Friday, March 31, 2017

காயிதே மில்லத் விருது வழங்கும் விழாவில் நான் பேசியதன் சுருக்கம

Marx Anthonisamy
Via Facebook
2017-03-31

இன்று மாணிக் சர்க்கார் முதலானோருக்கு காயிதே மில்லத் விருது வழங்கும் விழாவில் நான் பேசியதன் சுருக்கம்:
**********************************************************************************
1.காயிதே மில்லத் அவர்களின் சிறப்புகளைச் சொல்லும்போது தாவூத் மியாகான் அவர்கள், அவர் அரசியல் சட்ட அவையில் பங்கேற்றது, முஸ்லிம் தனிநபர் சட்டம் இயற்றியதில் அவர் பங்கு முதலானவற்றைச் சுட்டிக் காட்டினார். என்னைப் பொருத்த மட்டில் அதை எல்லாம் காட்டிலும் காயிதே மில்லத் அவர்களின் சிறப்பு என்பது பிரிவினைக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு, சின்னா பின்னப் பட்டிருந்த முஸ்லிம் சமூகத்திற்கு யாருமே தலைமை கொடுக்கத் தயாரில்லாத நிலையில் அந்தத் தலைமையைத் தந்தவர் என்பதுதான் அவரது சிறப்பு. முஸ்லிம்கள் விஷயத்தில் மிகவும் நிதானமாகவும் நீதியாகவும் நடந்து கொண்ட மகாத்மா காந்தி உட்பட முஸ்லிம் லீக்கைக் கலைத்துவிடுமாறு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது 'இந்திய யூனியன் முஸ்லிம் லீக்' எனும் பெயரில் முஸ்லிம் லீக்கை அமைத்தவர் காய்தே மில்லத் அவர்கள். அமைப்புக் கூட்டம் சென்னையில் நடந்தது. முஸ்லிம்கலின் எண்ணிக்கை வடநாட்டிலேயே அதிகம் என்ற போதிலும் சென்னையில்தான் அப்போது அதைக் கூட்ட முடிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களில் மூவர் தமிழர்கள். இன்றுவரை முஸ்லிம் இயக்கங்கள் தென்னாட்டில்தான் வலுவாக உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

2.அரசியல் நேர்மைக்கான இந்த விருது அளிப்பு தொடங்கப்பட்ட இந்த மூன்று ஆண்டுகளிலும் மூன்று முக்கிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் நேர்மையாளர்கள் இன்றளவும் கம்யூ கட்சிகளில்தான் இருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சான்று. கம்யூனிஸ்டுகளும், பெரியாரியர்களும் இஸ்லாத்தையும், சிறுபான்மை மக்களையும் எப்போதும் அனுசரித்து வந்துள்ளனர். முதல் கம்யூ தலைவர்களில் ஒருவரான எம்.என்.ராய் ருஷ்யா சென்று லெனினை எல்லாம் சந்தித்து வந்தவர். அவர்தான் முஸ்லிம் மதத்தின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய ஒரு அருமையான குறுநூலையும் எழுதியவர். தமிழிலும் பல பதிப்புகள் கண்ட நூல் அது. அமீர் ஹைதர் கான் உள்ளிட்ட பல முஸ்லிம்கள் கம்யூ கட்சி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அதே போல பெரியாரும் முஸ்லிம் மதத்தையும், சமூகத்தையும் மிக நெருக்கமாக அணுகி வந்ததை நாம் அறிவோம்.

3. இன்று விருது வழங்கப்பட்ட திரு முகமது இஸ்மாயில் அவர்கள் ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். முதன் முதலில் மைனாரிடி கமிஷன் அமைக்கப்பட்டது ஜனதா தள ஆட்சியில்தான். அடுத்து அதிகாரத்துக்கு வந்த இந்திரா காந்தி வேறு வழியின்றி கோபால்சிங் கமிஷனை அமைத்தாலும் அதன் அறிக்கையை வெளியிடவே இல்லை. வி.பி.சிங் ஆட்சியில்தான் அது வெளியிடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கியதற்காகவே ஆட்சியை இழந்த கட்சி ஜனதா கட்சி. அந்தக் கட்சியின் மாநிலத் தலைவராகவும், ச.ம.உ வாகவும் இருந்தவர் இன்று விருது பெறும் முகம்மது இஸ்மாயில் அவர்கள்.

