Saturday, May 23, 2020

ஒருத்தர வேலைக்கு எடுக்கறது… கல்யாணம் பண்ணிக்கற மாதிரி.

© செல்வேந்திரன்
2020-05-23

அப்பா சொன்னார்: 

"டேய் ஒருத்தர வேலைக்கு எடுக்கறது… கல்யாணம் பண்ணிக்கற மாதிரி. எடுக்கதுக்கு முன்னாடி நூறு வாட்டி யோசி. ஆயிரம் கேள்வி கேளு. பத்து எடத்துல விசாரி. ஆனா ஒருதடவ வேலைக்கின்னு எடுத்துட்டா, அவனா போற வரைக்கும் வச்சி காப்பாத்து"

அப்பா மரணிக்கும் வரை எங்கள் தீப்பெட்டி கம்பெனி ஐம்பதாண்டுகள் நீடித்தது. கடைசி ஊழியரும் கிளம்பிய பின்னர்தான் லைஸென்ஸை சரண்டர் செய்தோம். கணேசன் மேச்சஸின் மேனாள் ஊழியர்களுள் சிலர் ஃபேஸ்புக்கில் என்னைப் பின் தொடர்கிறார்கள். அவர்கள் இதை உறுதி செய்வார்கள்.

**அப்படியானால் எப்படியாப்பட்டவனையும் கடைசி வரை கட்டி மேய்க்க வேண்டுமா?**

மூன்று விதிவிலக்குகள். 

1) பணம் கையாடல், 
2) பாலியல் தொல்லை, 
3) நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்பாடுகள். 

தீர விசாரித்து குற்றம் நிரூபணமானால், கைச்செலவுக்குப் பணம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடு. 

**சரி. பெர்பார்மன்ஸ்?** 

ஒருவன் ஒரு வேலையை செய்யவில்லை யென்றால், அதற்கு இரண்டே காரணங்கள்தான். 

1) அவனுக்கு வேலை செய்யத் தெரியவில்லை – உனது தேர்வு தவறானது. 

2) அவன் வேலை செய்ய விரும்பவில்லை –  உனது தேர்வு தவறானது. 

ஆராயாமல் நீ செய்த தவறுக்கு அவன் எப்படி பொறுப்பாவான். வச்சு வாழு. 

செயல்திறனற்ற மனிதன் என்று ஒருவன் உலகிலேயே இல்லை. ஒருவனின் பலத்தை வைத்து விளையாடு. பலவீனத்தைச் சுட்டி சுட்டி அடிக்காதே. அவனுக்கு என்ன வருமோ எதைச் செய்ய விரும்புகிறானோ அதைச் செய்யச் சொல். 

அப்படியொரு பணி உன் கம்பெனியில் இல்லை என்றால் அவனாக விலகிடும் வரை சம்பளம் கொடு. அது உன் தலையெழுத்து. 

**உள்ளே வரும்போது எல்லோரும் உலக உத்தமர்கள் போலத்தானே வருகிறார்கள். பிறகுதானே சுயரூபம் தெரிகிறது?** 

‘தம்பி.. ஒருத்தனின் மனப்போக்கு (ஆட்யூட்யூட்) மாறிப் போய்விடுவதற்கு அவன் மட்டும்தான் காரணமாக இருக்கமுடியுமா?’ 

என்ன விவாதித்தாலும் ஒரு ஊழியனை வீட்டுக்கு அனுப்புவதை அவரிடம் வாதாடி வெல்ல முடியாது. குருணையை குத்தித் தின்று வளர்ந்தவர். நெஞ்சறிந்து பிறிதொருவன் பசித்திருக்கப் பொறுக்காதவர். 

"ஒரு சமூகத்தில் உபரி என்பது குழந்தைகளுக்கும் முதியவர்களுக்குமானது" - எனச் சொன்ன இயேசுவை இதயத்தின் ஒரு பக்கத்திலும், "பழவர்க்கங்கள் நோயாளிகளுக்குரியவை பணக்காரர்கள் அதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்" - எனச் சொன்ன காந்தியை மறுபக்கத்திலும் சுமந்தவர். லாபம் என்பதை ஒருவித பாபம் என்று கருதிய லட்சியவாத தலைமுறையைச் சேர்ந்தவர்.

---

பொருளாதார மந்தநிலை காலகட்டத்தில் வாகன உற்பத்தியாளர்களும், மென்பொருள் நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 

"செல்வா.. ஒரு மாசம் வருமானம் இல்லைன்னா கூட சம்பளம் போட முடியாதுன்னா இவன் நடத்துனதுக்குப் பேரு தொழிலா… (இதற்கு மேல் அவர் சொல்லும் வசவுச் சொல்லை எழுத எனக்கே கூசுகிறது)" 

---

தனது தயாரிப்பை, சந்தை மதிப்பை, வாடிக்கையாளர்களை, முதலீட்டாளர்களை யெல்லாம் விட தன் ஊழியர்களையே பெரும்சொத்தாய் கருதுகிறவனே செழிப்பான். 

முன் சொன்னவை புறக்காரணிகளால் எளிதில் வீழ்ந்துவிடக் கூடியவை. திறமை மிக்க ஊழியர்களைக் கொண்டு மீண்டும் சாம்ராஜ்யங்களைக் கட்டி எழுப்பிவிட முடியும். இந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டத்தை வரும் ஆண்டில் சரிக்கட்டி விட முடியும். ஆயிரம் முன்னுதாரணங்களைத் தரமுடியும். 

உடனடியாக ஒன்றைச் சொல்வதானால், நாடடங்கினால் (lockdown) உலகம் முழுக்க தீப்பெட்டிகளுக்குத் தட்டுப்பாடு உருவானது. வட இந்தியாவில் ஐம்பது பைசா தீப்பெட்டி மூன்று ரூபாய்க்கு விற்றது. கோவில்பட்டி சிவகாசி பகுதிகளில் பல்லாண்டுகளாக தேங்கிய பண்டல்கள் அத்தனையும் காசானது. புதுரத்தம் ஏற்றிய உடல் போல ஆகிவிட்டது தீப்பெட்டித் தொழில். 

கையுறைகள், பிபி கிட்டுகள், முக கவசங்கள் இன்னபிற மருத்துவ ஆடைகளுக்கான ஆர்டர்கள் உலகெங்கிலுமிருந்து வந்து குவிய திருப்பூர் துள்ளாட்டம் போடுகிறது. 

ஓசூரின் பார்மா நிறுவனங்கள் இரட்டைச்சம்பளத்தில் ராப்பகலாய் காய்ச்சல் மாத்திரை அடித்துக் கொண்டிருக்கின்றன. 

**அனைத்துத் தொழிலுக்கும் ஏற்றமும் உண்டு. இறக்கமும் உண்டு. லாபத்தைச் சுகிப்பேன். நட்டம் வரும் நிழல் தெரிந்தாலும் அடுத்தவன் சோற்றில் மண்ணள்ளிப் போடுவேன் என்பவர்கள் பொருளாதார மந்தநிலை இல்லையென்றாலும் அழிவார்கள்.**

இன்று ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் துறைகளுள் பெரும்பாலானவற்றின் அந்திமம் பத்தாண்டுகளுக்கு முன்னரே தெரிந்துவிட்டது. ஆயினும் ஆட்களை வேலைக்கு எடுப்பதையோ, அநியாயச் சம்பளம் கொடுப்பதையோ, தொழிலை விரிவுபடுத்துவதையோ, ஆடம்பரத்தைக் குறைப்பதிலோ இந்நிறுவனங்கள் அக்கறை காட்டவில்லை. 

கடன் வாங்கி கடன் வாங்கி முக்குளித்தார்கள். நாங்கள் விற்பனையில் முதலிடம் என்றார்கள். நல்ல இலாபத்தில் இயங்குகிறோம் என்று பொய்ச்சித்திரம் காட்டினார்கள். முதலீட்டாளர்களின் மனமகிழ் மன்றம் போல கம்பெனியை நடத்தினார்கள். இயக்குனர்களின் பட்டியல் நீள்வதும் அவர்களது சம்பளம்  வீங்குவதும் நிகழ்ந்தது. இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாதவர்கள் அதன் தண்டனையை ஊழியர்களுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல.

**முதலீடு செய்தவனின் நோக்கம் இலாபம் மட்டுமே. இங்கே அறவுணர்ச்சி பஜனைகள் செல்லுபடியாகாது என்பவர்களின் குரல் கேட்கிறது.** 

ஆம், திடீர் நட்டத்தின் முழுச் சுமையையும் முதலாளிகளே ஏற்கவேண்டுமென்பது ஏற்புடையதல்ல. 

* ஊழியர்கள் தங்கள் சம்பளத்தின் ஒருபாதியை விட்டுக்கொடுக்கலாம். 

* சலுகைகளின் சில பகுதிகளை விட்டுக்கொடுக்கலாம். 

* வேலை நேரத்தை அதிகரிக்கலாம். செலவுகளைக் குறைக்கலாம்.

* குடும்பத்திற்கு வேறு வருமானம் உண்டு, சம்பளம் இல்லாமலும் சமாளிக்க முடியும் என்பவர்கள் தங்களது சம்பளத்தை நிலைமை சரியானதும் வாங்கிக் கொள்கிறேன் என பொருத்துக் கொள்ளலாம். 

* அப்படி விட்டுக் கொடுப்பவர்களுக்கு பிற்பாடு சிறிது வட்டியோ / இலாபமோ சேர்த்து தொகையை நிறுவனங்கள் கொடுக்கலாம். 

* வங்கிகளிடமோ அல்லது முதலீட்டாளர்களிடமோதான் ஒரு நிறுவனம் கடன் வாங்க வேண்டுமென்பதில்லை. 

* இதெல்லாவற்றையும் தாண்டியும் நிறுவனம் மூழ்கும் நிலைமை வந்தால் மனமுவந்து வெளியேற முன்வருபவர்களுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கலாம். 

* வெளியேறிய பின்னரும் நிறுவனத்திற்கான சேவைகளை அளிக்கும் வெண்டாராக சிலருக்கு வாய்ப்பளிக்கலாம். 

இவையனைத்தும் வெளிப்படைத் தன்மையான உரையாடல்களின் வழியே மட்டுமே சாத்தியம். 

--- 

இந்த இடத்தில் பொருத்தப்பாடு கருதி ஒன்றைச் சொல்கிறேன். 

அக்காலத்தில், நக்கீரன் இதழ் நெருக்கடியை சந்திக்கும்போது சில முகவர்கள் அடுத்தடுத்த மாதங்களுக்குரிய தொகையை கூட முன்கூட்டியே செலுத்தி விடுவார்கள். போலவே முகவர்கள் எதிர்பாராத இழப்பைச் சந்தித்து நெருக்கடியில் இருக்கும்போது நக்கீரன் இதழ் அவர்களைப் பில் பணம் கேட்டு தொந்தரவு செய்ய மாட்டார்கள். நக்கீரன் கோபால் கடைப்பிடித்த விழுமியம் அது. 

தொழில் என்பது ஒருவரையொருவர் கைத்தாங்கி விடுவது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சமணர்களும் பீதர்களும்  யவனர்களும் காப்பிரியர்களும் கடைப்பிடித்த வணிக அறம் அதுதான். தொழிலிலும் நிர்வாக அமைப்பிலும் மேலாண்மையிலும் அமெரிக்காவின் கோமணத்தையே நாமும் கட்டிக்கொண்டு ஆடியதன் காட்சிகள்தான் நாம் இன்று காண்பது. ஐஐஎம் கக்கிய இத்தனை ஜெனரல் மானேஜர்களாளும், துணைத்தலைவர்களாளும், சி.இ.ஓக்களாலும், கன்சல்டுகளாலும் ஒரு இரண்டு மாதங்கள் தாக்குப்பிடிக்க முடியாதென்றால் இந்த ஆர்கனோகிராமின் பொருள் என்ன? 

---

கூட்டம் கூட்டமாய் தங்கள் ஊருக்குக் கிளம்பும் வட இந்தியத் தொழிலாளர்களுக்குப் பிஸ்கட்டும் நீரும் தந்து ரயிலில் அனுப்புகையில் ஒன்றைக் கேட்டேன்: 

**‘உங்கள் ஊரில் பாலாறும் தேனாறுமா ஓடுகிறது.. அங்கு சென்று என்ன செய்வீர்கள்?’**

‘ஐயா எங்கள் ஊரில் பிழைக்க வழியில்லாமல்தான் இங்கு வந்தோம். சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு, வேலைநேரத்தில் ஏற்றத்தாழ்வு, தங்குமிடம் தகரக்கொட்டாய், உண்ணும் உணவு பன்றிக்குரியது எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டோம். நன்றியோடுதான் உழைத்தோம். 

வீடடங்கால் (lockdown) நாங்கள் பசித்திருந்தோம். உணவுக்காக தட்டியபோது முதலாளிகளின் கதவுகள் திறக்கப்படவே இல்லை. அவர்கள் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு பஞ்சணையில் புரண்டு படுத்துக்கொண்டார்கள்.

பசியென கதறும் ஒருவனைக் கடந்துபோக முடியுமென்றால், கண்டு கொள்ளாமலிருக்க முடியுமென்றால் அங்கே நீதியுணர்ச்சி செத்துவிட்டது என்று பொருள். நான் உணவில்லாமல் இன்றோ நாளையோ நாளை மறுநாளோ இறக்கக் கூடுமெனில், இவர்கள் என்னை எடுத்து அடக்கம் செய்யமாட்டார்கள். என் உடல் ரோட்டில் வீசப்படும். அநாதையாகச் செத்துப் போவதற்குப் பதிலாக ஊரில் என் அன்னையின் மடியில் சாவேன். 

