Friday, January 22, 2021

கலைஞருக்கு நிகர் கலைஞரே!

கலைஞருக்கு நிகர் கலைஞரே!
நிலவு மாணிக்கம்

இப்படி 19ஆண்டுதன்ஆட்சிகாலத்தில் இவரைப்போல்மக்கள் நலப்பபணி செய்த ஒருமுதல்வரைக்காட்டுங்கள் பார்க்கலாம் தான் கால்பதிதத்த அத்துணைதுறைகளிலும்  வெற்றித்தடம்பதித்தவர் #கலைஞர் இவரைப்போல் ஒருவர் இனிப்பிறப்பபது அதுவும் தமிழகத்திற்கு கிடைப்பது அரிதிலும் அரிது....
#நியூஸ்7 இணைய தளத்தில் வந்த பதிவு... 

படித்துவிட்டு கலைஞரை காரணமே இல்லாமல் ஏசிப்பேசி பிழைக்கும் ஜீவராசிகள் சிந்திக்கட்டும்..

👉பத்திரிக்கையாளர் கலைஞர்

👉கதாசிரியர் கலைஞர்

👉வசனகர்த்தா கலைஞர்

👉தயாரிப்பாளர் கலைஞர்

👉எழுத்தாளர் கலைஞர்

👉பேச்சாளர் கலைஞர்

👉அரசியல்வாதி கலைஞர்

இப்படி தான் தொட்ட துறை எல்லாவற்றிலும் உச்சத்தைத்தொட்டு யாராலும் விஞ்ச முடியாத அளவுக்கு சாதனைகளைப் படைத்தவர் #கலைஞர் முத்துவேலர் கருணாநிதி அவர்கள்.

👉1924 ஆண்டு திருக்குவளை என்ற குக்கிராமத்தில் பிறந்தவர்.

👉12 வயதில் மாணவ நேசன் கையெழுத்து பத்திரிகையை தொடங்கினார்!

👉14 வயதில் திராவிட அரசியலில் ஈடுபட்டார்!

👉17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவர்!

👉18 வயதில் முரசொலி இதழை தொடங்கினார்!

👉20 வயதில் ஜுபிடர் சினிமா நிறுவனத்தில் வசனகர்த்தராக வேலைக்கு சேர்ந்தார்!

👉27 வயதில் பராசக்தி (கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் என ஏவிஎம் நிறுவனம் போஸ்டர் அடித்து விளம்பரம் செய்யும் அளவுக்கு பெயரும் புகழும் பொருளும் சேர்த்துவிட்டார்)

👉32 வயதில் சட்டமன்ற உறுப்பினரானார்!

👉44 வயதில் முதலமைச்சரானார்!

இன்றைய தேதிக்கு யார் யார் என்ன வயதில் இருக்கிறீர்களோ அந்த வயதை தொடர்பு படுத்தி இச்சாதனைகளை நோக்கினால் #கலைஞர் எப்பேர்பெற்ற சாதனையாளர் என்பதை நீங்களே உணர்வீர்கள். 

👉முதல் முறை
1969–1971= 2 வருடங்கள்...

👉இரண்டாம் முறை
1971-1976 = 5 வருடங்கள்...

👉மூன்றாம் முறை
1989–1990 =2 வருடங்கள்

👉நான்காம் முறை
1996 -2001 = 5 வருடங்கள்

👉ஐந்தாம் முறை
2006–2011 = 5 வருடங்கள்

என ஏறக்குறைய 19ஆண்டுகள்  தமிழகத்தின் முதல்வராக #கலைஞர் இருந்திருக்கிறார்.

50 ஆண்டுகால திராவிட ஆட்சி என்றாலும் திமுக ஆட்சியிலிருந்த காலம் சுமார் 21 ஆண்டுகள் மட்டுமே.

*இக்காலகட்டத்தில் தான் தமிழகம் இந்திய அளவில் முன்னேற்றம் மிக்க வெற்றிப்பாதையில் பயணித்தது என்றால் மிகையாகது*..

பெரியாரின் ஆகப்பெரிய தொண்டனாக, மாணவனாக விளங்கிய கலைஞர், அவரது அத்தனை சிந்தனைகளுக்கும் கனவுகளுக்கும் சட்ட வடிவம் கொடுத்தார்.

பெரியார் என்ற மாபெரும் புரட்சியாளர் தான் வாழும் நாளிலேயே தனது எண்ணங்களும் கனவுகளும் சிந்தனைகளும் சட்ட வடிவம் பெற்று செயல்பட்டதை கண்ணாறக்கண்டார்.

உலகத்தில் எந்த புரட்சியாளருக்கும் கிட்டாத பெருமையிது.

பெரியார் கருணாநிதி மீது எத்தனை மரியாதை கொண்டிருந்தார் என்பதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். 
எப்போதும் தனது எழுத்துக்களில் பேச்சுக்களில் அவரை கலைஞர் என்றே குறிப்பிடுவார். 
தன் சீடனை தன்னை விட சுமார் 45 வயது இளையாரான கலைஞரை அவர் அவ்வாறுதான் அழைத்தது கலைஞருக்கு கிட்டிய மிகப்பெரும் பெருமைகளில் ஒன்று.

ஊரெங்கும் தந்தை பெரியாருக்கு அவர் வாழும் நாளிலேயே சிலை வைத்து அதை பெரியாரை வைத்தே திறக்க வைத்து சிறப்பு செய்தார் கலைஞர்.

ஆனால் அதையும் மிஞ்சும் விதமாக பெரியார் கலைஞருக்கு சிலை வடித்ததும் அச்சிலை எம்ஜிஆர் மறைவின் போது தகர்க்கப்பட்டதும் வரலாறு.  

பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கி அண்ணா தொடங்கிய பணியை #கலைஞர் முழுவீச்சில் முன்னெடுத்தார்.

👉பெண்களுக்கான சொத்துரிமைச்சட்டம்

👉பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டம்

👉அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டம்

👉பிற்படுத்தப்பட்டோருக்கான இந்திய அளவிலான இட ஒதுக்கீடு

👉நில உச்ச வரம்புச்சட்டம்

 👉சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு

போன்றவை தவிரவும் நாட்டின் வளர்ச்சிக்கென அவர் தீட்டிய திட்டங்களும் செயல் படுத்திய முறைகளும் இந்தியாவின் மற்ற மாநிலங்களால் அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் தனது ஆட்சியில் வெற்றிகரமாக செயல் படுத்திய சட்டதிட்டங்களில் சில:

☀அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது

☀சுமார் 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்தது.

☀கையில் இழுக்கும் ரிக்க்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்க்ஷா தந்தது 

☀பிச்சைகாரர்களுக்கு மறு வாழ்வுமையம் அமைத்தது 

☀இந்தியாவிலேயே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது.

☀குடியிருப்பு சட்டம் அதாவது வாடகை நிர்ணயம் சட்டம் 

☀குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது 

☀அக்காலத்தில் P.U.C வரை இலவச கல்வி அளித்தார்.

☀மெட்ராஸ் என்றிருந்த பெயரை சென்னை என மாற்றியது.

☀அரவாணிகளுக்கு திருநங்கை என்ற சொல்லை உருவாக்கி படிவ எண் 9 மாற்றியது.

☀பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை இந்திய அளவில் உறுதி செய்தது.

☀உருது பேசும் முஸ்லீம்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது,

☀ முஸ்லீம்களுக்கு 3.5% தனி
இட ஒதுக்கீடும் அருந்ததியினர்களுக்கு 3% இட ஒதுகீடும் வழங்கியது

☀SIDCO &SIPCOT தொழில் நிறுவனங்களை உருவாக்கியது தொழில் வளம் பெருக்கியது.

