்றியோரின் செயல்பாடு. எல்லோரும் இளைஞர்கள். சுறுசுறுப்பாகப் பணியாற்றுவார்கள். நான் அவர்களை சந்திக்கும் போது, அந்த மாதத்து பிரசவ எண்ணிகையை பெருமையாகத் தெரிவிப்பார்கள்.

இது மாத்திரமல்லாமல் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுதல், தொற்று நோய் எதிர்ப்பு மருத்துவம் என குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவம் பார்த்து 'குடும்ப மருத்துவர்கள்' போல் ஆகி விடுகின்றனர், செலவில்லாமல்.

அப்போது சுற்று வட்டாரப் பகுதியில் டாக்டர்கள் சிவகுருநாதன், வெங்கட்ராமன், இளவரசன், கண்ணன் ஆகியோர் பணியாற்றினார்கள். பம்பரமாய் சுழன்று பணியாற்றுவார்கள்.

இவர்கள் எல்லோருமே பின்னர் மருத்துவ மேற்படிப்பு முடித்து விட்டார்கள். கிராமப்புறங்களில் பணியாற்றியோருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு பெற்று படித்தார்கள். மீண்டும் கிராமப்புறத்தில் பணியாற்றுகிறார்கள்.

எம்.பி.பி.எஸ் முடித்தப் பிறகு, அனைவருக்கும் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது கனவு. அரசுப் பணியாற்றுவோருக்கு ஒதுக்கீடு இல்லை என்றால், அனைவரும் அந்தத் தேர்வுக்கு தயார் செல்லும் பணிக்கு சென்று விடுவர். கிராமப்புற பணிக்கு மருத்துவர்கள் வருவது சிரமமாகி விடும்.

ஒரு நாட்டின் அடிப்படை சுகாதாரம் எப்படி இருக்கிறது என்பதை சரியாக கணிக்க ,
அந்த நாட்டின் குழந்தை இறப்பு  அளவீடு ( infant mortality rate ) என்பதை உலக சுகாதார நிறுவனம் வைத்திருக்கிறது .

2000மாவது ஆண்டில்  அந்த நிறுவனம் சில இலக்குகளை நிர்ணயித்தது.

ஒரு நாட்டில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் சுமார் 88 குழந்தைகள் மரணமடைந்து வந்தன. இதை  2015க்குள் 30க்குள் கொண்டு வர வேண்டும். 

இதற்கானப் பணியை மாநில  சுகாதாரத்துறைகள் செய்தது.

2015 ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவன ஆய்வாளர்கள் இந்திய மாநிலங்களை ஆய்வு செய்தனர்.

ஒட்டுமொத்த இந்தியாவின் இறப்பு விகிதம் 40க்கு கீழ் வரவில்லை .

சுமார் 23 மாநிலங்கள் இந்த 40 மரணங்களுக்கு கீழ் கொண்டு வர முடியாமல் விழிபிதுங்கின.

ஆனால் ஆறு மாநிலங்கள் மட்டும்
நினைத்ததை விட சரி பாதியாக குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்து காட்டினர்.

அவை

1. கேரளா
2. தமிழ்நாடு
3. மகாராஷ்ட்ரா
4. பஞ்சாப்
5. ஹிமாச்சல் பிரதேசம்
6. மேற்கு வங்காளம்

இதில் தமிழகத்தின் infant mortality rate - 21.

இந்த சாதனையை எட்ட துணையாய் இருந்தவர்கள், நான் முன்னர் குறிபிட்டது போல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுபவர்கள்.

முப்பது வருடங்களுக்கு முன்பு வரை பிரசவம் என்றால், கிராமத்து மருத்துவச்சிகள் பார்ப்பார்கள். சரியான மருத்துவ முறை இல்லாததால், இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. பெண் குழந்தைகளை கொன்று விடுதலும் நடந்தது.

அப்படியான சூழல் இல்லாமல், நல்ல மருத்துவ சேவையோடு, அனைத்து பிரசவத்தையும் மருத்துவமனையில் நடக்குமாறு மாற்றிக்காட்டியவர்கள் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்.

அரசு மருத்துவர்கள் பயன்பெறும்
50% ரிசர்வேசனை ஒழித்தால் என்ன ஆகிவிடும் என்று சிலருக்கு எண்ணம் இருக்கிறது.

பிரசவத்திற்கு, அரசையும் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நம்பி வாழும் பல கோடி கிராமத்து மக்கள் அவதியுறுவார்கள்.

