Sunday, March 19, 2017

யாரும் திருட முடியாத அந்த உடல்தான் அவரது சொத்து.

விஜய்பாஸ்கர் விஜய்
Via Facebook
2017-03-13

செட்டில் ஆவது என்றொரு வார்த்தையை நாம் அடிக்கடி சொல்வோம்.

பலருடைய கனவும் அதுதான்.

வங்கியில் பணமிருக்க வேண்டும்.மாதா மாதம் ஏதோ ஒரு வகையில் பணம் சேரவேண்டும். சொத்து இருக்க வேண்டும். ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும். இன்னொரு சொந்த வீட்டில் இருந்து வாடகை வரவேண்டும்.

ஆனால் நாட்டில் 90 சதவிகித மக்களுக்கு சொத்தும் கிடையாது, ஒழுங்கான மாத வருமானமும் கிடையாது.

அவர்களின் ஒரே சொத்து அவர்களுடைய ஆரோக்கியமான உடல்தான்.

அந்த உடல்தான் அவர்களுக்கான உணவை, உடை, இருப்பிடம், சொந்தம், பந்தம் அனைத்தையும் பெற்றுத்தரும்.

இது கேட்க சாதரணமான விஷயமாக இருக்கலாம். ஆனால் உணர்வுப்பூர்வமாக நம் மனதில் ஏதாவது கட்டத்தில் ஏறிய ஆகும் என்று நினைக்கிறேன்.

எனக்கு இந்த உணர்வு சிறுவயதில் கிடைத்தது.

கடைக்கு சரக்கு இறக்க வரும் லோட்மேன்களைப் பார்க்கும் போது இந்த உடல் என்ற விஷயம் தோன்றும்.

நாகர்கோவில் கோட்டாறு மார்க்கட்டில் இருந்து 90 கிலோ மைதா மாவு மூட்டையை வைத்துக் கொண்டு சைக்கிளில் வருவார்கள்.

அதிலும் கோட்டாறில் இருந்து செட்டிக்குளம் ஜங்சன் வரும் ரோடு மிகவும் ஏற்றமான பாதை, அதில் சாதரணமாக சைக்கிள் ஒட்டிவருவதே மிகக்கடினமான வேலையாக இருக்கும்.

அதில் 90 கிலோ மைதா மூட்டையை எடுத்து வந்து, சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு எங்கள் கடையின் மேல் திண்டில் ஏறி, குறித்த இடத்தில் மைதா மூட்டையை குத்துவார்கள். அப்படி இறங்கி முதுகில் வைக்கும் போது லோட்மேன்களின் கால்கள் என்னைக் கவரும்.

அதில் தெரியும் உறுதியும். சதையின் தெறிப்பும் ”உடல்” என்ற உணர்வைக் கொடுக்கும்.

உடலே அனைத்தையும் அந்த்ய லோட்மேனுக்கு கொடுக்கிறது. அவருக்கு சொத்து கிடையாது. பணம் கையிருப்பு கிடையாது.

அந்த உடல்தான். அவர் பிறக்கும் போது அவருடன் இருக்கும் அந்த உடல். யாரும் திருட முடியாத அந்த உடல்தான் அவரது சொத்து. அதிலிருந்துதான் அவருக்கான அனைத்தையும் அவர் உற்பத்தி செய்ய வேண்டும்.

ஏதோ அச்சிறுவயதில் தோன்றும்.

இப்போதும் ஒருமாதிரி வெள்ளையும் சொள்ளையுமாக போகும் மனிதர்கள், நிறைய நகைகள் போட்டு பட்டுச்சேலை கட்டி ரொம்ப நாசுக்காக இருக்கும் பெண்கள் மேல் பல கேள்விகள் வரும்.

இவர்கள் இப்படி போவதற்கு என்ன உழைப்பு செய்தார்கள்.

மூளையை உபயோகித்தார்களா? மூளை அவ்வளவு அதிகாரமிக்கதா?

உடல் உழைப்பு இவர்களுக்கெல்லாம் கட்டாயமில்லையா?

மேனேஜர்கள் என்றால் யார்? நோகாமால் நொட்டிவிட்டு போகும் நபர்களா?

ஒஹோ இவர்கள் திட்டமிடுவார்களா? இவர்கள் திட்டமிடுவார்கள் மற்றவர்கள் அதை வேலையாக செய்வார்களாமா?

இதற்கு இவர்கள் படிப்பார்களாம். சில தகவல்களை மனப்பாடம் செய்து, சில தர்க்கங்களைக் கற்று, சில கோட்பாடுகளைக் கற்று இவர்கள் மேனேஜர்கள் ஆவார்களாம்.

இதெல்லாம் கிடைக்கப் பெறாதவன் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்.

கல்வி கற்காதது அவ்வளவு பெரிய தவறா?