☀இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது.

☀ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது.

☀ஆசியாவிலேயெ பெரிய பேருந்து நிலையம் அமைத்தது

☀மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான பாலங்களைகட்டியெழுப்பியது.

☀ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், 

☀விதவை பெண்கள் மறுமண நிதி உதவித்திட்டம்... 

☀கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம், 

☀பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது. 

☀முதல் முறையாக விதவை
பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடமளிக்க வழிவகை செய்தது,

☀முதல் முறையாக விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியது.

☀இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட கல்லூரியை  தொடக்கியது. 

☀பெரியார் பல்கலைகழகம் ,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
பாவேந்தர் பாரதிதாசன்
பல்கலைகழகம். 
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியை ஆகியவற்றை நிறுவியது.

 ☀உலக தமிழர்களுக்கு உதவ தமிழ் மெய்நிகர் பல்கலைகழகத்தை உருவாக்கியது.

☀தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு தந்தது.

☀ கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டுவந்ததது. 

☀சமத்துவபுரம் அமைத்தது. உழவர் சந்தை அமைத்தது.

☀சத்துணவில் முட்டை தந்தது,

☀மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தந்தது.

☀சமச்சீர் கல்வி முறையை
கொண்டுவந்தது. 

☀பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது.

☀அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ கல்லூரி,

☀பொறியியல் கல்லூரி துவக்கியது

☀ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கியது, 

☀நியாயவிலைக்டையில் 10 சமையல் பொருட்க்களை ரூ.50 க்கு தந்தது.

☀ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியது. 

☀ஆசியாவிலேயே பெரிதாக அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தது.

👉வள்ளுவர் கோட்டம்...

👉 பூம்புகார் செம்மொழி பூங்கா....

👉அய்யன் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலையென 
தமிழர் பெருமைகளுக்கு கலைநயத்துடன் சின்னங்கள் நிறுவியது.

👉தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது.

👉முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது.

👉இணையத்தில் இன்று நாம் நமது மொழியில் எழுத படிக்க உறுதுணையாக இருக்கும் ஒருங்குறி (Unicode) அமைப்பதற்கு தன்னார்வ தொழில் நுட்ப தமிழர்களுக்கு பலமாக நின்றது.

👉வானத்தில் விமானத்திருந்து பார்க்கையில் சென்னையின் அடையாளமாக வரவேற்க்கும் கத்திபாரா மேம்பால வடிவமைப்பை இறுதி செய்து கட்டி முடித்தது

இப்படி எத்தனையோ..

தமிழகத்தின் இன்று நாம் பார்க்கும் பெரும்பாலான உட்கட்டமைப்புகளுக்கும் தொழில் வளம் மனித வளம் பெருகியதற்கும் அடித்தளம் போடப்பட்டது #கலைஞர் ஆட்சிகாலத்தில் தான் என்று சொல்வது சற்றும் மிகையில்லை.
அதுதான் உண்மை அதுதான் வரலாறு.
குப்பைகளை அள்ளுவது தொடங்கி குமரி எல்லையில் உயர்ந்து நிற்கும் தமிழனின் பெருமை வரை தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்தவர் கலைஞர்.

இந்தியாவின் மற்ற மாநிலக்களில் இல்லாத ஒரு சிறப்பு தமிழகத்தில் உண்டு.
தமிழகத்தில் மட்டுமே தலை நகரைத்தவிர மற்ற எல்லா நகரங்களிலும் கூட சீரான வளர்ச்சியை காணமுடியும். தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என ஒரு சமநிலை இருக்கும். ஒவ்வொரு 25-50 கிமீ துரத்திற்கும் ஒரு நகரம். 50-100 கிமீக்குள் ஒரு பெரு நகரம் என்ற இந்த கட்டமைப்பை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது.

கல்வி மருத்துவம் பொருளாதரமென ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் வியக்கத்தக்க சாதனைகளை #கலைஞர் செய்திருக்கிறார். 
அவை கீழ் வருமாறு:

கல்வியில்:

☀பள்ளிக் கல்வியை முடித்து, உயர் கல்வியில் சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். அதாவது, தேசிய சராசரியைவிட இரு மடங்கு அதிகம். 
தமிழ்நாடு -38.2%. 
குஜராத் -17.6%; 
மபி -17.4%;
 உபி -16.8%; 
ராஜஸ்தான் -18.0%; 
தேசிய சராசரி: 20.4%. 

☀இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. 
தமிழ்நாடு-37
குஜராத் -3. 
மபி, உபி, ராஜஸ்தான் போன்றவற்றில் ஒன்றுகூட இல்லை. 

☀இதேபோல, முதல் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் 
தமிழ்நாடு-24; 
குஜராத் -2; 
மபி -0; 
உபி -7; 
ராஜஸ்தான் -4. 

☀கல்வி விகிதாசாரம்: 
தமிழ்நாடு -80.33%; 
குஜராத் -79% ; 
மபி -70%; 
உபி -69% ; 
ராஜஸ்தான் -67%; 
தேசிய சராசரி: 74%." 

சுகாதாரத்தில்:

☀சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கான முக்கியமான குறியீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது சிசு மரண விகிதம் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதாகும். 

☀பிறக்கும் 1,000 சிசுக்களில் மரண எண்ணிக்கை: 
தமிழ்நாடு -21; 
குஜராத் -36; 
மபி -54; 
உபி -50; 
ராஜஸ்தான் -47. 
தேசிய சராசரி: 40. 

☀இதேபோல, ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்: 

தமிழ்நாடு -79; 
குஜராத் -112; 
மபி -221 ; 
உபி -285; 
ராஜஸ்தான் -244; 
தேசிய சராசரி: 167. 

☀தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம்: 

தமிழ்நாடு -86.7% ; 
குஜராத் -55.2% ; 
மபி -48.9% ; 
உபி -29.9%; 
ராஜஸ்தான் -31.9% ;
 சத்தீஸ்கர் -54%; 
தேசிய சராசரி: 51.2%. 

☀ஆண் -பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு. 
இதில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைய குறைய பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்): 

தமிழ்நாடு -943; 
குஜராத் -890; 
மபி -918; 
உபி -902; 
ராஜஸ்தான் -888; 
இந்திய சராசரி: 919. 

☀மனித வளக் குறியீடு: 

தமிழ்நாடு -0.6663; 
குஜராத் -0.6164; 
மபி -0.5567; 
உபி -0.5415; 
ராஜஸ்தான் -0.5768; 
தேசிய சராசரி : 0.6087. 

☀ஊட்டச்சத்துக் குறைபாடு-குழந்தைகளில்: 

தமிழ்நாடு -18%; 
குஜராத் -33.5% ; 
மபி -40%; 
உபி -45%; 
ராஜஸ்தான் -32%; 
சத்தீஸ்கர் -35%; 
தேசிய சராசரி : 28%. 

☀மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு): 

தமிழ்நாடு -149; 
குஜராத் -87; 
மபி -41; 
உபி -31; 
ராஜஸ்தான் -48; 
தேசிய சராசரி: 36. 

☀மருத்துவப் படிப்பு என்று எடுத்துக்கொண்டால், நாட்டில் முன்னிலையில் உள்ள மாநிலமாக 24 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.

நாடு முழுவதுமுள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 52,965. 
தமிழ்நாட்டில் 5,660 இடங்கள் இவற்றில் உள்ளன.

☀பொருளாதாரத்தில்:

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்புக்கு (ஜிடிபி) இணையானதை தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களும் அளிக்கின்றன. 
இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு. 