4.மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு வருவதற்கு முன் டிவியைத் திறந்தபோது நேற்று டில்லியில் 300 கறிக்கடைகள் தாக்கி அழிக்கப்பட்ட செய்திதான் முதலில் வந்தது. மதத்தை விமர்சித்துப் பேசியதால் ஒரு பெண் கவிஞருக்கு கூட்டுப் பாலியல் வன்முறை மிரட்டல் வந்துள்ளது இரண்டாவது செய்தி. மதவெறி பிடித்த சாமியார்கள் இன்று அரியணைகளில். விரைவில் ஜனாதிபதி மாளிகைக்குள்ளேயே ஆர்.எஸ்.எஸ் 'ஷாகா'க்கள் நடத்தப்படும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் மதச்சார்பற்ற சக்திகள், இடதுசாரிகள், பெரியாரியர்கள் எல்லோரும் ஒன்றாக, இன்னும் நெருக்கமாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

5. இங்கு நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் மே.வங்கத்தில் ஆட்சி செய்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. இன்று அது அங்கே படு தோல்வியுற்றுள்ளது. மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பும் அருகில் உள்ளதாகத் தெரியவில்லை.   இது குறித்து ஆய்வு செய்வோர் ஒன்றைக் குறிப்பிடுகின்றனர். மே.வங்கம்தான் இந்தியாவிலேயே மிக அதிக அளவில் முஸ்லிம் வாக்களர்கள் இருக்கும் மாநிலம் (கிட்டத்தட்ட 30 சதம்). முஸ்லிம்கள் மார்க்சிஸ்ட் கட்சியிடமிருந்து அந்நியப்பட்டுள்ளதுதான் இன்றைய அதன் தோல்விக்குக் காரணம் என்கின்றனர். இது எப்படி நிகழ்ந்தது? இதை சீரியசாக எடுத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி சுய பரிசோதனை செய்துள்ளதா? சுய விமர்சனம் செய்துள்ளதா?

6. இன்றுள்ள இடதுசாரி அணியினர், பெரியாரிய அணியினர் எல்லோரும் எந்த அளவு இன்றைய இந்துத்துவ ஆபத்து குறித்த பிரக்ஞையுடனும், தத்துவார்த்த மற்றும் வரலாற்றுத் தெளிவுள்ளவர்களாகவும் உள்ளனர் என்கிற கேள்வி என்னுள் எழுவதை இங்கு அதிக அளவில் கூடியுள்ள இடதுசாரித் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பெரும்பான்மை மதவாதத்தையும், சிறுபான்மை மதவாதத்தை யும் மிகத் துல்லியமாகவும் ஆழமாகவும் ஜவஹர்லால் நேரு போன்றோர் சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பே வேறுபடுத்திக் காட்டியுள்ளனர். ஆனால் நம் தோழர்கள் கோவை ஃபாரூக் கொலை விஷயத்தில் செய்துள்ள எதிர்வினைகளைப் பார்க்கும் போது இடதுசாரிகளாகவும், பெரியாரியவாதிகளாகவும் இருந்தாலும் கூட அவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் கூட இரண்டு மதவாதங்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாதவர்களாக உள்ளதைக் காண முடிகிறது. அடிமட்ட அளவில் மட்டுமல்ல; மேல்மட்டங்களிலும் இப்படித்தான் நிலைமை உள்ளது. சிறுபான்மை மதவாதம் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்படுத்தும் அழிவைக் காட்டிலும் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தும் அழிவே அதிகம்.  இடதுசாரிக் கட்சிகளும் பெரியார் இயக்கங்களும் மதவாதம் பற்றியும், சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் சிறுபான்மை மக்கள் பற்றியும் இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வாசிப்புகள், வகுப்புகள் முதலியன முக்கியம். இடதுசாரிகளும் பெரியாரியர்களும் இன்னும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தம்மை ஒடுக்கப்பட்ட மக்களுடனும், சிறுபான்மை மக்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

