Tuesday, May 22, 2018

ஈழம், திமுக செய்ய வேண்டியது என்ன?

Joe Antion
2018-05-22

80-களிலிருந்து ஈழ விடுதலை போராட்டங்களை ஆதரித்து திராவிட இயக்கங்களும், இடதுசாரிகளும் செய்த பங்களிப்பு அளப்பரியது. இந்த ஆதரவு அரசியல் செயல்பாடுகளில் தி.மு.க.-வினரும் பெருமளவில் பங்கெடுத்திருக்கின்றனர். ஈழத்தில் போராட்டங்களை முன்னெடுத்த இயக்கங்களில் டெலோதான் கருணாநிதியின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்றது. இருப்பினும் அவரது ஆட்சிக்காலங்களிலெல்லாம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் தமிழகத்தில் தங்கு தடையின்றி நடைபெற்றே வந்தது. சிலநேரங்களில் அவர்களின் அதீத செயல்பாடுகள் கூட கண்டுகொள்ளப்படவில்லை. இந்திய அமைதிப்படைக்கு எதிரான கருணாநிதியின் நிலைப்பாடு மிகவும் காத்திரமானது. இதை எதிர்த்து பார்ப்பன பத்திரிகைகள் அப்போது பெரும் ஓலமிட்டன.

ராஜீவ் கொலைக்குப் பின் நிலமை மாறுகிறது. ஜெயலலிதா அனுதாப ஓட்டுகளின் மூலம் தன்னை தமிழக அரசியல் களத்தில் நிலைநிறுத்திக்கொள்கிறார். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக (ஆட்சியில்லாத காலங்களிலும் புலிகளுக்கு எதிரான அரசியலை அவர் தொடர்ந்து செய்தே வந்தார். அதன் மூலம் ஆட்சியிலிருந்த தி.மு.க. விற்கு தொடர் அழுத்தங்கள் இருந்தன என்றே சொல்லவேண்டும்.) ஈழவிடுதலை போராட்டத்துக்கு மிகப்பெரும் சரிவை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. (புலிகளுக்கு ஆதரவாக மூச்சுக்கூட விடமுடியாத சூழல் உருவாகியது. திராவிட இயக்கத் தோழர்களும், எம்.எல். அமைப்புகளை சேர்ந்தவர்களும் பெருமளவு அடக்குமுறைகளை சந்தித்தனர்.) அதன் தாக்கத்தை நாம் அளவு ரீதியாக மதிப்பிட முடியாதெனினும் அது முள்ளிவாய்க்கால் வரைக்கும் நீண்டது என்றே சொல்லவேண்டும். 2009-ல் ஈழ இனப்படுகொலை நடந்தேறிக்கொண்டிருக்கும் போதும்  “போரில் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றப் பொன்மொழிகளை உதிர்க்கிறார். பின்னர் எதர்க்காகவும் பின்வாங்காத ஜெயலலிதா தமிழகமெங்கும் நடந்த மக்களின் - குறிப்பாக மாணவர்களின், இளைஞர்களின் - எழுச்சியைப் பார்த்து தனது முடிவை மாற்றிக்கொள்கிறார். களத்தில் இறங்காமல் தன் பங்களாவிற்குள்ளிருந்தபடியே அடுத்ததாக ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்துடன் ஈழ ஆதரவு அரசியலை கையிலெடுத்துக்கொள்கிறார்.

