Sunday, January 17, 2021

அண்ணாவின் தேர்தல் பாதை. - கோபிநாத் குபேந்திரன்

அண்ணாவின் தேர்தல் பாதை. - கோபிநாத் குபேந்திரன்

- Gopinath Kubendran
(திராவிட வாசிப்பு டிசம்பர் 2020 இதழில் வெளியான கட்டுரை)

அண்ணா முதன்முதலில் 1935-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நிற்கிறார்; பின்பு தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கும் திராவிடர் கழகத்தில் பெரியாரோடு இணைந்து பயணிக்கிறார்; திடீரென்று நமக்குத் தேவை வேட்டரசியல் அல்ல, ஓட்டரசியல்தான் என்று பெரியாரிடமிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகம் காண்கிறார்; அப்படிக் கண்டும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடாமலே ஒதுங்குகிறார்; இடையில் 1959-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் தயக்கத்துடன்போட்டியிட்டு வெல்கிறார்; தனி திராவிட நாடு வேண்டி முழக்கமிடுகிறார்; பிரிவினைவாத தடைச்சட்டம் வந்தவுடன்திராவிட நாடு கோரிக்கையிலிருந்து பின்வாங்குகிறார்;  அதன்பின் வந்த ஆட்சிமொழி சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து களம் காண்கிறார்; தன்னை பாராளுமன்றம் அனுப்ப ஆர்வம் காட்டிய ஆச்சாரியாரை குலக்கல்வி திட்டத்திற்காகக்கடுமையாக எதிர்கிறார்; அவருடனே இணைந்து தேர்தல் களம் காண்கிறார்; காமராஜர் தலைமையிலான காங்கிரஸைவிரட்டவேண்டும் என்கிறார்; தன்னை ஒரு கோழை என்ற காமராஜர் கண்டிப்பாக வெல்லவேண்டும் என்று குடியாத்தம்இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விலகி காமராஜருக்கேஆதரவளிக்கிறார்; பேர் கொடுத்த பெரியாரைத் தேர்தல் களத்தில் எதிர்க்கிறார்; கல்லக்குடி போராட்டத்தைக் கேலிபேசியகம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறார்; 67ல் ஆட்சி நிச்சயம் என்கிறார்; ஆனால் முதலமைச்சர் பதவியை முன்னெடுக்கும் சட்டமன்றத்திற்குப் போட்டியிடாமல்நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுகிறார்.

என்ன, அண்ணாவின் தேர்தல் பாதை இப்படி முரணும்குழப்பமும் நிறைந்த இடியாப்பச் சிக்கலாக இருக்கிறதே... என்ற எண்ணம்தானே தோன்றுகிறது?

ஆம், அண்ணாவின் தேர்தல் பாதையை அங்கொன்றும், இங்கொன்றும், அவரிடமொன்றும், இவரிடமொன்றும் அறியும் போது அது கண்டிப்பாக ஓர் இடியாப்பச் சிக்கலாகவே இருக்கும். ஒரே ஒருமுறை அண்ணாவைப் படித்து பாருங்களேன், பிறகு நீங்களே சொல்வீர்கள், “ஆம், அது ஒரு நேர்த்தியாக கோர்க்கப்பட்ட அழகிய பூச்சரம், இடியாப்பச் சிக்கல் அல்ல” என்று.
ஏனெனில் அண்ணா, தன் செயற்பாடுகள் குறித்த அத்தனை விமர்சனங்களுக்கும் தன் நிகழ்காலத்திலேயே விடைகளை சொல்லியிருக்கிறார். அதனினும் ஆச்சரியம், அவர் தன் மீதான எதிர்கால விமர்சனங்களுக்கும் தன் நிகழ்காலத்திலேயேவிடையளித்துச் சென்றிருக்கிறார் என்பதுதான்.

நட்பு முரண்கள், பகை முரண்கள், கொள்கைக்காகக்கட்சியை விட்டுவிட முடியாத சூழல்கள், கட்சிக்காகக்கொள்கையை விட்டுவிட முடியாத பரிதவிப்புகள், பாரத-சீனப்போர்கள்,  பற்றாததற்குத் தம்பிமார்களின் பனிப்போர்கள், சட்டத்தாக்குதல்கள், சனாதன மோதல்கள் என அண்ணாவின் தேர்தல் பாதை ஒரு கரடுமுரடான பாதைதான். ஆனால், அந்த கரடுமுரடான பாதையில் அண்ணாவின் பயணமானது ஓர் இலக்கிய நயத்தை ஒத்தது.