7. நான் சிறுபான்மை மக்கள் மத்தியில் பேசும்போதெல்லாம் மதச்சார்பின்மை என்கிற விஷயத்தில் நாம் இடதுசாரிகளையும் பெரியாரியர்களையும் தான் நம்பி இருக்க வேண்டும்; ஆதரவளிக்க வேண்டும் என்று சொல்லித்தான் முடிப்பேன். இனி நான் இதையே சற்று மாற்றிச் சொல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளேன். இடதுசாரி இயக்கங்களும், பெரியாரிய இயக்கங்களும் இன்றைய கால கட்டத்தில் சரிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன. உலகளவிலும் சரி இந்தியாவிலும் சரி வலதுசாரி, மதவாத பாசிச சக்திகள் மேலெழும் காலம் இது. இந்நிலையில் இடதுசாரிகளும் பெரியாரியர்களும் சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அடித்தள மக்களைச் சார்ந்திருப்பதுதான் அவர்களுக்கும் நல்லது என்பதைத்தாந் சொல்லப் போகிறேன். ஆம் இந்த இயக்கங்களுக்கும் அதுதான் நல்லது.

8.இடதுசாரிகள் இந்நிலையைப் புரிந்து கொள்ளவில்லை என நான் சொல்லவில்லை. தீண்டாமை ஒழிப்பு முன்னணியைப்போல இப்போது சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு அமைப்பையும் இந்தியக் கம்யூ கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி இரண்டும் உருவாக்கியுள்ளன. இந்த இரு இயக்கங்களும் முஸ்லிம் கைதிகள் தொடர்பாகச் சென்ற சில மாதங்களில் நடத்திய குறைந்த பட்சம் ஐந்து கூட்டங்களில் நானே பங்கு பெற்றுள்ளேன். ஆனால் இது மட்டும் போதாது. மதவாதம் குறித்தான அரசியல் தெளிவு இன்னும் நம் அணிகளுக்கு வேண்டியுள்ளது.

9.விருது பெற்றவர்களை வாழ்த்தி, வணங்கி விடை பெறுகிறேன்

Wednesday, March 22, 2017

இளையராஜா மரியாதைக்காக எதையும் இழக்க துணிந்தவர்

எவிடென்ஸ் கதிர்
Via Facebook
2017-03-22

இசை ஞானி இளையராஜா மரியாதைக்காக எதையும் இழக்க துணிந்தவர்.
...........
கக்கன் நேர்மையானவர் ஆனால் தான் சார்ந்திருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அதேபோன்றுதான் இளையராஜாவும். உலகம் வியக்கும் இசைஞானி தான் சார்ந்த சமூகத்திற்கு எதையும் செய்யவில்லை. ஏன்? தன்னுடைய அடையாளத்தைக்கூட வெளிப்படையாக சொல்லாமல் மறைத்துக் கொண்டவர். தீண்டாத மக்கள் என்று துவேசம் காட்டிய இந்து மதத்தையே துதிபாடியவர் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் எதார்த்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும். இதை வெறும் கருத்தியல் பார்வையோடு மட்டும் அனுக முடியாது. கள நிலைகளோடு அனுக வேண்டும்.

இளையராஜாவை யாரும் நெருங்க முடியாது, கர்வமானவர். எளிமையாக பழகமாட்டார் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். ஆனால் இளையராஜா மரியாதைக்காக எதையும் இழக்க துணிந்தவர். அவர் விரும்பியது எல்லாம் மரியாதைதான், மாண்புதான். அது கிடைக்காத போது அது கிடைப்பதற்காக தன் திறனை வளர்த்துக் கொண்டு தன்னைச் சுற்றி ஒரு வேலியும் அமைத்துக் கொண்டார். பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட வேலி கடைசியில் கர்வமானவர் என்கிற அடையாளமாக மாறிப்போனது.

உங்களால்தான் முடியும், நீங்கள் தான் செய்ய வேண்டும் என்று யாராவது பணிவாக அவரிடம் சொல்லிவிட்டால் பணம் அவருக்கு பொருட்டு அல்ல எதையும் செய்து கொடுப்பார். இதுதான் இளையராஜா. மந்திரிகள் மற்றும் தொழிலதிபர்கள் எல்லாம் கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டு பணிவாக காட்டிக் கொண்டு கோடிக் கணக்கில் சம்பாதிப்பது போன்று இளையராஜா நடந்து கொள்ளவில்லை.  சினிமாவில் 1000 படங்களுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தாலும் பெரிதாக அவர் பொருள் ஈட்டியதாக தெரியவில்லை.