2009-ல் தி.மு.க-வின் செயல்பாடு குறித்து பேசுவதற்கு முன் கொள்கையளவில் தி.மு.க-வின் பின்னடைவையும் பார்க்கவேண்டும்.  அண்ணா தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தமிழக முதலாளிகளை பிரதிநித்துவபடுத்தினார். அதே நேரத்தில் அவரது குடும்பத்தினர் யாரும் முதலாளிகளாகவோ, பெரும் வர்த்தகர்களாகவோ இல்லை. (இருந்தாலும் கூட அண்ணா தான் பிரதிநித்துவபடுத்திய முதலாளிகளுக்காக தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றவேண்டி வந்தது. இந்திய-சீன போருக்குப் பின் அதையே சாக்காக வைத்து அதை வெளிப்படுத்தவும் செய்தார். முதலாளிகளுக்கு இந்தியா முழுவதுமான சந்தைத் தேவை. ஆனாலும் மாநில சுயாட்சி போன்ற விசயங்களில் அவர் உறுதியாகவே இருந்தார்.)  2006-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. பண்புரீதியாகவே பெரும் மாற்றத்தை பெற்றிருந்தது. கருணாநிதி குடும்பத்தினர் பலரும், கட்சியில் சிலரும் (டி.ஆர். பாலு போன்றவர்கள்) முதலாளிகளாக உருப்பெற்றிருந்தனர். அதுபோக மாறன் சகோதரர்களின் வருகை தி.மு.க-வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. (இலவச டிவி. வழங்கும் திட்டத்தின் மூலம் கூட மாறன் சகோதரர்களின் சன் குழுமத்திற்கு பெரும் வர்த்தக வாய்ப்புகள் ஏற்பட்டது. crony capitalism வளர்ச்சியடைகிறது.ஊழலும் கூடவே வளருகிறது.) அப்பட்டமாக கார்பொரேட் நலன்களை பிரதிநித்துவபடுத்தும் போது தி.மு.க-வில் கொள்கைகள், நிலைப்பாடுகள் ஆகியவற்றில் தொய்வு ஏற்படுவதை தவிர்க்கமுடியாது. இத்தகைய சூழல் இருக்கும் போதுதான் ஈழத்தில் நான்காம் கட்டப் போர் தொடங்குகிறது. 

இந்தியக் கப்பற்படையின் கெடுபிடிகளாலும், அமெரிக்காவின் உதவியினாலும் புலிகளின் ஆயுத சப்ளை முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது.  பல்வேறு நாட்டு இராணுவ உதவி மற்றும் வல்லுநர்களின் பங்கேற்பு, இந்தியப் படையின் நேரடி பங்கேற்பு மற்றும் தளவாட உதவி, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் பிரயோகம் ஆகியவற்றின் மூலம் புலிகள் பெரும் பின்னடைவை சந்திக்கின்றனர். அந்த பின்னடைவிலிருந்து அவர்கள் மீண்டெழ முடியாதென்ற போதும், கால அவகாசம் எடுத்து மிகக் குறைந்த உயிர்ச்சேதத்துடன் போரை முடித்திருக்க முடியுமென்றாலும் கடைசி வாரங்களில் போர் மிகவும் உக்கிரமடைகிறது. இந்த கட்டத்தில்தான் பெரும் இனப்படுகொலை நடந்தேறுகிறது. இது ஐ.நா. செயற்கைக்கோள் எடுத்த படங்களின் மூலம் உறுதிபடுத்தப்பட்டது. சிலபத்திரிகைகளில் அவை வெளியும் ஆனது. ஆனால் இந்த காலத்தில் தி.மு.க. அரசின் செயல்பாடு எப்படி இருந்தது? மிகவும் கவனமாக திட்டமிட்டு,  மிகத் திறமையுடன் போலீசாரைக்கொண்டு வரலாறு காணாத அடக்குமுறையை கருணாநிதி அரசு போராடும் மக்களை, குறிப்பாக இளைஞர்களையும், மாணவர்களையும், வழக்கறிஞர்களையும் அடக்கி ஒடுக்குகிறது. உயர்நீதிமன்ற வளாகத்தினுள் என்றைக்குமே நடந்திராத, நினைத்துக் கூட பார்க்காத வன்முறை வழக்கறிஞர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது (இதை தி இந்து கொண்டாடியது).  கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டது. சுவரொட்டிகளும், துண்டுபிரசுரங்களும் அச்சடிக்கும் அச்சகங்கள் அச்சுறத்தப்பட்டன. மக்கள் தொலைகாட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. தொடர் கைதுகள் நடந்தது. (இத்தகைய திட்டமிட்டு திறமான வன்முறை எந்திரமாக கட்டமைக்கப்பட்ட காவல்துறையை பின்னாளில் ஜெயலலிதாவும் தன்னுடைய எதேச்சரிகாரத்திற்கு பயன்படுத்தினார். இதற்கு முன்பெல்லாம் ஜெயா தன்னுடைய ஆட்சியில் காவல்துறையை அராஜகமாக, காட்டுமிராண்டித்தனமாகவே பயன்படுத்திவந்தார்.) இதற்கிடையில் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் அரங்கேறுகிறது. பிரபாகரன் மரணம் வெளிவந்த அதே பக்கங்களில் முதுமையாலும், உடல்நலக்குறைவாலும் இயலாமையிலிருந்த கருணாநிதி டில்லிக்கு சென்று அமைச்சரவையில் பங்கு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தியது வருகிறது. அப்பட்டமாக குடும்ப கார்பொரேட் நலன்களுக்காக (இதே காரணங்களுக்காகத்தான் தற்போது தமிழகத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக எழும் மக்கள் போராட்டங்களை குறித்து தி.மு.க. உப்புசப்பில்லாத அணுகுமுறையை மேற்கொள்கிறது. கூடங்குளத்திற்கு எதிரான போராட்டத்தை ஏன் அடக்கவில்லை என்று கேள்வி கேட்டது. நமக்கு நாமே என்ற சாரமற்ற நிகழ்வை நடத்தி எதிர்கட்சி அரசியல் செய்யாமலேயே அட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறது.) இவ்வாறாக கருணாநிதி ஒரு அப்பட்டமான துரோகத்தை செய்து முடிக்கிறார். ஈழத்தில் ஒரு பெரும் இனப்படுகொலை நடந்தேறுகிறது.

