Thursday, May 31, 2018

ரஜினி தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மீடியாவை நோக்கிப் பாய்ந்தார்

Karl marx ganapathy
2018-05-31

தூத்துக்குடியில் அரச வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் ரஜினியை நோக்கி “யார் நீங்கள்...? என்று கேட்டதும், ரஜினி தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மீடியாவை நோக்கிப் பாய்ந்ததும் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது.

கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், ஒரு கட்டம் வரை தமிழகத்தில் ரஜினியின் இருப்பு சிக்கலுக்கு உள்ளாகிக்கொண்டே இருந்தது. குறிப்பாக காவிரி மற்றும் வீரப்பன் விவகாரங்கள். இரண்டையும் கம்பி மேல நடப்பது போல அவர் கையாண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

இங்கு காவிரி என்பது உணர்ச்சிப்பூர்வமான விவகாரமாக மாறும்போதெல்லாம் வழக்கம்போல சினிமா ஆட்கள் அதில் கோமாளித்தனமான கூத்தில் ஈடுபடுவார்கள். தனது ஹீரோ இமேஜுக்கு பங்கம் வராத வகையில் ரஜினியும் அந்த போராட்டங்களில் வந்து உரையாற்றிவிட்டு, பிறகு கர்நாடகாவில் போய் நெளிந்து வளைந்து அதை சரிசெய்துகொண்டிருந்தார்.

இன்று இந்த மீடியா சந்திப்பு விஷயத்தில் சொல்கிறார்களே, ரஜினியின் ஈகோ அந்த இளைஞனின் கேள்வியால் காயமடைந்துவிட்டது அதனால்தான் அவர் ஆத்திரப்பட்டுவிட்டார் என்று, அதை விட அதிகமாக அவரது ஈகோ காயமடைந்த காலம் அது. அந்த சிக்கலை அப்போது அவர் எவ்வாறு எதிர்கொண்டார்?

அவர் மிகத் தந்திரமாக தான் ஒரு ஹீரோ என்பதையும், அதே நேரத்தில் அதிகாரத்தால் பாதிக்கப்பட்டவன் என்பதையும் சமமாகத் தக்கவைத்துக்கொண்டதன் வழியாகவே அதை சமாளித்தார். எம்ஜியாருக்கு அடுத்து ஜெயலலிதாவின் ஆணவம் அவருக்கு இதில் பெருமளவில் உதவியது.

மக்கள் அபிமானம் கொண்ட ஒரு சினிமா உச்ச நட்சத்திரம் தன்னை ஒடுக்கப்படுபவராகவும் காண்பித்துக்கொண்டதன் வழியாக அவரது இயல்புக்குப் தொடர்பில்லாத வகையில் ஒடுக்கப்படுபவர்களின் தரப்புடன் வைத்து எளிய மக்களால் புரிந்துகொள்ளப்பாட்டார்.

மேலும் எளிய மக்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்ட அவரது சினிமா கதாப்பாத்திரங்கள், அதிகாரத்துக்கு எதிரான எளிய மனிதன் எனும் சித்திரத்துக்கு வண்ணம் கூட்டின. அதனால்தான் ஜெயலலிதா மீதான அவரது கோபம் “மேட்டிமை மனநிலை கொண்ட இரண்டு ஆளுமைகளுக்கு இடையிலான சில்லறைச் சச்சரவு” என்கிற எதார்த்தத்தைத் தாண்டி அதற்கு ஒரு அரசியல் மதிப்பு கிட்டியது. அதற்கு ஜெயலலிதாவின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியும் உதவியது. அது எங்ஙனம்?

ஜெயலலிதாவின் அந்த அவல ஆட்சியை எதிர்த்து அப்போது ஒட்டுமொத்த தமிழகமே அலறியது. ரஜினியும் தேர்தல் நேரத்தில் மிகத் தீவிரமாக வாய்ஸ் கொடுத்தார். அதற்கு ஒரு பெறுமதியும் இருந்தது. இங்குதான் ரஜினியின் மதிப்பை சிலர் அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அவரது எதிர்க்குரலை மக்கள் அங்கீகரித்தார்கள் என்பதும் அது ஜெயலலிதாவின் படுதோல்விக்கு அதனளவில் பங்களித்தது என்பதும் உண்மை.  கருணாநிதி, மூப்பனார் கூட்டணிக்கு ரஜினியின் வாய்ஸ் கூடுதல் பலமாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில்தான் ரஜினியின் அரசியல் பிரவேச பூச்சாண்டி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. அதை அவ்வாறு நகர்த்தியதில் பத்திரிகைகளுக்குப் பெரும் பங்குண்டு. அவரது அரசியல் பிரவேச செய்திகள், மங்காத வசீகரம் கொண்ட அமுதசுரபியாக இருந்ததை அவைப் புரிந்துகொண்டு, அதைத் தங்களது வியாபாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள விழைந்தன. மந்தமான காலகட்டங்களில் மக்களை கிளுகிளுப்பூட்டுகிற மற்றும் அரசியல் கொதிநிலையான காலங்களில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அட்டைப்பட கட்டுரைகள் எழுதி மற்றும் திசை திருப்புகிற பணியை அவை செய்தன.