இன்றும் தமிழ்நாட்டில் நடக்கும் பிரசவங்களில் 70 விழுக்காடு அரசு மருத்துவமனைகளில் தான் நடக்கின்றன.

அரசு மருத்துவமனைகளில்
டாக்டர்கள் இல்லாத நிலை வந்தால்,
கார்ப்பரேட்  மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்ல வேண்டி வரும். அதற்கு ஏக செலவாகும்.

வசதி இல்லாதவர்கள், மீண்டும் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் நிலை வரும் .

மீண்டும்  IMR ஏறும் .

மருத்துவர்கள் தங்களுக்காக போராடுவது போல இன்று தோன்றினாலும்
இதில் நாளைய தமிழகத்தின் நலன் அடங்கியுள்ளது.

மருத்துவர்கள் போராட்டத்தால், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்காமல் சிரமப்படுகிறார்கள் என்று வாதிடுவோர் உண்டு. இது சில நாட்கள் சிரமம் தான், இந்த ஒதுக்கீடு இல்லாமல் போனால், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மிகக் குறைவான மருத்துவர்களே இருக்கும் நிலை வரும். அப்போது இன்னும் கூடுதல் சிரமம காலத்திற்கும்.

ஏற்கனவே மத்திய அரசின் "நீட்" தேர்வால், கிராமத்து மாணவர்கள் சேர்க்கை மருத்துவத்துறையில் குறையும். நுழைவித் தேர்வு பயிற்சியில் நகர்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகம். அவர்கள் கிராமப்புறங்களுக்கு வர வாய்ப்பு குறைவு.

இன்னொரு புறம் மருத்துவ சேர்க்கை எதிர்காலத்தில் குறையும் என்ற ஒரு பேச்சும் இருக்கிறது. காரணம் எம்.பி.பி.எஸ் படிக்க ஐந்தரை வருடம் ஆகிறது. கஷ்டப்பட்டும் படிக்க வேண்டும். இவ்வளவு படித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றினால், குறைவான சம்பளம் தான். ஒரு மாத அரசு சம்பளத்தை, ஒரு வார சொந்தப் பணியில் (own practice) சம்பாதித்து விடலாம்.

எம்.பி.பி.எஸ் மாத்திரம் எதிர்காலத்தில் உதவாது. கூடுதல் மேற்படிப்பு அவசியம். அதற்கு செலவு செய்து பயிற்சிக்கு சென்று, நுழைவுத் தேர்வு எழுதி மூன்று வருடம் படித்து வந்தால், படிப்புக்கே பத்தாண்டுகள் போய்விடும். இதற்கு வேறு துறைக்கு சென்று படித்தால், நான்காவது ஆண்டில் சம்பாதிக்கலாம் என்ற பேச்சு வந்துவிட்டது.

இதை எல்லாம் கருத்தில் கொண்டால், மருத்துவப் படிப்பு படிக்கவும், மேற்படிப்பு படிக்கவும் சற்றே அரசு தான் ஊக்கப்படுத்த வேண்டும்.

அதிலும் மருத்துவர்கள் கிராமப்புறத்தில் பணியாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

மருத்துவர்கள் போராட்டத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, 50 சதவீத ஒதுக்கீடு தொடர,  அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

# கிராமப்புற மக்களின் நலம் கருதி !

சிவசங்கர்

Thursday, April 27, 2017

அம்லா Fan பாய்ஸ் + டிரவுஸர் பாய்ஸ

Lafees Shaheed
Via Facebook
2017-04-27

இந்தப் புகைப்படத்தை பிரொபைல் பிக்சராக போடாவிட்டால் தெய்வ குத்தமாகி விடும் போலிருக்கிறது, அந்தளவுக்கு ஹாஷிம் அம்லா மீது காதலாகி கசிந்துருகிறார்கள் அம்லா Fan பாய்ஸ் + டிரவுஸர் பாய்ஸ்... அட அறிவு கெட்ட ஞான சூனியங்களா தொழுகையை நேரத்திற்கு பேணி தொழுபவர்கள் முஸ்லிம் ஊர்களில் ஆயிரக்கணக்கில் காணப்படுகிறார்கள். இது சாதாரணமாக அனைவரும் அறிந்த உண்மை. அப்படி இருக்கையில் ஹாஷிம் அம்லா மட்டும் தொழுகையை பேணுவது உங்கள் கண்களில் பூதாகரமாக படுகிறது எனில் நிச்சயமாக உங்கள் கண்களைத் தான் சோதனை செய்ய வேண்டும். சென்னையில் உள்ள Vasan Eye Care இனை நாடுவது நல்லது. அப்படியே ஐ பி எல் சூதாட்டத்தில் ஹாஷிம் அம்லா ஜெகஜ்ஜோதியாக ஆடுவதை கண் குளிர பார்த்து விட்டு வரலாம். உங்களுக்கு லக் இருந்தால் அனுஷ்கா ஷர்மாவை நேரிலும் காணலாம்.

