Friday, March 3, 2017

முலச்சிப்பரம்பு எனும் இடத்தைச் சேர்ந்த நங்ஙேலியின் கதை


கேரளத்திலிருந்து ஒரு கட்டுரை

முலைக்கு வரி கொடுக்கவேண்டி வந்ததன் பேரில் தன் முலையை வெட்டித் துண்டித்து எதிர்ப்புத் தெரிவித்த நங்ஙேலியின் நினைவுகளுக்கு இருநூறு வயது.

நங்ஙேலியின் கதை

எம். ஏ. அனூஜ்
ஓவியம்: நங்ஙேலியின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ஓவியர் டி. முரளி வரைந்த ஓவியம்.

வரலாற்றுப் புத்தகங்களில் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத பெண் போராளியின் கதை இது; முலச்சிப்பரம்பு எனும் இடத்தைச் சேர்ந்த நங்ஙேலியின் கதை...

லீலாவின் கண்கள் தொலைவைப் பார்த்தபடியிருந்தன. எழுபத்து ஐந்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வயது. ஆனால், நங்ஙேலியின் கதையை அவர் சொல்லும்போது அவர் வார்த்தைகளுக்கெல்லாம் இளமையின் துடிப்பு. லீலாவுக்கு முன்னால், அவர் சொல்வதை கவனத்துடன் கேட்டவாறு மாணவிகள் குழு அமர்ந்திருக்கிறது. இப்படி எத்தனையோ பேர் எத்தனையோ முறை, கட்டி முடியாத நெடும்ப்ரக்காடு வீட்டின் திண்ணைப் படியிலிருந்து நங்ஙேலியின் வீரக் கதையைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், முலச்சிப்பரம்பு பெண் போராளி நங்ஙேலியின் கதையைச் சொல்வதில் லீலாவுக்கு ஒருபோதும் சலிப்பு ஏற்படுவதில்லை. அந்தக் கதை, அம்மாவிடமிருந்தும் அம்மாயியிடமிருந்தும் பல முறை கேட்டுக் கேட்டு காய்த்துப்போன கதை. இன்று, இப்போது, மறக்கவேண்டும் என்று நினைத்தாலும் முடியாதபடி அது லீலாவின் நினைவுச் சுவரில் பதிந்துவிட்டிருக்கிறது. அதனால்தான் லீலா, தான் ஒரு விபத்தில் சிக்கி வலது கை முறிந்த நலிவில் தூங்கிக்கொண்டிருந்தாலும் நங்ஙேலியின் கதை கேட்க வந்த மாணவிகளைப் பார்த்து புன்னகைத்தார்- “சொல்கிறேன்.”

முலச்சிப்பரம்பில் முளைத்த புரட்சி

உச்சி வெயில் வெப்பம். ஆயினும் சேர்த்தல மனோரமா சாலைச் சந்திப்பில் கூட்டத்துக்குக் குறைச்சலில்லை. முட்டம் சர்வீஸ் கூட்டுறவு வங்கிக்கு அருகிலுள்ள கடையில் கார்த்திகேயன், வெப்பத்தைத் தாங்க முடியாமல் சட்டையைக் கழற்றிவிட்டு நாற்காலியில் அமர்ந்தார். அப்போதுதான், சேர்த்தல எஸ். என். வரலாற்றுப் பட்ட வகுப்பு மாணவிகள் முலச்சிப்பரம்பைத் தேடி வந்தார்கள்.

கடையின் பின்னால் உள்ள கட்டடத்தைச் சுட்டிக்காட்டி கார்த்திகேயன் சொன்னார்: “இதோ, இதுதான் முலச்சிப்பரம்பு இருந்த இடம்.”

கடையிலிருந்த மற்றொருவர் சந்தேகமாகக் கேட்டார்: “முலச்சிப்பரம்பா?”