இன்று அவர்களை நோக்கி ஏய்... என அவர் விளிக்கும் அந்த அதிகார தொனிக்கு பத்திரிகையாளர்களின் அறமற்ற சமரசத்துக்கும் பங்கிருக்கிறது. ஆனால் அன்று விகடன், குமுதம் போன்ற இதழ்கள் அவரை முன்னிறுத்தியதற்கும் இன்று ஹிந்து போன்ற இதழ்கள் அவர் குறித்த செய்திகளுக்கு தரும் முக்கியத்துவத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலை உந்து சக்தியாகக் கொண்டு ரஜினி ஒரு அரசியல் பிம்பமாக உருவகிக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், பெரும்பான்மை சமூகம் தவற விட்ட ஒரு புரிதல் இருக்கிறது. அதுதான் ரஜினியின் மக்கள் விரோத அரசியலாக இப்போது வடிவெடுத்து நிற்கிறது. அது என்ன?

ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் அன்று ஏற்பட்ட உரசல், “மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டதா...?” என்கிற ஆதார கேள்வியே அது. அன்று ரஜினியின் எதிர்க்குரல் கிட்டத்தட்ட ஒரு ஹீரோவின் குரலாகவே பார்க்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் அதற்கு அன்று ஜெயா நடத்திய காட்டாட்சிதான் காரணமே தவிர, ரஜினியின் ஆளுமை குறித்த பிரமிப்போ அல்லது ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய தேவையோ அல்ல.

இப்போதும் கூட அதுதான் அரசியல் நிலைமை. கருணாஸின் அரசியல் இருப்புக்கு இங்கு என்ன அவசியம் இருக்கிறதோ அதேதான் ரஜினிக்கும் கமலுக்கும் இருக்கிறது. முன்னவர் வெளிப்படையான கோமாளி என்றால் பின்னவர்கள் கொஞ்சம் வர்ணம் பூசப்பட்ட கோமாளிகள். அவ்வளவே.

ஜெயலலிதா மீதான ரஜினியின் கோபத்திற்குக் காரணம், அவர் ரஜினியின் இருப்பை, அவரது ஹீரோ பிம்பத்தை மயிரளவுக்குக் கூட மதிக்காத அகம்பாவத்தைக் கைகொண்டார் என்பதும், அதற்கு எதிராக ரஜினியால் அன்று ஒன்றுமே செய்யமுடியாமல் இருந்ததும்  என்பதே. ஏனெனில் அந்தக் காட்டாட்சி காலத்தில் அப்போது நடந்த எந்த மக்கள் திரள் போராட்ட நடவடிக்கைகளிலும் ரஜினி மக்களுக்கு ஆதரவாகக் கருத்து கூறியவரில்லை. சினிமாத் துறையில் நடந்த போராட்டங்கள், சிக்கல்கள் போன்றவற்றிலும் கூட அவர் தன்னை தள்ளிவைத்துக்கொண்டவராகவே இருந்தார்.

கங்கை அமரனின் பண்ணை வீடு சகிகலா வகையறாவால் மிரட்டி வாங்கப்பட்டபோதும், தயாரிப்பாளர் ஜீவி அதே கும்பலின் ஆதரவு பெற்ற ஒரு கந்துவட்டிக்காரனால் மிரட்டப்பட்டு தற்கொலையை நோக்கி தள்ளப்பட்டபோதும் அவரது வாய்ஸ் ம்யூட் மோடில் தான் இருந்தது. இவை வெறும் உதாரணங்கள் மட்டுமே. ஆக ரஜினி ஒரு  அரசியல் பிம்பமாக  உருவாக்கப்பட்டதன் பின்னால்  “மக்கள் அரசியல்” என்னும்  கருதுகோளே கிடையாது.