முஸ்லிம்களின் உளவியலில் படிந்திருக்கும் 'இஸ்லாத்தை பின்பற்றும் Celebraty' என்ற பிம்ப உருவாக்கத்தின் பின்னணி கொஞ்சம் ஆழமானது. காலனிய காலகட்டத்தில் இருந்தே முஸ்லிம் உலகம் மேற்குலகத்தின் அரசியல், பொருளாதார, கலாசார தாக்குதல்களுக்கு இலக்காகி வந்திருக்கிறது. காலனிய காலகட்டத்தில் உருவான முஸ்லிம் உளப் பதிவு தான். ஐரோப்பியர்கள் கீழைத்தேய மக்களை விட அனைத்து வகையிலும் உயர்ந்தவர்கள் என்பது. முஸ்லிம்கள் காட்டுமிராண்டித்தனமானவர்கள் என்ற ஐரோப்பிய ஆதிக்க சக்திகளின் பிரசாரத்தை முஸ்லிம்களே நம்பினார்கள். இதனால் முஸ்லிம்கள் பாரிய உளவியல் பின்னடைவுக்கு உள்ளானார்கள். இந்த உளவியல் பின்னடைவில் இருந்து மீட்சி பெற முஸ்லிம் நாட்ட சக்தி உருவாக்கிய பிம்பம் தான் இஸ்லாத்தை பின்பற்றும் Celebraty என்கிற Image. புகழ்மிக்கவர்கள் எல்லாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நாம் 'நாகரீகம்' அடைந்தவர்கள் என்று தானே அர்த்தம்? காலனித்துவ அடிமை உளவியலின் கீழ்மை தான் இது.

ஹாஷிம் அம்லா ரசிகர்களின் உளவியல் கட்டமைப்பு மிகவும் பாமரத்தனமானது மற்றும் ஆபத்தானது. நிகழ்வுகளை சாதாரணமாக கடந்து செல்லாதீர்கள். அவற்றின் பின்னால் இருக்கும் உளவியல், சமூகவியல் காரணிகளை கொட்டிக் கவிழ்க்க முனையுங்கள். சுதந்திரம் என்பது பெளதீகப் ரீதியானது மட்டும் அல்ல. அக விடுதலையே உண்மையான விடுதலை. இதனால் தான் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் இரண்டாவது முர்ஷிதுல் ஆம் ஆன உஸ்தாத் ஹஸன் ஹுழைபி 'ஆங்கிலேயர்களை உங்கள் நாட்டில் இருந்து வெளியேற்ற முன்னர் உங்கள் உள்ளங்களில் இருந்து வெளியேற்ற்றுங்கள்' என்ற பொருள்படுமாறு கூறினார். மனத்தை விடுதலை செய்யாமல் நிலத்தை விடுதலை செய்வதில் என்ன பயன்?

அம்லா ரசிகர்கள் கொஞ்சம் மூளையைக் கசக்கி சிந்திக்கப் பழகிக் கொள்ள வேண்டும்..

Saturday, April 15, 2017

எது தமிழ்ப் புத்தாண்டு? ஓர் உண்மை விளக்கம்.

Manjai vasanthan
Via Facebook
2017-04-15

எது தமிழ்ப் புத்தாண்டு? ஓர் உண்மை விளக்கம்.
===========================================
ஒரு நாள் என்பது என்ன?
சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.

ஒருமாதம் என்பது என்ன?
ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம்.

அதேபோல் ஆண்டு என்பது என்ன?
சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.

அதாவது, சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும். சித்திரையில் தலைஉச்சியில் இருக்கும். பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் மார்கழி இறுதியில் தென்கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும்.

இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.

சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு ஆண்டு கணித்தனர்.
தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது.

சித்திரையில் சூரியன் தலை உச்சியில் இருக்கும். ஒரு கோடியிலிருந்துதான் கணக்குத் தொடங்குவார்களே தவிர, தலை உச்சியிலிருந்து கணக்குத் தொடங்க மாட்டார்கள். எனவே, சித்திரையில் ஆண்டுத் தொடக்கம் என்பது தப்பு.
எனவே, தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பதே சரி.

