Thursday, January 21, 2021

ஒருவருக்குப் ‘Perfect Gentleman’ என்ற பட்டப்பெயர் உண்டு.

என். சொக்கன்

எங்களுடைய குழுவில் ஒருவருக்குப் ‘Perfect Gentleman’ என்ற பட்டப்பெயர் உண்டு.

காரணம், அவர் எல்லாரிடமும் மிக இனிமையாகப் பழகுகிறவர். அவருடன் பணியாற்றிய பலரும் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆனால், நான் அவரோடு அதிகம் பேசியதில்லை. ஒரே ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். மற்றபடி மின்கூட்டங்களில்கூட அவர் பேசியதைக் கேட்டதில்லை.

ஆகவே, இவருக்கு இப்படியொரு நல்ல பெயர் எப்படி வந்தது என்கிற குறுகுறுப்பு எனக்கு எப்போதும் உண்டு. இவருடைய உத்திகளை, சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உண்டு.

சமீபத்தில், அதற்கான வாய்ப்பு அமைந்தது. ஒரு புதிய திட்டத்தில் நானும் அவரும் சேர்ந்து பணியாற்றவேண்டிய சூழல். ஆகவே, அவரோடு நேரடியாகப் பேசுகிறேன், பழகுகிறேன். உண்மையிலேயே அவர் ‘Perfect Gentleman’தான் என்று உணர்கிறேன்.

ஒருவருடைய பழகும்தன்மை என்பது நல்லவிதமாக இருந்தாலும் சரி, கெட்டவிதமாக இருந்தாலும் சரி, அதற்குப் பல விஷயங்கள் காரணமாக அமைகின்றன. ஆகவே, இதனால்தான் இவர் நன்கு பழகுகிறார் என்று யாராலும் உறுதியாகச் சொல்லிவிட இயலாது.

என்றாலும், இந்தப் பர்ஃபெக்ட் ஜென்டில்மேனிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் இவை:

அலுவல் கூட்டங்களின் தொடக்கத்தில் சில வழக்கமான நலம் விசாரிப்புகள் இருக்கும். ஆனால், அவை பொதுவாகப் போலித்தனமான சொற்களாக அமையும். ‘சரி, சரி, சீக்கிரம் பேசவேண்டிய விஷயத்துக்கு வாங்க’ என்கிற பரபரப்பு தெரியும்.

ஆனால், இவருடைய நலம் விசாரிப்பு மிக உண்மையானதாகத் தோன்றுகிறது. நிதானமாகவும் வாஞ்சையாகவும் பேசுகிறார்.

அதற்காக இவர் நிறைய நேரத்தை வீணடிப்பதும் இல்லை, மிகச் சில சொற்களுக்குள், நாம் நன்றாக இருக்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்கிற நிஜமான அக்கறையைக் காண்பித்துவிடுகிறார்.

அவருடைய பகல், எனக்கு இரவு. என்னுடைய பகல், அவருக்கு இரவு. ஆகவே, நாங்கள் சந்திக்கும் நேரங்கள் யாரோ ஒருவருக்கு அலுவல் நேரமாக இருக்காது.

ஆகவே, என்னுடைய இரவு நேரத்தில் சந்திப்புகள் நிகழும்போதெல்லாம், அதற்காக உண்மையாக நன்றி தெரிவிக்கிறார். ‘அடுத்த கூட்டத்தை என்னுடைய இரவு நேரத்தில் வைத்துக்கொள்வோம், சிரமம் இருவருக்கும் சமமாக இருக்கட்டும்’ என்று வற்புறுத்துகிறார்.

என்னிடம் என்ன தேவை என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். ‘இதைமட்டும் சொல்லுங்கள், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்கிறார்.

இதன் பொருள், நம் நேரத்தை அவர் மதிக்கிறார்.

என்னிடம் வருவதற்குமுன் அவர் வேறு யாரிடமாவது இதைப்பற்றிப் பேசியிருக்கலாம். அதை மறைக்காமல் சொல்கிறார். ‘அவர் இப்படிச் சொன்னார். நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று உறுத்தாமல் கேட்கிறார்.