தமிழ்நாடு -ரூ. 18.80 லட்சம் கோடி; 
குஜராத் -ரூ. 10.94 லட்சம் கோடி; 
மபி -ரூ. 7.35 லட்சம் கோடி; 
உபி -ரூ. 12.37 லட்சம் கோடி; 
ராஜஸ்தான் -ரூ. 7.67 லட்சம் கோடி. 

☀தனிநபர் வருமானம் (ஆண்டுக்கு) –

தமிழ்நாடு -ரூ. 1,28,366; 
குஜராத் -ரூ. 1,06,831;
 மபி -ரூ. 59,770 ; 
உபி -ரூ. 40,373; 
ராஜஸ்தான் -ரூ. 65,974 ; 
தேசிய சராசரி: ரூ. 93,293. 

☀ஏழ்மை சதவீதம்: 

தமிழ்நாடு -11.28%; 
குஜராத் -16.63% ; 
மபி -31.65%; 
உபி -29.43%; 
ராஜஸ்தான் -14.71% ; 
சத்தீஸ்கர் -39.93%; 
இந்திய சராசரி : 21.92%

மேற்குறிப்பிட்ட அத்தனை சாதானைகளுக்கும் காமராஜர், அண்ணா தொடங்கி எம்ஜிஆர் ஜெயலலிதா வரை அனைத்து ஆட்சியாளர்களின் பங்கிருந்தாலும் அதிக முனைப்புடன் வேகத்துடனும் பணியாற்றிய பெருமை கலைஞரையே சாரும்.

அவரது ஆட்சியிலேயே அதிக விம்ர்சனங்களுக்கு உள்ளான 2006-2011 கால கட்டத்தில் கூட தமிழகத்திற்கு தேவையான எல்லாவற்றையும் திறம் பட நிர்வகித்தார் என்பதை யாரலும் மறுக்க முடியாது.

இன்று நாம் போராட்டக்களத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகளை தமிழகத்தின் பக்கமாகக் கூட வராமல் பார்த்துக்கொண்டார்.

 நீட்தேர்வு, ஜல்லிக்கட்டு,காவிரி நீர் என அனைத்தையும் தனது ஆட்சிகாலத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மாவட்டந்தோரும் மருத்துவமனை ஆகிய திட்டங்கள் 2007-2011ல் தான் வந்தன. 
தேர்தல் வாக்குறுதியான இலவச வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டி, 
1 ரூபாய் அரிசி, 
100 நாள் வேலைத்திட்டம் ஆகியவற்றையும் பிசிரின்றி செயல் படுத்தினார்.

பத்துவருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட அந்த தொலைக்காட்சிப்பெட்டிகள் இன்றும் பலர் வீடுகளில் கடைகளில் செயல் பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

கலைஞர் ஆட்சியில் பல விமர்சனங்கள் இருந்தாலும் தற்காலத்தில் அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் தொடர் பொய் பரப்புரைகள் வரம்பு மீறிவிட்டன என்பதே உண்மை. 
அரசியல் ரீதியாக அது பலருக்கு அனுகூலமாக இருந்தாலும் இந்த மாநிலம் அதனால் அடைந்த பலன் என்ன என்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழக அரசியல் வரலாற்றில் கலைஞர் மட்டும்தான் செய்யாத தவறுகளுக்கு தண்டிக்கப்படுவதும் செய்த சாதனைகளுக்காக புறக்கணிக்கப்படுவதும் அதிகம் நடக்கிறது. 
அதற்கு சிலரின் சாதிய ரீதியான பார்வையும் முக்கிய காரணம் என சில அரசியல் விமர்ச்சகர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

கலைஞர் பற்றிய இந்த கொடூர பரப்புரைகள் திமுகவின் தேர்தல் வெற்றியை நிச்சயமாக பாதித்திருக்கின்றன. தமிழகத்தையும் தமிழக மக்களையும் நிரம்ப பாதித்திருக்கின்றன. 

சில நேரங்களில் சிந்திப்பதுண்டு..

ஒருவேளை கடந்த 2016 சட்டமன்றத்தேர்தலில் திமுக வென்றிருந்தால், கலைஞர் ஜெயலலிதா இருவருமே ஆரோக்கியமாக இருந்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

திராவிட இயக்கத்தின் தலைமகன் தந்தை பெரியாரின் உண்மை மாணவனாக இருந்து அவரது கனவுகளை நனவாக்கி சட்டமாக்கிய கலைஞர் வயதில் பெரியாரை
 வென்றுவிட்டார்...

நிலவு மாணிக்கம்


https://www.facebook.com/100006067415646/posts/2873107046234848/

Thursday, January 21, 2021

ஒருவருக்குப் ‘Perfect Gentleman’ என்ற பட்டப்பெயர் உண்டு.

என். சொக்கன்

எங்களுடைய குழுவில் ஒருவருக்குப் ‘Perfect Gentleman’ என்ற பட்டப்பெயர் உண்டு.

காரணம், அவர் எல்லாரிடமும் மிக இனிமையாகப் பழகுகிறவர். அவருடன் பணியாற்றிய பலரும் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆனால், நான் அவரோடு அதிகம் பேசியதில்லை. ஒரே ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். மற்றபடி மின்கூட்டங்களில்கூட அவர் பேசியதைக் கேட்டதில்லை.

ஆகவே, இவருக்கு இப்படியொரு நல்ல பெயர் எப்படி வந்தது என்கிற குறுகுறுப்பு எனக்கு எப்போதும் உண்டு. இவருடைய உத்திகளை, சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உண்டு.

சமீபத்தில், அதற்கான வாய்ப்பு அமைந்தது. ஒரு புதிய திட்டத்தில் நானும் அவரும் சேர்ந்து பணியாற்றவேண்டிய சூழல். ஆகவே, அவரோடு நேரடியாகப் பேசுகிறேன், பழகுகிறேன். உண்மையிலேயே அவர் ‘Perfect Gentleman’தான் என்று உணர்கிறேன்.

ஒருவருடைய பழகும்தன்மை என்பது நல்லவிதமாக இருந்தாலும் சரி, கெட்டவிதமாக இருந்தாலும் சரி, அதற்குப் பல விஷயங்கள் காரணமாக அமைகின்றன. ஆகவே, இதனால்தான் இவர் நன்கு பழகுகிறார் என்று யாராலும் உறுதியாகச் சொல்லிவிட இயலாது.

என்றாலும், இந்தப் பர்ஃபெக்ட் ஜென்டில்மேனிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் இவை:

அலுவல் கூட்டங்களின் தொடக்கத்தில் சில வழக்கமான நலம் விசாரிப்புகள் இருக்கும். ஆனால், அவை பொதுவாகப் போலித்தனமான சொற்களாக அமையும். ‘சரி, சரி, சீக்கிரம் பேசவேண்டிய விஷயத்துக்கு வாங்க’ என்கிற பரபரப்பு தெரியும்.

ஆனால், இவருடைய நலம் விசாரிப்பு மிக உண்மையானதாகத் தோன்றுகிறது. நிதானமாகவும் வாஞ்சையாகவும் பேசுகிறார்.

அதற்காக இவர் நிறைய நேரத்தை வீணடிப்பதும் இல்லை, மிகச் சில சொற்களுக்குள், நாம் நன்றாக இருக்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்கிற நிஜமான அக்கறையைக் காண்பித்துவிடுகிறார்.

அவருடைய பகல், எனக்கு இரவு. என்னுடைய பகல், அவருக்கு இரவு. ஆகவே, நாங்கள் சந்திக்கும் நேரங்கள் யாரோ ஒருவருக்கு அலுவல் நேரமாக இருக்காது.