மேலும், ஆரியர்கள் நுழைத்த 60 ஆண்டுகள் ஒன்றுகூட தமிழ் இல்லை. தமிழ் ஆண்டு பெயர் தமிழில் இல்லாமல் சமஸ்கிருதத்தில் எப்படியிருக்க முடியும்? சிந்திக்க வேண்டாமா?
அதைவிட வெட்கக்கேடு பிரபவ முதல் தொடங்கும் அறுபது ஆண்டுகளும் கிருஷ்ணனும் நாரதனும் சேர்ந்து பெற்றது என்கிறார்கள்.
ஆணும் ஆணும் சேர்ந்து, 60 ஆண்டுகள் பெற்றார்கள் என்பதைவிட கேவலம் வேறு உண்டா? இந்தக் கேவலத்தைத் தமிழர்கள் கொண்டாடலாமா?
தை முதல் நாளே தமிழன் புத்தாண்டு என்பது ஆய்வுகளின்படியும், தமிழர், அறிஞர்கள் முடிவுகளின்படியும் சரியானது.

எனவே, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம். அதுவே தமிழர்க்கும், அவரது மரபுக்கும் சரியாது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை


Segovi guru
Via Facebook
2017-04-15

வெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை….

அமெரிக்கா ஐ.டி. ஊழியர்களுக்கு விசா தருவதில் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிங்கப்பூரும் அமெரிக்காவின் பாதையில் நடைபோட ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய எல்லா நாடுகளுமே ‘மண்ணின் மைந்தர்’ கோஷத்தை நோக்கி நகர்கின்றன.

பலரும் இது ஏதோ ஐ.டி.துறையை மட்டுமே பாதிக்கும் விஷயம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஐ.டி.துறையில் மட்டுமல்லாது, எல்லா துறைகளுமே இந்த நகர்வினால் கடும் பாதிப்புக்கு ஆளாகப் போகின்றன. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எல்லாமே அபாயகரமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

அரபு தேசங்களில் அரசு வேலை என்பது நமக்கு எளிதாக கிடைத்துக்கொண்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களில் வேறு வழியில்லை என்றால் மட்டுமே வெளிநாட்டவருக்கு அரசுவேலை எனும் நிலை வந்திருக்கிறது. ‘ஏன் வெளிநாட்டவரை எடுக்கிறோம்?’ என்று சம்பந்தப்பட்ட துறை அரசுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அது இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. தனியார் கம்பெனிகளிலும் மண்ணின் மைந்தர்களை வேலையில் அமர்த்தும்போக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இனி பத்து வருடங்களில் வெளிநாட்டு ஒயிட் கால்ர் ஜாப் என்பது அரிதான விஷயமாக ஆகப் போகிறது.
ஆயில் கண்டுபிடிக்கப்பட்டபோதும் சரி, கணிணித்துறை வளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோதும் சரி, போதுமான பணியாளர்கள் இந்த தேசங்களில் இல்லை. எனவே எல்லா நாடுகளுமே உலகில் உள்ள திறமைசாலிகளை எல்லாம் வரவேற்று, அரவணைத்தன. இப்போது உள்ளூரிலேயே எல்லோரும் படித்து, வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள்.

அரபிகள் தங்கள் குழந்தைகளை ஐரோப்பா/அமெரிக்காவில் படிக்க அனுப்புகிறார்கள். படித்து முடித்து வந்ததும், அவர்களுக்கு வேலை கொடுப்பது அரசாங்கத்தின் கடமை ஆகிறது. எனவே ஒரு வெளிநாட்டு ஆசாமி வேலையை விடுகிறார் என்றால், அந்த வேலையை தனது குடிமக்களுக்கு மாற்றிவிடவே அரசுகள் முனைகின்றன. இதை ஒரு தவறாக யாரும் சொல்ல முடியாது.

ஆனால் இது நம்மை மோசமாக பாதிக்கப்போகிறது என்றே அஞ்சுகிறேன். நமது தலைமுறைவரை, படித்தால் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்து பிழைத்துவிடலாம் என்பதே நிலை. தற்போது வெளிநாட்டு வேலை இல்லை என்று ஆகும்போது, அத்தனை மனிதவளமும் உள்ளூர் நோக்கித் திரும்பும். அவர்களுக்கு வேலை தருவதற்கான கட்டமைப்பு நம்மிடம் இல்லை.