அண்ணாவின் அரசியல் பாதையை... என்ன அரசியல் பாதையா? தேர்தல் பாதை பற்றித்தானே தலைப்பு என்று கேட்கிறீர்களா?  பூவை ‘புஷ்பம்’னும் சொல்லலாம், புஷ்பத்தை‘ஃபிளவர்’னும் சொல்லலாம். ஆம், அண்ணாவின் தேர்தல் பாதையை அண்ணாவின் அரசியல் பாதை என்றும் சொல்லலாம், திமுகவின் அரசியல் பாதை என்றும் சொல்லலாம், ஏன் தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பாதை என்றும் கூடச் சொல்லலாம் எல்லாமே ஒன்றுதான். இதில் சிறப்பு என்னவெனில் அந்த அண்ணாவின் அரசியல் பாதையின் ஒட்டுமொத்தச்சூத்திரத்தையும் சுருக்கி ஒற்றை எண்ணில் அடக்கிட விளக்கிடமுடியும். அந்த ஒற்றை எண் யாதெனில், “1967”.

எப்படி.? 1967-ஆம் ஆண்டுதான் திமுக முதன்முதலாக ஆட்சி அமைக்கிறது. ஆனால் அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பாகவே11.08.1957 அன்று மதுரையில் அறிஞர் அண்ணா உரையாற்றுகிறார். அதுவும் என்ன தலைப்பில் தெரியுமா?, “1967”. ஆம் தலைப்பே 1967 தான். அதில் அண்ணா, “இந்த கூட்டத்தில் எனக்குப் பேசக் கொடுத்திருக்கும் தலைப்பு 1967; இது நானாக எடுத்துக்கொண்ட தலைப்பல்ல; நண்பர்களேதேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு; அவர்களாகவேதேர்ந்தெடுத்ததாகக் கூட நான் கருதவில்லை. நம் மாநில நிதியமைச்சர் ஒரு பத்து ஆண்டுக்கு நீங்கள் எல்லாம் சும்மா இருங்களேன் என்று சட்ட சபையிலே சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்” என்று தொடங்கி,  பத்து ஆண்டுகள் கழித்து 1967-ல் வழி பிறக்கக் கூடுமானால் உங்களிலே பலபேர் இன்றைய தினம் உழைத்த உழைப்பு அன்றைய தினம் தான் பலன் தரும் என்று சொல்லி முடிக்கிறார். சொன்னபடி 1967-ல் ஆட்சியை பிடிக்கிறார்.
என்ன ஒரு தீர்க்கதரிசனம்? அப்படி என்று சொல்லி நான் அண்ணாவை ஒரு குறிசொல்லும் சாமியாராக ஆக்கமாட்டேன். ஆகா! என்ன ஒரு திட்டமிடல்! என்றே வியந்து புகழ்கிறேன். ஏனெனில் அண்ணா ஒரு சிற்பி. உளி தாங்கி உயிரில்லாத கல்லுக்கு, உரு வார்க்கும் சிற்பி அல்ல; தன் வலி தாங்கி உயர்ந்ததொரு அரசை உருவாக்கும் சிற்பி. அந்தச் சிற்பி செதுக்கியெடுத்த விலைமதிப்பற்ற சிற்பம் தான், 1967.
ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்பு, இன்றும் கூட மாற்று அரசியல் வேண்டும் என வரும் கட்சிகள் அனைத்தும் 1967-ஐ சுட்டிக்காட்டியே, “வரலாறு திரும்பும்” என்று பேசுகிறார்கள் எனில், அந்த அண்ணாவின் 1967, எவ்விதத் தாக்கத்தை இங்கே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறதல்லவா? ஆனாலும் கூட அவர்கள் ஒருவராலும் அப்படி ஒரு வரலாற்றுத் திருப்பத்தை இதுவரையிலும் ஏற்படுத்த முடியாமல் வீழ்ந்து கொண்டே இருக்கின்றனரே, ஏன்? ஏனெனில் அங்கேதான் அண்ணா நிற்கிறார். அண்ணாவின் தேர்தல் பாதைக்கும் இவர்களின் தேர்தல் பாதைக்கும் உள்ள வித்தியாசம் தான் அதனை தீர்மானிக்கிறது. அந்த வித்தியாசம் நிஜத்திற்கும்நிழலுக்குமான வித்தியாசம். 
இதனை சில காரணிகளைக் கொண்டு நோக்கினால்சிறப்பாக விளங்கும்.