ஆகவே, என்னுடைய இரவு நேரத்தில் சந்திப்புகள் நிகழும்போதெல்லாம், அதற்காக உண்மையாக நன்றி தெரிவிக்கிறார். ‘அடுத்த கூட்டத்தை என்னுடைய இரவு நேரத்தில் வைத்துக்கொள்வோம், சிரமம் இருவருக்கும் சமமாக இருக்கட்டும்’ என்று வற்புறுத்துகிறார்.

என்னிடம் என்ன தேவை என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். ‘இதைமட்டும் சொல்லுங்கள், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்கிறார்.

இதன் பொருள், நம் நேரத்தை அவர் மதிக்கிறார்.

என்னிடம் வருவதற்குமுன் அவர் வேறு யாரிடமாவது இதைப்பற்றிப் பேசியிருக்கலாம். அதை மறைக்காமல் சொல்கிறார். ‘அவர் இப்படிச் சொன்னார். நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று உறுத்தாமல் கேட்கிறார்.

தனக்குத் தெரியாதவற்றைத் தெரியாது என்று ஒப்புக்கொள்ள அவர் தயங்குவதில்லை. அதே நேரம், இது தனக்குத் தெரியாதே என்கிற கழிவிரக்கமும் இல்லை. ‘நான் கற்றுக்கொள்ளத் தயார்’ என்று பேச்சால் உணர்த்துகிறார்.

நம்மிடம் உள்ள நல்லவற்றை மனம் திறந்து பாராட்டுகிறார். அதே நேரம், அது வெற்றுப் புகழ்ச்சியாக இல்லை. ‘நீங்கள் இதைச் செய்தது எனக்குப் பிடித்திருந்தது, அதனால் இந்த நன்மை விளைந்திருப்பதாக நான் எண்ணுகிறேன்’ என்று தெளிவாகச் சொல்கிறார்.

‘சேர்ந்து பணியாற்றுவோம்’ என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறார். ‘நான் சொல்வதுதான் சரி’ என்று வலியுறுத்துவதும் இல்லை, அனைத்தையும் நம்மிடம் ஒப்படைத்துவிடுவதும் இல்லை, மாற்றுக் கருத்துகளைக் கேட்கத் தயாராக இருக்கிறார், மனத்தைத் திறந்துவைத்திருக்கிறார்.

புதிய பணியொன்றுக்குப் பொறுப்பேற்கும்போது, அதற்குமுன் அங்கு பணியாற்றியவர்களுடைய உழைப்புக்கும் அறிவுக்கும் பெரிய மதிப்பளிக்கிறார். அவர்கள் படுமோசமாகச் சொதப்பியிருந்தாலும் சரி, ‘அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளப் பல விஷயங்கள் உண்டு’ என்கிறார்.

இவர் கச்சிதமானவர்தான். ஆனால், ‘எல்லாம் கச்சிதமா இருக்கணும், இல்லாட்டி எனக்குப் பிடிக்காது’ என்று முகம் சுளிப்பதில்லை.

அதாவது, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், குழுக்கள், நிறுவனங்களிடம் குறைகள் இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறார். அவற்றைச் சுட்டிக்காட்டிக் காயப்படுத்தாமல், அவர்களிடம் இருக்கும் நல்லவற்றைச் சொல்கிறார், குறைகளை நீக்க உதவுகிறார்.

அவருடைய வேலையில் குறைகள், கருத்துகள், முன்னேற்றத்துக்கான வழிகளைச் சுட்டிக்காட்டினால், அதற்கு உண்மையாக நன்றி தெரிவிக்கிறார். அதில் தன்னுடைய கோணத்தை எடுத்துரைக்கிறார்.

ஆனால், இப்படித் தன்னுடைய தரப்பைச் சொல்லும்போது அவரிடம் எதிர்க்கிற மனநிலை இல்லை. தன்னுடைய சிந்தனையோ செயலோ தவறாக இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறார். ‘நான் இதைப்பற்றிச் சிந்திப்பேன், தேவையானதைச் சரிசெய்வேன்’ என்கிறார்.

மிக நிதானமாகப் பேசுகிறார். சிந்தனையில் தெளிவு இருந்தால்தான் இது சாத்தியம்.

பிரமாதமான நகைச்சுவை உணர்ச்சி. கனமான அலுவல் விஷயங்களில் சிறிது கலகலப்பைக் கலந்து இனிமையாக்கிவிடுகிறார்.

இதனால், எட்டு மணி நேரக் கடும் உழைப்புக்கு நடுவில் இவரோடு பேசிய சில நிமிடங்கள் மனத்துக்குச் சிறு ஓய்வளிக்கின்றன, நம் நினைவில் தங்கிவிடுகின்றன.

https://www.facebook.com/541303291/posts/10158492281573292/

Sunday, January 17, 2021

அண்ணாவின் தேர்தல் பாதை. - கோபிநாத் குபேந்திரன்

அண்ணாவின் தேர்தல் பாதை. - கோபிநாத் குபேந்திரன்

- Gopinath Kubendran
(திராவிட வாசிப்பு டிசம்பர் 2020 இதழில் வெளியான கட்டுரை)

அண்ணா முதன்முதலில் 1935-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நிற்கிறார்; பின்பு தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கும் திராவிடர் கழகத்தில் பெரியாரோடு இணைந்து பயணிக்கிறார்; திடீரென்று நமக்குத் தேவை வேட்டரசியல் அல்ல, ஓட்டரசியல்தான் என்று பெரியாரிடமிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகம் காண்கிறார்; அப்படிக் கண்டும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடாமலே ஒதுங்குகிறார்; இடையில் 1959-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் தயக்கத்துடன்போட்டியிட்டு வெல்கிறார்; தனி திராவிட நாடு வேண்டி முழக்கமிடுகிறார்; பிரிவினைவாத தடைச்சட்டம் வந்தவுடன்திராவிட நாடு கோரிக்கையிலிருந்து பின்வாங்குகிறார்;  அதன்பின் வந்த ஆட்சிமொழி சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து களம் காண்கிறார்; தன்னை பாராளுமன்றம் அனுப்ப ஆர்வம் காட்டிய ஆச்சாரியாரை குலக்கல்வி திட்டத்திற்காகக்கடுமையாக எதிர்கிறார்; அவருடனே இணைந்து தேர்தல் களம் காண்கிறார்; காமராஜர் தலைமையிலான காங்கிரஸைவிரட்டவேண்டும் என்கிறார்; தன்னை ஒரு கோழை என்ற காமராஜர் கண்டிப்பாக வெல்லவேண்டும் என்று குடியாத்தம்இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விலகி காமராஜருக்கேஆதரவளிக்கிறார்; பேர் கொடுத்த பெரியாரைத் தேர்தல் களத்தில் எதிர்க்கிறார்; கல்லக்குடி போராட்டத்தைக் கேலிபேசியகம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறார்; 67ல் ஆட்சி நிச்சயம் என்கிறார்; ஆனால் முதலமைச்சர் பதவியை முன்னெடுக்கும் சட்டமன்றத்திற்குப் போட்டியிடாமல்நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுகிறார்.

என்ன, அண்ணாவின் தேர்தல் பாதை இப்படி முரணும்குழப்பமும் நிறைந்த இடியாப்பச் சிக்கலாக இருக்கிறதே... என்ற எண்ணம்தானே தோன்றுகிறது?