இந்த மக்கள் நலன் என்கிற நிபந்தனையற்ற ஜிகினா அரசியல், தனது அரசியல் பண்பாக உள்ளீடற்ற மேட்டிமைத்தனத்தையும், அகம்பாவத்தையுமே  அரசியல் ஆளுமைத் திறனாக  வரித்துக்கொள்ளும். இப்போது ரஜினியிடம் வெளிப்படுவது அதுதான். தம்மை மக்களின் மீட்பராக கருதிக்கொள்வதற்கு, அவருக்கு தனது ஹீரோ இமேஜ் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.

இத்தனை நாட்களாக இத்தகைய முதலீடுகளையும் பரணில் போட்டு வைத்திருந்த ரஜினி, இப்போது மட்டும் அதை எடுத்துக்கொண்டு ஏன் புறப்படுகிறார்? அவருக்கு மக்கள் நலன் குறித்த அக்கறைகள் வந்துவிட்டன என்பதா அதற்குப் பொருள்? இல்லை.

இன்றைய தமிழகத்தின் அரசியல் நிலைமை மிகவும் குழம்பிக் கிடக்கிறது என்பதும், அதைப் பயன்படுத்திக்கொண்டு சித்து வேலைகளில் ஈடுபட முயலும் வலதுசாரி அரசியலுடன் கைகோர்ப்பதன் வழியாக, சுயமான தனது அரசியல் எதிர்காலத்தை இங்கு பரீட்சித்துப் பார்க்கலாம் என்கிற  நப்பாசையே  அதற்குக் காரணம்.

ஏனெனில், மக்கள் நலன் குறித்து சிந்திக்கும் எந்த இயக்கமும், இன்று நடக்கும் எடப்பாடி அரசை நிராகரிப்பதில் இருந்தே தமது அரசியலைத் துவங்கமுடியும். ஆனால் ரஜினியின் வழிமுறை அந்த திசையில் இல்லை. மட்டுமல்லாமல், இப்போது ரஜினியின் குரலில் வெளிப்படும் அதிகாரமும், அவரது வெளிப்படையான அரசியல் நடவடிக்கைகளும் சொல்லும் செய்தி என்ன?

தம்மால் எதிர்க்கப்பட்ட ஜெயலலிதாவின் வாகன டயரை நக்கிகொண்டிருந்த  இரண்டு அடிமைகளில் ஒன்று முதல்வராகவும், மற்றொன்று துணை முதல்வராகவும் வலம் வருகிறபோது, அவர்களை விட எல்லா விதத்திலும் மேட்டிமை நிலையில் உள்ள தாம் ஏன் அரசியலில் இறங்கக் கூடாது என்கிற எண்ணம்தான்.

மேலும் மிகத் திட்டமிட்ட வகையில் மத்தியில் ஆளும் வலதுசாரி அரசு, புதிய அரசியல் வழிகளை  பரீட்சித்துப் பார்க்கும் காலகட்டத்தில், ரஜினிக்குக் கிடைக்கும் “பாதுகாப்புணர்வு” என்பது அவருக்கு இதுவரை கிடைத்திராதது. மீடியாவின் முன்பான அவரது வீரத்துக்கான வேகத்தை வழங்குவதும்  அந்த கதகதப்புதான். அதனுடன் அவரது இயல்பான அகம்பாவமும் சேர்ந்துகொள்ளும்போது போராடும் எளிய மக்கள் சமூக விரோதிகளாக உறுமாருகிறார்கள். மேலும் அதனுடன் வலதுசாரி கருதுகோள்கள் இணைந்துகொள்கிற போது அந்த மூர்க்கம்  அடுத்த பரிமாணத்தை எட்டுகிறது.

நடந்த நிகழ்வுகளின் வழியாக, நமக்கு அவர் சொல்லும் செய்தியை விட, அவரை முன்னிறுத்துபவர்களுக்கு அவர் வெளிப்படுத்திய சமிஞ்ஞையே இங்கு மிக முக்கியமானது. அது “நீங்கள் நினைக்கும் வேலைக்கு நான் பொருத்தமானவன்” எனும் உறுதி.

அவரது நேர்காணல்கள், அவர் மீடியாவை எதிர்கொண்ட விதம் போன்றவற்றை விதந்தோதுகிற, போராடும் மக்களை அவமதிக்கிற ஒரு தரப்பு தனது எக்காளத்தின் மூலம் வெளிப்படுத்துவது அந்த வரவேற்பைத்தான்.