---

ஒரு மனிதனுக்குச் சோறு போட சமூகத்திற்கு வக்கில்லையெனில் உலகையே தீயிட்டு கொளுத்து என ஒரு கவிஞன் அறம்பாடுவது இதனால்தான். 

ஒருவனின் பசி கண்டு கொள்ளப்படா தென்றால் அதுதான் அறவீழ்ச்சியின் எல்லை. அதற்கு அப்பால் கீழிறங்குவதற்கு எதுவுமில்லை. 

‘தருமம்’ எனும் ஒரே காரணத்திற்காக நான் பிறந்த மண்ணிலும் அதிகமாய் நேசித்த ‘கோவையும்’ இதற்கு விதிவிலக்கல்ல எனும் உண்மையால் என் கும்பி எரிந்தது. இன்று இது என் ஊரல்ல. 

---

இந்தியாவில் கூலிகள் வீழ்த்தப்பட்ட பின்னர் இப்போது ஊழியர்கள் வீழ்த்தப்படும் சீசன் துவங்கியிருக்கிறது. 

அவர்களுக்கு இத்தருணத்தில் சொல்வதற்கு என்னிடம் இரண்டே சொற்கள்தான் இருக்கின்றன. 

முதலாவது, இந்த வேலை தந்த சம்பளத்தில்தால் குடும்பம் பசியாற்றியது. வாடகை கொடுத்தீர்கள். பிள்ளைகள் படித்தார்கள். முதலாளிகளுக்கு நன்றி சொல்வோம். அவர்கள் நெருக்கடியிலிருந்து மீள மனதார வாழ்த்துவோம். 

இரண்டாவது, உலகமே இருள் மண்டி எங்கும் மரண ஓலமும் பசியின் கூக்குரலும் ஒலிக்கும் நாட்களில் நீங்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறீர்கள். எளிதாக இன்னொரு பிழைப்பைத் தேடிக்கொள்ள வழியற்ற சூழலில் ஈவிரக்கமின்றி வெளியேற்றப் பட்டிருக்கிறீர்கள். 

இப்படியொரு தலைவனுக்குக் கீழ்தான் நீங்கள் இத்தனை நாட்கள் களமாடியிருக்கிறீர்கள். இதை காட்டிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். 

* ஒரு மாட்டிற்குப் பதிலாக நுகத்தில் தன் கழுத்தைக் கொடுத்தவனை விட, 

* ஊனமுற்ற மனைவியை தோளில் தூக்கிக்கொண்டு கொளுத்தும் வெயிலில் காலுக்குச் செருப்பில்லாமல் நடப்பவனை விட, 

* தண்டவாளத்தில் படுத்துச் செத்தவனை விட, 

* தன் தகப்பனை சைக்கிளோடு சேர்த்துக்கட்டி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் மிதித்துச் சென்ற சிறுமியை விட சற்று மேலான வாழ்க்கை உங்களுடையது. 

அச்சம் கொள்ளாதீர்கள். கொரானாவிலும் கொடியது அச்சம். பதட்டமடையாதீர்கள். இன்னொரு அடிமைச் சங்கிலியை அவசர அவசரமாக அணிந்து கொள்வதற்குப் பறக்காதீர்கள். வீட்டில் இருப்பவர்களையும் பதட்டப் படுத்தாதீர்கள். நீங்கள் பிறந்ததே இந்த நிறுவனத்தில் இதே வேலையை மட்டுமே பார்க்க வேண்டு மென்பதற்காக அல்ல. இந்த வேலை மறுக்கப்பட்டதால் திருவண்ணாமலை கோவில் வாசலில் நின்று பிச்சை எடுக்கப்போவதில்லை. 

நிலைமை நிச்சயம் மாறும். அதிகபட்சம் சில மாதங்களுக்கு செளகர்ய குறைகள் ஏற்படலாம். பெட்ரோல், கல்வி, விருந்து வேக்காடுகள் போன்ற அதிகச் செலவினங்கள் தேவைப்படாத காலம். முடிந்தவரை தாக்குப் பிடியுங்கள். குடும்பமாகக் காந்தியின் கால்களைப் பற்றிக்கொள்ளுங்கள். நம் இன்றையப் பிரச்சனைகளுள் பெரும்பாலானவற்றுக்கு அந்தக் கிழவனிடம் தீர்வு இருக்கிறது. 

 **ஆனது ஆகட்டும் அடிச்சு நொறுக்கு அடுத்தது என்ன?’ எனும் மந்திரத்தை கற்றுத் தருகிறேன்.** 

நெருக்கடியான காலகட்டம் என்பது உண்மையில் மிகப்பெரிய வாய்ப்பு. உங்களுக்கு கண் என ஒன்றிருந்தால் போதும். 

உதாரணம்: திருக்குறளரசியின் நிறுவனம், இதுநாள் வரை மக்கள்தொடர்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஆகிய சேவைகளை அளித்து வந்தது. இந்த இரண்டிற்கும் அடுத்த இரண்டாண்டுகளுக்கு வாய்ப்பே இல்லை. உட்கார்ந்து ஒப்பாரி வைக்கவில்லை. ஊழியர்களைத் துரத்தவில்லை. ‘எங்கள் தின்பண்டங்கள் பாதுகாப்பாகத்தான் தயாரிக்கப் படுகின்றன என்பதை விளக்கும் குறும்படங்களை’ உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்காக  இயக்க ஆரம்பித்து விட்டாள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற இத்தகு விழிப்புணர்வு வீடியோக்கள் இன்று அவசியமானவை. 

இந்த இடத்தில் ஒரு சிறிய எச்சரிக்கை. எந்தத் தொழிலும் அதற்குரிய வருவாயைத்தான் தரும் (எலி புழுக்கை போடும்; யானை சாணி தரும் – அப்பா) உங்களது அனைத்துத் தேவைகளையும் ஆசைகளையும் அது பூர்த்தி செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது நம்மைத் தெருவில்தான் கொண்டு போய் நிறுத்தும். உங்கள் முதலாளியின் கோளாறும் அதுதான்.  

வாசித்துக் கொண்டே இருங்கள். சிந்தித்துக் கொண்டே இருங்கள். முயற்சித்துக் கொண்டே இருங்கள். புதிய வெளிச்சத்தின் சிறிய கீற்று தட்டுப்பட்டாலும் ‘ங்கொப்பன் மவனே சிங்கம்டா’ எனும் மந்திரத்தை சொல்லிக்கொண்டு விளக்கிடுங்கள்.

நினைவிருக்கட்டும் பத்தாம் வகுப்பின்  ‘சைன் தீட்டா, காஸ் தீட்டா’ போன்ற கொடூரங்களையே சமாளித்து வென்றவர் நீங்கள். 

அப்பாவின் மந்திரச் சொற்களோடே முடிக்கிறேன்: 

‘அழுதுக்கிட்டு இருக்காதடா… 
உழுதுக்கிட்டு இரு’ 

- © செல்வேந்திரன்

Sunday, May 17, 2020

நாம் தமிழர் - பாசிச அறிக்கை

நாம் தமிழர் ஆவணம் – தேசிய அறிக்கையன்று, பாசிச அறிக்கை!
குறிப்பு: இதை எழுதி இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றது. இக்கட்டுரையுடன் நண்பர்கள் பலரும் எழுதிய கூர்மையான, காத்திரமான விமர்சனக் கட்டுரைகளுடன் கூடிய தொகுப்பு ஒன்று வெளியானது. அவற்றின் அவசியமும் முக்கியத்துவமும் இன்றும் நிலவுவதாகவே கருதுகிறேன்.

எமது விமர்சனங்களின் விளைவாக, தமது ஆவணத்தைத் திருத்தப் போவதாகப் பின் வாங்கியவர்கள் இன்றுவரையில் அது குறித்து மவுனமாக இருப்பதோடு மட்டுமின்றி, ஆவணத்தின் பல கருத்துக்களை பலவகைகளில் ஆங்காங்கு ஒப்பித்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.

இறுதியாக, நடந்து முடிந்த திருச்சி மாநாட்டில், “நாம் தமிழர்” கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆவணத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களில் எந்த மாற்றமும் இன்றி ஒப்பித்திருப்பதைக் கவனத்தில் கொண்டு இதை என் பக்கத்தில் வலையேற்றுகிறேன்.

அதே சமயம், “நாம் தமிழர்” கட்சியினருக்கு இவ்விமர்சனங்கள் ஒருவகையில் பொருட்டாக இருக்கப்போவதில்லை என்ற புரிதலும் என்னளவில் ஏற்பட்டிருக்கின்றது. காரணம், அவர்கள் இத்தகைய கருத்தியல்களைக் கணக்கில் கொள்ளாத ஒரு அரசியல் புலத்தில் – வெகுமக்கள் அரசியல் களனில் – இயங்கிக் கொண்டிருப்பவர்கள். இவை அவர்களுக்குப் பொருட்டும் அல்ல. அவர்களது புரிதலுக்கு உட்பட்டவையும் அல்ல.

ஆகையால், இனி விமர்சனங்கள் அத்தளத்திற்குரிய வகையில் நகரவேண்டும் என்பது எனது அவதானிப்பு. முயற்சி கைகூட வேண்டும்.

————————————

கடந்த ஒரு நூற்றாண்டு காலத் தமிழக அரசியல் வரலாற்றில் எந்தக் கட்சியும் முன்வைக்கத் துணிந்திராத அரசியல் நிலைப்பாடுகளை வைத்து ஒரு அரசியல் ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது “நாம் தமிழர்” கட்சி. தமிழக அரசியலின் மையநீரோட்டத்தில் இருந்து இதுவரையிலும் பிரித்து நோக்கப்படாது இருந்தவர்களான முஸ்லீம்கள், கிறித்தவர்கள், மொழிச் சிறுப்பான்மையினர் ஆகியோரைப் பிரித்து, விலக்கி, எதிர் நிலையில் நிறுத்தி, இனத்தூய்மை வாதத்தின் அடிப்படையில் ஒரு அரசியலை முன் மொழியவும் துணிந்திருக்கிறது.

ஒரு அரசியல் கட்சியின் ஊடாக, தமிழகத்தில் இதுவரையில் தலையெடுத்திராத பாசிசப் போக்கு “நாம் தமிழர்” என்ற வடிவத்தில் தோன்றியிருக்கிறது. “நாம் தமிழர்” என்ற அக்கட்சியின் முழக்கத்தில் வெளிப்படுவது தேசியவாதம் அல்ல, அப்பட்டமான பாசிசம். இதைத் தெளிவுறப் புரிந்து, இத்தகைய ஆபத்துகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வது இன்றைய காலகட்டத்தின் கட்டாயம்.

அந்நோக்கில், “நாம் தமிழர்” கட்சி வெளியிட்டிருக்கும் ஆவணத்தின் உள்ளீடாக இருப்பது தேசியவாதம் அன்று, பாசிசமே என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். ஆவணம் முன்வைத்திருக்கும் கருத்துக்களை, உள்ளது உள்ளவாறு எடுத்துக் கொண்டு, அதன் பாசிசத்தன்மையைக் காட்ட முனைவதற்கு மேலாக வெறொன்றையும் இக்கட்டுரை செய்துவிடவில்லை.

தமிழகத்தின் முதல் பாசிசக் கட்சி ஆவணம்

”நாம் தமிழர்” கட்சி வெளியிட்டிருக்கும் ஆவணம் சில அரசியல் முடிவுகளைத் தேர்வு செய்திருக்கிறது. அந்த அரசியல் முடிவுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாது, தொன்ம அடிப்படையில் மீள எழுதியிருக்கிறது. அத்தொன்ம வரலாற்றில் இருந்து, தமிழியம் என்ற ஒரு கருத்தியலைக் கட்டமைக்கிறது. அக்கருத்தியலின் வழி தனது அரசியல் முடிவுகளுக்கு வலுவான நியாயங்களைக் கற்பிக்கிறது. ஆவணம் இயங்கும் முறை இது.

ஆனால், ஆவணத்தை வாசிப்பவர்களுக்கு இது புலப்படாமல் இருக்க, தொன்ம வரலாற்று விளக்கத்தில் இருந்து தொடங்கி, அரசியல் முடிவுகளுக்கு வந்து, அதற்கான விளக்கங்களையும் தரும் வகையில் ஆவணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்படையாகத் தெரியும் வடிவத்தைத் தவிர்த்து, மேலே விளக்கிய அதன் இயங்கு – கட்டமைவில் இருந்து ஆவணத்தை அணுகிப் பார்க்கலாம்.

”நாம் தமிழர்” கட்சி ஆவணம், தனது இலக்குகளாக பின்வருவனவற்றைக் கூறுகிறது:

இந்தியாவில், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநிலத்தவரே ஆளும் நிலையில், தமிழ்நாட்டில் தமிழர் ஆளமுடியாத நிலை தொடர்ந்து நிலவுவதை மாற்றி, தமிழரை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவதே உடனடி இலக்காகும்.

