Friday, July 28, 2017

தேசம் என்றால் என்ன? தேச பக்தி என்றால் என்ன? துரோகம் என்றால் என்ன?

Kalai Marx
Via Facebook
2017-07-28

கேள்வி:
தேசம் என்றால் என்ன? தேச பக்தி என்றால் என்ன? துரோகம் என்றால் என்ன? (விமல்)

பதில்:
19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் தோன்றிய  முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன், தேசியம் என்ற புதிய கோட்பாடு உருவானது. தொழிற்புரட்சியின் விளைவாக, முதலாளிகளால் பெருமளவில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு தேசியம் அவசியமானது. ஆகவே, அது விரைவில் பேரினவாதமாக மாறியதில் வியப்பில்லை.

ஐரோப்பாவில் தேசியவாதக் கோட்பாடு தோன்றுவதற்கு முன்னர், எல்லா நாடுகளிலும்  மன்னராட்சி நிலவியது. குடியானவர்கள் (பிரஜைகள் அல்ல) கடவுளுக்கும், அவரது பூலோக பிரதிநிதியான மன்னருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்.

மன்னராட்சியை ஒழித்து விட்டு எழுந்த தேசிய அரசில், முன்னாள் குடியானவர்கள் பிரஜைகளாக தரம் உயர்த்தப் பட்டனர். ஆனால் அவர்கள் மன்னருக்கு பதிலாக தேசியத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப் பட்டது. அது "நாட்டுப் பற்று", "இனப் பற்று" என்று அழைக்கப் பட்டது.

தேசியம் பற்றிய கற்பிதம், தேசம் மீதான விசுவாசத்தைக் கோரியது. அதற்காக பொதுவான மொழியை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தேசத்திற்குள் வாழ்ந்த அனைத்து குடிமக்கள் மீதும் அந்த மொழி திணிக்கப் பட்டது. அதற்கு முன்னர், எழுத்தறிவற்ற காலத்தில் பல்வேறு பேச்சு மொழிகள் வழக்கில் இருந்தன.

மன்னராட்சிக் காலத்தில், மக்கள் மதத்திற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டியிருந்தது. ஒவ்வொரு பிரஜையும் மதத்தின் மீது பக்தி கொண்டவராக இருக்க வேண்டும். மதகுருக்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். தேசியவாதம் மதத்தின் அதிகாரத்தை எதிர்த்தே எழுந்தது. தேசியவாதிகள், மக்களிடம் மத நம்பிக்கைக்கு பதிலாக, தேசபக்தியை எதிர்பார்த்தார்கள்.

மண்ணுக்குரிய மக்கள் என்பது, தேசபக்தியை மத நம்பிக்கையில் இருந்து வேறு படுத்தியது. தேசியம் தோன்றிய சில நாடுகளில், தேசபக்தி பேரினவாதமாக உருவெடுத்தது. அன்றைய காலத்தில், மன்னருக்கு விசுவாசமானவர்கள்  தேசியத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அவர்கள் துரோகிகள் ஆனார்கள். 

அதே மாதிரி, ஒற்றைத் தேசியத்திற்குள் அடங்க மறுத்த, பேரினவாதத்தை எதிர்த்துநின்று போரிட்ட சிறுபான்மையினங்களை, தேசியத்திற்கு துரோகம் செய்பவர்களாக கருதினார்கள்.

(2011 ம் ஆண்டு, இலங்கையில் உள்ள சமூக விஞ்ஞான கல்வி வட்ட அங்கத்தவர்கள், முகநூலில் கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களில் ஒரு பகுதி. சில திருத்தங்களுடன் கூடிய மீள்பதிவு.)