இளையராஜா தலித் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறார்? என்று கேள்வி கேட்கின்றனர். தலித் சமூக மக்களுக்கு உரிமைகளை வாங்கிக் கொடுப்பது, அவர்களின் பொருளாதாரத்திற்கு போராடுவது என்பது சமூகப்பணியாக இருந்தாலும் இளையராஜாவின் ஆளுமை என்பது மிகப்பெரிய சொத்தாக நான் பார்க்கிறேன். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தன் இசையால் உலகத்தை ஆளுகிற போது எல்லோரும் வியந்து போகிறார்கள். தலித்துகள் என்றாலே இழிவாக பார்க்கப்பட்ட ஒரு சமூகத்தில் ஒருவன் தன் திறமையால் உலகத்தை ஆளுகிறபோது அவன் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் மீது பொது சமூகம் வைத்திருக்கக்கூடிய மோசமான சிந்தனை எல்லாம் உடைபடுகிறது. இதுதான் இளையராஜா செய்திருக்கிறார். தன் திறமையின் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு பேர் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதைவிட வேறு என்ன அவரிடம் எதிர்பார்ப்பது.

அவர் அடையாளத்தை வெளிப்படையாக சொல்லவில்லை என்கின்றனர். இளையராஜாவுக்கு வயது 75. நினைத்து பாருங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா உலகில் இடைநிலை சாதியினரும் சூத்திரர்களும் கூட உள்ளே போகமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அந்த நிலையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளையராஜா அந்த இடத்திற்கு வருகிறபோது என்னவிதமான அவமானங்களை சந்தித்திருப்பார். எவ்வளவு ஒடுக்குதல் நடந்திருக்கும். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு தாக்குபிடித்திருப்பதை உணர வேண்டும். நம்முடைய அப்பாவும் தாத்தாவும் அந்த காலத்தில் நம்மைப் போன்று வெளிப்படையாக தங்களது அடையாளத்தை சொல்லியிருக்கின்றனரா?

ஒடுக்கப்பட்டவரின் வெளிப்படை அடையாளம் என்பது கடந்த 20 ஆண்டு காலமாகத்தான் விவாதமாக மாறியிருக்கிறது. இளையராஜா சினிமா உலகத்திற்கு வாய்ப்பு கேட்டு உள்ளே வந்து 50 ஆண்டு காலம் ஆகிவிட்டது. அந்த எதார்த்த நிலையை உணர வேண்டும். அம்பேத்கர் வெளிப்படையாக சொன்னாரே, அயோத்திதாசப் பண்டிதர் வெளிப்படையாக சென்னாரே, இமானுவேல்சேகரன் வெளிப்படையாக சொன்னாரே என்று உடனே எதிர் கேள்வி கேட்காதீர்கள். அவர்கள் எல்லாம் சமூகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் செயல்பட்டவர்கள். மக்களை ஒன்றிணைக்க வெளிப்படை அடையாளம் அப்போது தேவைப்பட்டது. ஆனால் இளையராஜா இருந்தது இசைத்துறை. அதுமட்டுமல்ல அந்த கால கட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படையாக சொன்னது 1 சதவீதம் கூட கிடையாது. இந்த காலகட்டத்தில் கூட 90 சதவீத தலித்துகள் தங்களது அடையாளத்தை சொல்ல தயங்குகின்றனர். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா எப்படி தன்னுடைய அடையாளத்தை சொல்லியிருக்க முடியும்?

இளையராஜாவுக்கு இடதுசாரிகள் தான் வாய்ப்புக் கொடுத்தனர். ஆனால் அவர்களை விமர்சிக்கிறார். இந்துத்துவாவை ஏற்றுக் கொள்கிறார் என்கின்றனர். இளையராஜாவின் அரசியல் சார்ந்த நிலைப்பாடு மீது எனக்கு இப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. அதுவேறு. ஏன் இளையராஜா இடதுசாரிகளை மட்டுமா விமர்சிக்கிறார். தலித் கட்சிகளை கூட அவர் கிண்டல் செய்திருக்கிறார். இளையராஜாவின் அரசியல் நமக்கு முக்கியமல்ல. அவரது இசையும் அந்த இசையில் கிடைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளம் மட்டுமே முக்கியமாக பார்க்கிறேன்.