• தாக்கமும் நோக்கமும்.
• வியப்பூட்டும் வியூகம்.
• அர்ப்பணிப்பும், அதிகாரப் பரவலும்.
• நிதானம் தந்த வெற்றி.
• வெற்றிக்கு பின்னான நிதானம்.
 
தாக்கமும் நோக்கமும்:
நாட்டின் விடுதலைக்குப் போராடிய மாபெரும் இயக்கம் காங்கிரஸ்; உலக அளவில் போற்றப்படும் உன்னதத் தலைவர் நேரு; தமிழக மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்குபவர் காமராசர். இவர்களுக்கு எதிராக நாம் இயங்க வேண்டும், இவர்களை அகற்றிவிட்டு ஆட்சியில் நாம் அமரவேண்டும். அப்படியெனில் அதற்குச் சரியானதொருகாரணமும் நோக்கமும் இருக்க வேண்டுமல்லவா? அது என்ன, இதோ அண்ணாவே விளக்குகிறார்.

“ஒரு முருங்கை மரம் இருக்கிறது. அதிலிருந்த சுவையான முருங்கைக்காயும், முருங்கைக்கீரையும் சமைத்து உண்டோம். இப்போது அந்த முருங்கை மரத்தில் அந்தக் காயோ, கீரையோஇல்லை; முழுவதும் கம்பளி புழுக்களாக இருக்கிறது; அதற்காக அந்தக் கம்பளிப் புழுக்களைக் கொண்டு கரி சமைத்து உண்ணமுடியுமா? அந்த மரம் போன்றது தான் இன்று காங்கிரசுகட்சி”.

அதாவது காங்கிரஸ் கட்சி உருவான நோக்கம் வெள்ளையர்களிடமிருந்து தேச விடுதலையைப் பெறுவது. அதை பெற்றாகிவிட்ட பின்பு இங்கே காங்கிரஸ் ஆட்சி பயனற்றது என்கிறார் அண்ணா.
மேலும் இதைக் குறித்து அண்ணா, “யானை மேல் ஏறிச்செல்பவனிடம் சுண்ணாம்பு கேட்ட கதை போல, ஓங்கி வளர்ந்து விட்ட காங்கிரசைக் கொண்டு மக்களாட்சிக்குச் சாதகம் செய்துகொள்ள முடியாது. உங்களைப் போல பாதையில் நடப்பவர்கள், உங்களைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தினர், நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிறவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் நாளைக்கு நமக்குத் தேவையான காரியத்தைச்சாதித்துக்கொள்ள முடியும்” என்றும் விளக்குகிறார்.

இங்கே நமக்கு ‘தேவையான காரியத்தை’ என்று அண்ணா கூறியிருப்பதாக நான் நினைப்பது மாநில மக்களின் நலனைமுன்னிறுத்தும் மாநில சுயாட்சி உரிமைகளைத்தான். ஏனெனில் அன்றைய நாட்களில் காமராசர் முதல்வராக இருந்த போதிலும்இங்கே எந்தவொரு பிரச்சனை மற்றும் திட்டம் சார்ந்த முடிவுகள் எதுவாக இருப்பினும் அதற்கு நேருவிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக இருந்தது.
இதை அண்ணா அவருக்கே உரிய தொனியில் மிக அழகாக, “இப்போது உங்களுக்கு எம்.எல்.ஏ. வாக காங்கிரஸ் கட்சி மாசிலாமணி செட்டியார் இருக்கிறார், அவரிடம் நீங்கள் சென்று ஒரு கோரிக்கையைக் கேட்டீர்கள் என்றால் அவர், “இருங்கபோய் காமராசரைக் கேட்டுவிட்டு வருகிறேன்” என்று சொல்வார். காமராசர் இவர் சொன்னவுடன், ஆகட்டும் பார்க்கலாம் என்றோமுடியாது என்றோ சொல்லிவிட மாட்டார், “இருங்க நேருவிடம்கேட்டுச் சொல்கிறேன்” என்பார். நேரு என்ன உத்தரவிடுகிறாரோஅது காமராசருக்குத் தபாலில் கிடைத்து, அதை காமராசர்மாசிலாமணி செட்டியாருக்குக் காட்டி, பிறகு அதை அவர் உங்களுக்குக் காட்ட வேண்டும்.
இதை நீங்கள் எண்ணிப் பார்த்தால் அங்கே இரண்டு தபால் பெட்டிகள் இருப்பதைப் பார்க்கலாம், ஒரு ஜங்ஷன்இருப்பதையும் பார்க்கலாம்.

