Monday, July 31, 2017

யாதும் ஊரே யாவரும் கேளிர

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று தொடங்கும்
கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று (192) பாடலை மேற்கோள் காட்டியது அய்யா சுபவீ  அவர்களின் இன்றைய ஒரு நிமிடச் செய்தி.

oOo
அதிலும் இன்றைய இளையதலைமுறையினர் அந்தப் பாடலை  படிக்கவேண்டும் என்று  அய்யா சுபவீ  அவர்கள் கூறியதில் பல்வேறு காரணங்கள் இருக்கும்மென்றெ தோன்றுகிறது.

oOo
கருத்தாழம் கொண்டு பாயும் நதியான அந்தப் பாடலின் கனத்தை என் சிறிய சிந்தனைக் குடம்
முழுதும் தாங்கப் போவதில்லை.

oOo
உங்கள் சிந்தனைப் பாத்திரம் ஏற்கின்ற அளவில் நீங்கள் பருகிக்கொள்ளுங்கள்.

oOo
“யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. ”(புறம்: 192)

oOo
பொருள் :

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

Saturday, July 29, 2017

அன்புள்ள மகனுக்கு, கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்

கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....

இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க...

அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..

பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....

திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க....

அதான்...என்று இழுத்தாள்...

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.

மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க

என்னத்த சொல்ல..

ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா ..

அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?

போடி லூசு.. அவன் சிரித்தான்.

ஆனால் அதில் உயிரில்லை.

மெதுவாய் சொன்னான்..

நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....

அவன் இல்லையென தலையாட்டியபடியே

அவனது அலுவலக பையை திறந்தான்.

ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

என்னங்க இது ..

படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.

அவள் படிக்க தொடங்கினாள் ...

அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.

உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.

ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.

அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.

உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.

அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.

இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.

அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...

நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.

உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.

அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.

உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.

அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.

நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.

நாம தான் விளையாடுவோம்.

அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..

அதுல பாதி பொய் இருக்கும்..

அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.

அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..

அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.

ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.

இப்ப வெளியே போகனும்...

இப்படி வெளியே போகணும்னு..

ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன்.

நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....

நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.

அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.

காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...

இப்ப அவ எப்படி இருக்கானு கூட
அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....

ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்...

அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே

நீ ரொம்ப பிசியாகிட்ட..

நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...

சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..

நான் காத்திட்டு இருந்தேன்.

கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..

ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...

என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...

பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.

ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...

பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.

நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது

அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..

அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...

அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...

அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.

இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.

இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...

உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...

என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..

ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல

அதான் உன்கிட்ட சொல்றேன்.

நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...

சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..

அதனால தான் இப்ப சொல்றேன்.

உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...

காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..

ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.

அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு  அவர் பிசி....

அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..

அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல

ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..

பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத

உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...

இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.

நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.

இன்னும் சொல்லபோனா

நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..

அத கொஞ்சம் குறைச்சிக்கோ..

சீக்கிரம் வீட்டுக்கு வா.

பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...

அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....

ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...

ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?

செய்வேனு நம்புறேன்.

ஏன்னா என்கிட்ட  நல்லா பேசின பையன் தானே நீ...

உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள்.

அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.

நிமிர்ந்து அவனை பார்த்தாள்....

இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.

அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா?
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.

ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .

அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.

இனிமே அப்படித்தான்..

இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

படித்ததில் உறைத்தது.

Friday, July 28, 2017

இந்தியாவில் ஆட்சி புரிந்தவர்கள் - முஹம்மது கோரி முதல் மோடி வரை

இந்தியாவில்  ஆட்சி புரிந்தவர்களும்..ஆண்டும்....
முஹம்மது கோரி முதல் மோடி வரை....
👉
1193  : முஹம்மது கோரி
1206   :குத்புதீன் ஐபக்
1210   :ஆரம்ஷா
  1211  : அல்தமிஷ்
  1236  : ருக்னுத்தீன் ஷா
   1236  : ரஜியா சுல்தானா
    1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
     1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா
      1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத்
      1266  : கியாசுத்தீன் பில்பன்
       1286  : ரங்கிஷ்வர்
        1287  : மஜ்தன்கேகபாத்
         1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு "97 வருடம்)