இந்திய ஒன்றிய இறையாண்மைக்கு உட்பட்ட முழுத் தன்னாட்சி உரிமைகொண்ட மாநிலங்களின் உண்மையான கூட்டாட்சி ஒன்றியத்தை நிறுவுதலே நாம் தமிழர் கட்சியின் அடுத்த திட்டமாகும். (பக்கம்: 30)

ஒரு தேர்தல் கட்சிக்கு உரிய, மிகவும் எளிமையான, நல்ல கோரிக்கைகள்தாம். வரவேற்கப்பட வேண்டியவைதாம். இவ்வளவு எளிமையான இலக்குகளை வைத்திருக்கும் ஒரு ஆவணத்தை பாசிசம் என்று குற்றம் சாட்டுவது தகுமா? ஆனால், ஆவணம் இப்படி எளிமையான கோரிக்கையோடு நின்றிருந்தால் பிரச்சினையே இல்லை!

ஆவணம், முகப்பிலேயே வைத்திருக்கும் முழக்கங்கள் இவை: ”இது மற்றுமோர் அரசியல் கட்சி அன்று! மாற்று அரசியல் புரட்சி!” ”நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர்! புரட்சிவாதிகள்!”

இந்த இருமுழக்கங்களுக்கும் இவ்வளவு எளிமையான இலக்குகளுக்கும் பாசிசத்திற்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும் என்ற கேள்வி எழலாம்.  “புரட்சி” என்பதன் பொருள் அறியாமல் பேசுகிறார்களோ என்று சந்தேகமும் இயல்பாக எழலாம்.

ஆனால், பிற்சேர்க்கையில் ”ஆவணத்தை விளக்கிடும் உரைவீச்சுத் தெறிப்புகள்” பகுதியில் உள்ள தெளிவான விளக்கத்தில் இருந்து தொடங்கினால் விடயம் புரிய வரும்.

அது பின்வருமாறு:

புரட்சி என்பது,

தலைகீழ் மாற்றம்!

அடிப்படை மாற்றம்!

அமைப்பு மாற்றம்!

அரசியல் மாற்றம்! (பக்கம்: 51)

மிகத் தெளிவான புரிதல் இருப்பது தெளிவாகிறது.

மாநில ஆட்சியைப் பிடிக்கும் இலக்கு, உண்மையான இந்தியக் கூட்டாட்சியை உருவாக்கும் இலக்கு புரட்சிகர மாற்றம் இல்லை என்ற தெளிவுடனேயே ஆவணம் இயற்றப்பட்டிருக்கிறது. ”தமிழர் குமுகம் (சமூகம்) பற்றிய மதிப்பீடு” என்ற பகுதியில், பக்கம் 23 –ல் ”அதிகாரமற்ற தமிழ்நாட்டு ஆட்சியைக்கூட ஆளும் உரிமையையும் இழந்ததாக” தமிழர் குமுகம் வீழ்ந்துபட்டிருப்பதாக ஆவணம் வெளிப்படுத்தும் ஆதங்கம் அத்தகைய தெளிவை வெளிக்காட்டி விடுகிறது.

அப்புறம் என்ன ”தலைகீழ் மாற்றம்” செய்யத் துடிக்கிறது “நாம் தமிழர்” கட்சி!

அதையும் தெளிவாகவே கூறியிருக்கிறது ஆவணம்.

”ஆய்தப் புரட்சி அல்ல!

அறிவுப் புரட்சி!

கருவி ஏந்திய புரட்சி அல்ல!

கருத்துப் புரட்சி!”

”நாம் தமிழர்” கட்சி நிகழ்த்தப் போவதாகக் கூறும் புரட்சி கருத்துப் புரட்சி மட்டுமே! அத்தகையதொரு புரட்சியைச் செய்யப்போவதாலேயே அவர்கள் தம்மை ”அரசியல்வாதிகள் அல்லர் புரட்சிவாதிகள்” என்று முழு சுய உணர்வோடு முகப்பிலேயே அறிவிக்கிறது ஆவணம்.

அத்தகைய ”கருத்துப் புரட்சி” என்ன என்பதையும் ஆவணம் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறது.

கடந்த 80 வருடங்களாக, தமிழ் நாட்டில் ஆதிக்கத்தில் இருக்கும் திராவிடக் கருத்தியலை – அது சமூகத்தில் முற்போக்கான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது, பார்ப்பனியத்திற்கு அணைபோட்டிருக்கிறது என்று நிலவும் ஒருமுகமான கருத்தொருமிப்பை வீழ்த்தி, தலைகீழாகப் புரட்டிப் போட்டு, பார்ப்பனியத்தைக் காட்டிலும் மோசமான சமூகச் சீரழிவை உருவாக்கியது திராவிடக் கருத்தியலே; பார்ப்பனியமும் திராவிடக் கருத்தியலும் எதிரெதிரானவை என்ற கருத்தியலைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, இரண்டும் எதிரெதிரானவை அன்று உடனொட்டிப் பிறந்தவையே என்று ஒரு தலைகீழ் கருத்துப் புரட்சியைச் செய்வதே “நாம் தமிழர்” கட்சி ஆற்றவிருக்கும் கருத்துப் புரட்சி என்று ஆவணம் மிகத் தெளிவாகவே விளக்கியிருக்கிறது.

”நாம் தமிழர்” ஆற்றவிருப்பதாக அவர்களது கட்சி ஆவணம் பறைசாற்றும் இந்தப் புரட்சியே பாசிசம்.

புரட்சி எப்படி பாசிசமாகும் என்ற கேள்வி உடனடியாக வாசிப்பவர் மனதில் எழக்கூடும்.

பாசிசம் குறித்த மரபான மார்க்சிய விளக்கங்கள், அதை ஒரு மிகப் பிற்போக்கான, மிக மோசமான, ஆபத்தான போக்காகவே வரையறுத்திருக்கின்றன. பாசிசம் மிகவும் பிற்போக்கான, ஆபத்தான போக்கு என்பது சரியே என்றாலும், அது நிலவும் சமூக அமைவில் ஒரு தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்தவே முனைகிறது என்ற பொருளில், நிலவும் அனைத்தையும் புரட்டிப் போட முனைகிறது என்ற பொருளில் ஒரு “புரட்சிகரமான” அரசியல் போக்கே!

பாசிஸ்டுகளின் அகவயமான புரிதலும் தாம் புரட்சியாளர்கள் என்பதுவே!

”நாம் தமிழர்” கட்சியின் ஆவணம் அறிவித்திருப்பதைப் போன்று அக்கட்சி நிகழ்த்த முயற்சிப்பது ஒரு ”பாசிசப் புரட்சி” யையே.

இதை விளங்கிக் கொள்ள ”பாசிசம்” என்பதை வரையறுத்துப் புரிந்து கொள்வது முதலில் அவசியம்..

ஒருபுறம், “தேசியம் என்றாலே பாசிசம்” “தேசியம் பாசிசக் கூறுகளை தன்னளவிலேயே உட்கொண்டிருக்கிறது” என்ற அறிவுப்புல ஆதாரம் அற்ற அபத்தமானக் குற்றச்சாட்டு.

இன்னொருபுறம், தேசியக் கோரிக்கைகளை வெளிப்படையாக முன்வைத்துக் கொண்டு பாசிசத்தை முன்வைக்கும் ஆபத்தான போக்கு.

உருப்பெற்று வரும் தமிழ் தேசியத்தை ஒரு ஜனநாயகப் பூர்வமான நோக்கில் வளர்த்தெடுப்பதற்கு, இந்த இரு எதிர் முனைப் போக்குகளின் ஆபத்துக்களை உணர்ந்து கொள்வதும், பாசிசத்தை தேசியத்தில் இருந்து வித்தியாசப்படுத்தி தெளிவுபடுத்திப் புரிந்துகொள்வதும் இன்று மிக அத்தியாவசியமான ஒன்றாகியிருக்கிறது.

பொதுவில் “பாசிசம்” என்பது தமது அரசியல் ”எதிரிகளை” அல்லது தமக்கு ஒவ்வாதவர்களை வசைபாடும் ஒரு சொல்லாகப் பயன்படுத்தும் போக்கே நீக்கமற நிறைந்திருக்கிறது. அதே போன்று, சர்வாதிகாரப் போக்கு ஒருவரிடம் வெளிப்பட்டால், அல்லது ஜனநாயமற்ற போக்கு வெளிப்பட்டாலும்கூட உடனே அவர்களை “பாசிஸ்ட்டு” என்று வசைபாடுவதும் வழக்கமாகிவிட்டது. அத்தகைய மழுங்கிப்போன பிரயோகத்தில் இருந்து அப்பதத்தை விடுவித்து, அதன் அரசியல் கோட்பாட்டு அர்த்தத்தில் கையாளப்பட வேண்டும் என்பதுவும் இன்றைய நிர்ப்பந்தமாக எழுந்திருக்கிறது.

இந்த நோக்கில், கடந்த இருபது ஆண்டுகளில் கல்விப் புலங்களில் நிகழ்ந்திருக்கும் ஆரோக்கியமான ஆய்வுகள், விவாதங்களின் ஊடாக பாசிசம் குறித்து ஒரு தெளிவான வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய பங்களிப்புகளை அளித்திருப்பவர், Roger Griffin என்ற பிரிட்டிஷ் கல்வியாளர். பாசிசம் குறித்து அவர் முன்வைக்கும் விரிவான கருத்துக்களுக்குள் புகுவது இங்கு சாத்தியமில்லை. அவர் முன்வைக்கும் மையமான வரையறுப்புகளை மட்டும் தற்சமயம் எடுத்துக் கொள்வது போதுமானது.

பாசிசம்: ஒரு அரசியல் கோட்பாட்டு வரையறை

ரோஜர் க்ரிஃபின் பாசிசம் குறித்து முன் வைக்கும் வரையறை பின்வருமாறு:

பாசிசம் என்பது ஒரு அரசியல் கோட்பாட்டு வகையினம். அவ்வரசியல் கோட்பாட்டின் மையக்கருவாக அமைந்திருக்கும் தொன்மம், அதன் பல்வேறு வடிவ சாத்தியங்களிலும், தேசப்புத்துயிர்ப்பு என்ற வடிவிலான அதிதீவிர வெகுமக்கள் தேசியவாதமாக உருக்கொள்ளும்.

(Fascism is a genus of political ideology whose mythic core in its various permutations is a palingenetic form of populist ultra-nationalism.)

இந்த வரையறுப்பின் மூன்று அம்சங்களாவன:

1. தேசப்புத்துயிர்ப்பு (palingenesis)

2. அதிதீவிர தேசியவாதம் (ultra – nationalism)

3. வெகுமக்கள் தன்மை கொண்டிருத்தல் (populism)

அவற்றுக்கு ரோஜர் க்ரிஃபின் தரும் விளக்கங்களாவன:

தேசப்புத்துயிர்ப்பு என்பது பழைய பொற்காலம் ஒன்றை மீட்டெடுக்கும் நோக்கில் அமைந்த கருத்தமைவு அன்று. பழம் பெருமை மிக்க தமது தேசம், வரலாற்று ரீதியாகச் சிதைந்து, தற்காலத்தில் அரசியல், சமூகம், பண்பாடு, பொருளாதாரம் என்று அனைத்து அம்சங்களிலும் சீரழிந்து வீழ்ந்துபட்டுக் கிடக்கிறது என்பதை வலியுறுத்தி, இந்தச் சீரழிவிலிருந்து மீண்டு, தேசம் புதிய வலிமையோடு புத்தெழுச்சி பெறவேண்டும் என்று வலியுறுத்துவதே இக்கருத்தமைவின் பண்பு என வரையறுக்கிறார்.

பழைய பொற்காலத்திற்குத் திரும்புவது அல்லது மீட்டெடுப்பது என்ற கருத்தமைவை வைப்பவர்கள் பிற்போக்குவாதிகளாக அறியப்படுபவர். பிற்போக்குவாதிகளைப் போன்று பாசிஸ்டுகள் பழைய பொற்காலம் ஒன்றுக்குத் திரும்புவதை வலியுறுத்துவதில்லை. மாறாக, புதிய வலிமையோடு தேசம் மீண்டும் பிறக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவர் என்று வித்தியாசப்படுத்துகிறார். அந்த வகையில், பாசிஸ்டுகள் தேசத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் ஆகிய அனைத்து அம்சங்களையும் அடியோடு மாற்றியமைப்பதைத் தமது இலக்காகக் கருதுபவர்கள், என்ற பொருளில் ஒரு ”புரட்சியை” – தலைகீழ் மாற்றத்தை – நிகழ்த்த விரும்புபவர்கள் என்று விளக்குகிறார். பாசிஸ்ட்டுகளும் தம்மைப் புரட்சியாளர்கள் என்ற சுய புரிதலுடனே இயங்குவர் என்பதையும் காட்டுகிறார்.

இத்தாலியின் பாசிஸ்டுகளுக்கு ரோமானியப் பேரரசு பழமையின் கூறாக இருந்தது. ஜெர்மனியின் நாஜிக்களுக்கு ஆரிய இனம் பழமையின் கூறு. ஆனால், அந்த பழைய நிலைக்குத் திரும்புவது அவர்களது நோக்காக இருக்கவில்லை. அந்தப் பழம் பெருமையை மீட்டெடுப்பது, புது வலிமையோடு தமது தேசத்தை புதிதாகப் பிறக்கச் செய்வதே அவர்களது சுயபுரிதலாகவும் இலக்காகவும் இருந்தது.  அதே போன்று, கிறித்தவம், முதலாளியம், சோஷலிசம் ஆகியவற்றால் சீரழிந்து வீழ்ந்துபட்டிருந்த தமது தேசத்தை அவற்றின் செல்வாக்கிலிருந்து மீட்டு, தமது தேசத்தின் பழம் பெருமைமிக்க அம்சத்தின் (ரோமானிப் பேரரசு, ஆரிய இனம்) அடிப்படையில் அனைத்து அம்சங்களிலும் வலிமைமிக்க நவீன தேசத்தைக் கட்டமைப்பதே அவர்களது இலக்காக இருந்தது.

