Thursday, July 6, 2017

பார்பனர்கள் கைவிட வேண்டிய நான்கு விசயங்கள்

டி. வி. எஸ். சோமு
Via Facebook
2017-07-02

பிராமண நண்பர் ஒருவருவடன்  இன்று  பேசிக்கொண்டிருந்தபோது அவர்  சொன்னது.

“ பிராமணர்கள்  தற்போது மூன்று இடங்களில் இருந்து எதிர்ப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மாற்ற மதத்தினர் மற்றும் நாத்திகர்கள் மட்டுமல்ல… இந்து மதத்தில் பற்றுள்ள இதர சாதியினரும்கூட பிராமணர்களை விலகலாகவே பார்க்கிறார்கள்.

சக மனிதன் எவரையும் வெறுப்பது மனிதம் ஆகாது. அதே நேரம் இப்படி வெறுப்பதற்கான சில காரணங்கள் பிராமணர்களான எங்களிடம் இருப்பதையும் நாம் ஏற்க வேண்டும். அப்படியானால் பிராமணர்களை சக இந்துக்கள் விரும்ப.. கொண்டாட என்ன செய்ய வேண்டும்..

சிம்பிளாக நான்கே நான்கு விசயங்களைச் செய்தால் போதும்.

1. பிறப்பின் அடிப்படையிலேயே அர்ச்சகர் ஆக முடியும் என்பதை ஆதரிக்காமல், தகுதியை ஏற்படுத்திக்கொண்ட அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பிராமணர்கள் ஏற்க வேண்டும்.

2. பல நூற்றாண்டுகள் கல்வி, உயர் வேலை வாய்ப்பு, சொத்துக்கள் வாங்குவது போன்ற பற்பல வசதிகளை “இட ஒதுக்கீடு” காரணமாக பெற்றவர்கள் பிராமணர்கள். இப்படி ஒரு சார்பு நிலை ஏற்பட்டது சமூகத்தில் பலவித ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திவிட்டது. இது நீங்கும் வரை, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் என்பதை ஏற்க வேண்டும்.

3. சமஸ்கிருதம் உட்பட எந்த மொழியையும் வெறுக்க வேண்டியதில்லை. ஆனால் புழக்கத்தில் இல்லாத, ஆகப்பெரும்பாலோருக்குப்புரியாத, (பல இடங்களில் இதைச் சொல்பவர்களுக்கும் புரிவதில்லை) சமஸ்கிருதத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு ஆலயங்களில் தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

4. பூணூல் அணியாமல் இருப்பது எப்படி உரிமையோ, அது போல பூணூல் அணிவதற்கும் உரிமை உண்டு. அதே நேரம், பூணூல் அணிவதன் மூலம் சக இந்துக்களைவிட தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் பிராமணர்களுக்கு ஏற்படுகிறது. இது பிளவை ஏற்படுத்துகிறது. ஆகவே பூணூல் அணிவதை தவிர்க்க வேண்டும்.” என்றார் அந்த  பிராமண நண்பர்.

“இதையெல்லாம் பிராமணர்கள் ஏற்பார்களா” என்றேன்.

அதற்கு அவர், “முற்போக்கு விசயங்கள் பலவற்றை பிராமணர்களான நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோமே.
குடுமி வைத்திருப்பது மிக முக்கிய சாஸ்திரம், சம்பிரதாயம் என்றுதான் இருந்தது. ஆனால் அதை நாங்கள் (பிராமணர்கள் ) கைவிடவில்லையா? பிராமணர்கள் கடல் தாண்டி செல்லக்கூடாது என்பது (அவர்களுக்கான) விதி. அதை மீறி இன்று அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை பிராமணர்கள் வாழ வில்லையா?

ஆகவே  இந்த நான்கு விசயங்களை மட்டும் பிராமணர்களாகிய நாங்கள் செய்துவிட்டால்  எங்கள் மீது சக இந்துக்களுக்கும், நாத்திகர்களுக்கும் மிகப்பெரிய அன்பும், மரியாதையும் ஏற்படும்.  தவிர மாற்று மதத்தினர் எங்களை  குறை கூறவும் வாய்ப்பில்லாமல் போகும்.

தவிர சமூகத்திலும் நல்லிணக்கம் ஏற்படும். அதாவது கோயிலில் கருவறைக்கு உள்ளே பிராமணர்கள் மட்டுமே செல்ல முடியும் என்கிற நிலையால்தான், கோயிலுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டும் வர முடியும் என்கிற (மன) நிலை பல இடங்களில் நிலவுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள்கோயிலுக்கு வெளியே நிற்கவைக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாறி, தகுதி உள்ள எவரும் ( எந்த சாதியைச் சேர்ந்த இந்துவானாலும்) அர்ச்சகர் ஆகலாம் என்றால் இடை நிலை சாதியினரில் வெளிப்படையாக நிலவும் சாதி வெறி வெகுவாக குறையும்.

தவிர நான் சொன்ன நான்கு விசயங்களும் நிச்சயம் காலப்போக்கில் நடந்தே தீரும். அதை முன்னதாகவே பிராமணர்களே தலைமையேற்று செய்தால் இன்னும் நல்லது ” என்றார் அந்த பிராமண நண்பர்.

No comments:

Post a Comment