Sunday, March 19, 2017

அவர்களின் உரிமைகள் அனைத்தையும் மதிப்பது அது. அந்த உரிமைகளில் ஒன்று நம்மை விமர்சிக்கும் உரிமை

Marx Anthonisamy
Via Facebook
2016-03-17

மானுட அறம் என்பது:
"""""""""""""""""""""""""""""""""""''
கோவை திராவிட விடுதலைக் கழகத் தோழர் ஃபரூக்  படுகொலை தொடர்பாக முஸ்லிம் ஒருவரே சரண் அடைந்துள்ளதாகவும், மதத்தை விமர்சனம் செய்து வந்ததுதான் காரணம் எனவும் செய்திகள் வருகின்றன. இரண்டொரு நாளில் முழு உண்மையும் வெளி வரும் என நம்புகிறேன்.

இந்தச் செய்தி கிடைத்தவுடனேயே என் நெடுநாள் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். "இன்னும் விவரம் தெரியவில்லை. கொலை நடந்த இடம் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதி. வேறு அரசியல் எதிரிகள் யாரும் இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை" என்றார்.

மத அடிப்படைக் கருத்துக்களை விமர்சித்து வந்ததற்காக அவர் கொல்லப்பட்டார் என்பது உண்மையானால் அதைவிட கொடூரமான, அநீதியான, அறம்கெட்ட, மூடத்தனமான காரியம் வேறேதும் இருக்க இயலாது.

கொல்லப்பட்ட ஃபாரூக் யார், எவர், எத்தகைய கருத்துக்களைப் பேசி வந்தவர் என எனக்குத் தெரியாது. ஆனால் இந்துத்துவத்தைக் கடுமையாக விமர்சித்து வரக் கூடிய, சமூக ஒற்றுமையை வலியுறுத்தக் கூடிய ஒரு திராவிட இயக்கத்தில் இருந்து செயல்பட்டவர். முஸ்லிம்கள் அநீதிதியாகத் தாக்கப்படும்போது கண்டித்துக் குரல் கொடுக்கும் அமைப்புகளில் ஒன்று அது. அந்த வகையில் இன்று எழும்பி வரும் மதவாத பாசிசத்திற்கு எதிராக இயங்கும் ஜனநாயக சக்தியாகவே அவர் திகழ்ந்துள்ளார் எனத் தெரிகிறது. அவரை எல்லாம் கருத்து மாறுபாடுகளுக்காகக் கொல்லத் துணிவதெல்லாம்.... என்ன மனநிலை இது...

ஒரு மதத்தை நம்புவது என்பது ஒருவரின் உரிமை. ஆனால் அதன் பொருள் நம் மதம் ஒன்றே சரியானது என்று கூறுவதோ, நினைப்பதோ அல்ல. அப்படியான கருத்துக்களைச் சுமந்திருக்கும் யாருமே அடிப்படை மனித நெறிகளுக்கு எதிரானவர்களே. "அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு" என எத்தனை அழகாக நபிகள் சொல்லிச் சென்றுள்ளார்.

மதசார்பின்மை என்பது ஒரு மிக அற்புதமான கோட்பாடு. அதை வாழ்ந்து காட்டியவர் காந்தியடிகள். அவர் தனது இந்து மதத்தை உயர்வாக நேசித்தார். ஆனால் அதற்காக அவர் பிற மதங்களையும் நம்பிக்கைகளையும் மதிக்கத் தவறியதில்லை. சுதந்திரம் அளிக்கப்பட்ட அதே நாளில் பசுவதைத் தடைச் சட்டம் இயற்றி அறிவிக்க வேண்டும் என வந்து நின்ற வல்லபாய் படேலிடம், "நான் சின்ன வயது முதல் கோமாதாவை வணங்கி வருகிறேன். ஆனால் என்னுடைய நம்பிக்கை எப்படிப் பிறருடைய நம்பிக்கையாக ஆக முடியும்?" எனக் கேட்டு அப்படியான ஒரு சட்டத்தை இயற்றும் கருத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தவர் அவர்.

மற்றவர்களை மதிப்பது என்பது கண்டவுடன் எழுந்து நிற்பதோ, வணக்கம் சொல்வதோ, சாப்பிடச் சொல்லி  உபசரிப்பதோ, பெருநாளில் பிரியாணி அல்லது இனிப்பைப் பகிர்ந்து கொள்வதோ மட்டும் அல்ல. மற்றவர்களின் அனைத்தையும், அவர்களின் நம்பிக்கைகள் உட்பட, மதிப்பதுதான் அது.  அவர்களின் உரிமைகள் அனைத்தையும் மதிப்பது அது. அந்த உரிமைகளில் ஒன்று நம்மை விமர்சிக்கும் உரிமை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

நாம் மிகவும் நெருக்கடியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய செயல்கள் மிக்க வேதனையையும் கவலையையும் அளிக்கின்றன.

No comments:

Post a Comment