கில்ஜி வம்சம்
1290 :1 ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292  :2 அலாவுதீன் கில்ஜி
  1316  :4ஷஹாபுதீன்  உமர் ஷா
   1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா
    1320  : நாஸிருத்தீன் குஸரு ஷா
( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)

துக்ளக்Thaglakவம்சம்

1320  :கியாசுத்தீன் துக்ளக்(1)
1325  : (2) முஹம்மது பின் துக்ளக்
1351  :(3) பெரோஸ்ஷா துக்ளக்
1388  : (4) கியாசுத்தீன் துக்ளக்
1389  : அபுபக்கர் ஷா
1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394  :அலெக்சாண்டர் ஷா(7)
1394  :(8) நாஸிருத்தீன் ஷா
1395  : நுஸ்ரத் ஷா
1399  :(10) நாநாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413  :(11)தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்
1414  :1.கஜர்கான்
1421  :2 . மெஹசுத்தீன் முபாரக் ஷா
1434  : 3.மு3 முஹம்மது ஷா
1445  :4 அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)

லோதி வம்ச ஆட்சி
1451  : பெஹ்லூல் லோதி
1489  : அலெக்சாண்டர் லோதி
1517  : இப்ராஹிம் லோதி
(லோதி ஆட்சி 75 வருடம்)

முகலியாஆட்சி

1526  : ஜஹிருத்தீன் பாபர்
1530 : ஹிமாயூன்

சூரி வமிச ஆட்சி
1539   : ஷேர்ஷா சூரி
1545  :அஸ்லம் ஷா சூரி
1552  :மெஹ்மூத் ஷா சூரி
1553   :இப்றாஹிம் சூரி
  1554  :பர்வேஸ் ஷா சூரி
1554 :முபாரக் கான் சூரி
1555 :அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)

முகலாயர் ஆட்சி
1555  :ஹிமாயூன்
1556  :ஜலாலுத்தீன் அக்பர்
1605  :ஜஹாங்கீர் சலீம்
  1628  :ஷா ஜஹான் 
   1659 : ஒளரங்கசீப்
   1707 :ஷாஹே ஆலம்
   1712  :பஹாத்தூர் ஷா
    1713 :பஹாரோகஷேர்
    1719  :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
  1754  :ஆலம்கீர்
   1759 :ஷாஹேஆலம்
   1806 :அக்பர் ஷா
    1837 :பஹதூர்ஷா ஜபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )

ஆங்கிலேயர் ஆட்சி

1858 : லார்டு கேங்க்
1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864 : லார்ட் ஜான் லோதேநஷ்
1869 :லார்டு ரிசர்டு
1872 :லார்டு நோடபக்
1876 ; லார்டுஎட்வர்ட்
1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884 :லார்டு டப்ரின்
1894 :  லார்டு ஹேஸ்டிங்
1899 : ஜார்ஜ் கர்னல்
1905: லார்டு கில்பர்ட்
1910 :லார்டு சார்லஸ்
  1916 :லார்ட் பிடரிக்
  1921 : லார்ட் ரக்ஸ்
   1926:.லார்ட் எட்வர்ட்
   1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
  1936 :லார்டு ஐ கே
   1943:லார்டு அரக்பேல்
     1947 : லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)

🇮🇳சுதந்திர இந்தியாவின் ஆட்சி🇮🇳

1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
1966:குல்சாரிலால் நந்தா
1966: இந்திராகாந்தி
1977: மொராஜி தேசாய்
1979: சரண்சிங்
1980:இந்திராகாந்தி
1984:ராஜீவ்காந்தி
1989:V P சிங்
1990:சந்திரசேகர்
1991:. P நரசிம்மராவ்
1992:A.B.வாஜ்பாய்
1996:  A.Jகொளடா
1997:L.K.குஜ்ரால்
1998:A.B.வாஜ்பாய்
2004 :மன்மோஹன்சிங்
2014:நரேந்திர மோடி

தேசம் என்றால் என்ன? தேச பக்தி என்றால் என்ன? துரோகம் என்றால் என்ன?