இளையராஜாவின் காலில் பிராமணர்கள் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். பிராமணர்கள் மட்டுமல்ல சகல சாதியினரும் ஆசீர்வாதம் வாங்குகின்றனர். யாருடைய காலிலும் விழக்கூடாது என்று கொள்கை உள்ளவன் நான். எந்த மதம் தன்னை ஒதுக்கியதோ அதே மதத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு ஒதுக்கியவர்களை எல்லாம் விழ வைத்த தந்திரத்தையும் அவர் செய்திருக்கிறார்.

ஒருவேளை குங்குமமும் விபூதியும் மணிமாலையும் தன் உடம்பில் கிடந்தால் சாதியவாதிகள் தன்னை நெருங்க பயப்டுவார்கள் என்கிற தந்திரத்திற்காகக்கூட அவர் பயன்படுத்தினரா என்று தெரியவில்லை. எவிடன்ஸ் கதிராகிய நான் மட்டுமல்ல பலரும் இந்த காலகட்டத்தில் நம் அடையாளத்தை வலுவாக சொல்லுவதற்கு காரணம் சாதிக்காக அல்ல. சாதி ஒழிப்பிற்காக. நீ என்னை தீண்டத்தகாதவன் என்று சொல்லுகிறபோது, ஆமாம் நான் தீண்டத்தகாதவன் தான் ஆனால் சமத்துவத்தை நேசிக்கக்கூடியவன் என்று அடையாளப்படுத்தத்தான் அந்த அடையாளம். இதேபோன்று இளையராஜாவும் சொல்ல வேண்டும் என்பது நமது விருப்பமாக இருக்கலாம். ஆனால் இளையராஜாவை கட்டாயப்படுத்த முடியாது. சொல்லலாமா வேண்டாமா என்பது தனிப்பட்ட நபரின் முடிவு.

இளையராஜாவின் தந்தை கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டவர். பிரபல பத்திரிக்கை ஒன்றில் அதை வெளிப்படையாக பதிவு செய்துவிட்டு மறுநாள் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தன் தந்தை கிறிஸ்துவ மதத்தை தழுவியவர் என்கிற வார்த்தையை எடுத்து விடுங்கள் என்று கூறினார். அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் இது முக்கியமான பதிவு இதை ஏன் எடுக்க சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தயவுசெய்து எடுத்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதை நேரடியாக பார்த்த பத்திரிக்கையாளர் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது எனக்கு இளையராஜா மீது கோபம் வரவில்லை. அவரது நிலையை பார்த்து பரிதாபப்பட்டேன். அவரது இந்த நிலைக்கு காரணம் சுற்றியிருக்கக்கூடிய சாதிய சமூகம் தான் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

Tuesday, March 21, 2017

அவர் சம்பளம் வாங்கினாலும் அவர் தான் அதை உருவாக்கியவர். He is Creator

Mahadevan CM
Via Facebook
2017-03-21

பாடல்களுக்கு காப்புரிமை கேட்பதை ஏதோ உலக மகா குற்றம் எனவும், சுயநலம் எனவும் விமரிசிக்கும் சில அதிமேதாவிகளுக்கு இந்த பதிவு.

முதலில் இது காப்பிரைட் என்பதை விட "அறிவு சார் சொத்துரிமை" (Intellectual Property ) என்பதே சரியான பதம். இந்த வார்த்தையை கூகிள் செய்து பாருங்கள். ஒரு மனிதனால் புதிதாக உருவாக்க படும் இசை, இலக்கியம், புதிய கண்டுபிடிப்புகள், புதிய டிசைன்கள் என்று எல்லாமே இக்குறியீடுக்குள் வருகிறது. இதன் கீழ் தான் பேடண்ட், காப்பிரைட், டிரேட்மார்க் போன்றவை எல்லாம் வருகிறது.