ஜப்பான், சீனா நோக்கி பயணிக்கலாம் எனும் சிந்தனை விழித்துக்கொண்டோரிடம் வந்திருக்கிறது. ஆனால் எத்தனை நாள் ஓடிக்கொண்டே இருக்க முடியும்?
நமது மத்திய, மாநில அரசுகள் இந்த அபாயத்தை உணர்ந்திருக்கின்றனவா, அதற்கான தொலைநோக்குத் திட்டத்தை வைத்திருக்கின்றனவா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு இதுபற்றிய விழிப்புணர்வு வரவேண்டியது அவசியம், அவசரம். இனியும் கார்போரேட் அடிமைகளை மட்டும் உற்பத்தி செய்யாமல், சுய தொழில் பற்றிய ஆர்வத்தையும் நம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டிய நேரம் இது.

இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பைத் தரும் தொழில், விவசாயம். ஆனால் அதனை அழித்து ஒழிப்பதில் தான் நம் அரசுக்ள் முனைப்பாக இருக்கின்றன. எனவே விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட வேண்டியதாகிறது. பிள்ளைகளை படிக்க வைத்து ‘நீயாவது தப்பிச்சுப் போயிடு’ என்று அனுப்பி வைக்க வேண்டியிருக்கிறது. எனது அப்பாவே என்னை அப்படித்தான் அனுப்பி வைத்தார். ஆனால் இனி போக்கிடம் இல்லை என்று ஆகும்போது, விவசாயம் உள்ளிட்ட வேலைகளை லாபகரமாக ஆக்குவது எப்படி என்று நமது அரசுகள் அக்கறையுடன் யோசிக்க வேண்டிய நேரம் இது.

‘எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வச்சிட்டாப் போதும்..பிழைச்சுக்குவாங்க’ என்று நம்பும் அப்பாவி பெற்றோர்கள் கால மாற்றத்தையும் உணர வேண்டிய நேரம் இது. வளர்ந்த நாடுகளைப் போலவே இங்கும் டிகிரி படிப்பு என்பது எல்லோரிடமும் இருக்கும் அடிப்படை விஷயமாக ஆகிவிட்ட காலம் இது.எனவே அடிமைகளை மட்டும் வார்த்தெடுக்காமல், சொந்தக்காலில் நிற்கவும் பிள்ளைகளை பழக்குவோம்.

Friday, April 14, 2017

பிறமதத்தவர்களின் பெருநாள் தினங்களில் வாழ்த்து தெரிவித்தல் தொடர்பிலான இஸ்லாமிய நிலைப்பாடு குறித்த ஒரு பார்வை

ஷெய்க் அக்ரம் ஸமத்
Via Facebook
2017-04-15

இலங்கையில் இஸ்லாத்தை முன்வைத்தல் தொடர்பில்...

பிறமதத்தவர்களின் பெருநாள் தினங்களில் வாழ்த்து தெரிவித்தல் தொடர்பிலான இஸ்லாமிய நிலைப்பாடு குறித்த ஒரு பார்வை.

