Saturday, April 1, 2017

பிறந்ததற்காக என்னைத் தூக்கிலிடுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.

பிறந்ததற்காக என்னைத் தூக்கிலிடுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தொடர் குண்டு வெடிப்புச் சதிகாரன் என என்னைத் தூக்கிலிடுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது." - யாகூப் மேமன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று ஒரு முழுப்பக்கத்தை The Hindu நாளிதழ் யாகூப் மேனனுக்கு ஒதுக்கியுள்ளது. Hindu ஒருவாரமாக இது குறித்துச் செய்து வரும் பணி போற்றுதலுக்குரியது. ஒருவேளை யாகூபின் தண்டனை நிறைவேற்றம் ரத்தானால் அதில் Hindu நாளிதழுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
சுமார் ஓராண்டு காலம் யாகூபுடன் சிறையில் கழிக்க நேர்ந்த பேரா.சாய்பாபா, யாகூப் நிறைய வாசிப்பவர் எனவும், ஆங்கில இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் உடையவர் எனவும், அவருக்குப் பிடித்த எழுத்தாளர் தாமஸ் ஹார்டி எனவும் கூறுகிறார். யாகூப் வயதுக்கு மீறி முதுமை அடைந்துள்ளதாக சாய்பாபா சொல்கிறார். சும்மாவா, 21 ஆண்டு காலச் சிறைவாசம், சித்திரவதைகள்,... தனக்கு உருது மொழி கற்பதில் ஆர்வம் உள்ளது என அறிந்த யாகூப். உருது ஆரம்பப் பாட நூல் ஒன்றை வரவழைத்து அவர் உருது கற்பித்ததை நெகிழ்வோடு சொல்லியுள்ளார்.
யாகூப் இரண்டு நாள் முன் தன் மகள் 21 வயது சுபைதாவைக் கண்டு முதல் முறையாகக் கதறி அழுததைக் கேள்விப்பட்ட முன்னாள் சிறை கண்காணிப்பாளர் வைபவ் குமார், "யாகூப் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தி நான் கண்டதில்லை. பிற கைதிகளைப் போல அவர் எந்தப் புகாரையும் சொல்லியதில்லை. எந்தக் கோரிக்கையையும் வைத்ததுமில்லை. அவர் எந்தக் குற்ற உணர்ச்சியைக் காட்டியதுமில்லை. தான் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டதாகச் சொல்லியதுமில்லை" என்கிறார்.
"யாகூப் ஒரு சிறந்த படிப்பாளி. சிறையில் கழித்த காலத்தில் அவர் ஆங்கில இலக்கியம் (58%), அரசியல் அறிவியல் (56%) ஆகிய இரண்டு பாடங்களில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளார். இந்திய அரசியல் சட்டம், குற்ற நடைமுறைச் சட்டம், ஜெயில் மானுவல் ஆகியவற்றைக் கரைத்துக் குடித்தவர். திருக்குர் ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கியுள்ளார்" என்கிறார் இன்னொருவர்.
ஒரே ஒரு நாள் மட்டும் அவர் தேர்வு எழுதத் தவறினார். நமது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவரது கருணை மனுவை நிராகரித்த நாள் அது. "முடியவில்லை" என நெருங்கியவர்களிடம் சொல்லியுள்ளார்.
ஐந்து முறை தினம் தொழத் தவறுவதும் இல்லை.
யாகூப் இப்படிப் படித்துப் பட்டங்கள் பெறுவதைக் கண்டு பல சிறைக்கைதிகள் அவர்களும் மேற் கல்வியைத் தொடங்கியுள்ளனர். சக சிறைக் கதிகளுக்கு மனுக்களைப் பூர்த்தி செய்து தருவது, கடிதங்கள் எழுதித் தருவது, மேல் முறையீடுகளை எழுதுவது.....
"அவரால்தான் இன்று கைதிகளுக்கு ஃபேன் கள் பொருத்தப்பட்டுள்ளன. டி.வி பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.." என்கிறார் அவரது வழக்குரைஞர் அனில்.
"யாகூப் பாய்" மீது சக கைதிகளுக்கு ஏகப்பட்ட அன்பு. அவரது சீராய்வு மனு தள்ளுபடி செய்ததை அடுத்து, நீதிமன்றத்தில் அவரது மேல் மனு விசாரணைக்கு வரும் ஜூலை 27 அன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க கைதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து யாகூப் சொல்வதென்ன?
"டைகர் மேமனுக்குச் சகோதரனாகப் பிறந்ததற்காக என்னைத் தூக்கிலிடுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தொடர் குண்டு வெடிப்புச் சதிகாரன் என என்னைத் தூக்கிலிடுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது."
நன்றி - Marx Anthonisamy.

No comments:

Post a Comment