உங்களுக்கு எல்லாம் சந்திரபோஸ் தெரியுமா? இளையராஜாவின் காலத்திலேயே இருந்த ஒரு அற்புதமான இசையமைப்பாளர். சூப்பர் ஸ்டாரின் படங்களுக்கு இசை அமைத்தவர். விடுதலை, மனிதன், ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களுக்கு அவர் தான் இசை அமைப்பாளர். அவரின் பல பாடல்கள் சூப்பர் ஹிட். சங்கர் குரு, அண்ணா நகர் முதல் தெரு, மாநகர காவல், வசந்தி, இன்னும் ஏகப்பட்ட படங்கள் அவருடைய இசை அமைப்பில் சூப்பர் ஹிட் பாடல்களை கொண்டவை. 1977 முதல் 1991 வரை சுமார் 300 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 2010 ல் அவர் மறைந்தார். இன்றைக்கு அவர் குடும்பத்தின் நிலை என்ன தெரியுமா? சோற்றுக்கே கஷ்டப்படும் நிலையில் தான் உள்ளனர். சென்ற வருடம் குமுதத்தில் வெளிவந்த பேட்டியை பார்த்து விஷால் தான் சென்று சில உதவிகளை செய்துள்ளார். இன்றைக்கு அவர் குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணம் அவருடைய பாடல்களுக்கு காப்பிரைட் இருந்தும் யாரும் அதை மதிப்பதில்லை.

வின்னர் படம் எடுத்த தயாரிப்பாளரின் நிலை என்ன தெரியுமா? ஒரு ஓடடலில் சர்வராக வேலை பார்க்கிறார். (அவரின் நிலைக்கு பிரசாந்தின் அணுகு முறை காரணம் என்றாலும்). இன்றைக்கு எத்தனை சானல்கள் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வின்னர் படத்தின் காமெடியை ஏதோ ஒரு சானல் ஒளிபரப்பி கொண்டே தான் இருக்கிறது. படத்தின் உரிமையாளர் என்ற முறையில் அவருக்கு பணம் கொடுக்க வேண்டாமா? எத்தனை எப் எம் சேனல்கள் சந்திரபோஸின் பாடல்களை ஒளிபரப்புகிறார்கள். டி வி சேனலும் எப் எம் மம் என்ன தர்மத்திற்கா நடத்தி வருகிறார்கள். ஒரு நொடிக்கு இவ்வளவு என்று விளம்பரத்திற்கு பணம் வாங்குவதில்லை? அதில் யாருக்கும் பங்கு தர வேண்டாமா? யாருடைய உழைப்பை சுரண்டி யார் சம்பாதிப்பது.?

நாம் வீட்டிலோ காரிலோ பென் ட்ரைவில் டவுன்லோடு செய்து கேட்கும் பாடல்களுக்கு அவர் பணம் கேட்க வில்லை. அவர் கேட்பது என் பாடலை வியாபார நோக்கில் பயன்படுத்தினால் என்னிடம் முறையாக அனுமதி  வாங்க வேண்டும் என்று சொல்கிறார். 

முதன் முதலில் இளையராஜா என் பாடல்களை உரிமம் இல்லாமல் வியாபார நோக்கில் பயன்படுத்த கூடாது என்று அறிவித்த பொழுது, தமிழ்நாடு முழுவது உள்ள மேடை இசை கலைஞர்கள் அவரை சந்தித்து முறையிட்டனர். அப்போது ராஜா பெருந்தன்மையாக அவர்களுக்கு அந்த உரிமையை விட்டு கொடுத்தார். இப்போது அவர் கேட்பது சந்திரபோசுக்கும் சேர்த்து தான். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று பல லட்சம் சம்பாதிப்பவர்கள் அதில் சில ஆயிரங்களை விட்டு கொடுக்க கசக்கிறது. இதே எஸ் பி பி அவர்கள் சந்திரபோஸ் இசை அமைப்பில் பாடியதில்லையா? அந்த பாடலை அவர் மேடையில் பாட மாட்டாரா?