ஆம், அண்ணாவின் தேர்தல் பாதையை அங்கொன்றும், இங்கொன்றும், அவரிடமொன்றும், இவரிடமொன்றும் அறியும் போது அது கண்டிப்பாக ஓர் இடியாப்பச் சிக்கலாகவே இருக்கும். ஒரே ஒருமுறை அண்ணாவைப் படித்து பாருங்களேன், பிறகு நீங்களே சொல்வீர்கள், “ஆம், அது ஒரு நேர்த்தியாக கோர்க்கப்பட்ட அழகிய பூச்சரம், இடியாப்பச் சிக்கல் அல்ல” என்று.
ஏனெனில் அண்ணா, தன் செயற்பாடுகள் குறித்த அத்தனை விமர்சனங்களுக்கும் தன் நிகழ்காலத்திலேயே விடைகளை சொல்லியிருக்கிறார். அதனினும் ஆச்சரியம், அவர் தன் மீதான எதிர்கால விமர்சனங்களுக்கும் தன் நிகழ்காலத்திலேயேவிடையளித்துச் சென்றிருக்கிறார் என்பதுதான்.

நட்பு முரண்கள், பகை முரண்கள், கொள்கைக்காகக்கட்சியை விட்டுவிட முடியாத சூழல்கள், கட்சிக்காகக்கொள்கையை விட்டுவிட முடியாத பரிதவிப்புகள், பாரத-சீனப்போர்கள்,  பற்றாததற்குத் தம்பிமார்களின் பனிப்போர்கள், சட்டத்தாக்குதல்கள், சனாதன மோதல்கள் என அண்ணாவின் தேர்தல் பாதை ஒரு கரடுமுரடான பாதைதான். ஆனால், அந்த கரடுமுரடான பாதையில் அண்ணாவின் பயணமானது ஓர் இலக்கிய நயத்தை ஒத்தது.

அண்ணாவின் அரசியல் பாதையை... என்ன அரசியல் பாதையா? தேர்தல் பாதை பற்றித்தானே தலைப்பு என்று கேட்கிறீர்களா?  பூவை ‘புஷ்பம்’னும் சொல்லலாம், புஷ்பத்தை‘ஃபிளவர்’னும் சொல்லலாம். ஆம், அண்ணாவின் தேர்தல் பாதையை அண்ணாவின் அரசியல் பாதை என்றும் சொல்லலாம், திமுகவின் அரசியல் பாதை என்றும் சொல்லலாம், ஏன் தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பாதை என்றும் கூடச் சொல்லலாம் எல்லாமே ஒன்றுதான். இதில் சிறப்பு என்னவெனில் அந்த அண்ணாவின் அரசியல் பாதையின் ஒட்டுமொத்தச்சூத்திரத்தையும் சுருக்கி ஒற்றை எண்ணில் அடக்கிட விளக்கிடமுடியும். அந்த ஒற்றை எண் யாதெனில், “1967”.

எப்படி.? 1967-ஆம் ஆண்டுதான் திமுக முதன்முதலாக ஆட்சி அமைக்கிறது. ஆனால் அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பாகவே11.08.1957 அன்று மதுரையில் அறிஞர் அண்ணா உரையாற்றுகிறார். அதுவும் என்ன தலைப்பில் தெரியுமா?, “1967”. ஆம் தலைப்பே 1967 தான். அதில் அண்ணா, “இந்த கூட்டத்தில் எனக்குப் பேசக் கொடுத்திருக்கும் தலைப்பு 1967; இது நானாக எடுத்துக்கொண்ட தலைப்பல்ல; நண்பர்களேதேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு; அவர்களாகவேதேர்ந்தெடுத்ததாகக் கூட நான் கருதவில்லை. நம் மாநில நிதியமைச்சர் ஒரு பத்து ஆண்டுக்கு நீங்கள் எல்லாம் சும்மா இருங்களேன் என்று சட்ட சபையிலே சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்” என்று தொடங்கி,  பத்து ஆண்டுகள் கழித்து 1967-ல் வழி பிறக்கக் கூடுமானால் உங்களிலே பலபேர் இன்றைய தினம் உழைத்த உழைப்பு அன்றைய தினம் தான் பலன் தரும் என்று சொல்லி முடிக்கிறார். சொன்னபடி 1967-ல் ஆட்சியை பிடிக்கிறார்.
என்ன ஒரு தீர்க்கதரிசனம்? அப்படி என்று சொல்லி நான் அண்ணாவை ஒரு குறிசொல்லும் சாமியாராக ஆக்கமாட்டேன். ஆகா! என்ன ஒரு திட்டமிடல்! என்றே வியந்து புகழ்கிறேன். ஏனெனில் அண்ணா ஒரு சிற்பி. உளி தாங்கி உயிரில்லாத கல்லுக்கு, உரு வார்க்கும் சிற்பி அல்ல; தன் வலி தாங்கி உயர்ந்ததொரு அரசை உருவாக்கும் சிற்பி. அந்தச் சிற்பி செதுக்கியெடுத்த விலைமதிப்பற்ற சிற்பம் தான், 1967.
ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்பு, இன்றும் கூட மாற்று அரசியல் வேண்டும் என வரும் கட்சிகள் அனைத்தும் 1967-ஐ சுட்டிக்காட்டியே, “வரலாறு திரும்பும்” என்று பேசுகிறார்கள் எனில், அந்த அண்ணாவின் 1967, எவ்விதத் தாக்கத்தை இங்கே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறதல்லவா? ஆனாலும் கூட அவர்கள் ஒருவராலும் அப்படி ஒரு வரலாற்றுத் திருப்பத்தை இதுவரையிலும் ஏற்படுத்த முடியாமல் வீழ்ந்து கொண்டே இருக்கின்றனரே, ஏன்? ஏனெனில் அங்கேதான் அண்ணா நிற்கிறார். அண்ணாவின் தேர்தல் பாதைக்கும் இவர்களின் தேர்தல் பாதைக்கும் உள்ள வித்தியாசம் தான் அதனை தீர்மானிக்கிறது. அந்த வித்தியாசம் நிஜத்திற்கும்நிழலுக்குமான வித்தியாசம். 
இதனை சில காரணிகளைக் கொண்டு நோக்கினால்சிறப்பாக விளங்கும்.

• தாக்கமும் நோக்கமும்.
• வியப்பூட்டும் வியூகம்.
• அர்ப்பணிப்பும், அதிகாரப் பரவலும்.
• நிதானம் தந்த வெற்றி.
• வெற்றிக்கு பின்னான நிதானம்.
 
தாக்கமும் நோக்கமும்:
நாட்டின் விடுதலைக்குப் போராடிய மாபெரும் இயக்கம் காங்கிரஸ்; உலக அளவில் போற்றப்படும் உன்னதத் தலைவர் நேரு; தமிழக மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்குபவர் காமராசர். இவர்களுக்கு எதிராக நாம் இயங்க வேண்டும், இவர்களை அகற்றிவிட்டு ஆட்சியில் நாம் அமரவேண்டும். அப்படியெனில் அதற்குச் சரியானதொருகாரணமும் நோக்கமும் இருக்க வேண்டுமல்லவா? அது என்ன, இதோ அண்ணாவே விளக்குகிறார்.

“ஒரு முருங்கை மரம் இருக்கிறது. அதிலிருந்த சுவையான முருங்கைக்காயும், முருங்கைக்கீரையும் சமைத்து உண்டோம். இப்போது அந்த முருங்கை மரத்தில் அந்தக் காயோ, கீரையோஇல்லை; முழுவதும் கம்பளி புழுக்களாக இருக்கிறது; அதற்காக அந்தக் கம்பளிப் புழுக்களைக் கொண்டு கரி சமைத்து உண்ணமுடியுமா? அந்த மரம் போன்றது தான் இன்று காங்கிரசுகட்சி”.

