Monday, July 24, 2017

பெரியார் குடியரசில் 'பார்ப்பனர் இட ஒதுக்கீடு கேட்கும் காலம் விரைவில் வரும்' என எழுதியது இன்று உண்மையாகி விட்டது

அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்? என சம்ஸ் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

அதில் திராவிடம் என்பதே பெருஞ்சுமை, அந்தப் பெயரைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

வெறும் நிலப்பரப்பைக் கொண்டு மட்டுமே திராவிடம்/திராவிடர் என்ற சொல் தோன்றவில்லை. அது ஒரு குறிச் சொல். அயோத்திதாசர் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கப் பயன்படுத்தினார். பெரியார் ஆரியப் பண்பாட்டிற்கு எதிரான ஒரு குறிச் சொல்லாய் அப்போதைய சென்னை மாகாணத்திலிருந்த பார்ப்பனரல்லாதவரைக் குறிக்கப் பயன்படுத்தினார். அரசியல் விடுதலை என வரும் போது 'தமிழ் நாடு தமிழர்க்கே ' என முழங்கினாலும் சமூக விடுதலை என வரும் போது 'திராவிடர்' என்னும் சொல்லையேப் பயன்படுத்தினார். இன்றும் ஆரியத்திற்கு எதிராய் 'திராவிடம்' என்ற சொல்தான் முன்னே நிற்கிறது.

இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் அதே நின்று வழி நடத்தும் !

போகிற போக்கிலே பிராமணர்களை உள்ளிழுத்தல் என்ற ஒன்றைச் சொல்லி விட்டுப் போகிறார். திராவிட இயக்கம் பிராமணச் சமூகத்தைத் தமிழ் அரசியல் களத்தை விட்டே அது வெளித்தள்ளியிருக்கிறது என்கிறார்.
1947-க்கு முன் வரை இருந்த வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தின் படி 16% - 14% தனி இட ஒதுக்கீடு பார்ப்பனர்களுக்கே இருந்தது. 1950 விண்ணப்பமே போடாமல் தான் ஒரு பிராமணர் என்பதால் தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை ; எனவே இது அடிப்படி உரிமைக்கு எதிரானது என வழக்குத் தொடுத்தது "செண்பகம் துரைராஜ்" என்ற பார்ப்பனரே. அந்த வழக்கை உயர் நீதி மன்றத்தில் அவர்க்காக நடத்தியவர்  அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர். இவர் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் இருந்தவர் வேறு ! இவர் வாதத்தைக் கேட்டுத்தான் உயர் நீதி மன்றம் அப்போதிருந்த கம்யூனல் ஜி.ஓ செல்லாது எனத் தீர்ப்பளித்தது.

வெகுண்ட எழுந்த பெரியார் 1950 டிசம்பர் முதல் தேதியன்று திருச்சியில் ‘கம்யூனல் ஜி.ஓ. மாநாடு' ஒன்றைக் கூட்டினார். ‘கல்வி, அரசியல் உத்தியோகங்களில் பின்தங்கிய மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு செய்யும் வகையில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளித்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். (இதில் பின் தங்கிய மக்களுக்குத்தான் மக்கள் தொகை விகிதத்தைப் பொருத்து ஒதுக்கீடு கேட்கிறார் பெரியார். சம்ஸ் கூறியுள்ள படி 3% தனி ஒதுக்கீடு பார்ப்பனர்களுக்குக் கொடுக்கச் சொல்லி எங்கே சொன்னார் எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்).

பின் அம்பேத்கார் தலைமையிலான அரசியலமைப்புக் குழு வேலை வாய்ப்புகளில் “மட்டும்” இட ஒதுக்கீடைக் கொண்டு வந்த போதும் பெரியார்தான் கல்வியிலும் ஒதுக்கீடு வேண்டும் எனப் போராட்டம் அறிவித்தார்.  “நீ தெருவுக்கு நாலு பைப் போட்டுக் கொடுத்துடுற; தண்ணீ பிடிச்சுக்க-ன்னு சொன்ன ; ஆனால் டேன்க்-குத் தண்ணீ விடலையே ; எனக்கு வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு கொடுத்துட்ட, ஆனா, எங்காளு இன்னும் படிக்கவே இல்லையே, பிறகு எப்பிடி வேலை வாய்ப்புக்குப் போய் நிப்பான்?”  என்று கேட்டார்.

தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. பெரியாரின் வேண்டுகோளை ஏற்று 14.08.1950 அன்று மாணவர்கள் களத்தில் இறங்கினர். சென்னை மாகாணம் முழுவதிலும், ‘அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்’ அல்லது ‘அரசியல் சட்டம் ஒழிய வேண்டும்’ என்ற கோஷம் தலைதூக்கியது. சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து தந்தை பெரியார் 14.09.1950-ல் நாடெங்கும் ‘வகுப்புரிமை நாள் கொண்டாடுங்கள்!’ என வேண்டுகோள் விடுத்தார்.  தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்றுத் தமிழகமே திரண்டெழுந்தது. மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் கட்சி வேறுபாடின்றி, ‘அரசியல் சட்டம் ஒழிக! ‘வகுப்புவாரி உரிமை வேண்டும்!’ என முழங்கினார்கள். தமிழகத்தில் ஏற்பட்டிருந்த மக்களின் கொந்தளிப்பை உரியவர் மூலம் அறிந்த சர்தார் வல்லபாய் படேல், தாமும் ஒரு பார்ப்பனரல்லாதார் என்பதை நினைவு கூர்ந்து, மத்திய அமைச்சரவையிலும், பாராளமன்றத்திலும் பெரியாரின் கொள்கைக்கு வலுவுண்டாக்கி, கல்வியிலும் இட ஒதுக்கீடு கொண்டுவர முடிவு செய்தார். இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தம் (விதி (15) (4) வந்தது.

இங்கே கவனிக்க வேண்டியது அம்பேத்கர் யாருக்கு இட ஒதுக்கீடு எனத் தெளிவாகச் சொல்கிறார். "reservation of appointments or posts in favor of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State" இது சபையில் விவாதத்திற்கு வந்த போது, யார் அந்த  “பேக் வேர்ட் கிளாஸ் ” எனக் கேட்டார்கள் “In the Opinion Of the Government” என்றார் அம்பேத்கார். அதாவது, அரசின் பார்வையில் எந்தச் சமூகம் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறதோ அச்சமூகத்திற்கு இட ஒதுக்கீடு செய்யலாம் என்றுதான் இச்சட்டம் கூறுகிறது.

பெரியாரின் போராட்டத்திற்குப் பின் கல்வியில்ம் இட ஒதுக்கீடு வந்தது. அதிலும் அம்பேத்கர் தெளிவாய்ச் சொல்கிறார்.
"making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes"

அதாவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இட ஒதுக்கீடு பிறபடுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்க்கு மட்டுமே..

ஆக, இருந்த இட ஒதுக்கீட்டையும், வழக்குப் போட்டு தன் தலையில் மண் அள்ளிப் போட்டுக் கொண்டு பார்ப்பனரே !

இதுல இன்னொரு முயற்சியும் நடந்தது. P.V. நரசிம்மராவ் பிரதமரான போது மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில், பரிந்துரைக்கப்பட்ட  27%  ஒதுக்கீட்டில் “poorer section of the backward class” என்ற சொல்லைச் சேர்க்கிறார். அத்தோடு இன்னொரு அநியாயத்தையும் செய்கிறார். எந்த இட ஒதுக்கீட்டிலும் இடம் பெறாத சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கு 10%  ஒதுக்கீட்டைக் கொடுக்கச் சொன்னார் ! எந்த ஒதுக்கீட்டிலும் வராத சமூகம் என்றால் பிராமணச் சமூகந்தான்.

1992-ல் மண்டல் வழக்கு. அதையும் பார்ப்பனர்கள்தான் போட்டனர். (இந்திரா சகாஹிணி vs Union Of India , 1992). உச்ச நீதி மன்றம் பெரிய ஆப்பாக  P.V. நரசிம்மராவ்  கொண்டு வந்தச் சட்டம் செல்லாது என்றும், VP.சிங் கொண்டு வந்த சட்டமே செல்லும் என்றது. உயர் சாதியினர்க்கு பொருளாதார அடிப்படையில்  இட ஒதுக்கீடு வழங்க நமது அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று கூறி நரசிம்ஹராவ் அரசு கொணர்ந்த 10% இடஒதுக்கிட்டீனை செல்லாது என்று கூறியது.

இத்தனயும் பண்ணிட்டு இப்ப சம்ஸ் 3% கொடுக்கச் சொல்லுறார். கொடுப்பது ஒன்னும் சிரமம் இல்லை ! ஆனா, அதிலும் ஒருத்தன் வழக்குப் போட்டு யாருக்குமே கிடைக்காமல் செய்து விட வாய்ப்புண்டு !

1936 ஜூன் 14 அன்று பெரியார் குடியரசில் 'பார்ப்பனர் இட ஒதுக்கீடு கேட்கும் காலம் விரைவில் வரும்' என எழுதியது இன்று உண்மையாகி விட்டது. :))

சம்ஸ் இன்னும் ஒன்றைக் கேட்டுச் சொல்ல வேண்டாம். இதே ஒதுக்கீட்டின் படி, 3% அர்ச்சகர் வேலையை மட்டும் வைத்துக் கொண்டும் மீதியை இதர சாதியினர் எடுத்துக் கொள்ள பிராமண சமூகம் மனம் வைக்குமா ??

No comments:

Post a Comment