திரையில் எளிய மக்களின் மீட்பரான ஜொலிப்பதற்கும் எதார்த்தத்தில் அவ்வாறு இருப்பதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. அது ரப்பர் குண்டுக்கும் நிஜ குண்டுக்குமான வேறுபாடு. அந்த வேறுபாட்டை ஸ்தூலமாக  புரிந்துகொண்டவன்தான் “யார் நீ...” என்று முகத்துக்கு நேராகக் கேட்கிறான். ஆன்மீகத்தில் மட்டுமல்ல, ரஜினி அரசியலிலும் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி இது!

https://m.facebook.com/story.php?story_fbid=1969746836392163&id=100000705985759

Monday, May 28, 2018

என் இனம்தான் பெரியதா

Sivasankaran Saravanan
2017-05-29

இளைஞர்கள் உணர்ச்சிவசப்படாமல் ஒரு விஷயத்தை அறிவுப்பூர்வமாக அணுகி புரிந்துகொள்ளவேண்டும். 

நாம் வாழ்கிற இந்த பூமி பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு மனிதன் வாழக்கூடிய பிரதேசமாக மாறியது.  பிறகுதான் நியான்டர்தால் இனம் வந்தது.  மனிதர்கள் ஆரம்பத்தில் ஆடைகள் ஏதுமின்றி கற்கால மனிதர்களாக இருந்தனர்.  யார் வேண்டுமானாலும் யாரையும் புணர்ச்சி செய்வார்கள்.  அம்மா பையன் அண்ணன் தங்கச்சி என்ற பேதமெல்லாம் கிடையாது.  அதன்பிறகு மெல்ல மெல்ல நாகரிகம் எட்டிப்பார்த்து பல்வேறு மொழி இனக்குழுக்களாக வளர ஆரம்பித்தது மனித இனம். 

எல்லா இனங்களையும்  போல  தமிழினமும் அப்படித்தான் வளர்ந்து வந்தது.  பல்வேறு குழுக்கள்,  நிலப்பகுதிகள்,  பேரரசர்கள்,  சிற்றரசர்கள்,  குறுநில மன்னர்கள் இப்படி பல பிரிவுகள்.  இந்த ராஜா படை திரட்டிப்போய் பக்கத்து ஊர் ராஜா வோடு சண்டை போட்டு அவன் பொண்டாட்டிகள்,  ஆடு மாடு எல்லாத்தையும் கடத்திட்டு வருவான்.  வேறொரு ராஜா வந்து இவன் சொத்துகளை கொள்ளை அடிச்சிட்டு போவான்.  இப்படித்தான் உலகம் பூராவும் இருந்தது . நம் தமிழ் முன்னோர்களும் இப்படித்தான் இருந்தார்கள்.  ராஜாக்களுக்கு போர் அடிச்சா மகிழ்விக்க கலைகள் தோன்றின.  சமயங்கள் வளர்ந்தன .

நாம் தமிழினம் என்பதால் நமக்கு எக்ஸ்டிரா நாலு கை நாலு கால் இருந்தது கிடையாது.  ஐரோப்பாவில் ஏற்பட்ட இயந்திரப்புரட்சி காரணமாக அறிவியல் மெல்ல மெல்ல உலகின் அனைத்துப்பகுதிகளையும் சென்று சேர்ந்தது.  லோக்கல் ல நடந்த சண்டை இன்டர்நேஷனல் அளவுக்கு விரிவடைந்தது.  கிட்டத்தட்ட உலகின் பூரா பகுதியுமே சண்டை,  சச்சரவு,  பசி பஞ்சம் கடந்துதான் மேலேறி வந்தது.  நோய்கள் வந்து கொத்துகொத்தாக மனிதர்கள் செத்து மடிந்தார்கள்.  சண்டையில் செத்தவன் மீதி. 

அறிவியல் வளர வளரத்தான் மனித குலம் தழைத்தது . அதே அறிவியலை மனிதன் சுயலாபத்திற்காக பயன்படுத்தி மனித குலத்தை அழிக்க முற்பட்டாலும் அறிவியல் தான் மனித குலத்தை காப்பாற்றி வளர்த்தது. 