இதுவே நீங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த அன்பர் ஒருவரை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து, அவரிடம் உங்கள் கோரிக்கை ஒன்றை வைக்கிறீர்கள் எனில்,  அவர் என்ன செய்வார் தெரியுமா? நேராகத் தலைமைக் கழகம் வந்து நமது தலைவர் நெடுஞ்செழியனை சந்தித்து அந்தக் கோரிக்கையைச்சொல்வார். நெடுஞ்செழியன் உடனே, “இருங்கள் நான் வடக்கேபோய் கேட்கிறேன்” என்று சொல்ல மாட்டார். படித்துப் பார்த்து அங்கேயே முடியும் என்றால் முடியும் என்பார், முடியாது என்றால் முடியாது என்று சொல்லி அதற்கான காரணத்தையும் விளக்குவார்; அந்த விளக்கத்தை நீங்கள் உங்கள் திராவிட முன்னேற்றக் கழகசட்டமன்ற உறுப்பினரையும் கேட்கலாம், நெடுஞ்செழியனையும்கேட்கலாம்” என்று எடுத்துரைத்து, திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் ஆட்சிக்கும் வரவேண்டும் என்ற காரணத்தை, நோக்கத்தைமக்களிடையே தொடர்ந்து தெளிவுபடுத்திக் கொண்டே இருந்தார்.
தேர்தல் பாதையில் பயணிக்க இருக்கிறோம் என்று பெரியாரிடமிருந்து பிரிந்து வந்த பின்பு, அண்ணாவின் மீதான விமர்சனங்கள் மிக அதிகமாயின. தேர்தல் அரசியலுக்குள்சென்றால் திராவிட நாடு கோரிக்கையை வலுவாக வைக்க முடியாது என்று பெரியாரால் மட்டுமின்றி ஈ.வெ.கி.சம்பத்போன்றோராலும் பேசப்பட்டது.

ஆனால், அண்ணாவின் அவர்களுக்கான பதில் அற்புதமானது. அண்ணா சொல்கிறார், “தி.மு.கழகத்திற்கு மூன்று பெரிய காரியங்களை செய்ய வேண்டிய  பெரும் பொறுப்பு இருக்கிறது. மக்களைத் திருத்த வேண்டும், சர்க்கார் தவறிழைத்தால் சர்க்காரைத் திருத்த வேண்டும், சொந்தச் சர்க்காரை நாம் அமைக்க வேண்டும். இது மூன்றையும் நாம் செய்தாக வேண்டும். இதில் ஒன்று இல்லையெனினும் அது சரிப்படாது. நாம் அல்லி-அர்ஜுனா நாடகம் போட வேண்டுமென்றால், நாடகத்தில் நடிக்க ஆட்கள் இருக்க வேண்டும், நாடகத்தைக் காண மக்கள் இருக்க வேண்டும், நாடகத்தை நடத்த மேடை இருக்க வேண்டும். இதில் ஒன்று இல்லையென்றாலும் நாடகம் நடத்த முடியுமா? அல்லது இதில் ஒன்றைத்தான் தேவையில்லை என்று ஒதுக்கிட முடியுமா”.

இதன் பொருட்டு, தான் தேர்தல் அரசியலைதேர்ந்தெடுத்தற்கு இந்த மூன்று காரணங்களை முத்தாய்ப்பாய்வைக்கிறார் அண்ணா. மக்களை நெறிப்படுத்த வேண்டும், ஆட்சியை நெறிப்படுத்த வேண்டும், அதற்கு நாமே ஆட்சியை அமைக்க வேண்டும்.

