ஊர்சுற்றி
Via Facebook
2017-05-19
ஈழத்தமிழர் ஆதரவு என்கிற பெயரில் பிரபாகரனை "தேசியத்தலைவர்" என்று கொண்டாடும் அரசியல் தற்குறித்தனத்தை திராவிட இயக்கத்தினர் உடனடியாக கைவிடுவது நல்லது.
தந்தை பெரியார் மட்டுமே தமிழர் தலைவர் என்று கொண்டாடப்படக்கூடியவர். பெரியாரின் சிந்தனைத்தெளிவும், பொதுநலநோக்கமும், தூய்மையான தொண்டும், தொலைநோக்குப்பார்வையும், விஞ்ஞான அண்ணஓட்டமும், பெண்ணுரிமையில் புரட்சிகரமான அணுகுமுறையும், அறிவும், நேர்மையும், அதனால் தமிழ்சமூகம் அடைந்த பலன்களும் பெரியாரை அப்படி அழைப்பதற்கு காரணம்.
அதற்கு மாற்றாக ஆளுக்கொரு தேசிய (?) தலைவர்களை உருவாக்காதீர்கள். பிறகு தேசியம் என்றால் எது என்கிற கேள்வி எழும். அதற்கான பதில்கள் அவ்வளவு உகந்ததாக இருக்காது.
கடந்த 25 ஆண்டுகளாக திராவிட இயக்க அரசியல் கட்சிகளும், அறிவுஜீவிகளும் பெரியாருக்கு பதில் பிரபாகரனை முன்னிறுத்தியதன் எதிர்மறைபயனைத்தான் இப்போது தமிழ்நாட்டுத் தமிழர்களும், திராவிட இயக்கமும், குறிப்பாக திமுகவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இனியாவது திருந்துங்கள். அதற்காக பிரபாகரனை திட்டச்சொல்லவில்லை.
அதே சமயம் பிரபாகரனை நியாயப்படுத்துவதோ, தேசியத்தலைவர் என்று கொண்டாடுவதோ, எந்த விதத்திலும் ஏற்பதோ தமிழ்நாட்டு தமிழர்களுக்கு, குறிப்பாக திராவிட இயக்கத்தவருக்கு, இது விபரீதத்துக்கு வழிவகுக்கும்.
இதையும் மீறி பிரபாகரன் தான் எங்களின் "தேசியத்தலைவர்" என்று கொண்டாட விரும்புபவர்களுக்கு ஒரே ஒரு எளிய கேள்வி.
1. பெரியார் தமிழ்நாட்டு அரசியலில் தனி ஆளுமையாக படிப்படியாக வளரத்துவங்கிது 1920களில். மறைந்தது 1970களில். பெரியாரின் அரசியல் பிரவேசத்துக்கு முன் தமிழ்நாட்டில் கல்வி, அரசியல், அரசு நிர்வாகம், பொருளாதாரம் ஆகிய நான்கு துறைகளில் தலித் உள்ளிட்ட சூத்திரர்களின் நிலை என்னவாக இருந்தது? அவர் மறைந்தபோது மேற்சொன்ன இந்த துறைகளில் இதே தலித்துகள் உள்ளிட்ட சூத்திரர்கள் எந்த நிலைக்கு உயர்ந்தார்கள்? அவர்களின் உயர்வுக்கு பெரியார் எந்த அளவு பயன்பட்டார்? பெரியாரால் தமிழ்நாட்டு தமிழர்கள் அடைந்த பலன்கள் என்ன? எதிர்மறை பாதிப்புகள் என்ன? என்றொரு அட்டவணை தயாரியுங்கள். கண்டிப்பாக பெரியார் தமிழர்களை ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றியிருப்பது ஆதாரப்பூர்வமாக, அசைக்க முடியாத புள்ளிவிவரங்களுடன் நிரூபணமாகும்.
அடுத்து இதே அளவுகோலை பிரபாகரனுக்கு பொருத்துங்கள்.
பிரபாகரன் தனி ஆளுமையாக உருவானது 1980களில். மறைந்தது 2009.
1980களில் இலங்கைக்குள் இருந்த தமிழர்களின் கல்வி, பொருளாதாரம், அரச நிர்வாகம், அரசியல் அதிகாரத்தை 2009ஆம் ஆண்டின் நிலையோடு ஒப்பிட்டால் ஒவ்வொரு துறையிலும் இலங்கைத் தமிழர்கள், குறிப்பாக வடகிழக்குத் தமிழர்கள் எவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு துல்லியமாய் புலப்படும். எந்த துறையிலுமே அவர்கள் முன்னேறவில்லை என்பது மட்டுமல்ல, ஏற்கனவே இருந்ததைவிட பலமடங்கு பின் தங்கிவிட்டனர்.கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் நேர்மையாக சிந்தித்தால் அதில் பிரபாகரன் ஆற்றிய பெரும்பங்கும் புரிபடும்.
எனவே வாழ்வை விரும்பினால், வளம் பெற நினைத்தால், முன்னேற முயன்றால் உங்களுக்கு பெரியார் வழிகாட்டி!
"மரணத்தில் வாழ்வோம்" என்று அழிவை, சாவை, சர்வநாசத்தை கொண்டாடுபவர்களுக்கு பிரபாகரன் போராளி!!
தமிழ்நாட்டுத் தமிழரின் ஆக்க சக்தி பெரியார்!!!
ஈழத்தமிழரின் அழிவின் சின்னம் பிரபாகரன்!!!!
நன்றி - ஊர்சுற்றி
No comments:
Post a Comment