Sunday, May 13, 2018

நான்கு வருட திருமண வாழ்க்கையில் "கற்றதும்-பெற்றதும்".

ஏவின் மனோ
Via Facebook
2018-05-13

நான்கு வருட திருமண வாழ்க்கையில் "கற்றதும்-பெற்றதும்".

*----------கற்றது?----------*

கல்யாணங்குறது ஆயிரங் காலத்து பயிரு!. யாரு சொன்னா..!? எவனோ ஒரு வேலையத்து ஒத்தையில நின்ன வேங்கமொவன் சொல்லிட்டு போயிட்டான். ஆனா "ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்திச்சாம்" - னு தினமும் தண்ணி ஊத்தி அந்த பயிர வாடாம பாத்துக்கிறது எம்புட்டு கஷ்டம்னு தெரியுமா மொரட்டு சிங்கிள்களே!.

சிங்கம் "சிங்கிளா" சுத்துறப்ப நைட்டு பத்து மணிக்கு ஒரு போன் வரும், "எங்கடா இருக்க..!?" - னு கேக்குற அந்த குரல்ல பையன காணாத ஏக்கம் நெறஞ்சி கெடக்கும்.

அதே சிங்கம் "சிறைபட்ட" பொறவு அதே பத்து மணிக்கு இன்னொரு போணு வரும் "எப்ப வீட்டுக்கு வருவ..!?" - னு கேக்குற அந்த குரலு "மொவன இன்னும் பத்து நிமிஷத்துல நீ வூட்டுல இல்லனு வைய்யி ங்கொய்யால நடக்குறதே வேற!"னு சொல்லாம சொல்லும்!.

அலெக்ஸாண்டர் படையெடுத்து வந்தாலும் பயப்படாதவன் கூட மனைவியோட அஞ்சி மிஸ்டுகாலுக்கு பயந்துருவான்னு கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் சொல்லிருக்காப்புல!.

 நமக்கு கொடுக்கப்பட்ட அந்த பத்து நிமிசத்துல நைட்டு பத்து மணி வரைக்கும் வெளிய சுத்துனத சமாளிக்க நாம ஒரு கதைய ரெடி பண்ணனும்!. இருக்குறதுலயே இது ரொம்ப கஷ்டமான டாஸ்க்!.

ஏன்னா நள்ளிரவு 1 மணிக்கு சோத்துசட்டிய தூக்கி அடுப்பங்கரையில ஒக்காந்து திண்ண காலம் போயி இப்ப பத்து மணி ஆனாலே சோறு நமக்கா, நாய்க்காங்குற காம்படீசன் காலத்துல வாழ்ந்துட்டு இருக்குறோம். பிகாஸ் நமக்கு கல்யாணம் ஆயிடிச்சி!.

உண்மைய சொன்னா நமக்கு சோறு கெடைக்காது என்பதால் கொடுக்கப்பட்ட நேரத்த கோல்டன் டைமா எடுத்துகிட்டு ஓட்ட ஒடைச்சல் இல்லாம நாம சொல்ற கதைதான், நமக்கு பர்த்த கன்பார்ம் பண்ணும். சப்போஸ், சொதப்பிடிச்சினு வைங்க நைட்டு ஃபுல்லா RAC தான்!.

ஊருல சின்ன பசங்க எல்லாம் நம்மள "தல"னு கூப்பிட, டீக்கடை வரலாற்று பொருள் முதல்வாத பெருசுங்க நம்மளாண்டு௪௺ அமெரிக்காவோட அடுத்த மூவ் இன்னானு ஆலோசன கேக்க, குழாயடியில தண்ணி எடுக்க வந்த பக்கத்து வீட்டு பொண்ணுக்கு Arts படிக்கலாமா, Science படிக்கலாமானு ஐடியாக்கள வாரி எறச்சிட்டு, ரெண்டு நாளா படுத்த படுக்கையா கெடக்குற எதிர்த்த வூட்டு பாட்டிக்கு நாலு மாத்திரைய பிரிஸ்கிரைப் பண்ணிட்டு, "முதலாளித்துவம் கொல்லும் கம்யூனிசமே வெல்லும்" னு நாம கதவ தட்டுனா... "கால் கிலோ கத்திரிக்காவ ஒழுங்கா பாத்து வாங்க தெரியல, இதுல இவுரு கம்யூனிசம் கிளாஸ் எடுக்குறாராம்!" - னு ஒரே போடா போட்டு மூலையில ஒக்கார வெச்சிபுடுவாய்ங்க.