Kalai Marx
Via Facebook
2017-07-28

கேள்வி:
தேசம் என்றால் என்ன? தேச பக்தி என்றால் என்ன? துரோகம் என்றால் என்ன? (விமல்)

பதில்:
19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் தோன்றிய  முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன், தேசியம் என்ற புதிய கோட்பாடு உருவானது. தொழிற்புரட்சியின் விளைவாக, முதலாளிகளால் பெருமளவில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு தேசியம் அவசியமானது. ஆகவே, அது விரைவில் பேரினவாதமாக மாறியதில் வியப்பில்லை.

ஐரோப்பாவில் தேசியவாதக் கோட்பாடு தோன்றுவதற்கு முன்னர், எல்லா நாடுகளிலும்  மன்னராட்சி நிலவியது. குடியானவர்கள் (பிரஜைகள் அல்ல) கடவுளுக்கும், அவரது பூலோக பிரதிநிதியான மன்னருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்.

மன்னராட்சியை ஒழித்து விட்டு எழுந்த தேசிய அரசில், முன்னாள் குடியானவர்கள் பிரஜைகளாக தரம் உயர்த்தப் பட்டனர். ஆனால் அவர்கள் மன்னருக்கு பதிலாக தேசியத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப் பட்டது. அது "நாட்டுப் பற்று", "இனப் பற்று" என்று அழைக்கப் பட்டது.

தேசியம் பற்றிய கற்பிதம், தேசம் மீதான விசுவாசத்தைக் கோரியது. அதற்காக பொதுவான மொழியை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தேசத்திற்குள் வாழ்ந்த அனைத்து குடிமக்கள் மீதும் அந்த மொழி திணிக்கப் பட்டது. அதற்கு முன்னர், எழுத்தறிவற்ற காலத்தில் பல்வேறு பேச்சு மொழிகள் வழக்கில் இருந்தன.

மன்னராட்சிக் காலத்தில், மக்கள் மதத்திற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டியிருந்தது. ஒவ்வொரு பிரஜையும் மதத்தின் மீது பக்தி கொண்டவராக இருக்க வேண்டும். மதகுருக்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். தேசியவாதம் மதத்தின் அதிகாரத்தை எதிர்த்தே எழுந்தது. தேசியவாதிகள், மக்களிடம் மத நம்பிக்கைக்கு பதிலாக, தேசபக்தியை எதிர்பார்த்தார்கள்.

மண்ணுக்குரிய மக்கள் என்பது, தேசபக்தியை மத நம்பிக்கையில் இருந்து வேறு படுத்தியது. தேசியம் தோன்றிய சில நாடுகளில், தேசபக்தி பேரினவாதமாக உருவெடுத்தது. அன்றைய காலத்தில், மன்னருக்கு விசுவாசமானவர்கள்  தேசியத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அவர்கள் துரோகிகள் ஆனார்கள். 

அதே மாதிரி, ஒற்றைத் தேசியத்திற்குள் அடங்க மறுத்த, பேரினவாதத்தை எதிர்த்துநின்று போரிட்ட சிறுபான்மையினங்களை, தேசியத்திற்கு துரோகம் செய்பவர்களாக கருதினார்கள்.

(2011 ம் ஆண்டு, இலங்கையில் உள்ள சமூக விஞ்ஞான கல்வி வட்ட அங்கத்தவர்கள், முகநூலில் கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களில் ஒரு பகுதி. சில திருத்தங்களுடன் கூடிய மீள்பதிவு.)

----------------

Aranga Gunasekaran
Via Facebook
2017-07-28

அதெல்லாம் சரி.இப்போது தேசிய விடுதலைக் கோரிக்கை முற்போக்கானதா பிற்போக்கானதா?வேண்டுமா வேண்டாமா?நிலப்பிரபுத்துவ மன்னராட்சிகள் வீழ்த்தப்பட்டதை ஆதரிக்கிறீர்களா?முதலாளித்துவ ஆட்சியின் கேடுகளை எதிர்த்து சோசலிசம் நோக்கிய பயணத்தில் தேசியக் கோரிக்கை எழுவதை கம்யூனிஸ்ட் டுகள் எப்படி பார்க்க வேண்டும் என்று மார்க்சீய மூலவர்கள் சொல்லி இருக்கிறாகள்?முதலாளித்துவ சமூகத்தின் முந்தைய காலத்தில் செம்மை இலக்கண இலக்கியம் கண்ட மொழிகளே இல்லை யா?மன்னராட்சிகாலத்தை நினைத்து  பெருமிதம் கொள்கிறீர்களா? கொடுமையானது என்கிறீர்களா? மன்னராட்சிக் காலங்களில் எமது மக்கள் ஒடுக்கப்பட்ட சாதிகள் இன்றைய நிலைமையைவிட கொடூரமாக ஒடுக்கப்பட்டதை வரவேற்கிறீர்களா? மறுக்கிறீர்களா?வட்டார மொழிகளை மையப்படுத்தப்பட்ட பொது மொழியால் ஒடுக்கி மன்னராட்சி முற்பட்டதுதான் உண்மையென்றால் தமிழ் என்ற பெரும்பான்மை மக்களால் பேசப்பட்ட மொழியை சிலநூறு பேர் பேசிய சமஸ்கிருதம் அடிமை கொண்டது எவ்வாறு தோழர்?

