Wednesday, May 9, 2018

இனி முனியாண்டிகள் டாக்டராக முடியாது.

Devi somasundharam
Via Facebook
2018-05-09

சீனு ராமசாமி இயக்கி விஜய் சேதுபதி நடித்த "தர்மதுரை "படத்தில் ஒரு சீன் வரும்.

கிராமத்துலருந்து ஒரு பெரியவர் மருத்துவக் கல்லூரிக்கு வந்து ‘முனியாண்டி’ன்ற வாத்தியார தேடுவாரு.

பசங்களாம் அந்த பேர்ல எந்த வாத்தியாரும் இல்லனு அடிச்சு சொல்லுவாங்க. ஆனா அவர் இந்த காலேஜ்தானு உறுதியா சொல்லுவாரு. பசங்களாம் குழம்பிட்டு இருக்கும்போது அங்க அவங்களோட வாத்தியார் ‘காமராஜ்’ நடந்து போய்ட்டு இருப்பாரு. அவர பாத்து அந்த பெரியவர் ‘ஏ முனியாண்டி’னு கூப்ட்டு பேச ஆரம்பிப்பாரு. பசங்களாம் ஆச்சர்யமா பாப்பாங்க.

‘ஏ தம்பிகளா..இவருதான் எங்க முனியாண்டி. எங்க கிராமத்துலய மொதமொதல படிச்சு டாக்டர் ஆனவர்’னு அந்த பெரியவர் பெருமையா பேசிட்டே போவாரு. அப்பறம் அந்த பசங்க அத பத்தி வாத்தியார்ட்ட கேக்கும்போது, ‘என் உண்மையான பேரு முனியாண்டி தான். சாப்ட கூட காசு இல்லாத குடும்பம். அப்ப முதலமைச்சரா இருந்த காமராஜர் பள்ளிக்கூடத்துல இலவச சத்துணவு திட்டத்த கொண்டு வந்தாரு. சரி பள்ளிக்கூடத்துக்கு போனா ஒருவேள சாப்பாடாச்சும் கெடைக்குமேன்னு எங்கம்மா என்ன பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டாங்க. அப்படி போய் படிக்க ஆரம்பிச்சுதான் டாக்டர் ஆய்ட்டேன். அந்த நன்றிய மறக்கக் கூடாதுனு தான் அவர் பேர என் பேரா வச்சுகிட்டேன்’னு சொல்வாரு.

அந்த முனியாண்டியினால் ஈர்க்கப்பட்டுதான் தர்மதுரையும் மற்ற மாணவர்களும் வெளிநாட்டு வாய்ப்புகளை மறுத்து கிராமங்களில் 20 ரூபாய்க்கு முப்பது ரூபாய்க்கும் மருத்துவ சேவை செய்வதாய் நிறையும் படம்.

அப்படி சத்துணவுக்காக பள்ளியில் சேர்ந்து படிச்சு டாக்டரான அந்த முனியாண்டி நிச்சயம் ஸ்டேட் போர்டில் தான் படித்திருப்பார். நிச்சயம் ப்ளஸ் டூ முடித்தவுடன் கோச்சிங் க்ளாஸ் சென்றிருக்க மாட்டார். சோறு போட்ட காரணத்திற்காகவே பள்ளியில் சேர்ந்த முனியாண்டியால் கோவணத்தை உருவும் கோச்சிங் க்ளாஸில் சேர்ந்திருக்கவும் முடியாது.

அப்படி ஸ்டேட் போர்டில் படித்து டாக்டராகி, பல பேரை டாக்டராகவும் ஆக்கும் முனியாண்டிகளின் கனவுகளைத்தான் கொன்று புதைத்திருக்கிறது ‘நீட்’. இனி முனியாண்டிகள் டாக்டருக்கு படிக்கவும் முடியாது. படிக்க நினைக்கவும் முடியாது. முனியாண்டிகள் படிக்க முடியாது எனும்போதே வேறெந்த ஆண்டைகள் படிக்கலாம் என்பது புரிந்திருக்கும். சுருக்கமாக, கமுக்கமாக இதுதான் ‘நீட்’.

இன்று காலையிலிருந்து பகிரப்பட்டு வரும் Statistics விவரங்களைப் பாருங்கள். கிராமப்புற அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் 20க்கும் கீழே தான் தேர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.. ஸ்டேட் போர்டில் படித்த 8.22 லட்சம் மாணவர்களுக்கு 2,224 மருத்துவ இடங்கள். சி.பி.எஸ்.சி யில் படித்த 12 ஆயிரத்து 575 மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்கள்.

எந்தெந்த பிரிவுகள் போன வருடத்தை விட இந்த வருடம் அதிக இடங்கள் வந்திருக்கிறார்கள், குறைந்த இடங்கள் வந்திருக்கிறார்கள் என்று கவனியுங்கள். வருடக்கணக்கில் போராடிப் பெற்ற பிரதிநிதித்துவங்கள் எப்படி ஒரு நொடியில் உடைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

யாரெல்லாம் மருத்துவர் ஆகவேண்டும், முக்கியமாக யாரெல்லாம் மருத்துவர் ஆகக்கூடாது என்று வேறு யாரோ முடிவு செய்கிறார்கள் எனில் இதற்கும் குலக்கல்வி திட்டத்திற்கும் அப்படியென்ன பெரிய வேறுபாடு.