“அந்தக் காலத்தில் இந்த இடம், முலை வரி கொடுக்க வழியில்லாமல் தன் முலையை வெட்டிக் கொடுத்த ஒரு பெண்மணியின் வீடாக இருந்தது.” - கார்த்திகேயன் விளக்குவதைக் கேட்டு மாணவிகளும் நின்றார்கள். நங்ஙேலியின் வீட்டைத் தேடி வந்த மாணவிகள் குழுவுக்கு, அங்கே அதற்கான நினைவுச்சின்னம் எதையும் காண முடியவில்லை. தெரிந்த சிலர் சொன்னார்கள்: “மனக்கோடம் கேசவன் வைத்தியரின் வீடு இருக்கும் இடத்தில்தான் அந்தக் காலத்தில் நங்ஙேலியின் வீடு இருந்தது. வைத்தியரின் வீடு முட்டம் வங்கிக்குப் பின்னால் இருந்தது. இப்போது அங்கே கேசவன் வைத்தியருக்கு அடுத்த தலைமுறையினர் வசிக்கிறார்கள்.”

லீலா கேட்ட கதை

“எங்கள் வீடு இருந்த இடத்துக்கு முலச்சிப்பரம்பு என்று பெயர். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதுதான் நாங்கள் நெடும்ப்ரக்காட்டுக்கு மாறினோம்.” – முலச்சிப்பரம்பிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் நெடும்ப்ரக்காடு வீட்டிலிருந்து லீலா மாணவிகளிடம் சொன்னார். “வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் அம்மா நாராயணியும் அம்மாயியும் நங்ஙேலியின் கதையைச் சொல்வார்கள். நாங்களும் அப்படிக் கேட்டு வளர்ந்தவர்கள்தான். ஒவ்வொரு முறையும் அந்தக் கதையை பெருமையுடனே கேட்டுவந்தோம்...”

லீலா சொன்ன நங்ஙேலியின் கதை

“என் அம்மாயியிக்கும் அம்மாயியிக்கு முன்பான தலைமுறையில்தான் நங்ஙேலி வாழ்ந்திருந்தாள். அன்று சர்க்காருக்கு பலவிதமான வரிகள் கொடுக்கவேண்டும். ஆண்கள் தங்கள் தலைக்கு வரி கொடுக்கவேண்டும். பெண்கள் தங்கள் முலைக்கு வரி கொடுக்கவேண்டும். பெண்கள் தங்கள் முலையின் பருமனுக்கேற்றவாறு வரி கொடுக்கவேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நங்ஙேலி அழகி. கண்டன் எனும் பெயருடையவனைத் திருமணம் செய்துகொண்டாள்.

“நங்ஙேலி முலை வரி கொடுக்கவில்லை. வரி வசூலிக்க அதிகாரிகள் வருவார்கள். நங்ஙேலி வரி கொடுக்கவில்லை என்று அறிந்த அதிகாரிகள் அவள் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால் நங்ஙேலி, எதுவந்தாலும் எதிர்கொள்ளலாம் என்ற முடிவுடன் இருந்தாள். அதிகாரிகள் வருவதற்கு முன்பே குளித்தாள். உணவருந்தித் தயாரானாள். வரி கொடுக்கும் சடங்குக்காக, வாசலில் தலைவாழை இலை வெட்டி வைத்து குத்துவிளக்கு ஏற்றினாள். அதிகாரிகள் அவள் வீட்டுக்கு வந்தார்கள். வரி எடுத்து வருவதற்காக நங்ஙேலி வீட்டுக்குள் சென்றாள்.

“எதையோ ஒளித்துக் கொண்டுவருவதுபோல கைகளை முதுகுப் பக்கம் மறைத்தவாறு திரும்பி வந்தாள். அதிகாரிகள் வரி கேட்டார்கள். அடுத்த நொடி, முதுகுப் பக்கம் வைத்திருந்த கைகளை முன்னால் நீட்டினாள் நங்ஙேலி. அவள் கையில் கூர்மையான அரிவாள் இருந்தது. அரிவாளால் தன் முலையை வெட்டினாள். துண்டிக்கப்பட்ட முலை கீழே விழுந்தது. தலைவாழை இலையில் ரத்தம் நிறைந்தது. நெஞ்சிலிருந்து ரத்தம் பெருக நங்ஙேலி அங்கேயே விழுந்து இறந்தாள். சற்றும் எதிர்பாராத அந்த எதிர்வினையைப் பார்த்து அஞ்சி நடுங்கிய அதிகாரிகள் தப்பித்து ஓடினார்கள்.”

