Thursday, July 6, 2017

ஜுனைத்

Rajasangeethan john
Via Facebook
2017-06-25

நாம் தோற்று விட்டோமென்றுதான் சொல்ல வேண்டும். நாம் நம்பியிருந்த எல்லா சக்திகளும் கைவிட்டு விட்டன. நமக்கு முன்னே நீண்டு கிடப்பது வெறு பாழ் மட்டுமே. ஆம், இப்பதிவை முழுக்க அவநம்பிக்கையுடன் கையறுநிலையில் இருந்து எழுதுகிறேன்.
‍‍‍‍‍‍ ‍‍
ஜுனைத்!
‍‍‍‍‍‍ ‍‍
தன் குடும்பத்துடன் ரம்ஜான் கொண்டாட கனவுகளுடன் கிளம்பியவன். ரம்ஜான் இன்னும் வரவில்லை. வந்தாலும் கொண்டாட அவன் இன்று இல்லை. 16 வயது. ஹரியானாவில் உள்ள கிராமத்துக்கு டெல்லியிலிருந்து செல்லும் வழியில் கொல்லப்பட்டிருக்கிறான்.
‍‍‍‍‍‍ ‍‍
சகோதரன் மற்றும் நண்பர்கள் என நால்வராக ரயிலில் பயணித்திருக்கிறார்கள். 15-லிருந்து 20 பேர் வரை ஒரு கும்பல் ஒரு நிறுத்தத்தில் ஏறி இருக்கிறது. அமர்ந்திருந்த நால்வரையும் எழ சொல்லி இருக்கின்றனர். இவர்கள் மறுக்க, ஜுனைத்தை அவர்கள் தள்ளிவிட்டிருக்கின்றனர். 'தேசவிரோதி', 'மாட்டுக்கறி தின்பவர்கள்' என கத்தி இருக்கின்றனர். தொப்பிகளை கழற்றி எறிந்திருக்கின்றனர். தாடியை பிடித்து இழுத்திருக்கின்றனர். நால்வரையும் அடிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
‍‍‍‍‍‍ ‍‍
நால்வரும் துக்ளக்காபாத்தில் இறங்கி அடுத்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறியிருக்கின்றனர். நால்வரில் ஒருவரான ஹஷிம், தன் சகோதரர் ஷகீருக்கு போன் செய்து நிலவரத்தை சொல்லி பாலாப்கர்க் ஸ்டேஷனில் வந்து தங்களை அழைத்து செல்லுமாறு சொல்லி இருக்கிறார்.
‍‍‍‍‍‍ ‍‍
பாலப்கர்க் ஸ்டேஷனில் அடித்த கும்பல் இந்த கம்பார்ட்மெண்ட்டிலும் வந்து ஏறி நால்வரையும் இறங்க விடாமல் கத்தியுடன் மறித்திருக்கிறது. மவுசின் என்பவர் கும்பலை தாண்டி குதித்துவிட்டார். ஜுனைத், மோய்ன் மற்றும் ஹஷிம் உள்ள மாட்டி கொள்கிறார்கள். ரயில் கதவை கும்பல் பூட்டுகிறது. கும்பலின் நான்கு பேர், ஜுனைத்தை பிடித்து கொள்ள ஒருவன் ஜுனைத்தின் நெஞ்சில் பல முறை கத்தியால் குத்துகிறான். தடுக்க முயன்ற ஹஷிமையும் பிடித்து, பின் தோள்பட்டையில் மூன்று முறை கத்தியால் குத்தியிருக்கிறார்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
நடந்த சம்பவம் இதுதான். இங்கு எங்கும் 'மாட்டு கறி எடுத்து சென்றார்கள்' என்ற தகவல் இல்லை. ஆனால் இன்று ஊடகத்தில் 'மாட்டுக்கறி கொண்டு சென்ற இஸ்லாமிய சிறுவன் கொல்லப்பட்டார்' என செய்தி ஓடி கொண்டிருக்கிறது. ஆக 'இஸ்லாமியன் என்றால் அவன் தீவிரவாதி' என நினைக்க வைத்தது போல், இப்போது 'இஸ்லாமியன் என்றால் மாட்டுக்கறி கையில் வைத்திருப்பான்' என்ற பொதுப்புத்தி உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அக்லக் கொல்லப்பட்டதும் இப்படித்தான்.
‍‍‍‍‍‍ ‍‍
இங்கு யார் எதிரி?
‍‍‍‍‍‍ ‍‍
சம்பவத்தை விவரித்த ஹஷிம் சொன்ன முக்கியமான விஷயத்தை கடைசியாக சொல்கிறேன்.
‍‍‍‍‍‍ ‍‍
என்னை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில், மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி, தேசவிரோதி என சத்தம் போட்டு என்னை கொல்லலாம். ஆரிய தீவிரவாதத்துக்கு துணை போகிறவர்கள் எல்லா இடங்களுக்கும் வந்து விட்டார்கள். உங்கள் பக்கத்திலேயே கூட இருக்கலாம்.
‍‍‍‍‍‍ ‍‍
இஸ்லாமிய நாடுகளிடம் உதவி கேட்கிறீர்களா? சவுதியிடம் வணிக நட்பு பாராட்டுகிறோம். அரசை மீறி எந்த இஸ்லாமிய அரசும் ஒன்றும் செய்துவிட முடியாது. மனித நேய மீறல் என அமெரிக்காவிடம் மண்டியிட போகிறீர்களா? ஐ நா? அமெரிக்கா, உலக வங்கி, ரஷ்யா என எல்லாருக்கும் வேண்டியதை செய்து கொடுத்து கொண்டுதான் நம்மை கொன்று கொண்டிருக்கிறார்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, பெரியாரிஸ்ட்? யாருக்கு இவர்களை எதிர்கொள்ள திட்டம் இருக்கிறது? மூன்று வருடங்களில் எத்தனை எத்தனை உயிர்கள் நிஜத்திலும் பொருளாதார ரீதியிலும் பறி போயிருக்கின்றன? என்ன செய்து விட்டார்கள்? என்ன செய்து விட்டோம்?
‍‍‍‍‍‍ ‍‍
இஸ்லாமியன், கிறித்துவன், தலித், கம்யூனிஸ்ட், நாத்திகன், பெரியாரிஸ்ட், முற்போக்குவாதி, பெண், பழங்குடியினன். ஏழை என இந்த நாட்டை பல எதிரிகளாக கூறு போட்டு வைத்துவிட்டார்கள். மனித வன்முறைக்கு இடமும் கொடுத்துவிட்டார்கள். இனி வெறும் வன்முறையும் மரணங்களும்தான் நிகழும்.
‍‍‍‍‍‍ ‍‍
நாம் நம்பியிருந்த எல்லாமும் வீண். சார்ந்திருந்த எல்லா சக்திகளும் கைவிட்டு விட்டன. இப்பதிவை முழுக்க அவநம்பிக்கையுடன் கையறுநிலையில் இருந்து எழுதுகிறேன்.
‍‍‍‍‍‍ ‍‍
ஹஷிம் சொன்ன முக்கியமான விஷயம்: "வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சக பயணிகளில் எவரும் உதவ முன்வரவில்லை. அதற்கு பதில், 'அவர்கள் எல்லாரையும் முடித்து கட்டுங்கள்' என சொல்லி கொண்டிருந்தனர்"

No comments:

Post a Comment