Tuesday, March 14, 2017

பெரியார் 2. 0


இன்றைக்கு தமிழ்ச் சமூகம் மறந்துவிட்ட, ஆனால் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டிய தலைவர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?

நிச்சயமாக பெரியார்தான். வெறும் கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் மட்டுமே நாம் பெரியாரை அடையாளப்படுத்துகிறோம். அதையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கிறோம். பெரியார் பல்வேறு தளங்களில் இயங்கினார், அவற்றுள் இரண்டுதான் மேலே சொன்னது. அவரை அதற்குள் அடக்குவதே தவறான கற்பிதம். பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு. ஒன்று சாதி ஒழிப்பு, மற்றொன்று பெண் உரிமை. இவற்றிற்கு எவையெல்லாம் தடையாக இருந்தனவோ அவற்றையெல்லாம் எதிர்த்தார். சாதியை எதிர்த்தார், அதை மதம் காப்பாற்றுகிறது என்றார்கள். மதத்தை எதிர்த்தார், மதம் தன் கொள்கைகளை வேதத்திலிருந்து எடுத்துக்கொள்கிறது என்றார்கள். வேதத்தை எதிர்த்தால் அது சாத்திரங்கள் என்றார்கள். அந்த சாத்திரத்தை யார் உருவாக்கியது என்று கேட்டால் கடவுள் என்றார்கள். சாதியை உருவாக்குகிற, மக்களைப் பிளவுபடுத்துகிற ஒரு கடவுளும் இருக்கமுடியுமா, என்று அப்போதுதான் அந்தக் கடவுளை எதிர்த்தார். பெரியாரின் கடவுள் மறுப்பை இப்படித்தான் நாம் நோக்க வேண்டும். இந்தப் படிநிலைகளையெல்லாம் விட்டுவிட்டு, அவர் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டார் என்று விமர்சிப்பது மேம்போக்கானது.

‘Second Sex' என்ற புத்தகம்தான் இன்று உலகில் பெண்ணியத்திற்கான அறிக்கைபோல. அந்த புத்தகம் வருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகத்தை எழுதியவர் பெரியார். அவர் அன்று எதையெல்லாம் சொன்னாரோ அதுதான் இன்று நடக்கிறது. ஆண் பெண் வித்தியாசமின்றி வளர்க்க வேண்டும், என்றார். பெண்கள் நீளமாகத்தான் முடி வளர்க்க வேண்டுமா, என்று கேட்டார். யாரெல்லாம் பாப் கட்டிங் செய்கிறீர்களோ அவர்களுக்கு ஐந்து ரூபாய் தருகிறேன், என்றார். பெண்களும் லுங்கி அணியலாம் என்றார். அழகைவிட சவுகரியமே முக்கியம், என்றார். இன்று நைட்டி, மிடியெல்லாம் லுங்கியின் வடிவங்கள்தானே? நகையை மாட்டும் ஸ்டேண்டாக இருக்காதீர்கள், என்றார். பிள்ளைகளை வளர்ப்பதிலேயே உங்கள் வாழ்க்கை செலவாகிறது, அதனால் அதிகப்படியாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளாதீர்கள், என்றார். இவை அனைத்துமே இன்று பேசப்படுகின்றன. தன் காலத்து சமூக விழுமியங்களோடு மற்றும் நின்றுவிடாமல், நூறாண்டு காலம் தாண்டிப் பார்க்கும் அந்தப் பார்வை இருக்கிறதே? அந்தப் பார்வைதான் பெரியார் என்ற தலைவனின் அடையாளம்.