“நங்ஙேலிக்குக் குழந்தைகள் இல்லையா?” மாணவிகளில் ஒருத்தி கேட்டாள்.

“இல்லையென்றுதான் கேள்விப்பட்டேன். நங்ஙேலியின் கணவன் கண்டன் திரும்பி வரும்போது நங்ஙேலி இறந்திருந்தாள். நங்ஙேலியை எரித்த சிதையில் குதித்து கண்டன் தற்கொலை செய்துகொண்டான் என்றும் கேள்விப்பட்டேன்.”

வரலாற்றில் படியாத ரத்தம்

நங்ஙேலியின் உயிர்த் தியாகத்தின் கதையை நம் வரலாற்றுப் புத்தகங்களில் தேடினால் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலொன்றும் இந்த சம்பவம் பதிவு செய்யப்படவில்லை. சேர்த்தல கிராம அலுவலகத்தில் இருந்த இரண்டு நூற்றாண்டு ஆவணங்களைப் பரிசோதித்தபோது, அவற்றில் இந்த சம்பவத்தைப் பற்றிக் கூறப்பட்டிருக்கவில்லை என்றுதான் வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.

“தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தொழிலாளிகளை அடிமைகளைப்போல பயன்படுத்திய திருவிதாங்கூரில், அக்காலத்து ஆண் அடிமைகளிடமிருந்து வசூலிக்கும் வரியை தலை வரி என்றும் பெண்களிடமிருந்து வாங்கும் வரியை முலை வரி என்றும் குறிப்பிட்டார்கள்” என்று வரலாற்றாசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணன் சொல்கிறார்.

“பெண்களைப் பொதுவாகக் குறிப்பதற்குதான் ‘முலை’ எனும் வார்த்தையைப் பயன்படுத்திவந்தார்கள். முலையின் பருமனுக்கு ஏற்றவாறு வரி வசூலித்தார்கள் என்ற வாதம் சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. பழைய அரசாங்க ஆவணங்களில் நங்ஙேலியின் கதையைப் பார்த்ததில்லை” என்றும் எம்.ஜி.எஸ். நாராயணன் சொல்கிறார்.

ஆனால், வரலாற்றாசிரியர் வேலாயுதன் பணிக்கச்சேரிக்கு, நங்ஙேலியைப் பற்றிய வாய்மொழிக்கதை நினைவிருக்கிறது. “மார்த்தாண்டவர்மா நாட்டையும் சொத்துக்களையும் தன் குலதெய்வமான பத்மநாபஸ்வாமிக்கு தானமாக சமர்ப்பிக்கவும் அரசாங்க நிலச் சொத்துக்களை கோயில்களுக்கும் பிராமணர்களுக்கும் ‘தேவஸ்வம்’ (கடவுளுடையது) ‘பிரஹ்மஸ்வம்’ (பிராமணர்களுடையது) முதலான பெயர்களில் விட்டுக்கொடுக்கவும் செய்த பிறகு, கஜனா காலியாகிவிட்டது. அதன் பிறகு எளிய மனிதர்கள் மீது பலவித வரிகள் சுமத்தப்பட்டன. கள் எடுப்பவனின் சட்டிக்கும் நெசவாளியின் தறிக்கும் உட்பட, வாழ்பவர்களுக்கும் இறந்தவர்களுக்கும்கூட வரி. அவற்றில் ஒன்றுதான் முலை வரி. நங்ஙேலி தன் முலையை வெட்டி எதிர்ப்புக் காட்டியது அரசாங்கத்தை திடுக்கிடச் செய்தது. விரைவிலேயே, முலை வரியை நிறுத்திவிட்டதாக விளம்பரம் செய்ய நேர்ந்தது” என்று பணிக்கச்சேரி விளக்கினார்.