இன்று வெளியான நீட் மதிப்பெண் பட்டியலில் முதலிடம் வந்த மாணவர் சொல்கிறார். ‘நான் போன வருஷமே ப்ளஸ் டூ முடிச்சுட்டேன். ஒரு வருஷமா நீட் தேர்வுக்கு ப்ரிப்பேர் பண்ணேன். அப்படி எல்லாரும் பண்ணா ஈசியா தேர்வாகலாம்’.

எங்கள் முனியாண்டிகளால் அப்படி ஒரு வருஷம் வீட்டில் உட்கார்ந்து லட்சக்கணக்கில் பணம் கட்டி தயாராக முடியாது கணவான்களே... அப்படி செய்ய வேண்டுமானால் அந்த முனியாண்டிகளின் தகப்பன்கள் புஷ்டியான வேலைகளில் உழல வேண்டும். வீட்டில் தனியறையை மகன்களின் படிப்பிற்கு ஒதுக்கியிருக்க வேண்டும். கணிணி முதல் டேப்லெட் வரை எல்லாவற்றிலும் படிப்பு ஏறியிருக்க வேண்டும்.

ஆனால் முனியாண்டியின் அப்பன்கள் இன்னும் மூட்டை தூக்கிக் கொண்டும், சாக்கடை அள்ளிக்கொண்டும், இட்லிக்கடை வைத்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள். அந்த ஒரு வருடத்தில் இந்த முனியாண்டிகள் அப்பன் கடையில் எச்சில் தட்டுகளை கழுவவே வாய்ப்புகள் அதிகம்.

நிஜமாக வயிறெரிகிறது. கோபத்தில் கண்ணீர் வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு வந்த கோபம், கூட்டம் இதற்கு ஏன் வரவில்லை என்று குழப்பம் வருகிறது. தலைமுறை தலைமுறையாக நம் அடிவயிற்றில் அடிக்கும் இந்த பிரச்சினையை எதிர்த்து வீதிக்கு வீதி போராட்டக் களமாகியிருக்க வேண்டுமே? தேர்ந்தெடுத்து அரசாள அனுப்பியிருக்கும் அடிமைகளின் பதவிவெறியால், பதவிக்காக உள்ளங்காலில் கூட விழும் சுயநலத்தால், பல்லாண்டு காலம் போராடிப் பெற்ற உரிமைகள் சுமூகமாக கசக்கப்படுகிறது.

தகுதியற்ற படிப்பு என்று இகழப்படும் தமிழ்நாடுதான் உலகளவில் மிகச்சிறந்த மருத்துவ மாநிலமாக பேர் எடுத்திருக்கிறது. இந்திய அளவில் மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகத்தை நிலைநிறுத்தியது அந்த ‘தகுதியற்றவர்கள்’ படித்து வாங்கிய டாக்டர் பட்டங்கள்தான். பலர் கண்களை உறுத்திய இந்த சாதனை இப்போது கண்முன்னே தரைமட்டமாக இடிக்கப்படுகிறது.

இனி முனியாண்டிகள் டாக்டராகப் போவதில்லை. அதனால் இது முனுசாமிகள் பிரச்சினை என்று மட்டும் சாவதானமாக இருந்துவிடாதீர்கள்.
நாளை உங்கள் குண்டியில் ஊசி போட்டு பஞ்சு வைத்து தடவி விடும் மருத்துவன் ‘50 ரூபா கொடுங்க’ என்று கேட்க மாட்டான். வெளிய ‘பில் பே பண்ணிடுங்க’ என்பான். வெளியில் அமைக்கப்பட்டுள்ள ஏ.சி அறையில் உள்ள ஆணோ/பெண்ணோ ‘முதலில் ரிஜிஸ்டர் பண்ணனும். அப்பறம் டாக்டர் பீஸ். அப்பறம் ஊசி போட்டது. மொத்தம் நாலாயிரம்’ என்பாள்/ன். இதற்கெல்லாம் கோபப்பட்டு உங்கள் மகனிடம் ‘தம்பி நாளைக்கு நீ டாக்டர் ஆகி ஊருக்கெல்லாம் சேவை செய்யனும்டா’னு சொல்லத் தோன்றினாலும் சொல்ல முடியாது. அப்படி சொன்னாலும் அவன் டாக்டர் ஆக முடியாது என்பது உங்களுக்கு அப்போது உறைக்கும்...

#சுட்டது .

பதிவின் உரிமையாளர் பெயர் தெரியவில்லை .

https://m.facebook.com/story.php?story_fbid=174282220069471&id=100024630832918

No comments:

Post a Comment