அவர் மகன் சொன்னது போல் என் தந்தை 40000 பாடல்களை பாடி இருக்கிறார். அதில் இளையராஜாவின் பாடல்கள் வெறும் 2000 மட்டும் தான். மீதி பாடல்களை பாடி நாங்கள் பிழைப்பு நடத்துவோம்  என்றிருக்கிறார். மீதி பாடல்களும் யாரோ ஒரு இசை அமைப்பாளரின் சொத்துக்கள் தான். அதை பயன்படுத்தி பணம் சம்பாதித்தால் யார் உரிமையாளரோ அவருக்கு கட்டணம் செலுத்த தான் வேண்டும். அந்த கட்டணம் என்பது இளையராஜாவுக்கு மட்டும் அல்ல. பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கும் பங்குண்டு. (ஒப்பந்தம் இருக்கும் பட்சத்தில்)  அவ்வளவு  ஏன்? ஏ ஆர் ரகுமான் பாடலை நாங்கள் எந்த வித கட்டணமும் செலுத்தாமல் தான் பாடுகிறோம் என்று அறிக்கை விட சொல்லுங்களேன் பார்க்கலாம். (ராஜாவை பற்றி எழுதினால் ரகுமான் ஆட்டோமேட்டிக்காக வந்து விடுகிறார். என்ன செய்வது?)

அவர் சம்பளம் வாங்கினாலும் அவர் தான் அதை உருவாக்கியவர். He is  Creator . அவருக்கு சகல உரிமையும் உள்ளது. எத்தனையோ பதிவுகள் இளையராஜா செய்தது சட்டப்படி சரியானது என்று சொன்ன பிறகும், இவ்வளவு வன்மத்துடன் மீண்டும் மீண்டும் அவரின் மீது சேற்றை வாரி இறைப்பதறக்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். அவரின் மீது இருக்கும் தனிப்பட்ட வெறுப்பு,

உங்களுக்கு இளையராஜாவின் மேல் தனிப்பட்ட வெறுப்பு இருக்கலாம். அதை யாரும் ஏன் என்று கேட்க முடியாது. அதற்காக அவரின் செயலை தவறு என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. டாட்.

ஜாதி ஒழிப்பில் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி - பெரியார்

ஜாதி ஒழிப்பில் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி - பெரியார்

அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் நாஸ்திகர்கள்தான்; நாஸ்திகனாக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது. அவர்கள்தான் தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர். அதன் காரணமாகவே அவர் ஒரு பெரிய நாஸ்திகர். அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாம் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்.

இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்தமதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

டாக்டர் அம்பேத்கர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இந்து மதத்தை ஒத்துக்கொள்வதில்லை. அவர் காந்தியைப்பற்றிச் சொல்லும் போது காந்தி ஒரு பச்சை இந்து. மனுதர்ம முறை, வருணாசிரம முறையைப் பாதுகாக்க நினைப்பவர். அவர் ஆதித்திராவிட மக்களுக்கு என்ன செய்ய முடியும்? என்று கடுமையாகத் தாக்கி வருணாசிரம ஆதார சுலோகங்களையெல்லாம்கூட எடுத்துப்போட்டு, காந்தி பச்சை இந்துவாக இருப்பதால்தான் அவர் புத்தி இப்படிப் போகிறது என்று எழுதினார்.

1930_35லேயே ஜாதி ஒழிப்பில் தீவிரக் கருத்துள்ளவராக இருந்தார்; ஜாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் (ஜாத்மத்தோடகமண்டல் என்று கருதுகிறேன்.) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஒரு அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் ஜாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக்கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமையுரையாக (address) 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு ஜாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள் என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஜாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல. ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை (Chapter) நீக்கிவிடவேண்டும் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். அதற்குஅம்பேத்கர் ஜாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழியவேண்டும் என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப்பேசாமல் வேறு எதைப்பேசுவது? ஆகையால், அதை நீக்கமுடியாது என்று சொல்லிவிட்டார்.

பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர் நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்: தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது. நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி ஜாதியை ஒழிக்கும் வழி என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார்.

நாம் இராமாயணத்தைப்பற்றி வாயால் பேசிக்கொண்டிருக்கும் போதே, அதாவது 1932 லேயே அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு சிவராஜ்தான் தலைவர், இதெல்லாம் குடியரசில் இருக்கிறது.