வாய்மொழிக் கதைக்கு அப்பால், நங்ஙேலியின் காலம்

வரலாற்றில் தெளிவாக ஆவணப்படுத்தப்படாத காரணத்தால், நங்ஙேலி வாழ்ந்திருந்த காலத்தை துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. ஆயினும் லீலா உட்பட்டவர்கள், தங்களின் ஐந்து தலை முறைக்கு முன்புதான் இது நடந்தது என்று சொல்கிறார்கள். ஏறத்தாழ 1800 – 1814 காலத்தில்தான் முலை வெட்டும் சம்பவம் நடந்தது என்று கருதப்படுகிறது.

முலை வரியுடன் நடைமுறையிலிருந்த ‘தலைப் பண’த்தை நிறுத்தியது பற்றி சி. கேசவனின் சுயசரிதையான  ‘வாழ்க்கைப் போராட்டம்’ இப்படிச் சொல்கிறது:

“அப்புறம் ஒரு வரி, ‘தலயற.’ இது தலைப் பணமென்றும் தலை வரி என்றும் பல பெயர்களில் அறியப்பட்டது. கொல்லவருடம் (மலையாள வருடம், இது கி.பி.825 இல் தொடங்குகிறது) 926 இல் ராமய்யன் மற்றும் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில்தான் ஈழவர் முதலான ஏழைச் சாதிகளின் மீது இந்த அநியாயமான வரி சுமத்தப்பட்டது. மார்த்தாண்டவர்மா நிறைய யுத்தங்கள் செய்ததாலும் 925 இல் சொத்துக்களை பத்மநாபஸ்வாமிக்கு சமர்ப்பித்ததாலும் கஜானா காலியாகிவிட்டது. இதைச் சரிசெய்யக் கண்டுபிடித்த சுலபமான வரிகளில் ஒன்றுதான் இந்த வரி. பதினாறு முதல் அறுபது வயதுவரையுள்ள ஏழைச் சாதியினரின் தலையை எண்ணி வரி வசூல் செய்துவந்தார்கள். ஆறு வருடத்துக்கு ஒரு முறை இந்த வரி முடிவு செய்யப்படும். நாயர்களும் மாப்பிளைகளும் (வடக்கு கேரளத்தில் முஸ்லிம்களையும் தெற்கில் கிறிஸ்தவர்களையும் குறிக்கும் பெயர்) வரி கொடுக்கவேண்டியது இல்லை. 990 இல் இந்த வரி நிறுத்தப்பட்டது. ‘இப்படி நிறுத்தியதன் மூலம் மிகப் பெரியதொரு வருவாய் ஆகுதி செய்யப்பட்டது’ என்று திவான் நாணுப்பிள்ளை கூறினார்...”

சி. கேசவனின் விவரணையின் படி தலை வரியை நிறுத்தியது 1814 இல். அத்துடன் முலை வரியும் நிறுத்தப்பட்டது என்று அனுமானிக்கவேண்டியிருக்கிறது. அப்படியென்றால் நங்ஙோலி முலை வெட்டியது அதற்கு சமீப வருடங்களிலாயிருக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மார்பை மறைத்துக்கொள்ளும் உரிமைக்காக பின்னரும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருக்கவேண்டியிருந்தது.

