Sunday, December 31, 2023

"வள்ளல்" எம்ஜியாரும், "ரேசன் கடை" நிறுவிய கலைஞரும்

Arun Bala

காட்சி 1:
கருப்பு சுப்பையா 1960களில் இருந்து தொடர்ந்து திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், 80-90களில் நடித்த நகைச்சுவை பாத்திரங்களுக்காக அறியப்பட்ட நடிகர். பெரிய மருது படத்தில் ஈயம் பூச கவுண்டமணியிடம் இவர் வரும் காட்சி மீம்ஸ்-ஆக இணையத்தில் பிரபலம். அந்த காட்சிக்காக உடம்பெல்லாம் காரீயம் (lead) கலந்த பெயிண்டைப் பூசியவருக்கு, காரீய விசம் ஏறி, தீவிரமாக உடல் நலம் குன்றி, அடுத்த நாள் காலையில் உயிருக்குப் போராடினார். அதற்குப் பிறகு ஒரு வருடத்தில், கொஞ்சம் சரியாகி, ஒரு சில படங்கள் நடித்தாலும், அதன் பின் ஒரே இறங்கு முகமாகித் தன் கடைசி காலத்தில் வறுமையிலும், நோயிலும் மிகவும் வருந்தி வாடித் தான் இறந்து போனார். இதில் முக்கியமான விசயம், மேலே சொன்ன, அந்த, உடம்பெல்லாம் காரீய பெயின்ட் பூசிய காட்சிக்கு அவருக்குக் கிடைத்த மொத்த சம்பளம் வெறும் 300 ரூபாய் மட்டுமே! இந்த நவீன காலத்திலும், தொழிலாளர் பாதுகாப்பு, காப்பீடு, மருத்துவ உதவி, வைப்பு நிதி, ஓய்வூதியம் எதுவும் இல்லாத, சிறிதும் முறைப்படுத்தப் படாத ஒரு துறையில், ஒரு சிலருக்கு மட்டும் பல கோடிகளில் சம்பளம் கிடைக்கும் ஒரு துறையில், ஒருவரைச் சாகடித்த வேலைக்கு, வெறும் 300 ரூபாய் மட்டுமே அவருக்குச் சம்பளமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய உழைப்புச் சுரண்டல்?!! ஆனால் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், அந்த படப் பிடிப்பு நடந்த நாளில், சுப்பையாவுக்கும் படத்தின் கதாநாயகனுக்கு கொடுக்கப்பட்ட அதே தரமான சுவையான அசைவ உணவு வழங்கப்பட்டிருந்தது. அவரும் அதை மகிழ்ச்சியாக உண்டிருப்பார், வேறு தேவையற்ற கவலைகள் எதுவும் இல்லாமல்! மனிதனுக்கு மகிழ்ச்சி தானே முக்கியம்?!

காட்சி 2:
என் துவக்கக் காலத்தில், 90களில் டிவிஎஸ் குழும நிறுவனம் ஒன்றில் நான் பணி புரிந்த போது, மூன்று வேளையும் இலவசமாக, அளவில்லாமல், வாழை இலை போட்டு உயர்தர சைவ உணவும், அவ்வப்போது டீயும், காபியும், பலகாரமும், சாயந்திரம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஒரு குடும்பத்திற்குத் தேவையான அளவு திண்பண்ட பொட்டலமும், இது போக தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, நிறுவனர் தினம் என மூன்று மாதத்திற்கு ஒரு முறை கிலோ கணக்கில் இனிப்புகள், தின்பண்டங்கள், விருந்துகள் என ஓயாத தீனி போட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த அன்பில், கவனிப்பில் ஒரு நாளைக்குச் சாதாரணமாக 12 மணி நேரமும், வாரத்திற்கு 6 முதல், சில நேரம் 7 நாட்களும் தொழிற்சாலையிலேயே வேலை பார்த்துக் கொண்டு இருப்போம் இளம் பொறியாளர்களாகிய நாங்கள். திடீரென, சக நண்பன் ஒருவன், இப்படியெல்லாம் தீனி போடாத பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இரண்டு மடங்கு சம்பளத்திற்கு வேலை மாறிப் போன போது தான் அந்த இலவச தீனியின் உண்மை விலை உறைத்தது எங்களுக்கு. ஆனாலும், சோறு கிடைக்குமிடம் சொர்க்கம் அல்லவா?!