வூட்டுக்காரம்மாவ சொல்லி குத்தமில்ல மார்க்ஸ் ஆண்டவரத்தான் சொல்லனும், பின்ன அம்புட்டு பெரிய மூலதனம் புக்கு எழுதுனவரு ஒரு ஓரத்துல "கத்திரிக்கா வாங்குறது எப்படி!?" - னு ஒரு பக்கம் எழுதியிருந்தா நமக்கு இந்த நெலம வந்துருக்குமா...!?.

1789 ல நடந்த பிரெஞ்சு புரட்சி, 1857 ல நடந்த சிப்பாய் புரட்சி எல்லாம் தெளிவா Store ஆவுற மண்டைக்குள்ள புரட்டாசி மாசம் 3 ந்தேதி வூட்டுக்காரம்மாவோட ஒன்னுவிட்ட தம்பி பொண்டாட்டிக்கு வளகாப்புங்குறது மட்டும் சேவ் ஆகவே செய்யாது!. புரட்டாசி 2 ந்தேதி "நாளைக்கு காத்தால சீக்கிரம் வேலைக்கு போகனும்!" - னு சொன்னதும்தான் இடியுடன் கூடிய கன மழை ஆரம்பிக்கும்.

பொதுவா சண்ட ஆரம்பிக்கிறதுக்குதான் காரணம் தேவையே தவிர, ஒன்ஸ் ஆரம்பிச்சிடுத்துனா பேஷா கொண்டு போறது கடந்தகால வரலாறுகள் தான். தாலி கட்டுறப்ப கொட்டாவி விட்டதுல இருந்து முந்தாநேத்து நைட்டு தூங்குறப்ப நாம கொறட்ட விட்டது வரைக்கும் ஃபிங்கர் டிப்புல வெச்சிருப்பாய்ங்க!. பதிலுக்கு நாம ரெண்டு பிட்ட போட்டு வாயடைக்கலாம்னு பாத்தா... ம்ம்க்கும் வண்டி மொத்தமா கொடசாஞ்ச பொறவு செல்ஃப் எடுத்தா என்ன எடுக்காட்டி என்ன..!?.

முந்தாநேத்து கல்யாணமான முதிர் கண்ணன் ஒருத்தருக்கு இன்னும் மீச மொளைக்காத பெருசு ஒன்னு அட்வைஸ் பண்ணிட்டு இருந்துச்சி. இன்னாடா இவன் ரொம்ப நேரமா மண்டைய,மண்டைய ஆட்டுறானேனு பக்கத்துல போயி இன்னானு கேட்டேன், "ஒடனே குழந்த பெத்துக்காதணே ஒரு ஆறு மாசமோ, ஒரு வருசமோ நல்ல என்ஜாய் பண்ணிட்டு அப்புறம் பெத்துக்கலாம்!" - னு சொல்லிட்டு இருக்கேன்னாப்புல!.

ஓங்கி பொச்சில மிதிச்சி தொரத்தி விட்டேன். இத படிக்கிற சிங்கிள்கள் தயவு செய்து எவனாவது சொன்ன அட்வைச கேட்டுட்டு அப்படி எதுவும் டிரை பண்ணிராதீங்க.

ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்னு சொன்ன "முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை!". காதலிக்கிறப்ப எண்ணெ தேச்சி தல வாருன மண்டையும், ரெத்தம் குடிச்ச வாயாட்டம் லிப்ஸ்டிக்கும், பேன் புழுத்த மண்டையில ரோசாப்பூவும் வெச்சிட்டு சுத்துன நம்ம காதலி - விரிச்சி போட்ட மண்டையோட வந்து தூங்கிட்டு இருக்குற நம்மள எழுப்பி "காப்பி" - ங்குறப்ப, அந்த அழகு தேவதையின் மகளா இவள்னு மொத்த பீயும் வெளிய வந்துரும். So, எதா இருந்தாலும் முதலிரவுக்கு ஜோசியர் நாள் குறிச்சி வெச்ச நேரத்துல கரண்டு போனாலும் பரவாயில்ல லாந்தர்லைட்ட கொளுத்தி வெச்சாவது சோலிய முடிச்சிரனும் இல்லனா, டிசம்பர் மாசம் 22ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பண்ணா குழந்த பொறக்க வாய்ப்புகள் அதிகமா இருக்குனு gynecology டாக்டர் நாள் குறிக்க வேண்டியதாயிரும்!.

கல்யாண வாழ்க்கையில இருக்குற ஒரே ACTION பிளாக்குனா அது மாமியார்-மருமகள் சண்டைதான். அவங்க ரெண்டுபேரும் அடிச்சிக்கிறதுல பலியாவுறது இன்னாவோ நாமதான்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை!.

