Sunday, March 19, 2017

ஃபாரூக் கொலையும் எதிர்வினைகளும

Marx Anthonisamy
Via Facebook
2017-03-19

ஃபாரூக் கொலையும் எதிர்வினைகளும்.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்று ஒரு ஆங்கிலப்  பத்திரிகையாள நண்பர் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

"கோவை ஃபரூக் படுகொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள். கல்புர்கி போன்றவர்கள் கொல்லப்பட்டதற்கு இணையான ஒரு பயங்கரவாத நடவடிக்கைதானே இது?" -என்பது அவர் கேள்வி.

நான் சொன்னுவை:

"1.இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதும் வருந்தத் தக்கதுமான ஒரு நிகழ்ச்சிதான். இத்தகைய மனநிலை கொலையாளிக்கு உருவாகியதன் அடிப்படையிலான மதக் கருத்தியல்கள் பற்றித் தொடர்புடையவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதில் இம்மியும் ஐயமில்லை.

2.எனினும் இந்தக் கொலையை, இந்துத்துவ அமைப்புகள் கல்புர்கி, தபோல்கர் போன்றோரைக் கொலை செய்ததுடன் ஒப்பிட முடியாது. இந்துத்துவ  அமைப்புகள்: செய்த கொலைகளுக்குப் பின்னால் ஒரு விரிவான அர்சியல் திட்டமும், குறிப்பான ஒரு hard core பயங்கரவாத அமைப்பும் உள்ளது. அந்த மூன்று கொலைகளுமே ஒரே மாதிரி நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.ஃபரூக் கொலையைப் பொருத்த மட்டில் அது தனிப்பட்ட முறையில் யாரோ ஒரு மத அடிப்படைவாதி செய்தது. இரண்டிற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

3.இந்தக் கொலையை அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் கண்டித்தன. ஆனால் இந்துத்துவ அமைப்புகள் செய்யும் கொலைகளை எந்த இந்துத்துவ அமைப்புகளும் கண்டிப்பதில்லை. ஒரு புன்னகையோடு வேடிக்கை பார்ப்பதே அவர்களின் வழக்கம்.

4.இந்துத்துவ பயங்கராவாதங்களை எல்லா இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களும் பல்வேறு வகைகளிலும் மௌனமாக  ஆதரிப்பர். பால்தாக்கரே போன்ற தலைவர்கள் வெளிப்படையாகவே  ஆதரித்தனர். சாத்வி பிரக்ஞா உள்ளிட்ட மலேகான் பயங்கரவாதிகளுக்கு ஒவ்வொரு இந்துவும் உதவ வேண்டும் என வெளிப்படையாக அறிவித்தது நினைவுக்குரியது. முஸ்லிம் அமைப்புகள் அப்படிச் செய்வதில்லை.

5. மதபயங்கராவாதங்களுக்காக இந்துத்துவத் தலைவர்கள் விசாரணை ஆணையங்களால் குற்றம் சாட்டப்படும்போது அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. மும்பை கலவரங்கள் தொடர்பாக ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் பெயர் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாபர் மசூதி இடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி ஆகியோர் சில எடுத்துக்காட்டுகள். எனவே இந்த இந்துத்துவப் பயங்கரவாதங்கள் திருப்பி நிகழ்த்தப்ப்டும் அபாயம் அதிகம்.

6.மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காக இப்படித் தாக்கப்படுவதில் வேறு சில முக்கிய வேறுபாடுகளும் உண்டு. எச்.ஜி.ரசூல், சல்மா, கீரனூர் ஜாஹிர் ராஜா போன்றோர் முஸ்லிம் சமுதாயம் பற்றி எழுதுவது குறித்து முஸ்லிம்களுக்குக் கோபம் இருந்தாலும்  பெருமாள் முருகன் போன்றோருக்கு ஏற்பட்டதுபோன்ற எதிர்ப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை. ரசூல் விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊர்ப் புறக்கணிப்பு நிச்சயமாக அவருக்குப் பல சங்கடங்களை ஏற்படுத்தின என்றாலும், அது கண்டிக்கத் தக்கது என்ற போதிலும், அப்படியான சந்தர்ப்பங்களில் கூட அவர் அதே ஊரில் பாதுகாப்பாகத்தான் இருந்தார். வேறு வன்முறைகள் நிகழ்ந்ததில்லை.

7. அன்வர் பாலசிங்கம் என்பவர் மீனாட்சிபுரம்  மதமாற்ற நிகழ்வில் மதம் மாறிய தலித் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என ஒரு நாவல் எழுதி, முஸ்லிம் வெறுப்பாளர்களால் அது பிரபலப் படுத்தப்பட்ட போதும் முஸ்லிம் சமூகமோ இயக்கமோ எந்த வன்முறை அல்லது புறக்கணிப்பிலும் இறங்கவில்லை. மாறாக ஒரு அமைப்பு மதம் மாறியவர்களில் ஒருவரான மதிப்பிற்கிரிய டி.எம்.உமர் ஃபாரூக் (டி.எம்.மணி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி  அந்த ஊருகுச் சென்று ஆய்வு செய்து, அது பொய்த் தகவல்தான் என அறிக்கை ஒன்றுதான் அளித்ததே ஒழிய வேறு வன்முறைகள் அல்லது புறக்கணிப்பு ஏதும் இல்லை. அந்த அறிக்கைக்கு பாலசிங்கம் தரப்பில் மறுப்பு ஏதும் வெளியிடப்படவும் இல்லை. 

எனவே இதுபோன்ற விஷயங்களில் சிறுபான்மை மதங்களின் எதிர்வினையையும் பெரும்பான்மை மதவாத எதிர்வினையையும் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம். அவ்வாறு வேறுபடுத்தாமல் இரண்டையும் ஒன்றாகச் சித்திரிப்பது அறிவீனம் அல்லது விஷமத்தனம்..சிறுபான்மை மதவாதம் பயங்கரவாதமாகவும், பெரும்பான்மை மதவாதம்
தேசபக்தியாகவும் அணுகப்படும் ஆபத்து குறித்து ஜவஹர்லால் நேரு அவர்களின் எச்சரிக்கை இங்கே கருதத்தக்கது.

பாருங்கள் இப்போது இந்த விஷயத்தில் ஒவ்வொரு தமிழ் முஸ்லிமும் தாங்களே குற்றம் சாட்டப்பட்டுள்ளது போலப் பதறி முன்வந்து கண்டிப்பதும், முஸ்லிம் மதம் அப்படிச் சொல்லவில்லை என திருக்குரானிலிருந்து மேற்கோள் காட்டுவதும்.... எத்தனை அவலம்.."

(தொடரும்)

No comments:

Post a Comment