அவர் ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கீதையைப்பற்றிப் பேசும்போது, கீதை ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்றே பேசினார். அப்போது சி. பி. ராமசாமி அய்யர் போன்றவர்கள் இதென்ன அக்ரமம்; வெறும் அம்பேத்கர் பேசியிருந்தால்கூடக் கவலையில்லை; ஒரு கவுன்சில் மெம்பராக இருக்கிற அம்பேத்கர் அதுவும் சென்னையில் வந்து, கீதை பைத்தியக்காரனின் உளறல் என்று பேசுவதென்றால் அக்ரமம் என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள்.

நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். அந்த மாநாட்டுக்கு, சண்முகஞ் செட்டியார் வரவேற்புரை அளித்தார். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜெயக்கர் வந்திருந்தார். அவர் ஏதோ நம்மைப் பாராட்டிப் பேசிவிட்டுப் போய்விட்டார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம் ஆகப்போகிறேன் என்று சொன்னார். நானும் ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். தயவுசெய்து அவசரப்பட்டுச் சேர்ந்துவிடாதீர்கள். குறைந்தது 1லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கைவைக்கக்கூடாத மதம் (Perfect Religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கைவைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது, உதைக்க வந்தால்கூட சிபாரிசுக்காவது ஆள்வேண்டாமா? என்று சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக்கூடா தென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கெனவே புத்தர்தான்.

நாங்கள் உலக புத்தர் மாநாட்டிற்குச் சென்றபோது அவரை பர்மாவில் சந்தித்தேன். புத்தர் மாநாட்டில் நான் பேசுவதாக ப்ரோகிராமில் (நிகழ்ச்சி நிரல்) போட்டிருந்தார்கள். ஆனால், எனக்குச் சொல்லவில்லை. நான் போனேன். பிறகு என்னமோ வேறொருவரை பேசச் சொல்லிவிட்டார்கள் அப்போது அம்பேத்கர் என்னிடம் இன்றைக்குக் கையெழுத்துப்போட்டு புத்தமதத்தில் சேர்ந்துவிடுவோம், என்று சொன்னார்.

மைசூர் மகாராஜா புத்தமதக் கொள்கையில் ரொம்பப் பற்றுள்ளவர். நானும் மைசூரிலேயே நிரந்தரமாகத் தங்கலா மென்றிருக்கிறேன். அவர் எத்தனையோ ஏக்கர் நிலம்கூட தருவதாகச் சொல்லி இருக்கிறார். இப்படி இதையெல்லாம் வைத்து ஒரு பெரிய யூனிவர்சிட்டி (பல்கலைக்கழகம்) ஆரம்பிக்காமல் நாமும் சாகிறவரையில் பேசிக்கொண்டேயிருந்துதான் என்னாவது? ஏதாவது சாவதற்குள் செய்ய வேண்டாமா? என்று இன்னும் என்னென்னமோ சொன்னார். அதோடு தைரியமாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். சேர்ந்த பிறகு ஒரு அறிக்கை வெளியிட்டார். நான் இனிமேல் ராமன், கிருஷ்ணன், சிவன், இந்திரன் முதலியவைகளைக் கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. அவதாரங்கள் என்பவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ வணக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஜாதிமுறையில், இன்னும் மோட்சம் நரகம் இவற்றை நம்பு-வதில்லை; சடங்கு, திதி - திவசங்கள் ஆகியவைகளில் நம்பிக்கையில்லை. இனிமேல் இவைகளைச் செய்யமாட்டேன். இதுபோல இன்று நாம் எதை எதைக் கண்டிக்கிறோமோ, ஒத்துக்கொள்வதில்லையோ, அதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கர் மக்களுக்கு வழி காட்டுபவர். ஜாதிமதக் குறைபாடுகளை மனதில்பட்டதைத் தைரியமாக எடுத்துக் கூறிவந்தார். சுயநலமில்லாமல் பாடுபட்டவர்; இந்தியா பூராவும் விளம்பரம் பெற்றவர். அவர் தமது மக்களுக்குப் பௌத்த மதத்திற்குப் போகும்படி வழி காட்டியிருக்கிறார். இங்கு பலபேர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு, உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சிசெய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக்கொடுத்தார்.

அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்குமுன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது.

-----------------
தந்தை பெரியார் 28.10.1956 இல் வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை - 7.12.1956)