Saturday, April 1, 2017

‘வீரிய வித்து'

‘வீரிய வித்து' கற்பனை ஒரு வகையில் சாதியைச் சுட்டுகிறது என்றால், இன்னொரு தளத்தில் இந்த உலகம் ஆண்களுக்காக செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டி நிற்கிறது. வித்து என்ற வார்த்தையே ஆண்களைக் குறிக்கிற வார்த்தை தான். அந்த வித்துகள் விளையும் நிலத்தை வீரிய நிலம், வீரியமற்ற நிலம் என்றெல்லாம் நாம் கற்பனை செய்யவில்லை. வன் நிலம், மென் நிலம், புன் நிலம் தான். வன் நிலத்தையும் புன் நிலத்தையும் மென் நிலமாக மாற்றி விட முடியும். வித்தில் மாற்றத்தை செய்வதற்கு வழியில்லை; வித்து வீரியமாக இருப்பது தெய்வாதீனம்!
.
காளைகளில் வீரிய வகையைக் காப்பாற்றுவது தான் தமிழ்ப் பண்பாட்டின் அதிக பட்ச அக்கறையாக இருக்கிறது. வீரிய பசு வகையைக் காப்பாற்றுவதற்கு ஜல்லிகட்டு போல இன்னொரு ‘…கட்டு’ நம்மிடம் இல்லை. ‘மூலப் பிரதி' சொல்லாடலில் பெண்களுக்கு எந்த வித பங்களிப்பும் இருக்கவில்லை. சொல்லப்போனால், அப்பிரதிகளை வாசித்துப் படியெடுக்கிறவர்களே அவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனாலும், அவர்களுக்கு இந்த விவாதத்தில் பங்கு கொள்ளும் அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான பிரச்சினையில், பெண்களும் தலித்துகளும் ஒரே மாதிரியாய், ‘அதை நிறுத்தித் தொலையுங்கள்' என்று இதனால் தான் சொன்னார்கள்.
.
தாவர வர்க்கங்களிலும், விலங்கு வகைகளிலும் வீரிய இனங்களை (ஆண், பெண் பேதங்களின்றி) உண்மையிலேயே நாம் பாதுகாக்க நினைத்தால், ‘ஜல்லிக்கட்டு' போன்ற மரபான வழிமுறைகளை விட்டுவிட்டு வேறு நவீன முறைகளை நாம் யோசிக்கப் பழக வேண்டும். மகாபாரத, ராமாயணக் கதைகளில் மானுட உணர்வுகள் ஒன்றையொன்று கொந்தளிப்புடன் சந்தித்துக் கொள்கிற வாய்ப்புகள் காணப்படுகின்றன என்று உண்மையாகவே நாம் நம்பினால், அதன் தொன்மக் கட்டமைப்பை கடந்து வந்து இன்றைய வாழ்க்கையை எழுத முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால், இந்தப் பண்பாட்டு ‘மேன்மைகளில்' நாம் புளகாங்கிதம் அடைவதை விடவும் அருவருக்கிற சந்தர்ப்பங்களே அதிகமிருக்கின்றன. பயணற்ற பண்பாட்டுக் கூறுகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒதுக்கித் தள்ளுகிற மனோபாவத்தை நாட்டுப்புற வழக்காறுகளில் கற்றுக் கொள்ள முடியும்.
.

No comments:

Post a Comment