Fast & furious - ச மிஞ்சிற அளவுக்கு அனல் பறக்கும் சண்டை காட்சிகள் நடக்குறப்ப ஆனானப்பட்ட ஆண் வர்க்கமாகிய நாம ஆழ்நிலை தியானத்துக்கு போயிடுறது நல்லது.

நடுநிலையா நக்குறேன்னு நீங்க பாட்டுக்கு பஞ்சாயத்து பண்ண கெளம்புனா "நேத்து வந்தவ பேச்ச கேட்டுட்டு என்னையவே திட்டுறியா!" - னு மம்மியும், "ஆயிரந்தான் இருந்தாலும் ஒங்க அம்மாவ நீ உட்டுகுடுக்க மாட்டியே!" - னு பொண்டாட்டியும் கய்வி, கய்வி ஊத்துவாய்ங்க!.

அப்போ கண்டுக்காம விட்டுட்டா எதும் பிரச்சனை இல்லையா..!?. அப்பவும் "ஒன் பொண்டாட்டி என்னைய அந்த கேள்வி கேக்குறா நீ இன்னானா காலாட்டிட்டு அமைதியா இருக்க!" - னு மம்மியும், ஒங்கம்மா திட்டும் போது வாய மூடிட்டு இருந்துட்டு இப்ப வந்து சோத்த போடு,கொளம்பு ஊத்துங்குறியா!" - னு பொண்டாட்டியும் திட்டுவாய்ங்க.

அப்போ இதுக்கு விடிவே இல்லையா..!?. சாரி பாஸ் ஒங்க நல்ல நேரம் முடிஞ்சி ரொம்ப வருசமாச்சி!.

அவசர தேவைக்கு பொண்டாட்டிக்கு தெரியாம கடன் வாங்கியிருப்போம். சொல்லப்போனா அத அவங்களுக்கேதான் செலவழிச்சிருப்போம். ஆனா அடுத்த மாசம் சம்பளத்த வாங்கி அவங்களுக்கே தெரியாம வாங்குன கடன திருப்பி குடுக்குற வரைக்கும் தோராயமா ஒரு பத்து பதினைஞ்சு பொய்யாவது சொல்லவேண்டி வரலாம். எதுக்கும் அலார்ட் ஆறுமுகமா, எரிமலை ஏகாம்பரமா இருக்கனும்!.

நம்ம சொந்த காரங்க வந்தா காப்பி போட நாலுவாட்டி அடுப்பங்கரைக்கும் பெட்ரூமுக்கும் நடக்குற வூட்டுக்காரம்மா அவங்க சொந்தகாரய்ங்க வந்தா அடுப்பங்கரையே பழினு கெடக்குறத நாம கண்டும் காணாம கடந்து போயிரனும். எதுத்து கேட்டு எதுவும் மாறப் போறதில்லை என்பதால் கடந்து செல்வோம் இல்லனா ஏறி மிதிச்சிட்டு போயிரும். "என்னங்க!" - னு ஆசையா கூப்புடுறப்ப நாம குடுக்குற அதே ரியாக்சன சண்ட நடக்குறப்ப வர்ற "நீ வா போ" - லயும் மெயிண்டெய்ன் பண்ண தெரிஞ்சா சிறந்த கணவருக்கான நோபல் பரிசு வீடு தேடி வரலாம்!.

"ரசத்துல உப்பே இல்ல என்ன ரசம் வெச்சிருக்க நீ..!?" - னு கேக்குறதுக்கு பதிலா "ரசம் செம்மையாக்கீது ஆனா லைட்டா உப்பு கம்மியா இருக்குறாப்புல இருக்குதே!" - னு பிட்ட போட்டாதான் குடும்ப சக்கரம் சுத்தும்.

"விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை, கெட்டுப் போனவர்கள் விட்டுக்கொடுத்ததில்லை!" - னு சொல்ற சீனப் பழமொழிக்கு ஏற்ப சீரும் சிறப்புமா வாழனும்னா விட்டுக்கொடுக்கனும். டக்குனு ஒன்னு சொல்றேன் பக்குனு மனசுல வெச்சிக்கோங்க "ஹெல்மட்டும் பொண்டாட்டியும் ஒன்னு ரெண்டையும் தூக்கி தல மேல வெச்சிகிட்டீங்கனா இந்த நாள் மட்டும் இல்ல இனி வரப்போற எல்லா நாளும் இனிய நாளே!".

*----------பெற்றது?----------*

     ரெண்டு பெண்ணு.மூத்த இளவரசி "VERONICA".& ரெண்டாவது இளவரசி "SANDRA MAGDALEN.

#ஆமென்.

https://m.facebook.com/story.php?story_fbid=1595222767242930&id=100002656669133

No comments:

Post a Comment