காட்சி 3:
'உலக கொடுத்தல் குறீயீடு' என்கிற பெயரில், 'சாரிட்டீஸ் எய்டு பவுண்டேசன்' என்கிற தொண்டு நிறுவனம், வெவ்வேறு நாட்டு மக்களும் எவ்வளவு தான, தர்ம, தன்னார்வலத் தொண்டுகள் செய்கிறார்கள் என்பதைப் பற்றிய புள்ளி விவரத்தை அவ்வப்போது  வெளியிட்டு வருகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகள், கலாசார வேறுபாடுகளைத் தாண்டி இந்த புள்ளி விவரத்தில் புலப்படும் விசயம் என்ன வென்றால் எந்த நாட்டில் எல்லாம் எதோ ஒரு அளவிலாவது உருவிலாவது சோசலிசம், பலமான சமூகப் பாதுகாப்பு நிதித் திட்டம் (சோசியல் செக்யூரிட்டி) , வலுவான ஓய்வு ஊதிய முறை, தீவிரமான தொழிலாளர் பாதுகாப்புச் சட்ட திட்டங்கள், வேலைப் பாதுகாப்பு, சமூகத்தில் மிகக் குறைந்த அளவிலேயே பணக்காரர்-ஏழை வருவாய் வேறுபாடுகள் எல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தான தான தர்மம் குறைவாக நடக்கிறது. எங்கெல்லாம் இவை இல்லையோ அங்கே தான தர்மம் அதிகமாக நடக்கிறது. எந்த நாட்டில் சமூகப் பாதுகாப்பு இல்லையோ அங்கே தனி நபர்களின் கருணையை நம்பித்தான் விளிம்புநிலை மக்கள் தப்பிப் பிழைக்க வேண்டி இருக்கிறது. எடுத்துக் காட்டாக, இந்த குறியீட்டில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து எல்லாம் முதல் பத்து இடங்களில் வர, இவைகளுடன் பொருளாதார வளர்ச்சியில் ஒத்த நாடுகளாகிய ஜெர்மனி 20ம் இடத்திலும், பிரான்ஸ் 94ம் இடத்திலும் தான் வருகின்றன. அமெரிக்கத் தர்ம பிரபுக்கள் வாழ்க! பிரெஞ்சுக் கஞ்சர்கள் ஒழிக!

காட்சி 4:
ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன் எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் முதன்முறையாக ஃபிரிட்ஜ் வந்து சேர்ந்த நாளில் நான் அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் மனைவி புதிய ஃபிரிட்ஜைக் காட்டி பத்தாயிரம் ரூபா கொடுத்து 'பத்துக் குழி' வாங்கியிருக்கோம் என்று வேடிக்கையாகச் சொன்னார். பத்துக் குழி என்பது கிராமங்களில் மடி ஆசாரம் பார்க்கும், உயர் சாதியினர் எனறு சொல்லிக் கொண்டவர்கள்  வீடுகளில் அடுக்களையின் பின்புறத்தில் ஒரு மூலை. அந்த மூலையில், அன்றன்று மிஞ்சிய உணவை இரவு போட்டு வைத்திருப்பார்கள், அந்த உணவினால் மற்ற நல்ல உணவிற்கோ, மனிதர்களுக்கோ தீட்டுப் படாமல் இருக்க. அந்த 'பத்து' உணவு அடுத்த நாள் காலை வீட்டுக்கு வரும் பண்ணையாள்களுக்கு, வேலை காரர்களுக்கு, மாடுகளுக்குக் கொடுக்கப் படும். அவர்கள் அனைவரும் கிடைக்கும் இலவச உணவைச் சாப்பிட்டுச் சந்தோசமாக நன்றாக வேலை பார்ப்பார்கள். தர்மம் வாழ்வதே கிராமங்களில் தான் என்று சும்மாவா சொன்னார்கள்?! கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளைக் காரர்கள் ஆட்சியில் கோயில் நுழைவுப் போராட்டங்களைப் பெரியாரின் திராவிட கழகம் நடத்திக் கொண்டிருந்த போது, பல சாதிச் சங்கங்களும் தங்களின் ஆன்மீக, சமூகப், பொருளாதார உரிமைகளுக்காகச் செயற்பட்டு, மனு போட்டு, வழக்கு நடத்தி, போராடிக் கொண்டதோடு, தத்தம் சாதித் தொழில்களுக்கானத் தொழிற் சங்கங்களாகவும் செயல்பட்டு, அந்தந்த தொழில்களை முறைப்படுத்தத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் கொண்டு வந்த முதல் மாநாட்டுத் தீர்மானங்களை எடுத்துப் பார்த்தால், அதில், இனி மேல் சோற்றுக் கூலி, அரிசிக் கூலி முறைகளை அறவே ஒழித்துப், பணக் கூலி மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என்கிற தீர்மானம் தவறாமல் இருக்கும். இப்படி வர்ணாசிரம சமூகக் கட்டமைப்பைச் சிதைத்த, பணத்தாசைப் பிடித்த பாதகர்களாகக், கொடூரர்களாக இருந்திருக்கிறார்கள் என நினைக்கும் போது மனம் கொதிக்கிறதல்லவா?!