இப்படியாக, மாநில நலன் காக்கப்பட வேண்டும்; மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும்; அதற்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் நாம் இருக்க வேண்டும்; அதனால் காங்கிரஸ் வீழ்த்தப்பட வேண்டும் என்று தனது தேர்தல் பாதையின்நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார் அண்ணா.

ஆனால், இன்று திராவிடத்திற்கு எதிராக மாற்று அரசியல் வேண்டும் என்று வருவோரிடம் என்ன நோக்கம் இருக்கிறது? என்ன காரணம் இருக்கிறது? என்று கேட்டுப்பாருங்களேன். ஊழல், உளுத்தம்பருப்பு, வாரிசு, வடபாயாசம் என்று அரைத்தமாவையே அரைத்து கொண்டிருப்பார்கள். திராவிடம் எங்களுக்குக் கல்வி தரவில்லை அதனால் மாற்று அரசியல் கோருகிறோம் என்று அவர்களால் சொல்ல முடியாது, ஏனெனில் அவர்கள் எல்லாருமே பட்டதாரிகளாக இருப்பர். திராவிடம் எங்களுக்கு வேலைவாய்ப்பைத் தரவில்லை அதனால் மாற்று அரசு வேண்டுகிறோம் என்று அவர்களால் சொல்ல முடியாது, ஏனெனில் அவர்கள் அரசுப் பணியிலும், ஐ.டி. கம்பெனியிலும்அமர்ந்து கொண்டு இருப்பார்கள். இதைத்தான் நான் முன்பே சொல்லியிருந்தேன். 

அண்ணாவின் தேர்தல் நோக்கம் நிஜம், வென்றது. 
அவர்களின் தேர்தல் நோக்கம் நிழல், தோற்கிறது.
 
வியப்பூட்டும் வியூகம்:
தேர்தல் அரசியல் என்பது ஒரு மாறுபட்ட களம். இதில் ஒரே இலக்கு வெற்றி மட்டும் தான். அந்த வெற்றியைத் தடுக்கும் பலம் பொருந்திய எதிரி ஒருவன் இருப்பான். அவனை இனம் கண்டு வீழ்த்த வேண்டும். அந்த பலம் பொருந்திய எதிரியை வீழ்த்த வேண்டுமெனில் அதற்குச் சரியான வியூகம் வகுக்க வேண்டும். அத்தகைய வியூகத்தை வகுப்பதில் பெரும் வித்தகர்தாம்அண்ணா.
தேர்தல் அரசியல் களத்தில், நாம் வீழ்த்த வேண்டிய ஆகப்பெரிய பொது எதிரி யார் என்பதைச் சரியாகத்தீர்மானித்தாலே நமக்கு கால் பங்கு வெற்றி உறுதியாகிறது. அந்த பொது எதிரியை வீழ்த்தும் நோக்கமுள்ள கட்சிகள் எவை என இனம் கண்டு, அவற்றுடன் குறைந்தபட்ச புரிதல் உடன்பாட்டுடன்இணைந்தாலே நமக்குப் பாதி வெற்றி உறுதி செய்யப்படுகிறது. மீதமிருக்கும் வெற்றியின் பங்கைத்தான் நமது பிரச்சார உத்திகளும், நமது தேர்தல் களப்பணிகளும் தீர்மானிக்கிறது.
இந்த புரிதலை எனக்குத் தந்தது அண்ணாவின் தேர்தல் அரசியல் வழிமுறைகள் தாம். ஆம், அண்ணா நாம் வீழ்த்த படவேண்டிய பொது எதிரி காங்கிரசு தான் என்பதைத்தீர்மானிக்கிறார். காங்கிரசுக்கு மிகப்பெரிய பலமாக பெரியாரும், காமராசரும் இருக்கிறார்கள் என்பதை உணர்கிறார். காங்கிரசை எதிர்க்கும் மற்ற சக்திகள் யார் என்பதைக் கவனிக்கிறார். அந்தச்சக்திகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வருகிறார். அப்படி அண்ணா ஒரு குடையின் கீழ் கொண்டுவந்த கட்சிகள் தாம் ஆச்சாரியாரின் சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக், ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள். அவர்கள் எல்லோருடனும் இணைந்து பொது எதிரியாம் காங்கிரசை எதிர்க்கிறார், வீழ்த்துகிறார்.
இந்த அண்ணாவின் தேர்தல் வியூகத்தை கையில் எடுத்துத்தான் பொது எதிரியாம் பாஜக-விற்கு எதிரான சக்திகளை எல்லாம் இணைத்து இங்கே மாபெரும் வெற்றி கண்டார் மு.க.ஸ்டாலின். அதே நேரம்  அண்ணாவின் இந்தத்தேர்தல் வியூகம் பற்றிய புரிதல் இல்லாமையால் தனித் தனியாகக்களம் புகுந்து வடக்கில் பெரும் தோல்வியைச் சந்தித்து புலம்பிக் கொண்டிருக்கின்றனர், பாஜக-விற்கு எதிரான கட்சிகள். 