இது தொடர்பிலான பத்வாக்களை வாசிக்கின்ற பொழுது இரண்டு வகையான கருத்துக்களை காணமுடிகிறது.
1. வாழ்த்துத் தெரிவித்தல் ஹராமானது என்று கூறும் ஒரு கருத்து, இதனை முன்வைப்பவர்கள் மிகப் பெரும்பாலும் இதுபற்றிய இமாம் இப்னுல் கையிம் இமாம் இப்னு தைமியா போன்றோரின் பத்வாக்களை மையப்படுத்தியே இக்கருத்தை வலியுறுத்துகின்றனர், இதற்கான மிகப் பிரதானமான நியாயமாக, பெருநாள்கள் அவா்களது வணக்கமாகும் எனவே அவற்றுக்கு வாழ்த்து தெரவிப்பது அவற்றை நாம் அங்கீகரிப்பது போன்றதாகும் என்று சொல்கிறார்கள்.
2. வாழ்த்துத் தெரிவித்தல் அனுமதிக்கப்பட்டது, என்பது இரண்டாவது அபிப்ராயம், நவீன அறிஞர்களில் பெரும்பான்மையானவாகளுடைய நிலைப்பாடு இதுதான், நிறுவன ரீதியாக சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம், ஆய்வுக்கும் பத்வாவிற்குமான ஐரோப்பிய சபை போன்றன மிக விரிவாக ”அனுமதிக்கப்பட்டது” என்ற பத்வாவை தெளிவுபடுத்தியுள்ளன.
இரண்டாம் கருத்தைப் பேசுகின்றவர்கள் தமது கருத்துக்கு நியாயமாக சில விடயங்களை முன்வைக்கின்றனர், குறிப்பாக பிற சமூகங்களுடன் கலந்து வாழ்கின்றவா்களைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக உறவு, தொழில், பக்கத்து வீடு, படிப்பு போன்ற அடிப்படைகளில் தொடர்புள்ளவர்களைப் பொறுத்தவரையில் இந்த வாழ்த்துத் தெரிவித்தல் தவிர்க்க முடியாதது, சமூக வாழ்வில் இந்தப் பண்பாடு அவசியமானது என்பார்கள், இத்தகைய ஒரு சுமூகமான சமூக வாழ்வைத்தான் இஸ்லாமும் வலியுறுத்துகிறது என்கிறார்கள்,
: {لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون} [الممتحنة: 8-9].
மேற்கண்ட அல்குர்ஆன் வசனம் இந்த விடயத்தை மிகத் தெளிவாகப் பேசுகிறது, இங்கு முஸ்லிம்களுடன் சமாதானமாக வாழும் மக்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைமை பற்றிப் பேசுகின்ற பொழுது, பிர், கிஸ்த் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, கிஸ்த் என்பது நீதி, அதாவது பிறர்க்கு வழங்கப்பட வேண்டியவற்றை குறைவின்றி வழங்குதல் என்பது இதன் பொருளாகும், பிர் என்பதன் கருத்து, தனது உரிமைகளில் விட்டுக் கொடுப்பு செய்து பிறா்க்கு நன்மையளித்தல் என்பதாகும். அந்தவகையில் பெருநாள் தினங்களில் வாழ்த்துத் தெரிவித்தல் என்பது இந்த பிர் கிஸ்த் என்ற சொற்களின் பிரயோகங்களில் ஒன்றுதான் என்று கூறுவார்கள்.
மேற்கண்ட இரண்டு நிலைப்பாடுகளிலும் நாம் வாழும் நாட்டிற்கு இரண்டாவது நிலைப்பாடே மிகவும் பொறுத்தமானது என்பதை நிச்சயமாக எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
இமாம்களான இப்னு தைமியா, இப்னுல் கையிம் போன்றோர், இஸ்லாத்தில் மிக உயர்ந்த கண்ணியத்திற்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனாலும் அவர்களது இந்த பத்வா அவர்கள் வாழ்ந்த அந்த சூழலில் வழங்கப்பட்டதாகும், கலாநிதி யுசுப் அல் கர்ளாவி அவர்கள் கூறுவது போல், இன்றைய உலக மாற்றம் நாம் அவர்களது பத்வாவில் தங்கியிருகக்காது வேறு வகையில் சிந்திக்கவேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது, அவா்களது பெருநாட்கள் அவர்களுக்கு வேண்டுமானால் வணக்கமாக இருக்கலாம் ஆனால் அது சந்தோசங்களைப் பரிமாறிக் கொள்வதற்குத் தடையானதல்ல, ஏனெனில் சந்தோசங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் என்பது ஒரு உயர்ந்த பண்பாடு,
"أكمل المؤمنين إيماناً أحسنهم خلقاً" "إنما بعثت لأتمم مكارم الأخلاق".
ஒரு சம்புரணமான முஃமின் சிறந்த பண்பாட்டாளனாவான் என்பது ஹதீஸ், அது போல் நபியவா்கள் அனுப்பப் பட்டதன் நோக்கம் உயாந்த பண்பாடுகளைப் புரணப்படுத்துவதற்காகவாகும் என்பதும் நபியவா்கள் வாக்காகும்.
அடுத்து இலங்கைச் சூழலில் இவ்விடயம் குறித்த சிந்தனை அகீதா சம்பந்தப் பட்டதாகநோக்கப் படுவதை விடவும், அதாவது அவா்களது வணக்கத்திற்கு நாம் துணைபோகிறோம் என்று பார்ப்பதை விடவும் இலங்கையின் சுமூகமான சமூக வாழ்க்கைக்கு எது நன்மையானது என்ற சிந்திப்புதான் மிகவும் பொறுத்தமானது, மட்டுமல்ல, இஸ்லாம் பற்றிய நல்லபிப்ராயம், அதனை நோக்கிய ஈர்ப்பு என்பன இந்த கலந்த வாழ்வின் ஊடாகவே சாத்தியப் படுகிறது.

- ஷெய்க் அக்ரம் ஸமத்