Sunday, March 19, 2017

கிணற்றுக்கு வெளியிலும் உலகம் விரிந்திருக்கு

கிணற்றுக்கு வெளியிலும் உலகம் விரிந்திருக்கு சாமீய்ய்ய்ய்!!!
.
அனைத்து அறிவும் அல்லாஹ்விடமிருந்து மனிதனுக்கு அருளப்பட்டவையே என்று நம்பும் ஒரு முஸ்லிம், அறிவியலின் ஊற்றாகத் திகழும் அல்குர்ஆனை ஆழ்ந்து கற்கும் ஒரு முஸ்லிம், ஒருபோதும் ஏனைய கல்வித் துறைகளைத் தரக்குறைவானவை என்றோ, பயனற்றவை என்றோ கொள்ள மாட்டான்.
.
இன்றைய மவ்லவிமார் சிலர், மத்ரஸாக் கல்வியை மட்டும் உன்னதமானதாகக் கூறி, ஏனைய துறைகள் பயனற்றவை, மறுமைப் பயனைத் தராதவை என்று மக்களை மூளைச் சலவைக்கு உட்படுத்த முனைகின்றனர்.
.
பெண்கல்வி என்று வரும்போது நிலைமை இன்னும் மோசம். பெண்கள் உயர்கல்வி கற்பதால், அதற்காக வீட்டைவிட்டு வெளியேறிச் செல்வதால் அனாசாரம் பெருகும் என்று கூப்பாடு போடும் முல்லாக்களும் முல்லா ஆதரவுப் பரிவாரங்களும் தொடர்ந்தும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
.
அதுமட்டுமல்லாமல், மத்ரஸாக் கல்வி கற்காதவர்களுக்கு இஸ்லாமே தெரியாது என்பது போலவும், அவர்களின் துறைசார்ந்த பணிகளுக்கு அல்லாஹ்விடத்தில் எந்தப் பெறுமானமும் இல்லாதது போலவுமான தோற்றப்பாட்டைக் கட்டியெழுப்பவும் அத்தகையவர்கள் முனைகின்றனர். இந்தப் போக்கு முற்றிலும் அபத்தமானது மட்டுமல்ல, மிகவும் ஆபத்தானதும்கூட. இதில் முரணகை என்னவென்றால், மத்ரஸாவுக்கு ஆள்சேர்க்கும் நோக்கில், தமது மத்ரஸாவில் கணினிக் கல்வியும் சிங்கள மற்றும் ஆங்கில மொழிக்கல்வியும் உண்டு என்று சொல்லி மார்க்கட்டிங் செய்வதும் ஒருபுறம் நடக்கவே செய்கிறது.
.
மொத்தத்தில், மருத்துவம், அறிவியல், சூழலியல், உளவியல், சமூகவியல், தொல்பொருளாய்வியல்,
வரலாற்றெழுதியல், தகவல் தொழினுட்பம், இதழியல் முதலான எல்லாத் துறைகளும் முக்கியமானவை என்பதை உணராத எந்த ஒரு சமூகமும், இன்றைய பெரும் சவால்களை எதிர்கொள்ள முடியாத பின்னடைந்த சமூகமாகவே வாழநேரும் என்பதில் ஐயமில்லை.
.
இதை உணர்ந்து விழிப்புணர்வு பெறாதவரை, தாம் நசுக்கப் படுவதையிட்டும், அடக்கியொடுக்கப்பட்டு அநீதிகளுக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலும் காலங்காலமாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்!
.
"எந்த ஒரு சமுதாயமும் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ்வும் அதனை மாற்றுவதில்லை" - அல்குர்ஆன்.

-Abdul Haq Lareena

No comments:

Post a Comment