அதாவது காங்கிரஸ் கட்சி உருவான நோக்கம் வெள்ளையர்களிடமிருந்து தேச விடுதலையைப் பெறுவது. அதை பெற்றாகிவிட்ட பின்பு இங்கே காங்கிரஸ் ஆட்சி பயனற்றது என்கிறார் அண்ணா.
மேலும் இதைக் குறித்து அண்ணா, “யானை மேல் ஏறிச்செல்பவனிடம் சுண்ணாம்பு கேட்ட கதை போல, ஓங்கி வளர்ந்து விட்ட காங்கிரசைக் கொண்டு மக்களாட்சிக்குச் சாதகம் செய்துகொள்ள முடியாது. உங்களைப் போல பாதையில் நடப்பவர்கள், உங்களைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தினர், நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிறவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் நாளைக்கு நமக்குத் தேவையான காரியத்தைச்சாதித்துக்கொள்ள முடியும்” என்றும் விளக்குகிறார்.

இங்கே நமக்கு ‘தேவையான காரியத்தை’ என்று அண்ணா கூறியிருப்பதாக நான் நினைப்பது மாநில மக்களின் நலனைமுன்னிறுத்தும் மாநில சுயாட்சி உரிமைகளைத்தான். ஏனெனில் அன்றைய நாட்களில் காமராசர் முதல்வராக இருந்த போதிலும்இங்கே எந்தவொரு பிரச்சனை மற்றும் திட்டம் சார்ந்த முடிவுகள் எதுவாக இருப்பினும் அதற்கு நேருவிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக இருந்தது.
இதை அண்ணா அவருக்கே உரிய தொனியில் மிக அழகாக, “இப்போது உங்களுக்கு எம்.எல்.ஏ. வாக காங்கிரஸ் கட்சி மாசிலாமணி செட்டியார் இருக்கிறார், அவரிடம் நீங்கள் சென்று ஒரு கோரிக்கையைக் கேட்டீர்கள் என்றால் அவர், “இருங்கபோய் காமராசரைக் கேட்டுவிட்டு வருகிறேன்” என்று சொல்வார். காமராசர் இவர் சொன்னவுடன், ஆகட்டும் பார்க்கலாம் என்றோமுடியாது என்றோ சொல்லிவிட மாட்டார், “இருங்க நேருவிடம்கேட்டுச் சொல்கிறேன்” என்பார். நேரு என்ன உத்தரவிடுகிறாரோஅது காமராசருக்குத் தபாலில் கிடைத்து, அதை காமராசர்மாசிலாமணி செட்டியாருக்குக் காட்டி, பிறகு அதை அவர் உங்களுக்குக் காட்ட வேண்டும்.
இதை நீங்கள் எண்ணிப் பார்த்தால் அங்கே இரண்டு தபால் பெட்டிகள் இருப்பதைப் பார்க்கலாம், ஒரு ஜங்ஷன்இருப்பதையும் பார்க்கலாம்.

இதுவே நீங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த அன்பர் ஒருவரை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து, அவரிடம் உங்கள் கோரிக்கை ஒன்றை வைக்கிறீர்கள் எனில்,  அவர் என்ன செய்வார் தெரியுமா? நேராகத் தலைமைக் கழகம் வந்து நமது தலைவர் நெடுஞ்செழியனை சந்தித்து அந்தக் கோரிக்கையைச்சொல்வார். நெடுஞ்செழியன் உடனே, “இருங்கள் நான் வடக்கேபோய் கேட்கிறேன்” என்று சொல்ல மாட்டார். படித்துப் பார்த்து அங்கேயே முடியும் என்றால் முடியும் என்பார், முடியாது என்றால் முடியாது என்று சொல்லி அதற்கான காரணத்தையும் விளக்குவார்; அந்த விளக்கத்தை நீங்கள் உங்கள் திராவிட முன்னேற்றக் கழகசட்டமன்ற உறுப்பினரையும் கேட்கலாம், நெடுஞ்செழியனையும்கேட்கலாம்” என்று எடுத்துரைத்து, திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் ஆட்சிக்கும் வரவேண்டும் என்ற காரணத்தை, நோக்கத்தைமக்களிடையே தொடர்ந்து தெளிவுபடுத்திக் கொண்டே இருந்தார்.
தேர்தல் பாதையில் பயணிக்க இருக்கிறோம் என்று பெரியாரிடமிருந்து பிரிந்து வந்த பின்பு, அண்ணாவின் மீதான விமர்சனங்கள் மிக அதிகமாயின. தேர்தல் அரசியலுக்குள்சென்றால் திராவிட நாடு கோரிக்கையை வலுவாக வைக்க முடியாது என்று பெரியாரால் மட்டுமின்றி ஈ.வெ.கி.சம்பத்போன்றோராலும் பேசப்பட்டது.

ஆனால், அண்ணாவின் அவர்களுக்கான பதில் அற்புதமானது. அண்ணா சொல்கிறார், “தி.மு.கழகத்திற்கு மூன்று பெரிய காரியங்களை செய்ய வேண்டிய  பெரும் பொறுப்பு இருக்கிறது. மக்களைத் திருத்த வேண்டும், சர்க்கார் தவறிழைத்தால் சர்க்காரைத் திருத்த வேண்டும், சொந்தச் சர்க்காரை நாம் அமைக்க வேண்டும். இது மூன்றையும் நாம் செய்தாக வேண்டும். இதில் ஒன்று இல்லையெனினும் அது சரிப்படாது. நாம் அல்லி-அர்ஜுனா நாடகம் போட வேண்டுமென்றால், நாடகத்தில் நடிக்க ஆட்கள் இருக்க வேண்டும், நாடகத்தைக் காண மக்கள் இருக்க வேண்டும், நாடகத்தை நடத்த மேடை இருக்க வேண்டும். இதில் ஒன்று இல்லையென்றாலும் நாடகம் நடத்த முடியுமா? அல்லது இதில் ஒன்றைத்தான் தேவையில்லை என்று ஒதுக்கிட முடியுமா”.

இதன் பொருட்டு, தான் தேர்தல் அரசியலைதேர்ந்தெடுத்தற்கு இந்த மூன்று காரணங்களை முத்தாய்ப்பாய்வைக்கிறார் அண்ணா. மக்களை நெறிப்படுத்த வேண்டும், ஆட்சியை நெறிப்படுத்த வேண்டும், அதற்கு நாமே ஆட்சியை அமைக்க வேண்டும்.

இப்படியாக, மாநில நலன் காக்கப்பட வேண்டும்; மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும்; அதற்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் நாம் இருக்க வேண்டும்; அதனால் காங்கிரஸ் வீழ்த்தப்பட வேண்டும் என்று தனது தேர்தல் பாதையின்நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார் அண்ணா.

ஆனால், இன்று திராவிடத்திற்கு எதிராக மாற்று அரசியல் வேண்டும் என்று வருவோரிடம் என்ன நோக்கம் இருக்கிறது? என்ன காரணம் இருக்கிறது? என்று கேட்டுப்பாருங்களேன். ஊழல், உளுத்தம்பருப்பு, வாரிசு, வடபாயாசம் என்று அரைத்தமாவையே அரைத்து கொண்டிருப்பார்கள். திராவிடம் எங்களுக்குக் கல்வி தரவில்லை அதனால் மாற்று அரசியல் கோருகிறோம் என்று அவர்களால் சொல்ல முடியாது, ஏனெனில் அவர்கள் எல்லாருமே பட்டதாரிகளாக இருப்பர். திராவிடம் எங்களுக்கு வேலைவாய்ப்பைத் தரவில்லை அதனால் மாற்று அரசு வேண்டுகிறோம் என்று அவர்களால் சொல்ல முடியாது, ஏனெனில் அவர்கள் அரசுப் பணியிலும், ஐ.டி. கம்பெனியிலும்அமர்ந்து கொண்டு இருப்பார்கள். இதைத்தான் நான் முன்பே சொல்லியிருந்தேன். 

