Tuesday, March 14, 2017

பெரியார் தமிழர் இல்லை அதனால் தான் திராவிட அடையாளத்தை முன்வைத்தார்

Sivasankaran Saravanan
Via Facebook
2017-03-14

கமல்ஹாசன் பேட்டியைத்தொடர்ந்து ஏற்பட்ட நல்ல விஷயமாக நான் கருதுவது,  ஆங்காங்கே "திராவிடம் னா என்ன?  கொள்கையா அடையாளமா?  ஆந்திரா கேரளா ல ஏன் திராவிடம் பேசப்படுவதில்லை?  " என்ற வாதங்கள் எழுகின்றன.  கேள்வி கேட்பது நல்ல விஷயம் தான்.  திராவிடம் என்ற சொல் எப்படி வந்ததற்கான விளக்கத்தை முதல்  கமென்ட்டில் தந்துள்ளேன்.  விருப்பமுள்ளவர்கள் அந்த நீண்ட விளக்கத்தை படித்துத் தெரிந்து கொள்ளலாம். 

பெரியார் தமிழர் இல்லை அதனால் தான் திராவிட அடையாளத்தை முன்வைத்தார் என சொல்லப்படுகிறது.  இது முற்றிலும் தவறு.  திராவிட அடையாளத்தை பெரியார் முதன்முதலில் கையிலெடுக்கவில்லை.  1882 ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் கௌரவ நீதிபதியாக இருந்த ஜான் ரத்தினம் என்பவர் தான் முதன்முதலில் திராவிடர் கழகம் என்ற அமைப்பை நிறுவுகிறார்.  அதைத்தொடர்ந்து அவருடன் இணைந்து தாத்தா அயோத்திதாச பண்டிதர் 1885 ம் ஆண்டு திராவிட பாண்டியன்,  திராவிட மித்திரன் ஆகிய இதழ்களை ஆரம்பிக்கிறார். 1891 ம் ஆண்டு அயோத்திதாசர் திராவிட மகாஜன சபா வை ஏற்படுத்துகிறார்.  மகாராஷ்டிராவில் மகாத்மா ஜோதிராவ் பூலே அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை ஆதி சூத்திரர்கள் என்று அழைத்த காரணத்தால் அயோத்திதாசர் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஆதி திராவிடர்கள் என அடையாளப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. 

1912ம் ஆண்டு மதராஸ் மாகாண பிராமணர் அல்லாத அரசு ஊழியர்களின் அமைப்பான மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற பெயரை நடேசனார் மெட்ராஸ் திராவிட சபை என மாற்றியபோது அந்த பதம் பெரியளவில் கவனம் பெற தொடங்கியது.  1922ம் ஆண்டு அப்போதைய அமைச்சரவையிலிருந்த  எம் சி ராஜா அவர்கள் "ஆதி திராவிடர் " என்ற சொல்லை சட்டபூர்வமாக ஆக்குகிறார்.  மேலே சொன்ன எல்லாருமே இப்போது இவர்கள் சொல்கிற அடையாளப்படி வைத்தால் பச்சைத் தமிழர்களே.  இதற்கெல்லாம் பிறகு தான் பெரியார் திராவிடர் என்ற அடையாளத்தை கையில் எடுக்கிறார் . ஆரிய இனம் பிறப்பால் உயர்ந்தது என்ற கருத்துகளை வலுவாக இந்த மண்ணில் ஊன்றியதை அறிந்த பெரியார் ஆரியர்களுக்கு முன்னரே இந்த மண்ணில் திராவிட இனம் இருந்துள்ளதை என்ற காரணத்தால்,  "நீ எந்த அடையாளத்தால் எங்களை மட்டம் தட்ட பார்க்கிறாயோ அதே அடையாளத்தை வைத்தே உன்னை எதிர்க்கிறேன் பார் " என அதை வெற்றிகரமான அரசியலாக மாற்றினார். 

என்னை சில நண்பர்கள் அரக்கன் என செல்லமாக கூப்பிடுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.  இது நானாக விரும்பி ஏற்றுக்கொண்ட அடையாளம் . ஏன்?  நீங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் எங்கள் மக்களை அரக்கர்கள் என அடையாளப்படுத்தி அவர்களை கெட்டவர்களாக சித்தரித்தீர்கள். அதே அடையாளத்தை வைத்தே உங்களுக்கு பதிலடி தருகிறேன் பார் என்பது தான் எதிர்ப்பு அரசியல். 

திராவிட இயக்கம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் தமிழர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இயக்கம்.  நூறு வருடங்களுக்கு மேலாக அது தமிழ்நாட்டில் மட்டுமே இருந்துவருகிறது.  எனவே ஆந்திராவில் ஏன் இல்லை,  கர்னாடாகாவில் ஏன் இல்லை என கேட்பது அபத்தமானது.  திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் தமிழ் என்பதைத்தவிர வேறெந்த பெரியளவிலும் திராவிட இயக்கம் மற்ற மாநிலங்களில் Influence செய்யவில்லை.  தமிழ் மொழியிலிருந்து தான் மலையாளம் வந்தது,  கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள அந்த மக்கள் விரும்புவதில்லை.  (தன்னுடைய தாய் மொழிக்கே தாய் தமிழ் தான் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாது என்பது வேறுவிஷயம்) .எனவே அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில் உள்ள சிக்கலை நாம் புரிந்துகொள்ளவேண்டும் .

எனவே திராவிட இயக்கம் முழுக்க தமிழ்நாட்டில் மட்டுமே தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம்.  அதனால் தான் ஆட்சிக்கு வந்த வுடன் செய்த முதல் வேலை இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியது.  சமூக நீதி,  வர்ண பேதங்களை கடுமையாக எதிர்த்தல்,  தமிழ் மொழியுரிமை, பகுத்தறிவு,  மாநில சுயாட்சி இதெல்லாம் முக்கியமான திராவிட கொள்கைகள்.  திராவிட இயக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தாலே சிலர்,  தமிழ்நாட்டில் கோயில்கள் அதிகமாகி வருகிறது,  பக்தர்கள் அதிகமாகி வருகிறது இது திராவிட வீழ்ச்சியை காட்டுகிறது என எழுதுகிறார்கள். கடவுள் எதிர்ப்பு என்பது முழுமையான திராவிட கொள்கை அல்ல.  இந்தியாவில் உள்ள சாதிய கொடுமைகளுக்கு காரணம் வர்ண பேதம்.  வர்ண பேதத்திற்கு காரணம் இந்து மதம்.  சாதிய அடுக்கை கொண்ட இந்து மதத்தை எதிர்க்காமல் செய்கிற எந்த புரட்சியும் டுபாக்கூர் புரட்சி தான் . ஹிந்துத்வா வை திராவிட இயக்கம் வெகுஜன மக்கள் பங்களிப்புடன்  மிகச்சரியாக டார்கெட் செய்து அடித்ததால் தான் இத்தனையாண்டுகளுக்கு பிறகும் இந்த மண்ணில் ஹிந்துத்வா வால் நேரடியாக நுழையமுடியவில்லை. 

திராவிட இயக்கம் ஹிந்துத்வா எதிர்ப்பில் எழுந்த இயக்கம் . திராவிடம் ஒழிய வேண்டுமென்றால் அதற்கு முற்றிலுமாக இந்த மண்ணிலிருந்து ஹிந்துத்வா ஒழிய வேண்டும்.  ஹிந்துத்வா ஒழியாதவரை திராவிடத்தின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கும் .

No comments:

Post a Comment