Wednesday, March 8, 2017

வாழ்த்தும், அன்பும், காதலும், முத்தங்களும்


Arivazhagan Kaivalyam
Via facebook
2017-Mar-08

அந்த வெறுப்பு அருவறுப்பானது, அந்த வெறுப்பு இந்திய சமூகத்தில் இன்னுமும் பின்பற்றப்படுகிற நாகரீகத்துக்கு எதிரான வெறுப்பு, இந்தியக் குடும்பமொன்றில் பிறந்து தொட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் இரண்டாவது அல்லது மூன்றாவது பெண் குழந்தையின் மீது காரணங்களே இல்லாமல் காட்டப்படுகிற வெறுப்பு, கொடுமையானது மட்டுமல்ல, பெண்ணின் மீதான பல்வேறு அலட்சியங்களின் காரணம் அங்கிருந்துதான் துவங்குகிறது, கருக்கொலையும், குழந்தைக் கொலையும்பெண்ணைத் தெய்வமென்றும், தேவதையென்றும் போலியாகப் பிதற்றுகிற மதுரையில் துவங்கி சேலம் வரை இன்னும் பெண்ணின் மீதான வெறுப்பைச் சுமந்தபடியே தான் வானம் பார்த்துக் கிடக்கிறது.

இந்தியக் குடும்பங்களின் பெரும்பாலான அம்மாக்கள் பெண் குழந்தைகளுக்கு அவர்களையும் அறியாமல் சொல்லிக் கொடுப்பதென்னவோ உடைந்து நொருங்கிப் போன கனவுகளும், ஆண்களின் சொற்களும், செயல்களும் அவர்களுக்கு வழங்கிய காயங்களும் தான், வாழ்க்கை முழுவதும் ஒரு சொல் அவர்களிடம் தொக்கியபடி நிற்கிறது, "பிள்ளையைத் தூக்கிட்டுக் கிளம்பு", இந்தச் சொற்றொடர் உருவாக்குகிற பாதுகாப்பின்மையும், மன அழுத்தமும் ஊரக இந்தியாவின் எல்லாச் சாதியிலும், மாநிலங்களிலும் இயல்பானது.

கல்வியும், பயணங்களும் பாதுகாப்புக் காரணங்களால் மறுக்கப்படுகிற வெறுமை, கல்விக் கூடங்களில் காட்டப்படுகிற பாலின வேறுபாடு, நினைத்தவற்றைச் செய்யமுடியாத பெண்ணுடலின் மீதும், பெண் மனதின் மீதும் உருவாக்குகிற தாக்கம் குற்றம் என்கிற உறுத்தல் இல்லாத கல்லூரிப் பேராசிரியர்கள் துவங்கி மருத்துவர்கள் வரைக்கும் இங்கே உண்டு.

மாதவிடாய்ச் சுழற்சிகளின் போது உண்டாகிற மன அழுத்தம் மற்றும் உடல் மாற்றங்களை வேதனையோடு பள்ளிகளில், கல்லூரிகளில், பணியிடங்களில் இயல்பாக இல்லாமல் தவிக்கிற பெண்களுக்கு இந்த சமூகம் பெரிய அளவில் எந்த ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதில்லை, தொலை தூரப் பேருந்துகளில் ஆயிரக்கணக்கில் கொடுத்துப் பயணிக்கிற பெண்களின் சிறுநீர் கழிக்கும் தேவைகளைக் கூட ஒருவிதமான சலுகை மனப்பான்மையோடுதான் இந்த மாண்புமிகு சமூகம் வழங்குகிறது.

பாலுறவுக்கான நேரத்தையும், நாட்களையும் தேர்வு செய்ய முடிகிற பெண்கள் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் கூட அருகிப் போய்த்தான் இருக்கிறார்கள், காதல் ஏறத்தாழ சங்கருக்கிற சண்டித்தனமாகி விட்டது மட்டுமில்லை, போதாக்குறைக்கு சாதித் திமிர் கொண்ட ஆண்களின் கௌரவமாகிப் போனபடியால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குக் காதல் குறித்த தங்கள் சுய சிந்தனைகளை மறந்துவிட்டுத்தான் பெண்கள் வாழவேண்டியிருக்கும்.

குழந்தைப் பேறு குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாத பதின் வயதுக் குழந்தைகளுக்குத் திருமணம், குழந்தைப் பேறு குறித்த, அதற்குப் பிறகான உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் தொடர்பான எந்தவொரு அறிவும் இல்லாத கணவன்கள் என்று வாழ்க்கையை இவ்வளவு குரூரமாகத்தான் பெண்களுக்கு வழங்குகிறது இந்த ஆணுலகு.

பெண்களைப் புனிதப்படுத்தல் ஆண்களின் கருவி, குடும்பத்தின் மீதான தனது உடல் பங்களிப்பை மறுக்க ஆண்கள் கண்டறிந்த அழகான ஆயுதம் பெண்ணைத் தெய்வம் என்றும் தேவதையென்றும் போற்றுதல், பெண் சக மனுஷியாக, அவளுக்கென்று இருக்கும் கனவுகளோடும், பயணங்களோடும் போகிறபோதுதான் அழகாய் இருப்பாள்.

மனம் போன போக்கில் உங்கள் கனவுகளோடு, ஆண்களின் எப்போதும் தொடரும் மன அழுத்தம் இல்லாத ஒரு நிம்மதியான, மகிழ்ச்சியான, அகண்ட உலகம் உங்களுக்கு இந்த நாளில் கிடைக்கட்டும். தனிப்பட்ட கனவுகளோடும், இலக்குகளோடும் பயணிக்கும் பெண்களே, இந்த நாளில் ஒரு சின்ன வேண்டுகோள், திருமணத்தையும், பிள்ளைப்பேற்றையும் இயன்றால் மறுதலித்து வெளியேறுங்கள், அவ்விரண்டும் இந்திய சமூகத்தில் பெண்களை பிடித்த புற்றுநோய்.

வாழ்த்தும், அன்பும், காதலும், முத்தங்களும்...

No comments:

Post a Comment