தேசப் புத்துயிர்ப்பு என்ற இக்கருத்தமைவை விளக்க முற்பட்ட இன்னொரு சந்தர்ப்பத்தில் ரோஜர் க்ரிஃபின், அக்கருத்தமைவின் மற்றுமொரு முக்கிய பண்பாக, அப்புத்துயிர்ப்பு மிக அருகாமையில், வெகு விரைவில் நிகழப்போகிறது, என்பதாகவே பாசிசத்தால் முன்வைக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

இரண்டாவதாக, பாராளுமன்ற அரசியலுக்கு எதிரான தீவிரவாதப் போக்குகள், முதலாளிய தாராளவாதத்திற்கு எதிரான தீவிரப்போக்குகள் ஆகியவற்றைக் குறிப்பவையாக மட்டுமே அதிதீவிர தேசியவாதம் என்ற பதத்தை க்ரிஃபின் வரையறுக்கவில்லை. பல்வேறு வகைப்பட இனமைய வாதங்களையும் (ethno – centrism) பிற இனத்தவர்கள் மீதான இனவெறுப்பையும் (xenophobia) பிறப்பின் அடிப்படையில் அமைந்த தூய்மையான இனக்குழுவாக தேசத்தைக் கட்டமைக்கும் இனவாதத்தையும் (biologically determined racism) உள்ளடக்கியதே அதிதீவிர தேசியவாதம் என்பதாக வரையறை செய்கிறார். நாஜிக்கள் ஜெர்மன் தேசத்தை ஜெர்மன் இனமாக வரையறுத்தது இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

தேசத்தை எந்தக் கலப்படமும் அற்ற தூய்மையான ஒரு இனக்குழுவாக முழுச் சுய உணர்வோடு வரையறுக்கும்போது மட்டுமே அது அதிதீவிர தேசியவாதமாக, பாசிசத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக அமைந்திருக்கும் என்று வலியுறுத்துகிறார்.

மூன்றாவதாக, தற்காலத்தைய நிலையில், தேசத்தின் “தூய்மையான” மக்கள், இனக்கலப்பாலும், சுய உணர்வின்றி தமக்குள்ளேயே போரிட்டு ஒருவரையொருவர் வீழ்த்திக் கொண்டிருப்பதாலும் “உறக்க நிலை”யில் ஆழ்ந்திருக்கும் சூழல் நிலவுவதாக பாசிஸ்டுகள் கொள்வர். அத்தகைய “உறக்க நிலை”யில் இருந்து அவர்களை விழித்தெழச் செய்து, தேசத்தைப் புதிதாகப் பிறக்கச் செய்யும் தமது நிகழ்ச்சி நிரலில் முழு வேகத்தோடும் உற்சாகத்தோடும் பங்கேற்கச் செய்வதே அத்தகைய அதிதீவிர தேசியவாதம் வெகுஜனத் தன்மை கொண்டிருப்பதன் பொருள்.

இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு, புதிதாகப் பிறக்கும் தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகும் ”புதிய உயர் குடியினருக்கே” உரியது. இவர்கள், தேசத்தில் ஏற்கனவே அறியப்பட்ட பழைய “உயர் குடியினர்” அன்று. தேசத்தின் புத்துயிர்ப்பு என்ற கொள்கையில் கொண்டிருக்கும் பிடிப்பு, அக்கொள்கையை அடைவதில் அவர்களுக்கு உள்ள உறுதி மற்றும் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ”முன்னணிப் படை”யாகிய கட்சியின் உறுப்பினர்களில் இருந்தே இப்”புதிய உயர் குடியினர்” அடையாளம் காணப்படுவார்கள்.

அதிதீவிர தேசியவாதத்தின் “வெகுஜனத் தன்மை” இவ்வாறு இருமுகம் கொண்டது. இதன் உள்ளடங்கிய அம்சம், தேசத்தின் “தூய்மையான” சக்திகளை விழித்தெழச் செய்வதன் மூலம் (வெகுமக்கள் மற்றும் “புதிய உயர் குடியினர்”) இனத்தூய்மையை மீட்டெடுத்தல் – பிற இனத்தவரை விலக்குதல். இனத்திற்குள்ளேயே இருக்கும் இக்கருத்தோடு முரண்படும் சக்திகளை ஒழித்தல்.

இந்த மூன்று கூறுகளும் அறிவியல் பூர்வமான ஒரு கருத்தமைவை அடித்தளமாகக் கொண்டிராமல், ஒரு தொன்மத்தின் அடியாக அமைந்திருக்கும். பாசிசம் தலையெடுக்கும் வெவ்வேறு பிரதேசங்களின், தேசங்களின் தனித்தன்மைகள் சார்ந்து, இத்தொன்மக் கருவின் தனித்தன்மையும், அதன் பரிமாணங்களும் இருக்கும்.

இந்த வரையறுப்பையும் விளக்கங்களையும் ரோஜர் க்ரிஃபின் 1991 ஆம் ஆண்டு வெளியிட்ட The Nature of Fascism என்ற தமது நூலில் முன்வைத்தார். 1960 களுக்குப் பின் பாசிசம் குறித்த ஆய்வுகள் தேங்கிக் கிடந்த சூழலில், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் எழுந்த பலவிதமான பாசிசப் போக்குகளையும் ஆய்ந்து, அவற்றின் பொதுமையான பண்புகள் என்று ஒற்றை வரியில் சுருக்கமாக இவர் முன்வைத்த வரையறை கல்விப் புலங்களில் கடும் விவாதங்களைக் கிளப்பியது.

இந்த விவாதங்களின் போக்கில், அவரது வரையறுப்பிற்கு பல தளங்களில் கிடைத்த வரவேற்பால் உந்தப்பட்டு, 1998 ஆம் ஆண்டு, பாசிசம் குறித்த ஆய்வுகளில் தாம் முன்வைத்திருக்கும் கருத்தமைவையொட்டி ”புதிய ஒத்திசைவு” ஒன்று உருவாகி வருவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அவரது வரையறுப்புடன் உடன்படாத கல்வியாளர்களுடன் மீண்டும் ஒரு சுற்று கடும் விவாதங்கள் நிகழத் தொடங்கின.

இச்சுற்று விவாதங்களில், பாசிசம் குறித்த தமது வரையறுப்பின் குறைகள் சிலவற்றை உணர்ந்து கொண்டு, 2004 ஆம் ஆண்டளவில் சில திருத்தங்களைச் செய்யவும் முன்வந்தார் ரோஜர் க்ரிஃபின்.

அவரது வரையறை, இரண்டு உலக யுத்தங்களுக்கிடையே ஐரோப்பாவில் எழுந்த பாசிசப் போக்குகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நிலைமைகளில் புதிதாக உருவாகத் தொடங்கியிருந்த நவ – பாசிசக் குழுக்களின் பண்புகள் சில இந்த வரையறையை மீறியவையாக இருந்தன. மேலும், பாசிசம் ஐரோப்பியாவில் மட்டுமின்றி ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் தோன்றக்கூடியதன் சாத்தியத்தை உள்ளடக்கியதாக இவ்வரையறை இருக்கவில்லை.

இரு உலக யுத்தங்களுக்கு இடையில் ஐரோப்பாவில் தோன்றிய பாசிசம் வெகுமக்கள் தன்மையைக் கொண்டிருந்தது. தேசத்தின் புத்துயிர்ப்பு வெகுவிரைவில் நிகழப்போகிறது என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தது. இந்த இரு அம்சங்களையும் தீர்மானிப்பதில் அக்காலத்தைய ஐரோப்பிய சமூக எதிர்கொண்டிருந்த கடும் நெருக்கடிகள் அமைந்திருந்தன.

முதலாம் உலகப் போரின் பாதிப்புகள், ரசியப் புரட்சியின் விளைவாக, ஐரோப்பாவெங்கும் கம்யூனிஸ்ட் எழுச்சி குறித்துப் பரவியிருந்த அச்சம், முதலாளியப் பொருளாதாரத்தின் கடும் வீழ்ச்சி, பகுத்தறிவு (rationalism) முன்னேற்றம் (progress) என்ற கருத்தமைவுகளில் சமூகத்தின் அறிவார்த்த பிரிவினரிடையே கடும் அவநம்பிக்கை, வெகுமக்களிடையே பரவியிருந்த கடும் அதிருப்திகள், போராட்டங்கள் ஆகிய காரணிகள் அக்காலத்திய பாசிசத்தின் வடிவத்தைத் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்தின.

இந்த நெருக்கடிகள், ஜெர்மனியிலும் இத்தாலியிலும் மிக அதீதமாக முனைப்பு பெற்றிருந்த காரணத்தாலேயே அவ்விரு நாடுகளிலும் பாசிசம் பெரும் வெகு மக்கள் இயக்கங்களாக எழுச்சி பெற்றன. அதிகாரத்தைக் கைப்பற்றின. சர்வாதிகாரங்களை நிறுவின. ஆரவாரமான பெரும் நிகழ்வுகள், இராணுவம் அல்லாத குழுக்களின் ஆயுதம் ஏந்திய அணிவகுப்புகள், ஸ்வஸ்திகா போன்ற சின்னங்கள் சர்வ வியாபகமாக பாவிக்கப்பட்டது போன்ற வடிவங்களை எடுத்தன. ஒற்றைக் கட்சி, ஒரே தலைவன், (”ஒரே மக்கள், ஒரே பேரரசு, ஒரே தலைவன்” என்பதே நாஜிக்களின் முழக்கமாக இருந்தது) பொருளாதார – பண்பாட்டு உற்பத்திகளின் பெரும் நிறுவனமயமாக்கல், இளைஞர் இயக்கங்கள், போன்ற அமைப்பு வடிவங்களை எடுத்தன.

அதே சமயம், ஜெர்மனி – இத்தாலி இரு நாடுகளின் தனித்துவமான நிலைமைகளையொட்டி இவற்றில் பாசிசக் கட்சிகளின் அணுகுமுறைகளும் தமக்குரிய தனித்துவத்தைக் கொண்டிருந்தன. ஜெர்மனியில் ஹிட்லர், தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற அதிகாரத்தைக் கைக்குள் கொண்டு வந்து, பிறகே பின் வாசல் வழியாக சர்வாதிகாரியாக முடிந்தது. இத்தாலியில், முசோலினி, ரோமை நோக்கி அணிவகுப்போம் என்று அறிவித்ததுமே அதிகாரம் அவரது கைகளில் விழுந்தது.

ஐரோப்பாவின் பிற நாடுகளில் பாசிச சக்திகள் இதுபோன்று எளிதில் பெரும் எழுச்சி காணவோ அதிகாரத்தைக் கைப்பற்றவோ சாத்தியப்படவில்லை. (ஸ்பெயினில் ஃப்ராங்கோவின் ஆட்சியை பாசிசம் என்று பொதுவுடைமையர்கள் சொல்வது வழமை. க்ரிஃபின் மட்டுமின்றி மற்ற பல ஆய்வாளர்களும் அதை மறுக்கின்றனர்). இதன் விளைவாக, பாசிசம் குறித்த ஆய்வுகள் பெரும்பான்மையும் இந்த இரு நாடுகளை மையமாகக் கொண்டே செய்யப்பட்டிருந்தன. மேலே விவரித்த வகையான அமைப்பு வடிவங்கள், சின்னங்கள், நடவடிக்கைகளே பாசிசத்தின் வரையறைகள் என்று ஆய்வாளர்கள் மத்தியிலும், அவை ஏற்படுத்தியிருந்த பாதிப்புகளால் வெகுமக்கள் மத்தியிலும் தின்மையாகப் பதிந்துவிட்டிருக்கின்றன. க்ரிஃபினின் வரையறுப்பிலும் தேசத்தின் புத்தியிர்ப்பு வெகு அருகில் நிகழ இருக்கிறது என்ற கருத்தமைவும், வெகுமக்கள் தன்மை (இந்த இரு நாடுகளின் குறிப்பான அனுபவங்கள்) ஆகிய இரு அம்சங்கள் பாசிசத்தின் பொதுவான வரையறுப்பாக இடம் பெற்றன.

ஆனால், இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு, பாசிசச் சக்திகளால் விளைந்த பேரழிவுகளை வெகுமக்கள் அனுபவித்து உணர்ந்தபிறகு, பாசிசத்தின் இக்குறிப்பான வடிவங்களின் சிறு வெளிப்பாடுகளும் வெகுமக்களின் அங்கீகாரத்தைப் பெறமுடியாதவையாகிப் போயின. பாசிசச் சக்திகளும் தாம் இனி அந்த வடிவங்களை எடுக்கவியலாது என்பதை நன்கு உணர்ந்துகொண்டுள்ளன. புறச்சூழல் அளவிலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பிய பொருளாதாரம் வளம் பெற்றதும், ”மக்கள் நல அரசுகள்” (welfare states) வெகுமக்களின் வாழ்க்கை நிலைமைகளில் கொண்டு வந்த பெரும் முன்னேற்றங்களும் தேசம் சீரழிந்திருக்கிறது என்றோ அதை உடனடியாக “புத்துயிர்ப்பு” கொள்ளச் செய்யவேண்டும் என்றோ கருத இடமின்றிச் செய்துவிட்டன.

இத்தகைய மாறிய நிலைமைகளில், பாசிச இயக்கங்கள் புதிய தளங்களில் தமது செயல்பாடுகளை நகர்த்துவதையும், புதிய வடிவங்களையும் எடுக்கத் தொடங்கியுள்ளன.