தனக்குத் தெரியாதவற்றைத் தெரியாது என்று ஒப்புக்கொள்ள அவர் தயங்குவதில்லை. அதே நேரம், இது தனக்குத் தெரியாதே என்கிற கழிவிரக்கமும் இல்லை. ‘நான் கற்றுக்கொள்ளத் தயார்’ என்று பேச்சால் உணர்த்துகிறார்.

நம்மிடம் உள்ள நல்லவற்றை மனம் திறந்து பாராட்டுகிறார். அதே நேரம், அது வெற்றுப் புகழ்ச்சியாக இல்லை. ‘நீங்கள் இதைச் செய்தது எனக்குப் பிடித்திருந்தது, அதனால் இந்த நன்மை விளைந்திருப்பதாக நான் எண்ணுகிறேன்’ என்று தெளிவாகச் சொல்கிறார்.

‘சேர்ந்து பணியாற்றுவோம்’ என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறார். ‘நான் சொல்வதுதான் சரி’ என்று வலியுறுத்துவதும் இல்லை, அனைத்தையும் நம்மிடம் ஒப்படைத்துவிடுவதும் இல்லை, மாற்றுக் கருத்துகளைக் கேட்கத் தயாராக இருக்கிறார், மனத்தைத் திறந்துவைத்திருக்கிறார்.

புதிய பணியொன்றுக்குப் பொறுப்பேற்கும்போது, அதற்குமுன் அங்கு பணியாற்றியவர்களுடைய உழைப்புக்கும் அறிவுக்கும் பெரிய மதிப்பளிக்கிறார். அவர்கள் படுமோசமாகச் சொதப்பியிருந்தாலும் சரி, ‘அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளப் பல விஷயங்கள் உண்டு’ என்கிறார்.

இவர் கச்சிதமானவர்தான். ஆனால், ‘எல்லாம் கச்சிதமா இருக்கணும், இல்லாட்டி எனக்குப் பிடிக்காது’ என்று முகம் சுளிப்பதில்லை.

அதாவது, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், குழுக்கள், நிறுவனங்களிடம் குறைகள் இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறார். அவற்றைச் சுட்டிக்காட்டிக் காயப்படுத்தாமல், அவர்களிடம் இருக்கும் நல்லவற்றைச் சொல்கிறார், குறைகளை நீக்க உதவுகிறார்.

அவருடைய வேலையில் குறைகள், கருத்துகள், முன்னேற்றத்துக்கான வழிகளைச் சுட்டிக்காட்டினால், அதற்கு உண்மையாக நன்றி தெரிவிக்கிறார். அதில் தன்னுடைய கோணத்தை எடுத்துரைக்கிறார்.

ஆனால், இப்படித் தன்னுடைய தரப்பைச் சொல்லும்போது அவரிடம் எதிர்க்கிற மனநிலை இல்லை. தன்னுடைய சிந்தனையோ செயலோ தவறாக இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறார். ‘நான் இதைப்பற்றிச் சிந்திப்பேன், தேவையானதைச் சரிசெய்வேன்’ என்கிறார்.

மிக நிதானமாகப் பேசுகிறார். சிந்தனையில் தெளிவு இருந்தால்தான் இது சாத்தியம்.

பிரமாதமான நகைச்சுவை உணர்ச்சி. கனமான அலுவல் விஷயங்களில் சிறிது கலகலப்பைக் கலந்து இனிமையாக்கிவிடுகிறார்.

இதனால், எட்டு மணி நேரக் கடும் உழைப்புக்கு நடுவில் இவரோடு பேசிய சில நிமிடங்கள் மனத்துக்குச் சிறு ஓய்வளிக்கின்றன, நம் நினைவில் தங்கிவிடுகின்றன.

https://www.facebook.com/541303291/posts/10158492281573292/

No comments:

Post a Comment