சேர்த்தலயிலிருந்து ஒரு குரல்

நங்ஙேலி எனும் பெண்மணி ஆரம்பித்த புரட்சியின் தொடர்ச்சி சேர்த்தல தாலுக்காவில் மீண்டும் ஏற்பட்டது. நங்ஙேலியின் உயிர்த் தியாகத்துக்கு முலச்சிப்பரம்பிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்திலுள்ள பட்டணக்காட்டில் கே. ஆர். கௌரியம்மா (மூத்த அரசியல்வாதி, அமைச்சராக இருந்தவர்) பிறந்தார். அவர் வக்கீலாகப் பணிபுரியும் காலத்தில், சேர்த்தல நகரத்தில் முலச்சிப்பரம்புக்குப் பக்கத்தில்தான் வசித்திருந்தார். கௌரியம்மா தன் சுயசரிதையில் நங்ஙேலியின் உயிர்த் தியாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்:

“... பழைய காலத்து வரி வசூலையும் நீதி, சட்ட நிர்வாகத்தையும் தர்பார் மண்டபத்தின் வாயிலில் உள்ள உத்தியோகஸ்தர்கள்தான் நடத்திவந்தார்கள். இவர்களின் சட்ட நடவடிக்கைகள் மிகவும் மிருகத்தனமாக இருந்தன... இவர்கள் வரி வசூலித்தது சொத்துக்கு மட்டுமல்ல, தலைக்கும் முலைக்கும் வரி வசூலித்தார்கள். இதற்குப் பயந்து, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பலர் தங்கள் சொத்துக்களை மேற்சாதி அண்டைவாசிகளின் பேரிலோ, மேற்சாதியினரின் கோயில்களின் பேரிலோ எழுதிவைத்திருக்கிறார்கள். இந்த முலை வரியை சகித்துக்கொள்ள முடியாமல், சேர்த்தல நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி முலை வரிக்காக தன் முலையை வெட்டி தலைவாழை இலையில் வைத்து அதிகாரிகளுக்குக் கொடுத்தாள். அவள் வசித்திருந்த இடத்தைத்தான் மனக்கோடம் கேசவன் வைத்தியர் வாங்கி கட்டடம் கட்டி வசித்தார். இந்தக் காட்டுமிராண்டித்தனமான வரி வசூல் முறையை மலையாள வருடம் 986 இல் திவானாக இருந்த மண்ட்ரோ துரை நிறுத்தப் பார்த்தார். ஆனால், அன்று நாட்டை ஆண்டுகொண்டிருந்த ராணி லட்சுமிபாய் அந்தப் பரிந்துரையைப் புறக்கணித்தார்...”

பெண்ணழகுக்கு வரி கொடுக்கவேண்டி வந்தன்பேரில் தன் மார்பை வெட்டிப் போட்டு எதிர்ப்புத் தெரிவித்த நங்ஙேலியின் நினைவுகள் இருநூறு வயதைக் கடக்கின்றன. வரி கொடுக்கப் பணம் இல்லாததால் முலையை வெட்டி எறிய நேர்ந்த நங்ஙேலியின் வீடு இருந்த இடத்தில்தான், இன்று நாள்தோறும் பணம் போடும் வங்கியும் ஏலச்சீட்டு நிறுவனமும் இருக்கின்றன. பழைய முலச்சிப்பரம்பு, கிடங்குப்பரம்பு என்று பெயர் மாறிவிட்டது. இங்கே எங்கும் நங்ஙேலியையும் அவளது உறுதியான எதிர்ப்பையும் நினைவுபடுத்தும்படி எதுவும் இல்லை.

   பெண்கள் மார்பை மறைக்கும் உரிமையையும் தம் உறுப்புக்கு வரி கொடுப்பதற்கு எதிரான உரிமையையும் வென்றெடுக்க, நங்ஙேலி நடத்திய ரத்தம் படிந்த போராட்டத்தின் கதையை புதிய தலைமுறைக்குத் தெரிவிக்க ஒரு நினைவுச் சின்னம் இல்லை. நங்ஙேலியின் உயிர்த் தியாகம் பாடப் புத்தகங்களில் இடம் பெறவில்லை. நங்ஙேலியின் கதை, வெறுமொரு வாய்மொழிக் கதையாக  காலத்தில் கரைந்து மறையவேண்டிய கதையல்ல...

நன்றி: மலையாள மனோரமா

No comments:

Post a Comment