Thursday, July 6, 2017

ஜி.எஸ்.டி – எனும் பொருளாதார துல்லியத் தாக்குதல்

ஜி.எஸ்.டி – எனும் பொருளாதார துல்லியத் தாக்குதல்…!

July 2, 201
ஆசிரியர்குழு, ‍
மாற்று இணைய தளம்.

இந்திய நாட்டில் இன்று பல வகை வரிகள் நடைமுறையில் உள்ளன. ஆம். ஏறத்தாழ ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சராசரியாக 10 வகையான வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவை விதித்து வரும் வரிகள் அனைத்தும் இவற்றில் உள்ளடக்கம்.

*ஒருங்கிணைக்கப்பட்ட வரி முறை*

இத்தகைய வரிகள் அனைத்தையும் பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான ஒரே வரியாக மாற்றுவதற்கான முயற்சி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. 2007ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிப்புக் கூட்டு வரி (Value Added Tax – VAT) இந்த முயற்சியில் முதல் படியாக அமைந்தது. ஒரே உற்பத்திப் பண்டத்திற்கு அல்லது சேவைக்கு பல முறை வரி விதிக்கும் முறையினை மாற்றி, அவற்றின் மதிப்பு எங்கு கூடுகிறதோ, அந்தக் கூடுதல் மதிப்பிற்கு மட்டும் வரி விதிப்பு (Value Added Tax – VAT) என்ற வகையில் வாட் வரி விதிப்பு தொடங்கியது.

வாட் வரி விதிப்பு முறையினைத் தொடர்ந்து, இத்தனை கோடி வரிகளுக்கும் மாற்றாக ஒரே வரி என்பது சாத்தியம் ஆகவில்லை எனினும், பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள்  (Goods and Services Tax – GST)  மூன்று வகையாக சுருக்கப் பட்டுள்ளன.  மத்திய வரி (Central GST – CGST), மாநில வரி (State GST – SGST) இது தவிர மாநிலங்களுக்கு இடையிலான விற்பனையில் விதிக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி (Integrated GST – IGST) என்பவையே அவை. (யூனியன் பிரதேசங்களுக்கான வரி UGST என அழைக்கப்படுகிறது.)

*இழுபறி*

ஜி.எஸ்.டிக்கு மாறிச் செல்வதற்காக நடைபெற்ற அரசியல் விவாதங்களில், எந்தவொரு கட்சிக்கும் கோட்பாடு ரீதியான எதிர்ப்பு இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், மூன்று விஷயங்களில் மத்திய மாநில அரசுகளுக்கிடையிலும், மாநிலங்கள் தங்களுக்கு இடையிலும் ஒரு இழுபறி இருந்தது.

மத்திய மாநில அரசுகளுக்கிடையில் வரி விதிப்பு அதிகாரங்களின் ஏற்படும் அரிப்பு.வசூலான வரிகளில் மத்திய மாநில அரசுகளுக்கிடையிலும், மாநில அரசுகள் தங்களுக்கிடையிலும் பகிர்மானம் செய்வதில் உள்ள பிரச்சினை.ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்குப் பின்னர், அனைத்து அல்லது சில மாநிலங்களில் வரி வருமானம் குறைவதால் ஏற்படும் பிரச்சினைகள்.

*சமரசம்*

இப்போது இந்தப் பிரச்சினைகளில் ஓரளவு சமரசம் செய்யப்பட்டு, ஜி.எஸ்.டி முறையும், அதனை அமலாக்குவதற்கான ஜி.எஸ்.டி கவுன்சிலும் உருவாக்கப்பட்டு விட்டன. இருப்பினும் இந்த சமரசங்கள் காரணமாக பழைய வாட் முறையில், கட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த மத்திய அரசின் வரி விதிப்பின் எல்லை விரிவு படுத்தப்பட்டு, அந்த அளவிற்கு மாநில வரி விதிப்பின் எல்லை சுருக்கப்பட்டு விட்டது.

ஜி.எஸ்.டி முறையில் உள்ள மற்றொரு பிரச்சினை என்னவெனில், வரி விதிப்பு, விற்பனை முனையில் மட்டுமே என்பதால் பண்டங்கள் மற்றும் சேவைகள் உற்பத்தியாகும் மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, அந்த மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிற்கு இழப்பீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்ட நிலையில், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அதற்கான இழப்பீட்டினை மத்திய அரசு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரி விகிதங்களுக்கு உச்சவரம்புகள் முடிவு செய்யப் பட்டிருக்கின்றன. பொதுவாக, அது 40 சதவீதம்  (மத்திய அரசு  20% + மாநில அரசு 20%) என  ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் உச்சவரம்புகளை உயர்த்துவதற்கு கவுன்சிலுக்கு உரிமை உண்டு.

தவிர, ஜி.எஸ்.டி வரிக்கு மேல், சில பொருட்களுக்கு செஸ் வரி (கூடுதல் தீர்வை) விதிப்பதென்பதும் முடிவு. கோலா பானங்கள், கார்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கு 15% சதவீதம் வரையிலும் செஸ் வரி செலுத்த வேண்டும்.   சிகரெட் மற்றும் புகையிலைப் பண்டங்களுக்கு 290% (1000 எண்ணிக்கைக்கு ரூ.4170) வரையிலும் கூடுதல் செஸ் வரி உண்டு. பான் மசாலாவிற்கு 135% சதவீதம் செஸ் வரி. புகையிலைப் பண்டங்கள், மது பானங்கள் போன்றவை ‘பாவப் பண்டங்கள்’ (Sin goods) என அழைக்கப்படுகின்றன. எனினும், பல மாநில அரசுகளின் எதிர்ப்பின் காரணமாக, பீடிக்கு செஸ் வரி எதுவும் விதிக்கப்படவில்லை.

*விலக்கு*

பெட்ரோல், டீசல் மற்றும் மது பானங்கள் மீதான வரி விதிப்பினை ஜி.எஸ்.டி எல்லைக்குள் கொண்டு வருவதில்லை என்பது மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான மற்றொரு சமரசம்.  மறைமுக வரிகளிலேயே கறவைப் பசுவாக இருக்கும் இந்த மத்திய சுங்க வரி, எக்சைஸ் வரி, மாநில விற்பனை வரி போன்றவற்றை விட்டுக் கொடுப்பதற்கு இரண்டு தரப்புமே தயாராக இல்லை. மக்களை ஒட்டச் சுரண்டும் வாய்ப்பு வேறு எந்த வரியிலும் இந்த அளவு இல்லை.

தங்க பிஸ்கட்டுக்கு 3%
திங்க பிஸ்கட்டுக்கு 18%
எங்க போயி வாழா?????

No comments:

Post a Comment