காட்சி 5:
கடைசியாக மீண்டும் திரைப்படத் துறைக்கே வருவோம். 'புலன் விசாரனை' படம் வெளி வந்த வாரம் அது. படம் மிகப் பெரிய வெற்றிபெறுகிறது. அந்த படத்தை இயக்க பதினைந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்கிய அறிமுக இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை அழைத்து அடுத்த படம் இயக்கச் சொல்கிறார் தயாரிப்பாளர் ஜீவி. சம்பளம் இருபத்தைந்து என்று பேச, குறைவாக இருக்கிறதே என்று தயங்கித் தயங்கி ஒத்துக் கொண்ட இயக்குநருக்கு முன்பணம் காசோலையாகக் கொடுக்கப்பட, அதில் எதிர் பார்த்ததை விட ஏகப்பட்ட சைபர்கள் இருக்க, குழம்பிய இயக்குநருக்கு, அப்போது தான் பேசப்பட்ட சம்பளம் இருபத்தைந்து ஆயிரம் அல்ல இலட்சம் என்று புரிந்து, லேசாகத் தலைச் சுற்றி நிற்பதற்குள், அது போக, வேற்று மொழி உரிமையில் 40% பங்கும் உண்டு என்று  செல்லப்பட மயக்கமே வந்திருக்கிறது. அந்த நேரத்தில் முந்தைய படத்தின் தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அவசரமாக அழைப்பு வர, அங்கே சென்றிருக்கிறார். அங்கே அடுத்த படம் 'கேப்டன் பிரபாகரன்' எடுக்கப் 'பணிக்கப்பட்டு' அதே இருபத்தைந்து சம்பளமாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன ஒன்று, இந்த இருபத்தைந்து இலட்சங்கள் அல்ல ஆயிரங்கள்!! 'அந்த ஆஃபீஸே ஒரு வீடு மாதிரி தான். யார் எப்போ போனாலும் சாப்பாடு உபசரிப்பு எல்லாம் தடபுடலா இருக்கும். ஆனா சம்பளம் மட்டும் இருக்காது' என்கிறார் செல்வமணி. சம்பளமா முக்கியம் சாப்பாடு தானே முக்கியம்?!

கட்ட கடைசியாக,

ஒருவனுக்கு மீன் கொடுக்கிறாயா? அல்லது மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கிறாயா? என்பது அமெரிக்கப் பழமொழி. ஒருவனுக்கு முதலில் மீனிட்டுப் பசியாற்றி, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, மீட்டனுப்பி வைப்பதே திராவிட இயக்கச் சித்தாந்தம் என்பார் ஒருவர். ஆனால், நாள் தோறும், என் வீட்டுக்கு, அலுவலகத்திற்கு வருபவர்களுக்குச் சாப்பிட மீன் கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்பதே வள்ளல் தன்மை! அப்படி ஒருவர் கொடுத்தாலே, நாட்டில் எல்லோருக்கும் பசி தீருமா, தீராதா? 1977க்குப் பிறகு தமிழ் நாட்டில் சென்னையில் பிச்சை எடுக்கும் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? இந்த வாரத்திற்குப் பிறகு ஒரு வேளை பார்க்க நேரிடலாம் என்பது வேறு விசயம்.

ஆகவே,
வள்ளல்களைப் போற்றுவோம்!
வள்ளல் தன்மைக்கே தேவை இல்லாத படி சமூக மாற்றங்களைச் செய்யும் ஏமாற்றுக்கார, கஞ்சர்களைத் தூற்றுவோம்!!

நாம் மொன்னையர்! நாமே மொன்னையர்!!

Tuesday, December 19, 2023

பெரியார், பிரபாகரன் ஒப்பீடு

"பிரபாகரனையும் பெரியாரையும் 
எதிர் எதிராக நிறுத்துவது 
கண்டிக்கத்தக்கது "என்கிறார் வாலாசா வல்லவன்.

இவர் கண்டிக்காவிட்டாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிராக அடையாளப் படுத்தப்பட்டுக்  கொண்டேயிருப்பார்கள்.

