Monday, May 21, 2018

தொழில்சார் நோயாக பரவி வருவது அலுவலக வாட்சப் குரூப்கள

RS Prabhu
2017-03-17

இந்தியாவில் தொழில்நுட்ப பரவலின் காரணமாக  முறைப்படுத்தப்படாத தொழில்சார் நோயாக பரவி வருவது அலுவலக வாட்சப் குரூப்கள். ஒவ்வொரு துறையிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நிறுவனங்கள் வாட்சப் மூலம் அலுவலக தகவல் தொடர்பு வைத்துக்கொள்வதை கொள்கை அடிப்படையில் அங்கீகரித்துள்ளன. ஏனையவை அனைத்தும் ஊழியர்கள் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்டுள்ள informal குழுக்கள்தான்.

Over The Top apps எனப்படும் இத்தகைய வாட்சப், டெலிகிராம் குழுக்கள் அலுவலக உற்பத்தித் திறனுக்கு எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்கு ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்கின்றன. பெருநிறுவனங்கள் தங்களது டேட்டா வாட்சப் வழியாக கசிவதை ஒருபோதும் விரும்புவதில்லை என்றாலும், மறைமுகமாக வேலை நடந்தால் சரி என்ற நோக்கில் ஊழியர்கள் சமூக ஊடகங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று பயிற்றுவிக்கின்றன.

பொதுவாகவே இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தொழில்நேரம், தனிப்பட்ட வாழ்க்கை நேரம் என்ற பாகுபாடு இல்லாமல் கலக்கி வைத்துக்கொண்டு உழல்வதில் புகழ் பெற்றவர்கள். அதிலும் வாட்சப்பில வந்து  காட்டும் தொழில் பக்தி அலாதியானது. இரவுப் பயணம் மேற்கொள்ளும்போது, எங்காவது  பொழுது போகாமல் தவிக்கும்போது, அதிகாலை சிறுநீர் கழிக்க எழுந்து செல்லும்போது  வாட்சப்பைப் பார்த்து ஒரு மெசேஜை தட்டிவிட்டு செல்வது; அப்போதுதான் இவர் அட்டென்டிவ் ஆக இருப்பதாக எல்லாரும் நினைத்துக்கொள்வார்களாம்.

ஓர் உயரதிகாரி விடுமுறை நாட்களில் அல்லது  நள்ளிரவு வேளையில் செய்தி அனுப்பி ஏனைய ஊழியர்கள் அடுத்து ஓரிரண்டு நாட்களுக்கு பதில் அளிக்கவில்லையானால் தன்னை மதிக்கவில்லை என offensiveஆக எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை கட்டம் கட்டுவது, தேவையில்லாமல் நோண்டுவது, வாய்ப்புக் கிடைக்குமிடங்களிலெல்லாம் அதை சொல்லிக்காட்டி வெறுப்பேற்றுவது போன்ற unprofessional வேலைகள் நடவாத அலுவலகங்களே இல்லை எனலாம்.

யாராவது ஒரு பெரிய தலையின் மனைவிக்கோ, இரண்டாவது மகனுக்கோ பிறந்தநாள் வந்திருக்கும். அதை அவரே வெளியில் சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் ஏதேனும் ஒரு சொம்பு அதைக் கண்டுபிடித்து Happy birthday to your beloved wife Sir என்று வாழ்த்து போட்டு வைப்பார். அதை பின்னொற்றி எல்லாரும் வாழ்த்து போட்டே ஆகவேண்டும்; 'சார் பார்ட்டி இல்லையா?' என சிலர் கேட்டு வைப்பார்கள். அந்தாளு பொண்டாட்டி பிறந்தநாளுக்கு இவன் எதுக்கு பார்ட்டி கேக்கறான் என்று கடுப்போடு சிலர் ஏற்கனவே வந்த வாழ்த்துச்செய்தியில் ஒன்றை ஒரு எழுத்தைக்கூட மாற்றாமல் அதே குரூப்புக்கு ஃபார்வர்டு செய்வார்கள்.  இந்த கருமாந்திரத்திலெல்லாம் கலந்துகொள்ளாமல்  ஒருவாரம் வேடிக்கை பார்த்தால் you should be proactive and imbibe our organizational culture man என்று அட்வைஸ் செய்யப்படுவதும் நடந்து தொலைக்கும்.

பாண்டிச்சேரியில் தவறுதலாக கைபட்டு ஒர் ஆபாச வீடியோவை அலுவலக குழுவுக்குள் அனுப்பிவிட்டதற்காக ஒரு உயரதிகாரியை ஆளுநர் கிரண்பேடி தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வாட்சப் என்பது அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழி இல்லையென்பதோடு, அலுவலக நேரத்திற்கு அப்பாலும் தொடர்ந்து ஊழியர்களைப் பிணைத்து வைத்திருப்பது பலதரப்பட்ட கவனச்சிதறல்களுக்கு வழிவகுக்கும் என்று அரசு அலுவலர்கள் போர்க்கொடி தூக்கியதும் வாட்சப், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வாயில்களாக வைக்கக்கூடாது என்று முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டதும் நடந்தது.

அலுவலகமே அலைபேசி எண், திறன்பேசி கொடுத்திருந்தாலும்கூட அதில் மின்னஞ்சல், communicator, வணிகப் பயன்பாட்டிற்கான Skype தவிர வாட்சப் போன்றவற்றின் மூலம் ஊழியர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும்போது மற்றவர்களின் அந்தரங்க நேரங்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நிறுவனத்தை தோளில் சுமப்பதாக நினைப்பவர்களுக்கும் ஒருநாள் கதவு காட்டப்படும் என்பதோடு  முதலாளி ஒரு தொழிலாளி வேலையை விட்டு விலகாத அளவுக்குத்தான் சம்பளம் தருகிறான்; ஒரு தொழிலாளி முதலாளி வேலையை விட்டு தூக்காத அளவுக்குத்தான் வேலை பார்க்கிறான் என்ற நாதத்தை உணர்ந்து செயல்படுவது work-life balance-க்கு நல்லது.

https://m.facebook.com/story.php?story_fbid=10154677688213773&id=595298772

No comments:

Post a Comment