இதன் மூலமாக பொது எதிரியை வீழ்த்துவதில் அண்ணாவின்தேர்தல் கொள்கை எத்தகைய அவசியமானது, வலிமையானதுஎன்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இருந்த போதிலும் தேர்தல் கூட்டணி அமைப்பதில் அன்றும்இன்றும் திமுக மீது ஒரு விமர்சனம் எழுந்து கொண்டே இருக்கும். அது எப்படிக் கொள்கை முரணான கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம்? என்று.

அண்ணா யார் நன்மை செய்தாலும் பாராட்டுவார், தவறிழைத்தால் எதிர்ப்பார். அப்படிதான் ஆச்சாரியார் கொண்டு வந்த தஞ்சை பண்ணையாள் சட்டத்தைப் பாராட்டினார், குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தார். குறைந்த பட்சக் கொள்கை உத்தரவாதத்துடன் அவருடன் கூட்டணியும் அமைத்தார்.

அப்படித்தான் கலைஞரும் கூட்டணியில் இருந்தபோதிலும் பாஜக கொண்டு வந்த பசுவதை தடைச் சட்ட மசோதாவைக்கடுமையாக எதிர்த்து அதை தடுத்தார்.

இதன்படி கொள்கை முரணான ஆச்சாரியாருடனும், வாஜ்பாயுடனும் கூட்டணி சேர்ந்ததாலே எந்த இடத்திலும் திமுகதன் கொள்கைப் பிடிப்பைத் தளர்த்து கொண்டிருக்கவில்லைஎன்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதனோடு அண்ணா வகுத்த தேர்தல் பாதையானது என்றுமே தன் அடி நாதத்திலிருந்துவிலகி கொண்டிருக்கவில்லை என்பதையும் உணர வேண்டும்.
 
அர்ப்பணிப்பும், அதிகாரப் பரவலும்:
அரசியல் அகராதியில் ஆகச் சிறந்த சொல் அர்ப்பணிப்பு. இந்த அர்ப்பணிப்பு என்ற சொல்லிற்கு முழு அர்த்தமானவர்அண்ணா. அர்ப்பணிப்பும், அரவணைப்புமே தேர்தல் அரசியலில் அண்ணாவிற்கு ஆகச் சிறந்த வெற்றியை பெற்றுத் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

“East offers to the West two sentiments, Motherhood and Brotherhood”
இது ஹாப்கின்ஸ் வடித்த அழகிய வரிகள். இந்த வரிகள்அப்படியே அண்ணாவின் அரசியலுக்குப் பொருந்தும். ஆம் அண்ணா தன் அரசியலை தலைவன்-தொண்டன் எனும்அடிப்படையில் அமைத்திருக்க வில்லை; அண்ணன்-தம்பி என்ற உறவு முறையிலேயே அமைத்திருந்தார். கட்சியிலும், களத்திலும்அனைத்து அதிகாரங்களையும் பரவலாக்கினார். தான் தலைவன் என்ற எண்ணம் கொஞ்சமும் அவரிடம் இருந்ததாகஅறியமுடியவில்லை.