ஒருவன் அமைப்புசார் கல்விகற்க முடியவில்லை என்றால் அவன் வாழ்க்கை முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா?

ஏதோ சொல்லி ஒரு சிறுகூட்டம் இன்னொரு பெருங்கூட்டத்தை உழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

நல்லா ஏமாத்துறான்கள்.

இவனுங்க ஏமாத்துறது தெரிஞ்சி கேள்வி கேக்குறதுக்குள்ள வயிறு பசிக்குது. அந்த பசிக்கு திங்கக்கூடிய சோத்துக் காச அந்த சிறுகூட்டம்தான் வெச்சிருக்கு. அப்புறம் என்ன செய்ய உழைச்சி கிட்டே இருக்க வேண்டியதுதான்.

விலங்குப்பண்ணையில் ஒரு குதிரை வரும். அது பன்றிகள் செய்யும் சர்வாதிகாரத்தை உள்வாங்கிக் கொள்ளாது.

ஆனால் நாம் நன்றாக் உழைத்தால் இப்பிரச்சனை அனைத்தையும் தீர்த்துவிடலாம் என்று நம்பும். எப்போதெல்லாம் பன்றிகள் சர்வாதிகாரம் கூடுமோ அப்போதெல்லாம் குதிரை அதிகமாக உழைத்துக் கொண்டே இருக்கும். முடிவில் அக்குதிரை உடல்பலம் குறையும் போது பன்றிகள் அதை மாமிசத்துக்காக விற்றிருக்கும்.

அது மாதிரி மக்கள் மனதை ஒரு சிறுகூட்டம் ”உழை உழை” என்கிறது.

உழைத்தால் முன்னேறலாம்.
உழைத்தால் புடுங்கலாம்.
உழைத்தால் பெரிய இவனாக வளரலாம்.

எவ்வளவோ தன்னம்பிக்கைக் கதைகளை சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிறது. இப்படியெல்லாம் ஏதேதோ தோன்றும்.

கோட்டாறு லோட்மேன்கள் பற்றிச் சொன்னேன்.

ஹைதிராபாத்தில் ஒரு வீடு எடுத்து குடும்பத்தோடு செட்டில் ஆகும் போது ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் எல்லாம் வாங்க மாமனார் பணம் கொடுத்தார்.

நான் ’வேண்டாம் மாமா’ என்று வாயால் சொல்லி, கையால் வாங்கிக் கொண்டேன். அன்பை மறுக்க நான் யார் சொல்லுங்கள்.

அந்த ஃப்ரிட்ஜை ஒருவர் வண்டியில் எடுத்து வந்தார்.

நான் இருந்தது இரண்டாவது மாடி.

“நீங்க ஒருத்தர்தான் வந்தீங்களா” என்பதை தெலுக்கில் "You ஓக்கடே. How how" என்று கேட்டேன்.

அதன் விளக்க அர்த்தம் “நீர் ஒருத்தர்தான் வந்திருக்கிறீர்.
தனியே எப்படி மேலே ஃப்ரிட்ஜைத் தூக்குவீர்” என்பதுதான்.

அவர் ஃப்ரிட்ஜின் மேல் லாவகமாக இரண்டு கயிறைப் போட்டுக் கட்டினார். இப்பொது ஃப்ரிட்சின் மேல் பக்கம் இரண்டு கயிறுகள், கீழ்பக்கம் இரண்டு கயிறுகள் வந்தது. மேல் பக்கம் கயிறு இரண்டையும் அவர் தூக்கிக் கொண்டு, கீழ்பக்கம் கயிறை என்னைத் தூக்கச் சொன்னார்.

எனக்குக் கடுப்பு.

என்னது நான் தூக்க வேண்டுமா என்று கத்துகிறேன். அவர் கண்களாலேயே கெஞ்சுகிறார். சரி என்று ஒரு பக்கம் தூக்கினேன். ஒரளவுக்கு சமாளித்து ஃபிரிட்ஜை சேதமில்லாமல் தூக்கிவிட்டேன்.

அதற்கிடையில் ஹவுஸ் ஒனர் வந்து “நீ ஏன் தூக்குகிறாய்” ( வயதானவர்) என்று என்னைக் கடிந்து கொண்டார்.

நான் அசட்டு சிரிப்பு சிரித்து சமாளித்தேன்.

அதன் பிறகு லோடு தூக்கி வந்தவருக்கு “சாய்” காசு கொடுத்தேன். என் வீட்டில் சாப்பிட வைத்திருந்த கேக்கோ ஏதோ ஒரு திண்பண்டம் எடுத்து அவருக்குக் கொடுத்தேன். அதை உண்டு தண்ணீர்க் குடித்துப் போகும் போது, அந்த அம்பது வயது பெரியவர் என் நாடியைப் பிடித்து செல்லம் கொஞ்சுவது போல வைத்துவிட்டு தன் செய்கையிலும் தெலுங்கிலுமாக ஏதோ பேசினார்.