—------------------------

//இப்போது தேசிய விடுதலைக் கோரிக்கை முற்போக்கானதா பிற்போக்கானதா?// இருபதாம் நூற்றாண்டில், தேசியவாதத்திலும் இடதுசாரி, வலதுசாரி பிரிவினை உருவானது. மூர்க்கத் தனமாக இனம், மொழி, புராதன பண்பாடு என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்தவர்கள் வலதுசாரி தேசியவாதிகள் ஆனார்கள். அவர்கள் தமது இயக்கத்தின் நிதித் தேவைக்காக முதலாளிகளை நண்பர்களாக்கிக் கொண்டார்கள். அதற்கு மாறாக இடதுசாரித் தேசியவாதம் இருந்தது. அது காலனியாதிக்கத்தை எதிர்த்து உருவானது. அது ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்தது. ஆரம்ப காலத்தில் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின்.... பின்னர் அமெரிக்கா... ஏகாதிபத்திய எதிர்ப்புக் காரணமாக சுயசார்புப் பொருளாதாரத்தை ஊக்குவித்தனர். உதாரணம்: இன்று வட கொரியா இடதுசாரி தேசியவாதக் கொள்கையை பின்பற்றுகிறது.

--

//நிலப்பிரபுத்துவ மன்னராட்சிகள் வீழ்த்தப்பட்டதை ஆதரிக்கிறீர்களா?// நான் எங்கே ஆதரித்தேன்? அது வரலாற்று நியதி. "எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடந்தது." மன்னராட்சியை வீழ்த்தியதில் முதலாளித்துவம் முற்போக்கு பாத்திரம் வகித்தது. ஆனால், அதற்குப் பிறகு மூலதன சர்வாதிகாரத்தை கொண்டு வந்தது. இதையெல்லாம் மறுக்க முடியாது.

--

//முதலாளித்துவ ஆட்சியின் கேடுகளை எதிர்த்து சோசலிசம் நோக்கிய பயணத்தில் தேசியக் கோரிக்கை எழுவதை கம்யூனிஸ்ட் டுகள் எப்படி பார்க்க வேண்டும் என்று மார்க்சீய மூலவர்கள் சொல்லி இருக்கிறாகள்?// இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன். இடதுசாரி தேசியவாதம் பற்றிய விளக்கத்தை திரும்பவும் வாசிக்கவும். அதை ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்த நாடுகள் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. உதாரணத்திற்கு: லிபியா (கடாபி அங்கு இஸ்லாம், மார்க்சியம் கலந்த புதிய கோட்பாட்டை உருவாக்கி இருந்தார்.), வட கொரியா (கிம் இல் சுங் அங்கு மார்க்சியம், கொரிய தேசியவாதம் கலந்த ஜூச்சே தத்துவம் உருவாக்கி இருந்தார்.) அதே மாதிரி இன்னும் சில நாடுகள் இருந்தன. முன்பு அல்ஜீரியா, தற்போது வெனிசுவேலா. இவை எல்லாம் இடதுசாரி தேசியவாத நாடுகள். அதே மாதிரி இயக்கங்களும் உள்ளன. ஸ்பெயினில் பாஸ்க் விடுதலை இயக்கம். துருக்கியில் குர்திஷ் விடுதலை இயக்கம்.