முதலாவதாக, பாசிச இயக்கங்கள், ”தேசப்புத்துயிர்ப்பு” என்ற கருத்தமைவை ஒரு சர்வதேச அல்லது பல்தேசியக் கூட்டமைவு என்ற தளத்திற்கு நகர்த்தியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஐரோப்பா வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டுமே உரியது என்று முழங்கும் ஆப்பிரிக்கர்கள் – ஆசியர்கள் மீதான இனவெறுப்பு, முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த பல தேசிய இனங்களின் மீதான ரசிய ஆதிக்கத்தை வலியுறுத்தும் போக்கு, தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவைப் பிளவுபடாமல் காப்பாற்ற வலியுறுத்தும் இந்துத்துவப் போக்கு, இந்தியத் தேசித்திற்குள்ளாக இருப்பதை அங்கீகரித்துக் கொண்டே தீவிர இனவாத – பிரதேசவாதத்தை வலியுறுத்தும் போக்கு – சிவசேனா, என்பவற்றைக் குறிப்பிடலாம்.

“தேசப்புத்துயிர்ப்பு” ஒரு நீண்ட இடைக்காலத்தில் சிக்குண்டு இருப்பதாக பாசிஸ்டுகளின் சுயபுரிதல் பரிணாமம் பெற்றிருப்பது இதற்கான காரணங்களில் ஒன்று. மற்றது, இரண்டாம் உலகுக்குப் பிறகான முதலாளிய வளர்ச்சி, பெரும் அளவிலான ஆசிய மற்றும் ஆப்பிரிக்க மக்களின் குடிபெயர்வுகளை பல்வேறு காரணிகளால் சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதனால் விளைந்த பெரும் அளவிலான இனக்கலப்புகளை நீக்கி ஐரோப்பிய (இன்னபிற மேற்கூறிய எடுத்துக்காட்டுகளும்) அளவில் இனத்தூய்மையை உருவாக்குவதே தற்சமயம் முக்கிய பிரச்சினையாக முன்னிற்கிறது என்றும் பாசிஸ்டுகளின் சுயபுரிதலில் மாற்றம் நிகழ்ந்திருப்பது.

“தேசப்புத்துயிர்ப்பு” என்ற கருத்தமைவை நவ – பாசிஸ்டுகள் முற்றிலுமாகத் துறந்துவிடவில்லை. அது நீண்ட கால இலக்காகவும், அதற்கு முன்னதாக பிரதேச அளவிலான இனக்கலப்புகளைக் களைவது தற்காலத்தைய அவசியமாகவும் அவர்களது புரிதலில் நுணுக்கம் கூடியிருக்கிறது எனலாம்.

இரண்டாவதாக, ஒரு மையப்படுத்த தேச அளவிலான, அமைப்பு என்ற நிலையில் இருந்து, அதிகாரப் படிநிலை வரிசையற்ற, மையம் சிதறுண்ட, தலைமையற்ற, தெளிவான வரையறைகள் அற்ற சிறு சிறு குழுக்களாக பாசிச அமைப்புகள் பரிணாமம் பெற்றிருக்கின்றன. இரு உலகப் போர்களுக்கு இடையிலான, பாசிசத்தின் நன்கு அறியப்பட்ட அடையாளங்களான “ஒரே மக்கள், ஒரே பேரரசு, ஒரே தலைவன்” என்ற முழக்கம் எங்கு முளைவிட்டாலும் அடையாளம் காணப்பட்டு, துடைத்து அழிக்கப்படும் என்பதை நன்கு உணர்ந்துகொண்டுள்ள நிலையில், மைய நீரோட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியாக செயல்பட முடியாது என்ற நிலையில், சமூகத்தில் அவற்றுக்கு அங்கீகாரம் இனியும் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில், தமக்குப் பாதகமான சூழலே மேலோங்கியிருக்கிறது என்பதை உணர்ந்த நிலையில், இத்தகைய சிறு குழுக்களின் வடிவத்திற்கு பாசிசம் நகர்ந்திருக்கிறது.

இந்த நவ – பாசிசக் குழுக்கள் செயல்படும் களம், மைய நீரோட்ட சிவில் – சமூக வெளிகள் என்பதில் இருந்து, கருத்தமைவுகளை மாற்றியமைக்கும் நுணுக்கமான தளங்களுக்கு நகர்ந்திருக்கிறது. இரு உலகப் போர்களுக்கிடையில் உருவெடுத்த பாசிசத்தின் கொடூரங்களை மறக்கடிச் செய்யும் வகையிலான, கருத்தமைவுகள் தளத்திலான தாக்குதலைத் தொடுப்பது இவற்றின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இசைக் குழுக்கள், இணைய தளப் பிரச்சாரக் குழுக்கள், ரகசிய வன்முறைக் குழுக்கள், தனிநபர் பயங்கரவாதச் செயல்பாடுகள் என்ற வடிவங்களை இந்த நவ – பாசிசம் எடுத்திருக்கிறது (இசைக் குழுக்கள் தவிர்த்த ஏனைய வடிவங்களையும், இந்தியச் சூழலுக்கே உரிய வேறு பல அமைப்பு வடிவங்களையும் ஆர். எஸ். எஸ் –ன் நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கு விளக்கத் தேவையில்லை).

இறுதியாகக் குறிப்பிட்ட தனிநபர் பயங்கரவாதச் செயல்பாடுகள், பாசிசத்தின் இன்னொரு அம்சத்தை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நன்கு அறியப்பட்ட இரு எடுத்துக்காட்டுகள்: அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரில் Timothy McVeigh  மற்றும் இலண்டனில்  David Copeland நிகழ்த்திய தனிநபர் பயங்கரவாத தாக்குதல்கள். இருவருமே இத்தகைய சிறு பாசிசக் குழுக்களின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு – இரண்டாமவர் எந்த இயக்கத்திலும் உறுப்பினராக இல்லாதவர், இணைய தளத்தில் அக்குழுக்களின் பிரச்சாரங்களின் செல்வாக்கினால் உந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது – இனவெறி மிகுந்த தனி பயங்கரவாதத் தாக்குதலில் இறங்கியவர்கள்.

ஒரு “புனிதப் போரில்” தமது பங்களிப்பை ஆற்றியாக வேண்டும் என்ற உந்துதலுக்கு ஆட்பட்டு இத்தகையவர்கள் செயல்பட்டிருப்பதுவே பாசிசத்தின் மற்றுமொரு முக்கிய அம்சத்திற்கு நகர்த்துவது. பாசிசம் ஒரு மதநீக்கம் செய்யப்பட்ட அரசியல் மதம் (political religion) என்ற தன்மையை கொண்டிருப்பது என்பதுவே அது.

The Nature of Fascism நூலில் ரோஜர் க்ரிஃபின் பாசிசத்தை வரையறுக்கும் அம்சங்களில் ஒன்றாக, ”அரசியல் மதம்” என்பதை ஏற்றுக்கொள்ளவியலாது என்று நிராகரித்திருந்தார். ஆனால், 1998 ற்குப் பிறகான விவாதங்களில், “அரசியல் மதம்” என்ற கருத்தமைவு குறித்து பிற கல்வியாளர்களின் ஆய்வுகள் சுட்டும் நிதர்சனங்களை உணர்ந்து பாசிசம் அத்தகைய தன்மை கொண்டது என்பதையும் அதன் வரையறுக்கும் கூறுகளில் ஒன்று என்பதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ஜெர்மனியிலும் இத்தாலியிலும் தோன்றிய இரு பாசிச இயக்கங்களுமே வழமையான மதங்களின் இறை என்ற அம்சத்தை மட்டும் நீக்கிய, ஆனால், அதன் அத்தனை அம்சங்களையும் சுவீகரித்துக் கொண்ட, மதநீக்கம் செய்யப்பட்ட அரசியல் மதங்களாகவே (secular political religion) திகழ்ந்தன என்பதை அக்காலத்தைய ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியிருந்தபோதும் அக்கருத்தமைவு பெரிதும் புறக்கணிக்கப்பட்டே வந்தது.

சமீப ஆய்வுகள் மீண்டும் அந்த அம்சத்தின்மீது கவனத்தைக் குவித்துள்ளன. மதங்களின்பால் ஹிட்லர் முசோலினி இருவருக்கும் ஒரே விதமான பார்வையே இருந்தது. மதங்களின் இடத்தை தமது கொள்கை நிறைவு செய்ய வேண்டும் என்பதுவே அது. ஹிட்லர் மிக வெளிப்படையாகவே ஜெர்மானிய மக்களை நோக்கி “எனக்குத் தேவை உமது ஆன்மாக்களே!” என்றான்.

ஆனால், இருவரது அணுகுமுறைகளும் அவரவரது நாட்டுச் சூழலுக்கு ஏற்ப, தந்திரோபாய உத்திகளைக் கொண்டிருந்தன. ஹிட்லர் ஆரம்பம் முதலே கிறித்தவத்தின் மீது தாக்குதல் தொடுக்காமல் சமரச அணுகுமுறையையே மேற்கொண்டிருந்தான். ஜெர்மனியில், தேர்தல் வழிப்பட்ட பாதையின் வழியாகவே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதை உணர்ந்திருந்ததால், ஹிட்லருக்கு இந்தச் சமரசம் தவிர்க்க முடியாமல் இருந்தது. முசோலினியோ இடதுசாரி முழக்கங்களை முன்வைத்து கத்தோலிக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்தே அதிகாரத்தைக் கைப்பற்றினான். அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், கத்தோலிக்கத்துடன் இணக்கமாகச் செல்வது தனக்குப் பலவழிகளில் நல்லது என்பதைக் கண்டு கொண்டான். ஆனால், இரண்டு பாசிச சர்வாதிகாரிகளுமே, மதங்களின் இடத்தில் தமது கொள்கையை நிலைநாட்டுவதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர்.

நவ – பாசிசக் குழுக்கள் சிறு குழுக்களாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தபோதும், அவர்களது இனத்தூய்மை சார்ந்த நம்பிக்கைகள் ஒரு மதவெறித் தன்மைக்கு நிகரான – ஆனால், மத நம்பிக்கையற்ற – வெறி கொண்டிருப்பது மீண்டும் அத்தகைய அரசியல் மதம் என்ற தன்மை பாசிசத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருப்பதையே உணர்த்துகிறது.

இத்தெளிவுகளுக்குப் பிறகு, பாசிசத்தை வரையறுக்கும் மிகப் பொதுமையான கூறுகளை 2004 ற்குப் பின்னான எழுத்துக்களில் க்ரிஃபின் செறிவுபடுத்தியிருக்கிறார்.

அவற்றை இவ்வாறு தொகுத்துக் கொள்வது நலம்:

தேசப்புத்துயிர்ப்பு (palingenesis) உடனடியாக அடையத்தக்க இலக்கு என்ற அர்த்தத்தில் அல்லாமல், பொதுவான இலக்காக வைப்பது. நிலவும் சூழல்களுக்கு ஏற்ப அது உடனடியாக அடையத்தக்கதாகவோ அல்லது நீண்டகால நோக்காகக் கொண்டு இடைப்பட்ட காலத்தில் பிரதேச அளவிலான இனத்தூய்மையை வலியுறுத்தும் இலக்கை வலியுறுத்துவதாக உருக்கொள்ளலாம்.

அதிதீவிர தேசியவாதம் (ultra – nationalism) என்பதில் மாற்றமில்லை. அது இனத்தூய்மைவாதத்தையே மையக்கருவாகக் கொண்டது.

மதநீக்கம் செய்யப்பட்ட, ஆனால், மதத்தின் இடத்தை இட்டு நிரப்புகிற அரசியல் மதமாகத் (political religion) திகழ்வது.

இவை அனைத்திற்கும் மூலக் கருவாக ஒரு தொன்மத்தைக் கொண்டிருப்பது (mythic core).

Fascist minimum – பாசிசத்தின் குறைந்தபட்ச, தீர்மானகரமான பொது வரையறை என்று இதைக் கூறலாம்.

இப்பொது வரையறுப்பு இடம் – காலம் – சூழல் இவற்றின் தனித்தன்மைகள் சார்ந்து பல்வேறு தனித்துவமான, அல்லது கலவையான வடிவங்களைக் கொண்டே நடைமுறையில் பாசிச இயக்கங்களாக உருக்கொள்கின்றன. மேலும், தெளிவாகச் சொல்வதென்றால், அத்தகைய பல்வேறு தனித்துவமான நடைமுறை வெளிப்பாடுகளில் இருந்து பெறப்பட்ட பொதுமை இது. கோட்பாட்டளவில் “ideal type” என்று சொல்லத்தக்கது.

வெகுஜனத் தன்மையும், உடனடிப் புத்துயிர்ப்பும் சூழல்களையொட்டி மாறக்கூடியவை என்பதால் அவை பொதுவரையறுப்பில் இருந்து நீக்கப் பெற்றுள்ளன.

பாசிசம் குறித்த இந்த பொதுவரையறுப்பைக் கொண்டு நோக்கினால் “நாம் தமிழர்” அறிக்கை ஒரு தேசிய அறிக்கையா, பாசிச அறிக்கையா என்பது விளங்கிவிடும்.

தமிழின் முதல் கரசேவகர்களும் அவர்களது சந்தேகப் பட்டியலும்

ரோஜர் க்ரிஃபினின் வரையறுப்பினடியாக நோக்கும்போது ஆவணத்தின் அடிநாதமாக இருப்பது பாசிசக் கருத்தியலே என்பது உறுதியாகிறது.

