Lafees Shaheed
Via Facebook
201-07-24
பிரிதொரு கலாசாரத்தில் இருக்கும் எமக்கு உவப்பில்லாத அம்சத்தை நாம் வெறுப்புடன் அணுக வேண்டிய அவசியம் இல்லை. மாறாக எமது உலக கண்ணோட்டத்துடன் அது உடன்படாது என்பதுடன் நாம் அதனை விட்டு விலகி வந்துவிடுவது நலம். பெண்கள் சினிமாவில் நடிப்பது இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு (உண்மையில் இதுதான் இஸ்லாமிய கலாச்சாரம் என்று ஒற்றைத் தன்மை கொண்டதாக வரையறுக்க முடியாது. 'இஸ்லாமிய கலாச்சாரங்கள்' எனும் பன்மை பிரயோகம் தான் சரியானது) உடன்பாடற்றது என்று முஸ்லிம்கள் சிலர் கருதலாம். ஆனால் ஏனைய சமூகங்கள் பெண்கள் சினிமாவில் நடிப்பதை அனுமதித்தால் அது குறித்து நாம் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. விபச்சாரி போன்ற வசைகளுடன் நடிகைகளை எதிர் கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஹிஜாப் அல்லது பர்தா அணிவதும் இப்படியானது தான். அது எமது கலாசாரத்தின் தனித்துவம். ஆனால் அதற்கான ஏனைய சமூகங்களின் பெண்கள் ஆடையமைப்புகளை 'திறந்து வைத்த உணவுப் பொருள்களைத் தான் ஈக்கள் மொய்க்கும், மூடிய பதார்த்தங்கள் பாதுகாப்பானது' போன்ற உதாரணங்கள் மூலமாக புரிந்து கொள்ள முனைவது கேவலமான அணுகுமுறை. பெண்கள் என்ன உணவுப் பண்டங்களா? எவ்வளவு ஆணாதிக்க தன்மை கொண்ட பெண்கள் விரோத உதாரணம் இது? ஏனைய சமூகத்துப் பெண்களின் ஆடையமைப்புகளை நாம் குற்றத் தன்மை கொண்டதாக சித்தரிப்பது ஏற்றுக் கொள்ளத் தக்க வழிமுறை அல்ல. மாறாக பர்தாவின் தத்துவங்கள் குறித்து உரையாடலாம். சினிமா உலகம் எப்படி பெண்களை சுரண்டுகிறது என்பது குறித்து பேசலாம். நுகர்வுத் தன்மையுடன் பெண்களை காட்சிப்படுத்துகிறது என்பது குறித்து பேசலாம். அதனை விடுத்து விபச்சாரி என்று வசைகளைப் பொழிவது எவ்வகையான அறம்? முஸ்லிம் பெண்களின் பர்தா குறித்து ஏனையவர்கள் கேட்கும் நியாயமான சந்தேகங்களைக் கூட பதற்றத்துடன் எதிர் கொள்ளும் நாம் ஏனைய கலாசார அம்சங்களை மட்டும் ஒரு தலைப்பட்சபமான முறையில் அணுகுவது மட்டும் எவ்வகையில் நியாயம்? சாதிய படிநிலை போன்ற மனித விரோத கலாசார பாசிஸங்களை நாம் கட்டாயம் கலாசார, மத வேறுபாடுகளின்றி எதிர்த்துப் போராட வேண்டும். அப்படியல்லாத விடயங்களில் எம்மை விட்டு வித்தியாசமான கலாச்சாரங்களின் பண்பாட்டு அசைவுகளை நாம் அங்கீகரிக்கவே வேண்டும். அதுதான் அல் குர்ஆனிய எண்ணக் கருவும் கூட.
சகிப்புத்தன்மையற்ற வஹ்ஹாபிய /ஸலபிய, தேவ்பந்திய அணுகுமுறைகளுக்கு மாற்றாக முஹம்மத் அல் கஸ்ஸாலி, அலி ஷரிஆத்தி, தாரிக் ரமழான் போன்றவர்களின் உரையாடல் மரபுகளை நாம் முன் வைக்க வேண்டிய வரலாற்றுத் தருணத்தில் இருக்கிறோம். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) ஒரு இறையியலாளர் என்பது போலவே அவர் ஒரு அரசியலாளருமாக இருந்தார். சமகாலத்தை புரிந்து கொள்ள அம்பேத்கரையும், கார்ல் மார்க்ஸையும், பெரியாரையும் கற்றுக் கொள்ள அந்த இறுதி இறைதூதர் தான் வழி காட்டுகிறார். இஸ்லாத்தின் உயர் விழுமியங்களை ஆழ்ந்து பயிலுங்கள். நான் கூற வருவது புரியும்......!
#இங்கிருந்து அறிவோம்
#பாதையை_செப்பனிடல்
No comments:
Post a Comment