அதனாலேயே அவரால் தம்பி வா, தலைமை ஏற்க வா, உன் தலைமைக்கு நாங்கள் கட்டுப்பட்டு இருப்போம் என்று நாவலரைஅழைக்க முடிந்தது; தான் தயங்கிய சென்னை மாநகராட்சி தேர்தலில் தன்னிடம் சவால் விட்டு வென்று காட்டிய கலைஞரையும் கணையாழி கொடுத்து வாழ்த்த முடிந்தது.

நன்றாகத் தெரியும் 1967ல் தி.மு.கழகம் வென்று ஆட்சி அமைக்கும் என்று. ஆனாலும் முதலமைச்சர் பதவியைப் பற்றிச்சிந்திக்காமல் சட்டமன்றத்தை விடுத்து பாராளுமன்றத்திற்குத்தேர்தலில் நிற்கிறார் என்பதிலே அவரது அர்ப்பணிப்பு உள்ளத்தைஉணர்ந்து கொள்ளலாம்.
 
நிதானம் தந்த வெற்றி:
சற்று நிதானமாய் சிந்தித்து பாருங்களேன். இன்று டெப்பாசிட் கூட வாங்க முடியாத கட்சிகள், நாங்கள் தான் அடுத்த ஆட்சி அமைப்போம் என்கிறார்கள்; சில பேர் அடுத்த ஆட்சி எங்களுடையதே என்று சொல்லித்தான் கட்சியையேதொடங்குகிறார்கள்; இன்னும்  வேடிக்கை என்னவென்றால் சில நடிகர்கள் கட்சியைத் தொடங்காமலே அடுத்தது எங்கள் ஆட்சிதான் என்று வீர வசனமும் பேசுகின்றனர். இப்படி எல்லாம் பேச இவர்களுக்கு எந்தவித கூச்சமும் ஏற்படுவதில்லை. மக்களுடன், மக்கள் பிரச்சனைகளுடன் தம்மை இணைத்து கொள்ளாமல் இப்படி ஆட்சியைப் பிடிப்பதிலே இத்தனை வேகம் காட்டுகிறார்களே, இவர்களின் அரசியல் கொள்கைதான் என்ன? தேர்தல் நோக்கம்தான் என்ன?
வேறெதுவும் இல்லை வெறும் ‘பிழைப்புவாதமே’. எந்தவிதக்கொள்கை, நோக்கம், அர்ப்பணிப்பு எதுவுமே இல்லாமல் வெறும் கவர்ச்சி வார்த்தையால் மட்டும் ஆட்சியையும், பதவியையும்பிடித்துவிட அத்தனை வேகம் காட்டுகிறார்கள்.

ஆனால், மொழிப் போராட்டங்கள், மாநில உரிமைக்கானபோராட்டங்கள், மக்கள் நலனுக்கான போராட்டங்கள், நாடக, திரைப்படங்கள் மூலம் சமூக, அரசியல் விழிப்புணர்வு பேசுதல், பத்திரிக்கைகள் மூலம் மக்களை அரசியல் படுத்துதல், தெருமுனை பிரசாரங்கள் மூலம் பகுத்தறிவு பரப்புதல் என எப்போதும் மக்களுடன் இணைந்திருந்த தி.மு.கழகமோதேர்தலில் போட்டியிடவே அத்தனை தயக்கம் காட்டியது; அத்தனை நிதானம் கடைப்பிடித்தது. இதனை அண்ணா இப்படி விளக்குகிறார், “தேர்தல் மற்ற கட்சியினருக்கு அறுவடை, நமக்கு உழவுதான்; நாம் காடு கரம்புகளை திருத்தும் உழவு என்ற முறையிலே தேர்தலில் ஈடுபட வேண்டும்” என்று.

தி.மு.கழகம் தேர்தல் அரசியலில் சறுக்கினால் அது மாநில சுயாட்சி முழக்கம் சறுக்கியதாகவே பார்க்கப்படும்; தி.மு.கழகம்தேர்தல் அரசியலில் சறுக்கினால் பார்ப்பனியத்திற்கு எதிரான ஒரு மாபெரும் தத்துவமே சறுக்கியதாகப் பார்க்கப்படும்; தி.மு.கழகம்தேர்தல் அரசியலில் சறுக்கினால் அது ஒரு மாபெரும் இனம் காக்க முன்னெடுத்த  நம்பிக்கை சறுக்கியதாகவே பார்க்கப்படும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டே அண்ணா தேர்தல் அரசியலில் நிதானத்தைக் கடைப்பிடித்திருக்கக் கூடும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