பாசிசத்தின் வரையறுப்பில் முதல் அம்சமான தேசப்புத்துயிர்ப்பு (palingenesis):

”நாம் தமிழர்” ஆவணம் முழுவதும் ”தேச உரிமை மீட்சி” என்ற தொடர் பரவியிருப்பதை வாசிப்பவர்கள் கவனிக்கலாம். ”திராவிடக்” கருத்தியலின் ஆதிக்கத்தாலும், பிற மொழியாளர்களின் சுரண்டலாலும் தமிழ்ச் சமூகம் சிதைவுபட்டிருக்கிறது என்பதைத் தொடர்ந்து குறிப்பிடும் ஆவணம், அதிலிருந்து “மீட்சி” பெறுவதற்கான வழியாகத் தமிழ் நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் வெளிப்படை. ஆனால், இழந்த உரிமைகளை மீட்பது என்ற பொருளில், அடிமைத் தளைகளில் இருந்து விடுபடுவது என்ற பொருளோடு நின்றுவிடவில்லை. அவ்வாறு இருந்திருந்தால், அது தேசிய விடுதலை நோக்கு என்ற அளவில் இருந்திருக்கும்.

மாறாக, “மீட்சி” என்பதை ஆவணம் முன்மொழிவது, பாசிசத்திற்கே உரிய  ”தேசப்புத்துயிர்ப்பு” என்ற வகையில் அமைந்திருப்பதை ” ஆவணத்தை விளக்கிடும் உரைவீச்சுத் தெறிப்புகள்” என்ற பகுதியில் உள்ள “உரைவீச்சுத் தெறிப்பு” ஒன்று தெள்ளத் தெளிவாக உணர்த்திவிடுகிறது.

பக்கம் 48 இல்:

”நாம் தமிழர் கட்சி

ஆட்சிக்காக மட்டுமல்ல!

தமிழின மீட்சிக்காக!”

என்று தாம் தமிழின மீட்சிக்கானவர்களே என்ற விளக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த பக்கத்திலேயே:

”கட்டடத்திற்கு

வெள்ளையடிக்க வந்தவர்கள் அல்லர்!

அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டு

மறுகட்டடத்தைக்

கட்ட வந்த புரட்சியாளர்கள்!” (பக்கம்: 49)

என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

தமிழ் தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தருவது என்பதல்ல; ”மறுகட்டடத்தை” உருவாக்குவதே அவர்களது இலக்காம். ”நாம் தமிழர்” ஆவணத்தின் “தேசப்புத்துயிர்ப்பு” நோக்கு, இக்குறிப்பிட்ட வகையிலானதாக – பழைய கட்டடத்தையே இடித்துவிட்டு புதிய கட்டடத்தைக் கட்டுவதாக (கொத்தனார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, இன்ஜினியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ தெரியவில்லை! ஆனால், கட்டடத்தை இடிக்கப் போவதாகச் சொல்வது கரசேவகர்களை நினைவுபடுத்தினால் அதற்கு அவர்களே பொறுப்பு!) வெளிப்படுகிறது.

இவ்விடத்தில் ஒரு ”தொன்மக் கரு”வின் வெளிப்பாடே பாசிசம் என்பது குறித்து சற்று தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். அத்தொன்மக் கரு வேறொன்றுமில்லை. ”புத்துயிப்பு” அல்லது “மறுபிறப்பு” என்ற கருதுகோளே.

உலகின் அனைத்துப் பண்பாடுகளிலும் இந்தப் “புத்துயிர்ப்பு” அல்லது “மறுபிறப்பு” என்ற கருதுகோள் உறைந்திருப்பதைக் காணமுடியும். மனித ஆன்மாவிற்கு அழிவில்லை, என்ற கற்பனையில் ஊற்றெடுத்து, அந்த ஆன்மா இன்னொரு உடல் உருக்கொள்ளும் என்ற நம்பிக்கையாக உருமாறி, பின் நிறுவனமயப்பட்ட பல்வேறு மதங்களின் ஆதார சுருதியாக இப்புத்துயிர்ப்பு என்ற கருதுகோள் நிலைபெற்றதையும் காணமுடியும். மனித குலத்தின் ஆதியிலிருந்து அதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற மரணத்தின் மீதான அச்சத்தில் இருந்து பிறப்பதே இத்தொன்மக் கரு. அதை சமூகத்தின் மீது, குறிப்பாக தேசத்தின் மீது சாற்றுவதே பாசிசத்தின் தனித்தன்மை.

பல்வேறு சமூகப் பண்பாட்டுச் சூழல்களின் குறிப்பான தன்மைகளுக்கே உரிய முறையில் இத்தொன்மக் கரு பல்வேறு வடிவம் கொள்கிறது. குறிப்பான, சமூகப் பண்பாட்டுச் சூழல்களின் தனித்தன்மைகளில் தோன்றும் பாசிச இயக்கங்கள், இத்தொன்மக் கருவை தமது ஆதாரச் சுருதியாகக் கொண்டு, தமது சமூக வரலாற்றுப் பின்புலத்திற்கே உரிய, அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனமான நம்பிக்கைகளோடு இணைத்து உருக்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜெர்மானிய நாஜிக்கள், இத்தொன்மக் கருவோடு இணைத்தது, ”தூய ஆரிய இனம்” என்ற அறிவியலுக்கு முற்றிலும் எதிரான இனப்பெருமை சார்ந்த மூடத்தனம்.

நமது சூழல் முளைவிட்டிருக்கும் பாசிஸ்டுகள், இப்புத்துயிர்ப்பு அல்லது மறுபிறப்பு (ஆவணம் கைக்கொண்டிருக்கும் மொழியில் ”மறுக்கட்டடம்”) என்ற தொன்மக் கருவோடு இணைக்கும் அறிவியலுக்குப் புறம்பான அல்லது போலியான அறிவியல் மீது கட்டமைக்கப்பட்ட இரு மூடத்தனமான நம்பிக்கைகள், “உலகின் மொழிகளுக்கெல்லாம் ஆதி மொழியான தமிழ்” மற்றும் “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி”.

ஆவணத்தின் முதல் பத்தியே போலியான அறிவியலின் மீது கட்டப்பட்ட இந்த இரு மூடநம்பிக்கைகளில் இருந்தே தொடங்குகிறது. உலகின் முதல் மொழி தமிழ், லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என்பவற்றுக்கெல்லாம் எந்தவிதமான அறிவியில் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. இதை எத்தனை முறை கூறினாலும் விளங்கிக் கொள்ள மறுக்கிற மூட நம்பிக்கையாளர்களின் கருத்துக்களை முதல் பத்தியிலேயே தனது முற்கோளாகக் கொண்டு தொடங்கியிருக்கிறது ஆவணம்.

மேலும் ஒரு படி மேலே சென்று அதற்கான ”அறிவியல் பூர்வமான ஆதாரமாக” புகழ் பெற்ற மொழியியல் ஆய்வாளரான நோம் சோம்ஸ்கியின் கூற்றாக, அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறவும் தயங்கவில்லை.

அது என்ன பொய்?

இதுதான்: ”அதனால்தான் புகழ் பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சோமிசிகி அவர்கள், “உலக மொழிகள் அனைத்தும் ஒரு மூலமொழியில் இருந்தே பிறந்திருக்க வேண்டும்; அம் மூலமொழி தமிழாக இருக்கலாம்”, என்று கருத்துரைத்துள்ளார்.”

முதலாவதாக, நோம் சோம்ஸ்கியின் ஆய்வுகள் மொழிகளின் வரலாற்றுத் தோற்றம் என்ற புலம் சார்ந்தவையே அல்ல. மொழியைக் கற்பதற்கான திறன், மனித மூளையின் அமைப்பில் உள்ளார்ந்து இருக்கிறது என்ற கருதுகோளையே அவர் தமது ஆய்வுகள் வழியாக முன்வைத்தார். அதன் அடிப்படையில் Transformative Generative Grammar என்பதாக இன்று பரவலாக அறியப்படுவதை முன்வைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பாக, அவரது மேற்குறிப்பிட்ட மொழியியல் அடிப்படையில் அமைந்த இலக்கண நோக்குகள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையைச் சேர்ந்த மொழியியல் துறையில், உசாத்துணை நூல்களாக பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

நோம் சோம்ஸ்கி, இத்தகைய மூடத்தனமான ஒரு கருத்தை எங்குமே கூறியிருக்கவில்லை. இத்தகைய அறிவியலுக்குப் புறம்பாக ஒரு கருத்தை அவரது கூற்றாக ஆவணம் தன் முதல் பத்தியிலேயே வைத்திருப்பது ஏதோ அறியாமல் செய்த பிழை என்று கருவும் இயலாது. தமது மூடத்தனமான கருத்துக்களுக்கு வலு சேர்க்க, அப்பட்டமான ஒரு பொய்யை கூசாமல் சொல்லத் துணிந்திருக்கிறது ஆவணம் என்பது தெள்ளெனத் தெரிகிறது.

அவ்வகையில், தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக, முதல் பத்தியிலேயே அப்பட்டமாக பொய் சொல்லத் துணிந்த ஆவணம் என்ற பெருமையையும் “நாம் தமிழர்” ஆவணம் பெற்று நிற்கிறது.

இருக்கும் கட்டடத்தை இடித்துவிட்டு (கரசேவகப் பணி) “மறுகட்டடத்தை” கட்டுவோம் என்ற விளக்கத்தில் “நாம் தமிழர்” கட்சி ஆவணம், தனக்கே உரித்தான “தேசப்புத்துயிர்ப்பு” என்ற பாசிசத்தின் மையமான அம்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இத் தொன்மக் கருவிற்கு வலுசேர்க்கும் விதமாக “ஆதிக் குடி” “முதல் மொழி” என்ற அறிவியல் பூர்வமற்ற மூடத்தனமான கற்பனைகளையும் அவற்றை நிறுவ இரு பெரும் அறிஞர்களின் கூற்றாக அப்பட்டமான பொய்களையும் சொல்லத் துணிந்திருக்கிறது.

அதே சமயம், இத்”தேசப்புத்துயிர்ப்பு” வெகுவிரைவில் நிகழக்கூடிய சாத்தியமில்லை என்பதிலும் ஆவணம் தெளிந்தே இருக்கிறது. “தேசிய இனங்களின் சிறையாக” அரை நூற்றாண்டுக்கும் மேலாக, வலுவாக தாக்குப் பிடித்து நிற்கும் இந்திய அரசை மீறி, அத்தனை சுலபத்தில் தமிழ் தேசப் புத்துயிர்ப்பை நிகழ்த்திவிட இயலாது என்ற தெளிவு இருப்பதாலேயே,

எம் இன எதிரிகளின் சட்டத்திற்குட்பட்ட

தேர்தல் பாதையை நாம் விரும்பி ஏற்கவில்லை.

வரலாறு நம்மீது வலிந்து திணித்துள்ளது. (பக்கம்: 53)

என்ற விளக்கத்தையும் அளிக்கிறது.

இந்திய வல்லாதிக்க அரசை மீறித் தமிழ் தேச புத்துயிர்ப்பை உடனடி நிகழ்ச்சி நிரலில் வைப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்திருப்பதாலேயே, இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொண்டு, தேர்தலில் பங்கேற்று, ஒரு நீண்ட கால நோக்கில் “தேசப் புத்துயிர்ப்பை” நிகழ்த்தும் நிகழ்ச்சி நிரலை மேற்கொள்கிறது.

தற்காலத்தைய நவ – பாசிஸ்டுகள், தமது நிகழ்ச்சி நிரல்களை ஒரு பல்தேசிய மட்டத்திற்கு நகர்த்தியிருப்பதற்கு ஒப்பானது இது. நவ – பாசிசக் கும்பல்களில் ஒன்றான சிவசேனை கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்பானது.

பாசிசத்தின் இரண்டாவது முக்கிய அம்சமான அதிதீவிர தேசியவாதத்திற்கு (ultra – nationalism) இனி நகர்வோம்.

தமிழ் தேசத்திற்கான வரையறுப்பாக ஸ்டாலினின் இலக்கணத்தை ஆவணம் பக்கம் 31 – 32 ல் குறிப்பிடுகிறது. ஸ்டாலினின் வரையறுப்பை ஆவணம் எங்ஙனம் திரித்திருக்கிறது என்பதைக் காண்பதற்கு முன்பாக, அவரது வரையறுப்பை தெளிவுபடுத்திக் கொள்வது நலம்.

ஸ்டாலின் தமது தேசம் (nation) குறித்த வரையறுப்பில் இனம் (race) என்ற வகையினத்தை மிகக் கவனமாகக் குறிப்பிட்டு விலக்கினார். “மார்க்சியமும் தேசியப் பிரச்சினையும்” என்ற அவரது புகழ் பெற்ற சிறு நூலின் முதல் கட்டுரையின் ஆரம்ப வரிகளிலேயே இதை தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார்:

”ஒரு தேசம் என்பது என்ன?

தேசம் என்பது முதன்மையாக ஒரு சமூகக் குழுமம். ஒரு மக்கள் தொகுதியின் உறுதியாக நிலைபெற்ற சமூகக் குழுமம்.