அண்ணாவின் தேர்தல் நோக்கம் நிஜம், வென்றது. 
அவர்களின் தேர்தல் நோக்கம் நிழல், தோற்கிறது.
 
வியப்பூட்டும் வியூகம்:
தேர்தல் அரசியல் என்பது ஒரு மாறுபட்ட களம். இதில் ஒரே இலக்கு வெற்றி மட்டும் தான். அந்த வெற்றியைத் தடுக்கும் பலம் பொருந்திய எதிரி ஒருவன் இருப்பான். அவனை இனம் கண்டு வீழ்த்த வேண்டும். அந்த பலம் பொருந்திய எதிரியை வீழ்த்த வேண்டுமெனில் அதற்குச் சரியான வியூகம் வகுக்க வேண்டும். அத்தகைய வியூகத்தை வகுப்பதில் பெரும் வித்தகர்தாம்அண்ணா.
தேர்தல் அரசியல் களத்தில், நாம் வீழ்த்த வேண்டிய ஆகப்பெரிய பொது எதிரி யார் என்பதைச் சரியாகத்தீர்மானித்தாலே நமக்கு கால் பங்கு வெற்றி உறுதியாகிறது. அந்த பொது எதிரியை வீழ்த்தும் நோக்கமுள்ள கட்சிகள் எவை என இனம் கண்டு, அவற்றுடன் குறைந்தபட்ச புரிதல் உடன்பாட்டுடன்இணைந்தாலே நமக்குப் பாதி வெற்றி உறுதி செய்யப்படுகிறது. மீதமிருக்கும் வெற்றியின் பங்கைத்தான் நமது பிரச்சார உத்திகளும், நமது தேர்தல் களப்பணிகளும் தீர்மானிக்கிறது.
இந்த புரிதலை எனக்குத் தந்தது அண்ணாவின் தேர்தல் அரசியல் வழிமுறைகள் தாம். ஆம், அண்ணா நாம் வீழ்த்த படவேண்டிய பொது எதிரி காங்கிரசு தான் என்பதைத்தீர்மானிக்கிறார். காங்கிரசுக்கு மிகப்பெரிய பலமாக பெரியாரும், காமராசரும் இருக்கிறார்கள் என்பதை உணர்கிறார். காங்கிரசை எதிர்க்கும் மற்ற சக்திகள் யார் என்பதைக் கவனிக்கிறார். அந்தச்சக்திகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வருகிறார். அப்படி அண்ணா ஒரு குடையின் கீழ் கொண்டுவந்த கட்சிகள் தாம் ஆச்சாரியாரின் சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக், ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள். அவர்கள் எல்லோருடனும் இணைந்து பொது எதிரியாம் காங்கிரசை எதிர்க்கிறார், வீழ்த்துகிறார்.
இந்த அண்ணாவின் தேர்தல் வியூகத்தை கையில் எடுத்துத்தான் பொது எதிரியாம் பாஜக-விற்கு எதிரான சக்திகளை எல்லாம் இணைத்து இங்கே மாபெரும் வெற்றி கண்டார் மு.க.ஸ்டாலின். அதே நேரம்  அண்ணாவின் இந்தத்தேர்தல் வியூகம் பற்றிய புரிதல் இல்லாமையால் தனித் தனியாகக்களம் புகுந்து வடக்கில் பெரும் தோல்வியைச் சந்தித்து புலம்பிக் கொண்டிருக்கின்றனர், பாஜக-விற்கு எதிரான கட்சிகள். 

இதன் மூலமாக பொது எதிரியை வீழ்த்துவதில் அண்ணாவின்தேர்தல் கொள்கை எத்தகைய அவசியமானது, வலிமையானதுஎன்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இருந்த போதிலும் தேர்தல் கூட்டணி அமைப்பதில் அன்றும்இன்றும் திமுக மீது ஒரு விமர்சனம் எழுந்து கொண்டே இருக்கும். அது எப்படிக் கொள்கை முரணான கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம்? என்று.

அண்ணா யார் நன்மை செய்தாலும் பாராட்டுவார், தவறிழைத்தால் எதிர்ப்பார். அப்படிதான் ஆச்சாரியார் கொண்டு வந்த தஞ்சை பண்ணையாள் சட்டத்தைப் பாராட்டினார், குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தார். குறைந்த பட்சக் கொள்கை உத்தரவாதத்துடன் அவருடன் கூட்டணியும் அமைத்தார்.

அப்படித்தான் கலைஞரும் கூட்டணியில் இருந்தபோதிலும் பாஜக கொண்டு வந்த பசுவதை தடைச் சட்ட மசோதாவைக்கடுமையாக எதிர்த்து அதை தடுத்தார்.

இதன்படி கொள்கை முரணான ஆச்சாரியாருடனும், வாஜ்பாயுடனும் கூட்டணி சேர்ந்ததாலே எந்த இடத்திலும் திமுகதன் கொள்கைப் பிடிப்பைத் தளர்த்து கொண்டிருக்கவில்லைஎன்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதனோடு அண்ணா வகுத்த தேர்தல் பாதையானது என்றுமே தன் அடி நாதத்திலிருந்துவிலகி கொண்டிருக்கவில்லை என்பதையும் உணர வேண்டும்.
 
அர்ப்பணிப்பும், அதிகாரப் பரவலும்:
அரசியல் அகராதியில் ஆகச் சிறந்த சொல் அர்ப்பணிப்பு. இந்த அர்ப்பணிப்பு என்ற சொல்லிற்கு முழு அர்த்தமானவர்அண்ணா. அர்ப்பணிப்பும், அரவணைப்புமே தேர்தல் அரசியலில் அண்ணாவிற்கு ஆகச் சிறந்த வெற்றியை பெற்றுத் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

“East offers to the West two sentiments, Motherhood and Brotherhood”
இது ஹாப்கின்ஸ் வடித்த அழகிய வரிகள். இந்த வரிகள்அப்படியே அண்ணாவின் அரசியலுக்குப் பொருந்தும். ஆம் அண்ணா தன் அரசியலை தலைவன்-தொண்டன் எனும்அடிப்படையில் அமைத்திருக்க வில்லை; அண்ணன்-தம்பி என்ற உறவு முறையிலேயே அமைத்திருந்தார். கட்சியிலும், களத்திலும்அனைத்து அதிகாரங்களையும் பரவலாக்கினார். தான் தலைவன் என்ற எண்ணம் கொஞ்சமும் அவரிடம் இருந்ததாகஅறியமுடியவில்லை.

அதனாலேயே அவரால் தம்பி வா, தலைமை ஏற்க வா, உன் தலைமைக்கு நாங்கள் கட்டுப்பட்டு இருப்போம் என்று நாவலரைஅழைக்க முடிந்தது; தான் தயங்கிய சென்னை மாநகராட்சி தேர்தலில் தன்னிடம் சவால் விட்டு வென்று காட்டிய கலைஞரையும் கணையாழி கொடுத்து வாழ்த்த முடிந்தது.

நன்றாகத் தெரியும் 1967ல் தி.மு.கழகம் வென்று ஆட்சி அமைக்கும் என்று. ஆனாலும் முதலமைச்சர் பதவியைப் பற்றிச்சிந்திக்காமல் சட்டமன்றத்தை விடுத்து பாராளுமன்றத்திற்குத்தேர்தலில் நிற்கிறார் என்பதிலே அவரது அர்ப்பணிப்பு உள்ளத்தைஉணர்ந்து கொள்ளலாம்.
 