என்னோட அம்மா தான் உலகத்திலேயே அழகான அம்மான்னு நான் நெனச்சிக்கறதில்லையா அதுபோல நம்முடைய இனம் தான் உலகின் சிறந்த இனம் என எண்ணி பெருமை படுவதில் தவறேதுமில்லை.  ஆனால் அதற்காக இப்போது உள்ள எல்லா அறிவியலையும் ஏற்காமல்,  "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல " என வெட்டி பெருமை பேசுதல்,  மாட்டு சாணி தான் சர்வரோக நிவாரணி,  பிரசவத்திற்கு ஆஸ்பத்திரி போகக்கூடாது ஊட்டுலேயே புள்ளை பெத்துக்கனும்,  நம் முன்னோர்கள் எந்த ஆஸ்பத்திரிக் கு போனார்கள் என கேட்பது,  குழந்தைகளுக்கு தடுப்பூசி போடக்கூடாது, கண் பார்வை சரியா தெரியலன்னா கண்ணாடி போடக்கூடாது  இப்படியெல்லாம் சொல்வது அல்லது இப்படி பிரமோட் செய்கிற கும்பலிடம் "அட ஆமாம் ல " என மயங்கி ஆதரவளிப்பது போன்ற காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது.  இதுபோன்ற டுபாக்கூர் பேர்வழிகளிடம் இளைஞர்கள் கவனமாக இருக்கவேண்டும் . உங்கள் தாத்தா அப்பா க்களுக்கு கிடைக்காத வசதி உங்களுக்கு கிடைத்துள்ளது.  கல்வி கற்றுள்ளீர்கள்,  எந்த நேரமும் இணையத்தின் மூலம் எதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.  பகுத்தறிவை பயன்படுத்தவேண்டும்.  எதையும் ஏன் எதற்கு என கேள்வி கேட்டு பழகவேண்டும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1677470008948655&id=100000570177032

Sunday, May 27, 2018

கலைஞர் உண்ணாவிரதம் நாடகமா?

@வரலாறு அறிவோம்

கலைஞர் உண்ணாவிரதம் நாடகமா?

அப்போது என்ன நடந்தது. முழு விபரமும் கீழே.