அவர் பேசியதன் அர்த்தம் இதுதான்.

“இந்த ஃப்ரிட்ஜை நான்தான் மேலே வரைக்கும் தூக்கி வரவேண்டும். அது என் பொறுப்புதான். நான் ப்ரிட்ஜை உப்பு மூட்டை தூக்குவது போல தூக்கிப் போவேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்கு காய்ச்சல் வந்தது. உடல் சுத்தமாக முடியவில்லை. என்னால் முதுகில் தூக்க முடியாது. அதனால் உன் உதவியைக் கேட்டேன்.” என்பதுதான் அது.

அவர் உண்மையைச் சொன்னாரோ, பொய் சொன்னாரோ தெரியவில்லை.

என் உள்ளுணர்வு உண்மைச் சொன்னதாகத்தான் எடுத்தது. அவர் சொன்னதை கேட்டு ஒருமாதிரி ஆகிவிட்டேன்.

ஆம் அவர் உடலில் இருந்தே அவருக்கான அனைத்தையும் பெறுகிறார். உடல் நலமில்லாமல் போகும் போது பெரிய நஷ்டமடைகிறார். இதே உடல்நலமில்லாமை எனக்கு வந்தால் விடுப்பு எடுத்து ஜாலியாக இருப்பேன். ஆனால் அவரால் அது முடியாது. அந்த உடல் உழைத்தே ஆகவேண்டும். உழைப்பு திணிக்கப்பட்ட உடல்.

இரண்டு நாட்கள் முன்பு ஆட்டோவில் வரும்போது டிரைவரிடம் பேசி கொண்டுவந்தேன்.

“நீங்க ஏன் படிக்கல” என்று கேட்டேன்.

“அப்பா சின்ன வயசுல போயிட்டார். தங்கச்சி ரெண்டுபேரையும் நாந்தான் பாத்துக்கனும் அதான் படிக்கல”

“மொதல்ல இருந்தே ஆட்டோதானா”

“இல்ல முதல்ல மெக்கானிக் ஷெட்ல, அப்புறம் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ல, அப்புறம் ஒரு பிஸ்கட், மிட்டாய் கம்பெனில வேலை பார்த்தேன் அத வேறு முதலாளி வாங்கி என்ன வீட்டுக்கு அனுப்பிட்டார், அதுக்கப்புறம் தண்ணி கேன் வந்த புதுசு அந்த பிஸினஸ் செய்தேன். இரண்டு வருசம் செய்தேன் சார். நல்லாவே சம்பாதிச்சேன். தங்கச்சி ரெண்டு பேரையும் கல்யாணம் செய்து கொடுத்திட்டேன் அத வெச்சி”

“ம்ம்ம். அப்புறம் எப்படி ஆட்டோ ஒட்ட வந்தீங்க”

“அது பைக்ல வரும்போது ரோட்ல மழைத்தண்ணி ஆயில் கொட்டி கிடந்துச்சி, வழுக்கிட்டேன். இந்த தோள்பட்டை இறங்கிப் போச்சு, வெயிட் தூக்கவே கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். என்னால தண்ணி கேன் தூக்கி தூக்கி மேல் வீடுக்கெல்லாம் கொண்டு போக முடியாம போச்சு”

“ஏன் ஒரு ஆள வேலைக்கு சேத்து செய்ய வேண்டியதுதான”

“அது வேலைக்காகாது. நாமளே உழைக்கனும். அப்பதான் அந்த பிஸினஸ் வெளங்கும். நாம நல்ல வேலை செய்து கூட ஆள் இருந்தா பரவாயில்லை.அதனால அந்த பிஸினஸ் விட்டுடேன். இப்ப ரெண்டு வருசமா ஆட்டோ. பரவால்லாம ஒடுது” என்றார்.

அதாவது ஒருவர் பிஸினஸ் செய்கிறார்.

அவர் உடல் உழைப்பை ஆதாரமாக வைத்து பிஸினஸ் செய்கிறார்.

அந்த உடலுக்கு சிறுபிரச்சனை வரும் போது அந்த பிஸ்னஸே செய்ய முடியாமல் போகிறது.

உடல்.
வெறும் உடல்.
உறுப்புகள் கச்சிதமாக பேக் செய்யப்பட்ட ரத்தம் ஒடும், எலும்பிருக்கும் உடல் மட்டுதான் 90 சதவிகித இந்தியர்களின் ஒரே ஆதாரமாக இருக்கிறது.

அது மட்டும்தான் அவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது.

ஏனோ இப்படி நினைக்க நினைக்க ஒருமாதிரி

அயர்ச்சியாகவும்,
அதிர்ச்சியாகவும்,
ஆச்சரியமாகவும் இருந்தது எனக்கு.

- விஜய் பாஸ்கர் விஜய்

No comments:

Post a Comment