இச்சமூகக் குழுமம், இன ரீதியாகவோ, பழங்குடியினர் அடிப்படையிலானதோ அன்று. நவீன இத்தாலிய தேசம் ரோமர், டியூட்டானியர், எட்ருஸ்கியர், கிரேக்கர், அராபியர் இன்னும் இதுபோன்ற பல இனங்களால் உருவானது. ஃப்ரெஞ்சு தேசம் கௌல், ரோமர், பிரித்தானியர், டியூட்டானியர் இன்னும் பலரால் உருவானது. பிரிட்டிஷ், ஜெர்மன் இன்னும் இது போன்ற மற்ற தேசங்களும் இவ்வாறு பல்வேறு இனத்தினர், பழங்குடியினரின் கலப்பினால் உருவானவை என்றே சொல்ல முடியும்.

ஆக, ஒரு தேசம் என்பது, வரலாற்று ரீதியாக உருவாகி அமைந்த ஒரு மக்கள் தொகுதியின் சமூகக் குழுமமே தவிர, இன ரீதியாகவோ பழங்குடியினர் அடிப்படையிலோ அமைந்ததன்று.”

(குறிப்பு: மொழியாக்கம் எனது. Community என்பதை சமூகக் குழுமம் என்பதாகவே தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறேன். அதை social group என்று திருப்பி மொழியாக்கம் செய்து புரிந்து கொள்ள வேண்டாம் என்று கோருகிறேன்)

[What is a nation?

A nation is primarily a community, a definite community of people.

This community is not racial, nor is it tribal. The modern Italian nation was formed from Romans, Teutons, Etruscans, Greeks, Arabs, and so forth. The French nation was formed from Gauls, Romans, Britons, Teutons, and so on. The same must be said of the British, the Germans and others, who were formed into nations from people of diverse races and tribes.

Thus, a nation is not a racial or tribal, but a historically constituted community of people.

http://marxists.org/reference/archive/stalin/works/1913/03a.htm#s1%5D

இந்த முன்நிபந்தனையை வரையறுத்த பின்னரே ஸ்டாலின், அக்கட்டுரையின் பிற்பாதியில் தேசிய இனத்திற்கான தமது வரையறுப்பைத் தந்திருப்பார்.

அவ்வரையறுப்பு பின்வருமாறு:

”ஒரு பொதுமொழி, நிலப்பரப்பு, பொருளாதார வாழ்வு, ஒரு பொதுப்பண்பாட்டின் ஊடாக வெளிப்படும் பொதுவான உளவியல் நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று ரீதியாக உருவாகி நிலைபெற்ற ஒரு மக்கள் தொகுதியின் சமூகக் குழுமமே ஒரு தேசமாகும்.”

[A nation is a historically constituted, stable community of people, formed on the basis of a common language, territory, economic life, and psychological make-up manifested in a common culture.- மேலுள்ள சுட்டி காட்டும் அதே பக்கத்தில்]

ஆவணம் இவ்வரையறுப்பை மிகச் சரியாக, பிசகேதும் இன்றித் தருகிறது:

”தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனும் தகுதியுடைய இனம். இவ்வினத்திற்கான பொதுமொழி, தொடர்ச்சியான நிலப்பரப்புடைய பொதுவான வாழும் பகுதி, பொதுப் பொருளாதார வாழ்வு, ஓரினமென்ற மன இயல்பு ஆகிய கூறுகளுடன் வரலாற்று அடிப்படையில் உருவான நிலையான மக்களினம், தமிழ் குமுகாயமாகும். தனக்கென அரசியல் பண்பாட்டு வாழ்வியல் உரிமைகளோடும், இறையாண்மையோடும் இருந்த, இருக்க வேண்டிய ஒரு இனம், தமிழினம் ஆகும்.”  (பக்கம் 31 – 32) (அழுத்தம் எனது. அழுத்தம் தராப்படாத பகுதி ஸ்டாலினின் வரையறுப்பு)

ஆனால், முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் சேர்த்திருக்கும் வரிகளிலும், வரையறுப்பின் முதல் சொல்லாக்கத்திலும், மிக வெளிப்படையாக, இனம் என்பதற்கே அழுத்தம் தருகிறது. ஸ்டாலினின் வரையறுப்பைச் சரியாகத் தரும் அதே போதில், அவர் விலக்கி வைத்த இனம் என்ற வகையினத்தின் அடிப்படையிலே தமிழ் தேசத்தை வரையறை செய்கிறது.

தேசத்தின் மையக்கூறாக, தூய இனம் என்ற வகையினத்தைக் கொள்வதாலேயே ஆவணம் முழுக்க இனவாதம் தலைவிரித்து ஆடுவதாக இருக்கிறது.

ஆவணம் விவரித்துச் செல்லும் சமூக வரலாற்றின்படி, இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே (பாகிஸ்தான் உட்பட) தமிழர் என்ற இனத்தால் ஆளப்பட்டது. ஆரிய இனப் படையெடுப்பிற்குப் பின் நிகழ்ந்த இனத்திரிபால் உருவானதே திராவிடம் என்ற இனம். தமிழ் மொழி திரிந்ததால் உருவானவையே இந்தியத் துணைக்கண்டம் முழுதும் பரவியிருக்கும் பிற மொழிகள்.

இத்தகைய இனத்திரிபில் இருந்து, தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் அதன் தூய நிலைக்கு மீட்பதே ஆவணம் முன்மொழியும் அரசியல். இது தேசிய வாதமன்று. தூய இனவாதம்.

இவ்வாறு, இனத்திரிபு என்று நோக்குவதாலேயே, திராவிடத்தை வேரறுக்கக் கோருகிறது ஆவணம். மொழித் திரிபு என்று நோக்குவதாலேயே தமிழ் நாட்டில் வாழும் பிற மொழியினரைத் தம் தாய் மொழி தமிழே என்று உணர்ந்து ஏற்றுக் கொள்ளுமாறு மென்மையாக மிரட்டவும் செய்கிறது:

”உங்களைப் பிறமொழியாளர் என்று சொல்லி,

உங்களைப் பிறராகப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை.

உங்கள் மூலத் தாய்மொழியாம் தமிழுக்குத் திரும்பிட

உங்களுக்கு உள்ள முழு உரிமையை நாங்கள் ஏற்கிறோம்.” (பக்கம்: 50)

ஒரு தேசத்தில் சிறுபான்மையினராக வாழும் பிற மொழி பேசுவோர், தமது தாய்மொழியைக் கைக்கொள்வதற்கான முழு உரிமையை ஏற்பதுவே ஜனநாயக அணுகுமுறையாக இருக்க முடியும். அவர்களது மூல மொழி, பெரும்பான்மையினரின் மொழியே என்று கற்பித்து அதற்குத் திரும்பிட உரிமை தருகிறோம் என்பது – இதில் முழு உரிமை வேறாம் – என்பது மிரட்டல் அல்லாமல் வேறு என்ன? இனவாத வெறியில் இருந்தல்லாமல் வேறு எதில் இருந்து இத்தகைய மிரட்டல் எழ முடியும்!

இதன் அடுத்த வரிகளிலேயே மீண்டும்:

தனி இனமாக நீங்கள் வாழ வாழ்த்துகிறோம்; ஆனால் ஒன்று;

தமிழர் தேசத்தில் தமிழர் ஆட்சியை நீங்கள் வாழ்த்துங்கள்!

எனக்கு அடங்கி, என்னை வாழ்த்தினால் நீ இங்கு வாழலாம் என்ற பெரிய அண்ணாத்தையின் (big brother attitude) மென்மையான மிரட்டல் அல்லாமல் இது வேறு என்ன!

ஸ்டாலினின் வரையறுப்பைத் தரும் ஆவணம், அவரது கருத்தில் பல்வேறு இனங்களின் கலப்பினூடாக வரலாற்று ரீதியாக நிலைபெற்ற ஒரு மக்கள் தொகுதியினரே ஒரு தேசமாக உருப்பெறுகின்றனர் என்பதைக் கவனமாகத் தவிர்க்கிறது. (ஸ்டாலினின் இவ்வரையறுப்பைக் காட்டிலும் செறிவான நோக்குகளை இங்கு விரிவஞ்சித் தவிர்க்கிறேன்). பல இனத்தவர், பல மொழி பேசுபவர் கலந்து, நெடுங்கால வரலாற்று தொடர்ச்சியில் ஊடாடி, உருப்பெற இருப்பதே நவீனத் தமிழ் தேசம் என்பதை உணராது, தூய இனவாதச் சகதியில் வீழ்ந்தமையால், இனவெறி விஷத்தைக் கக்குவதாக இருக்கிறது.

எந்தவொரு தேசமும் தூய இனக்குழுவால் நிலைபெற்றவை அல்ல. தூய இனவாதம் தேசியவாதமும் அல்ல. தூய இனவாதம், பாசிசத்தின் முக்கிய அம்சமான ultra – nationalism – அதிதீவிர தேசியவாதமே.

பாசிசத்தின் மூன்றாவது முக்கிய அம்சமான அரசியல் மதம் (political religion) “நாம் தமிழர்” ஆவணத்தில் எங்ஙனம் உருக்கொண்டிருக்கிறது என்பதோடு இப்பகுதியை முடித்துக் கொள்கிறேன்.

செயற்பாட்டுக் கொள்கைகள் பகுதியில், ”நாளைய தமிழர் ஆட்சியில், அரசு சமயம் சாராது. ஆனால், யாருடைய தனிப்பட்ட சமய நம்பிக்கையிலும் அரசு தலையிடாது.” (பக்கம்: 60) “நாம் தமிழர்” ஆட்சி சமயச் சார்பற்றதாக இருக்கும் என்று அறிவிக்கிறது ஆவணம்.

நல்லது. ஆட்சிக் கனவோடு, நல்ல ஆட்சியை நல்குவதாகக் கனவு காண்பது மிக நல்லது.

ஆனால், முரண்பாடுகள் பகுதியில், மூன்றாம் முரண்பாடாக ”தமிழியத்தியற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்துவத்திற்குமிடையே முரண்பாடு” (பக்கம்: 37) என்று வரையறுக்கிறது ஆவணம்.

இதை விளக்குமிடத்தில் கீழ்வருமாறு விரித்துரைக்கிறது:

“3 ஆம் முரண்பாடுகளான முகமதியமும் கிறுத்தவமும் தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை; சட்டப்பாதுகாப்பும், சொத்துடைமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகம்மதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம், தமிழ்த் தேசிய அடையாளமே என்று உணர்ந்தறிந்து வருவாராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும்  கையாளப்பட வேண்டிய தரப்பினர்.” (பக்கம்: 39)

சமயச்சார்பற்ற அரசமைக்கப் போவதாகக் கனவு காணும் ஒரு கொள்கை ஆவணம், எல்லாச் சமயத்தினரையும் சமமாக அணுகியிருக்க வேண்டும். குறைந்தது “எச்சரிக்கையாக அணுகப்பட வேண்டியவர்கள்” என்று பட்டியலிட்டால், அதில் அனைத்து மதத்தினரையுமாவது சேர்த்திருக்க வேண்டும். ”நாம் தமிழர்” ஆவணமோ இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் “சந்தேகப் பட்டியலில்” சேர்த்துவிட்டு, இந்துக்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறது. ஆர். எஸ். எஸ். பி. ஜே. பி. சிவசேனா ஆகிய இந்துத்துவ சக்திகளின் ”கொள்கைகளுக்கும்” இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை வாசிப்பவர்களின் கற்பனைக்கு விட்டுவிடலாம்.

என்றாலும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக, இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் “சந்தேகப் பட்டியலில்” சேர்த்த கொள்கையை அறிவித்த முதல் ஆவணம் என்ற பெருமையையும் “நாம் தமிழர்” ஆவணமே தட்டிச் செல்கிறது என்பதைக் குறிப்பிடாமல் விடுவது வரலாற்றுக்கு துரோகம் செய்வதாகிவிடும்.

இத்தகைய நுட்பமான இந்துத்துவச் சார்புக் கொள்கையை அறிவித்தாலும், ஆவணம் எந்த ஒரு மதத்தையும் தனது உத்தியோகப்பூர்வமான மதமாக ஒப்புக்கொண்டுவிடவில்லை. மாறாக, பாசிசத்தின் கூறான, அரசியல் மதம் (political religion) ஒன்றையே தனது கொள்கையாக தெளிவாக அறிவிக்கிறது.

கலைச்சொல் விளக்கம் பகுதியில் ”தமிழியம்” என்பதாக ஆவணம் கீழ்க்கண்டவாறு வரையறை தருகிறது:

தமிழியம்: ஐந்திணை மரபுசார்ந்த இயற்கை நெறி, எண்ணியம் சார்ந்த அறிவியநெறி, பொதுமை சார்ந்த உலகியநெறி, உயிரிநேயம் சார்ந்த அருள்நெறி ஆகியவற்றை உ:ள்ளடக்கிய அறம், பொருள், இன்பம் போற்றும் விழுமிய வாழ்வியம் (வாழ்வியல் நெறி). (பக்கம்: 117)

இது ஒரு மதம் சாராத வரையறுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த வரையறுப்பின்படி வாழ்ந்தாலே ஒருவர் தமிழர் என்ற வரையறைக்குள் வருவர் என்று நிபந்தனையையும் விதிக்கிறது ஆவணம்: ”தமிழியத்தை வாழ்வியல் நெறியாகவும், தமிழர் நலனை நடைமுறையாகவும் கடைப்பிடிப்பவர் வாழும் தமிழர் ஆவார்.” (பக்கம்: 116)

இந்த வரையறுப்பின்படி இன்று வாழும் தமிழரில் ஒருவரைக்கூடத் தமிழராகச் சொல்லமுடியாது (”நாம் தமிழர்” இயக்கத்தவரின் தலைவர் கூட இதன்படித் தமிழர் அல்லர் என்றாகும்) என்பது ஒருபுறம் இருக்க, பாசிசத்தின் மூன்றாவது வரையறுக்கும் அம்சமான அரசியல் மதத்தை “நாம் தமிழர்” ஆவணம் தமிழ் மக்கள் மீது திணிக்கிறது என்பதுவே இங்கு கவனத்திற்குரியது.