எனவேதான் 1949-ல் கட்சியை தொடங்கினாலும், 1952-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பங்கெடுக்காமல், பின்னர் கட்சியினரிடமும், பொது மக்களிடமும் தேர்தலில் பங்கெடுக்கலாமா என்று பொது வாக்கெடுப்பு நிகழ்த்தி, அதன் அடிப்படையிலே 1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நின்று, 15 இடங்களில் வென்று, அடுத்து நிகழ்ந்த 1962-ஆம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் வென்று முக்கிய எதிர்க்கட்சியாகச்செயற்பட்டு, கட்சி தொடங்கி 18 ஆண்டுகள் கழித்து, 1967-ஆம் ஆண்டுதான் ஆட்சியைப் பிடிக்கிறார் அண்ணா. அவ்வளவு நிதானமாகத்தான் தன் ஒவ்வொரு அடியையும் தேர்தல் பாதையிலே வைத்திருக்கிறார் அண்ணா. அதனாலே அவர் பதித்திருந்த தடம் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் அழிக்க முடியாமலே இருக்கிறது.
 
வெற்றிக்கு பின்னான நிதானம்:
இதோ அவரின் எண்ணப்படி ஆட்சியை பிடித்தாயிற்று. இதோடு அண்ணாவின் தேர்தல் பாதை முடிவுற்றது என்று நினைத்தால் அது தவறு. 
தேர்தல் அரசியலின் முக்கிய மாண்பே ஜனநாயகம் தான். ஜனநாயகத்தின் அடிப்படையிலே ஆட்சி அமையவேண்டும் என்பதே அண்ணாவின் அரசியல். அதன்படியே அவர் முதலமைச்சர் ஆனதும் காமராசரைச் சந்தித்து ஆட்சிக்கானஆலோசனை பெறுகிறார். பக்தவத்சலத்தின் பிறந்தநாள் விழாவிற்குத் தலைமை ஏற்று வாழ்த்துரைக்கிறார். அதற்கு முன்பாகத் தேர்தல் அரசியலால் முரண்பட்டுப் பிரிந்திருந்தபெரியாரைச் சந்தித்து ஆட்சியை அவருக்குக் காணிக்கை ஆக்குகிறார். 

என்ன ஓர் உயர்ந்த பண்பு! 
என்ன ஓர் அரசியல் நாகரிகம்! 
என்ன ஒரு ஜனநாயக மாண்பு! 
இவை தான் அண்ணாதுரையை அகிலம் போற்றும் பேரறிஞர்அண்ணாவாக மிளிரச் செய்தது.
இதைத்தான் 03.06.1967 அன்று, அண்ணா தான் முதன்முதலாய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் இப்படி விளிக்கிறார், “ஆட்சி செம்மையானதாகிட நானும் எனது நண்பர்களும் அமைச்சரகத்தில் அமர்ந்து பணியாற்றினால்மட்டுமே போதாது; அரசு நடந்திட ஆயிரமாயிரம் திறமை மிகு அலுவலகர்கள் பணியாற்றினால் மட்டும் போதாது; ஆட்சி உண்மையில் செம்மையானதாக அமைந்திட வேண்டுமெனில்வயலில், தொழிற்சாலையில், அங்காடியில் பணிபுரிந்திடும்உற்பத்தியாளர்கள் அனைவரும், ‘ ஆட்சி நடத்திடுவது நாமே’ என்ற உணர்வுடன் தத்தமது கடமையினைச் செய்ய வேண்டும்; கற்றறிவாளர் எம்மை நல்வழி நடத்திடச் செய்ய வேண்டும்; இதழ் நடத்துவோர் உடனிருந்து முறை கூறிட வேண்டும்; இவர் யாவரும் சேர்ந்து நடந்திடுவதே அரசு; நாங்கள் உங்களாலேஅமர்த்தப்பட்டவர்கள்”.
 
வாழ்க அண்ணா...
வளர்க திராவிடம்...

- Gopinath Kubendran
(திராவிட வாசிப்பு டிசம்பர் 2020 இதழில் வெளியான கட்டுரை)

No comments:

Post a Comment