நிதானம் தந்த வெற்றி:
சற்று நிதானமாய் சிந்தித்து பாருங்களேன். இன்று டெப்பாசிட் கூட வாங்க முடியாத கட்சிகள், நாங்கள் தான் அடுத்த ஆட்சி அமைப்போம் என்கிறார்கள்; சில பேர் அடுத்த ஆட்சி எங்களுடையதே என்று சொல்லித்தான் கட்சியையேதொடங்குகிறார்கள்; இன்னும்  வேடிக்கை என்னவென்றால் சில நடிகர்கள் கட்சியைத் தொடங்காமலே அடுத்தது எங்கள் ஆட்சிதான் என்று வீர வசனமும் பேசுகின்றனர். இப்படி எல்லாம் பேச இவர்களுக்கு எந்தவித கூச்சமும் ஏற்படுவதில்லை. மக்களுடன், மக்கள் பிரச்சனைகளுடன் தம்மை இணைத்து கொள்ளாமல் இப்படி ஆட்சியைப் பிடிப்பதிலே இத்தனை வேகம் காட்டுகிறார்களே, இவர்களின் அரசியல் கொள்கைதான் என்ன? தேர்தல் நோக்கம்தான் என்ன?
வேறெதுவும் இல்லை வெறும் ‘பிழைப்புவாதமே’. எந்தவிதக்கொள்கை, நோக்கம், அர்ப்பணிப்பு எதுவுமே இல்லாமல் வெறும் கவர்ச்சி வார்த்தையால் மட்டும் ஆட்சியையும், பதவியையும்பிடித்துவிட அத்தனை வேகம் காட்டுகிறார்கள்.

ஆனால், மொழிப் போராட்டங்கள், மாநில உரிமைக்கானபோராட்டங்கள், மக்கள் நலனுக்கான போராட்டங்கள், நாடக, திரைப்படங்கள் மூலம் சமூக, அரசியல் விழிப்புணர்வு பேசுதல், பத்திரிக்கைகள் மூலம் மக்களை அரசியல் படுத்துதல், தெருமுனை பிரசாரங்கள் மூலம் பகுத்தறிவு பரப்புதல் என எப்போதும் மக்களுடன் இணைந்திருந்த தி.மு.கழகமோதேர்தலில் போட்டியிடவே அத்தனை தயக்கம் காட்டியது; அத்தனை நிதானம் கடைப்பிடித்தது. இதனை அண்ணா இப்படி விளக்குகிறார், “தேர்தல் மற்ற கட்சியினருக்கு அறுவடை, நமக்கு உழவுதான்; நாம் காடு கரம்புகளை திருத்தும் உழவு என்ற முறையிலே தேர்தலில் ஈடுபட வேண்டும்” என்று.

தி.மு.கழகம் தேர்தல் அரசியலில் சறுக்கினால் அது மாநில சுயாட்சி முழக்கம் சறுக்கியதாகவே பார்க்கப்படும்; தி.மு.கழகம்தேர்தல் அரசியலில் சறுக்கினால் பார்ப்பனியத்திற்கு எதிரான ஒரு மாபெரும் தத்துவமே சறுக்கியதாகப் பார்க்கப்படும்; தி.மு.கழகம்தேர்தல் அரசியலில் சறுக்கினால் அது ஒரு மாபெரும் இனம் காக்க முன்னெடுத்த  நம்பிக்கை சறுக்கியதாகவே பார்க்கப்படும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டே அண்ணா தேர்தல் அரசியலில் நிதானத்தைக் கடைப்பிடித்திருக்கக் கூடும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

எனவேதான் 1949-ல் கட்சியை தொடங்கினாலும், 1952-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பங்கெடுக்காமல், பின்னர் கட்சியினரிடமும், பொது மக்களிடமும் தேர்தலில் பங்கெடுக்கலாமா என்று பொது வாக்கெடுப்பு நிகழ்த்தி, அதன் அடிப்படையிலே 1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நின்று, 15 இடங்களில் வென்று, அடுத்து நிகழ்ந்த 1962-ஆம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் வென்று முக்கிய எதிர்க்கட்சியாகச்செயற்பட்டு, கட்சி தொடங்கி 18 ஆண்டுகள் கழித்து, 1967-ஆம் ஆண்டுதான் ஆட்சியைப் பிடிக்கிறார் அண்ணா. அவ்வளவு நிதானமாகத்தான் தன் ஒவ்வொரு அடியையும் தேர்தல் பாதையிலே வைத்திருக்கிறார் அண்ணா. அதனாலே அவர் பதித்திருந்த தடம் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் அழிக்க முடியாமலே இருக்கிறது.
 
வெற்றிக்கு பின்னான நிதானம்:
இதோ அவரின் எண்ணப்படி ஆட்சியை பிடித்தாயிற்று. இதோடு அண்ணாவின் தேர்தல் பாதை முடிவுற்றது என்று நினைத்தால் அது தவறு. 
தேர்தல் அரசியலின் முக்கிய மாண்பே ஜனநாயகம் தான். ஜனநாயகத்தின் அடிப்படையிலே ஆட்சி அமையவேண்டும் என்பதே அண்ணாவின் அரசியல். அதன்படியே அவர் முதலமைச்சர் ஆனதும் காமராசரைச் சந்தித்து ஆட்சிக்கானஆலோசனை பெறுகிறார். பக்தவத்சலத்தின் பிறந்தநாள் விழாவிற்குத் தலைமை ஏற்று வாழ்த்துரைக்கிறார். அதற்கு முன்பாகத் தேர்தல் அரசியலால் முரண்பட்டுப் பிரிந்திருந்தபெரியாரைச் சந்தித்து ஆட்சியை அவருக்குக் காணிக்கை ஆக்குகிறார். 

என்ன ஓர் உயர்ந்த பண்பு! 
என்ன ஓர் அரசியல் நாகரிகம்! 
என்ன ஒரு ஜனநாயக மாண்பு! 
இவை தான் அண்ணாதுரையை அகிலம் போற்றும் பேரறிஞர்அண்ணாவாக மிளிரச் செய்தது.
இதைத்தான் 03.06.1967 அன்று, அண்ணா தான் முதன்முதலாய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் இப்படி விளிக்கிறார், “ஆட்சி செம்மையானதாகிட நானும் எனது நண்பர்களும் அமைச்சரகத்தில் அமர்ந்து பணியாற்றினால்மட்டுமே போதாது; அரசு நடந்திட ஆயிரமாயிரம் திறமை மிகு அலுவலகர்கள் பணியாற்றினால் மட்டும் போதாது; ஆட்சி உண்மையில் செம்மையானதாக அமைந்திட வேண்டுமெனில்வயலில், தொழிற்சாலையில், அங்காடியில் பணிபுரிந்திடும்உற்பத்தியாளர்கள் அனைவரும், ‘ ஆட்சி நடத்திடுவது நாமே’ என்ற உணர்வுடன் தத்தமது கடமையினைச் செய்ய வேண்டும்; கற்றறிவாளர் எம்மை நல்வழி நடத்திடச் செய்ய வேண்டும்; இதழ் நடத்துவோர் உடனிருந்து முறை கூறிட வேண்டும்; இவர் யாவரும் சேர்ந்து நடந்திடுவதே அரசு; நாங்கள் உங்களாலேஅமர்த்தப்பட்டவர்கள்”.
 
வாழ்க அண்ணா...
வளர்க திராவிடம்...

- Gopinath Kubendran
(திராவிட வாசிப்பு டிசம்பர் 2020 இதழில் வெளியான கட்டுரை)