பெரியார் மீது கொள்கை ரீதியாகப் பலருக்குப் பல்வேறு வேறுபாடுகளும் விமர்சனங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தாண்டி, ஒரு தலைவன் என்றால் எப்படி இருக்க வேண்டும், ஒரு தத்துவத்தில் எவ்வாறு கடைசிவரை பிடிப்புடன் இருக்க வேண்டும், அந்தத் தத்துவத்தை எவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டும்,  அந்தத் தத்துவத்தின் வெற்றிக்காக எவ்வாறு இறுதிவரை போராட வேண்டும், அந்தத் தத்துவத்திற்கான இயக்கத்தை எவ்வாறு கட்டமைக்க வேண்டும், அந்த அமைப்பிலுள்ள ஆட்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும், கொள்கை ரீதியான எதிரிகளை எவ்வாறு மதித்து மரியாதையுடன் நடத்த வேண்டும், என்று பன்முக ஆளுமையும் தனிமனித ஒழுக்கமும் கொண்ட தலைவர் பெரியார். தமிழகத்தில் எல்லோராலும் பின்பற்ற ஏதுவான ஒரு தலைவராகவே நான் பெரியாரைப் பார்க்கிறேன்.

பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக வெற்றிகரமான இயக்கத்தை திராவிட இயக்கம் நடத்தியது. ஆனால், இன்று இடைநிலை சாதிகள் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் நிகழ்த்தும் அடக்குமுறையை அது கண்டும் காணாதது போல் நடந்துகொள்வதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே? இன்றைய திராவிடக் கட்சிகளின் உட்கட்சி அரசியல் பெரும்பாலும் இடைநிலை சாதிகளால்தானே தீர்மானிக்கப்படுகிறது?

திராவிட இயக்கத்தின் சித்தாந்தம் என்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் இணைந்ததுதான். ஆனால் நடைமுறைச் செயல்பாடுகளில் அது சாத்தியம் ஆகவில்லை என்பது உண்மைதான். இடைநிலை சாதிகளைச் சார்ந்தவர்கள் திமுக-விலும் அதிமுக-விலும் கோலோச்சியதால், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிலிருந்து ஒதுக்கப்பட்டார்கள். தேர்தல் மையவாத நிலைப்பாடு அப்படித்தான் செயல்பட வைக்கும்.

'பறையன் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது', என்றவர் பெரியார். பிராமணர்களை விமர்சித்தது போலவே இடைநிலை சாதிகளையும் பெரியார் விமர்சித்தார். ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்பவர்களை, 'காவல்காரன் எல்லாமே ஆண்டபரம்பரை தான்' என்றவர் பெரியார். ஆனால் அதனை திராவிட இயக்கத்தின் மற்ற தலைவர்கள் பின்பற்றவில்லை. இதற்கு நிச்சயம் அவர்கள் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.

தமிழகத்திற்குத் தேவைப்படும் தலைவராக பெரியாரை முன்வைத்தீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களை இணைத்துக்கொள்ளாதது திராவிட இயக்கத்தின் தோல்வி என்றும் சொன்னீர்கள். இந்நிலையில், பெரியாரை மீட்டுருவாக்கம் செய்து, பெரியார் வெர்ஷன் 2.0 என்ற அடையாளத்துடன் 21-ம் நூற்றாண்டில் பெரியாரியத்தை முன்னெடுத்தால் எப்படி இருக்கும்? சமூக ஊடகத்தில் சிலர் அப்படி ஆரம்பித்திருக்கிறார்கள்.

நிச்சயமாக! அனைத்து அமைப்புகளிலும் இருக்கும் நல்ல விஷயங்களைத் தனதாக்கிக் கொள்வார் பெரியார். காலத்திற்கேற்றார்போல் பெரியாரியத்தைப் புதுப்பிக்கப்போகும் அந்த இயக்கம், பொதுவுடைமைக் கருத்துகளையும் தேசிய இயக்கத்தின் உணர்வுகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு போராடக்கூடிய அமைப்பாக இயங்க வேண்டும். ரஷ்யாவிற்குச் சென்று வந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து, 1931-ல் குடியரசு பத்திரிகையில் வெளியிட்டார் பெரியார். 1932-ல் ‘காம்ரேட்’ என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தி, இனி ஒருவரையொருவர் ‘தோழர்’ என்றே விளிக்க வேண்டும், என்று எழுதினார். மே தினம் கொண்டாடினார். எனவே பொதுவுடைமை இயக்கத்திற்கும் பெரியாரியத்திற்கும் பெரிதளவில் முரண்பாடுகள் கிடையாது. பெரியார் துவக்கத்தில் தேசிய இயக்கத்தில் இருந்தவர்தான். நாட்டு விடுதலை மட்டும் போதாது, சமூக விடுதலைக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரப்பட வேண்டும், என்றுதான் வேறுபட்டார். எனவே, தேசிய இயக்கத்தின் குணங்களையும், பொதுவுடைமை இயக்கத்தின் குணங்களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களையும் இணைத்துக்கொண்டு அந்த இயக்கம் பயணிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் மோதல் வந்தால், தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்றவர் பெரியார். அதை இந்த இயக்கமும் கடைபிடிக்க வேண்டும். 2.0 என்ற அடையாளத்துடன் பெரியாரை நிச்சயமாக இந்த நூற்றாண்டில் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். அதுதான் எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும்.