பெரியாரை அவமானப்படுத்தும் ஒன்று. பெரியார் காந்தியம் -சமூகநீதி -கம்யூனிச சிந்தனைகள் இவற்றிலிருந்து உருவாகிவந்த பேராளுமை . 
இன்றும் பெண்ணியச் சிந்தனைகள் ,ஆதிக்கக் கலாசார மறுப்புச் செயற்பாடுகள் இவற்றிற்காக சர்வதேச அளவில் அறியப்படுகிறார். 

பிரபாகரன் சுத்த இராணுவவாதி. 
பிரபாகரன் சிந்தனைகள் என எதுவும் இல்லை. பிரபாகரனுக்குப் பின் புலிகள்  அமைப்புமில்லை.

பெரியாருக்குப் பின் பெரியார்காலத்திலிருந்தே அவரை முன்னிறுத்தி தனித்துவமாக உருவான அமைப்புகள் இன்றுவரை இயங்குகின்றன.
தனது அமைப்பிற்குள் வன்முறையை மருந்துக்கும் அனுமதிக்காதவர் பெரியார்.

வன்முறையைத்தவிர வேறெந்த வழியிலும் தன்னை இனங்காட்ட மறுத்ததோடு வன்முறையை மறுத்த அரசியல் பிரமுகர்கள் ,சமூக சேவகர்கள்,புத்திஜீவிகள்  அனைவரையும் படுகொலை செய்தவர் பிரபாகரன்.

பெரியார் தன் அமைப்பிலிருந்து பிரிந்துபோய் இன்னொரு அமைப்பு  உருவாகுவதை ஜனநாயக பூர்வமாக அனுமதித்தவர். ஆதரித்தவர்.
தன் மேடையிலேயே அவருக்கு எதிராகப் பேசிய ஜெயகாந்தன் போன்றோரை தன் கைத்தடியால் தட்டி தனக்கு எதிராகப் பேசுவதை ஊக்குவித்த மாற்றுக்கருத்துக்கு மதிப்பளித்த மாண்பாளர் பெரியார்.

 மாற்று அமைப்புகளை அழித்தொழித்து ஒரு சர்வாதிகாரியாக தன்னை நிறுவிக்கொண்டதோடு தனது அமைப்பினுள்ளேயே  இரண்டாங்கட்டத் தலைவர்களையும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த போராளிகளையும் கொன்றொழித்தவர் பிரபாகரன்.

பெரியார் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆதரவாயிருந்தார். இன்றுவரை தமிழ் நாட்டில் இஸ்லாமிய ,கிறீஸ்தவ சமூகங்கள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வாழ்வதில் பெரியாரின் பிரச்சாரங்களே அடிப்படையாக இருந்துவருகின்றன.

பிரபாகரன் முஸ்லிம் மக்களை தம் ஆதிக்கப் பிரதேசத்திலிருந்து துரத்தியடித்தவர்.

தன் இறுதிக்கால நோய்மையிலுங்கூட  மேடைகள் தோறும் பேசிவந்த சுய சிந்தனையாளர் பெரியார்.

தனது பாதுகாப்பு ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு தலைமறைவாக பங்கருக்குள் இருந்தவர் பிரபாகரன்.

பிரபாகரன் பாசிசத்துக்கு அவரின் ஒழுக்கம் குறித்த மதிப்பீடுகளும் ஒரு காரணம் . பிரபாகரனின் தளபதியொருவர் அவர் இயக்கப் பெண்ணொருவரைக் காதலித்து அவர் கர்ப்பமான காரணத்தைப் பொறுக்காது இருவரையும் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டவர். 

பெரியார் ஒழுக்க மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கி தன்னை விரிந்த தளத்தில் காட்டி நின்றவர்.

பிரபாகரன் முழு மூட அறிவிலி .
அரசியல் ஒவ்வாமை கொண்டவர்.
அதனால் அன்ரன் பாலசிங்கம் அவர் தமிழில் பேசும் ஒரு சில வார்த்தைகளை தமிழிலேயே அதற்கு விளக்கமளித்து வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருந்தது.

பெரியார் விடுதலை உள்ளிட்ட பத்திரிகைகளை தொடங்கி நடாத்திய பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் உள்ள ஆசான்.பிரபாகரனுக்கு ஒன்றைப் படித்துப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லை.

பெரியார் சிந்தனை வட்டங்கள் இன்றும் இருக்கின்றன .இனியும் இருக்கும்.

பிரபாகரனால் ஈழ மக்கள் அழிந்தனர்.
பெரியார் ஒரு கடவுள்போல இன்றும் தமிழகத்தைக் காத்து நிற்கிறார்.

பகிர்வு செய்தி