--

//முதலாளித்துவ சமூகத்தின் முந்தைய காலத்தில் செம்மை இலக்கண இலக்கியம் கண்ட மொழிகளே இல்லை யா?//  இருந்தன. மறுக்கவில்லை. அதற்காக உரிமை கோருவதில் அர்த்தம் இல்லை.
அது அனைத்து மக்களினதும் முயற்சியில் உருவானது. செம் மொழி மட்டுமல்ல விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தான். நான் தான்... நான் தான்... என்று உரிமை கோரும் தனிநபர் வாதம் சுயநலத்தில் இருந்து எழுகிறது. மேலும் உலகில் உள்ள எல்லா தேசியவாதிகளும் தமது மொழி குறித்து பெருமிதம் கொள்வார்கள். சில மாதங்களுக்கு முன்னர் என்னுடன் பேசிய குஜராத்திக் காரர் சொன்னார். உலகில் எல்லா மொழிகளும் குஜராத்தி மொழியில் இருந்து உருவானது என்று தமது தேசியவாதிகள் சொல்லிக் கொள்வார்களும். பஞ்சாப்பி நண்பர் ஒருவரும் இதே மாதிரி தகவலை கூறினார்.

--

//மன்னராட்சிகாலத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறீர்களா? கொடுமையானது என்கிறீர்களா? மன்னராட்சிக் காலங்களில் எமது மக்கள் ஒடுக்கப்பட்ட சாதிகள் இன்றைய நிலைமையைவிட கொடூரமாக ஒடுக்கப்பட்டதை வரவேற்கிறீர்களா? மறுக்கிறீர்களா?// இதற்கு நான் ஏற்கனவே பதிலளித்து விட்டேன். மன்னராட்சியை ஒழித்து விட்டு, அந்த இடத்தில் தேசியவாதம் வந்தது. அதற்காக நான் மன்னராட்சியை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. இது தவறான புரிதல். வரலாறு அப்படி இருந்தது என்று தான் சொல்லி இருக்கிறேன்.

--

//வட்டார மொழிகளை மையப்படுத்தப்பட்ட பொது மொழியால் ஒடுக்கி மன்னராட்சி முற்பட்டதுதான் உண்மையென்றால் தமிழ் என்ற பெரும்பான்மை மக்களால் பேசப்பட்ட மொழியை சிலநூறு பேர் பேசிய சமஸ்கிருதம் அடிமை கொண்டது எவ்வாறு தோழர்?// இங்கு நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மன்னராட்சி காலத்தில் ஒரு குறிப்பிட்ட ராஜ்ஜியத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் ஒரே மொழியை பேசவில்லை. அது ஒரு கற்பனை. இன்றைய தேசியவாதிகள் அப்படி நினைத்துக் கொள்கிறார்கள். அது உண்மை அல்ல. அவை வட்டார மொழிகளா, தனிப்பட்ட மொழிகளா என்பதும் சர்ச்சைக்குரியது. உதாரணத்திற்கு, போர்த்துக்கீசு மொழி ஸ்பானிஷ் மொழியின் வட்டார மொழி போன்றிருக்கும். அகனால், அது தனியான மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் அரசியல் தான் காரணம். அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைத்தால் ஒன்றை வட்டார மொழி ஆக்குவார்கள், அல்லது தனியான மொழி ஆக்குவார்கள்.

--

//தமிழ் என்ற பெரும்பான்மை மக்களால் பேசப்பட்ட மொழியை சிலநூறு பேர் பேசிய சமஸ்கிருதம்// இதுவும் தேசியவாதிகளின் கோணத்தில் இருந்து தான் பார்க்கப் படுகின்றது. சமஸ்கிருதம் மட்டுமல்ல தமிழ் கூட "சில நூறு பேர்களால் மட்டும்" பேசப் பட்ட மொழி தான். அதாவது, அரச சபையில் பேசப் பட்ட மொழி. புலவர்கள் மாதிரி கல்வியறிவு கொண்டவர்கள் பேசிய மொழி. பொது மக்களும் அதையே பேசினார்கள் என்பது ஒரு கற்பனை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தமிழ், சமஸ்கிருதம், சிங்களம், லத்தீன், கிரேக்க மொழி எல்லாம் அப்படித் தான். குறிப்பிட்டளவு மேல்தட்டு வர்க்கத்தினரால் மட்டுமே பேசப் பட்டது. பிற்காலத்தில் தான் அவை யாவும் அனைத்துப் பொது மக்களினதும் மொழி ஆகின. உலகம் முழுவதும் அப்படித் தான்.