திராவிடர் கழகம்
Via Facebook
2017-07-01
தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த பெண் போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மா அவர்களின் நினைவு தினம் :-
( நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்களேன் )
..
* பெண்களுக்கெதிரான சமயச் சடங்குகளில் மிகக் கொடூரமானது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை பொட்டுக்கட்டி தேவதாசியாக்கும் கருவியாக்கியதுதான்.
* குறிப்பிட்ட சமூகப் பெண்களை கோவிலில் நடனமாடவும், அவர்களை திருமணம் செய்து கொள்ளவிடாமல் பொட்டுக் கட்டும் வழக்கம் கடந்த நூற்றாண்டின் முதல் பகுதி வரை நீடித்தது. இந்த சமூகத்தில் பிறந்த ஆண்கள், நாயனம், மேளம் வாசிப்பதிலும், நட்டுவனார்களாகவும் வாழ்க்கையை நடத்தினர்.
* இக்கொடுமையைக் கண்ட மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் கிருஷ்ணசாமி என்பவர் எதிர்த்தார். இதனால் கடும் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல் போன்றவற்றால் ஊரைவிட்டே சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். அவருக்கும் சின்னம்மாள் என்பவருக்கும் 1883-ம் ஆண்டு இராமாமிர்தம் பிறந்தார்.
* ஆச்சிக் கண்ணு என்ற தேவதாசியிடம் 10 ரூபாய்க்கும், ஒரு பழைய புடவைக்கும் விற்றுவிட்டார் சின்னம்மாள். காரணம். குடும்பத்தின் வறுமை. ஆச்சிக் கண்ணுவிடம் 7 வயது முதல் வளர்ந்தார் இராமாமிர்தம். பின்னாளில் தன் இனிஷியலாக ஆ என்று இவர் போட்டுக் கொண்டது இந்த ஆச்சிக் கண்ணுவின் பெயரைத்தான்.
* தன் 17 வயதில் பொட்டுக்கட்டும் சடங்கை வெறுத்துக் கடும் எதிர்ப்பு தெரிவித்த இராமாமிர்தம், பின் உள்ளூர் தேவதாசிகள் எதிர்ப்பால் அது நடைபெறவில்லை.
* 65 வயது பணக்கார மிராசுதாரைத் திருமணம் செய்ய வற்புறுத்தி மீண்டும் தனக்கு வந்த சோதனையை எதிர்த்து, நடனம் சொல்லித் தந்த காங்கிரஸ் பற்றாளர் சுயம்புப் பிள்ளையை ஒரு கோவிலில் நெய் விளக்கின் முன் சத்தியம் பெற்றுத் திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் தேவதாசி முறை ஒழிய காங்கிரசில் ஈடுபட்டு தீவிரப் பிரசாரம் செய்தனர்.
* இராஜாஜியின் கடும் எதிர்ப்பையும் மீறி இராமாமிர்தம் நடத்திய மாநாட்டில் காந்தியார் கலந்து கொண்டார்.1925-ம் ஆண்டு நடத்திய மயிலாடுதுறை மாநாட்டில் திரு.வி.க., பெரியார் போன்றோர் கலந்து கொண்டனர்.
* பெண்ணுலகு போற்ற வந்த கற்பகம் என்று இராமாமிர்தத்தை திரு.வி.க. பாராட்டினார். தேவதாசி முறை ஒழிக்கப்பட திட்டம் வகுக்க வேண்டும் என்று காந்தியாருக்கு பல நீண்ட கடிதங்கள் எழுதினார். எதற்கும் காந்தியிடம் இருந்து பதில் வரவில்லை.
* 1925-ம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கிய போது, அவருடன் சுயமரியாதை இயக்கத்தில் பங்கு பெற்ற முதல் பெண்மணி இராமாமிர்தம் அம்மையார்.
* முதலாம் இந்தி எதிர்ப்புப் போர் உள்பட பல போராட்டங்கள் என அனைத்துமே அம்மையார் இல்லாமல் நடந்ததில்லை.
* தன் சுயசரிதை போன்று இவர் 1936-ல் எழுதிய நாவல்தான் தாசிகளின் மோசவலை (அ) மதி பெற்ற மைனர் . இதில் தேவதாசி முறைக் கொடுமை பற்றியும், அது ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கப்பட்டிருந்தது. தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். பல கட்டுரைகள், கதைகளை எழுதி திராவிடர் இயக்கப் பிரச்சாரத்தை யாருக்கும் பயப்படாமல் செய்தார்.
* 1932ம் ஆண்டு தஞ்சையில் நடந்த பிரசார நாடகத்தில் சிலர் புகுந்து கலவரம் செய்ததுடன் அவரின் நீண்ட தலைமுடியை அறுத்து எறிந்தனர். அதன் பின் கிராப்புத் தலையுடனே இறுதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.
* டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு மசோதாவை அறிமுகம் செய்த போது, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி கடும் எதிர்ப்புத் தெரிவிக்க முத்துலெட்சுமி ரெட்டி,, தேவையென்றால் அவரினத்துப் பெண்கள் ஆடட்டும். எங்கள் இனப் பெண்கள் இனி ஆடமாட்டார்கள் என்றபோது, சட்டசபையே அதிர்ந்தது. முத்துலட்சுமி ரெட்டியின் இந்த அறைகூவலுக்குப் பின்னால் இருந்தவர்கள் தந்தை பெரியாரும், இராமாமிர்தம் அம்மையாரும்தான்.
* மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947-ம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமிரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை முற்றாய் ஒழிக்கப்பட்டது.
* 1949ல் திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.கவில் இணைந்து பணியாற்றிய மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் ஜூன் 27-1962ம் ஆண்டு மறைந்தார். அம்மையாரைச் சிறப்புச் செய்யும் முகமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் ஒன்றை 1989ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
# படம் :- சமூக சிந்தனையாளர்களை ஆதரித்து, உதவிகள்புரிந்து, போற்றிய கலைவாணர் அவர்களுடன் , மதுரம் அம்மாவும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களும்
No comments:
Post a Comment