ஈழத்தில் இனப்படுகொலையை தடுத்திருக்க முடியுமா? கண்டிப்பாக முடிந்திருக்கும். கிளிநொச்சி வீழ்ந்தபின் புலிகளின் பின்னடைவு தடுக்கமுடியாதென்று தெள்ளத் தெளிவாயிற்று. அதற்கு பின்னால் நிதானமான இராணுவ நடவடிக்கையின் மூலம் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் பிரயோகங்கள் எதுவும் இல்லாமலேயே போரை முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், இந்திய பாராளுமன்ற தேர்தலை ஒட்டி ராஜீவ் குடும்பத்தின் அழுத்தத்தின் பேரில் இராணுவ நடவடிக்கை குறைக்கப்படுவதற்குப் பதிலாக மூர்க்கத்துடன் முடுக்கிவிடப்படுகிறது. இதை தடுத்திருந்தால் ஒன்றரை லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க வேண்டியதில்லை. இதை தி.மு.க. அரசு செய்திருக்க முடியும். செய்திருக்க முடியும் என்பதற்கான சான்று கடந்த கால தி.மு.க. வின் போராட்ட வரலாறுதான். 1989-ல் அசுர பலத்திலிருந்த ராஜீவ் தலமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக நடந்த பந்த்தை தி.மு.க. அவ்வளவு வெற்றிகரமாக தமிழகத்தில் நடத்திக்காட்டியது. அதன் பிறகு எந்த பந்தும் தமிழகத்தில் அவ்வளவு பெரிய வெற்றியடையவில்லை. பந்த் நடந்து முடிந்த பல வருடங்களுக்குப் பிறகும் எங்கள் மாவட்டம் உட்பட (குமரிமாவட்டம்) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பந்திற்கு ஆதரவான சுவரெழுத்துக்களை பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு தி.மு.க. வினர் வேலை செய்தனர். இதனால்தான் கருணாநிதியின்/தி.மு.க-வின் செயலை துரோகம் என்று சொல்கிறோம். இதற்கு தமிழ் மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுதான் நியாயமான சுய விமர்சனமிக்க செயல்பாடாக இருக்கும். அதற்கு மாறாக குண்டியில் துடைச்சிட்டுப் போகக் கூடாது; காழ்ப்புணர்வில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சுமத்தக் கூடாது.

2009-ற்கு பிறகு தி.மு.க. ஏராளமான உறுப்பினர்களை இழந்திருக்கிறது. இல்லையெனில் குறைந்தபட்சம் 2011-லாவது அவர்கள் வெற்றிபெற்றிருக்க வேண்டும்.  அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் ஆட்சி மோசமானதாக இருந்தது. ஆக எதற்கெடுத்தாலும் தமிழ்தேசிய அரசியலை ஆதரிப்பவர்களை குறை கூறாமல், இதனை தி.மு.க. விமர்சன பூர்வமாக அணுக வேண்டும். தி.மு.க. தலைமைகளின் கார்பொரேட் நலன்களுக்காக, அதன் ஆரம்பகால அரசியல் கொள்கைகளை பின்னுக்குத் தள்ளி உப்பு சப்பற்ற அரசியல் நடத்தினால் தமிழக அரசியல் களத்தில் அவர்கள் இல்லாமல் போய்விடுவதற்கான சாத்தியம் இருக்கிறது.

https://m.facebook.com/story.php?story_fbid=2144962618853978&id=100000207825080

No comments:

Post a Comment