----------------

Aranga Gunasekaran
Via Facebook
2017-07-28

அதெல்லாம் சரி.இப்போது தேசிய விடுதலைக் கோரிக்கை முற்போக்கானதா பிற்போக்கானதா?வேண்டுமா வேண்டாமா?நிலப்பிரபுத்துவ மன்னராட்சிகள் வீழ்த்தப்பட்டதை ஆதரிக்கிறீர்களா?முதலாளித்துவ ஆட்சியின் கேடுகளை எதிர்த்து சோசலிசம் நோக்கிய பயணத்தில் தேசியக் கோரிக்கை எழுவதை கம்யூனிஸ்ட் டுகள் எப்படி பார்க்க வேண்டும் என்று மார்க்சீய மூலவர்கள் சொல்லி இருக்கிறாகள்?முதலாளித்துவ சமூகத்தின் முந்தைய காலத்தில் செம்மை இலக்கண இலக்கியம் கண்ட மொழிகளே இல்லை யா?மன்னராட்சிகாலத்தை நினைத்து  பெருமிதம் கொள்கிறீர்களா? கொடுமையானது என்கிறீர்களா? மன்னராட்சிக் காலங்களில் எமது மக்கள் ஒடுக்கப்பட்ட சாதிகள் இன்றைய நிலைமையைவிட கொடூரமாக ஒடுக்கப்பட்டதை வரவேற்கிறீர்களா? மறுக்கிறீர்களா?வட்டார மொழிகளை மையப்படுத்தப்பட்ட பொது மொழியால் ஒடுக்கி மன்னராட்சி முற்பட்டதுதான் உண்மையென்றால் தமிழ் என்ற பெரும்பான்மை மக்களால் பேசப்பட்ட மொழியை சிலநூறு பேர் பேசிய சமஸ்கிருதம் அடிமை கொண்டது எவ்வாறு தோழர்?

—------------------------

//இப்போது தேசிய விடுதலைக் கோரிக்கை முற்போக்கானதா பிற்போக்கானதா?// இருபதாம் நூற்றாண்டில், தேசியவாதத்திலும் இடதுசாரி, வலதுசாரி பிரிவினை உருவானது. மூர்க்கத் தனமாக இனம், மொழி, புராதன பண்பாடு என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்தவர்கள் வலதுசாரி தேசியவாதிகள் ஆனார்கள். அவர்கள் தமது இயக்கத்தின் நிதித் தேவைக்காக முதலாளிகளை நண்பர்களாக்கிக் கொண்டார்கள். அதற்கு மாறாக இடதுசாரித் தேசியவாதம் இருந்தது. அது காலனியாதிக்கத்தை எதிர்த்து உருவானது. அது ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்தது. ஆரம்ப காலத்தில் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின்.... பின்னர் அமெரிக்கா... ஏகாதிபத்திய எதிர்ப்புக் காரணமாக சுயசார்புப் பொருளாதாரத்தை ஊக்குவித்தனர். உதாரணம்: இன்று வட கொரியா இடதுசாரி தேசியவாதக் கொள்கையை பின்பற்றுகிறது.

--

//நிலப்பிரபுத்துவ மன்னராட்சிகள் வீழ்த்தப்பட்டதை ஆதரிக்கிறீர்களா?// நான் எங்கே ஆதரித்தேன்? அது வரலாற்று நியதி. "எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடந்தது." மன்னராட்சியை வீழ்த்தியதில் முதலாளித்துவம் முற்போக்கு பாத்திரம் வகித்தது. ஆனால், அதற்குப் பிறகு மூலதன சர்வாதிகாரத்தை கொண்டு வந்தது. இதையெல்லாம் மறுக்க முடியாது.

--

//முதலாளித்துவ ஆட்சியின் கேடுகளை எதிர்த்து சோசலிசம் நோக்கிய பயணத்தில் தேசியக் கோரிக்கை எழுவதை கம்யூனிஸ்ட் டுகள் எப்படி பார்க்க வேண்டும் என்று மார்க்சீய மூலவர்கள் சொல்லி இருக்கிறாகள்?// இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன். இடதுசாரி தேசியவாதம் பற்றிய விளக்கத்தை திரும்பவும் வாசிக்கவும். அதை ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்த நாடுகள் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. உதாரணத்திற்கு: லிபியா (கடாபி அங்கு இஸ்லாம், மார்க்சியம் கலந்த புதிய கோட்பாட்டை உருவாக்கி இருந்தார்.), வட கொரியா (கிம் இல் சுங் அங்கு மார்க்சியம், கொரிய தேசியவாதம் கலந்த ஜூச்சே தத்துவம் உருவாக்கி இருந்தார்.) அதே மாதிரி இன்னும் சில நாடுகள் இருந்தன. முன்பு அல்ஜீரியா, தற்போது வெனிசுவேலா. இவை எல்லாம் இடதுசாரி தேசியவாத நாடுகள். அதே மாதிரி இயக்கங்களும் உள்ளன. ஸ்பெயினில் பாஸ்க் விடுதலை இயக்கம். துருக்கியில் குர்திஷ் விடுதலை இயக்கம்.