மதம் தொடர்பான தனது நிலைப்பாடாக ஹிட்லர் கூறியதோடு, இந்த வரையறுப்பை ஒப்பிட்டுப் பார்ப்பது நலம்:

“தேசிய சோஷலிசம், சற்று நீண்ட காலம் ஆளுகையில் இருந்துவிட்டால், நாம் வாழ்ந்து கொண்டிருப்பதிலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுகூட சாத்திமற்றுப் போகும்.

நீண்ட கால நோக்கில், தேசிய சோஷலிசமும் மதமும் ஒத்திசைந்து இருப்பது சாத்தியப்படாத ஒன்று.

இந்த முரண்பாட்டை மதத்திற்கு எதிரான போராக அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா என்று சி. எஸ். எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாக ஃப்யூரர் மேற்கொண்டு கூறியதாவது:

இல்லை. இதன் பொருள் மதத்திற்கு எதிராக நாம் போர் தொடுக்கப் போகிறோம் என்பதில்லை. சிறந்த தீர்வு என்பது, எந்தவிதமான களையெடுப்புகளும் செய்யாமலேயே, இம்மதங்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்ளும்படி விட்டுவிடுவதாகவே இருக்கும்.”

[When National Socialism has ruled long enough, it will no longer be possible to conceive of a form of life different from ours.

In the long run, National Socialism and religion will no longer be able to exist together.

On a question from C. S., whether this antagonism might mean a war, the Fuehrer continued:

No, it does not mean a war. The ideal solution would be to leave the religions to devour themselves, without persecutions.

HITLER’S TABLE TALK 1941-1944: His Private Conversations. Translated byNorman Cameron and R.H. Stevens Introduced and with a new Preface byH.R. Trevor-Roper]

ஹிட்லர், ஆட்சியைப் பிடிக்கும் முன்பாகவும் சரி, கைக்கொண்ட பிறகும் சரி, எந்த மதத்தினர் மீதும் தாக்குதல் தொடுக்கவில்லை (யூதர்கள் மீதான தாக்குதல் இனவெறி அடிப்படையிலே இருந்தது). ஜெர்மனியில் ப்ரொட்டஸ்டண்ட் கிறித்தவர்களின் பலம் உணர்ந்து அவர்களைப் பகைத்துக் கொள்ளாமல், கண்டும் காணாமல் இருக்கும் நிலையையே எடுத்தான். சில வேளைகளில் ஊக்குவிக்கவும் செய்தான்.

தமிழகத்தில் முளைவிட்டிருக்கும் பாசிஸ்ட்டுகள், இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் “சந்தேகப் பட்டியலில்” சேர்த்துவிட்டு, ”இந்து” மதத்தினர்பால் கண்டும் காணாத நிலையெடுத்திருப்பது அதற்கு ஒப்பானதே. ஹிட்லரைப் போலவே, நாஜிக் கொள்கைக்கு நிகரான, அரசியல் மதமாக “தமிழியம்” என்ற அரசியல் மதத்தையும் முன்மொழிந்திருப்பதுவும் அப்பட்டமான பாசிசமே!

———————————————

பின்குறிப்பு:

பாசிச அபாயத்திற்கு உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் என்ற வேகத்தில் ”கீற்று” இணைதளத்திற்காக எழுதப்பட்ட கட்டுரைத் தொகுதியில் இருந்து சில பகுதிகளை, இத்தொகுப்பின் அவசியம் கருதி எடிட் செய்து பகிர்கிறேன். உடனடி எதிர்வினையாக எழுதியதுகையில் நேர்ந்த சிறு தவறுகளையும் ”முன் பின்னாக” வரிசை மாறியிருந்த தவறுகளையும் திருத்தியிருக்கிறேன். நன்றி!

Saturday, May 16, 2020

உன் பிள்ளைக்கு இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு

'ஒரு வேளை சாப்பாட்டுக்கே 
பிரச்சினையா இருக்கு.
இதுல எங்க சாமி
எம்புள்ளைய படிக்க அனுப்ப?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு.
அந்தப் பிள்ளைக்கு
சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு.

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'

"புள்ளைய படிக்க அனுப்பு. 
சீருடையை நான் தரேன்"

'என் புள்ள கால்ல செருப்பில்லாம 
வெயில்ல, மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு.
செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல
வெறும் சோறும், குழம்பும்தானாம்.
அத திண்ணுட்டு
எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'

"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோசமா?"

'புத்தகத்தை காசு கொடுத்து 
வெளியில வாங்க சொல்றாங்க சார். 
என்னால அதெல்லாம் முடியுமா?'

"புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும்
உன் பிள்ளைக்கு இலவசமா தரேன். 
படிக்க மட்டும் அனுப்பு"

'எம்புள்ள அஞ்சாப்பு வரை 
எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க.
அடுத்து ஆறாப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போனும். அது இங்கேர்ந்து 
4-5 மைல் தூரம் இருக்கும். தினமும் பஸ்ல போக காசுக்கு நான் எங்க போவேன்'

"உன் பிள்ளைக்கு இலவச பஸ் பாஸ் 
நான் தரேன். படிக்க அனுப்பு"

'பக்கத்து ஊர்ல என் புள்ள படிக்குது. 
அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் இல்லை. 
எப்படி அனுப்புறது?'

"கவலைப்படாதீங்க. உங்க பிள்ளைக்கு இலவசமா சைக்கிள் தரோம். படிக்க அனுப்புங்க"

'நாங்க மலைக்கிராமங்க. எங்க ஊர்லேர்ந்து தினமும் பிள்ளையை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறது சாத்தியமில்லைங்க'

"உங்களை மாதிரி மக்களுக்குத்தான் 
அரசாங்கம் சார்பில்
உண்டு - உறைவிடப் பள்ளிகளை 
நாங்கள் கட்டியிருக்கோம். 
பிள்ளையை படிக்க அனுப்புங்க. 
தங்குற இடம், சாப்பாடு, படிப்பு அனைத்துக்கும் நாங்க பொறுப்பு"

'வயசுக்கு வந்த பொம்பள புள்ளைய 
எப்படி அந்த மூணு நாளுக்கு 
பள்ளிக்கூடம் அனுப்புறது?
அதான் அந்த நாட்கள்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதில்லை'

"தைரியமா அனுப்புங்க.
கவலைப்படாதீங்க. அந்த நாட்களுக்குத் தேவைப்படும் நாப்கின்களை கொடுக்க
தானியங்கி நாப்கின் மிஷின்களை பள்ளிக்கூடத்தில் அமைச்சிருக்கோம். 
அதுக்காக எல்லாம் புள்ளைய
லீவ் போடச் சொல்லாதீங்க"

'பத்தாவது வரை அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்க வச்சிட்டேன். 
ஏதோ கம்பியூட்டர் படிப்பு வந்துருக்காம்ல, அதுல சேர்த்து விடலாம்னு பார்க்குறேன். எங்க போயி சேர்க்குறதுன்னு தெரியலையே?!'

"எங்கக்கிட்டயே அனுப்புங்க.
Computer Science படிப்பை நாங்களே சொல்லித்தரோம். படிக்கிற புள்ளைக்கு உதவியா இருக்க 
இலவசமாக லேப்டாப்பும் தரோம்"

'என் புள்ளைதாங்க என் வம்சத்துலயே பள்ளிக்கூடம் வரை போய்ப் படிச்சவன். அவனை காலேஜ் படிப்புக்கு அனுப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்? 

"குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு 
கல்லூரிப் படிப்பும் இலவசம். 
தயங்காம படிக்க அனுப்பி வைங்க.
நாங்க பார்த்துக்குறோம்"

'எம் புள்ள நல்லா படிச்சி
டாக்டர் படிப்புக்கோ,
என்ஜினியர் படிப்புக்கோ போகனும்னா
எங்க போயி படிக்கனும்?'

"நம்ம பிள்ளைகள்
எங்கேயும் போக வேணாம்.
அவுங்க டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆகனும்னா நம்ம மாநிலத்துலயே படிக்கலாம். அதுக்கு தேவையான மருத்துவ கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும்
நம்ம அரசு கட்டித்தரும்.
அதுக்கு 12வதுல நல்ல மார்க் எடுத்தாப்போதும்" 

'பொம்பளப்புள்ள 8வதுவரை படிச்சிருக்கு. அது போதும்னு பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திட்டோம்.
சட்டுப்புட்டுனு அடுத்த தை மாசத்துல 
கல்யாணத்தை முடிச்சிடுவோம்'

"பெண் பிள்ளைகளை
முழுமையா படிக்க விடுங்க.
12ம் வகுப்புவரை படித்தால் 
திருமணத்துக்கு 50,000 ரூபாய் பணமும் 
தாலிக்கு 8 கிராம் தங்கக்காசும் அரசாங்கம் சார்பா தரோம். படிக்க அனுப்புங்க"

'நீங்க நல்லாயிருக்கனும் சாமி.
என் வம்சத்துல என் புள்ள தான் முதல் பட்டதாரி. இனி குடும்பம் தழைச்சிடும்'

திடீரென ஒரு வில்லன் வரான்,
"இனி நீங்கல்லாம் எனக்குக் கட்டுப்படனும். நான் சொல்றபடிதான் நீங்கல்லாம் படிக்கனும். நீ என்ன தேர்வு எழுதனும் என நான் தான் சொல்லுவேன்.
அதே மாதிரி இந்தக் கல்லூரிகள் எல்லாம் உனக்கு சொந்தமா இருக்கலாம். ஆனா அதில் யார் யாரை படிக்க வைக்கனும்னு நான்தான் முடிவெடுப்பேன்.
ஒரே நாடு, ஒரே கொள்கை,
ஒரே உணவு என இனி இப்படித்தான். 
இதை ஏற்று நீங்க நடக்கலைனா நீங்கல்லாம் தேசத் துரோகி,
தேச விரோதின்றான்.
அடுத்து என்ன பாடம் சொல்லிக் கொடுக்கனும்னு 
நான்தான் சொல்லப் போறேன்றான்".

இதுதான் அரை நூற்றாண்டுகளாக 
தமிழக அரசுகளின் உழைப்பால் கிடைத்த கல்வி என்னும் சமூகநீதி, 
இந்த வில்லன்களான பாவிகளின் கையில் சிக்கிய வரலாறு. 
இலவசத்தால்தான் தமிழ்நாடு முன்னேறவில்லை என்று  அரைகுறை அரசியல் விமர்சகர்களும், பார்ப்பனிய ஆதிக்க சக்திகளும் கத்துறான்.

வில்லனுங்க ஒரு சைடுலே
இப்படி செய்துக்கிட்டு இருக்கும் போது
இன்னொரு சைடிலே,
"உனக்கு எதுக்குக் கல்வி? 
குலத்தொழிலை பாரு,
உன் தாய் மொழியை விட தெய்வ மொழி சமஸ்கிதம்தான் முக்கியம்ன்னு ஒரு குரூப் வெறியாக கத்துறான். நமது தெய்வீக புலவர் திருவள்ளுவரின் வெண்னிற உடையை காவி உடையாக மாற்றி நெத்தியிலும், உடம்பிலும் பட்டை அடிக்கிறான்.

பிராமணன் மூளை பலம் உள்ளவங்கன்னு சொல்றான். இவர்களின் தந்திரத்தை நீங்க புரியக்கூடாதுன்னு ராமருக்கு கோவில், துழுக்கனுக்கு வேட்டு, 
பாவாடை கிறிஸ்துவன் ரொட்டி பால் பவுடருக்கு விலை போனவங்கன்னு கலவரத்தை உருவாக்குறான்.
இந்த மதக்கலவரத்துக்கு உங்களை அடியாளாக்குறான். அப்புறம் நான் உயர்ந்தவன் தலையில் பொறந்தவன்னுட்டு,
அடுத்தவரை தாழ்த்தி மத்தவங்களை வெச்சு சாதிக்கலவரம் நடக்க அனைத்தையும் செய்யுறான்.

மதுவால் மயங்கி, ஜாதியால் அறிவிழந்து, மதத்தால் மிருகமாகி உங்கள் தலைமுறை வாழ்வை அழிக்காதீர்கள். வஞ்சகர்களை இனம் கண்டு அந்த சக்திகளின் விஷத்தினை முறியடிப்பீர்.

தங்கள் ஆதிக்கத்தை அனைத்து துறைகளி லும் பல நூற்றாண்டுகளாக செய்து வருபவர்கள், தங்கள் வல்லாதிக்கத்தை வலுப்படுத்த தற்போது கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, இன்று மிகவும் ஆக்ரோஷமான வெறியோடு உங்களுக்கெதிராக செயல்படுகின்றனர். இதையெல்லாம் வலிமையாக ஊடக சக்திகள் மூலம் கீழேயுள்ள ஒரே ரகமான இவங்களெல்லாம் நல்லாவே வரலாற்றையே மாற்றி உங்களை பேச விடாமல் கத்துறாங்க! நீங்கள் இதையெல்லாம் நல்லா புரிஞ்சிக்கனும்.

Thiyagarajan Rangaswamy