Mahadevan CM
Via Facebook
2017-03-21
பாடல்களுக்கு காப்புரிமை கேட்பதை ஏதோ உலக மகா குற்றம் எனவும், சுயநலம் எனவும் விமரிசிக்கும் சில அதிமேதாவிகளுக்கு இந்த பதிவு.
முதலில் இது காப்பிரைட் என்பதை விட "அறிவு சார் சொத்துரிமை" (Intellectual Property ) என்பதே சரியான பதம். இந்த வார்த்தையை கூகிள் செய்து பாருங்கள். ஒரு மனிதனால் புதிதாக உருவாக்க படும் இசை, இலக்கியம், புதிய கண்டுபிடிப்புகள், புதிய டிசைன்கள் என்று எல்லாமே இக்குறியீடுக்குள் வருகிறது. இதன் கீழ் தான் பேடண்ட், காப்பிரைட், டிரேட்மார்க் போன்றவை எல்லாம் வருகிறது.
உங்களுக்கு எல்லாம் சந்திரபோஸ் தெரியுமா? இளையராஜாவின் காலத்திலேயே இருந்த ஒரு அற்புதமான இசையமைப்பாளர். சூப்பர் ஸ்டாரின் படங்களுக்கு இசை அமைத்தவர். விடுதலை, மனிதன், ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களுக்கு அவர் தான் இசை அமைப்பாளர். அவரின் பல பாடல்கள் சூப்பர் ஹிட். சங்கர் குரு, அண்ணா நகர் முதல் தெரு, மாநகர காவல், வசந்தி, இன்னும் ஏகப்பட்ட படங்கள் அவருடைய இசை அமைப்பில் சூப்பர் ஹிட் பாடல்களை கொண்டவை. 1977 முதல் 1991 வரை சுமார் 300 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 2010 ல் அவர் மறைந்தார். இன்றைக்கு அவர் குடும்பத்தின் நிலை என்ன தெரியுமா? சோற்றுக்கே கஷ்டப்படும் நிலையில் தான் உள்ளனர். சென்ற வருடம் குமுதத்தில் வெளிவந்த பேட்டியை பார்த்து விஷால் தான் சென்று சில உதவிகளை செய்துள்ளார். இன்றைக்கு அவர் குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணம் அவருடைய பாடல்களுக்கு காப்பிரைட் இருந்தும் யாரும் அதை மதிப்பதில்லை.
வின்னர் படம் எடுத்த தயாரிப்பாளரின் நிலை என்ன தெரியுமா? ஒரு ஓடடலில் சர்வராக வேலை பார்க்கிறார். (அவரின் நிலைக்கு பிரசாந்தின் அணுகு முறை காரணம் என்றாலும்). இன்றைக்கு எத்தனை சானல்கள் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வின்னர் படத்தின் காமெடியை ஏதோ ஒரு சானல் ஒளிபரப்பி கொண்டே தான் இருக்கிறது. படத்தின் உரிமையாளர் என்ற முறையில் அவருக்கு பணம் கொடுக்க வேண்டாமா? எத்தனை எப் எம் சேனல்கள் சந்திரபோஸின் பாடல்களை ஒளிபரப்புகிறார்கள். டி வி சேனலும் எப் எம் மம் என்ன தர்மத்திற்கா நடத்தி வருகிறார்கள். ஒரு நொடிக்கு இவ்வளவு என்று விளம்பரத்திற்கு பணம் வாங்குவதில்லை? அதில் யாருக்கும் பங்கு தர வேண்டாமா? யாருடைய உழைப்பை சுரண்டி யார் சம்பாதிப்பது.?
நாம் வீட்டிலோ காரிலோ பென் ட்ரைவில் டவுன்லோடு செய்து கேட்கும் பாடல்களுக்கு அவர் பணம் கேட்க வில்லை. அவர் கேட்பது என் பாடலை வியாபார நோக்கில் பயன்படுத்தினால் என்னிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்கிறார்.
முதன் முதலில் இளையராஜா என் பாடல்களை உரிமம் இல்லாமல் வியாபார நோக்கில் பயன்படுத்த கூடாது என்று அறிவித்த பொழுது, தமிழ்நாடு முழுவது உள்ள மேடை இசை கலைஞர்கள் அவரை சந்தித்து முறையிட்டனர். அப்போது ராஜா பெருந்தன்மையாக அவர்களுக்கு அந்த உரிமையை விட்டு கொடுத்தார். இப்போது அவர் கேட்பது சந்திரபோசுக்கும் சேர்த்து தான். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று பல லட்சம் சம்பாதிப்பவர்கள் அதில் சில ஆயிரங்களை விட்டு கொடுக்க கசக்கிறது. இதே எஸ் பி பி அவர்கள் சந்திரபோஸ் இசை அமைப்பில் பாடியதில்லையா? அந்த பாடலை அவர் மேடையில் பாட மாட்டாரா?
அவர் மகன் சொன்னது போல் என் தந்தை 40000 பாடல்களை பாடி இருக்கிறார். அதில் இளையராஜாவின் பாடல்கள் வெறும் 2000 மட்டும் தான். மீதி பாடல்களை பாடி நாங்கள் பிழைப்பு நடத்துவோம் என்றிருக்கிறார். மீதி பாடல்களும் யாரோ ஒரு இசை அமைப்பாளரின் சொத்துக்கள் தான். அதை பயன்படுத்தி பணம் சம்பாதித்தால் யார் உரிமையாளரோ அவருக்கு கட்டணம் செலுத்த தான் வேண்டும். அந்த கட்டணம் என்பது இளையராஜாவுக்கு மட்டும் அல்ல. பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கும் பங்குண்டு. (ஒப்பந்தம் இருக்கும் பட்சத்தில்) அவ்வளவு ஏன்? ஏ ஆர் ரகுமான் பாடலை நாங்கள் எந்த வித கட்டணமும் செலுத்தாமல் தான் பாடுகிறோம் என்று அறிக்கை விட சொல்லுங்களேன் பார்க்கலாம். (ராஜாவை பற்றி எழுதினால் ரகுமான் ஆட்டோமேட்டிக்காக வந்து விடுகிறார். என்ன செய்வது?)
அவர் சம்பளம் வாங்கினாலும் அவர் தான் அதை உருவாக்கியவர். He is Creator . அவருக்கு சகல உரிமையும் உள்ளது. எத்தனையோ பதிவுகள் இளையராஜா செய்தது சட்டப்படி சரியானது என்று சொன்ன பிறகும், இவ்வளவு வன்மத்துடன் மீண்டும் மீண்டும் அவரின் மீது சேற்றை வாரி இறைப்பதறக்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். அவரின் மீது இருக்கும் தனிப்பட்ட வெறுப்பு,
உங்களுக்கு இளையராஜாவின் மேல் தனிப்பட்ட வெறுப்பு இருக்கலாம். அதை யாரும் ஏன் என்று கேட்க முடியாது. அதற்காக அவரின் செயலை தவறு என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. டாட்.
No comments:
Post a Comment