இலங்கையில் போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே 14.10.2008ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது கலைஞர்
அந்த கூட்டத்தில் ‘போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது கலைஞர்
அந்த தீர்மானத்தை உடனடியாக பிரதமருக்கு அனுப்பியது கலைஞர். அதற்கு பிரதமர் அரசியல் தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவாக எடுத்திடும் என்று உறுதியளித்தார்.
தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்றவர் ஜெயலலிதா.
இலங்கைப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிட்டால், பின்னர் நம் உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடும் வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்றும் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
கலைஞரின்  வேண்டுகோளினை ஏற்று இந்திய பிரதமர் 18.10.08ல் இலங்கை அதிபருடன் பேசினார்.
ஈழப்போரை நிறுத்த திமுக 24.10.08ல் சென்னையில் பிரமாண்டமான மனிதச் சங்கிலி நடத்தியது
26.10.08ல் பிரணாப் சென்னை வந்து கலைஞரை சந்தித்தார்.
12.11.08ல் இலங்கை போர் நிறுத்த தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் முன் மொழிந்து நிறைவேற்றியதும்,
4.12.08ல் அனைத்துக் கட்சி தலைவர்களையும் பிரதமரிடம் அழைத்துச் சென்று பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி பேசச் சொன்னதும்,
அவ்வாறே பிரணாப் சென்று பேசியதும், 27.12.08ல் திமுக பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றியதும்
கலைஞர்தானே
26-4-2009 அன்று விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா.சபை ஆகியவற்றின் கோரிக் கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம். இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும். இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது. இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
26ஆம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்குப் பின் அன்றிரவு முழுவதும் கலைஞர் தூங்கவில்லை. போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பலமுறை தொடர்பு கொண்டார். பிரதமரும் கலைஞரோடு தொடர்பு கொண்டார். வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் கலைஞரை  தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்கள்.
அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தார் கலைஞர். எந்தச் செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் தன் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றார் கலைஞர்.
அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே இந்த வயதிலே செய்து கொண்டு, நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த கலைஞர் தன் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப் படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான் யாருக்கும் கூறாமல், கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், தானாக முடிவெடுத்துச் சென்றார்
அதே நாளில் பகல் 12 மணி அளவில் இலங்கை அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இலங்கை வடக்கில் நடைபெற்று வந்த போர் முடிந்து விட்டது. வடக்கு பகுதியில் இனி கனரக ஆயுதங்களை பயன் படுத்த வேண்டாம் என்று ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்து குண்டு வீசுவதும் நிறுத்தப்படுகிறது. வடக்கில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள். இனி அப்பாவி மக்களை பாதுகாக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இலங்கை அரசு வெளியிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையிலும்; பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நண்பர்களும் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தியதன் அடிப்படையிலும் மதியம் 1 மணி அளவில் கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
28.4.09 தினத்தந்தியின் தலைப்பு: ‘மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார்'
"கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி போரை நிறுத்தி விட்டதாக இலங்கை அறிவிப்பு’'
இதைத் தவிர 2ம் பக்கத்தில் ‘போர் நடவடிக்கை முடிவுக்கு வந்தது; இலங்கை ராணுவம் அறிவிப்பு’ என்ற தலைப்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இலங்கை-புலிகள் போர் பற்றி ஒரு இலங்கை ராணுவ தளத்தின் கட்டுரை கண்ணில் பட்டது. அதிலிருந்து ஒரு excerpt:
"6A day before the Dravida Munnettra Kazhagam (DMK) supremo and Tamil Nadu Chief Minister M Karunanidhi went on a fast on April 27, 2009 at the Anna Memorial in Chennai protesting against the SLAF offensive against the LTTE, Menon called me on my cell phone at 4.30 pm. The Indian team wanted to visit Colombo for urgent talks. I went straight to the President’s office and got his sanction and called Menon back within five minutes. Within six hours of Karunanidhi going on fast we could defuse the crisis in Tamil Nadu by issuing a statement announcing the end of combat operations and shelling inside the ‘No Fire Zone’, which led to the Tamil Nadu Chief Minister ending his fast. This was a classic example of quiet, corrective diplomacy between two officially designated government teams"
அப்படியென்றால் கலைஞர் மட்டும் ஏமாந்தார் என அர்த்தமா?
ஒட்டு மொத்த இந்தியாவையும் இலங்கை ஏமாற்றியது என்பதே உண்மை.
இதெல்லாம் நாடகமா?
கலைஞர் உண்ணாவிரதம்
முடிந்தவுடன் நடேசன் சொன்னது இதுதான்.
"LTTE are very strong and are in brink of victory and this fast by MK is an attempt to prevent their victory "
அப்போது இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களை   ஒப்படைத்தால் புலிகளை பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பதாக தெரிவித்தது. அதை புலிகள் ஏற்கவில்லை.
தாங்கள் போரில் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாகவும் கலைஞர் அதை தடுக்க பார்ப்பதாகவும் நடேசன் சொன்னாரே. அது சரியான பேட்டியா?
விரைவில் பிஜெபி ஆட்சியை பிடிக்கும். தனி ஈழ அறிவிப்பு வரும். அதுவரை காத்திருங்கள் என்று தமிழகத்தில் இருந்து வந்த தகவலைத்தானே புலிகள் நம்பினார்கள்.
2009ல் திமுக மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தால்
இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், திமுக மீது பழியைப் போடுகின்ற செயலே. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாறு அறிந்தவர்கள் ஏற்கமாட்டார்கள்.
போர் உச்சநிலையின் போது மத்திய அரசுக்கான ஆயுள் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க. வெளியேறுவதால் டெல்லியைப் பொறுத்தவரை இருதரப்புக்கும் எந்த நட்டமும் இல்லை.
ஆனா மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் அது காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏக்களின் தயவில்தான் நீடித்துக் கொண்டிருந்தது.
ஈழத்தமிழர் பிரச்சினைக்காக பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, தேர்தலைச் சந்தித்தால் பெரும்பான்மை பெறலாமே என்பீர்கள்.
அப்படியே திமுக ஆட்சியை ராஜினாமா செய்து இழந்திருந்தாலும் போர் நின்றிருக்க வாய்ப்பே இல்லையே.
பதிலாக ஈழத்தாய்  2009 லேயே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார்.
ஆனால் இதற்கு முன் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இரண்டு ஆட்சியை இழந்த கட்சி தி.மு.க. மட்டும்தான்.
ஆனால் மக்கள் திரும்ப திமுகவிற்கு வாக்களித்தனரா?
அதுமாத்திரமல்ல. திமுக ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களையும் நடத்தியுள்ளது
ஆட்சிக்கு வருவதைப் பற்றி கற்பனைகூட செய்துபார்க்காத 1956ம் ஆண்டிலேயே, சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்காக தீர்மானத்தை முன்மொழிந்தது திமுக.
16.4.02ல் தமிழக சட்டசபையில் ‘பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடுவார்களா?
17.1.09ல் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்’ என்று ஜெயலலிதா கூறியதை மறந்தது ஏன்?

பதில் சொல்லுங்க  தமிழ் தேசியவாதிகளே?

A parimalan

https://m.facebook.com/story.php?story_fbid=10216073749892749&id=1119647101