அதே நேரத்தில், தமிழகத்தில் சாதியமும் வலுவடைந்து வருவதுபோல் தெரிகிறதே? பெரியாரின் தாக்கத்திலிருந்து விடுபட்டு சமூக நீதியில் நாம் மீண்டும் பின்னோக்கி செல்கிறோமோ?

அடிப்படையில் சாதி என்பது நிலத்தில் இருக்கிறது. நிலத்திலிருந்து மனதிற்கு குடிபெயர்ந்து சாதிப் பெருமையாக மாறுகிறது. “சாதியமைப்பைக்கூட ஒழித்து விடலாம், இந்த சாதிப் பெருமையை ஒழிப்பதுதான் கடினம்”, என்றார் பெரியார். ஒருவன் வேலையில்லாதவனாக இருப்பான், அவன் வீட்டில் எந்த வசதியும் இருக்காது, ஆனால் அந்த வீண் ஜம்பம் மட்டும் இருக்கும். “நாங்க இந்த ஆள் தெரியும்ல?”, என்ற ஒரு வீண் பெருமை இருக்கும். இந்த சாதியை அதிகம் காப்பாற்றி வருவது கிராமங்கள்தான். அதனால்தான் கிராம சீர்திருத்தம் பற்றிய விவாதம் வந்தபோது, கிராமங்களை ஒழிக்க வேண்டும் என்றார் பெரியார். காந்தி உட்பட இந்தியத் தலைவர்களில் பெரும்பாலானோர் கிராமத்தின் வளர்ச்சியைப் பற்றித்தான் அதிகம் பேசினார்கள். அந்த அமைப்பில் உள்ள அழுக்குகளை அம்பேத்கரும் பெரியாரும்தான் சுட்டிக்காட்டினர்.

சாதியைத் தற்போதைய கல்வியாலோ வேலையாலோ மட்டும் ஒழித்துவிட முடியாது. மனோபாவ ரீதியாக மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இன்று முகநூலில் அதிகப்படியான வன்மம் சாதி சார்ந்ததாகத்தான் இருக்கிறது. அவர்கள் அனைவரும் படித்தவர்கள்தான். ஒரு கருத்தைப் பதிவிட்டால், அந்தக் கருத்தைப் பார்க்காமல், இந்த ஆள் என்ன சாதியைச் சேர்ந்தவனாக இருப்பான் என்று ஆராய்வதில்தான் புத்தி செல்கிறது. ஒரு தலைவரை விமர்சனம் செய்தால், ஒரு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தால், சமூக விழுமியங்களைக் கேள்வியெழுப்பினால், இப்படி எதைச் செய்தாலும் முதலில் எழுகிற கேள்வி இந்தப் பதிவர் எந்த சாதியாக இருப்பார் என்பதுதான். இந்த மனோபாவத்தைக் கல்வியால் ஒழிக்க முடியவில்லையே? “அது அவங்க வீடு, அங்கே போகாதே”, என்று படித்த பெற்றோரே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்களே? காலம், வாழ்க்கைச் சூழல், தேவை, இவற்றிற்கேற்றவாறு நம்மிடம் இருக்கும் கற்பிதங்களை நாம் விலக்கியபடி இருக்க வேண்டும். சாதி மாதிரியான ஒரு சமூக நோய்க்கு 21-ம் நூற்றாண்டில் என்ன வேலை? அதை அனைவரும் தூக்கி எறிய வேண்டும்.

No comments:

Post a Comment