Friday, July 7, 2017

ஒரு படைப்பை விமர்சிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

வினாயக முருகன்
Via Facebook
2017-07-07

பலமுறை சொன்னதுதான். தமிழில் தேர்ந்த விமர்சகர்கள் இல்லை.

ஒரு நாவலை படித்தால் அந்த நாவலில் என்ன தவறு நடந்துள்ளது?

கதாபாத்திரங்கள் நேர்த்தி எப்படி உள்ளது?

அவர்களின் உரையாடல் எப்படி வந்துள்ளது?

நாவலுக்கான தரவுகளில் என்ன தகவல் பிழை உள்ளது?

வர்ணனைகள் பொருத்தமற்று உள்ளதா? கதபாத்திரங்களின் அகவுலகம் மனவோட்டம் எப்படி உள்ளது? புறவுலகில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் நாவலின் மையத்தையொட்டி வருகிறதா? நாவலின்  மையப்பாத்திரம் எப்படி படைக்கப்பட்டுள்ளது. துணை பாத்திரங்கள் மையப்பாத்திரத்தோடு எப்படி பொருந்திச்செல்கின்றன. ஆண், பெண் கதாபாத்திரங்கள் எப்படி படைக்கப்பட்டுள்ளன. அவர்களின் இயல்பையொட்டி உரையாடல்கள் இருக்கின்றனவா? இது போன்று பலவும் இதை தாண்டி இன்னும் அதிகமாகவும் ஒரு விமர்சனத்தில் எழுதலாம். இதை எல்லாம் செய்ய குறைந்தப்பட்ச உழைப்பு ஒன்று தேவைப்படும். ஒரு நாவலை எழுத குறைந்தது ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் தேவைப்படும். அந்த நாவலை படித்துமுடிக்க குறைந்து இரண்டு நாட்களிலிருந்து ஒரு வாரம்  தேவைப்படும். அந்த நாவலை பற்றிய இரண்டு மூன்று பக்கங்களுக்கு விமர்சனம் எழுத குறைந்தது இரண்டு நாள் உழைப்பு தேவைப்படும். உழைப்பின் மீது நம்பிக்கையற்ற கூட்டம் சமீபத்தில் அதிகரித்து வருகிறதை பலமுறை எழுதியுள்ளேன். இப்போதெல்லாம் ஒரு நாவலை படித்துக்கொண்டிருக்கிறேன் என்று பேஸ்புக்கில் பதிவு எழுதுவதே ஒரு விமர்சனம்தான். அதற்கு நூறு லைக்குகள் விழுகின்றன. (ஆனால் அந்த நூறுபேரும் அந்த நூலை வாங்கி படிக்கமாட்டார்கள் என்பது வேறு விஷயம்). ஒருவர் எழுதிய எந்த புத்தகத்தையும் படிக்காமல் அவர் மொக்கை என்று பேஸ்புக்கில் எழுதிவிடலாம். யாரும் உங்களிடம் வந்து நீங்க அதை படிச்சீங்களா? என்று ஆதாரம் கேட்கப்போவதில்லை. அதுபோல ஒரு புத்தகத்தை கையில் வைத்து போட்டோ போட்டு அதை நாம் படித்துவிட்டோம் என்றும் பேஸ்புக்கில் நிரூபித்துவிடலாம். இதை பற்றியும் யாரும் கேள்விகேட்க முடியாது. படைப்பை பற்றிய விரிவான விமர்சனம் வரவேண்டுமென்றுதான் எந்த படைப்பாளியும் நினைப்பான். நல்ல விமர்சனம் வரும்போது அது எழுதுபவர்களுக்கு எழுத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும். ஆனால் இப்போதெல்லாம் சூப்பர் என்றோ, செம என்றோ மொக்கை என்றோ ஒருவரியில் பாராட்டி அல்லது மட்டையடி அடித்துச்செல்லும் கருத்துகள்தான் பேஸ்புக்கில் பரபரப்பாக சேல்ஸ் ஆகின்றன.

No comments:

Post a Comment