--

//முதலாளித்துவ சமூகத்தின் முந்தைய காலத்தில் செம்மை இலக்கண இலக்கியம் கண்ட மொழிகளே இல்லை யா?//  இருந்தன. மறுக்கவில்லை. அதற்காக உரிமை கோருவதில் அர்த்தம் இல்லை.
அது அனைத்து மக்களினதும் முயற்சியில் உருவானது. செம் மொழி மட்டுமல்ல விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தான். நான் தான்... நான் தான்... என்று உரிமை கோரும் தனிநபர் வாதம் சுயநலத்தில் இருந்து எழுகிறது. மேலும் உலகில் உள்ள எல்லா தேசியவாதிகளும் தமது மொழி குறித்து பெருமிதம் கொள்வார்கள். சில மாதங்களுக்கு முன்னர் என்னுடன் பேசிய குஜராத்திக் காரர் சொன்னார். உலகில் எல்லா மொழிகளும் குஜராத்தி மொழியில் இருந்து உருவானது என்று தமது தேசியவாதிகள் சொல்லிக் கொள்வார்களும். பஞ்சாப்பி நண்பர் ஒருவரும் இதே மாதிரி தகவலை கூறினார்.

--

//மன்னராட்சிகாலத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறீர்களா? கொடுமையானது என்கிறீர்களா? மன்னராட்சிக் காலங்களில் எமது மக்கள் ஒடுக்கப்பட்ட சாதிகள் இன்றைய நிலைமையைவிட கொடூரமாக ஒடுக்கப்பட்டதை வரவேற்கிறீர்களா? மறுக்கிறீர்களா?// இதற்கு நான் ஏற்கனவே பதிலளித்து விட்டேன். மன்னராட்சியை ஒழித்து விட்டு, அந்த இடத்தில் தேசியவாதம் வந்தது. அதற்காக நான் மன்னராட்சியை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. இது தவறான புரிதல். வரலாறு அப்படி இருந்தது என்று தான் சொல்லி இருக்கிறேன்.

--

//வட்டார மொழிகளை மையப்படுத்தப்பட்ட பொது மொழியால் ஒடுக்கி மன்னராட்சி முற்பட்டதுதான் உண்மையென்றால் தமிழ் என்ற பெரும்பான்மை மக்களால் பேசப்பட்ட மொழியை சிலநூறு பேர் பேசிய சமஸ்கிருதம் அடிமை கொண்டது எவ்வாறு தோழர்?// இங்கு நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மன்னராட்சி காலத்தில் ஒரு குறிப்பிட்ட ராஜ்ஜியத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் ஒரே மொழியை பேசவில்லை. அது ஒரு கற்பனை. இன்றைய தேசியவாதிகள் அப்படி நினைத்துக் கொள்கிறார்கள். அது உண்மை அல்ல. அவை வட்டார மொழிகளா, தனிப்பட்ட மொழிகளா என்பதும் சர்ச்சைக்குரியது. உதாரணத்திற்கு, போர்த்துக்கீசு மொழி ஸ்பானிஷ் மொழியின் வட்டார மொழி போன்றிருக்கும். அகனால், அது தனியான மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் அரசியல் தான் காரணம். அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைத்தால் ஒன்றை வட்டார மொழி ஆக்குவார்கள், அல்லது தனியான மொழி ஆக்குவார்கள்.

--

//தமிழ் என்ற பெரும்பான்மை மக்களால் பேசப்பட்ட மொழியை சிலநூறு பேர் பேசிய சமஸ்கிருதம்// இதுவும் தேசியவாதிகளின் கோணத்தில் இருந்து தான் பார்க்கப் படுகின்றது. சமஸ்கிருதம் மட்டுமல்ல தமிழ் கூட "சில நூறு பேர்களால் மட்டும்" பேசப் பட்ட மொழி தான். அதாவது, அரச சபையில் பேசப் பட்ட மொழி. புலவர்கள் மாதிரி கல்வியறிவு கொண்டவர்கள் பேசிய மொழி. பொது மக்களும் அதையே பேசினார்கள் என்பது ஒரு கற்பனை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தமிழ், சமஸ்கிருதம், சிங்களம், லத்தீன், கிரேக்க மொழி எல்லாம் அப்படித் தான். குறிப்பிட்டளவு மேல்தட்டு வர்க்கத்தினரால் மட்டுமே பேசப் பட்டது. பிற்காலத்தில் தான் அவை யாவும் அனைத்துப் பொது மக்களினதும் மொழி ஆகின. உலகம் முழுவதும் அப்படித் தான்.

No comments:

Post a Comment